Monday, October 08, 2018

உண்ணா நோன்பும் வடக்கிருத்தலும் - 3

சென்ற பகுதியில் வெண்ணிக் குயத்தியார் பற்றியெழுந்த சில சிந்தனைகளைச் சொல்ல மறந்தேன். வெண்ணியென்பது தஞ்சையிலிருந்து நாகை போகும் வழியில் நீடாமங்கலத்திற்கு அருகிலுள்ள கோயில் வெண்ணியைக் குறிக்கும். வெண்ணிக் குயத்தியார் பெயரும், "வடக்கிருந்த சேரலாதன் நல்லன், உலகப் புகழ் எய்துவான்" எனவோதும் பாட்டும் நமக்குள் அற்றுவிகச் சிந்தனையைக் கிளறுகின்றன. வெண்ணிக் குயத்தியார் ஒருவேளை அற்றுவிகரோ என்றும் தோன்றுகிறது. ”வடக்கிருந்தான்” என வெறுமே சொல்லிப்போவது பட்டகையைச் (fact) சொல்வதாகும். ”அது நல்லதெ”ன்பது ஆற்றுவமான முன்னிகை (active comment). அதை எல்லோருஞ் சொல்லிவிட முடியாது. இவர் போன்ற நெறிவிழைச் சிந்தனையாளர் அற்றுவிகராகவோ, செயினராகவோ இல்லெனில் இப்படிச் சொல்லத் தேவை இல்லை. அதோடு இச்சொல் மட்டும் இல்லெனில் வெண்ணிக் குயத்தியார் பாட்டில் எந்த விதப்புமில்லை. 

”அற்றுவிகம்” பற்றிய தொடரெழுதுவதாய் நான்சொல்லி நெடுநாட்களாகின. என்றதைத் தொடங்குவேனோ? அறியேன். அதற்குமோர் ஊழுண்டல்லவா? :-)))) அற்றுவிகமே ஆசீவிகத்தின் மூலத்தமிழ்ச் சொல்லென்று சில மாதங்களாய் எண்ணுகிறேன். அற்றுவிகம், செயினம், புத்தம் ஆகிய சமண நெறிகள் பிறவிச்சுற்றை நம்பியவை. அத்தகைய அறியொணாளருக்குக் (agnostics bordering atheists) கடவுட் கருத்தீடு என்பது பெரிதில்லை. ஆனால் ஆன்மாவை நம்புவார். ஆன்மா பல்வேறு உடம்புகளில் மாறி மாறித் தொடர்ந்து பிறப்பது பிறவிச்சுற்றாகும். 84 இலக்கம் பிறவிகள் என்ற தொன்மமும் அவரிடையே உண்டு. (இதே தொன்மத்தைச் சிவநெறியும் கொண்டதாய்த் திருமந்திரம் சொல்லும்.) புத்தத்தின் ஒரு பகுதி பிறவிச் சுற்றைப் பின்னால் நம்பாமற் போனது.

பிறவிச் சுற்றறுத்த வீடுபேறே ஆன்மத் தேடலாய்ச் சமணநெறிகள் நவிலும். பிறவிச்சுற்றை அற்றுவிக்கும் நெறி அற்றுவிகமாகும் (அற்றுவித்தல் = இல்லாது போகச்செய்தல்). தமிழ்ப்பேச்சு வழக்கில் இது அத்துவிகமாகி, பாகத அதிரொலியால் அஜ்ஜுவிகமாகி, முதலசை நீண்டு ஆஜிவிகமானது போலும். பாகத வழக்கே பின்னால் தமிழகத்தில் ஊன்றி, தமிழ்மூலம் மறைந்தது போலும். ஆசீவிகத்தை ஆசீவகமாக்கி, ஆசு + ஈவு + அகம் என்று இன்று சிலர் பிரிப்பதை நான் ஏற்பதில்லை. பின்னொருநாள் விரிந்து விளக்குவேன். பிறவிச்சுற்றின் விடையை அற்றுவிகம் ஒருமாதிரி அணுகின், செயினம் இன்னொரு மாதிரி அணுகும். அற்றுவிகத்திற்கும் செயினத்திற்கும் வேறுபாடு உரைப்பது வெகுதொலைவு விலக்கும். எனவே தவிர்க்கிறேன். (சென்னைக் கொற்றலையாறு கொத்தலையாறாகி கொஜத்தலை யாறாகிப் பின் கொசத்தலையாறாகும். மீத்திருத்தத்தில் கொசஸ்தலையாறு என்பாரும் உண்டு. றகரம் இடை பயிலும் சொற்கள் பேச்சு வழக்கில் இப்படி மாறுவது தமிழக வடக்கிற் பெரிதும் நடந்தன.) 

பொதுவாக ஐயனார் கோயில்களில் (இம்மரபுகளை அற்றுவிகக் கண்ணோட்டத்தில் ஆய்வாளர் பார்க்கத் தொடங்கியுள்ளார்.) பெரும்பாலும் குயவர் குலத்தாரே பூசாரி, அறிவரெனும் வேளகாரராவர். (வேளகாரர்= வேள்கிறவர்= வேண்டுகிறவர், ”வேளகாரர்” போன்றே ஆனால் வேதநெறி சார்ந்த வேள்தல்,வேள்வி, வேள்தம் செய்வோர் இன்னொரு வகை. வேளும் பார்ப்பார், வேளாப் பார்ப்பார் ஆகிய சொற்களை ஒருங்கே பார்க்கவேண்டும். இத்தனை வகைப்பாடிருக்கும் வினைக்கருத்துச் சங்கதத்திலிருந்து கடன் பட்டதாக முடியாது.) அற்றுவிகத் தோற்றுநரில் ஒருவரான மற்கலி கோசாலர் < மற்கலி கோசாளர், குயவரிடையே பெரிதும் தங்குவாரென்றும், குயவர் அற்றுவிகத்திற்கு ஆதரவென்றும் ஏ.எல் பாசத்தின் ”History and doctrines of the Ajivikas" சொல்லும்.

மற்கலி கோசாளர், மகாவீரர், புத்தர் ஆகியோரின் சமகாலக் கதைகளை வைத்து அற்றுவிக நெறி என்பது மகதத்திற் தோன்றியதென்றே பேரா.பாசத்தையுஞ் சேர்த்துப் பலர் நினைக்கிறார். ஆனால் ஊழ் (நியதி), சூழ்நிலை (சங்கதி) இயல்பு (சுபாவம்) என்ற ஆசீவிகத்தின் 3 அடிப்படைகளைச் சொல்லிப் பல சங்கப்பாடல்கள் அற்றுவிக உள்ளடக்கங் காட்டுவதால், இந்நெறி தமிழகத்தில் தோன்றி யிருக்கப் பெரிதும் வாய்ப்புண்டு. ”கோசாளருக்கு” பாகதவிளக்கம் தருவதிலும் ஆய்வாளர் தடுமாறுவர். தமிழ்ப் பேச்சிற் குயவாளர்>குசவாளர்> குசாளர்>கொசாளர்>கோசாளர் திரிவு இயல்பாய் அமையும். (சென்னை மணலிக்கருகே முற்காலத்துக் குயவப்பூர்> குசவப்பூர் இந்நாளில் கொசப்பூர் என்றாகும். குயவு>கோவு என்றும் ஆகும். சங்க இலக்கியத்தில் கலம்செய் கோவே என்பது குயவனைக் குறிப்பது. அது அரசனைக் குறிக்கவில்லை. குயவர் பற்றிய தொடர்பை நான் அற்றுவிகத் தொடரில் தான் விரித்து எழுதவேண்டும்.) இதேபோல ”மற்கலி”க்கும் உகந்த விளக்கம் பாகதத்திற் கிடையாது. ஆனால்,

பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம்பூ முருக்கின் நல்நார் களைந்து
தண்டொடு பிடித்த தாகமண் டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே
எழுதாக் கற்பின் நின்சொ லுள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்து முண்டோ மயலோ இதுவே

என்ற பாண்டிய ஏனாதி நெடுங்கண்ணனாரின் குறுந்தொகை 156 ஆம் பாட்டால்,”தமிழ்த்துறவியரின் கழி மூங்கிலல்ல, முருக்கென்று” புரியும். ஊரெலாம் அலைந்து தம்நெறி பரப்பிய மற்கலி கோசாளர் ஒருவேளை முருக்(குக்)கழி கொண்டவரோ என்ற ஐயம் எனக்குண்டு. இயற்பெயர் தெரியாநிலையில், ”கழி கொண்ட குயவர்” என்பது ஒரு துறவிக்குச் சரியான அடையாளமாகும். ”முருக்கழி குயவாளர்”, ”மற்கலி கோசாளராய்ப்” பாகதத்திலானதோ என்ற ஐயமும் எனக்குண்டு. (கம்பு வைத்த ஏசு கிறித்து Good shepard ஆனாரே அது போல எண்ணிப்பாருங்கள்.) தெற்கே தென்பாண்டி ஊர்களில் களிமண்ணெடுக்கும் இடங்களுக்கருகில் ஐயனார் கோயில்கள் அமைந்து, வேறு கோயில்களில் இல்லாத வழக்கமாய், குதிரை, யானை, தாழிகள், பானைகளெனக் களிமண் பொம்மைகள், கலன்கள் செய்வதாய் நேர்ந்து, பின் செய்து, கோயில் வளாகத்தில் நிறுத்தி, படையலோடு வழிபடுவது குயவருக்கும் ஐயனாருக்கும் இடையேயிருந்த ஆழ்ந்த தொடர்பைக் காட்டுகின்றன.

பெருஞ் சேரலாதனை வெண்ணிக் குயத்தியார் நல்லனென்பது ஒருவித ஓரிமை மரபைக் குறிக்கிறது. பொதுவாக தமிழர் குமுகாயத்தில் குணங்களை வைத்து நல்லனென்பதில்லை; செயல்களை வைத்தே சொல்கிறோம். புறப்புண் நாணி வடக்கிருந்தது புலவர் நோக்கில் ஏன் நல்ல செயல்? தமிழரிற் சிலரிதை நல்லதென்று எண்ணினாரோ? பின்னால் இத்தருக்கத்தை மேலும் பார்ப்போம். பெருஞ்சேரலாதன் வடக்கிருந்தது 2 புறப்பாடல்களிலன்றி, மாமூலனாரின் அகநானூற்று 55 ஆம் பாடலிலும் பேசப்படுகிறது. அதன் திணை, பாலையாகும். புணர்ந்துடன் போன தலைமகட்கு இரங்கிய தாய் தெருட்டும் அயலாட்டியர்க்கு உரைத்தது அதன் துறையாகும். அயலாட்டியர் என்பது அயலகப் பெண்டிரைக் குறிக்கும். (neighbourhood women). துறையை இன்னும் விளக்கத்தோடு சொன்னால், களவொழுக்கம் நாடிய தலைவி தம் உறவினர் அறியாது தலைவனுடன் சென்றது கேட்டு வருந்தும் தாயை, அயல் வீட்டுப் பெண்டிர் ஆற்றுவிக்க முனைய, அவரை நோக்கி நற்றாய் கூறியது என்று சொல்லலாம். 

காய்ந்து செலற்கன லிகல்பகத் தெறுதலி
னீந்துகு ருகுருகு மென்றூழ் நீளிடை,
உளிமுக வெம்பர லடிவருத் துறாலின்,
விளிமுறை யறியா வேய்கரி கானம்,
வயக்களிற் றன்ன காளையொ டென்மகள்
கழிந்ததற் கழிந்தன்றோ விலனே யொழிந்தியா
மூதுலைக் குருகி னுள்ளுயிர்த் தசைஇ,
வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு
கண்படை பெறேன், கனவ வொண்படைக்
கரிகால் வளவனொ டுவெண்ணிப் பறந்தலைப்
பொருதுபுண் ணாணிய சேர லாதன்
அழிகள மருங்கின் வாள்வடக் கிருந்தென,
வின்னா வின்னுரை கேட்ட சான்றோ
ரரும்பெற லுலகத் தவனொடு செலீஇயர்,
பெரும்பிறி தாகி யாங்குப் பிரிந்திவண்
காதல் வேண்டியெற் றுறந்து
போதல்செல் லாவென் னுயிரொடு புலந்தே
                           
                              - அகம் 55

படிக்கச் சற்றுக் கடினமான பாட்டு. கூட விளக்கத்திற்காக, பாடற் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப் போட்டு இருபகுதிகளாகக் கீழே கொடுத்திருக்கிறேன்.

காய்ந்துசெலற் கனலி கல்பகத் தெறுதலின்,
ஈந்து குருகு உருகுமென்று நீள் ஊழ் இடை,
உளிமுக வெம்பரல் அடி வருத்துறாலின்,
வயக்களிற்று அன்ன காளையொடு என்மகள்
விளிமுறை அறியா வேய்கரி கானம் கழிந்ததற்கு
ஊதுஉலைக் குருகின் உள்உயிர்த்து, அசைஇ,
வெய்ய நெஞ்சமொடு வேவது போலும்
கனவக் கண்படை பெறேன் 
யாம் ஒழிந்து அழிந்தன்றோ இலனே

ஒண்படைக் கரிகால் வளவனொடு
வெண்ணிப் பறந்தலைப் பொருது
புண் நாணிய சேரலாதன்
அழிகள மருங்கின் வாள்வடக் கிருந்தென,
இன்னா இன்னுரை கேட்ட சான்றோர்
அரும்பெறல் உலகத்து அவனொடு செலீஇயர்,
பெரும்பிறிது ஆகி யாங்கு,
இவண் காதல் வேண்டி,
என் உயிரொடு புலந்தே
என் துறந்து பிரிந்து போதல் செல்லா!

முதற்பகுதி நற்றாயின் சூழலையும், இரண்டாம்பகுதி சேரலாதன் வடக்கு இருந்தது சொல்லி அதனோடொப்பிடும் தேற்றையுங் கொணரும். ஒருசில சொற்பொருள்களையும் விளக்கக் குறிப்புகளையும் பார்ப்போம். பாட்டின் முதற்பகுதியில் முன்னாள் உரையாசிரியர்களோடு ஈரிடங்களில் வேறு படுவேன். படிக்கும்போதே உங்களுக்குப் புரியும்.

கனல் = வெப்பம் (caloric). கனலி = வெப்பந்தருஞ் சூரியன். இந்தச்சொல் நெருப்பையும் குறிப்பதுண்டு. (இக்காலத்தில் calory என்னும் வெப்ப அலகையும் ”கனலி”யாற் குறிக்கிறோம்.) காய்ந்துசெலற் கனலி = சுட்டெரித்துச் செல்லுஞ் சூரியன். பகுதல் = பிரிதல், உடைதல், பிளவுறுதல்; கல்பகுதல் = கல்லுடைதல். மலையின் கல்லுடையும் அளவிற்குச் சூரியன் கொதிக்கிறதாம் உயர்வு நவிற்சி அணி. தெறுதல் என்பதும் சுடுதலைக் குறிக்கிறது. [இற்றை ஆங்கில அறிவியல்நடையிற் ஏராளமாய்ச் சூட்டுச் சொற்களைக் கடன்வாங்கிப் பயன் படுத்துகிறார். பல்வேறு சூட்டுச் சொற்களைக் கொண்ட நாமோ, ”வெம்புதலுக்கு” முன்னும், பின்னும் ஒட்டுச் சேர்த்துக் கூட்டுச்சொல்லாக்கி இற்றைத் தமிழை அசைத்து விடுவோமென்று நம்புகிறோம். நம்மிடை குவிந்து கிடக்கும் சொற்குவையைத் தேடுகிறோமில்லை. தெறுதலிலிருந்து ”தெறும” என்ற சொல்லைப் பெற்று thermal க்கு இணையாக நான் பயின்றவுடன், குய்யோ, முறையோவென்று குதித்தவர் மிகுதி. ”இராம.கி..க்கு வேறு வேலையில்லை. ஆங்கில ஓசையிற் சொற்களைப் படைக்கிறார். அன்னைத்தமிழ் இனி அழுகிச் செத்துப்போகும்” என்றொரு நாசகாரர் சொன்னாலும் சொன்னார்; ”ஆமாமில்லே?” என்கிறார் இன்னொருவர். இப்படி அவதூறுகள் கேட்டுப் புளித்துப்போயிற்று. நானென்ன இல்லாததையா சொல்லிவிட்டேன்? வேண்டுமெனில் மாமூலனாரையும் மற்ற பழந்தமிழ்ப் புலவரையும் கோவியுங்களேன்?]

”ஈந்து குருகு உருகுமென்று ஊழ் நீளிடை” என்ற தொடர் ஆழமானது. ஆனாற் பல உரையாசிரியரும் “குருகிற்கு” நாரை, பறவையென்றே பொருள்கொண்டு ”ஈந்தைத்” தூக்கியெறிந்தோ, அன்றிக் “கடந்து செல்லும்” என்ற பொருள் கொண்டோ தட்டாமாலை சுற்றுகிறார். ”கடந்துசெல்லல் எப்படி?” என்று துருவித் துருவிப் பார்த்தேன். சரியென்று படவில்லை. ஈந்தெனும் ஈச்ச மரத்தைக் காதலனுக்கு உவமையாகவும் சுற்றிப்படருங் குருக்கத்திக் கொடியைக் காதலிக்கு உவமையாகவும் நான் கொள்கிறேன். (சிலம்பின் மாதவியும் குருக்கத்திப் பெயரும், தன்மையுங் கொண்டவளே. காதலியைக் குருகிற்கு ஒப்பிடுவது தமிழ்ப்புலவருக்கு ஆகிவந்த பழக்கமாகும்.) தொண்டைமான் இளந்திரையனைப் பாடும் கடியலூர் உருத்திரங் கண்ணனாரின் பெரும்பாணாற்றுப் படை 375-377 ஆம் வரிகளில் 

குறுங்காற் காஞ்சி சுற்றிய நெடுங்கொடிப்
பாசிலைக் குருகின் புன்புற வரிப்பூ
 
என்ற காட்சி விரியும். இதேபோலக் குருக்கத்திக்கொடி மாமரத்தைச் சுற்றியதாய் காளிதாசனின் சாகுந்தலத்தில் ஓர் உவமை வரும். குருகுக் கொடி காஞ்சியையும், மாமரத்தையுஞ் சுற்ற முடியுமானால், ஈந்தைச் சுற்றத் தயங்குமா, என்ன? பாலை நிலத்தில் முல்லையைச் சேர்ந்த குருக்கத்தியும், பாலையில் நிலைக்கும் வன்மைகொண்ட ஈந்தையும் சேர்த்துச் சொல்வது இயல்பான காட்சியாகும்.

'முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்கு துயர் உறுத்துப்
பாலை என்பதோர் வடிவம் கொள்ளும் '

என்று தானே சிலப்பதிகாரம் 11:64-66 வரிகள் சொல்லுகின்றன? எனவே வெதணம் (climate) சூடேறி முல்லை திரிந்து பாலையாகும் போது, காதலி உருகித் துன்பத்தால் வருத்தம் மேலிடத் துவண்டு விடுவதை நற்றாய் எளிதில் உணரமுடியும். வேனிற்காலத்தில் குருக்கத்தி தன் மலர்களையும், இலைகளையும் நீள உதிர்த்துத் (ஊழ்தல் என்பது உதிர்க்கும் செயலைக் குறிக்கும்) துவண்டு காணும். ஈந்து - குருகு உருகுமென்று நீள் ஊழிடை = ஈந்தைச் சுற்றிய குருகு துவண்டு, பூக்களையும், இலைகளையும் உதிர்க்கும் இடைப்புறத்தில் என்று பொருள்கொள்ளுவதே பொருத்தமாகிறது.

உளிமுக வெம்பரல் என்பது உளிமுகங்கொண்ட வெம்மையான பரல்களைக் குறிக்கும். அடி வருத்துறாலின், = விரவிக்கிடந்த பாலையில் காதலர்களின் அடி வருந்துதலால். வயக்களிறு அன்ன காளையொடு என்மகள் = வலிய யானை போன்ற காளையோடு என்மகள். வேய்கரி கானம் = மூங்கில் கரிந்த காடு; விளிமுறை யறியா = ”யாரை, எப்படிக் கூப்பிட்டு விளிப்பது” என்ற முறை அறியாது; விளிமுறை யறியா வேய்கரி கானம் கழிந்தற்கு = “யாரை எப்படிக் கூப்பிட்டு விளிப்பதென்ற முறையறியா அளவிற்கு மூங்கில் கரிந்த காட்டைக் கடந்ததற்கு; இந்த விளிமுறை யறியா என்பதற்கு ”இறப்பதற்கு இடமறியா” என்றுஞ் சில உரையாசிரியர் பொருள்கூறுவர். விளிதல் என்பது இறத்தலைக் குறித்தாலும், முறை என்று வருவதால் இறப்பதற்கு முறை எனும்போது பொருத்தமில்லாது போகிறது.

ஊதுஉலைக் குருகின் உள்உயிர்த்து, அசைஇ, = ஊதும் துருத்தி போல உள்ளுயிர்த்து, அசைந்து;
வெய்ய நெஞ்சமொடு வேவது போலும் = வெதுவெதிர்த்த நெஞ்சமொடு வேகுவது போல;
கனவக் கண்படை பெறேன் = கனவோடு கண் துயிலேனாய்; யாம் ஒழிந்து அழிந்தன்றோ இலனே = நான் ஒழிந்து அழிந்துவிடப் போவதில்லை.

இனி இரண்டாம் பகுதிக்குப் போவோம்.

ஒண்படைக் கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப் பொருது = ஒளிரும் படை கொண்ட கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலையிற் பொருது புண் நாணிய சேரலாதன் அழிகள மருங்கின் வாள்வடக் கிருந்தென, = புறமுதுகில் ஏற்பட்ட புண்ணை நாணிப் பெருஞ்சேரலாதன் அழியும் போர்க்கள மருங்கில் வாளோடு வடக்கிருந்தான் என்னும்

”இன்னா இன்னுரை” என்பது முரணியக்கங் (dialectics) காட்டும் வழக்கு. “இன்னாதம்ம இவ்வுலகம்; இனிய காண்ப இதன் இயல்புணர்ந்தோரே” என்று பக்குடுக்கை நன்கணியார் புறம் 194 இல் சொல்வாரே, நினைவிற்கு வருகிறதா?.அதன் பொருள் “முழுக்கப் பார்த்தால் இவ்வுலகம் துன்பமானது;. இதன் இயல்பை உணர்ந்தோர் ஊடெழும் இனியவற்றைக் கண்டுகொள்வார்” என்ற பொதிவான பார்வையாகும் (positive outlook). அதாவது ”எல்லாமே முன்னால் விதிக்கப்பட்டது; ((every thing is pre-ordained) உங்கள் கையில் ஒன்றும் இல்லை” என்ற நியதிப்பார்வை மட்டுமே அற்றுவிகமல்ல. அதனூடே இனியவை காணும் இயல்பையும் அது விழையும் சூழ்நிலையையும் கண்டு வாழ்க்கையைத் தொடர்வதும் அற்றுவிகமாகும்.

”இன்னா இன்னுரை” என்பது வடக்கிருந்தோரைக் காண்போருக்கு இன்னாமையையும், வடக்கிருந்தோருக்கு அவர் மனம் நிறைக்கும் இனிமையும் தரும் உரையாகும். எனவே பெருஞ்சேரலாதன் வடக்கிருந்த போது, ”தான் ஏன் வடக்கிருக்கிறான்?” என்றோர் இன்னா இன்னுரையுஞ் செய்திருக்கிறான் என்பது புலப்படுகிறது. அதைக் கூடியிருந்த சான்றோருங் கேட்டிருக்கிறார். மொத்தத்தில் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல இம்முரணியக்கம் வெளிப்படுகிறது. ”இன்னா இன்னுரை” என்ற சொல்லைப் பயின்ற மாமூலனாருக்கும் அற்றுவிக மெய்யியல் தெரிந்திருக்க வேண்டும். வேறு எங்கெலாம் மாமூலனார் அற்றுவிகத்தை வெளிப்படுத்தினார் என்பது சுவையான ஆய்வாகும்.

”அரும்பெறல் உலகத்து அவனொடு செலீஇயர் பெரும்பிறிது ஆகி யாங்கு” என்னும் தொடர் பெரும் வியப்பை அளிக்கிறது. பொதுவாக அற்றுவிகத்திலும், செயினத்திலும் ஒருவிதக் காயவியலுண்டு. [cosmology; அதைப்பற்றி விவரித்தால் செய்திகள் பெருகும் என்று தவிர்க்கிறேன்.] பிறப்பறுத்தவர் எல்லோரும் மேலே ”அரும்பெறல் உலகத்திற்குப்” போவதாகக் கொள்ளுவர். (இதை அறிவர் உலகம் = ”சித்த லோகம்” என்றுஞ் சொல்லுவர்.) இந்த அரும்பெறல் உலகம் என்ற கருத்தீடு அப்படியே சமணக் கருத்தீடு என்பதிற் சற்றும் ஐயமில்லை. இந்த அரும்பெறல் உலகத்திற்கு பெருஞ்சேரலாதன் மட்டும் போவதாய் மாமூலனார் சொல்லவில்லை. இன்னும் பலர் செல்லப் போகிறார். அப்படியானால் என்ன பொருள்? பெருஞ்சேரலாதனோடு பலரும் வடக்கிருந்தனர் என்றாகிறது.   

பெரும்பிறிது என்பது ஒருவிதமான கலைச்சொல். இரண்டு நண்பர்கள் உரையாடுகிறார். இன்னதென்று புரியாதவொன்றைப் பற்றி ஒருவர் கேட்கிறார்: ”அது என்னங்க?” விளக்கத் தெரியாத, சொல் கிடைக்காத, இரண்டாமவர் சொல்கிறார்.”உங்களுக்குத் தெரியாதுங்க, அது வேறேங்க; முற்றிலும் வேறே” என்று பூடகமாய்ச் சொல்லுகிறார். Something different. இறப்பு என்பதை உயிரோடு இருக்கும் மாந்தர் என்னவென்று சொல்ல முடியும்? ”நீண்ட துயில்” எனலாம், “பெரிதான வேறு” எனலாம். “நினைக்க முடியாதது” என்று சொல்லலாம். எப்படி விளக்கினாலும் விவரிக்க முடியாதது இறப்பாகும். “பெரும்பிறிது” என்பது ”பெரிதான வேறு” என்ற பொருள் கொள்ளும். அரும்பெறல் உலகத்து அவனொடு செலீஇயர் பெரும்பிறிது ஆகி யாங்கு = அறிவர் உலகத்திற்கு அவனோடு செல்வோர் இறப்பான பொழுதில்   

இவண் காதல் வேண்டி என் உயிரொடு புலந்தே என் துறந்து பிரிந்து போதல் செல்லா! = இங்கே (அவள்மேலுள்ள) ஆசையால் உயிரோடு புலந்து எனைவிட்டுப் பிரிவது இனி நடக்காது. (”மகள் போய்விட்டாள்; இனி ஆகப் போவதொன்றுமில்லை. கவலைப்பட்டு என்னுயிரைப் பிரியமாட்டேன்” என்கிறாள் நற்றாய்.)

இப்பொழுது முழுப்பொருளுக்கும் வருவோம்.
------------------------------------------
காய்ந்துசெல்லும் சூரியன் கல்லுடைக்கும்படி சுட,
ஈந்தைச் சுற்றிய குருகு துவண்டு தன் பூக்களையும், இலைகளையும் உதிர்க்கும் இடைப்புறத்தில்,
உளிமுகங் கொண்ட சூடான பரல்கள் விரவிய பாலையில்,
தம் அடி வருந்த.
வலிமையான யானையைப் போன்ற காளையோடு என்மகள்
“யாரை எப்படி விளிப்பதெ”ன்ற முறையறியா அளவிற்கு
மூங்கில் கரிந்த காட்டைக் கடந்ததற்கு,
ஊதுந் துருத்திபோல் உள்ளுயிர்த்து, அசைந்து,
வெதுவெதிர்த்த நெஞ்சத்தோடு வேகுவது போல;
கனவோடு கண் துயிலேனாய்
நான் ஒழிந்து அழியப் போவதில்லை.

ஒளிரும் படைகொண்ட கரிகால் வளவனொடு,
வெண்ணிப் பறந்தலையிற் பொருது,
தன் புறமுதுகில் ஏற்பட்ட புண்ணை நாணிப்
பெருஞ்சேரலாதன் அழியும் போர்க்கள மருங்கில் வாளோடு வடக்கிருந்தான் என்னும் 
”இன்னா இன்னுரையைக்” கேட்ட சான்றோரில்
அரும்பெறல் உலகத்து அவனோடு செல்பவர் இறப்பான பொழுதில்
இங்கே (அவள் மேலுள்ள) ஆசையால் உயிரோடு புலந்து
எனைவிட்டுப் பிரிவது இனி நடக்காது.
-------------------------------------

பெருஞ்சேரலாதனை விடுத்து உறையூரைச் சேர்ந்த கோப்பெருஞ் சோழனைப் பற்றிய அடுத்த பாட்டிற்கு நகர்வோம். உறையூரும் அற்றுவிகம் ஊன்றியிருந்த இடம் தான். 

அன்புடன்,
இராம.கி.

No comments: