Friday, September 14, 2018

சாத்தன் - 4

இதுவரை கூட்டப்பொருளின் நிகமங் கண்ட நாம், இனிக் கூட்டநீட்சியில் நியமத்தைக் காண்போம். நிகமம் என்பது எண்ணிக்கையில் பெரிது எனினும், செய்நேர்த்தியில் சாத்தாரமானது. அதைவைத்து உருப்படியாகச் சிறிதளவே செயலாற்றலாம். சிறப்பாய் நிகமம் என்பது இயங்கவேண்டின், அது நிறுவனப்பட வேண்டும். நியதி, நிறுவல் போன்றவை கட்டொழுங்கு (order) குறித்தவை. தலைவர் (chair), துணைத்தலைவர் (vice chair), செயலர் (executive head), செயற்குழு (executive committte), பொதுக்குழு (Common committee), கணப்பொதி (general body) போல் ஒரு கட்டமைப்பைக் (வேறுவிதத்திலும் கட்டமைக்கலாம்.) கூட்டத்தில் ஏற்படுத்துவதை ஒருங்கேற்றம் (organization) என்பார் ஏதோவோர் அமைப்பையும், சட்டதிட்டங்களையும் நிகமத்தில் ஏற்றினாற்றான் அது நியமமாகும். பொதுவணிகருள் இருந்த ஒரு தனிப் பெருங் கூட்டத்தால் ’நியமம்’ என்ற சொல் ஏற்பட்டுப் பின் எல்லோர்க்கும் அது பரவியது. ஆடை தொடர்பான அக்கூட்டத்தை விளக்கவேண்டிச் சற்று விலகுகிறேன். படிப்போர் பொறுத்துக் கொள்க!

வேடுவச்சேகர வாழ்க்கையிலிருந்து மருத/நெய்தல் வாழ்க்கை நுழைந்த எல்லோர்க்கும் ஆடைசெய்யத் தெரியாது. ஆடைசெய்வோரிடம், செய்யாதார் வேறொன்றைக் கொடுத்து பரிமாற்றுகின்ற தேவையுண்டு. இவ்வேலைப் பிரிப்பால் பொ.உ.மு. 1000-400 அளவில் வாய்ப்பும், வளர்ச்சியும் ஏற்பட்டன. பண்டமாற்றுப் பொருளாகவும், காசுவணிகப் பொருளாகவும் ஆடை என்பது மாறியது. வட்டாரம் விட்டு வட்டாரம், நாடுவிட்டு நாடென நகரும் வணிகச் சாத்தில் ஆடை விற்போர் என்போர் முகனுற்றார். வேய்தல்/நெய்தல் செய்யும் ஆடைத்தொழிலர் வேய்வர்/நெய்வரென அறியப்பட்டார். நுல்>நுள்> நெள்>நெய் எனச் சொல்வளர்ந்து நூலை நெருக்கித் துணிமுடைதலைக் குறிக்கும். இதை வேய்தல்/நெய்தல் என்போம். நெயவு பற்றிய விளக்கம் ”பனுவலும் text உம் ஒன்றா?” என்ற என்னுடைய (முடிவுறாத்) தொடரிற் கிடைக்கும்.

http://valavu.blogspot.com/2018/07/text-1.html
http://valavu.blogspot.com/2018/07/text-2.html
http://valavu.blogspot.com/2018/07/text-3.html
http://valavu.blogspot.com/2018/08/text-4.html

வேடுவச்சேகர வாழ்க்கைக்குப் பின்னெழுந்த குமுகாயத்தில் தடுக்குகள், பாய்கள், துகில்களெனப் படிப்படியாக நுட்பியற் சோதனை நடந்தது. பருத்தியில் துகில் செய்யுமுன், ஓலைக் கீற்று, நாணற் கோரைகளால் தடுக்குகளையும், பாய்களையும் முடைந்த பட்டறிவும் பழந்தமிழருக்கு இருந்தது. பின்னல், முடைதல், வேய்தல், பொருத்தல், கள்ளல், கட்டல், நுள்ளல், நெருக்கல், நெய்தலெனும் தொழில்கள் வளர்ந்தன. ஓலைக் கீற்றுகள் நீள வாட்டிலும் குறுக்கு வாட்டிலும் ஒன்றோடொன்று பின்னிப் போவதைப் பின்னலென்றார். இருவேறு ஓலைகள் முட்டிமுடிவது முடைதல் ஆனது. முடைதலுக்கு வேய்தலென்றும் பெயர் (வேய்தல் என்பது துகிற்றொழிலை இன்று குறிப்பினும் ஒருகாலத்திய ஓலைமுயற்சியை தன்னுள்ளே காட்டும்.) கோணலாய் முடிந்த இருவேறு ஓலைகள் பருத்திநூல் கண்டபின் ஒன்றன்பின் ஒன்றாய் நூல்கள் ஆயின. ஒரு நூல் நீண்டு நெடிதாய்ப் பாவ [பாவுநூல் (warp)]. இன்னொரு நூல் ஊடிப் போய் வேய்ந்தது [ஊடுநூல் (weft)].

பாவு நூல்களின் நீளம் என்பது , துணி நீளத்தையும், அவற்றின் குறுக்கு வெட்டும் எண்ணிக்கையும் துணியகலத்தையும் நிருணயித்தன. ஊடும் பாவும் பொருந்துவதால் நெயவைப் பொருத்தல் என்றுஞ் சொன்னார். பாவும் ஊடுஞ்சேர்வதால் அது முதலிற் கள்ளலாகி, அதன்நீட்சியிற் கட்டலானது. பாவு நூல்களின் ஊடே ஒன்று மாற்றி ஒன்றாய் ஊடுநூல் வலைத்துத் துணியை நிறைக்கிறது. அடிப்படையில் வேய்தலெனினும் வவ்வுதல் (வலைத்துப்/வளைத்துப் பற்றுதல்) என்பதும் weaving ற்கு இணையான சொல்தான். வலைத்துப் பற்றலை மேலைச்சொற்பிறப்பியல் அகரமுதலிகள் சொல்லா. இன்னொரு காட்டுஞ் சொல்லலாம். நூலை வலைத்துச் செய்வது வலை. வலய அளவிற்கு ஏற்பத் துணியின் அடர்த்தி மாறும். ஒரு வலை நெருக்கச்செய்ததா? கலக்கச் செய்ததா? - என்பதைப் பொறுத்து வலை/துணியின் பயன்பாடுகள் மாறும்.

மேலும் பார்க்கின், நுள்ளல் என்பது அடைதலையும், செறிதலையும், பொருத்தலையும் கூடக் குறிக்கும். நுள்ளிச்செறிந்த தடுக்கோ/பாயோ இடைவெளியின்றி நிற்கும். இன்னொரு வகையில் நுள்>நெள்>நெய்யாகி நெய்தலைக் குறிக்கும். பாவும், ஊடும் பிணைக்கும் செயல் முன்சொன்ன ஓலைக்கீற்று, கோரை, நூல் போன்ற பொருள்களில் ஒன்றுபோல் நடந்தது பாவு நூலையும் ஊடு நூலையும் விதம் விதமாய் வெவ்வேறு அடவுகளில் துகிலிற் பொருத்துவதென இறுதியில் பொருள் கொண்டார். நெய்த துணியும் வெவ்வேறு விதத்தில் அறியப்பட்டது. (சூடாமணி நிகண்டு 31 விதம் என இதைப் பதிவுசெய்யும்.) “நெய்யு நுண்ணூல்” என்பது சீவக.3019. நுல்> நில்> நிற்று>நிறு என்றெழுந்த நிறுவல், நிறுவனம் போல் நுல்>நுள். நெள்>நெய் எனும் நெய்தலுக்குத் தொடுத்தற் பொருளுமுண்டு. to string, to link together "நெய்தவை தூக்க” என்று பரிபா.19:80 சொல்லும். இங்கே பாவையும் (warp) ஊடையும் (weft) தொடுப்பது சொல்லப்படுகிறது.

ஏறத்தாழ எல்லாத் தமிழியமொழிகளிலும் நெய்க்கு இணையுண்டு .ம.நெய்க; தெ.நேயு; க்.நேய், நேயி, நெய்யு; கோத.நெச்; துட.நிச்; குட.நெய்; து.நெயுநி; கூ.நெப; குவி.நெநை; குரு.எஸ்நா; மா.எசெ; ’நெய்’யின் தொழிற் பெயர்கள் நெய்தல்/நெய(/ச)வு/நெயம் ஆகும். தொழில் செய்வோர் நெய்வார்/நெயவார்/நெசவார்/நெய்மார் (weavers) எனப்பட்டார் .இயப்பதை இயமென்றும், கயந்ததைக் கயமென்றும், குய்வதைக் குயமென்றும், நயப்பதை நயமென்றும், பயங்குவதைப் பயமென்றும், புய்வதைப் (புடைப்பது) புயமென்றும் மயல்வதை மயமென்றும் சொல்லலாமெனில், இதை நெயம் என்பதில் தவறில்லை. இந்’நெய்’க்கும், ஆநெய்க்கும் ஒட்டும்/பொருத்தும்/ஒருங்கும் பொருள் தொடர்புண்டு. ஆநெய்க்கும் கூட்டப்பொருள் நீட்சியால் ஒட்டுமை/பசைமை (to become greasy, unctuous, or sticky. குருணைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டுவது) சொல்வர். நீர்ப்பொருளாய் உருகும் கொழுப்பிற்கும் நெய்ப் பெயர் சொல்வர். நெய்த்தோர் = நெய்போலுறையும் அரத்தம் “நெய்த்தோர் வாய... குருளை” - நற்.2. நெய்ப்பற்று/ நெய்ப்பிடி/ நெய்ப்பு/நெய்ம்மை = ஒட்டுந் தன்மை. நெய்மிதி = மிகுதியான நெய்ப்பு. நெய்ம்மீன் = நெய்ம்மை கொண்ட மீன். பொதுவாய் நெய்மம் = ஒட்டுமை கொண்ட entity.

உழவில் தோய்ந்தோருக்கு நெயவை வேறொன்றோடு ஒப்பிடத் தோன்றும். பாசன ஏரிகளின் கலிங்கோடு நெய்தற் செயனத்தை (செய்யுங் கருவி;  செய்யனம்> செயனம்= மாகனம்= machine) ஒப்பு நோக்கினார். ஒரு பக்கம் வெள்ளம் வர, இன்னொரு பக்கம் கலிங்கால் கட்டுறுத்தி வேண்டுவழி நீரைத் திருப்புவோம் அன்றோ? (கலிங்கால் வெள்ளத்தை மடுப்பதால் மடு>மடை யென்றும், மடு>மடுகு>மடகு> மதகென்றுஞ் சொன்னார்) ஏரிக் கலிங்கு போல் நெய்தற் செயனம் செயற்பட்டு, ஒருபக்கம் வெள்ளமாய் பாவு/ஊடு நூல்கள் வர, இன்னொரு பக்கம் துணி வெளிப்படுத்துமாம். இந்த ஒப்புமையால் நெய்தற் செயனத்திற்குக் கலிங்கு, மடுகு/மடுகமெனும் பெயர்கள் ஏற்பட்டன. கலிங்கம், மடி என்ற சொற்கள் துணிக்கு ஏற்பட்டன. ஆங்கிலக் cloth உம் கலிங்கிற்கு இணையான சொல் தான். ”பனுவலும் text உம் ஒன்றா?” என்ற என் கட்டுரைத்தொடரைப் படியுங்கள். (புகார், உறையூர், கொற்கை, மதுரை, முசிறி, வஞ்சி)  போன்ற பெரும்நகர்களில் கலிங்கும், உணவுக் கடைகளும் முகன்மையானவையே. மதுரைக் காஞ்சியும், பட்டினப்பாலையும், மற்ற பத்துப்பாட்டு நூல்களும் (கூடவே சிலப்பதிகாரமும்) இதுபோன்ற கடைவீதிகளை விவரிக்கும்.   .

மடுகம்>மடுக்கம்>மட்கம்>மக்கம் என்பது தமிழர் பேச்சுவழக்கிலும், மலையாளத்திலும் இருக்குஞ் சொல்லாகும். தெலுங்கு, கன்னடம், துளு, கோண்டி, மராட்டி மொழிகளிலும் அதன் இணைகள் புழங்கும். [4624 Ta. makkam loom. Ma. makkam id. Ka. magga id. Tu. magga id. Te. maggamu id.; maggari weaver. Go. (Mu.) maŋṭa weaving instrument (Voc. 2681). / Cf. Mar. māg loom; Or. maṅg id. DED(S)] நெசவிற்கு ஆன மக்கமே எல்லா machine களுக்கும் முடிவில் பொதுப்பெயரானது. சங்க நூல்களிலும், சிலம்பிலும் வரும் இலஞ்சியான நீர்த் துருவணை (water-turbine).ஏற்பட்ட பின், பல நாகரிகங்களில் (ஆனாற் குறித்த இடங்களில்), மாந்தர் இன்றி, நீரோடையால் இயங்கும் (மாவரைவை, மாவாட்டல் போன்ற) சுழற்சி விளைவிக்கும் மக்கற் செயற்பாடுகள் நடந்தன. இவை பார்ப்போரை மயக்கியதால், மாகம் ((magic) என்றும் அழைக்கப்பட்டன. மக்கம்/மாகம்> மாகனம் என்பதன் சொற்பிறப்பியல் இப்போது புரிகிறதோ? (இங்கிலாந்துத் தொழிற் புரட்சியில் நீரோடையாற்றல் நீராவியானது.) 2000 ஆண்டுகளுக்கு மேல் நம்மூருஞ் சேர்ந்த உலகின் பலவிடங்களில் நீரோடையாற்றல் இருந்தது. (எந்திரம்/பொறி= engine. மாகனம்= machine. மாகனப் பொறியியல்= mechanical engineering. இனித் தேவையின்றி இச்சொல்லின் தமிழ்மை பற்றி யாருங் குழம்பவேண்டாம்.)   

மேற்சொன்ன ஒப்புமை காணா உரையாசிரியரும் அகரமுதலியாரும் கலிங்கத்தின் விதப்புத் துணியே கலிங்கமென்பார். ஆழப் பார்க்கின் எனக்கு அப்படித் தெரியவில்லை. கணப்புப் (generic) பயன்படாகவே சங்க நூல்களில் ”கலிங்கம்” என்றசொல் பயன்படும். அரசர்/செல்வரிலிருந்து வறியவர் வரை, உச்சி முதல் உள்ளங்கால் வரை, பலரும் அணிந்தது கலிங்கமே. பன்னூற்று ஆண்டு தென்கிழக்கு ஆசியா எங்கணும் கலிங்கத்தை விற்றுவந்த தமிழ் வணிகர் அங்கு கலிங்ஙெனவே அறியப்பட்டார். இன்றும் மலேயா, இந்தோனேசியாவில் தமிழரை, இந்தியரை, அப்படியே அழைப்பார்.  இது புடவைக் காரர் என்று அழைக்கும் பாங்கு. (இக்காலக் காஞ்சியிலிருந்து புடவை விற்கத் தெற்கு நோக்கி வருவோரை எங்களூர்ப் பக்கம் புடவைக் காரர் என்பார்.) இதுவறியா வரலாற்றாசிரியர் ஒடியா/ கலிங்கத்தை தென்கிழக்காசியரோடு தொடர்புறுத்துவர். (அந்தத் தவறான பார்வையை வேறு கட்டுரையில் விளக்குவேன்.) வெறுமே இந்தியத் தொடர்பு, சங்கதத் தொடர்பு எனப் புனைவதற்கு மாறாய்த் தென்கிழக்கு ஆசியத் தொடர்பின் உயிர்நாடி தமிழரே என்றுசொல்ல ஏன் இன்னும் பலருக்குத் தயக்கமோ? தெரியவில்லை. இனி, தென்கிழக்கில் துணி விற்ற தமிழர் வடவிந்தியாவில் விற்றிருக்க மாட்டாரா? எண்ணிப் பாருங்கள். நியமமென்ற சொல்லே இதற்குப் பெருஞ்சான்று.

மேற்சொன்ன விளக்கங்களால், நெயம்>நெயமம் என்பது நெயவரின் நிகமம் என்பதும். பேச்சுவழக்கில் நெயமம்>நியமம் ஆனதும், நாளா வட்டத்தில் நியமத்திற்கும் நிகமத்திற்கும் வேறுபாடு அற்றுப் போனதும் புரிந்திருக்குமென எண்ணுகிறேன். நெயவின் ஒழுங்காற்றான் (order) நியமத்திற்கு ஒழுக்கம். செய்கடன், விதி, அட்டயோக விதிமுறைகளில் வழுவாதொழுகல், வரையறுக்கை, வழக்கம். உறுதி, வேதம், முடிவென்ற பொருட்பாடுகள் ஏற்பட்டன என்று கருதுகிறேன். [பல்வேறு வாதங்களை ஒன்று சேர்த்து இறுதியிற் கூட்டி (சேர்த்து/தொகுத்து) வருவது முடிவு எனப் படும். அடிப்படையில் ’வேதமும், முடிவும்’ ’நியம’ வழிப் பிறந்தவையே.] நியமக்காரன், நியமங் கெட்டவன், நியமஞ் செய்தல், நியமனம், நியமித்தல், நியதி (>நீதி), நயம், நயன்மை, நியயம்>நியாயம் (யாயம்> ஞாயம்>நாயம் = கட்டுப்பட்டது. ஏற்படுத்தியது, ஊழ், அமைத்தது, விதித்தது. முறைப்படுத்தப் பட்டது, வரையறுத்தது என்பதும் இதோடு தொடர்புடையதே) நாயன், நாயனார்>நயினார் போன்ற சொற்களெல்லாம் இந்த நெயம்>நியம் என்பதில் உருவானவை தாம். 

அன்புடன்,
இராம.கி.

No comments: