Sunday, September 30, 2018

மறைக்காடு - 7

அப்பரின் நாலாந்திருமுறை 33 ஆம் பதிகத்தில், 324, 325, 326, 327, 328, 329, 330, 331, 332, 333 ஆம் பாடல்களில் மாமறைக்காடென்ற ஊர்ப்பெயர் மட்டும் வரும். மற்றபடி இறைவன் பற்றிய விவரிப்பே அதில் நிறையவுள்ளது. இதேபோல் நாலாந்திருமுறையில் 34 ஆம் பதிகத்தில், 334 கலிமறைக்காடு, 335 தெக்குநீர்த் திரைகள்மோதும் திருமறைக்காடு, 336 நான்மறைக்காடு, 337 திருமறைக் காடு, 338 அணிமறைக்காடு, 339 தொல்மறைக்காடு, 340 முத்துவாய் திரைகள்மோதும் முதுமறைக்காடு, 341 நான்மறைக்காடு, 342 எழில்மறைக்காடு, 343 அணிமறைக் காடு என்ற விவரிப்புகளுள்ளன. இன்னும் அடுத்தது அப்பரின் ஐந்தாம் திருமுறை 9 ஆம் பதிகம். இதில்

84 ஓத மால்கடல் பாவி உலகெலாம் மாதரார் வலங்கொள் மறைக்காடரோ: (இருள்நிறக்கடலில் ஓதம் பரவி, உலகிலுள்ள மாதரார் வலங்கொள்ளும் மறைக்காடரோ; மால் = இருள்)
85 பூக்கும் தாழை புறணி அருகெலாம் ஆக்கம் தானுடை மாமறைக்காடரோ (பூக்கின்ற தாழைப் புறணியின் அருகெல்லாம் ஆக்கமுடைய மறைக்காடரோ. புறணி = exterior)
86 புன்னை ஞாழல் புறணி அருகெலாம் மன்னினார் வலங்கொள் மறைக்காடரோ (புன்னை, ஞாழற் புணியின் அருகெல்லாம் நிற்பவர் வலங்கொள்ளும் மறைக்காடரோ.)
87 அட்ட மாமலர் சூடி அடும்பொடு வட்டப் புன்சடை மாமறைக் காடரோ நட்டம் ஆடியும் நான்மறை பாடியும் இட்டமாக இருக்குமிடதே (எட்டு மாமலர்கள் சூடி அடம்பின் கொடிப்பூ வட்டமாய் அணிந்த புன்சடை மாமறைக்காடரோ. புன்னை, வெள்ளெருக்கு, செண்பகம், நந்தியாவட்டம், நெய்தல், பாதிரி, அலரி, செந்தாமரை என்ற 8 மலர்கள் இங்கே பேசப்படுகின்றன. அடும்பு = அடம்பு. Ipomaea biloba. இதைக் கடலிப்பூ (Adamba glabra) என்று கொள்வாருமுண்டு. 8 மலர்களும் கழிக்கானல் நிலப்பகுதியில் உப்பிலா இடங்களில் வளரலாம்.)
88 நெய்தல் ஆம்பல் நிறைவயல் சூழ்தரும் மெய்யினார் வலங்கொள் மறைக்காடரோ (நெய்தல், ஆம்பல் நிறைந்த வயல்களில் சூழ்தரும் நம்பிக்கையாளர் வலங்கொள்ளும் மறைக்காடரோ. நெய்தல் =
Phyllanthus emblica, ஆம்பல் = Nymphaea pubescens, பல்வேறு அல்லிகளின் பொதுப் பெயர்.)
89, 90 மறைக்காடரோ
91 சங்கு வந்து அலைக்கும் தடம் கானல்வாய் வங்கமார் வலங்கொள் மறைக் காடரோ (சங்குகள் வந்து அலைக்கும் தடத்தில் கானலின் வாயருகே பல்வேறு கப்பல்கள் வலங்கொள்ளும் மறைக்காடரோ. கானல்வாய்க்கு அப்புறம் கப்பல்கள் உள்ளே வரமுடியாது. ஏனெனில் ஆழம் பற்றாது.)
92 மறைக்காட்டான்

என்ற குறிப்புக்களே தொடர்புள்ளவை, இதற்கடுத்தது 5 ஆம் திருமுறையின் 10 ஆம் பதிகம். இதைப்பாடியே மறைக்காட்டுத் திருக்கதவை அப்பர் திறக்கச் செய்கிறார். மூடப்பழக்கத்திற்கு எதிர்முயற்சி இங்கோர் அருளாக விவரிக்கப் படுகிறது. நம்பிக்கையிலார் இதை மாகை (magic) என்பார். எதுவென்பது முகன்மையில்லை. அவரவர்க்கு அவரவர் புரிதல். இப்பதிகமே மறைக் காட்டில் சமயக் குரவர் முதலிற் பாடியதாகலாம். இந்தப் பத்துப்பாட்டும் பாடிய பின்னரே கருவறைக்கதவு திறந்ததென்பது சமயப் பதிவு. ஆனால் மீள அதைத் திருக்காப்பிடச் சம்பந்தர் ஒருபாட்டே பாடுவார். மற்ற ஒன்பதும் சிவனைப் போற்றியே வரும். கதவைத் திருக்காப்பிடுதல் பற்றி ஒன்றுமிருக்காது. 10/1 என்ற இந்தப் பாட்டுவீதம் தான் அப்பரைக் கேள்விக்குள்ளாக்கும்.

அப்பர் செயினத்திலிருந்து காபாலிக வழியால் சிவநெறிக்குள் வந்தவரென்றே ஆய்வாளர் சொல்வர் .சம்பந்தரோ மாவிரதியெனும் காளாமுகநெறியில் வளர்க்கப் பட்டவர். இரண்டுமே பாசுபதத்திலிருந்து உருவானவை. காபாலிகருக்கும் காளாமுகருக்கும் விட்டும் தொட்டும் உறவுகளுண்டு. இங்கே முன்குடுமியார் வேதநெறியில் ஆட்பட்டு கதவு திறக்க மறுத்துள்ளார். அதை மீறி நாவுக்கரசர் பாடுகிறார். பத்துப்பாட்டு பாடிய பின்னரே முன்குடுமியார் இறைவன்தூண்டலால் மனம்மாறிக் கதவுதிறக்க ஒப்புகிறார். ஆனால் சம்பந்தர் ஒரு பாட்டுப் பாடியவுடனேயே அதை அன்றாடம் திருக்காப்பிடவும், மறுநாள் திருத்திறப்பு செய்யவும் முன்குடுமியார் ஒப்புக்கொள்கிறாரெனில் அதற்கென்ன பொருள்? இறைவன் தம்மீது குறை கண்டானா? அன்றேல் முன்குடுமியார் சம்பந்தர் பக்கம் சார்பு கொண்டாரா? வேறேதேனுங் காரணமா? - என்று இக்கிழவருக்கு மனம் அலைபாயத் தானே செய்யும்? கண நேர வருத்தம்.

நாவுக்கரையர், சம்பந்தரின் திறனும் நேர்த்தியும் புகழும் அறிந்தவரானதால், இங்கே பொதிவான பார்வை கொள்கிறார். எது எப்படி இருந்தாலென்ன? பொது மக்களுக்குக் இறைவனின் காட்சி கிடைக்கும் படி மறைக்காட்டு வழக்கத்தை மாற்றியாகி விட்டது. இனித் தமிழுக்கு முன்னுரிமை கிட்டுமென அமைதி கொள்கிறார். எல்லா இயக்கங்களும் இப்படித்தான் தம்மைத் தாமே கிடுக்கங் (criticism) செய்து கொள்ளும். ஓரளவு விட்டுக்கொடுத்தல் இன்றேல் முகன (main) வெற்றிகளைப் பெறமுடியாது. கொஞ்சமாவது மூங்கில் போல் வளைந்து கொடுக்க வேண்டும். Stiff resistances do not take a movement anywhere. Here and there, little bit of compromises are essential to achieve broad objectives. One can always improve at a later time. இதைத்தானே விடுதலைப்போராட்டத்தில் காந்தி செய்தார்?
.     
93 மண்ணினார் வலம்செயும் மறைக்காடரோ கண்ணினால் உமைக்காணக் கதவினைத் திண்ணமாகத் திறந்தருள் செய்ம்மினே. (மண்ணிலுள்ளோர் வலம் செய்யும் மறைக்காடரே உமைக்காணக் கதவைத் திண்ணமாகத் திறந்து அருள்செய்மினே. அப்பர் காலத்திற் கருவறை திறக்காத நிலையிலும் பொது மக்கள் கருவறையை வலஞ்செய்து கொண்டிருந்தார் என்பதே இதில் முகன்மைச்செய்தி. இப்படிநடப்பது ஒன்றும் புதிதில்லை. நானறிய இன்னொரு கோயிலிலும் இன்று வரை இப்படி நடப்பதை என் ”சிலம்பின் காலம்” நூலில் கண்ணகி கோயில் பற்றிச் சொன்னபோது விவரித்திருப்பேன்.

கொடுங்களூரில் இன்றுள்ள பகவதிகோயிலே பெரும்பாலும் செங்குட்டுவன் கட்டியதாகும். (”சிலம்பின் காலம்” நூலைப் படியுங்கள்.) வழக்கம்போல் இங்கிருந்த இப் பழஞ்சிறுகோயில் காலவோட்டத்தில் பெரிதாகியிருக்கலாம். தேனி தாண்டி, மலையிலுள்ள மங்கலாதேவி கோயில், குட்டுவன் கட்டியதல்ல. அது பெருஞ்சோழர் காலக் கோயில். கொங்கு வஞ்சியே சேரர் தலைநகரென்பதையும் நான் ஏற்க மாட்டேன். எங்கோ சேரலத்தில் கொடுங்களூருக்கு அருகில் குடவஞ்சி இருக்கிறது. இன்றும் அது தொல்லியல் வழியே அறியப்படாதுள்ளது. இது பற்றி என் நூலிற் பேசியுள்ளேன். கண்ணகி கோயில் ஏற்பட்ட பின், ”அவள் படிமம் கொடுங்களூர்க் கோயிலில் இருக்கும் வரை தன் குலத்திற்கு உலகிலிழுக்கு” என்றெண்ணி வெற்றிவேற்செழியன் அதை வௌவிக் கொண்டு வந்து விடுவான். இதை அகம் 149 இல் எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் பதிவு செய்துள்ளார். (இப்பாடலுக்கு அப்புறமும் சிலம்பை 5/6 ஆம் நூற்றாண்டென்பாருக்கு எப்படிப் புரியவைப்பது?)

இதன்பின் கருவறை வெற்றாக இருக்கக் கூடாதென எல்லாப்பக்கமும் அடைத்து இன்னொரு படிமத்தை அருகிலெழுப்பி இன்றும் சேரலத்தில் வழிபாடு நடக்கிறது. எக்காலத்தில் இது நடந்ததென யாருக்குந் தெரியாது. கோயிலுக்குள் போன போது மூடிய கருவறையைப் பார்த்து விட்டு, நானுங் கூடப் புதிய பகவதி படிமத்தை வணங்கி வந்தேன். ஒருமுறை கொடுங்களூர் போய் வாருங்கள் உங்களுக்கும் நான் சொல்வது புரியும். மங்கலாதேவி கோயிலுக்கு போக விழைவோர் கொடுங்களூர் கோயிலுக்கு போகாதிருப்பது சரியல்ல கொடுங்களூரைப் போல் கருவறை மூடி வேறுவழியில் வழிபாடு தொடர்வது திருமறைக்காட்டிலும் நடந்துள்ளது. எப்பொழுது கருவறை மூடப்பட்டதென்ற விவரம் நமக்குத் தெரியாது. ஆனால் மூடிய கருவறையைத் திறக்க வைத்து அப்பரும் சம்பந்தரும் ஆகம வழிபாட்டை மீட்டிருக்கிறார். யாகம் நடத்தி வழிபாடு செய்யும் முன்குடுமியார் பழக்கம் பின்னால் மாறியிருக்கிறது. .     

94. ஆண்டுகொண்ட நீரே அருள்செய்திடும் நீண்ட மாக்கதவின் வலி நிக்குமே (மாக்கதவின் வலி நீக்குமே என்றதால் பூட்டில் சிக்கலில்லை. தாழில் தான் சிக்கலென்பது புரிகிறது. தாழ்க்கோல் நகராது கணுக்கத்தில் - connection - மாட்டிக்கொண்டு இருந்தது போலும்.).

95 இக்கதவம் திறப்பிம்மினே

96 அரிய நான்மறை ஓதிய நாவரோ பெரிய வான்புரம் சுட்ட சுவண்டரோ விரிகொள் கோவண ஆடை விருத்தரோ பெரிய வான் கதவம் பிரிவிக்கவே (நான்மறை ஓதிய நாவரோ, திரிபுரங்கள் சுட்டெரித்தவரோ, கோவண ஆடை உடுத்திய பெரியவரோ, எல்லோரும் அறிய இவ் வான்கதவை பிரிவிக்கட்டும்..இங்கும் தாழ் பற்றியே உணர்த்தப்படுகிறது.)

97 தொலைவிலாக் கதவம் துணை நீக்குமே (தொலையாத கதவத்தின் துணையை நீக்குமே)

98 பூக்கும் தாழை புறணி அருகெலாம் ஆக்கும் தண்பொழில் சூழ்மறைக் காடரோ ஆர்க்கும் காண்பரி யீரடி கேள் உமை நோகிக் காணக் கதவைத் திறவுமே. (இந்தப்பாட்டின் முதன் மூன்றடிகள் அப்படியே 5-9-85 இல் வருவன.)

99 இந்த மாக்கதவம் பிணி நீக்குமே (கதவின் பிணி நீக்குமே)

100 மாறிலாக் கதவம் வலி நீக்குமே (இதுவரை எந்த மாற்றமும் கொள்ளாத கதவத்தில் வலி நீக்குமே)

101 திண்ணமாக் கதவம் திறப்பிம்மினே (திண்ணமாய்க் கதவம் திறப்பிம்மினே. திறத்தல் தன்வினை; திறப்புதல் என்பது பிறவினை. எனவே ”திருவருட் செல்வர்” திரைப்படத்தில் நாம் பார்த்ததுபோல் இதுவொன்றும் (சினிமாத் தனத்தோடு) ”படார்” என்று தாழ் வெடித்து திறந்ததில்லை. (இருந்தாலும் தமிழரைத் திரைப்படங்கள் பெரிதும் ஆட்படுத்தி வைத்துள்ளன.) என்று பாடிய பின்னால், “இப்பொழுது போய்த் திறவுங்கள், கதவுதிறக்கும்” என்று சொல்லி, ஆட்களையனுப்பி, மாந்த முயற்சியோடு பிறவினையாகத்தான் இது நடத்தப் படுகிறது. ஆழ்ந்து ஓர்ந்தால் இதுவொன்றும் மாகையில்லை. எல்லாரும் சேர்ந்தெடுத்த, சமயக்குரவர் தூண்டிய நம்பிக்கை/முயற்சி மட்டுமே இங்கு விவரிக்கப்படுகிறது. மூதிகம் எழுப்பும் ‘பௌராணிகரே’ பொதுமக்களிடம் இதை மாகைபோற் சொல்வர். நடந்ததைப் புரிந்து கொள்ள இப்பாட்டில் வரும் திறப்புதலென்ற ஒரு பிறவினைச்சொல் போதும்.)

102 கண்ணினால் உமைக்காணக் கதவினைத் திண்ணமாகத் திறந்தருள் செய்ம்மினே (கண்ணால் உமைக்காணக் கதவினை திண்ணமாய்த் திறக்க அருள் செய்யுங்கள்.) 

103 சுரக்கும் புன்னைகள் சூழ்மறைக் காடரோ சரக்க இக்கதவம் திறப்பிம்மினே.(சுரக்கும் புன்னைகள் = முன்னாற் சொன்ன மூக்குற்றிச் சுரபுன்னை (Rhizophora mucronata); கண்டலார்ச் சுரபுன்னை (Rhizophora candelaria) என்ற இரு சுர புன்னைகளும் குறிக்கப்படுகின்றன.

அடுத்து  6 ஆம் திருமுறை 23 ஆம் பதிகத்தில் 232-241 ஆம் பாடல்களில் மறைக்காடும், 233 இல் திருப்பாசூரும், 236 இல் திருவண்ணாமலையும், 237 இல் அகத்தியான்பள்ளியும், திருக்கோடியும், திருவாரூரும், 238 இல் திருப்பருப்பதமும், 239 இல் திருவெண்காடும் குறிப்பிடப்படும். 236 இல் தான் அப்பரின் கூற்றுகளில் புகழ்பெற்றதொரு கூற்றான “ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்” என்ற வாசகம் வரும். 240 இல் ”முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய்” என்ற கூற்று வரும். இக்கூற்றுகள் இங்கு வந்ததற்குப் பெருங்காரணம் பெரும்பாலும் முன்குடுமியாரை அமைதிப்படுத்துங் காரணம் தான். தமிழிலும் இறைவனைத் தொழலாம், நான்மறை மட்டும் வழியில்லை” என்று இவற்றின் வழி சோழியர்க்குப் பொதிவாக (positive) உணர்த்துகிறார்.

அன்புடன்,
இராம.கி.

No comments: