Friday, October 05, 2018

Forum

தாளிகைச்சொற்கள் பற்றிய என் வலைப்பதிவு இடுகையின் பின்னூட்டாக ஒரு நண்பர் forum என்பதற்கு மன்றம் என்பதைக் காட்டிலும் வேறு சொற்கள் உண்டா? என்று கேட்டிருந்தார். (முல்>(மல்)>மன்>மன்று>மன்றம் என்று சொல்வளர்ச்சி நீண்டு அவை அல்லது தொகுதிப் பொருளைச் சுட்டும். தொகுதி என்பது வெளியில் இருக்கலாம், ஒரு கட்டடத்தின் உள்ளிருக்கலாம். பூதிகமாய் இருக்கலாம், பூதிகமல்லாது கருத்துப்புலத்தில் இருக்கலாம்; நேரடியாக இருக்கலாம், மறைமுகமாக இருக்கலாம். இப்படி விரியும். மன்று என்பது தமிழிற் பொதுமையான சொல்; விதப்பான சொல்லன்று. 

மன்றம் என்பது association, assembly போன்றவற்றிற்கும் வேறிடங்களிற் பயன் படுவதால் அதையே forum என்பதற்கும் பயன்படுத்துவதில் சிக்கல் எழாதா? - என்று எண்ணிச் சொlல் துல்லியம் வேண்டிக் கேட்டாரோ, என்னவோ? எப்பொழுதும் சொல் துல்லியம் தேடிப் பார்க்கும் ஆளான எனக்கு, இருப்பதை அள்ளித் தெளித்து பூசி மெழுகும் வேலையில் பெரும்பாலும் இசைவு கிடையாது.)
 
நானும் forum என்பதற்கு மன்றம் என்ற சொல் பல இடங்களிற் புழங்குவதைப் பார்த்திருக்கிறேன். forum hub என்பதை மன்ற மையம் என்றும் எழுதுவார்கள். (இணையத்தில் ஒரு காலம் பலரும் உலவிக் கொண்டிருந்த இடம் மன்ற மையம் என்பதாகும். நானும் அங்கு பெரிதாகப் பங்களித்திருக்கிறேன். இப்பொழுது வெகு அரிதாகவே அங்கு போய்ப் பார்க்கிறேன். அத் தளம் என்னவாயிற்று என்று பார்க்கவேண்டும்.) மன்றம் என்னும் பொதுமைச் சொல்லைக் காட்டிலும் விதப்பான இன்னும் மரபுசார்ந்த சொல்லைப் பரிந்துரைக்க முடியும். ஆனால் எத்தனை பேர் அதை எடுத்துக் கொள்வர் என்ற தயக்கமுண்டு.  ஏதோவொரு காரணம் பற்றி ஒரு சொல் பழக்கமாகிவிட்டால் அதைப் பின்னால் மாற்றுவது தமிழ்ச் சூழலிற் கடினமாகி விடுகிறது. இந்தப் பேச்சு/எழுத்துப் பழக்கமே நமக்குத் தடையாகிப் போகும். [அருவியிருக்க நீர்வீழ்ச்சியை நம்மிற் பலர் இற்றைக் காலத்திற் பயன்படுத்துகிறோமே; நினைவுக்கு வருகிறதா? அருவியை அங்கெல்லாம் எழுத நம்மில் எத்தனை பேர் அணியமாகிறோம்? தமிழ்நடை சிறிது சிறிதாகக் கடினப்பட்டு வருகிறது; சுற்றி வளைத்து ஆகிறது. சங்கத் தமிழின் எளிமையை மறந்து பலக்கிய (coplex) சொற்களையும் சொற்றொடர்களையும் இப்பொழுது கையாண்டு வருகிறோம்.]

இப்படித்தான் director க்கு இணையாய் இயக்குநர் என்று அள்ளித் தெளித்த கோலமாய் 1967க்கு அப்புறம் பேராயத்தின் ஆட்சியிலிருந்து தி.மு.க. ஆட்சி வந்த போது எல்லா இடத்திலும் தமிழ்நாட்டிற் குறித்தார். அதே பொழுது operator என்பதற்கும் இயக்குபவர் என்று சொன்னார். இந்த இரட்டைப் பழக்கத்தால், director க்கும் operator க்கும் இடையே புரிதற் குழப்பம் இருந்தது. எண்ணிப் பார்த்தால் இருவரும் ஒன்றா? இதற்கு மாற்றாகச் சொல் துல்லியம் வேண்டி, 1969/70 களில் கோவை நுட்பியற் கல்லூரியில் ”இயக்குநர் என்பதை operator க்கு வைத்துக் கொண்டு  director க்கு நெறியாளர் (நெறியை ஆள்பவர்) என்று சொல்லலாம்” என்று எங்களிற் பலரும் உரைத்தோம். 43 ஆண்டுகள் கழித்து உன்னித்துப் பார்த்தால், நெறியாளர் என்பது அங்கொன்றும் இங்கொன்றுமாய்த் தான் இன்னும் புழங்குகிறது. இயக்குநர் என்ற தப்பான வழக்கே director க்கு இணையாகப் பெரும்பான்மை புழங்கிக் கொண்டுள்ளது. என்ன சொல்வது? நம்மைச் சுற்றிலும் உள்ள மொழிப் பயன்பாடு விந்தை யானது. அது உங்களைக் கேட்டுக் கொண்டோ, என்னைக் கேட்டுக் கொண்டோ நடப்பதல்ல.

[இன்னொன்றும் நினைவிற்கு வருகிறது. இயல்பியல் என்பதை physics க்கு இணையாகச் சொன்னோம். அது எங்கோ தப்பாகி இயற்பியல் என்று மாறுதல் அடைந்து இன்று பெருவழக்காகிப் போனது. இத்தனைக்கும் இயற்பு என்ற சொல்லே தமிழிற் கிடையாது. (இயல் எனும் பகுதியோடு பு என்ற ஈற்றை யொட்டினால் இரண்டு விதச் சொற்கள் எப்படி எழும்பும்? தமிழிலக்கணம் ஒன்றைத் தானே சரியென்று சொல்லும்?) தமிழாய்ந்தோர் யாரும் இப் பயன்பாட்டில் ஏதுங் கேட்காமலுள்ளார். பலநேரம் எச்சொல் நிலைக்கும்? எது மறையும்? - என்றுரைக்கவே முடிவதில்லை. என்னளவில் நான் மாறிக் கொள்வதே நல்லதென்று அமைகிறேன். இப்பொழுதெல்லாம் இயல்பியலைப் பயன்படுத்துவதேயில்லை. இயற்பியல் என்பது தவறு என்று ஆனதால் அதையும் எழுதுவதில்லை. பூதியல் என்று புதுச்சொல் படைத்து physics க்கு இணையாக எழுதுகிறேன். இந்தச் சொல்லாவது சரியான முறையில் ஏற்கப் படுகிறதா என்று பார்ப்போம்.]   

இப்பொழுது நீங்கள் கேட்ட forum இன் சரியான பொருளுக்கு வருகிறேன். John Ayto வின் Bloomsbury Dictionary of Word origins இல்

“Originally Latin forum denoted an'out-of-doors place' - it was related to foris 'out-of-doors, outside and to fores 'door', a distant cousin of door.It came to be used for any outdoor open space or public space, and in particular for a market place (the most famous of which was the one in Rome, where public assemblies, tribunals, etc were held). Other English words from the same source are foreign, forest, forensic 'of legal proceedings' (from Latin forensis 'of a forum as a place of public discussion')”

என்று குறித்திருப்பார். நம்மூர் நாட்டுப்புற வழக்கிற் பார்த்தால் பெரிய வீடுகளின் உட்புறம் ஒரு திண்ணையும், முற்றமும், அடுப்படியும், அறைகளும், குடும்பத்தினர் வாழிடங்களும் இருக்கும். உட்புறத் திண்ணையை அடை வைத்து அழைக்காது ‘திண்ணை’ என்றுஞ் சொல்லுவர். திண்ணையை ஒட்டினாற் போல் வீட்டுக்கு வெளியே பெருநிலைக் கதவிற்கு (main door) அப்புறம் உள்ள திண்ணையை வெளித்திண்ணை என்பார். வீட்டிற்கு வரும் பொதுவான மாந்தரை வெளித்திண்ணையில் உடகார வைத்தே பேசிக் கொண்டிருப்பர். பல நாட்டுப்புறங்களில் வெளித்திண்ணைப் பேச்சு பல்வேறு உரையாடலுக்கும் பெயர் போனது. கொஞ்சம் (உறவாலோ, பழக்கத்தாலோ) நெருங்கிய பின் தான் விருந்தாளிகளை பெருங்கதவம் தாண்டி உள் திண்ணைக்கோ, முற்றத்திற்கோ வீட்டுக்காரர் அழைப்பர்.

இந்த வெளித்திண்ணை தான் forum என்பதாகும்.. (உள் திண்ணை அகத் திண்ணையானால்) இதைப் புறத்திண்ணை என்றும் புறவெளி (outside space, hence meeting space) என்றும் சொல்வதிற் பொருளுண்டு. புறவம் என்பது இன்னுஞ் சுருக்கமாயும் பொருத்தமாயும் இருக்கிறது. நம்மூர் மரபிற்கும் அணைத்தாற் போல் அமையும்.

forum = புறவம்
democratic forum = சனநாயகப் புறவம்

அன்புடன்,
இராம.கி.

No comments: