Saturday, September 29, 2018

மறைக்காடு - 6

அடுத்தது மூன்றாந் திருமுறையில் வரும் 76 ஆம் பதிகம். இதில் மறைக் காட்டின் சங்கத மொழிபெயர்ப்பான திருவேதவனம் என்பது எல்லாப் பாடல்களிலும் வரும்.. அதாவது தேவார காலத்திற்கு முன்னரே மறைக் காட்டின் பொருள்மாறி வேதத்தோடு தொடர்புறுத்தத் தொடங்கி விட்டார். எனவே முன்னுள்ள பொருளைச் சங்க நூல்களின் வழியும், தேவாரப் பாடல்களில் உள்ளூறிக் கிடக்கும் வேதம் தவிர்த்த காலம், இடம் சார்ந்த சூழ்நிலைகள் வழியும் தான் காணவேண்டும். வேதமென்று சொல்லிவிட்டால் அப்புறம் இக்கட்டுரைத் தொடரே தேவையில்லை. சமயஞ் சார்ந்த மீமாந்தத் தொன்மக் குறிப்புகளே போதும், அது வேண்டாமென்று தானே இவ்வளவு தேடுகிறோம்? மூன்றாந் திருமுறையின் 76 ஆம் பதிகம் ஓதத்தில் வருவதுபோல் ஏறி யிறங்கிச் சந்தம் தவழ்ந்து துள்ளியோடும்.

814 ”புவிமேல் மற்பொலி கலிக்கடல் மலைக்குவடு எனத் திரைகொழித்த மணியை விற்பொலி நுதற்கொடி யிடைக்கணிகை மார்கவரும் வேதவனமே:” (புவிமேல் மற்பொலிவது போல் சத்தமிடுங் கடல் மலைக்குவடு போல் திரை கொழித்துவரும் முத்தை, பவளத்தை: விற்பொலி போன்ற நுதலும் கொடியிடையும் கொண்ட கணிகைமார் கவர்ந்துகொண்டு போகும் வேத வனமே. இதுபோன்ற வரியெழுத 12 வயதிற்கும் குறைவான ஒரு சிறுவனால் முடியுமா? சற்று ஓர்ந்துபாருங்கள். எனவே இந்தப் பாட்டிற்கென மறைக்காடு வருகையில் பெரும்பாலும் சம்பந்தர் பதின்பருவம் தாண்டிவிட்டாரென்றே சொல்லத் தோன்றுகிறது. ”கழிக்கானலில் எப்படி மலைக்குவடு போல் திரைகள் எழுந்தன?” என்றால் அதைப் புரிந்துகொள்ளச் சற்று பட்டறிவு வேண்டும். நிலத்துக்கருகில் திரளென்பது வெறும் மடிப்பாகத் தோற்றம் அளிக்கும். கடல்நோக்கிப் படகிற் போகையில் திரளுயரம் கூடி வரும். குறைந்தது 300/400 மீட்டர்கள் கடலுள் போனால் மலைக்குவடு போல் திரள் ஏறியிறங்கித் தோற்றும். மணி=முத்து, பவளம். இரண்டும் வெறும் சுண்ணாம்பு தான். ஆனால் ஒன்று சிவப்பு நிறமும் இன்னொன்று வெள் நிறமுங் கொள்ளும். சிலபோது வெள்ளைக்கும் கருப்பிற்கும் நடுவே பல்வேறு சாம்பல் நிறங்களையுங் கொள்ளும்.

815 ”வண்டிரை நிழற்பொழிலின் மாதவியின் மீதணவு தென்றல் வெறியார் வெண்டிரைகள் செம்பவளம் உந்துகடல் வந்தமொழி வேதவனமே” (வண்டுகள் இரையும் நிழற்பொழிலின் குருக்கத்திகள் மீது நெருங்குகின்ற தென்றல் மணங் கமழவும், வெண் திரைகள் கொண்டுவந்த செம்பவளத்தை உந்தியும் மொழிகின்ற கடலுங் கொண்ட வேதவனமே. ஓதவோசை இங்கொரு மொழியாகவே தென்படுகிறது.)

816 ”நெடுமாட மறுகில் தேரியல் விழாவின் ஒலி திண்பணிலம் ஒண்படக நாளும் இசையால் வேரிமலி வார்குழல்நன் மாதர்இசை பாடல்ஒலி வேத வனமே” (நெடிய மாடங்கள் இருக்கும் மறுகில் தேர் ஓடும் விழாவின் ஒலியும், திண்ணிய சங்கின் ஒலியும், முழுவின் ஒலியும் வேரிமலி வார்குழல் கொண்ட மாதர்களின் இசைப்பாடல் ஒலியால் நிறைந்துள்ள வேதவனம் இங்கு பேசப் படுகிறது. இப்பதிகம் பாடிய நாளில் தேர்த்திருவிழா நடந்தது போலும். பல்வேறு ஒலிகள் இங்கு சொல்லப்படுகின்றன. மாடமறுகு என்பதால் மறைக்காட்டு ஊர் அன்றும் ஓரளவு பெரியது போலும்.)

817 ”ஊறுபொரு ளின்தமிழ் இயற்கிளவி தேருமட மாதருடனார் வேறுதிசை ஆடவர்கள் கூறஇசை தேருமெழில் வேதவனமே” (மனத்திலூறும் பொருளைச் சொல்வதற்கு தமிழின் இயற்கிளவி தேரும் மட மாதருடன் வேறு திசைகளில் இருந்துவந்த வெளிநாட்டவர் சேர்ந்து பாட, இசைத்தேரும் எழிலான வேதவனம். பதின்பருவத்து இளைஞனின் இக்குறிப்பு மிக முன்மை யானது. சம்பந்தர் காலத்தில் திருமறைக்காட்டில் வேற்று நாட்டவரும் இருந்தார். அப்படியெனில் சம்பந்தர் காலத்திலும் கோடிக்கரையில் ஏற்றுமதி இறக்குமதி நடந்தது புரியும். துறைமுகக் கட்டுமானமும் கோட்டையும் அப்பொழுது கூட உறுதியாய் இருந்திருக்கும். முன் நாம் நினைத்ததுபோல் வெளியன் கோட்டை அழியவில்லை. ஏதோ உருவில் அது இருந்துள்ளது. கோட்டைக்கு வெளியே புறஞ்சேரியில் ஆண்களும் பெண்களும் இசைபாடிக் களித்திருக்கிறார். சங்கதமும், பாகதமும், வேறு பல மொழிகளும் ஊடே நிலவி யிருக்கலாம். இதுவொரு நகர நாகரிகக் கூறு. வரலாற்றின் ஒரு பக்கத்தை இப்பாட்டு நமக்குச் சொல்கிறது. ”கோட்டையை, கோடியை மறைக்குங் காடு மறைக்காடு” என்ற கருத்து மேலும் உறுதி பெறுகிறது. (தேவாரப் பாடல்கள் வெறும் சமயப்பாடல்களல்ல. அவற்றால் வரலாற்றையும் நாம் புரிந்து கொள்ளலாம்.)

818 ”வேதவனம்” = மறைக்காடு

819 ”சோலையின் மரங்கள் தொறும் மிண்டியின வண்டுமது உண்டு இசைசெய வேலையொலி சங்குதிரை வங்கசுற வங்கொணரும் வேதவனமே”: (சோலையின் மரங்கள் தொறும் மிண்டும் வண்டினங்கள் தேனையுண்டு இசை செய்ய, கப்பல் போன்ற சுறவங்களையும், கடற்சங்கு ஒலியையும் கொணரும் வேதவனம் இங்கு பேசப்படுகிறது. வங்க சுறவம் = கப்பல் போன்ற சுறாமீன். அது கழிக்கானலுக்குள்ளும் ஆழத்தைப் பொறுத்து வரலாம். பல்வேறு ஆட்கள் பண்டங்களை ஏற்றிக்கொண்டு படகுகளில் போய் வந்து கொண்டிருக்கிறார். எனவே கடலிற் சங்கொலி கேட்டுக்கொண்டே இருக்கிறது.)
.
820 ”கிஞ்சுக இதழ்க்கனிகள் ஊறியசெவ் வாயவர்கள் பாடல்பயில விஞ்சக வியக்கர்முனி வக்கண நிறைந்துமிடை வேதவனமே”: (கிளிபோன்ற இதழ் கொண்டு, செங்கனியூறிய செவ்வாய்கொண்ட பெண்கள் பாடல்பயில, சிறப்பான இசை பாடத் தெரிந்த முனிவர் கூட்டம் நிறைந்து மிடையும் வேத வனமே. ஒருபக்கம் மாணவிகள் பயில, இன்னொருபக்கம் இசையாசிரிய முனிவர் சொல்லிக் கொடுக்கிறார்.)

821 ”நிதி நல்குமவர் மல்குபதி வேதவனமே” (நிதி கொடுப்பவர் நிறைந்த பதி வேதவனம்.)

822 ”காசுமணி வார்கனக நீடுகட லோடுதிரை வார்து வலைமேல் வீசுவலை வாணர் அலை வாரிவிலை பேசுமெழில் வேதவனமே”: [நீண்ட கடலோடு திரைவாரும் துவலைமேல் வலைவீசும் வாணர்கள் அலைவாரிகளுக்காக காசு, மணி, கனகம் என்று விலைபேசும் வேதவனம். 7 ஆம் நூற்றாண்டு என்பது பண்டமாற்றுக் காலமல்ல காசு, முத்து, தங்கம் போன்றவை செலாவணியை நிருணயித்த காலம். அலைவாரிகள் = அலைகடலிற் பெறும் பண்டங்கள். திருமறைக்காட்டில் அருமையான விலைபேசும் வாய்பகரம் (வியாபாரம்) நடந்துகொண்டிருக்கிறது. ஊர் பெரியது தான்]. 

823 ”வேதவனம்” = மறைக்காடு

அடுத்து அப்பரின் திருமுறைக்குள் போகுமுன் அப்பருக்கும் சம்பந்தருக்கும் ஆன வாழ்நாட் காலத்தை அறியவேண்டும். இதை முற்றிலும் உறுதிசெய்ய முடியாவிட்டாலும் ஓரளவு ஊகிக்கலாம். அப்பரின் காலம் மகேந்திர பல்லவனோடு தொடர்புடையது. வரலாற்றுச் செய்திகளின் படி அவன் ஆட்சி கி.பி. 600-630 இலும். அவன் மகன் ஆட்சி கி.,பி. 630-668 இலும் நடந்தது. மத்த விலாசப் பிரகாசம் போன்றதோர் அங்கத நாடகத்தை கேலி, நக்கலோடு இளமையில் எழுதுவதே யார்க்கும் இயல்பு. எனவே மகேந்திரவர்மன் சிவ நெறிக்குள் வருமுன் குறைந்தது 5 ஆண்டு காலமாவது செயினனாய் இருந்திருக்கலாம். மகேந்திரன் காலத்திற் பொருந்தி, நடுவயதில் மருள் நீக்கியார் என்ற தருமசேனர் செயினத்திலிருந்து சிவநெறிக்கு மாறி நாவுக்கரசர் ஆனாரென்றும், இறைவனடி சேர்ந்தது நரசிம்மன் காலத்தில் என்றுஞ் சொல்வர். தவிர, 75 அகவையாவது நாவுக்கரசர் வாழ்ந்திருப்பார் என்பதும் சமய நம்பிக்கை.

2 சமயக்குரவரும் திருமறைக்காட்டிற்கு முதலில் வந்தபோது சம்பந்தருக்கு 12 வயதிருக்கலாம். (அவர் பாட்டைப்படித்தால் பதின்பருவம் தொட்டது போல் தான் தோற்றுகிறது.). அடுத்த 3,4 ஆண்டுகளில் சம்பந்தர் இன்னும் 3 முறையும், நாவுக்கரசர் 4 முறையும் மறைக்காட்டைப் பற்றிப் பதிகம் பாடுவார். இது நடக்கக் குறைந்தது 2 ஆண்டுகளாகலாம். எனவே நாவுக்கரசர் தன் 72/73 ஆம் அகவையில் திருமறைக்காட்டிற்கு முதலில் வந்தாரெனலாம். ஏரணம் பார்க்கின் பெரும்பாலும் கி.பி. 560-635 என்பதே, நாவுக்கரசரின் வாழ்வுக் காலம் ஆகும். அவர் சிவநெறிக்குள் நுழைந்தது பெரும்பாலும் கி.பி.605. முதன் முறை மறைக்காட்டிற்கு வந்தது கி.பி 632. அப்படியெனில்; சம்பந்தரின் பிறப்பு கி.பி.620. மேற்கொண்டு பல தரவுகளைப் பொருத்தினால், கருதுகோள்களைக் குறைத்துக் காலக்கணிப்பை மேலும் சீர்ப்படுத்தலாம். இப்புரிதல் மறைக்காட்டின் பாடற்காலத்தை ஓரளவு தெளிவுபடுத்தும்.

பல்லவர் சிவநெறிக்குள் நுழைந்துவிட்டார். தெற்கே பாண்டியரோ செயின நெறிக்குள் இருந்தார். சோழநாட்டிற் பாதி பல்லவரிடம். மீதி பாண்டியரிடம் இருந்திருக்கலாம். வேதநெறியோடு ஆகமங் கலந்து தமிழகமெங்கும் சிவ நெறி எழுந்து கொண்டிருந்தது. இவ்வியக்கத்தை நடத்தியோர் சம்பந்தரும் நாவுக்கரசரும் தான். அளவிற்கு மீறியும் இயக்கத்தில் வேதநெறி கலந்துவிடக் கூடாது. எனவே தமிழென்ற பேச்சு திரும்பத் திரும்பப் பாடல்களுக்குள் வரவேண்டும். அப்போதுதான் பாகதங் கூடிய செயினமும் சாக்கியமும் பின்னடையும். இப்பரப்புரைக்குப் பலனிருந்தது. கொஞ்சங் கொஞ்சமாய் பாகதம் முதலென்று போக்கு பல்லவரிடம் மாறியது. சங்கதம் முதலிலும், தமிழடுத்தும் அவராட்சியில் முன்னுரிமை பெற்றன. (பல்லவராட்சியில் தமிழ் இரண்டாம் இடத்தையே பிடித்தது. இன்றோ மூன்றாமிடம். ஆங்கிலமும், இந்தியும் முதலிரண்டு இடத்தைப் பெறுகின்றன. எத்தனை தமிழர் இது பற்றிக் கவலுறுகிறோம்? பெருமளவு செயினத்தையும் சாக்கியத்தையும் சமயக் குரவர் நேரடியாய்த் தாக்குவாரெனில் அதற்கோர் அரசியல் காரணம் இருந்திருக்க வேண்டுமே? இப்பின்புலத்தோடு தேவாரப் பதிகங்களைப் படித்தால் பலவும் தாமாகப் புரியும். .

அன்புடன்,
இராம.கி.

No comments: