அடுத்தது 2 ஆந் திருமுறை 37ஆம் பதிகம். இதைத் காப்பிட்ட பதிகமென்பார். சம்பந்தரும் அப்பரும் மறைக்காடு வந்த போது காலகாலமாய்த் திருக் கோயிலின் கருவறைக்கதவு திறக்கவில்லையாம். கதவின் பூட்டுத் திறந்தாலும் ஏதோ காரணத்தால், தாழ் சிக்கியது போலும். கோயிலுள் நுழைவோரும், மூடிய கருவறையைக் கும்பிட்டு, மற்ற திருமேனிகளைக் தெரியனஞ் (தெரிசனம். இதைத் தர்ஷணம் என்று சங்கதப்படுத்தவேண்டாம். தெரியனம் நல்ல தமிழ்ச்சொல். இறைவன் திருமேனி தெரிவதும், நாம் அதைத் தெரியப்படுத்திக் கொள்வதுமே தெரிசனமாகும். நல்ல தமிழ்ச் சொல்லைக் குத்திக் குதறிச் சங்கதம் ஆக்குகிறோம்.) செய்து போயிருந்தார் போலும். கோயிலைக் கவனித்து வந்த முன்குடுமிப் பார்ப்பார் ”இறைவன் சொல்லாது கதவம் திறக்காதென” யாகம் நடத்தியிருந்தாரோ, என்னவோ?
நாளடைவில் ”தமிழைத் தூக்கிப்போடு, நான்மறை ஓதலுக்கே வலிமை” யென்று ஊரார் மனங்களில் தவறாய் ஊறிப் போயிருக்கலாம். (இன்றுங் கூடத் தமிழெதற்கும் பயன்படுவதாய்த் தெரியவில்லையே? அப்படித் தானே எல்லாவற்றையும் முட்டாள்தனமாய் ஆக்கி வைத்திருக்கிறோம்?) ”தமிழ் சோறு போடுமா?” என்று கேட்கிறோமே? ”தேவார மூவரே வந்துசொன்னால் அன்றித் தேவாரச் சுவடியறை திறக்க முடியா”தெனும் மூடச்சடங்கிற்கு ஆட்பட்டுத் தில்லை மூவாயிரவர் சிற்றம்பலத்தில் அடம்பிடித்திருக்கிறாரே? அதுபோல் இங்கும் இறைவன் மனங்கனிந்தால் அன்றி கருவறை திறக்காது என முன்குடுமியார் விதித்தார் போலும். இதுபோலும் மூடப்பழக்கங்கள் இன்றுஞ் சில கோயில்களிலுண்டு. ஓரிரண்டை இங்கு சொல்வேன்.
இன்றும் அழகர்கோயில் பெரிய கோபுர வாசலை ஏதோவொரு காரணத்தால் திறக்கமாட்டார். அதற்கு அருகிலுள்ள சிறுவாசல் வழிதான் எல்லாப் பற்றாளரும் நுழைகிறார். சிற்றம்பலக் கோயிலில் ஒரு காலத்தில் பொன்னம்பல மேடைக்குள் எல்லாரும் நுழையார். குறிப்பிட்ட சிலர் மட்டுமே நுழைய அனுமதியுண்டு. மற்ற பொதுமக்கள் மேடைக்குக்கீழ் நின்றே நடவரசனைக் காணுவர். இப்போது எல்லோரும் காசு கொடுத்துப் போகிறார். எப்போது காசு கொடுத்துப் பார்க்கும் பழக்கமாய் மாறியது? தெரியாது. இவ்வளவு ஏன்? ஓதுவார் பொன்னம்பலமேடையில் நின்று தேவாரம் பாடக் கூடாதென அடம்பிடிப்பும் கூட நடந்தது. நான் அங்கு போய்ச் சிலகாலம் ஆயிற்று. பொன்னம்பல மேடையில் நின்றவாறு இப்போது தேவாரம் பாடப் பெறுகிறதா என்றறியேன். இப்படி வெவ்வேறு மூடப்பழக்கங்கள் நடக்கத் தான் செய்கின்றன.
திருமறைக்காட்டின் மூடப்பழக்கத்தை மாற்ற விழைந்து, தமிழ் நாவுக்கரசரும், தமிழ் ஞானசம்பந்தரும் பாடியதால் பெருங்கதவை திறக்கவும் பின் காப்பு இடவும் முயன்றதே தேவார காலத்து மறைக்காட்டின் சிறப்பாகும். 10 பாடல்கள் பாடி, அப்பர் கருவறைக் கதவைத் திறக்க, ஒரே பாட்டால் சம்பந்தர் அதைத் திருக்காப்பிட்டு விடுவார். 10/1 என்று இந்தப் பாட்டு வீதம் அமைந்தது தான் அப்பருக்குச் சற்றே வருத்தமளித்துவிட்டது போல் தெரிகிறது. ”தம் பத்தியில் ஒருவேளை இறைவன் குறை கண்டானோ?” என அவர் பிணக்குறுவார். அப்பர் பாடலைச் சொல்கையில் இதை விளக்குவேன். இப்போது சம்பந்தர் பாடலுக்கு வருவோம்.
393
"சதுரம்மறை தான்துதி செய்து வணங்கும்
மதுரம்பொழில் சூழ்மறைக் காட்டுறை மைந்தா,
இதுநன்கு இறைவைத்து அருள்செய்க எனக்குள்
கதவம் திருக்காப்புக் கொள்ளுங் கருத்தாலே"
(சிறப்புக் காரணமாய் இங்கு முழுப்பாடலும் கொடுத்தேன். ”சதுரம் மறை” என்றபிறகு 4 வேதங்கள் தவிர வேறுபொருளுக்கு வழியில்லை. வேதங்கள் இறைவனை வழிபட்டதாய் இங்கு பொருள்கொள்ளத் தேவையில்லை. அப்படிச் சிலர் சொல்வது உண்மையை மறைத்துத் தொன்மம் ஆக்குவது ஆகும். தமிழ்ப்பாடல்களுக்கென்று பொருள்கோள் முறைகளுண்டு. ”சதுரம் மறை துதிசெய்து தான்வணங்கும் மதுரம் பொழில்சூழ் மறைக்காட்டுறை மைந்தா” என்று இவ்வரியைக் கொண்டால், ”தான்” என்பது வேதநெறி வழி துதி செய்யும் சாத்தாரப் பற்றனையோ (சாதாரண பக்தன்), அல்லது சம்பந்தரையோ குறிப்பது விளங்கும். ”நான்மறை ஓதித் துதிசெய்து தான் வணங்கும், (தேன்நிறைந்த பொழில்சூழ்ந்த) மறைக்காட்டு மைந்தனே” என்பது முதலிரு வரிகளின் பொருளாகும். ”தான் கொண்ட ’கதவம் திருக்காப்புக் கொள்ளுங் கருத்தை’ நல்லாதாக்க இறையருள் செய்க” என்பது மீந்த வரிகளின் பொருளாகும். ”சோழியர் மனம் மாறி, நடைமுறை திருத்தி, பொதுமக்கள் திறந்த கருவறை காண, அருள்செய்யுங்கள்” என இறைவனிடம் சம்பந்தர் வேண்டியதாய்க் கொள்ளலாம், வேதநெறி விரும்பிய கோயில் நிருவாகத்தார் கிழவன் பேச்சையும், சிறுவன் பேச்சையும் கேட்பதற்கு இறைவனருள் வேண்டாமோ?)
394 ”சங்கம் தரளம் அவைதான் கரைக்கேற்றும் வங்கக்கடல் சூழ்மறைக் காட்டுறை மைந்தா” (சங்கும், முத்தும் கரைக்கேற்றும் வங்கக்கடல் சூழ்ந்த மறைக்காட்டு உறை மைந்தா. வங்கக் கடல் என்பதை இக்காலப் பொருள் கொண்டு பார்க்கக் கூடாது. கப்பல்கள் போய் வருங் கடலென்று பொருள் கொள்ள வேண்டும். ”வங்கக்கடல் கடைந்த மாதவனை, கேசவனை..” என்பது சூடிக் கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாள் அருளிய திருப்பாவையின் முப்பதாம் பாட்டு.).
395 ”குரவம் குருக்கத்திகள் புன்னைகள் ஞாழல் மருவும்பொழில் சூழ்மறைக் காட்டுறை மைந்தா” (குரவம், குருக்கத்திகள், புன்னைகள், ஞாழல் ஆகியவை நிறைந்த பொழில் சூழ்ந்த மறைக்காட்டுறை மைந்தா. இங்கேதான் புதலியற் பார்வை (botanical view) வேண்டும். கடலைத்தடுக்கும் அலையாற்றித் தாவரங்கள் மட்டுமன்றி, அவற்றின் பின்னுள்ள நிலங்கெட்டியாகி வளருந் தாவரங்களும் இங்கு சொல்லப் படுகின்றன. இன்னொரு அலையாற்றித் தாவரம் அடுத்த பதிகத்தில் வரும். குரவம்= குரா, Tarenna asiatica என்பது வறள் முல்லையில் வளரும் பாசிலைச் செடி. இது கோடியக்கரையின் தல மரமுங் கூட. குருக்கத்திகள்= Heptage benghalensis. இதை மாதவிக் கொடிகள் என்பார் http://valavu.blogspot.in/2009/03/5_29.html இல் இதுபற்றி விரிவாயெழுதினேன்.
கழிக்கானற் புன்னைகள் பல உள்ளன. இங்கே நாகப்புன்னையும் (Calophyllum inophyllum). சுரபுன்னைகளும் [மூக்குற்றிச் சுர புன்னை (Rhizophora mucronata); கண்டலார்ச் சுரபுன்னையும் (Rhizophora candelaria)] சொல்லப்படுகின்றன. கண்டலெனும் முள்நிறைத் தாவரங்களும் இங்குண்டு. சுரித்தல்= சேற்றில் திளைத்தல். சுர புன்னை= சேற்றுப் புன்னை. இவை மலையில் வளரும் சுர புன்னைகள் (Mammea suriga) அல்ல. ஞாழல்= Cassia sophera / Senna எனும் புதர்ச் செடி இது கடற்கரைக்குச் சற்றுதள்ளிக் காட்டில் வளரும். புதலியற் பெயர்களைக் கண்டு அதிராதீர்கள். நம்மூர்ப் பெயருக்கும் இதற்கும் தொடர்பு தெரிந்து கொள்வது தேவையானது. நம்மில் பலரும் நம்மூர்த் தாவரங்களில் இருந்து பெரிதும் விலகி வந்து விட்டோம். நம் தமிழ்மரபு குலைவதற்கு அதுவுமொரு காரணம்.)
396 ”படர் செம்பவளத்தோடு பன்மலர் முத்தம் மடலம்பொழில் சூழ்மறைக் காட்டுறை மைந்தா” (படருஞ் செம்பவளத்தோடு பன்மலர் முத்தம் கொண்ட வாய்க்காலும் பொழிலுஞ் சூழ்ந்த மறைக்காட்டு உறை மைந்தா.; இற்றைப் பிச்சாவரத்தில் நாம் பார்ப்பதுபோல் அங்கங்கே ஓதக்கழி வாய்க்காலும், இடைப்பட்ட நிலங்களிற் பொழிலுமாய் மறைக்காடு இருந்ததைத் தெளிவாகச் சொல்கிறார்.)
397 ”வானோர் மறை மாதவத்தோர் வழிபட்ட தேனார்பொழில் சூழ்மறைக் காட்டுறை செல்வா” (வானோர்மறை மாதவத்தார் வழிபட்ட தேன்நிறைந்த பொழில்சூழ்ந்த மறைக்குட்டுறைச் செல்வா. வானோர்மறை= தேவ மறை; இங்கே வேதநெறி பின்பற்றியோர் குறிக்கப்படுகிறார். தேனார் பொழில் என்பதால் பூக்காடு உணர்த்தப்பெறுகிறது.)
398 ”பலகாலங்கள் வேதங்கள் பாதங்கள் போற்றி மலரால் வழிபாடுசெய் மாமறைக்காடா” (பலகாலங்கள் வேதவழியால் உன்பாதங்களைப் போற்றி மலரால் வழிபாடுசெய்யும் மாமறைக்காடா. முன் சொன்னபடி வேதநெறியும் ஆகமநெறியும் கலந்தது இற்றைச் சிவநெறியாகும். நெருப்பு வளர்த்தல் என்பது வேதநெறிக் குறியீடு. நீர் சொரிதலும், பூ செய்தலும் ஆகமக் குறியீடுகள் ஆகும். வேதநெறியின் கலப்புக்கூடிய சிற்றம்பல நடைமுறையே பலகாலம் மறைக்காட்டில் இருந்திருக்கலாம். இவ்வாசகத்தின் வழி அப்படியெண்ணத் தோன்றுகிறது. வேத மந்திரங்களால் இறைவன் பாதம் போற்றப்பட்டு, அதேபொழுது ஒவ்வொரு ’போற்றி’க்கும் (’நமக’விற்கும்) மலரால் வழிபாடு செய்யப்பட்டிருக்கலாம். முழு வேதநெறியிலோ ஒவ்வொரு ’போற்றி’க்கும் ஒருசொட்டு நெய்/ஆகுதி ஓமத்தில் இடப்படும்.)
399 ”வேலா வலயத்து அயலே மிளிர்வெய்தும் சேயார் திருமாமறைக் காட்டுறை செல்வா” (கடல் வலயத்தின் அயலிலுள்ள சேயாரும் மிளிர் வெய்தும் திருமாமறைக் காட்டுறை செல்வா. வேலை= கடல்; சேயார்= தொலைவிலுள்ளோர்; மிளிர்வு= பெருமை; கடற்கரைக்கு அயலில் உள்ளவரும் பெருமையெய்தும் திருமாமறைக் காட்டுறைச் செல்வா.)
400 ”கலங்கொள்கடல் ஓதமுலாவு கரைமேல் வலங்கொள்பவர் வாழ்த்திசைக்கும் மறைக்காடா” (மரக்கலங்கள் கொண்டு, கடலோதம் உலவும், கரை மேல் வலங் கொள்வார் வாழ்த்திசைக்கும் மறைக்காடா. சம்பந்தர் காலத்திலும் திருமறைக்காடானது வெறும் ஊர்மட்டுல்ல. கலங்கள் கொள்ளும் இடமாய் இருந்துள்ளது. அலையில்லாது ஓதம்மட்டும் இருக்குமிடம்; கரைமேல் கோயிலை வலங்கொள்பவர் மிகுதி.)
401 ”கோனென்று பல கோடி உருத்திரர் போற்றும் தேனம்பொழில் சூழ்மறைக் காட்டுறை செல்வா” [அரசனென்று பலகோடிச் சிவநெறியார் போற்றும் தேனம்பொழில் சூழ் மறைக்காட்டுறைச் செல்வா. உருத்திரரை உருத்திரம் எனுஞ் சிவந்தகொட்டையை (அக்கமணி) அணிந்தோரென்றே பொருள் கொள்ளலாம். உருத்திரம்= அரத்தம், சிவம். ”அரோகரா”வெனச் சிவன் கோயிலிலும், முருகன் கோயிலிலும் சொல்கிறாரே அது ”அரோ அரா” எனுங் கூப்பாடுதான். அதன் பொருள் ”சிவசிவ” என்பதே. முருகனுக்கும் சேயோன் என்ற பெயருண்டு. விண்ணவ நெறியில் வேங்குன்றத்தில் (>வேங்குண்டம்> வைகுண்டம்> வைகுந்தம்) விண்ணவனைச் சூழ்ந்து நிலைத்து நிற்போரை நிற்ற சூழிகள்> நித்த சூழிகள்> நித்யசூரிகள் என்பார். நித்யசூரி என்ற சொல் முற்றிலுஞ் சங்கதமில்லை. அது இரு மொழிகளின் வழிப பிறந்த இருபிறப்பிச் சொல். நம்மூரைச்சேர்ந்த விண்ணவ நெறிச் சொற்களையெல்லாஞ் சங்கதமாக்கி நாமென்ன பயன் தான் கண்டோம்? சூழி(சூரி)களின் அரசன் சூழியரசன் (சங்கதத்தில் சௌரிராசனாகும்). திருக்கண்ணபுரச் சௌரிராசன் மேல் அடியேனுக்கு ஆழ்ந்த ஈடுபாடு. சூழியரசன்போல் இங்கே உருத்திரர் கோன் இருந்ததாய்ப் பொருள் கொள்ளலாம்.]
402 ”வேதம்பல ஓமம் வியந்து அடிபோற்ற ஓதம் உலவும் மறைக்காட்டில் உறைவாய்” (வேதமந்திரங்களால் வியந்து பல ஓமங்களில் இறைவனடி போற்றும், ஓதமுலவும், மறைக்காட்டில் உறைவாய். ஒரு பக்கம் வேத மந்திரங்கள் நிறைந்த ஓமங்கள் நடத்தி இறைவனடி போற்றப்படுகிறது. இன்னொரு பக்கம் கடலோத ஓசைகேட்கிறது. ஒன்றிற்கொன்று பின்புலம் ஆகிறது. சிற்றம்பல நடைமுறை மறைக்காட்டில் இருந்தது என்பதற்கு இப்பாட்டும் ஒரு சான்று.) .
403 ”மறைக்காடன்” என்று இறைவன் பெயர் சொல்லப்படுகிறது.
மேலும் மற்ற பதிகங்களைப் பார்ப்போம். அயர்ந்துவிடாமல், கூட வாருங்கள்.
அன்புடன்,
இராம.கி.

No comments:
Post a Comment