Tuesday, September 18, 2018

Clutch

"clutch பயன்பாடும் செயல்முறையும்" என்றதொரு கட்டுரையை ஷேக் அப்துல் காதர் என்பார் ”கீற்று” வலையிதழில் 4 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டிருந்தார். (http://keetru.com/index.php/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-73/30807-clutch) அதுவொரு சிறப்பான கட்டுரை, ஒரேயொரு குறை. ஆங்கிலச் சொற்களையே கட்டுரை பயில்வதால் அதில் தமிழ்க் கலைச்சொற்களே காணோம். தேவையான கலைச்சொற்களை தமிழில் ஆள்வது அப்படி ஒன்றுங் கடினமில்லை. தமிழிலும் இவற்றைச் சொல்லமுடியும்.

-----------------------------------
முதலில் ஒரு முன்னுரை.

சகடு (இதுதான் car என்பதற்கான சரியான சொல்; எத்தனை நாள் தான் நம்மில் பலரும் ஊர்தி, சீருந்தென நீட்டி முழக்கிக் கொண்டிருப்போம்? (அருள்கூர்ந்து http://valavu.blogspot.in/2013/10/blog-post.html இல் “விமானம்” என்ற என் கட்டுரையைப் படியுங்கள்), இன்றைக்கு இருவளை (two-wheeler), விலங்கிழுப்புச் சகடம் (animal-drawn cart) எனும் பல்வேறு வையங்களை (wagons) வண்டியெனும் பொதுப்பெயரால் அழைக்கிறோம். ஒவ்வொரு வண்டியிலும் ”ஓட்டி, ஓடி” என்றபடி இருவேறு பாகங்களுண்டு. ஒரு சகட்டில் எந்திரம் (engine) என்பது ஓட்டி அல்லது துரவு (drive), சட்டகையும் (chassis) சக்கரங்களுஞ் (wheels) சேர்ந்தது ஓடி (driven machine). ஓட்டியையும் ஓடியையும் கவைக்கும் (= சேர்க்கும்) முறை, சகட்டிலும் இருவளையிலும் வேறுபடும். விலங்குச் சகடத்தில் ஓட்டி என்பது மாடு/ குதிரை எனும் விலங்கு; ஓடி என்பது சட்டகையும், சக்கரங்களும் சேர்ந்தது.

பொதுவாக ஓர் எந்திரத்தையும் ஓடியையும் கணுக்குவதில் (to connect) பல வித வகைகளுண்டு. ஒரு வகைச் சகட்டில், முடுக்கத்தை (acceleration) மாற்ற உதவும் படி, ஓட்டியையும் ஓடியையும் முதலாம், இரண்டாம், மூன்றாம், நாலாம், பின்வரல் என 5 வகைக் பற்சக்கரக் கவைகளால் (gears) இணைப்பார். இந்த இணைப்பில் எல்லாக் கவைகளுமே பற்சக்கரங்களாக இருக்கத் தேவை யில்லை. தவிரப் பற்சக்கரங்களும் ஒன்றின் மேல் இன்னொன்று ஓடி உருளத் தேவையில்லை. நாம் சவட்டும் மிதிவண்டியிலும், மிதியோடு ஒரு பற்சக்கரமும், பின் சக்கரத்தோடு இன்னொன்றும் இருக்க, இரண்டின் நடுவே ஒரு சங்கிலி ஊடுவந்து பிணைக்கும். மிதிவண்டிக்கு மாறாய் நாம் ஒட்டும் முகட்டி இருசிலும் (motor-bike), எந்திரத் தண்டின் முடிவிலுள்ள பற்சக்கரத்தையும், பின்சக்கரப் பற்சக்கரத்தையும் ஒரு சங்கிலியே பிணைக்கிறது. இதற்கு முற்றிலும் மாறாய், அரவையாலையில் (grinding mill), ஒரு மின்முகட்டி (electric motor) எந்திர ஓட்டியாகவும், அரவைப் பொறி ஓடியாகவும் வேலை செய்யும். விதப்பாக, முகட்டித் தண்டின் முடிவிலோ, அல்லது அரவைத் தண்டின் முடிவிலோ உருளைச் சக்கரங்களைப் பொருத்தி, அவற்றின் மேல் இழுவைப் பட்டையையும் (rubber belt) பயனுறுத்தலாம்..
        .
சகட்டிற் பயன்படுத்தும் கவையிற் கூட இரு வேறு வகைகளுண்டு. முன் சொன்னது போல் பற்சக்கரம் பொருத்திய மானமை (manual) வண்டிகள் ஒரு வகை [இவற்றில் ஓட்டியின் பற்சக்கரத்திற்கு முன்னே clutch கருவி செயற் படும்.] இன்னொருவகை (இந்தியாவில் இப்போது வந்துள்ள, ஆனால் அமெரிக்காவில் அதிகமுள்ள) தானமை வண்டிகளாகும். [ஒரு வண்டி நகரும்போது துரவரே (driver) மானமைவாய்க் கவை விகிதங்களை (gear ratios) மாற்றாது, தனக்குத் தானே வேகத்தைப் பொறுத்து மாற்றிக்கொள்ளும் மிடைப்பெயர்வு (motor vehicle transmission that can automatically change gear ratios as the vehicle moves, freeing the driver from having to shift gears manually) இங்கு பேசப்படுகிறது. மிடைப்பெயர்வு (transmission) என்ற கலைச்சொல் எப்படியெழுந்தது? ஒரு கருவியில் இருந்து இன்னொன்றிற்கும், ஓராளிடமிருந்து இன்னோராளுக்கும் ஒலி, இயக்கம், செய்தி எனப் பல்வேறு மிடைகள் பெயர்வதால் மிடைப் பெயர்வாயிற்று. தானமைநகரித் (automobile) தொழிலில் இதைத் தற்-குவி மிடைப்பெயர்வு (self-shifting transmission) என்றும், n-வேகத்தானமை (n-speed automatic) என்றும், சுருக்கமாய் AT என்றும் அழைப்பர்.]
---------------------------------

இம்முன்னுரையோடு ஷேக் அப்துல் காதரின் கட்டுரையைப் படியுங்கள். பின் கலைச்சொற்களுக்கு வரலாம். அக்கட்டுரையில் முதலில் வருவது clutch என்ற கலைச்சொல். இணையத்திலுள்ள etymonline அகரமுதலியில்

clutch (n.1) Look up clutch at Dictionary.com "a claw, grip, grasp," c. 1300, from cloche "claw," from cloke (c. 1200), related to clucchen, clicchen (see clutch (v.)). Meaning "grasping hand" (1520s) led to that of "tight grasp" (1784). Related: Clutches. என்ற பெயர்ச்சொல் விளக்கமும், clutch (v.) Look up clutch at Dictionary.com Old English clyccan "bring together, bend (the fingers), clench," from PIE *klukja- (cognates: Swedish klyka "clamp, fork;" related to cling). Meaning "to grasp" is early 14c.; that of "to seize with the claws or clutches" is from late 14c. Sense of "hold tightly and close" is from c. 1600. Influenced in meaning by Middle English cloke "a claw." Related: Clutched; clutching

என்ற வினைச்சொல் விளக்கமுங் கிடைக்கும். சொல்லாய்வறிஞர் அருளியின் அருங்கலைச்சொல் அகரமுதலியில் ”பிடிப்புறுப்பு” என்றே இணைச்சொல் கொடுக்கப்பட்டிருக்கும். நான் பரிந்துரைப்பது வேறொன்று.

புலி, சிங்கம் போன்ற பெருவிலங்குகளின் கூர்நகத்தை உகிர் என்றழைப்பர். அந்த உகிர் வளைந்து கொக்கி போலாகி (இதை ஆங்கிலத்தில் hook என்றுஞ் சொல்வர். இங்கும் தமிழிய, இந்தையிரோப்பிய ஒற்றுமையைக் காணலாம்.) இரையைப் பற்றிக் கொள்ளும். பெருஞ்சுமைச் சாக்குகளை முதுகிலேற்றி இடம் மாற்றுவோர் கூட இதுபோல் ஒரு கொக்கியைத் தம் கையில் வைத்திருப்பார். துறட்டியின் நுனியிற் செருகும் இருப்புக் கருவியும் கொக்கி யென்றே நம் நாட்டுப்புறங்களில் அழைக்கப்படும். மேற்சொன்ன claw வும் ஒரு கொக்கி போலத்தான். குள்>கொள் எனும் வேர்ச்சொல் வழி எழுந்த ”கொள்ளல்” எனும் தொழிற்பெயரின் அடிப்படைப்பொருள் பற்றுதலே. ”கை, கால் உறுப்புக்களைப் பிறபொருள்களோடு பொருந்தப்பிடித்தலெ”ன்று பாவாணர் சொல்வார். இன்றைக்குக் கொள்ளலைக் “கொண்டெனும்” துணைவினையாகப் பயன்படுத்துவதாலேயே ”அதன் முதற்பொருளை ஒருவேளை மறந்தோமோ?” என்று சிலமுறை எனக்குத் தோன்றுவதுண்டு.

கொள்கு என்பது கொக்கி போல் வளைந்தது. கொள்கு>கொட்கு>கொக்கு என்ற பறவைப்பெயரும் வளைபொருளில் எழுந்தது தான். குள்>கொள்> கொள்கு> கொட்கு>கொக்கு>கொக்கி என்பதும் இப்படிப் பிறந்தது தான். கொள்கு> கொளுகு>கொளுகி>கொளுவி என்பதும் கொக்கியைக் குறிக்கும். கொளுகுதலின் பிறவினைச் சொல் கொளுக்குதல் ஆகும். கொளுக்குதலிற் பிறந்த பெயர்ச்சொல் கொளுக்கி அதற்கும் கொக்கி என்றுதான் பொருள். அதையே clutch க்கு இணையாய் நான் பயன்படுத்த விழைகிறேன். இச்சொல் சரியான பொருளைத் தந்து, நம் மரபிற்குப் பொருந்தியும் வரும். அறிவியல்/ நுட்பியல் என்பது தமிழ்ச் சிந்தனையோடு இயல்பாய்ப் பொருந்தும். அவ்வகையில் ஷேக் அப்துல் காதர் கட்டுரையில் வரும் clutch disc ஐக் கொளுக்கித் திகிரி என்றும், clutch pedal ஐக் கொளுக்கி மிதி என்றும் எளிதிற் சொல்லலாம். அடுத்தது flywheel. இதைப் ”பறவளை” என்ற சொல்லால் நெடுங்காலம் முன்னே புழங்கியிருக்கிறேன்.

அடுத்தது torque. திருகும் வினையால் இதைத் திருக்கு எனலாம். இனி pressure plate = அழுத்தத் தகடு ஆகும். அடுத்ததைக் கூறுமுன் spring என்ற பொதுச் சொல்லிற்கு வருவோம். சுருங்கிக் கிடந்தது சட்டெனப் பொங்கி மேலே எழுவதால் spring எனப்படுகிறது. பொங்குதல் வினையே spring ஐச் சரியாகக் குறிக்கும். diaphram spring = இடைவரம்புப் பொங்கி.

diaphragm (n.) என்பதை late 14c., from Late Latin diaphragma, from Greek diaphragma "partition, barrier, muscle which divides the thorax from the abdomen," from diaphrassein "to barricade," from dia- "across" (see dia-) + phrassein "to fence or hedge in." என்று சொற்பிறப்பியல் அகரமுதலி கூறும். இருவேறு பகுதிகளின் இடையிலுள்ள நுணுகிய வரம்பு இடைவரம்பு (diaphram) ஆகும்.

throw-out bearing = வெளித்தள்(ளும்) பெறுவம்.(A throw-out bearing is a part of an automotive clutch system that temporarily disengages the engine from the manual transmission while shifting.) என் இளமைக் காலத்தில் பொறியியல் படிக்கையில் bearing ஐத் தாங்கி என்றே சொல்லிக் கொடுதார். தாங்கியைக் காட்டிலும் பெறுதல் வினைவழி வந்த ”பெறுவம்” என்ற சொல் இன்னுஞ் சிறப்பாய் இருக்குமென்று நான் இப்போது பரிந்துரைக்கிறேன்.

performance clutch = நனிநடைக் கொளுக்கி
4 stroke engine = 4 தடக்கு எந்திரம்
power stroke = புயவுத் தடக்கு (புயவு என்ற சொல்லை power க்கு இணையாக நான் நெடுநாள் புழங்குகிறேன்.)
dual mass flywheel = இரு மதுகைப் பறவளை

அன்புடன்,
இராம.கி.

No comments: