Thursday, September 20, 2018

நுதலிப்பு (innovation)

சொந்தவேலையாக ஒருமுறை 30/11/2015இல் ஊருக்குச்சென்ற நான், சென்னை அடைமழையின் காரணமாய்த் திரும்பிவரப் பேருந்து, தொடரி கிடைக்காது, ஊரிலேயே தங்கவேண்டியதாயிற்று. திடீர் ஏற்பாட்டிற் தனியார் பேருந்தில் 3/12/2015 புறப்பட்டு மறுநாள் சென்னை வந்தேன். சிக்கல்களும், தடுமாற்றங்களும் இங்கு தொடர்ந்தன. மின்னாற்றல் கிடைத்தும், தொலைபேசித் தொடர்பில்லை. அகலப்பாட்டை அகன்று போனதால், இணையத்துள் வரமுடியவில்லை. நீர்வடிந்த நிலையில், பி;எசு.என்.எல். வலைப்பின்னல் அடுத்த நாள் தான் சரியாகித் தேங்கிய மின்மடல்களைப் பார்க்கமுடிந்தது.

innovation என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் கேட்டு ஓர் உரையாடல் அப்போது போய்க்கொண்டிருந்தது. ”அருவியைத்” தொலைத்து விட்டு ”நீர்வீழ்ச்சியை”க் கொண்டாடும் வழக்கம் நம்மிடம் மறையாது போலும். ”இந்தையிரோப்பியச் சொற்களுக்கும் தமிழியச் சொற்களுக்கும் இடையே பல தொடர்புகளிருக்கின்றன” என்று சொன்னால் அதைக்கேட்கத் தயங்குவது ஒருபக்கமெனில், ”இராம.கி. ஆங்கிலவொலிப்புத் தேடுகிறார். ஆங்கில வேர்ச்சொற்களைப் பார்க்கிறார்” என்ற பழிச்சொல் இன்னொரு பக்கம். தெரிந்தோ தெரியாமலோ மாக்சுமுல்லருக்கும், வில்லியம் ஜோன்சுக்கும், கால்டுவெல்லுக்கும் நம்மிற்பலர் தாசானுதாசர் ஆகிப் போனார். ”இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் தமிழிய மொழிகளுக்குமிடையே தொடர்பு சுற்றரவாயில்லை” என்று உள்ளத்தில் ஏதோவோர் இறுக்க முடிவை வைத்துக்கொண்டு, தமிழிற் சொல்லாக்கம் பார்த்தால், விக்கிப்பீடியாவின் ”புகுபதிகை” மாதிரித் தான் வந்துசேரும். (இதைச்சொல்வது கண்டு பலருக்கு என்மேல் கோவம் வரலாம்.) சரி innovation க்கு வருவோம்.

1540s, "introduce as new" (trans.), from Latin innovatus, past participle of innovare "to renew, restore;" also "to change," from in- "into" (see in- (2)) + novus "new" (see new). Intransitive meaning "bring in new things, alter established practices" is from 1590s. Related: Innovated; innovating.

புதுத்தல் என்பது தோன்றல், முன்வரல் என்ற பொருள் கொள்ளும். இதே பொருளில் முதல் என்பதும் முன்வந்தது தான். மொழித்தொடக்கத்தில் வரும் மகரமும் நகரமும் தமிழிற் போலிகள். நுதுத்தல் என்பதும் முன்வருதலே. நுதி, நுனி என்பவை முன்வந்த பகுதிகள். நுதல் என்பது முகத்தின் முன்வந்தபகுதி. முகம்கூட முன்னிருப்பதுதான். வண்டியின் முன்னால் காளைகளைப் பூட்டும் மரம் நுகமாகும். முகக்கால் என்பது நுகக்காலென்றும் பாண்டிநாட்டிற் சொல்லப்பெறும். முகம்>நுகம் என்பது வடமொழியில் நுவம்>நவம் ஆகும். [இடையில்வரும் ககரமும் வகரமும் தமிழிற் போலிகளே.] நவீனம் என்ற வடசொல் இப்படிப்பிறந்ததே. இரோப்பிய மொழிகளில் novo, nouvous என்ற சொற்கள் முன்வரும் நுகப்பொருளில் வந்தவையே. in-novate என்பது in என்னும் முன்னொட்டுப் பிணைத்த நுகத்தல் வினை. முன்கொண்டு வருதலையே உணர்த்தும். இதே தோற்றுவித்தற் பொருளில், ”நுதலுதல்” என்ற சொல் நாலாயிரப் பனுவல் நம்மாழ்வாரின் திருவாசிரியம் 4 ஆவது பாட்டின் 8 ஆவது அடியில் வரும். (நாலாயிரப்பனுவல் 2381 ஆவது பாட்டு.) பாட்டைக் கீழே கொடுத்துள்ளேன்.

‘ஊழிதோ றூழி ஓவாது, வாழிய!’
என்று யாம்தொழ இசையுங் கொல்லோ,
யாவகை யுலகமும் யாவரு மில்லா,
மேல்வரும் பெரும்பாழ்க் காலத்து, இரும்பொருட்
கெல்லா மரும்பெறல் தனிவித்து, ஒருதான்
ஆகித் தெய்வ நான்முகக் கொழுமுளை
ஈன்று, முக்கண் ஈசனொரு தேவுபல
நுதலி, மூ வுலகம் விளைத்த உந்தி,
மாயக் கடவுள் மாமுத லடியே?

“தேவுபல நுதலி” என்ற சொற்றொடரைக் கவனியுங்கள். நுதலித்தல்= தோற்றுவித்தல். to bring into being, create. மூவுலகத்தைப் புதிதாய் உருவாக்கிய செய்தி நுதலித்தலின் வழி பெறப்படுகிறது, நுதலுதல் என்பதற்கு கருதுதல், கூறுதல், என்ற பொருட்பாடுகளுமுண்டு.

innovate = நுதலி; [நுதலித்தான், நுதலிக்கிறான், நுதலிப்பான் என்று சொல்லலாம். நுதலினான், நுதலுகிறான், நுதலுவான் என்பதைக் கூறுதலுக்கும், நுதன்றான், நுதல்கிறான், நுதல்வான் என்பதைக் கருதலுக்கும் வைத்துக்கொள்ளலாம்.]
innovation = நுதலிப்பு
innovating = நுதலித்துக்கொண்டு.

நான் அறிந்தவரை இச்சொற்களிற் குழப்பங் கிடையாது.

அன்புடன்,
இராம.கி.


4 comments:

PNA Prasanna said...

புத்தாக்கம் (innovation) என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நுதலித்தல் என்பது என் சிற்றறிவிற்கு எட்டவில்லை.

அறிவியல் தமிழ் said...

வணக்கம் ஐயா,

மிகச் சிறப்பானதொரு சொல்லாக்கம். தங்களை இந்த தமிழ் உலகம் பயன்படுத்திக்கொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது.

சுந்தரவடிவேல் said...

அருமை ஐயா! இப்போதுதான் பார்க்கிறேன். நூதனம் என்ற சொல்லும் நுதலுதலைத் தழுவியே வந்திருக்கவேண்டும்.

Bala G Thevar said...

"Nudhalippu" a great word from Pakthi literature!
I like Thiruvalluvar's "Aakkam" , more than two thousand years old.