2017 இல், “மறைக்காடா? மரைக்காடா?” என்ற உரையாடல் மின்தமிழில் காரசாரமாய்ப் போனது. அதேபோது தேக்கடி, மூணாறென ஊர்சுற்றியதால், ஓரிரு கருத்துச் சொன்னதோடு நான் ஆழமாய்ப் பங்குபெற வில்லை. உருப்படியான ஆதாரமின்றி, 20/21 ஆம் நூற்றாண்டுத் தமிழறிஞரைத் தொட்டுக்காட்டி, வழக்கம்போல் அவர், இவரென்று பெயர் விரவி, தான் பிடித்த முயலுக்கு மூன்று காலென அடம் பிடிப்பவரோடு எப்படி உரையாடமுடியும்?. தவிர, என்னிடமிருந்த ஊற்றுகளையுஞ் சரிபார்க்க வேண்டியிருந்ததால், பொறுமை நன்றென எண்ணிப் பேசாதிருந்தேன். பின்னால் எழுதினேன். இப்போது சேமிக்கிறேன்..
[இங்கோர் இடைவிலகல். இந்த உரையாடலினூடே, ”மறைகாடா? மறைக்காடா?” என்ற துணைக்கேள்வியும் எழுந்தது. மூணாறில் ஊர்சுற்றிய போது மூணாறு - உடுமலைப்பேட்டை வழியில் 43/44 கி.மீ. தொலைவில் மறையூரென்றதோர் இடத்தைப் பார்த்தேன். மலைகளின் நடுவே மறைவது மறையூர். மறைதல், தன்வினைத் தொழிற்பெயர். மறைத்தல், பிறவினைத் தொழிற்பெயர். இரண்டிற்கும் மறையென்ற ஒரே வினையடிதான். தன்வினை யுணர்த்தும் மறையூரில் வினை மிகாது. பிறவினையுணர்த்தும் மறைக்காட்டில் வினை மிகும். நிலைமொழியில் உயிரும், வருமொழியில் மெய்யும் வருமிடங்களிற் புணர்ச்சி பற்றிச் சொல்கையில் (காலஞ்சென்ற) இலக்கண அறிஞர் செ. சீனி நைனா முகம்மது ”புதிய தமிழ்ப்புணர்ச்சி விதிகள்” என்ற பொத்தகத்தில் 91 ஆம் பக்கத்தில், ”நிலைமொழியாகும் வினைச் சொற்களில் வினையெச்சமும், ஆ.ஐ ஈற்றுப் பெயரெச்சமும் வலிமிகும்” என்பார். அவர் தந்த எடுத்துக்காட்டு: பண்டை + காலம் = பண்டைக்காலம்.
அப்படித்தான் மறை+காடு= மறைக்காடு என்றமையும். மறைகாடெனில் வேறெதனாலோ மறையுங்காடென்று பொருளாகும். மறைக்காடெனில் வேறெதையோ மறைக்குங்காடு. அவ்வூருக்கு அணைக்கரை என்ற பெயரும் உண்டு. அது அணைக்குங்கரை. அணையுங்கரையல்ல. அதேபோல அணைக்காடு என ஒரு காடு அருகிலுண்டு. அணைக்குங்காடு. அணையுங் காடல்ல. அணைக்கட்டெனும் இன்னொரு சொல்லையும் எண்ணிப் பார்க்கலாம். நீர் அணையாது; பரவும். அதேபொழுது ஒரு செயற்கைக் கட்டுமானத்தால் நீரை அணைக்கமுடியும். பொருள்மாறுபாட்டைக் கூர்ந்து கவனியுங்கள். வினைத்தொகை என்று சொல்லித் இலக்கண விதிகளைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்.]
இனி ”மரைக்காடா? மறைக்காடா?” என்ற உரையாடலுக்கு வருவோம்.
ஆழ்ந்துபார்த்தால் முத்துப்பேட்டை வட்டாரக் காட்டிற்கு மரைக்காடே முதற் பெயரென்பதற்கு நானறிந்தவரை நேரடிச்சான்றுகள் இல்லை வேண்டுமெனில் சுற்றிவளைத்து ஊகத்தால் உணரவைக்கலாம். மரையை மானாக மட்டுமே சொல்வதில் நான் உடன்படேன். அதற்குத் தாவரப் பொருளுமுண்டு. (ஆய்வுத் தெளிவின்றி முன்னோர் கூற்றால் உந்தி நானுமதை விலங்காய் மட்டும் ஒருகால் எண்ணியது உண்டு). கூடவே, ”மறை”க்கு மறைப்பு, வேதமென 2 பொருள்களுண்டு. மரை->மறை(மறைப்பு)->மறை(வேதம்) என 2000 ஆண்டுகளில் சொல்லும் பொருளும் மாறியிருக்கலாம். மறைக்காடு என்று மட்டும் பாராது, கோடியக் கரையை குத்துப் புள்ளியாக்கி கிழக்கே அதிராம்பட்டினம், வடக்கே வேட்டைக்காரன் தோப்பு வரை ஆடித்தோற்ற (mirror image) டகரம்போற் கோடிழுத்துக் கிடைக்கும். முக்கோணநிலம் முழுதும் வரலாற்றுநோக்கில் காணவேண்டும். இன்றைக்குக் கோடியக்கரை ஒரு சிற்றூராகலாம். ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன் போனால், ஓரளவிற்குப் பெரிதான, முகன்மையான சோழர் துறைமுகம் அங்கே காட்சியளிக்கும். இன்னும் 1000 ஆண்டுகள் முன்னாற் சென்றால், இம்முக்கோணப்பகுதி இன்னுங்கூட மாறித்தோற்றும்.
கி.மு 9500 போல் சென்னை வடக்கிலிருந்து நம்மூர்க் குணக்கடற்கரை சில கி.மீ. அகண்டிருந்து, சிச்சிறிதாய் அகலங்கூடி, நாகபட்டினமருகே கடல்மேலும் பின்வாங்கி கோடியக்கரையோடு இலங்கை சேர்த்தடக்கித் தண்பொருநை (தாம்பிரவருணி) ஆற்றுமுகத்தில் அணைந்து குமரியின் கீழே நீட்டி (ஒரு காலத்தில் 250 கி..மீ, பின் சிச்சிறிதாய் இற்றைநிலை) திருவனந்தபுரம் சுற்றிக் கொண்டு இன்னும் பரந்து கூர்ச்சரம்வரை விரிந்த நிலத்தை உருவகித்தால் நான்சொல்வது புரியும். இவ்வதிகநிலம் சங்ககாலத்திற்கு (கி.மு.550) முன்னும், களப்பிரர் காலத்திலும் (கி.பி 385) நடந்த பல கடற்கோள்களால் அழிந்ததை நம்மூர் இலக்கியங்கள் தொன்மமாய்ப் பதிவுசெய்துள்ளன. இற்றைக் கடலாய்வுகளும் இவற்றின் இயலுமையை வெளிக்கொணர்கின்றன.
இந்த அதிகநிலத்தின் பெரும்பகுதி தமிழரைச்சேர்ந்தது. எவ்வளவுநிலம் எந்த உகங்களில் அழிந்ததென்று பெருங்கடற்கிறுவியல் (oceanography) வழி ஆய்வதே சரியான முறையாகும். குமரிக்கண்டம் என்றவொன்று இருந்ததோ, இல்லையோ? எனக்குத் தெரியாது. ஆனாற் குமரிநிலம் அழிந்தது உண்மை. ஒரிசா பாலு போன்றோர் இதைத் தேடியலைந்து களப்பணி செய்கிறார். நாம்தான் தமிழென்றால் எதையும் நம்பாதுள்ளோம். (காட்டாகத் தமிழகம்-கொரியா தொடர்பு சொல்வதை அவத்தக் களஞ்சியமென எழுத்தாளர் செயமோகன் சொல்வதை அண்மையிற் படித்தேன்.) இத்தகை மனப்பான்மை சிலருக்கு ஏற்படுவது அலட்சியத்தாலா? அவநம்பிக்கையாலா? வேறொன்றின் மேல் ஏற்பட்ட பற்றாலா? அடிமைத்தனத்தாலா? - என்று புரிவதில்லை.
கோடிக்கரைக்கு நேர்தெற்கே இன்று சில தீவுகளுண்டு. அங்கிருந்து யாழ்ப்பாண மாவட்ட நாகனார் (நயினார்) தீவுவரை ஆதிசேதெனும் இயற்கைச் சேது (பாலம்) நீர்மட்டத்திற்குச் சற்றுக் கீழேயுண்டு. தனுசுக்கோடியிலிருந்து மன்னார்தீவு வரை நீர்மட்டத்தின்கீழ் இன்னொரு இயற்கைச் சேதுண்டு. (இதை இராமர் சேதென்பர். மாந்தன் செய்ததாய் இதைச்சொல்வது வெறுந் தொன்மமே.) கடலடி மட்டத்திற் பார்த்தால் ஆதிசேது இராமர் சேதுவினும் உயரங் குறைந்தது. 2 சேதுக்களுக்கும் இடையுள்ளது கடல்கொண்ட பாண்டி நிலம். இதற்குங் கிழக்கில் இலங்கை மேற்குக்கடல் வரை உள்ளதும் கடற் கோளின் முன் பாண்டிநிலமே (இப் பழந்தமிழகத்தை மறந்து, கால காலத்திற்கும் இலங்கை ஒரு தீவென எண்ணுகிறோம்.) கி.மு.350 களில் இலங்கையிற் குடியேறிய சிங்களர் எண்ணிக்கை சங்ககாலப் பிற்பகுதியிற் பெருகியது. தவிர, அவர் நம்மில் வேறானவரல்லர்; தமிழ்க்குடியின் பெண் வழியினர் சிங்களரென வரலாறு தெரிவிக்கும். கலிங்கவிசயன் கூட்டத்திற்கும் பாண்டியருக்கும் இடையே மணவுறவுகள் மிகுதி. அவற்றை உருப்படியாய் யாரும் ஆய்ந்ததில்லை. இன்று சூழும் போகூழும் கொடுமையும் அவற்றை ஆயவிடா. தமிழ் மாமனை/மச்சானை மதியாத சிங்கள மருமகனின் சண்டை இன்றுந் தொடர்கிறது.
மறைக்காட்டின் இருப்பிடமான சோழநாட்டிற்கு வருவோம். ’சிலம்பின் காலம்’ நூலில் வளநாடு, நாகநாடென 2 பகுதிகளாய் சோழநாடு பிரிந்தது பற்றிச் சொன்னேன். (பாண்டியநாடும் ஒருகாலத்தில் 5 பகுதிகளானது. பாண்டியருக்குப் பஞ்சவரென்ற பெயருமுண்டு. சேரநாட்டிலும் பல பகுதிகள் உண்டு. செங்குட்டுவன் சமகாலத்தில் 9 பங்காளிகள் இருந்தார்.) காவிரிக்கு வடகரை, நாகநாடு. காவிரிக்குத் தென்கரை, வளநாடு. 2 நாடுகளையும் பிரித்தது/இணைத்தது காவிரியே. (இன்றுஞ் சிவ தலங்களைச் சொல்கையில் வடகரை/தென்கரைப் பிரிவு சொல்வார்.) சிலம்புக் காலத்தில் நாகநாட்டிற்கு ஒருவனும் வளநாட்டிற்கு இன்னொருவனுமாய் 2 சோழரிருந்தார். கண்ணகி நாகநாட்டாள். (சிலம்பின் மங்கலவாழ்த்துப் பாடலில் வரும்.) நாகநாட்டின் கோநகர் புகார்; வளநாட்டின் கோநகர் உறையூர். சேரருக்கும் பாண்டியருக்கும் ஒரு தலைநகர் பேசுஞ் சிலம்பு சோழரின் தலைநகராய்ப் புகாரையும், உறையூரையும் சமமாகவே பேசும். இருவர் சோழரெனினும் வேந்தர் யார் என்பதில் முரண்களும், குடுமிப்பிடிப் பங்காளிச் சண்டைகளும் இருந்தன. (பங்காளி, தாயுறவுச் சண்டைகளே தமிழரைக் கெடுத்தன.) பாண்டியரோடும், சேரரோடும் ஒப்பிட்டால், சங்ககாலச் சோழருள் ஒற்றுமைக் குறைச்சல் அதிகம்.
சங்ககாலத்திற்குச் சற்றுமுன் ஏற்பட்ட கடற்கோளில் தன்னாட்டுப் பரப்புக் குறைந்ததால் சோழனிடம் முத்தூர்க் கூற்றத்தையும், சேரனிடம் குண்டூர்க் கூற்றத்தையும் (குன்றூர்>குண்டூர்; இற்றைக் குமரி, திருவனந்தபுரம் சுற்றியது.) பாண்டியன் வளைத்துப் பறித்துக்கொண்டது கலித்தொகை 104.4 ல் கீழ்வருமாறு சொல்லப்படும்.
மலிதிரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின்
மெலிவு இன்றி, மேல்சென்று, மேவார் நாடு இடம்பட
புலியொடு வில்நீக்கி, புகழ்பொறித்த கிளர்கெண்டை
வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்
இக்கூற்றங்களின் பெயர்களைக் கலித்தொகை உரையாசிரியர் வழி அறிகிறோம். இற்றைப் தஞ்சை/புதுக்கோட்டை மாவட்டஞ்சேர்ந்த முத்தூர்ப் பேட்டை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கிப் பகுதியே முத்தூர்க் கூற்றமாகும். இதிலிருந்து மிழலைக் கூற்றம் பிரிந்தது. இவை இரண்டும் அன்றிலிருந்து இன்றுவரைச் சோழ, பாண்டிய அடையாளங்களைக் கலவையாய்க் காட்டும். இதன் ஓர் எச்சமாய் முத்துக்கள் விலைபோகிய ”முத்தூர்ப்பேட்டை” விளங்கும் (நம்மூரில் பேட்டையெனில் வணிகர் கூடும் ஊராகும்). மணிவாசகர் காலத்தில் பரிவாங்கப் போகும் திருப்பெருந் துறையும் (ஆவுடையார் கோயிலும்) முத்தூர்க்கூற்றம், மிழலைக் கூற்றம் ஆகிய பகுதிகளில் அறந்தாங்கிக்கு அருகிலுள்ளது. பரி வாங்குகையில் இது பாண்டியர் கூற்றம் போலும். ஏனெனில் சோணாட்டுக் கூற்றத்தில் பாண்டிய முதலமைச்சர் 1 மாதத்திற்கும் மேல் தங்கியது நம்பும்படியில்லை. விடாது பழைய முத்தூர்க் கூற்றத்தை இருபெரும் வேந்தரும் பந்தாடியது தமிழர் வரலாற்றில் ஒரு தொடர் கதை. (வளநாட்டு முத்தூர்க் கூற்றத்தை விடுத்து மணிவாசகரின் பெருந்துறையை நாகநாட்டிற் தேடுவோரை என்சொல்வது?)
சங்க காலத்தின் முன் கடற்கோள் ஏற்பட்டதால், அச்சம், குறையாழம் காரணமாய் சேதுக்களின் இடைக்கடலுக்குள் பெருங்கப்பல்களில் யாரும் வரார். பாண்டியர் தொண்டியோ மிகப் பின்னெழுந்த துறை. சங்கநூல்களிற் வருவது சேரர் தொண்டியே. தொள்ளப்பட்டது தொண்டி. இக்காலத் திருப்பெருந்துறையோ, மணல்மேற்குடியோ, மீமிசலோ சங்ககாலத்திற் பெருந்துறையாக இருந்திருக்க வழியே இல்லை. அவற்றின் வரலாறுகள் தேவார காலத்திற்குச் சற்றே முற்பட்டன. பெரும்பாலான வங்கங்கள் (கப்பல்கள்) தெற்கிலிருந்தும், தென்கிழக்கிலிருந்தும் வருகையில் கொற்கை, காயல் (=கழி.), கடந்தபின் இலங்கையைச் சுற்றிக் கோடியக்கரைக்குத்தான் முதலில் வரமுடியும்..
The Periplus of the Erythraean Sea இன் செய்தியும் இதைச்சொல்லும். “Beyond Colchi there follows another district called Coast Country, which lies on a bay, and has a region inland called Argaru. At this place, and nowhere else, are bought the pearls gathered on the coast thereabouts; and from there are exported muslins, those called Argaritic.” Colchi=கொற்கை. கோடிக்கரை என்று புரிந்துகொண்டு ”கோடி” Coty>County>Country என்று திரிவடைந்த எழுத்துப்பெயர்ப்பாகவும் ”கரை” மொழிபெயர்ப்பாகவும் இங்கு ஆளப் படுகிறது. உண்மையில் கோடியக்கரைக்குக் கடலாற் கோடிய (வளைந்த) கரையென்று பொருள். Argaru = உறையூர். Argaritic = உறையூர் கூறைப் புடைவை. கோடியக் கரையின் முகன்மை புரிகிறதா? தெற்கிருந்து போனால் சோழரின் முதல்துறை கோடியக் கரையே. இங்கிருந்து உரோமுக்கும் கிரேக்கத்திற்கும் பெரும் ஏற்றுமதி நடந்தது போலும். இதற்குக் கானலம் பெருந்துறை என்ற அழகுப் பெயரும் உண்டு. அதையுந் தெரிந்துகொள்ள வரலாற்றுக் காலத்திற்குச் செல்வோம், வாருங்கள்.
அன்புடன்,
இராம.கி.

No comments:
Post a Comment