Wednesday, September 26, 2018

மறைக்காடு - 3

அதற்குமுன் கழிக்கானலில் மரைமான். மரை/ஆ/ஆன் இருந்தனவா என்பதைச் சங்க இலக்கியங்களின் வழி பார்ப்போம். மலை 406, நற் 43-3, குறு 235-4, அக 69-8, 107-16, 224-11, 287-4, 373-2, 399-15, புற 27-6 (விலங்கைக் குறிக்காது தாமரையிலை குறிப்பிடப்பட்டது), 170-1 ஆகியவிடங்களில் மரையும், குறு 115-5, 321-5, 363-3, பதி 23-14, கலி 6-1, அக 3-7, புற 297-4 ஆகியவிடங்களில் மரையாவும், மலை 331, 506, குறு 317-1, புற 168-8 ஆகிய இடங்களில் மரையானும் குறிப்பிடப்பட்டுள்ளன. இவையனைத்திலும் குறிஞ்சி, முல்லை, மருதத்தை ஒட்டியே மரைகள் சொல்லப்படுள்ளன. ஓரிடத்திற் கூட நெய்தற் கழிக்கானலில் மரைமானிருந்தது சொல்லப்படவில்லை. அதேபொழுது சங்க இலக்கியம் சொல்லாததாலே அங்கு அது இல்லையென முடியாது. இன்றுங் கூட கழிக்கானல்களில் பொது மான்களைக் காண்கிறோம். தமக்கு ஊறு செய்யும் விலங்குகள் அங்கிலாததால், கழிக்கானற் சேமத்தையும், தங்களுக்கு இரை கிடைப்பதையும் பொறுத்து மான்கள் அங்கு உலவலாம். ஆனால் மான்கள் அங்குலவுவது முகன்மையாவெனில் நான்பார்த்தவரை சங்க இலக்கியங்களின் வழி அதற்கு மறுமொழி சொல்ல முடியவில்லை. ஒருவேளை மான்கள் அங்கிருந்தது விதப்பான விதயமில்லை போலும்.

தமிழ்நாட்டரசு வருமானத்துறைத் தளத்திலிருந்து நண்பர் ழான் செவ்வியார் (Jean-Luc Chevillard) ஒரு பட்டியலை மின்தமிழிற் கொடுத்தார். அதில் அறிய மறைக்காடு (இது அறியமலைக்காடென்றும் இன்னோரிடத்திற் சொல்லப் படுகிறது. தவிர அ/ஆ, ர/ற குழப்பமும் இப்பெயரில் எனக்குண்டு), எட்டுப் புலிக்காடு, கழுகுபுலிக்காடு, ரெண்டாம்புலிக்காடு, தொண்டிப்புலிக்காடு, பன்னிக்குட்டிக்காடு என்ற சில ஊர்ப்பெயர்களைப் பார்த்தேன். (லி/ளி குழப்பத்தையும் பார்க்கவேண்டும்.) தவிர கரடிக்காடு, ஆக்காடு, எருமைக்காடு என்ற பெயர்களும் மின்தமிழிற் சொல்லப்பட்டன. இப்பெயர்கள் விலங்குத் தொடர்பில் எப்படியெழுந்தன என்ற காரணம் புரியவில்லை. தமிழிற் காடு என்பதற்கு forest என்று மட்டும் பொருளில்லை. கடு>காடு= அடர்த்தி, மிகுதி யென்றும் பொருளுண்டு.. வயற்காடு என்கிறோமே?

பெயராய்வில் சரியான தரவுகள் சேர்ப்பது முகன்மையானது. உரோமன் எழுத்துப்பெயர்ப்புச் சிக்கலோடு ஊர்ப்பெயராய்வை நான்செய்ய விரும்பேன். வலியுள்ள ஆண்விலங்கின் பொதுப்பெயராய் ’ஒருத்தல்/ஓரி’ பெயரை புல்வாய், புலி, உழை, மரை, கவரி, கராம், யானை, பன்றி, எருமை என்ற விலங்குகளுக்குத் தொல்காப்பியப் பொருளதிகாரம் 590, 591, 592 நூற்பாக்கள் குறிக்கும். ஒருவகையில் பார்த்தால் விலங்குகளின் பெயரோடு காட்டை இணைத்து ஊர்ப் பெயர் அமையலாம் தான். ஆனால் ’மரைக் காட்டுப்’ பெயரில் உள்ள மரைமானின் சிறப்பென்ன? அதன் கொம்பா? கொம்பில்லாத ஆன்மான் உண்டோ? கொம்பின் வளைப்போக்கிலும் பெரியதொரு காரணம் எனக்குத் தென்படவில்லை. காட்டுக்கும் மானுக்கும் அதென்ன விதப்பு? அதிக எண்ணிக்கையா? மற்ற கழிக்கானல்களிலும் மரைகள் இருக்கையில் குறிப்பிட்ட இக்காட்டிற்கு மட்டும் அப்பெயர் ஏன் வந்தது? What is the uniqueness and significance of Marai at this place? இதனாற்றான் ஓர்ந்து பார்க்கையில் மரைமான் குறிப்பு பெரிதாய் என்னைக் கவரவில்லை. மானைக் காட்டிலும் மரங்களை நாம் பார்த்தாலென்ன? மரப்பெயர்களாலும் தமிழகத்தில் ஏராளமாய் ஊர்களும், காடுகளும் அழைக்கப்படுகின்றனவே?

இனித் தேவாரகாலத்திற்குப் போவோம். சம்பந்தர் 1-22, 2-37,91, 3-76 ஆம் பதிகங்களிலும், அப்பர் 4-33,34, 5-9, 6-23 ஆம் பதிகங்களிலும், சுந்தரர் 7-71 ஆம் பதிகத்திலும் மறைக்காடரைப் பாடுவர். சுந்தரர் பாடலில் யாழைப் பழித்த மொழியம்மை பற்றியும் வரும். மறைக்காட்டின் தலமரம்: சிவனுக்கான வன்னியும் கழிக்கானலில் வளரும் புன்னையும். இங்குள்ள தியாகராசப் படிமம்: புவனிவிடங்கர். எனப்படும். விடங்கர் செய்வது அன்னப்பாத (ஹம்ச பாத) நடம். 7 விடங்கத் தலங்களுள் இதுபோக மற்றவை அருகில் திருவாரூர், திருநள்ளாறு, திருநாகைக் காரோணம், திருவாய்மூர், திருக்கோளிலி, திருக்காறாயில் ஆகியவிடங்களில் உண்டு. அடுத்த பத்திகளில் தேவார மூவரின் 100 பாடல்களில் மறைக்காடு பற்றியும், சுந்தரரின் விதப்பான 10 பாடல்களில் கோடிக்கரை பற்றியுந் தொகுத்துள்ளேன். முதலில் வருவது சம்பந்தரின் 1 ஆம் திருமுறை 22 ஆம் பதிகம். இதில் இறைவன் பற்றிய கூற்றைப் பெரிதும் விடுத்து ஊர்பற்றியே சொல்லியுள்ளேன். திருமுறைப் பாட்டின் எண்ணை முதலிலும், குறிப்பிட்ட வரியை அடுத்தும், விளக்கத்தை முடிவிலும் (பிறைக்குறிக்குள்) தருகிறேன். .

228 "மலைமலி மதில்புடை தழுவிய மறைவனம்" (மலையளவு மலிந்ததோ எனும் படி மதிலின் புறந்தழுவிய மறைவனம் - என்பது இதன்பொருள். ஏழாம் நூற்றாண்டுச் சம்பந்தர் காலக் கோயில்கள் பெரும்பாலுஞ் சிறியன. இற்றைக் கட்டுமானம் என்பது பிற்காலப்பல்லவரால் எழுந்தது. நம்மிற் பலரும் இற்றைக் கோயில் பரிமானத்தை வைத்தே பழையதை எண்ணிப் பார்க்கிறோம். அது பெருந் தவறு. பாட்டில் வரும் மதிற் குறிப்பு வெளியன் காலக் கோட்டையையோ, அன்றி அதன் இடிபாட்டையோ குறிக்கலாம். கோட்டைப் புழையில் மலைமலிந்தது போல் மறைவனம் இருந்ததைச் சம்பந்தர் குறிப்பு சொல்கிறது. கோயிலின் ஆகப் பழங்கல்வெட்டு விசயாலயன்மகன் ஆதித்த சோழன் காலத்தது. சம்பந்தர் காலச் சோழன் என்பான் இவனுக்கு முந்தையவன் ஆன, பெயர் தெரியாத சோழன் ஆவான். இவனே நின்றசீர் நெடுமாறனின் மாமனாவான், இவனே பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியின் தந்தை. இவன் நாக நாட்டானா, வளநாட்டானா? நமக்குத் தெரியாது. பெரிய புராணத்தை ஆழ்ந்து பார்க்கவேண்டும்.

கோட்டை உண்டெனில் அதைக் கவனித்துக்கொள்வார் இருப்பாரே?. பாண்டியில் இவரை அகமுடையாரென்பர். (முக்குலத்தோரில் இவரொருவர்). சோழநாட்டிலும் ’அகத்தியான்’ என்ற சொல் இது போல் இருந்திருக்கலாம். அகத்தியான் பள்ளி என்பது திருமறைக்காட்டிற்கு அருகிலுள்ள ஊர். இதுவும் சம்பந்தரால் பாடல் பெற்றதே. அப்பரும் தன் மறைக்காட்டுப் பாடலில் இதைக் குறிப்பார். இது செயினர் ஊரா? தெரியாது. பொதுவாகச் செயினரையும், சாக்கியரையும் தேவார மூவர் விடாது தாக்கினர். ”செயினர் பக்கம் பொது மக்கள் போய்விடாது சிவநெறிக்குள் வரவேண்டும்” என்பது தேவார இயக்கத்தின் அடிப்படைக் குறிக்கோள் ஆதலால் ஒருவேளை அகத்தியான் பள்ளி என்பது செயினர் செறிந்த இடமும் ஆகலாம். அதே பொழுது எல்லாப் பள்ளிகளுக்கும் செயினத் தோற்றங் காட்ட முற்படுவதும் சரி அல்ல தான். பள்ளி என்பதைப் பட்டி போலவும் சமயக் குறிப்பின்றிப் பொருள்கொள்ளலாம்.)  229, 231, 232, 233, 238 ஆகிய பாடல்கள் மறைவனப் பெயர் மட்டுமே சொல்கின்றன.

230 "இருளுறும் மழைதவழ் தருபொழில் நிலவிய மறைவனம்". (இருளுறும் மேகம் தவழ்வதுபோன்ற பொழில்நிலவிய மறைவனம். 7 ஆம் நூற்றாண்டிலும் கறுத்துச் செறிந்த காடிருந்தது இவ்வரியாற் புலப்படுகிறது. எனவே சங்ககால மிளைக்காடு தேவார காலத்திலும் மாறவில்லை என்று தெரிகிறது. ”கடல்சேரும் ஆற்றில் ஓடும் நந்நீர் எவ்வளவு? அது எப்படிக் கடலோடு கலக்கிறது?. கலந்த நீரின் உப்புமை (salinity) எவ்வளவு?” என்பதைப் பொறுத்தே அலையாற்றிக் காடுகள் அடரும். இக்காடுகள் ஓரளவு உப்பைத் தாங்குமெனினும் கடலளவு உப்பைத் தாங்கா. கழியின் உப்புமை குறைந்தால் தான் காடு செழிக்கும். நந்நீர் குறையக் குறைய, உப்புமை கூடி காட்டடர்த்தி குறையும். பாட்டின் படி சம்பந்தர் காலக் கானல் வளமாகவே யிருந்தது. (மழைவளங் குறையாது மாதம் மும்மாரி மழை பொழிந்ததோ? :-))
 
234 "இனமலர் மருவிய அறுபதம் இசைமுரல் மறைவனம்" (பல்வேறு மலர் இனங்களை தழுவிய வண்டுகள் இசையால் ஒலிக்கும் மறைவனம். வண்டிற்கு ஆறுகால் என்பதால் இங்கது அறுபதமாயிற்று.. வண்டுகள் ஏராளம் இழைந்ததால், தமிழிசைப்பாணர் புஷ்பவனம் குப்புசாமியின் ஊர் 7 ஆம் நூற்றாண்டிலும் அருமையான பூக்காடாய் இருந்தது போலும். இல்லா விட்டால் எப்படி இசை முரலும்?) 

235 "மனமகிழ்வொடு மறைமுறை உணர் மறைவனம்" [மனமகிழ்வோடு வேதமுறைகளை உணரும் மறைவனம். மறைக்காட்டருகில் பார்ப்பனச் சேரியில் வேதநெறி கலந்த சிவநெறி நிலவியது போலும். பேரா.நா. சுப்பிரமணியன் சொன்னபடி 2000 ஆண்டுகளுக்கு முன் தமிழகம் வந்து இங்குள்ள தமிழரோடு முற்றுங் கலந்தவர் பூருவ மீமாஞ்சை கடைப்பிடித்த முன்குடுமிப் பார்ப்பாராவார். (அவருடைய The Brahmin in the Tamil Country கட்டாயம் படிக்க வேண்டிய பொத்தகம்.) சேரல நம்பூதிகள், பெரும்பற்றப் புலியூர் தீக்கிதர், சோழியர் போன்றோரும் முன்குடுமியரே. மணிவாசகர் காலத் திருப்பெருந்துறை முந்நூற்றுவருங் முன்குடுமியரே. (இவரை 9ஆம் நூற்றாண்டில் தேடி அடையாளங் காண்பது கடினம். ஏனெனில் அப்போது மற்ற பார்ப்பனரை விட முன்குடுமியார் சுருங்கிச் சிறுத்துவிட்டார். மணி வாசகர், தேவாரமூவருக்கு முன்னென நான் சொல்வதில் இதுவுமொரு காரணம்.) சம்பந்தர்கால மறைக்காட்டுப் பார்ப்பார் பெரும்பாலும் சோழியர் ஆகலாம். முன்குடுமியார் வேதநெறியை ஆழப் பின்பற்றினார்.. அல்லிருமை (அத்வைதம்) போன்ற உத்தரமீமாஞ்சை வழிகள் இவர்க்கு என்றும் முகன்மை இல்லை. இவரின் ஆழ்ந்த வேதநெறிப் பிடிப்பே சம்பந்தருக்கும் அப்பருக்கும் இடையே மெல்லிய பிணக்கை மறைக்காட்டில் உருவாக்கியிருக்கலாம். இப்பிணக்கைச் சிவநெறியார் வெளிப்படப் பேசமாட்டார்.]

[சிவநெறி என்பது அடிப்படையில் வேதநெறியும், தமிழரின் மரபாகி வந்த ஆகமமும் (ஆகிவந்தது ஆகமம்) கலந்து உருவானதேயாகும். முன்னோரைத் தொழுததில் தமிழரிடம் என்ன பழக்கங்கள் இருந்தனவோ, அவையெல்லாம் சிவநெறியிற் சேர்ந்தன. இவற்றையெல்லாம் ஒருசேர விவரித்தால் அதுவே ஒரு தனிக்கட்டுரை ஆகிவிடும். எனவே அதைத் தவிர்த்து, இங்கே வழி பாட்டை மட்டுமே பேசுகிறேன். மெய்யியல் என்பது வேறு. நடைமுறைப் புரிசைகள் என்பன வேறு. நான் அறிந்தவரை, தேவார மூவருக்கு முன்னவராய் மணிவாசகரைக் கொண்டால், அவரே சிவநெறி மெய்யியலுக்கு ஓரளவு வழிவகுத்தவராவார். (இதைமறுத்து மாணிக்க வாசகரை 9 ஆம் நூற்றாண்டிற்குக் கொண்டுபோனால் சிவநெறி விதப்பு எதுவும் விளங்காது.) அவருக்கப்புறம் திருமூலரே மூலவர். இன்றுள்ள தமிழ் நூல்களில் திருமந்திரமே முதல் மெய்யியல் நூலாகும். அந்நூலிலும் வேதநெறி மிடைந்த சிவநெறியே சொல்லப்படும். பின்னெழுந்த இம்மெய்யியல், முன்னெழுந்த செயினம் சாக்கியத்தோடு முரணித்தே, தமிழரைத் தன்பக்கம் ஈர்க்க முயன்றது. இப்படிச் செய்ததையே இன்று நாம் பற்றியியக்கம் /பக்தியியக்கம் என்கிறோம்.]
   
எப்படி விண்ணவநெறியில் திருவரங்கம் முதற்“கோயிலோ” அதுபோற் சிவநெறியில் சிற்றம்பலமே முதற்”கோயில்”. ஆயினும் மற்ற சிவன் கோயில்களை விட சிற்றம்பல நடைமுறைகள் சற்று வேறுபட்டே இருக்கும். மற்ற சிவன் கோயில்களில் வேதநெறித் தாக்கம் 20% எனில், சிற்றம்பலத்தில் வேதநெறித் தாக்கம் 50% இருக்கும். காட்டாக. நடவரசனுக்கு முன் பொன்னம்பல மேடையில் யாகம் வளர்ப்பர். மற்ற சிவன்கோயில்களில் இதை நான் கண்டதில்லை. பொன்னம்பலக் கருவறையில் இலிங்க வழிபாடு கிடையாது. (இங்கு விசும்பே இலிங்கமென விளக்கங் கொடுப்பார்.) சிற்றம்பலத் தீக்கிதர் வேதநெறி அதிகம் மிடைந்த சிவநெறியாளர். தேவாரம் வெளிவருவதில் இராசராசனோடு மல்லுக் கட்டியவர். இக்காலத்திலும் பொன்னம்பல மேடையில் தேவாரம்பாட (காலஞ்சென்ற) ஆறுமுக ஓதுவோரோடு முரணிக் கொண்டார். எதிலும் தம் வழக்கத்தை விட்டுவிடா அளவுக்கு வயிராக்கம் முன்குடுமியாருக்கு உண்டு. இதற்காகவே தமிழ்ச் சொலவடை வழக்கில் ”சோழியன் குடுமி சும்மா ஆடாது” என்பார். சம்பந்தர்/அப்பர் காலத்தில் மறைக்காட்டில் நடந்த நிகழ்ச்சிகள் யாவும் சிவநெறிக்குள் கலந்திருந்த வேதநெறியோடு, ஆகமம் கொண்ட முரண்பாட்டின் வெளிப் பாடுகளே. மொத்தத்தில் இது உட்கட்சி வியவகாரம்.] சிவநெறி, விண்ணவ நெறிக்கு வெளியேயுள்ளவர் சிவநெறிக்குள் இருக்கும் வேதவழி - ஆகமவழி முரண்பாடுகளை உணருவதில்லை. உள்ளிருப்போருக்கே அது தெரியும்.

236 "மலிகடல் திரள்எழும் மணிவளர் ஒளிவெயில் மிகுதரு மறைவனம்" (பெருகியகடலின் திரள் எழுவதும், பவளம் வளர்வதும், வெய்யிலொளி மிகுந்ததுமான மறைவனம். அலையாற்றிக் காடுகளில் அலையெழாது. ஓதக் கழியில் (tidal backwaters) அடுத்தடுத்த மடிப்பாய்த் திரளெழும். கோடிக் கரைக்கு வடக்கே பவளம் மிகுதியாயும், கோடிக்கரையிலிருந்து அழகன் குளம் வரை பவளமும் முத்தும், அழகன் குளத்தின் தெற்கில் முத்துங் கிடைத்ததைப் பல இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. இங்கே கோடிக் கரைப் பகுதியில் முத்து, பவளம் வளர்ந்ததைச் சம்பந்தர் பதிவு செய்கிறார். மணி = முத்து, பவளம். வெயிலென்பது காடு, நிலம், கோயில் எல்லாவற்றின் மேலும் அடிக்கிறதாம். அப்படியெனில் மறைக்காட்டு மரங்கள் பெரிதும் உயரமில்லை என்று புரிந்து கொள்கிறோம்.)   

237 "அணி வயலினில் வளைவள மருவிய மறைவனம்". (வரிசையான நெல்வயலில் முத்துவளம் கலந்துபோன மறைவனம். [தாழ் ஓதத்தில் (low tide) ஆற்று நந்நீர் கடலுக்குள்ளும், உயர் ஓதத்தில் (high tide) கடல்நீர் ஆற்றுக்கு உள்ளும் உள்வருவதால், ஆற்றுமுகத்திலேயே முத்துச்சிப்பிகள் கிடைத்ததாம். கடற்கரைக்கு அருகில் நெல்வயல்களில் முத்துச்சிப்பிகள் உள்வந்து சேருமாம். தமிழ்நாட்டு நெல் வகைகளில் பலவுமுண்டு. இங்கு பேசப்படுவது உப்புமை தாங்கும் ஒரு நெற்பயிர் ஆகலாம்.)

இன்னும் பல செய்திகள் உள்ளன.

அன்புடன்,
இராம.கி.

1 comment:

Anonymous said...

ஆவாட்டு சொல் விளக்கம் தாருங்கள்

சிவக்குமார்