அடுத்தபாடல் உறையூர்ச் சோழன் பெருங்கோக்கிள்ளி தன்மக்களோடு போரிட முற்பட்டது கண்டு, அதைத்தடுத்து நிறுத்தப் புல்லாற்றூர் எயிற்றியனார் பாடியதாகும்..திணை: வஞ்சி. துறை: துணைவஞ்சி. வஞ்சித்திணையை “எஞ்சா மண்நசை வேந்தனை, வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென்று அடல் குறித்தெ”ன்று தொல்காப்பியங் குறிக்கும். வஞ்சிச்செயலிற்குத் துணைநிற்பது துணைவஞ்சித் துறையாம். இதில் எஞ்சா மண்நசை வேந்தரென்பது கோப்பெருஞ்சோழனின் 2 மக்களைக் குறிக்கும். அஞ்சுதகத் தலைச்சென்று அடலிட முற்பட்டவன் கோப்பெருஞ்சோழனாவான். ”என்னசெய்யத் துணிந்தீர்? இது தகாது அல்லவா?” என்று புல்லாற்றூர் எயிற்றியனார் சோழனுக்கு அறிவுறுத்த, அவன் வெட்கங் கொண்டு, ”அரும்பெறல் உலகத்து ஆன்றோர் தரும் விருந்தை, விரைந்த விருப்பொடு எதிர்கொள்ளுவானாய்” வடக்கிருக்கிறான். புலவர் மூலம் ஊழ் விளையாண்டதால், எதிர்வரும் விருந்தும் இற்றை வடக்கிருத்தலும் முரண்தொடையாகி, இப்பாடலின் மேற் கவனங் கொள்ள வைக்கின்றன. ”இனி வாழ்ந்து பயன் இல்லை; நியதி இதுவெனிற் பிறவாமை வேண்டும்” என்றெண்ணி வடக்கிருந்த சோழன் கருத்தாழ மிக்க புறம் 214 ஆம் பாடலை மறுமொழியாக்குகிறான்.
எயிற்றியனெனும் பெயரில் சங்க இலக்கியத்திற் 2 சோழநாட்டுப் புலவரை அடையாளங் காட்டுவார். முதலாமவர் கழார்க்கீரன் எயிற்றியனார். கழார் எனும் ஊர் இக்காலத்தில் கழார்>களார்>களர் என்று ஆகித் திருமுறைப்பாடல் பெற்று, மன்னார்குடி- திருத்துறைப்பூண்டிப் பாதையிற் கோட்டூர்தாண்டித் தெற்கில்விலகி வரும் திருக்களராகும். இதே கழார்க்கீரன் எயிற்றியனார் நற்றிணை 281ஆம் பாடலில் “வெல்போர்ச் சோழர் கழாஅர்க் கொள்ளும் நல்வகை மிகு பலிக்கொடை” பற்றிச் சொல்வார். [சிலம்பின் இந்திரவிழவு ஊரெடுத்த காதையில் “வெந்திறல் மன்னற்கு உற்றதை ஒழிக்கெனப் பலிக் கொடை புரிந்தோர்” என்றுவரும்.] சோழ அரசருக்கு வெற்றிவேண்டி தம் தலையைத் தாமே அரிந்து பலிகொடுக்கும் வழக்கம் கழாரிலிருந்து, அதை ”நல்வகை மிகுந்ததாய்ப்” புலவர்சொல்வது யாரையுந் திகைக்க வைக்குங் கூற்று. தலைவன்/தலைவிக்காக தன்னுயிர் கொடுக்கும் தொண்டரின் உணர்ச்சிப்பெருக்கு, இன்றுநேற்றல்ல, 2000 ஆண்டுகளுக்கும் மேல் இந் நிலத்தில் இருந்தது போலும். இம்மெனில் உயிரைப் போக்கிக்கொள்ளும் உளவியல் தமிழராகிய நம்மிடம் ஏதோவொரு குறையைக் காட்டுகிறது.
கழார்க்கீரன் எயிற்றியனார் நற்றிணையில் இன்னுமொரு பாட்டையும் (312), குறுந்தொகையில் 35, 261, 286, 330 ஆம் பாட்டுக்களையும், அகநானூற்றில் 163, 217, 235, 294 ஆம் பாட்டுக்களையும் பாடியுள்ளார். [இவரின் சிலபாடல்களை கழார்க்கீரன் எயிற்றியாரெனும் பெண்புலவர் பாடியதாகவும், குறுந்தொகையில் ஊர்ப்பெயரிலா எயிற்றியனார் ஒருபாடல் பாடியதாகவுஞ் சிலர் மாற்றிச்சொல்வது உண்டு. 286 ஆம் குறுந்தொகைப் பாடலில் வரும் ”முள் எயிற்று அமிழ்தம் ஊறும் அம் செவ்வாய்” எனுந்தொடரை வைத்து எயிற்றியனார் என்றழைத்ததாய் முந்தை ஆய்வாளர் சொல்வர். ஆனால் இப்பாடல்களை, குறிப்பாக நற்றிணை 281 ஐ, முழுதும் ஆய்ந்தால், பெண்பாற் புலவராகாது. கழாக்கீரன் மகன் எயிற்றியன் பாடியதாகவே கொள்ள முடியும். எயிற்றை (=பல்லை) வைத்துப் பெயரிட வேண்டுமெனில் எயிற்றியார் என்றே சொல்லமுடியும். அப்படி முழுதுஞ் சொல்லாது சிலவிடத்து எயிற்றியனென்று ”அன்” போட்டுச் சொல்வது ”எயிற்றி” எனும் வேட்டுவச்சிக்கு இணைகருதித் தானே இருக்கமுடியும்? அப்படியானால் வேட்டுவப் பொருள் தானே இங்கு முதன்மையாக முடியும்?]
இன்னொருவர் இக்கட்டுரையிற் பேசப்படும் புல்லாற்றூர் எயிற்றியனார். எயில்= எய்யும் அம்பு. எயிற்றல்= அம்பெய்யுந் தொழில். எயிற்றியன்= அம்பு எய்வோன், எயினன், வேடன். வேட்டுவச்சியைக் குறிக்கும் ”எயிற்றி” புறம்181 இல் பயிலும். இயற்பெயர்தெரியா இப்புலவரின் தொழிற்பெயர் மட்டுமே தெரிகிறது. தமிழக அரசின் இந்திய ஆட்சிப்பணி (IAS) அலுவரான முனைவர் மு. இராசேந்திரன் ”சோழர்காலச் செப்பேடுகள்” (டிசம்பர் 2011) நூலிற் ”புல்லாறு” பற்றிக் குறிப்பிட்டிருப்பதாய் இணையத்திற் படித்தேன். அவ்வூரின் தற்காலப்பெயர் ஏதென அறியோம். பொதுவாக ஆற்றிற்குப் பக்கத்து ஊர் ஆற்றூராகும். தூத்துக்குடி மாவட்டத்திற் தாம்பரபெருநைக்கருகில் முக்காணி அடுத்து ஆற்றூரும், சேலம் மாவட்டத்தில் காவிரிக்கடுத்து ஆற்றூருமுண்டு. காவிரி வடகரையில் இருப்பதாக ஔவை. துரைசாமியார் சொல்லும் புல்லாற்றூர் ஏதென்று திருச்சிமாவட்டத்திற் தேடவேண்டும். ஒரு வேட்டுவர், போர்ப்பாசறைக்குப் போய்ச் சோழனை உரிமையோடு கடிந்துரைப்பது ஓர்ந்து பார்க்க வைக்கிறது. வேட்டுவர் தொடர்பெனில், உறையூருக்குப் பக்கம் புல்லாற்றூர் என்பது காடுகவிந்த ஊராய் இருக்கலாம் சிலம்பின்படி ஆற்றிடைக்குறை அரங்கமும் அதையொட்டிய காவிரி வடகரையும் அக் காலத்திற் காடு தான். காவிரியின் தென்கரையிலேயே மக்கள் வாழ்விடங்கள் மிகுதியாகும்.
மேற்சொன்ன இருவர் போக இன்னொரு வேடரான கடுவன் இளவெயினனார் நற்றிணை 263ஐயும், பரிபாடல் 3, 4, 5 ஐயும், குறமகள் இளவெயினி (இவரைக் குறமகள் குறியெயினி என்றும், பேய்மகள் இளவெயினி என்றுங் குறித்திருக்கிறார்.) புறம் 11, 157 என்ற பாடல்களையும், நற்றிணை 357 ஐயும் பாடியிருக்கின்றனர். எயிற்றியனார், இளவெயினர் தவிர்த்து விற்றூற்று முதெயினனார் அகநானூறு 136 ஐயும், எயினந்தையார் நற்றிணை 43 ஐயும் பாடியிருக்கின்றனர். மொத்தத்தில் எயினர்கள் பாடிய பாடல்கள் சங்க இலக்கியத்திற் கணிசமாகவே உள்ளன. இனிப் பாடலுக்கு வருவோம்.
மண்டம ரட்ட மதனுடை நோன்றாள்
வெண்குடை விளக்கும் விறல்கெழு வேந்தே
பொங்குநீ ருடுத்தவிம் மலர்தலை யுலகத்து
நின்றலை வந்த விருவரை நினைப்பிற்
றொன்றுறை துப்பினின் பகைஞரு மல்லர்
அமர்வெங் காட்சியொடு மாறெதிர் பெழுந்தவர்
நினையுங் காலை நீயு மற்றவர்க்
கனையை யல்லை யடுமான் றோன்றல்
பரந்துபடு நல்லிசை யெய்தி மற்றுநீ
உயர்ந்தோ ருலக மெய்திப் பின்னும்
ஒழித்த தாய மவர்க்குரித் தன்றே
அதனால்,
அன்ன தாதலு மறிவோய் நன்றும்
இன்னுங் கேண்மதி யிசைவெய் யோயே
நின்ற துப்பொடு நிற்குறித் தெழுந்த
எண்ணில் காட்சி யிளையோர் தோற்பின்
நின்பெருஞ் செல்வம் யார்க்கெஞ் சுவையே
அமர்வெஞ் செல்வ நீயவர்க் குலையின்
இகழுந ருவப்பப் பழியெஞ் சுவையே
அதனால்,
ஒழிகதி லத்தைநின் மறனே வல்விரைந்
தெழுமதி வாழ்கநின் னுள்ள மழிந்தோர்க்
கேம மாகுநின் றாணிழன் மயங்காது
செய்தல் வேண்டுமா னன்றே வானோர்
அரும்பெற லுலகத் தான்றவர்
விதும்புறு விருப்பொடு விருந்தெதிர் கொளற்கே
- புறம் 213
இப்பாடலின் விளக்கம் கூடுவதற்காக, பாடலுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப்போட்டுக் கீழே கொடுத்திருக்கிறேன்.
மண்டு அமர் அட்ட மதன் உடை நோன் தாள்
வெண் குடை விளக்கும் விறல் கெழு வேந்தே!
பொங்கு நீர் உடுத்த இம் மலர்தலை யுலகத்து
நின் தலைவந்த இருவரை நினைப்பின்
தொன்றுறை துப்பின் நின் பகைஞரும் அல்லர்
அமர் வெங் காட்சியொடு மாறு எதிர்பு எழுந்தவர்
நினையுங் காலை நீயும் மற்று அவர்க்கு அ(ன்)னையை அல்லை
அடுமான் தோன்றல்!
பரந்து படு நல் இசை எய்தி மற்று நீ
உயர்ந்தோர் உலகம் எய்திப் பின்னும்
ஒழித்த தாயம் அவர்க்கு உரித்தன்றே
அதனால்,
அன்னது ஆதலும் அறிவோய் நன்றும்
இன்னும் கேண்மதி இசை வெய்யோயே
நின்ற துப்பொடு நின் குறித்து எழுந்த
எண்ணில் காட்சி இளையோர் தோற்பின்
நின் பெருஞ் செல்வம் யார்க்கு எஞ்சுவையே
அமர் வெஞ் செல்வ! நீ அவர்க்கு உலையின்
இகழுநர் உவப்பப் பழி எஞ்சுவையே
அதனால்,
ஒழிகதில் அத்தை நின் மறனே! வல் விரைந்து
எழுமதி வாழ்க நின் உள்ளம்! அழிந்தோர்க்கு
ஏமம் ஆகும் நின் தாள் நிழல் மயங்காது செய்தல் வேண்டுமால்,
வானோர் அரும்பெறல் உலகத்து ஆன்றவர்
விதும்புறு விருப்பொடு விருந்து எதிர்கொளற்கே நன்றே !
இந்தப் பாட்டை மூன்று பகுதிகளாய் பிரித்துப் பொருள் கொள்ளுவது நல்லது.
முதற் பகுதி:
மண்டுதல் செறிதலைக் குறிக்கும். அட்டல்= செய்தல். ”மண்டு அமர் அட்ட” என்பது ”செறிந்த போரைச் செய்ய” என்றபொருள் கொள்ளும்.
மதன் உடை நோன் தாள் = வலியொடு மேற்கொள்ளும் முயற்சி; ”மதனுடை நோன்றாள்” என்பது சங்க இலக்கியத்திற் பெரிதும்பயிலும் தொடராகும். (காண்க: பட்டினப் 278, புறம் 75, திருமுருகு 7);
வெண்குடை விளங்கும் =- சோழனின் வெண்குடை (சட்டென்று காணும்படி) விளங்குகிறதாம்.
விறல்கெழு வேந்தே! = (இடைவிடாது பெற்ற) வெற்றிகள் நிறைந்த வேந்தே!
“மண்டு அமர் அட்ட மதன் உடை நோன் தாள் வெண் குடை விளக்கும் விறல் கெழு வேந்தே” என்ற முழுத்தொடரும், “செறிந்த போரைச் செய்ய, வலியொடு மேற்கொள்ளும் முயற்சியும், வெண்குடையும், விளங்கும் வெற்றிநிறை வேந்தே!” என்றபொருள் கொள்ளும்.
”பொங்கு நீர் உடுத்த இம் மலர்தலை யுலகத்து” = பொங்கிவரும் நீரை ஆடையாக உடுத்த, இம் மலரும், உலகத்தில்
தொன்று= ஊழ்; துப்பு= ஊக்கம்; ”நின் தலைவந்த இருவரை நினைப்பின் தொன்றுறை துப்பின் நின் பகைஞரும் அல்லர்” = நின்முன்னால் வந்த இருவரையும் நினைத்தால், ஊழுறையும் ஊக்கத்தில் (அவர்) உன் பகைவரும் அல்லர்.
அல்நை>அன்னை = அல்லாதவன். அல்நை இன்னொரு ஈற்றில் அல்நன்>அன்னன் என்றாகிப் பின் வடபுலம்போய் அன்யன் (=அன்னியன்) என்றாகும். நாமும் மூலந்தெரியாது இச்சொல்லை வடசொல் என்போம். ”அமர் வெங் காட்சியொடு மாறு எதிர்பு எழுந்தவர் நினையுங் காலை நீயும் மற்று அவர்க்கு அ(ன்)னையை அல்லை” = போரில் வெம்பார்வையில், மாறியெதிர்த்து எழுந்தவரை நினையும் போது, அவர்க்கு நீயும் அல்லாதவன் அல்லன்.
”அடுமான் தோன்றல்!” என்ற விளியைச் சற்று அலசிப் புரிந்துகொள்ள வேண்டும். பொதுவாகக் காளை, குதிரை, ஒட்டகம், யானை போன்றவற்றைப் போர்க்களத்தில் இறக்குவர். காளையும் ஒட்டகமும் பார விலங்களாகும். பாய்மா என்னுங் குதிரை, மாந்தரின் விரைவு நகர்ச்சிக்கும், பாய்ச்சலுக்கும் பயன்படும். யானையோ, போரில் இன்னொரு யானையோடு மோதவும், மாந்தரை மிதிக்கவும், மதில், கோட்டை, கதவு ஆகியவற்றை மோதவும் பயன் படும். அதனாற்றான் அதைக் கொல்களிறு என்றார். கொல்லுதலை அடுதல் என்றுஞ் சொல்லலாம். அடுமா/அடுமான் என்பது யானையையே குறிக்கும். அடுமான் தோன்றல் ”யானைமேற் காட்சியளிக்கும் தலைவனே” என்று பொருள்கொள்ளும்.
இசை= புகழ்; உயர்ந்தோர் உலகம்= மேலோர் உலகம். மாந்தவுலகிற்கு மேல் இருக்கும் உலகம் என்றதொன்மம் நாவலந் தண்பொழில் எங்கும் இருந்தது. தமிழரும் அதற்கு விதிவிலக்கல்லர். தாயம்= தாய் வழி யுரிமை என்பது மாந்தரின் தொடக்ககாலப் பழக்கத்தை உணர்த்துகிறது. தந்தையை இனங் காண முடியாத மாந்தர்குழு தாயை எளிதில் அடையாளங்கண்டு குழுத் தலைவியாக்கியது. தாய்வழி உரிமை முதலில் மகள்களுக்கே வந்தது. தாய்வழிக் குமுகாயம் பின்னால்மாறி, அதிகாரம், சொத்து, தனியுடைமை என்று ஆணாதிக்கம் பார்க்கத்தொடங்கித் தந்தைவழிக் குமுகாயம் ஏற்பட்ட பின்னும் தாயமென்ற சொல் உரிமைப்பொருளை எச்சமாய் உணர்த்தியது.
”பரந்து படு நல் இசை எய்தி மற்று நீ உயர்ந்தோர் உலகம் எய்திப் பின்னும் ஒழித்த தாயம் அவர்க்கு உரித்தன்றே” = பரந்துபடும் நற்புகழை எய்தி, நீ மேலோர் உலகம் எய்திப் பின் ஒழித்த அரசுரிமை அவர்க்கு உரியதல்லவா?
இரண்டாம் பகுதி:
”அதனால், அன்னது ஆதலும் அறிவோய்! இசை வெய்யோயேநன்றும் இன்னும் கேண்மதி” = அதனால் அப்படியாவதையும் நீ அறிவாய், புகழை விரும்புபவனே! நல்லதாகவும் இன்னும் கேட்பாயாக!
”நின்ற துப்பொடு நின் குறித்து எழுந்த எண்ணில் காட்சி இளையோர் தோற்பின் நின் பெருஞ் செல்வம் யார்க்கு எஞ்சுவையே” - நிலைத்த ஊக்கத்தோடு, உன்னோடு போர்செய்ய எழுந்த, உன்னை மதியாத, இளையோர் தோற்றால், உன் பெருஞ்செல்வம் யாருக்கு எஞ்சும்? வெஞ்செல்வன் என்பது வெங்கதிர்ச்செல்வனாகிய சூரியனுக்குரிய சுருக்கப் பெயர் போலும் ”அமர் வெஞ் செல்வ!” - போரிற் சூரியனே என்ற விளி சோழருக்கு உரியது போலும். சோழர் என்ற சொல்லே சூரிய குலத்தைக் குறிப்பது தானே? ”நீ அவர்க்கு உலையின் இகழுநர் உவப்பப் பழி எஞ்சுவையே” - நீ அவருக்குக் குறைந்து அழிந்தால், இகழுநர் உவக்கும் படி பழி எஞ்சுமே?
மூன்றாம் பகுதி:
”அதனால், ஒழிகதில் அத்தை நின் மறனே!” = அதனால் உன்மறம் ஒழியட்டும். (தில், அத்தை என்பன பொருளில்லா இடைநிரப்புஞ் சொற்கள்.)
”வல் விரைந்து எழுமதி!” = வலிதாய் விரைந்து எழுவாயாக!
”வாழ்க நின் உள்ளம்!” = வாழ்க நின் உள்ளம்!
”அழிந்தோர்க்கு ஏமம் ஆகும் நின் தாள்நிழல் மயங்காது செய்தல் வேண்டுமால்” = அழிந்தவர்க்கு ஏமமாகும் நின் அடிநிழல் கலங்காது இருக்கவேண்டுமெனில்,
அடுத்த இரு வரிகளுக்குப் பொருள் சொல்லுமுன், ”அரும்பெறல் உலகம்” பற்றிப் புரிந்துகொள்ளவேண்டும். (இப்படலின் சிறப்பே அரும்பெறல் உலகம் பற்றிச் சொல்வது தான். அற்றுவிகம், செயினம், புத்தம் ஆகிய மூன்றுஞ் சேர்ந்த) சமணக்கருத்தின் படி உயர்ந்தோர் உலகமும் அரும்பெறல் உலகமும் வேறு வேறானவை. சமணப் புரிதலில் மாந்தர் வாழும் உலகம் நடுவண் உலகமாகும் (பாகதத்தில் இதை மத்ய லோகமென்பர்.) இதற்கு மேலிருப்பது உயர்ந்தோர் உலகம் (ஊர்த்வ லோகம்). நடுவண் உலகிற்குக் கீழிருப்பது பாதல உலகம் (அதோ லோகம்). [இந் 3 உலகங்களை 7 உலகங்களாய் வேறுசில நெறிகள் உருவகிக்கும்.] உயர்ந்தோர் உலகிற்கும் மேலிருப்பது அரும்பெறல் உலகமாகும் (இதைச் சித்த லோகமென்று சமண சமயங்கள் உருவக்கிக்கும்) கீழுள்ள 3 உலகத்திலும் இருப்பவர் மீளவும் பிறந்துகொண்டிருக்கும் போது, அரும்பெறல் உலகத்திலிருப்போர் மீண்டும் பிறப்பதேயில்லை. தவிர, எல்லோரும் அரும்பெறல் உலகிற்குள் போவதுமில்லை. அரிதாகவே சிலர் போவதால் அது அரும்பெறல் உலகமாயிற்று. அற்றுவிகம், செயினம், புத்தம் ஆகிய 3 நெறிகளும் அரும்பெறல் உலகுள் போகும் வழிமுறை பற்றிச் சிச் சிறிதாய் வேறுபடும்.
உயிர்களின் பிறவித்தொடர்ச்சியைத் தன்முனைப்பால் (initiative) மட்டுமே அற்றுவிக்க முடியுமென்று அற்றுவிகர் நம்புவதில்லை. ஆனாற் தொடக்கக் கட்டியங்களும் (initial conditions), செலுத்தத்தின் வரம்புக் கட்டியங்களும் (boundary conditions), அடிப்படைத் துனைவியக்கங்களும் (basic dynamics; துனைவு =விரைவு) பொறுத்தே உயிர்களின் இற்றைச் செலுத்தமும், பிறவித் தொடர்ச்சியும் நடக்கும் என்றும் அற்றுவிகர் நம்புவர். இருவகைக் கட்டியங்களையும், செலுத்தப் புறமதிப்புக்களையும் (process parameters) மாற்றிச் சரிபண்ணியே செலுத்தத்தையும், பிறவித்தொடச்சியையும் வேண்டும் வழியில் நடத்த முடியுமென்றும் அவர் எண்ணுவார். அப்படிநடத்திய உயிர்களே முடிவிற் பிறவாமைப் பேற்றை (வீடுபேற்றை) அடைகின்றன என்று அற்றுவிகம் வழிகாட்டும்.
ஓருயிர் இந்தப் பிறவித்தொடர்ச்சியின் வழிசெய்யும் வினைகளைச் (தீவினை, நல்வினை = பாப, புண்ணியம்) ”நால்வகை யாமத்தின்” வழியே கட்டுறுத்தி இடைவிடாது பாடுபட்டு அருகநிலை அடைந்து சித்தராகி அரும்பெறல் உலகிற்குப் போவதே வீடுபேற்றுக்கு வழியென்பது செயினப்புரிதலாகும். ஆசையே துன்பத்திற்குக் காரணம்; ஆசையை அறுத்தவரே பிறவித் தொடர்ச்சியை அறுத்து அரும்பெறல் உலகிற்குப் போவாரென்பது புத்தநெறிப் புரிதலாகும். செயினப் புத்தநெறி விளக்கங்கள் அறிவதற்கு விரிவான பொத்தகங்கள் இன்றிருக்கின்றன. ஆனால் அற்றுவிகம் பற்றியறிய நூல்கள் ஒன்றிரண்டே உள்ளன. அவையும் ஆய்வு நூல்களாகவே உள்ளன. இந்த ஒருபாட்டின் உரையில் அற்றுவிகம்பற்றி முழுதுஞ் சொல்லிவிடமுடியாது. வேறொரு வாய்ப்பில் முடிந்தவரை அதைச்செய்ய முயல்வேன். இப் பாட்டின் கடைசிப்பகுதிக்கு வருவோம்.
”வானோர் அரும்பெறல் உலகத்து ஆன்றவர் விதும்புறு விருப்பொடு விருந்து எதிர் கொளற்கே நன்றே!” = வானிலுள்ள அரும்பெறல் உலகத்தின் ஆன்றோர் விரைந்த விருப்பத்தொடு தரும் விருந்தை எதிர்கொள்ளுவதே நன்று - என்று புலவர் சொல்லுகிறார்.
பாட்டின் மொத்தப்பொருள்:
---------------------------------
செறிந்த போரைச் செய்ய, வலியொடு மேற்கொள்ளும் முயற்சியும், வெண் குடையும், விளங்கும் வெற்றிநிறை வேந்தே! பொங்கிவரும் நீரை ஆடையாக உடுத்த, இம் மலரும், உலகத்தில், நின் முன்னால் வந்த இருவரையும் நினைத்தால், ஊழுறையும் ஊக்கத்தில் (அவர்) உன் பகைவரும் அல்லர். போரில் வெம்பார்வையோடு, மாறியெதிர்த்து எழுந்தவரை நினையும் பொழுது, நீயும் அவருக்கு அல்லாதவனல்ல. யானைமேற் காட்சியளிக்கும் தலைவனே! பரந்துபடும் நற்புகழை எய்தி, நீ மேலோர் உலகம் எய்திப் பின் ஒழித்த அரசுரிமை அவர்க்கு உரியதல்லவா?
அதனால், அப்படியாவதையும் நீ அறிவாய். புகழை விரும்புபவனே! நல்லதாக இன்னும் கேட்பாயாக! நினைத்த ஊக்கத்தோடு உன்னோடு போர்செய்ய எழுந்த, உன்னை மதியாத, இளையோர் தோற்றால், உன் பெருஞ்செல்வம் யாருக்கு எஞ்சும்? போர்ச்சூரியனே! நீ அவரிடங் குறைந்து அழிந்தால் இகழுநர் உவக்கும்படி உனக்குப் பழி எஞ்சுமே?
அதனால் உன்மறம் ஒழியட்டும் வலிந்து விரைந்து எழுவாயாக! வாழ்க நின் உள்ளம்! அழிந்தவர்க்கு ஏமமாகும் நின் அடிநிழல் கலங்காது இருக்கவேண்டும் எனில் வானிலுள்ள அரும்பெறல் உலகத்தின் ஆன்றோர் விரைந்த விருப்பத்தொடு தரும் விருந்தை எதிர்கொள்ளுவதே நன்று
-------------------------------
நீ உன் மக்களோடு சண்டைபோட்டு என்னவாகப் போகிறது? உன் இற்றை வாழ்வு முடிந்தது. இனிப் பிறவாமை நாடி அரும்பெறல் உலகத்தின் அழைப்பை எதிர்கொள்ளுவதே நல்லதெ”ன்று புல்லாற்றூர் எயிற்றியனார் பெருங்கோக்கிள்ளிக்கு உணர்த்திவிட்டார். அதற்கான வழிகளில் ஒன்று வடக்கிருத்தலாகும். அடுத்த பாடலில் அரசனின் பின்னூட்டைப் பார்ப்போம்.
அன்புடன்,
இராம.கி.

No comments:
Post a Comment