Tuesday, September 04, 2018

இனி

அகத்தியர் மடற்குழுவில், தொகுப்பாளினி, கவிதாயினி பற்றிய தன் மடலின் (16/5/07) ஊடே "தொகுப்பாளினி, கவிதாயினி போன்ற ஆக்கங்கள் வடமொழியைப் பார்த்து ஏற்பட்டவை; கணினி என்பது கூட அது போன்றது தான்; யாருமே இதைக் கண்டுகொள்ளாது இருக்கிறார்கள்" என்ற (காலஞ்சென்ற) திரு. நகுபோலியன் கருத்துச் சொல்லியிருந்தார். அதற்கு நான் அப்போது அனுப்பிய பின்னூட்டை இங்கு இந்தனையாண்டுகள் கழித்து வலைப்பதிவிலும் சேமிக்கிறேன்.

மேலே உள்ள கூட்டுச்சொற்களில் உள்ள முன்னொட்டுக்களைத் தவிர்த்தால், நாம் ஆயவேண்டியது, ஆளினி, தாயினி போன்றவை தான். "இவை தமிழில் சரியாக உருவாக்கப் பட்ட பெயர்ச்சொற்கள் தானா? அல்லது வடமொழி பார்த்து, ஈயடிச்சானாய், அப்படியே அச்சு தவறாமல், ஆக்கப் பட்ட போல்மங்களா?" என்பதே இங்குள்ள கேள்வி.

மேலே குறிப்பிட்டுள்ள சொற்களுக்கு, ஆளன், தாயன் என்பவை ஆண்பால் விகுதிகளோடு (அன், அவன், ஆன்) அமைந்த இணைச் சொற்களாகும்.

ஆளன் - ஆளினி,
தாயன் - தாயினி போன்றே,

பாடன் (>பாணன்) - பாடினி,
எயினன் - எயினி,
கூனன் - கூனி,
யாழன் - யாழினி,
சாலன் - சாலினி,
பார்ப்பன் - பார்ப்பினி
பிக்கு - பிக்குனி

போன்றவற்றையும் இங்கு காட்டலாம். ஆண், பெண் பெயர்களான இவை அத்தனையும் தமிழ் வழக்கைப் பின்பற்றி ஏற்பட்ட தமிழ்ச் சொற்களே! ஆள்தல், தையல் (=பொருத்துதல், சேர்த்தல், கூட்டுதல்; தய்யுதலில் ஏற்பட்ட இன்னொரு பெயர்ச்சொல் தச்சன்), பாடுதல், எய்தல், குன்னுதல் (>கூனுதல்) யாழ்தல் (>யாத்தல் = இசை கூட்டுதல்), சால்தல் (=பூசைப் பொருட்களைச் சாற்றுதல்), பால்தல் (=வெளுத்தல், it does not mean white; it just means fair colour; வெளிறுதல்), பிய்க்குதல் என்ற வினைகளின் வழியால் தொழிலருக்கு அமைந்த பெயர்கள் இவையாகும். பொதுவாய்த் தொழிலில் இருந்து உருவாகும் தொழிலர் பெயரும், தொழிற்கருவியின் பெயரும், தமிழில், காலம் காட்டியும், காலம் காட்டாமலும், அமையலாம்.

காட்டாகப் பாடுதல் தொழிலில் காலங் காட்டி அமையுஞ் சொற்கள் பாடினவன்/பாடியவன், பாடுகிறவன், பாடுபவன் என்பவை ஆகும். காலங் காட்டாமல் அமையுஞ் சொல் பாடன் (>பாணன்) ஆகும். சில போது (இறந்த காலமோ, நிகழ் காலமோ, எதிர் காலமோ குறிக்கும்) காலம் காட்டும் அமைப்பு மட்டுமே நிலைத்து, பின் அது திரிந்து, காலநிலை மயங்கி, புழங்குவது கூடத் தமிழில் உண்டு. இது போன்ற கால மயக்கம், மற்ற திராவிட மொழிகளிலும் இருக்கிறது. பல மொழியறிஞர்களும் இந்தப் பழக்கத்தை ஆழ்ந்து ஆய்ந்திருக்கிறார்கள். காட்டாகப் பேராசிரியர் மு.வ. தன் "மொழிநூல்" என்ற பொத்தகத்தில் தமிழிய மொழிப் பழக்கங்களை அலசுவார்.

தமிழிய மொழிகளுக்கும் வடபுலத்து மொழிகளுக்கும், குறிப்பாகச் சங்கதத்திற்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். கலப்புத் திரிவாக்கம் உள்ள வடமொழியில் ஆண்பால், பெண்பால் பெயர்களில், பகுதி, விகுதி என்று மட்டுமே பிரித்து, வெவ்வேறு பால் குறிக்க, விகுதிகள் எப்படித் திரியும் என்று கூறிச் செல்வதே பொதுவான இலக்கண முறையாகும். இதே முறையைப் பின்பற்றி வடமொழி இலக்கணத்தின் வழி, தமிழைக் காட்ட முனைந்த "வீர சோழியமும்" குறிக்கும்.

அதற்கு மாறாய், ஒட்டு நிலை (agglutinative) மொழியான தமிழ் போன்றவற்றில், மற்ற இலக்கண நூலார் பெயர்ச் சொற்களைப் "பகுதி, பின் இடைநிலை, சிலபோது சாரியை, முடிவில் விகுதி" என்று வெவ்வேறு உறுப்புக்களாய்ப் பிரித்து உள்ளே துலங்கும் ஒழுங்குமுறையை நமக்குக் காட்டுவார்கள். கூடவே ஒலிப்புத் திரிவையும், ஒலிமிகை, ஒலிக்குறை போன்றவற்றையும் கூடப் பொருத்தியும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழில் ஆண்மகனுக்கு அன், அவன்>ஆன் என்ற பால் விகுதிகள் வந்து சேர்வதைப் போலவே, பெண்மகளுக்கு அள், அவள்>ஆள், இ, ஐ போன்ற விகுதிகள் தமிழில் வந்து சேரும். (தெலுங்கில் உயர்திணையில் பெண்பால் பகுப்பு இல்லை. அஃறிணை ஒன்றன் பால் போலவே அவர்கள் பெண்ணைக் குறிப்பர். இந்தப் பயன்பாட்டைப் பார்த்தால், ஆணாதிக்கம் ஏற்பட்ட பழங்குடி நிலையிலேயே தெலுங்கு மொழி, தென் திரவிட மொழிகளில் இருந்து பிரிந்திருக்க வேண்டும்.)

மேலோட்டமாய் திரு. நகுபோலியன் பார்த்த இனி என்பது பெண்பால் குறிக்கும் தமிழ்விகுதி அல்லவே அல்ல; உண்மையில் அதை "இன்+இ" என்று பிரிக்க வேண்டும். அப்படிச் செய்தால், முடிவில் வரும் இ பால்விகுதியை (பால் அறி கிளவி என்று தொல்காப்பியர் சொல்லுவார்) உணர்த்துவதையும், அதற்கு முன்வரும் இன் என்னும் இடைநிலை, காலத்தைக் குறிப்பதையும் (இங்கு இறந்த காலம்) புரிந்து கொள்ளலாம்.

இன் என்னும் இடைநிலை சிலபோது னகரம் ஒழித்து இ என்று ஒலிப்பில் கூட அமைந்து போகலாம், காட்டாகப் பாடினவள் என்ற பெயர்ச்சொல்லில் இன் என்ற இடைநிலையும், பாடியவள் என்ற பெயர்ச்சொல்லில் இ என்ற இடைநிலையும் புழங்குவதை ஓர்ந்து பாருங்கள். இப்படி னகரம் கெட்டு இடைநிலை அமைவது மலையாளத்தில் நெடுகவும் உள்ள பழக்கம். மலையாளப் பழக்கம் தெரியாமல் பழந்தமிழ்ப் பயன்பாடுகளை நாம் புரிந்து கொள்வது கடினம். தமிழும், மலையாளமும் நன்கு தெரிந்தால் தான் பழந்தமிழ் ஒழுங்குகள் தெளிவுடன் புலப்படும்.

1994 ல், மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்ட "சொற்கள்" என்ற நூலில் முனைவர்கள் சு.சக்திவேல், இராஜேந்திரன் ஆகியோர் தமிழ் வினைமுற்றுக்களை ஏழு பெரும்பிரிவுகளாகப் பிரித்து, இறந்த கால இடைநிலைகளைத் தந்திருப்பார்கள்.

செய், ஆள், கொல், அறி, நட, உள், கேள், விடு, படி, கல், வாங்கு,

என்ற பகுதிகளைக் காட்டாகப் பார்த்தால்,

செய்தாள், ஆண்டாள், கொன்றாள், அறிந்தாள், நடந்தாள், உண்டாள், கேட்டாள், விட்டாள், படித்தாள், கற்றாள், வாங்கினாள்

என்ற எல்லா வினைமுற்றையும்,

(பகுதி) (0 அல்லது இ) (0 அல்லது த் அல்லது ந்)(த் அல்லது ந்) (பால்விகுதி)

என்னும் வாய்பாட்டிற்குள் அடக்கிவிட முடியும். மேலே 0 என்பது ஓர் உறுப்பு வாராத நிலை. இதே போல பால்விகுதி வாராத நிலையில் மலையாளம் போல் பழந்தமிழில் பொதுவிகுதியாய் குற்றியலுகர உ வந்து வினைமுற்று அமையலாம். காட்டு: நான்/ஞான் செய்து/செய்யு/செய்குன்னு/செய்யும்.

மேலே கூறிய வினைமுற்றுக்களை உறுப்புக்களாய்ப் பிரித்தால்,

செய்+த்+ஆள், ஆள்+ந்த்+ஆள், கொல்+ந்த்+ஆள், அறி+ந்த்+ஆள், நட+ந்த்+ஆள். உள்+ந்த்+ஆள், கேள்+த்த்+ஆள், விள்+த்த்+ஆள், படி+த்த்+ஆள், கல்+த்த்+ஆள், வாங்கு+இன்+ஆள்,

என்ற பிரிப்பை மேற்சொன்ன வாய்பாட்டின் படி அறியமுடியும். இதே இடைநிலைகளை வேறு வகையில் த், ட், ற், இன் எனக் காட்டி

தடறவொற்று இன்னே ஐம்பால் மூவிடத்து
இறந்த காலம் தரும் தொழில் இடைநிலை

என்று 142 ஆம் நூற்பாவால் நன்னூல் சொல்லும். இறந்த கால இடைநிலைகளுக்கும், நிகழ்கால இடைநிலைகளுக்கும் இடையில் ஓர் உள்ளார்ந்த தொடர்பு இருக்கலாம் என்ற ஐயத்தையும் பேரா. மு.வ. தன் நூலில் எழுப்புவார். ஏனென்றால் தமிழ் போன்ற இயல் மொழிகளில் நிகழ்கால இடைநிலைகள் முதலில் கிடையா. அப்பொழுது இறந்த காலமும், எதிர்காலமுமே மொழிநடையில் சொல்லப் பட்டிருக்கின்றன. பலமொழிகளில் பயன்பாடு கூடியபின்னே தான், நிகழ்காலப் பேச்சு உருவாகியிருக்கிறது. இதற்குத் தோதாக, இறந்த கால இடைநிலைகள் திரிந்து, நிகழ்கால இடைநிலைகள் ஆகியிருக்கின்றன என்ற கருத்தையும் மொழியாளர் கூறுவார்கள். காட்டாக, கிறு/கின்று என்ற நிகழ்கால இடைநிலையைக் கு என்ற சாரியையைப் பிரித்து இறு/இன்று என்பதே இடைநிலையாக பேரா. மு.வ. காட்டுவார். இன்று என்ற இடைநிலை மேலே காட்டும் "இ-ந்-து" என்ற இறந்த கால இடைநிலையின் திரிவாக இருப்பதை உணர முடியும்.

[இ(ன்) என்னும் இடைநிலை உள்வந்து இகர ஈறு பெற்ற சொற்கள் பெண் தொழிலரைக் குறிக்காமல் தொழிற்கருவியைக் குறிப்பதும் உண்டு. திரு. நகுபோலியன் சுட்டிய கணினி, எழினி (=மேடையில் இருக்கும் திரை), கழனி ஆகியவையும் கருவி/இடப் பெயர்கள்.

இடைநிலை மட்டுமல்லாமல் பால்ப்பெயர்களில் சாரியையும் வந்து நுழையும் என்று புரிவதற்கு ஆட்டன் - ஆட்டத்தி என்ற இணையை ஓர்ந்து பார்க்கலாம். ஆட்டு +அன் = ஆட்டன்; ஆட்டு +அத்து + இ = ஆட்டத்தி. எப்படி இனி என்பது பால்விகுதி ஆகாதோ அதே போல, அத்தி என்பதும் பால்விகுதி ஆகாது. உள்ளே நிற்கும் அத்துச் சாரியையைப் பிரித்துப் பார்க்கத் தெரிய வேண்டும்.

தொழிலில் இருந்து கிளைக்கும் தொழிலர் பெயர் பெரும்பாலும் முன்னறிவைக் குறிக்க வேண்டி இருப்பதால், இறந்த கால இடைநிலையே பெரிதும் பேச்சுவழக்கில் நிலைக்கிறது (காட்டாகப் பாடினவள், பாடியவள்) நிகழ்கால, எதிர்கால இடைநிலை ஊடுவரும் பெயர்ச்சொற்கள் சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே பயில்கின்றன (காட்டாகப் பாடுகிறவள், பாடுபவள்).

பாடுதலைப் போன்ற வினைச்சொற்கள் இன்னும் பல: ஆடுதல், ஓடுதல், நாடுதல், வேடுதல், கூறுதல், பேசுதல், வாங்குதல், கண்ணுதல் (கண்ணுதல் என்ற வினைக்கு முதற்பொருள் கூட்டுதலே. பின்னால் எல்லாவிதக் கணக்குப் போடுதலுக்கும் அது பயன்படத் தொடங்கியது.) என்ற வினைகளில், பாடினியைப் போலவே ஆடினி (ஆட்டத்தி இன்றும் பழக்கத்தில் இருக்கிறது), ஓடினி(சரியான சொல்லில்லாமல் ஓட்டக்காரி என்று சொல்லுகிறோம்.), நாடினி (சொல் புழங்கவில்லை), வேட்டினி (வேட்டுவச்சி என்ற சொல் புழங்குகிறது), கூறினி (கூறினவள் என்றே புழங்குகிறோம்), பேசுனி (பேச்சுக்காரி என்ற சொல் புழங்குகிறது), வாங்கினி (வாங்கினவள்), கண்ணினி (இப்பொழுது கணினி) என்ற சொற்கள் அமையமுடியும். இந்த இயலுமை பார்க்காமால், பிறைக்கோட்டிற்குள் இருக்கும் சொற்களை நாம் புழங்குவதை ஒருவகை நடைமுறை உகப்பு என்று புரிந்து கொள்ளவேண்டும்.

கருவிக்கு அமையும் போது கண்ணினி என்ற சொல்லில் உள்ள ண் என்னும் மெய் தொகுத்துப் போய், கணினி என்ற கருவிப் பெயர் எழும். (இருந்தாலும் நான் வேறு சில காரணங்கள் கருதி னி தவிர்த்துக் கணி என்றே கருவிப் பெயரை எழுதி வருகிறேன்; மற்றவரையும் அது போன்று ஆளுமாறு பரிந்துரைக்கிறேன். இது பற்றி முன்னால் தமிழ் உலகில் எழுதியிருக்கிறேன்.) எழுகின்ற திரை எழினி ஆனதும் கணினி போன்றதே. இதே போல, ஆளுகின்ற வினையில் ஆளினி, தைக்கின்ற (= சேர்க்கின்ற) வினையில் தாயினி என்ற சொற்கள் எழும்.

இனி, தாயப் பட்டது, தாயம். தையம்>தய்யம் > தாயம் = கூட்டம். தாய் என்ற உறவின் வழி பொருத்தியது கூடத் தாயம் தான். தாயம் என்ற சொல்லில் தகர ஒலி தவிர்த்து அது ஆயம் என்றும் கூடத் தமிழில் ஆகும். இருபிறப்பிச் சொல்லாய் வழங்கும் "சமு தாயம்" என்பதைப் போல் தனித் தமிழ்ச்சொல்லாய் ""குமுக ஆயம் = குமுகாயம்" என்ற சொல் பிறப்பதும் இது போலத் தான்.

கவிதாயம் என்பது கவிகளின் கூட்டம், கவிதாயன் என்பது கவிகளின் கூட்டத்தில் இருக்கும் ஆண்மகன்; கவிதாயினி - கவிகளின் கூட்டத்தில் இருக்கும் பெண்மகள்.

தாயன் என்னும் பயன்பாடு இதில் மட்டும் இல்லை. வேறு இடங்களிலும் உண்டு. விண்ணவர்களின் கூட்டத்தில் இருப்பவன் விண்ணந்தாயன் எனப்படுவான். (பெருஞ் சோற்று விண்ணந்தாயன் என்பவன் ஒரு புறநானூற்றுப் புரவலன்; வைஷ்ணவர் கூட்டம் = விண்ணந்தாயம்). எருக்காட்டுத் தாயங்கண்ணனார் என்ற புலவரும் இருந்திருக்கிறார். எருக்காட்டுத் தாயத்தைச் சேர்ந்தவர்; தாயங் கண்ணியார் என்ற பெண்பாற் புலவர் கூட இருந்திருக்கிறார்.

இதே போல வேதம் சார்ந்து மந்திரம் சொல்லி இறையைப் பரவுகிற (pray) கூட்டம் பரதாயம் (>பாரதாயம்) என்றும் சொல்லப்படும். நெடும் பாரதாயன் என்பவனை பதிற்றுப்பத்துப் 3:10 பதிகம் குறிக்கும். (பாரதாயன் > bhaaradvaajan. தாயன் த்வாஜன் ஆவது வடமொழிப் பழக்கம். பார்ப்பனரில் பலருக்கும் அடிப்படை தமிழில் இருக்கிறது. அதை ஏற்காமல் பேசுகிறவர்கள் மிகுதி.)

மதுரைக் கணக்காயன் மகன் நக்கீரன் என்பவனும் சங்கப் புலவன் தான். கணக்காயன் = கணக்கர்களின் கூட்டத்தவன்; இங்கே கணக்கன் என்பவன் accountant. கணக்கப் பிள்ளைகள் என்று ஊர்ப்பக்கம் சொல்லுவார்கள். கணக்கர் என்பது கர்ணீகர் என்று வடமொழியில் திரியும்.)

கணக்காயனைப் போன்ற இன்னொரு சொல் அத்தாயன். அத்தன் = தலைவன், தந்தை, ஆசான். அத்தர்களின் கூட்டம் அத்தாயம். அந்தக் கூட்டத்து ஆண்மகன் அத்தாயன்; இனி உப என்னும் வடமொழி ஒட்டைச் சார்த்து உபாத்தாயன்>உபாத்த்யாயன் என்ற இருபிறப்பிச் சொல் பிறக்கும். அத்தாயினி ஆசான் கூட்டத்துப் பெண்மகள்.

கணக்காயன், அத்தாயன், விண்ணந்தாயன் என்பவை தமிழானால், கவிதாயன்>கவிதாயனி என்பதும் தமிழ் தான்.

குறமகள் இள எயினி என்பவளும் சங்க காலப் புலமகள் தான். எயினர்களின் கூட்டத்துப் பெண்மகள் எயினி.

குன்னிக் (=குன்றி, குட்டையாகக்) கிடக்கின்றவர்களின் கூட்டத்தைச் சேர்ந்த பெண்மகள் கூனி. குள்ளம் என்பது போல "உள்ளது" என்ற பயன்பாடும் குறுமைப் பொருளில் உண்டு. "உள்ளது போல அவள் இருப்பாள்" என்று சிவகங்கைப் பக்கம் சொல்லுவார்கள். மிகவும் வளர்த்தியில்லாமல், குறுகிய, சிறுமிய தோற்றத்தை உள்ளது என்பார்கள். உள்ளிக் கிடப்பவன் உள்நன்>உண்ணன். அது உண்ணி என்ற திரிவில் குறு, சிறு ஆண்களுக்கும், பெண்களுக்கும் பயன்படும். உண்ணிக் கிருஷ்ணன் என்று மலையாளத்தில் பழகுவது, இந்தப் பொருளில் தான். அவன் குட்டிக் கிருஷ்ணன். அதே போல திருமா உண்ணி என்ற பயன்பாடு நற்றிணை: 216:9 -ல் உண்டு. உருவத்தாலோ, அகவையாலோ சிறுத்தவள் இங்கு திருமா உண்ணி என்று அழைக்கப் படுகிறாள். அவள் கதை கண்ணகி கதை போலவே இருக்கும்.

யாழ் மீட்டும் (இசை கூட்டும்) கூட்டத்துப் பெண்மகள் யாழினி.

சாலுதல் என்பது இறைவனைச் சாருதல்/சாற்றுதல்; அதாவது பூசைப் பொருட்களைச் சாற்றுதல், சால்+த்+த்+அன் = சாற்றன்>சாத்தன் பெரும்பாலான நாட்டுப்புறப் பூசாரிகள்; சாமியாடிகள் சாத்தன்/சாத்தைய்யா என்றே அழைக்கப் படுவார்கள். பாசாண்ட சாத்தன் என்ற பயன்பாடு சிலம்பில் உண்டு. சாத்தனின் மெல்லோசைச் சொல் சாந்தன். இன்றும் சாந்திக்காரன் என்று மலையாளத்தில் சொல்லுவார்கள். சபரிமலை அய்யப்பன் கோயில் மேல்சாந்தி என்பவன் தலைமைப் பூசாரி. சாத்தன் / சாந்தன் என்பவன் பூசாரி தான். அதே போல சாலுகின்ற கூட்டத்துப் பெண்மகள் சாலினி (= பூசாரிச்சி).

தமிழர் பெரும்பாலும் கருப்புத் தான். ஒருகாலத்தில் வெள்ளை நிறத்தவர் இங்கு குடியேறத் தொடங்கினார்கள். அந்தப் பால்நிறத்தவர் பால்ப்பார்>பார்ப்பார் என்று அறியப்பட்டார்கள். (வெள்ளை என்றால் வெளிறிய நிறம் என்று பொருள்; white என்று பொருள் காணக் கூடாது. பின்னால் அவர்கள் இங்கு இருந்தோருடன் கலந்ததும், அவர்களில் பெரும்பாலோர் நிறம் கருமையும், புகரும், பழுப்புமாய் மாறியதும் வரலாறு. இரா.மதிவாணன் மிக ஆணித்தரமாக பார்ப்பார் என்ற சொல் வெளிறிய நிறம் பற்றி எழுந்ததே என்று ஒரு கட்டுரையில் நிறுவியிருப்பார். அதன் சுட்டியைச் சட்டென்று என்னால் இங்கு சொல்ல முடியவில்லை; ஆனால் தேடினால் கிடைக்கும்.) பால்நிறத்தவன் பார்ப்பான் என்றது போல பால்நிறத்துக் கூட்டத்தின் பெண்மகள் பார்ப்பினி (பார்ப்பனி என்பது வழு) என்றாவாள்.

நம்முடைய உணவில் இருந்து பிய்த்துப் போடும் உணவு பிய்க்கை>பிய்ச்சை>பிச்சை; அந்தப் பிய்க்கையைப் பெற்று உயிர்வாழ்ந்து சமயச் சிந்தனையில் ஆட்படும் புத்த மதத்துறவியைப் பிக்கு என்று அழைத்தார்கள். பிக்குனி - பிக்குவின் பெண்பால். இந்தச் சொல் உருவான முறையில் ஒரு குழப்பம் இருப்பது போல் தோற்றம் தருகிறது.

இறையைப் பற்றியவன் பற்றன்>பத்தன். இது வடமொழிப் பலுக்கில் பக்தன் என்று ஆகும். நாளாவட்டத்தில் பத்தனை மற்றோர் தொழத் தக்கதாய் (வணங்குவதாய்) எண்ணத் தொடங்குவார்கள். பத்தர் கூட்டத்துப் பெண் பத்தினி. இவளும் தொழத் தக்கவளே. திருமா பத்தினி என்ற சிலம்பின் சொல்லாட்சி கற்புக்கரசி என்பதற்காக ஏற்படவில்லை. அவள் ஓர் அணங்கு போல எழுந்து அரசனைக் கடிந்திருக்கிறாள்; அவள் தொழத் தக்கவள் என்பதனால் திருமா பத்தினி. ஆணாதிக்கம் முற்றிய நிலையில் இந்தச் சொல்லுக்கு ஒற்றை மணத்தோடு "கற்பு நிலை" பற்றித் தொடர்பு படுத்தியதை நான் இங்கு விவரிக்க முற்படவில்லை.

மருமகன், மருமகள் என்ற சொற்களில் மருவுதல் = தழுவிக் கொள்ளுதல் என்ற வினை தொகையாய் நிற்கிறது. மருவுதல் = to marry. அதே போல முயத்தல் = தழுவுதல். தழுவக் கூடியவன் (மணஞ்செய்து கொள்ளும் முறை உள்ளவன்) முயத்தன்>மைத்தன்>மைத்துனன். முயத்துமைக் கூட்டத்துப் (மணஞ் செய்து கொள்ள உரிமை உள்ள கூட்டத்துப்) பெண்மகள் முயத்தினி>மைத்துனி. சில குடியினரிடம் அண்ணன் மனைவிகூட மைத்தினி>மதினி என்று சொல்லப் படுவாள்.

இன்னும் சில சொற்களைச் சொல்ல முடியும். தாக்கணங்கு என்ற பழங்குடிக் கருத்துத் தமிழரிடம் உண்டு. கொற்றவையின் ஒரு கூறாய்ச் சொல்லுவார்கள். தாக்கினி என்றும் இது சொல்லப் படும். முண்டா மொழியைச் சேர்ந்த பழங்குடி மக்களின் வழி எழுந்த இடாகினி என்ற சொல்லும் கூட இதே கருத்துத் தான். தாக்கர் கூட்டத்துப் பெண் தாக்காயினி>தாக்ஷாயினி.

மேலே சொன்ன விளக்கத்தின் அடிப்படையில், ஆளினி, ஓடினி, விளம்பினி, சொல்லினி, புளுகினி போன்ற பயன்பாடுகள் எழுவதில் வியப்பில்லை.

அன்புடன்,
இராம.கி.

4 comments:

Kotravan said...

ஐயா, இவ்வளவு சிரமமுடன் 'இ' எனும் பெண்பால் விகுதியுடன் முடிக்க ச'அத்து', 'அச்சு' எனும் சாரியைகள் பயன்படுத்தாமல் "அள்" விகுதியோடு முடிக்கலாமே..
காட்டு : தமிழன் போல் தமிழள்.
வேடுவன் போல் வேடுவள்
பாணன் போல் பாணள் (அ) பாணாள்
ஆண்டாள், சித்தாள் போன்றவை பழக்கத்தில் உள்ளனவே.

Kotravan said...

தமிழச்சி என்பதில் உள்ள அச்சு எனும் சாரியை நீங்கி தமிழினி எனக் கூறலாமா?

Kotravan said...

ஆட்டத்தி, தமிழச்சி போன்றவற்றில் 'அத்து','அச்சு' போன்றவை சாரியை எனின் யாழினி என்பதில் உள்ள 'இன்' மட்டும் எப்படி இறந்த கால ஒலி மயங்கலாக இருக்க முடியும்?

Kotravan said...

பெண்பால் பெயர்ச்சொற்களில் கால மயங்கல், சாரியை இருப்பனப் போல் ஆண்பால் பெயற்ச்சொற்களில் உளவோ?
இறந்த காலம் போல் எதிர்கால இடைநிலையும் மயங்கி வருமா?