Saturday, October 13, 2018

உண்ணா நோன்பும் வடக்கிருத்தலும் - 8

தந்தையின் ஆட்சியைத் தாமே கவிழ்த்து மண்ணாளும் ஆசையில், கோப்பெருஞ் சோழனின் மக்களிருவர் வஞ்சிப்போர் தொடுத்தார். ”அப்படி ஏன் தந்தை மேலேயே போர் தொடுத்தார்? தந்தை - மகன்களிடை இருந்த முரண்கள் என்ன?” என்பதற்கான தரவுகள் உரையாளர் ஊகங்களிலன்றி வேறிடங்களிற் கிடைப்பதில்லை. தம் மக்களை எதிர்த்துக் காஞ்சிப் போரிட்ட சோழனிடம் ”மக்களோடு சண்டையிடுவதால் ஆவதென்ன? உன் இற்றை உலகவாழ்வு இத்தோடு முடிந்தது. இனிமேற் பிறவாமை நாடி, அரும்பெறல் உலகத்தின் அழைப்பை ஏற்பதே நல்லதெ”ன்று புல்லாற்றூர் எயிற்றியனார் புறம் 213 ஆம் பாட்டில் உணர்த்துகிறார். அது கண்டு மனம் மாறிய சோழன் இவ்வுலக வாழ்வொதுக்கி போர்க்களத்திலே வடக்கிருக்கிறான். அதைப் புறம் 214 ஆம் பாடலிற் பார்த்தோம். (உண்ணா நோன்போடுள்ள தொடர்ச்சியை உரை வழி உணர்ந்த நாம், ”வடக்கிருத்தல் என்ன?”வென்று அலசவில்லை. இந்தத் தொடர் முடிவில் அதைப் பார்ப்போம்.) 

இனி அடுத்த காட்சிக்கு வருவோம். சோழன் வடக்கிருக்கும் களஞ் சுற்றிக் கூடிய பலரும் பலவாய்ப் பேசிக்கொள்கிறார். அவற்றிலொன்று பிசிராந்தையார் பற்றியதாகும். சோழனும் பிசிராந்தையாரும் இதுநாள்வரை சந்திக்கா நிலையில், தன்னுயிர் துறக்கச் சோழன் முடிவெடுக்கையில், “சோழனைப் பாராது ஆந்தையார் இருப்பாரோ? - என்ற கேள்வி அங்கு எழுகிறது. ஆந்தையார் நட்பில் நம்பிக்கை கொண்ட சோழன் ”அவர்வருவார்” என்று தன் எதிர்பார்ப்பைத் தெரிவிக்கிறான். இப்பாட்டின் திணையைப் பாடாண் (பாடு+ ஆண்) என்பர். புறம் 67 இல், இத்திணை பற்றி முன்பே பேசியுள்ளோம். புகழ், வலிமை, கொடை, அருளெனும் நல்லியல்புகளாற் தலைவன்பெயர் அவன்வாழ்வின் பின்னும் நிலைக்கப் பாடுவது பாடாண் திணையாகும். இங்கே பாடென்பது இறப்பைக் குறிக்கும். பல்வேறு நஞ்சுகளை முறித்து அழிவில் இருந்து காப்பாற்றுவதாய்ப் பாடாண் (அழிஞ்சில்) மரத்தை மரபுமருத்துவம் அடையாளங்காட்டும். பாடாண்மரத்து நிலைப்பை ஒக்கத் தலைவன்தோற்றம் காலகாலத்தும் நிலைக்கும் என்பது பொருளிலக்கணப் புரிதல்போலும். துறை” இயன்மொழி (பட்டகை பேசுதல் = speaking of fact) ஆகும்.

ஒருசில கலைச்சொற்களைப் புரிந்துகொண்டால், இப்பாட்டின் வாசிப்பு எளியதே. சோழ வளநாடு சோறுடைத்து. உண்ணாநோன்பின் ஊடே, தென்னம் பொருப்பனின் நாட்டை விவரிக்கையில் அங்குள்ள ஓர் உணவு பற்றிப் புகல்வது முரண்தொடையாய்க் காண்கிறது. (இம்முரண்தொடையே பாட்டைப் படிப்பதற்கும், இத்தொடரிற் பேசுதற்கும் காரணமாகும்.) வடக்கு இருத்தல் தொடங்கி ஒருவேளை 1, 2 நாட்கள் மட்டுமே ஆனதோ, என்னவோ? உண்ணாநோன்பு கொள்வோருக்கு நோன்பின்தொடக்கத்தில் உணவால் ஏக்கம்வருவது இயற்கைதான். யாக்கைமேல் மாந்தர்கொள்ளும் பற்றை யறுப்பது அவ்வளவு எளிதா, என்ன? கொஞ்சங்கொஞ்சமாய் நோன்பில் மனமொன்றி உறுதிகூடித் திடப்பட்டு அது ஏற்படவேண்டும். பாட்டைப் படியுங்கள். பாண்டிய நாட்டின் ஒருவகைச் சாப்பாட்டு விவரிப்பு நம்மையும் வேறு காரணங்களால் ஈர்த்திழுக்கிறது.

கவைக்கதிர் வரகி னவைப்புறு வாக்கல்
தாதெரு மறுகிற் போதொடு பொதுளிய
வேளை வெண்பூ வெண்டயிர்க் கொளீஇ
ஆய்மக ளட்ட வம்புளி மிதவை
அவரை கொய்யுந ரார மாந்தும்
தென்னம் பொருப்ப னன்னாட் டுள்ளும்
பிசிரோ னென்பவென் னுயிரோம் புநனே
செல்வக் காலை நிற்பினும்
அல்லற் காலை நில்லலன் மன்னே

                          - புறம் 215

இப்பாடலின் விளக்கம் கூடுவதற்காக, பாடலுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப் போட்டுக் கீழே கொடுத்திருக்கிறேன்.

கவைக் கதிர் வரகின் அவைப்புறு ஆக்கல்,
தா(ள்)தெரு(ள்) மறுகில் போதொடு பொதுளிய
வேளை வெண்பூ வெண்தயிர்க் கொளீஇ
ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை,
அவரை கொய்யுநர், ஆர மாந்தும்
தென்னம் பொருப்பன் நன்னாட்டுள்ளும்
பிசிரோன் என்ப என் உயிரோம்புநனே
செல்வக் காலை நிற்பினும்
அல்லற் காலை நில்லலன் மன்னே

நெல், கோதுமையே ஆற்றலளிக்கும் அடிக்கூலங்களாய்க் (கூலப்பயிர்கள் தரும் மணிகள் தானமாகி, அச்சொல் இங்குபுழங்காது, வடபுலத்தில் யகரம் ஊடுசேர்த்து, ”தான்யங்களாய்” வேரூன்றின. இற்றைத்தமிழர் கூலம், தவசம் என்ற தமிழ்ச்சொற்களை மறந்து தான்யத்தையே பெரிதும் பழகுகிறார்.) கொண்ட தமிழர் பலருக்கும் சிறுகூலங்கள் பற்றிய விவரங்கள் தெரியாது. 50 ஆண்டுகள் முன்னர், நீர்ப்பாசன வாய்ப்பற்ற, வானம்பார்த்த புன்செய்ப் பகுதியில் வாழ்வோருக்கு, குறிப்பாகச் செல்வச் செழிப்பற்றோருக்கு, நல்ல நாள், பெரிய நாளில் மட்டுமே நெல்லுச்சோறு பெறுவதாகி, சிறுகூலங்களே அன்றாடப் பசியை ஆற்றின. இன்றோ நிலைமை வேறு. ஈனியல் (genetics) விளைவாற் தமிழரிடைப்பரவும் நீரழிவு நோயின் இருப்பறிவு (awareness) கூடி வரும் (சிறு கூல உணவுகளை மட்டுமே விற்றளிக்கும் உண்டிச்சாலைகள் பெருநகரங்களில் வந்துவிட்டன.) இந்நாட்களில்

வரகு (Kodo Millet, இந்தி: Kodra; தெலுங்கு: Arikelu; கன்னடம்: Harka; மலையாளம்: Varagu),
பனிவரகு (Proso Millet, இந்தி: Barri; தெலுங்கு: Varigulu; கன்னடம்: Baragu; மலையாளம்:),
கேழ்வரகு (Finger Millet, இந்தி: Mandua; தெலுங்கு: Ragulu; கன்னடம்: Ragi; மலையாளம்: Koovarugu; Moothari),
குதிரைவாலி (Barnyard Millet, இந்தி: Jhangora; தெலுங்கு: Odalu; கன்னடம்: மலையாளம்:),
தினை (Foxtail Millet, இந்தி: Kangni; தெலுங்கு: Korra; கன்னடம்: Navane; மலையாளம்: Thina),
சாமை (Little Millet, இந்தி: Kutki; தெலுங்கு: Sama; கன்னடம்: Same; மலையாளம்: Chama),
கம்பு (Pearl Millet, இந்தி: Bajra, தெலுங்கு: Gantilu, கன்னடம்: Sajje; மலையாளம்: Cumbu),
சோளம் (Sorghum, இந்தி: Jowar; தெலுங்கு:Jonna; கன்னடம்: Jola; மலையாளம்: Cholum)

ஆகிய புன்செய்த் தவசங்களின் மேற் பலருக்குங் கவனம் திரும்பியிருக்கிறது. (நம்மூர்ச் சோளமும், மக்காச் சோளமும் வெவ்வேறானவை; சோளம் இங்கே இருந்தது. மக்காச்சோளம் இசுப்பானியர் - போர்த்துகீசியர் வழியாக மெக்சிகோவிலிருந்து இறங்கியது. இந்திய மொழிகள் பலவற்றிலும் சோளம் எனுந் தமிழ்ச்சொல்லின் சொற்றிரிவுகளே பெயர்களாயின.) காவிரிபாயும் அக்காலச் சோழநாட்டைப் பார்க்கின் பாண்டியநாடு நெல்விளைச்சல் அதிகம் இலா நாடு. சங்ககாலத்திற் சிறுகூலங்களின் பயன்பாடு பாண்டிநாட்டில் அதிகமாகவே இருந்தது. (மழைவறட்சியும், பஞ்சப்பாடுகளும் பாண்டிய நிலத்திற் கூடவே இருந்தன. வறள்கூலங்கள் பற்றிய தமிழ் வரலாற்றாய்வுகள் இன்றைக்கும் நம்மூரிற் குறைந்தேயுள்ளன. நெல்லின் மோகம் நம்மை அவ்வளவு அலைக்கழிக்கிறது.) வறண்ட நிலத்தில் வளர்வது வரகாகும். (வறள்+கு = வறள்கு> வறகு> வரகு). வரகுமணிகள் பால்பிடித்து எடைகூடிக் கதிர் கவைத்து வளையும். தென்னம்பொருப்பனின் நன்னாட்டை விவரிக்குஞ் சோழன், மிகுந்த விளைச்சலைக் குறிப்பதற்காகக் ”கவைக்கதிர் வரகின்” என்ற அழகிய தொடராற் பாட்டைத் தொடங்குகிறான்.

கல்லுரலில் வரகை அரைத்து, அதன் 7 தோல்களை அதக்கிப் பிரித்து, மணியை மாவாக்காது, வரகரிசியைப் பெறுவதற்கு சில தந்திர நுட்பங்களைக் கையாள வேண்டும். அரிசி, குறுணை, மாவென்று பல விதங்களில் உணவாக்கலாம். காட்டாக வரகரிசியையோ, குறுணையையோ அப்படியே பொங்குவது ஒருவகை. அதை அவலாக்கிக் நீராவியில் வேகவைப்பது இன்னொரு வகை. வரகுமாவை நீரோடு பிசைந்து பல்வேறு பலகாரங்களாக்குவது மற்றொரு வகை. இப்பாட்டில் 2 ஆம் வகை, விதப்போடு பேசப்படுகிறது. (நெல்லவல் இடிப்பது போலவே வரகரிசியிலும் குற்றி அவைத்து அவலாக்க முடியும்.) இங்கே ஆவியில் வேகவைத்த அவலே “அவைப்புறு ஆக்கல்” என்றதொடராற் குறிக்கப்படுகிறது. (வேகவைத்த அவலைச் சாப்பிடுவது இன்றைக்கும் மராட்டப் பழக்கம். வேக வைத்த நெல்லவலை அங்கு ”போஹோ” என்று அழைப்பர்..கூலங்களை அவலாக்கிச் சாப்பிடும் பழக்கம் நம்மூரிலும் ஒரு காலத்திருந்து, இன்று குறைந்துபோனது.)

வரகரிசி அவலைப் பிசைந்துண்ண ஒரு குழம்பும், உடன்துய்க்கக் காய்கறியும் வேண்டுமல்லவா? ”தாதெரு மறுகில் போதொடு பொதுளிய வேளை வெண்பூ வெண்தயிர் கொளீஇ ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை” என்ற வரிகள் அவலோடு பிசைந்துண்ணும் குழம்பைப் பற்றிச் சொல்கின்றன. [இவ் வரிகளின் பொருட்பாடு விவரிப்பதில் பல்வேறு உரையாசிரியரும் தடுமாறிப் போயிருக்கிறார். உரை ஆசிரியரோடு, புலன அறிவாளிகளையும் (discipline experts) நாடினால் நல்விளக்கங் கிடைக்கும்.] இங்கே “வேளை வெண்பூ” என்பது வேளையெனும் மூலிகைப் பூவைக் [Wild Spider Flower; புதலியற் (Botany) பெயர் Cleome gynandra,] குறிக்கிறது. வெள்>வேள்>வேளை; நம்மவர் கண்ணுக்குப் பூவின் வெள்ளை நிறமே கவர்த்திழுத்து, இப்பெயரைத் தூண்டியது போலும். ”வேளை வெண்பூ” என்பது சட்டென்று எடுத்துவிடும் கிடங்குத் தொடராகவே (stock phrase) சங்க இலக்கியங்களிற் பயன் பட்டிருக்கிறது.

அறுமருப் பெறிகலை புலிப்பாற் பட்டெனச்
சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை
பூளை நீடிய வெருவரு பறந்தலை
வேளை வெண்பூக் கறிக்கும்
ஆளி லத்த மாகிய நாடே

என்பது பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைக் கல்லாடனார் பாடிய புறம் 23 இன் பகுதியாகும். வெண்பூ இனந் தவிர, பூஞ்சை, பழுப்பு, மஞ்சள் பூக்களைக் காட்டும் Cleome Viscosa, Cleome monophylla என்று 50 க்கும் மேற்பட்ட இனங்களுமுண்டு. வேளைச்செடியின் மற்ற பெயர்களாய், 

நல்வேளை (உடம்பிற்கு நல்லது செய்யும் வேளைச்செடி என்பதால் இப்பெயர் வந்தது.),
நயவேளை (நல்லதைக் குறிக்கும் இன்னொரு சொல் நயம். பேச்சுவழக்கில் நாய்வேளை என்றானது சற்று சோகந்தான். நாய்க்கு கருப்பெனும் பொருள் சொல்லி black vailey என்றெழுதுவாரும் உண்டு.),
தைவேளை (தயிர்வேளை> தயிவேளை> தைவேளை என்றாகியிருக்கிறது. தயிரொட்டின் விளக்கம் இந்த 215 ஆம் புறப்பாட்டில் வருகிறது. நம் தயிர் வடக்கே தகி/தஹி என்று சொல்லப்படும்.), நாய்க்கடுகு (இந்த இனம் கடுகிற்கு நெருங்கியது Cleomaceae is nearer to Brassica. இரு இனங்களுமே Brassicaceae என்ற குடும்பத்திற் சேர்க்கப்படுபவை. இதன் காய்களுக்குள் இருக்கும் விதைகள் கடுகு போலவே காட்சியளிப்பதாற் தமிழ்வழக்கிற் கருங்கடுகு, வெண்கடுகு, மலைக்கடுகு, சிறுகடுகு ஆகியவையும் இதனோடு நெருங்கியவை.)

ஆகியவற்றைச் சொல்வர். Ajagandha என்பது இதன் சங்கதப்பெயராகும். வேளைச் செடியை, வரப்புச்செடிகளைப் போல், அவ்வப்போது வெட்டி விட்டால் மீளமீளப் புதுத்தளிர்கள் தழைக்கும். முருங்கை மரத்திலும் கிளை, கொம்பு, தளிர்களை வெட்டிவிடுகையிற் தழைக்கின்றனவே? தமிழில் தாளென்பது செடியின் அடியைக் குறிக்கும். தெருளுதலென்பது பூத்தல், தோன்றுதல், தளிர்த்தல் என்றாகும்.”தா(ள்) தெரு(ள்)” என்பதைத் ”தாதெரு” எனச் சொல்லலாம். ”மறுகெ”ன்பது மீள விளையும் தளிரைக் குறிக்கும். ”தாதெரு மறுகில்” என்பது ”அடியிற் தளிர்த்த மறு விளைப்பில்” எனப் பொருள் கொள்ளும். ”போதொடு பொதுளிய” என்பது ”(சரியான) போதிற் தழைத்த” என்று பொருள்கொள்ளும். ”பொதுள்” என்பதைத் தழைக்கும் இயலுமைக்கு (potential) இணையாகப் பூதியலிற் (physics) புழங்குகிறோம். வேளைச்செடியின் புதலியல், பூ, காய். இலைகளின் பயன்பாடு, செடிவளர்க்கும் முறை, பூக்களைச் சமைக்கும் முறை ஆகியவை தெரிந்தபின் தான் பாட்டுவரிகளைப் புரிந்துகொள்ளலாம்

வேளைச்செடியின் பூ, காய், இலை, வேரென எல்லாமே மருத்துவக்குணங் கொண்டவை. தெற்கத்திச் சமையலறையில் முருங்கை, அகத்தி இலைகளைப் போலவே வேளையிலையும் ஒருகாலத்திற் கீரையாய் உணவிற் சேர்ந்தது. (தென்னாப்பிரிக்காவிலும் இப்படிப் பயன்பட்டது வியப்பான செய்தி). காதிற் சீழ் வடிவதைத் தடுக்கவும், காது வலிக்கும், வேளையிலைச் சாறு உகந்தது. தமிழ் மருந்துக் கடைகளின் நாய்க்கடுகின் பயன்கருதிப் பொடியை விற்பர். 4 இதழ் கொண்ட வெண்பூக்களைச் சாப்பிடுவதாற் குடற்புழுக்களைக் கொன்று, இரைப்பையின் பொருமலைத் தணித்துக் அதிலுள்ள காற்றை வெளியேற்றி, வயிற்றின் உப்புசத்தை நீக்க முடியும் என்பது ”வேளை வெண்பூ வெண்தயிர் கொளீஇ ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை” என்பதோடு தொடர்புடைய பயனுள்ள செய்தி.

பொதுவாக நாம் சாப்பிடும்போது, ஒவ்வொரு கவளத்திலும் உணவோடு காற்றையும் தொண்டைக்குள் அனுப்புகிறோம். காற்று மீளப்பிரிந்து, தொண்டை, வாய்வழி வெளிவரவேண்டும். உணவுக்குழலை மூடியிருக்கும் வாவி (valve) ஒருபக்கம் மட்டுமே திறக்கும் இயல்புள்ளதால், இரைப்பையுட் சிக்கிய காற்று வெளிவராது போனால், இரைப்பையின் காற்றழுத்தம் (air pressure) கூடி வயிறுப்பலாம். இது நிலைக்கும்போது நமக்குத் தொந்திவயிறு ஏற்படுகிறது. இரைப்பையின் அடிப்படைச் செயல்பாடு, அதன்சுவர்களில் காடிகள் ஊறி உணவோடு வேதிவினை செய்து, செவ்வேறு சிறு வேதிகளாய் உணவை மாற்றிக் குருதிக்குள் ஊடுறுவச் செய்வதேயாகும். வெவ்வேறு உறுப்புக்களுக்கான சத்து, குருதி வழியாக உடலெங்கும் அனுப்பப் படுகிறது

இரைப்பையிற் அளவோடு இருக்கவேண்டிய காடியுருவாக்கம் கூடிப் போனால், இரைப்பையில் கரியிரு அஃகுதையும் [carbon di-oxide; ஒரு பங்கு கரிமமும் (carbon) இரு பங்கு அஃககமும் (oxygen) சேர்ந்தது கரியிரு அஃகுதை] கூடும். காற்றும் கரியிரு அஃகுதையும் சேர்ந்து வாய்வழி வெளிப்படுவதே ஏப்பமென்று அழைக்கப்படுகிறது. ஏப்பப் பழக்கம் கூடக்கூட, செரித்த உணவும், இரைப்பைக் காடிகளும் காற்றோடு சேர்த்து எதிர்க்களித்து உணவுக்குழல் வழியாக வெளியே வரும். இரைப்பைக்காடிகள் உணவுக்குழலின் படக்கூடாத இடங்களில் படும்பொழுது குழற்சுவரைப் பாதிக்கின்றன; அரிக்கவும், சுரிக்கவும், எரிக்கவுஞ் செய்கின்றன. நெஞ்செரிச்சலென்பது இப்படித்தான் ஏற்படுகிறது. இங்கே பேசப்படும் வேளைப்பூவைச் சாப்பிட்டால் ஏப்பமும், வயிற்றுப்புசமும், நெஞ்செரிச்சலும் குறையும். இரைப்பைப் பொருமலும் தணியும். (இற்றைச் சாப்பாட்டுக் குறைபாடுகளால் சென்னை மக்களிடை நெஞ்செரிச்சல் கூடிவருகிறது. அங்குமிங்கும் இதற்கென்று விதப்பு மருத்துவர் கூடிவருகிறார், நீரழிவு, நெஞ்சாங்குலைப் பழுதுகள், குருதியழுத்தம் ஆகியவற்றோடு நெஞ்செரிச்சலும் இன்று பெரிதாய் உணரப்படுகிறது.)

வேளைச்செடியின் அடியில் தளிர்த்த மறுவிளைப்பில் (சரியான) போதிற் தழைத்த வெண்பூவை வைத்துச் செய்யப்படும் ஒரு குழம்பை இப்பாட்டு சொல்கிறது. (மிதவை என்பது suspension. கலங்கல் மிதப்பதால் இந்தக் குழம்பு மிதவையாயிற்று.) அதற்கு முன் புளி பற்றி அறிந்துகொள்ள வேண்டும். இது இன்றுள்ள Tamarindus Indica விற்கு நிகரென்றே பலரும் நினைக்கிறார். அது தவறூ. இன்றுள்ள புளி கி.பி.14 ஆம் நூற்றாண்டில் எத்தியோப்பியாவிலிருந்து இறக்குமதியானது. நம் பழைய புளி ”கோரக்கர் புளி” (Garcinia cambogea) என்று புதலியலார் சொல்வார். இந்த அடையாள மாற்றம் மட்டுமின்றி, பழைய கலைச்சொல்லான அம்புளி (அம் = நீர்; அம்புளி = புளிச்சாறு; புளித்தண்ணீர்) என்பதும் இன்று Tamarindus Indica வைக் குறிக்கத்தொடங்குகிறது. அம்புளி என்பதே அம்புளி> அம்புள>அம்ப்ல>அம்ல>அமில என்று வடபுலங்களில் ஆனது. அம்புளி மிதவை என்பது காடிக் குழம்பாகும். அட்டுதல்= சமையல் செய்தல். அட்டுப்படியை அடுப்படியென்று புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டத்திற் சொல்வர். வேளைப்பூ காடிக்குழம்பைச் சமைப்பது கடினமல்ல. இற்றைக்காலத்து மோர்க்குழம்பைப் போன்ற சமையற் குறிப்பாக அதைச் சொல்லமுடியும்.     

1. ஒரு வாணலியில் கடுகு, உளுந்து, நாலைந்து உடைந்த மிளகு (இக்காலத்தில் மிளகிற்குப் பகரியாய் பொடியாக வெட்டிய பச்சை மிளகாயைப் போடுவர்.), பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு சிறிதளவு எண்ணெயிட்டு, தேவையான அளவு வேளை வெண்பூவையும் சேர்த்துச் சற்று வதக்கியெடுத்து ஆறவைத்துக் கொள்ளுங்கள். (இக்காலத்தில் மோர்க்குழம்பிற்கு வெண்டைக் காய், பூசணிக்காய் போன்று சேர்க்கிறார்களே, அதைப்போல் வேளை வெண்பூ அளவை வைத்துக்கொள்ளலாம்.)
2. அடுத்துத் தண்ணீரில் ஊறவைத்த துவரம்பருப்பு, கொத்தமல்லி, சீரகம், வரகரிசி, தேங்காய்த் துருவல், நாலைந்து மிளகு ஆகியவற்றைச்சேர்த்து நொய்யாக விழுதை அரைத்துக் கொள்ளுங்கள்.
3. ஒரு குவளைத் தயிரை சமமான அளவு நீர்கலந்து ஒருகலத்தில் ஊற்றி அத்துடன் அரைத்த விழுது, ஒரு கரண்டிப் புளிச்சாறு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கி அடுப்பிலேற்றிக் கொதிக்க விடுங்கள். ஒரு கொதி வந்ததும், உடனே அடுப்பிலிருந்து இறக்கி விடுங்கள்.
4. முன்னால் வதக்கிவைத்துத் தாளித்த வேளி வெண்பூவைக் குழம்பிற் கொட்டுங்கள்.

பாண்டிநாட்டைச் சேர்ந்த ”ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை” அவலோடு பிசைந்துகொள்ள அணியமாயிற்று.

இனி அடுத்த இரு வரிகள்: ”அவரை கொய்யுநர், ஆர மாந்தும் தென்னம் பொருப்பன் நன்னாட்டுள்ளும்” = அவரையைக் கொய்தவர் மனம்நிறையச் சாப்பிடும் பொதியமலை அரசனின் நாட்டுள். கடைசி 3 வரிகள்: “பிசிரோன் என்ப என் உயிரோம்புநனே; செல்வக் காலை நிற்பினும் அல்லற் காலை நில்லலன் மன்னே” = பிசிரைச் சேர்ந்தவன் என்னுயிரைக் வழிநடத்துபவன்; செல்வம் இருந்த காலத்தில் (வாராது) நின்றாலும், துன்பமுள்ள இக்காலத்தில் (வாராது) நின்றுவிடமாட்டான். 

பாட்டின் மொத்தப்பொருள்:
--------------------------------------------------------------
கவைத்த கதிரிலிருந்து பெற்ற
வரகு மணிகளைக் குற்றி அவைத்த அவலோடு,
வேளைச் செடியின் அடியிற்
தளிர்த்த மறுவிளைப்பில்
சரியான போதிற் தழைத்த வெண்பூவை
வெண்தயிர் கொண்டு சமைத்த
அம்புளிக் குழம்பைப் பிசைந்து,
அவரைக் காயைக் கொய்பவர்
மனம் நிறையச் சாப்பிடும்,
தென் பொதிகை அரசனின்,
நாட்டுள் பிசிரைச் சேர்ந்தவன்
என்னுயிரை வழி நடத்துவோன் ஆவான்.
செல்வமிருந்த காலத்தில் (வாராது) நின்றாலும்
துன்பமுள்ள இக்காலத்தில் அவன் நின்றுவிட மாட்டான்.
---------------------------------------------------------------------
மேலே, ”வேளைச் செடியின் அடியிற் தளிர்த்த மறுவிளைப்பில் சரியான போதிற் தழைத்த வெண்பூவை” எனும்போது திட்டமிட்ட வேளாண்மை அன்றிருந்த செய்தி நமக்குப் புலப்படுகிறது. ”வெறும் வேட்டைச்சேகர இனக்குழுக்கள்” என்று சங்ககாலம் பற்றிப் பர்ட்டன் ஸ்டெய்ன் போன்றோர் சொல்வதிற் பொருளில்லை என்பதும் புலப்படுகிறது. நனிசிறந்த நாகரிகம் கொண்டிருந்த குமுகாயத்தை நாம்தான் புரிந்துகொள்ள மறுக்கிறோம். இனி அடுத்த பாட்டிற்கு வருவோம்.

அன்புடன்,
இராம.கி.

No comments: