அண்மையில் சில மடற்குழுக்களில் risk இற்கான தமிழ்ச்சொல் தேடி உரையாடுகிறார். இதற்கான சொல்லை 13 ஆண்டுகள் முன் ஒரு நண்பர் கேட்டதற்காகப் பரிந்துரைத்தேன். அதில் வேறு பல சொற்களும் உண்டு. (http://valavu.blogspot.com/2005/05/project-management.html) அவர் ஏற்றாலும், என் பரிந்துரையை ஏற்கப் பலரும் அப்போது இணையத்தில் தயங்கினார். அது என்னமோ தெரியவில்லை, இராம.கி.யின் பெயர் இராசி அப்படி. என் பெயர் சொல்லாவிட்டால் கூடப் பரிந்துரைகள் ஏற்கப்படும் போலும். பெயர் தெரிந்து விட்டால், முட்டித்தடுக்கிக் கொள்ளும். ”அபாயம், ஆபத்து, இழப்பு” என ஏதோ risk க்கு இணைசொல்லிக் கூட்டுச் சொல்லுக்குப் பலரும் முயல்வார். நாட்டுப் புறத்து பூதியற் சிந்தனையை எப்போதும் ஒதுக்குவார். 3000 ஆண்டுகளில் risk என்பது தெரியாமலேயே ஒருவேளை முட்டாள் தமிழன் வளர்ந்திருந்தானோ, என்னவோ?!
ஒருமுறை எண்ணிப்பாருங்கள். (வேண்டுமெனில் தாய்லாந்துக் குகையில் மாட்டிக்கொண்ட சிறுவரை வெளிக் கொணரப் பலரும் முயன்றாரே அதை எண்ணுங்கள்.) நாமொரு பாதையில் நடந்து போகிறோம். பாதை கொஞ்சம் இடுங்குகிறது. இரு பக்கமும் பாறைச் சுவர்கள். குறிப்பிட்ட இடத்தில் பாதை மிக இடுங்கிப் பின் விரிகிறது என்று வையுங்கள். நம்முடம்பை நேர்பட வைத்தோ, பக்கவாட்டில் வைத்தோ, குனிந்து நகர்ந்தோ, அல்லது காஞ்சி கைலாசநாதர் கோயில் சுற்றாலைத் துளையிற் செய்வது போல் படுத்து ஊர்ந்தோ, எப்படியோ வெளி வந்துவிடுகிறோம். இவ்விடுக்கில் இருந்து வெளி வருவோமா, சிக்கிக் கொள்வோமா என்பது (வேர்த்து விறுவிறுத்துப் போயினும்) நம் உடலமைப்பு, திறன், சிந்தனை ஆகியவற்றைப் பொறுத்தது அல்லவா? நாம் வெளிவரலாம். வராமலும் போகலாம். நம்மைப் பொறுத்த வரை இவ்விடுக்கு நம் நகர்ச்சியில் பெரிய risk. பொதுவாக மொழி வளர்ச்சியில் ஐம்புலன் வழிச் சொற்களே சற்று உருமாறி அவற்றிற்கு அருகில் வரும் ஆறாம் புலன் சிந்தனைகளுக்குப் பெ யராகும்.
ஒருமுறை எண்ணிப்பாருங்கள். (வேண்டுமெனில் தாய்லாந்துக் குகையில் மாட்டிக்கொண்ட சிறுவரை வெளிக் கொணரப் பலரும் முயன்றாரே அதை எண்ணுங்கள்.) நாமொரு பாதையில் நடந்து போகிறோம். பாதை கொஞ்சம் இடுங்குகிறது. இரு பக்கமும் பாறைச் சுவர்கள். குறிப்பிட்ட இடத்தில் பாதை மிக இடுங்கிப் பின் விரிகிறது என்று வையுங்கள். நம்முடம்பை நேர்பட வைத்தோ, பக்கவாட்டில் வைத்தோ, குனிந்து நகர்ந்தோ, அல்லது காஞ்சி கைலாசநாதர் கோயில் சுற்றாலைத் துளையிற் செய்வது போல் படுத்து ஊர்ந்தோ, எப்படியோ வெளி வந்துவிடுகிறோம். இவ்விடுக்கில் இருந்து வெளி வருவோமா, சிக்கிக் கொள்வோமா என்பது (வேர்த்து விறுவிறுத்துப் போயினும்) நம் உடலமைப்பு, திறன், சிந்தனை ஆகியவற்றைப் பொறுத்தது அல்லவா? நாம் வெளிவரலாம். வராமலும் போகலாம். நம்மைப் பொறுத்த வரை இவ்விடுக்கு நம் நகர்ச்சியில் பெரிய risk. பொதுவாக மொழி வளர்ச்சியில் ஐம்புலன் வழிச் சொற்களே சற்று உருமாறி அவற்றிற்கு அருகில் வரும் ஆறாம் புலன் சிந்தனைகளுக்குப் பெ யராகும்.
காட்டு: நெல் என்பது ஐம்புலன் சொல் தான். நெல்> நல் என்று ஆறாம்புலன் சொல்லிற்கு நம்மைக் கொண்டுவருகிறது.. மதி = சந்திரனைக் குறிக்கும் ஐம்புலன் சொல். மதிப்பு என்பது அதிலெழுந்த ஆறாம்புலன் சொல். அரத்தம் என்பது ஐம்புலன் சொல். அரத்து = சிவப்பு என்பது அதில் விளைந்த ஆறாம் புலன் சொல். பெரும்பாலான ஆறாம்புலன் சொற்கள் இப்படியே உருவாகும்.
இப்போது வேறு வழியில் ஓர்ந்து பாருங்கள். பூதியலான இடுக்கிற்கு (physical risk) மாறாய்ச் சிந்தனையளவில், நுட்பியல் (technology) அளவில், மானகை (management) அளவில், இயக்க (operation) அளவில் இன்னும் வெவ்வேறு அளவுகளில் இடுக்கு என்பதை வைத்தே conceptual risk ஐயும் பார்க்கலாமே? risk எனுங் கருத்தியல் நிலையை (conceptual situation) இடுக்கு எனும் பூதியல் நிலையோடு (physical situation) பொருத்திப் பார்த்தே நாட்டுப் புறத்துத் lதமிழ்ச் சிந்தனை வளர்ந்தது. (கவலை என்ற இன்னொரு கருத்தியல் சொல்லும் மரக் கவல் என்னும் பூதியற் கிளையை வைத்தே கிளர்ந்தது. இது போன்ற சொல் வளர்ச்சியை எனக்குப் புரியவைத்தவர் டி. பக்கிரிசாமி என்பார் ஆவார். என்னுடைய பல கட்டுரைகளில் அவர் பங்களிப்புப் பற்றிச் சொல்லியுள்ளேன்.)
இடுங்கல் என்பது இடுக்கெனும் பெயர்ச்சொல்லைத் தமிழில் உருவாக்கியது. இதே பொருளில் சிடுங்கல், சிடுக்கெனும் பெயர்ச்சொல்லை உருவாக்கும். சிடுக்கும் ஒருவகையான மாட்டிக் கொள்தலே. முடுங்குவதும் முடுக்கென்ற பெயர்ச் சொல்லை உருவாக்கும். தடுங்குவது தடுக்கை உருவாக்கும். உடுக்கியது ஒடுக்கும் பின் ஒடுக்கை உருவாக்கும். பேச்சுவழக்கில் இடுக்கு> இட்கு> இக்கு, சிடுக்கு> சிட்கு> சிக்கு, முடுக்கு> முட்கு> முக்கு, தடுக்கு> தட்கு> தக்கு, ஒடுக்கு> ஒட்கு> ஒக்கு என்பன வெவ்வேறு பொருளில் ஆளப்படும். இச் சொற்பிறப்பியலை விளக்க நான் பல்வேறு சொற்களைக் கொண்டுவந்து கொட்டலாம். ஆனால் ஒரு பானைச் சோற்றிற்கு ஓரு சோறு பதம்.
இக்கென்பது உள்ளே மாட்டிக்கொள்வோமா, வெளிவருவோமா என்னும் இக்கட்டான நிலையைக் காட்டும். பரவலாக சிவகங்கை மாவட்டத்தில் risk க்கு இணையாக இக்கே ஆளப்படும் அருகிலுள்ள மற்ற மாவட்டங்களிலும் இதைக் கேள்விப்பட்டுள்ளேன். (ஒரு சில அகரமுதலிகளிலும் உண்டு.) வட தமிழகத்தில் இதைப் பெரிதுங் கேட்டதில்லை.
“There is no risk in this". - "இதில் ஓர் இக்கும் கிடையாது.
“I am not telling you a risky job" - "உங்களிடம் இக்கான வேலையை நான் சொல்லவில்லை”.
“why do you risk yourself this much?" - "நீங்கள் ஏன் இவ்வளவு இக்கிக் கொள்கிறீர்கள்?
எல்லாவகையான நுட்பியல், கருத்தியல், மானகைச் சூழல்களுக்கு இக்கை நான் பயன்படுத்தியுள்ளேன். இதுவரை ஒரு சிக்கலும் எழவில்லை.
சரி சிக்குக்கு வருகிறோம். நூல்கண்டு, முடி போன்றவை சிக்கிக் கொள்ளும். சிக்கல் என்பது பலக்கிய தன்மை. complexity. இக்கிற்குச் சற்று வேறுபட்டது. ஆனாலும் நெருங்கிய பொருள்காட்டும். ஒருசிலர் பலக்கெண்ணை (complex number) சிக்கெண் என்றுஞ் சொல்வர். நேரடியாய்ச் சிந்திக்க முடியாது மீண்டும் மீண்டும் மாட்டிக்கொள்ளும் நிலை சிக்கு.
முக்கு என்பது முணக்கு, மூலை. ஆகிய பொருள்களைக் காட்டும், முக்கும் ஒரு வகை இக்குப் போல் தான். ஆனால் அது முடக்கத்தால் வருவதால், இயக்கம், திருப்பம், அடவு போன்றவற்றால் இக்கைவிட எளிதாய் வந்துவிடமுடியும்.
தக்கு என்பது தடை காரணமாய்த் தங்கிப் போவது. இதிலும் சிந்தனை, திறன், விடாமுயற்சி போன்றவை தேவை.
ஒக்கு என்பது உடைந்து போனதைச் சரிசெய்வது. ஆங்கிலத்தில் repair என்பதை எங்கள் பக்கம் ஒக்கிடுதல் என்பார். “இம் மிதிவண்டி சரியில்லை, இப் பூட்டு சரியில்லை. இக் கருவி சரில்லை, இதை ஒக்கிட்டு வா” என்பது சாத்தாரமாய்க் கேட்கும் பேச்சு.
படித்தவரே இக்கு. சிக்கு, முக்கு, தக்கு, ஒக்கு என்று சொல்லத் தயங்குகிறோம். ”நாமேதோ புத்திசாலிகள். நாட்டுப்புறத்தார் படிக்காதவர்” என ஒதுக்குவோம். ஆனால் அவர் தமிழ் சிறப்பாகவேயுள்ளது. எல்லாவற்றிற்கும் சங்கதம் நாடி அவர் ஓடுவதில்லை.
அன்புடன்,
இராம.கி.
4 comments:
பெருமதிப்பிற்குரிய ஐயா! Risk எனும் ஆங்கிலச் சொல்லுக்கு ‘இக்கு’ எனும் தமிழ்ப் பதத்தைப் பரிந்துரைத்துத் தாங்கள் எழுதிய முந்தைய கட்டுரையையும் நான் படித்துள்ளேன். அதை விட இதில் இன்னும் கொஞ்சம் விளக்கமாய் அந்தச் சொல்லுக்கான பொருத்தப்பாடுகளைத் தாங்கள் விளக்கியிருப்பது பயனுள்ளதாயிருக்கிறது.
கட்டுரைத் தொடக்கத்தில், தாங்கள் பரிந்துரைக்கும் சொற்களை யாரும் ஏற்பதில்லை என்று வருத்தப்பட்டிருந்தீர்கள். ஆனால் நான் ஏறத்தாழ ஏழு ஆண்டுகள் முன் உங்கள் ’இடியப்பம்’ கட்டுரையைப் படித்ததிலிருந்து இன்று வரை தொடர்ந்து உங்கள் சொற்கள் பலவற்றைப் பயன்படுத்தியே வருகிறேன். குறிப்பாக விழியம், சொவ்வறை போன்றவற்றைச் சொல்லலாம். எனவே என்னைப் போன்றவர்களும் இருக்கிறோம். ஆகவே தொடர்ந்து தாங்கள் தங்கள் பரிந்துரைகளை அளிக்க வேண்டுகிறேன்! அதுவும் இந்தக் கட்டுரையில் ’இக்கு’ எனும் ஆங்கிலச் சொல்லைச் சொற்றொடர் அமைப்பில் ஆங்கிலத்திலும் தமிழிலுமாக மாற்றி மாற்றி அமைத்துக் காட்டியுள்ள பாணி புரிதலை இன்னும் கூட்டுகிறது; குறிப்பிட்ட சொல்லைப் பயன்படுத்துதல் குறித்து நம்பிக்கை எழச் செய்கிறது. இந்தப் பாணியைத் தொடர வேண்டுகிறேன்!
அழகிய விளக்கத்தோடு, எளிமையான தமிழ்ச்சொற்களை வழங்கியுள்ளீர்கள். மிக்க நன்றி.
ஐயா! தங்களது கட்டுரையை நான் தமிழ்ச்சொல்லாய்வு குழுவில் உங்கள் பெயரைக் குறிப்பிட்டு பகிர்ந்துள்ளேன். அதில் தங்களுக்கு ஏதேனும் சிக்கல் உண்டென்றால் எனக்கு தெரியப்படுத்தவும். நான் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.
சிறப்பான சொல். சிறப்பான விளக்கம். புழக்கத்திற்குக் கொண்டு வருவது நம் கையில் உள்ளது.
Post a Comment