Friday, October 19, 2018

உண்ணா நோன்பும் வடக்கிருத்தலும் - 12

அடுத்து புறம் 220 ஆம் பாடலைப் பார்ப்போம். இதுவும் பொதுவியல் திணையைச் சேர்ந்ததே. துறை முன்னதுபோற் கையறு நிலையாகும். பெருங்கோக்கிள்ளி இறந்தபின் அவனுடலை இடுகாட்டில்  அடக்கஞ் செய்து, எல்லோருந் திரும்பி வந்தபின், பொத்தியார் கலங்கிப் பாடுகிறார். ”யானை கட்டுங் கம்பம் யானையின்றித் தனித்ததுபோல் இக்கூடம் வெறிச்சிட்டுக் கிடக்கிறதே? யானைபோல் இருந்தவன் போய்விட்டானே?” என்கிறார்.

அதற்குமுன் ஒரு சிறிய இடைவிலகல். இப்பாட்டுத் தொகுதியிற் சோழனைக் குறிக்கும் பெயர்களான ”கோப்பெருஞ் சோழன், பெருங்கோக் கிள்ளி, பொலம் தார்த் தேர்வண் கிள்ளி” என்று எல்லாமே அடைகள் சேர்ந்த பொதுப்பெயர்கள் ஆகும். சோழனின் விதப்பான இயற்பெயர் என்னவென்று நமக்கு எங்குமே தெரியவேயில்லை. இப்படிப் பொதுப்பெயர், அடைப்பெயர், பட்டப் பெயர்களையே விளித்துக் குறிப்பிடுவது தமிழரின் பல்லாண்டுப் பழக்கம். [“பாவாணரெ”ன்ற பட்டப்பெயரைக் கண்டு வெதும்பி எரிச்சற்பட்டு தமிழ் வெறுப்பாளர் ஒருவர் ”ஞானமுத்து தேவநேயன்” என்ற இயற்பெயரால் அழைக்க வேண்டும் என்று இணைய மடற்குழுக்களிற் கொஞ்சகாலம் அடம்பிடித்தார். தமிழிலக்கியம் ஆழப்படிக்காத அவர் ”ஆதன், இரும்பொறை, கிள்ளி, சென்னி, மாறன், செழியன்” என்ற பெயர்களைக் கண்டு என்ன சொல்லியிருப்பாரோ தெரியவில்லை. ஏனெனில் இவை ஒன்று கூட இயற் பெயரில்லை.]

பொத்தியார் என்பதும் இயற்பெயராய்த் தோற்றவில்லை. ”நார்மடி, சீலை, ஒரு பழைய சோழநகர், மடல்விரியா வாழைப்பூ, சோளக்கதிர், தவசக்கதிர், மணி வகை, தோலுரியாப் பனங்கிழங்கு, அண்டம், பொது” என்று பொத்திக்குப் பொருள்சொல்வர். "வாழைப்பூ, பனங்கிழங்கு, சோளக்கதிர், தவசக்கதிர், மணிவகை, அண்டம் வரால், பொது" போன்றவை மாந்தப்பெயருக்கு ஒத்து வராது; ”நார்மடி, சீலை, பழைய சோழநகர்” என்றவை ஒத்துவரலாம். உடம்பைப் பொத்துவது பொத்தி என்று உணர்ந்தால் பொத்தி சீலையை, புடவையை உணர்த்துவது புரியும். உறையூர்க் கூறை(ப்புடவை)யின் பெருமை 20 ஆம் நூற்றாண்டு முன்பாதியிலும் இருந்தது. சிராப்பள்ளி நெசவாளர் உறையூர், புத்தூர் போன்றவிடங்களில் இன்றுங் கணிசமானவர். பொத்தியூரே உறையூருக்கு அடுத்துள்ள புத்துரானதோ என்ற ஐயம் எனக்குண்டு. (பொத்திகளைச் செய்வது பொத்தியூராகி, பொத்தியூரார் பொத்தியார் ஆகலாம்; அன்றிப் பொத்திகளை நெய்பவர் பொத்தியாராகலாம்.)

பதிற்றுப்பத்து 9 ஆம் பத்தின் பதிகத்தால், இவ்வூகத்திற்கு வலுக்கிடைக்கும். குட்டுவன் இரும்பொறைக்கும், மையூர்(>மைசூர்)க்கிழான் வேள்மகள் அந்துவஞ் செள்ளைக்கும் பிறந்த இளஞ்சேரல் இரும்பொறையின் சீர்த்திகளை,  . 

வெருவரு தானையொடு வெய்துறச் செய்துசென்று
இருபெரு வேந்தரும் விச்சியும் வீழ
அருமிளைக் கல்லகத்து ஐந்தெயில் எறிந்து
பொத்தி யாண்ட பெருஞ்சோ ழனையும்
வித்தை யாண்ட இளம்பழையன் மாறனையும்
வைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று

என்று வரிசைப்படுத்துவர். இதன்படி இளஞ்சேரல் இரும்பொறை, சோழ, பாண்டிய வேந்தரும், விச்சியானும் வீழ 5 எயில்களை அழித்திருக்கிறான். இதற்கடுத்துப் பொத்தியாண்ட பெருஞ்சோழனையும், வித்தையிற் சிறந்த இளவல் பழையன் மாறனையும் வெல்கிறான். இதைப் படிக்கும்போது சோழ வேந்தனும், பொத்தியாண்ட பெருஞ்சோழனும் வெவ்வேறென்பது உறுதி ஆகிறது. (சோழ வேந்தனைக் காட்டிலும் அகவைமூத்த பங்காளி இப்பெருஞ் சோழன் ஆகவேண்டும். கிட்டத்தட்ட எல்லா உரையாசிரியருமே இப்பெருஞ் சோழனைக் கோப்பெருஞ்சோழனோடு போட்டுக் குழப்பியது எப்படியென எனக்கு விளங்கவில்லை.) சோழவேந்தன் புகாரிலோ, உறையூரிலோ இருப்பவன். பொத்தி, உறையூருக்கு அருகிலென்றால் சோழவேந்தன் உறையூரில் இருக்கமுடியாது; இளஞ்சேரல் இரும்பொறைக் காலத்தில் சோழ வேந்தன் புகாரிற்றான் இருந்தான் போலும். இப்படியோர் இயலுமையே 9 ஆம் பத்திற்குப் பொருந்துகிறது.

உறையூருக்கருகில் உள்ள இற்றையூர்களைப் பார்க்கின், புத்தூரின் பொருத்தம் புரிந்தது. 19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலர் அரசுப் பதிவுகளில் Poothoor என்றே இதன் பெயர் இருந்திருக்கிறது. உறையூர் வெக்காளியம்மன் கோயில், அஞ்சு வண்ணர் கோயில், கமலவல்லி நாச்சியார் கோயில் போன்றவற்றின் கல்வெட்டுக்களில் புத்தூரின் பழம்பெயர் இருக்கிறதா என்றாயவேண்டும்.  (இன்னொன்றும் சொல்லவேண்டும். விசயாலனுக்கு சற்று முன்னால், பாண்டியன் கடுங்கோன் காலத்திலுங் கூட பெருஞ்சோழர் கும்பகோணத்திற்கு அருகிலேயே இருந்திருக்கிறார். அதேபொழுது  பொத்தப்பி சோழர் என்பார் ரேநாட்டுச் சோழர் என்று சொல்லி இற்றை சித்தூர் மாவட்டம் தள்ளிப் பழைய தொண்டைமண்டல நிட்சியில் இருந்திருக்கிறார். இந்தப் பொத்தப்பிச் சோழரும் பொத்தியூர் (உறையூருக்கு அருகிலுள்ள ஊர்) பெயர் கொண்டவரோ என்ற எண்ணமும் எனக்குண்டு. பொத்தப்பி - பொத்தியூர் தொடர்பை ஆய வேண்டும். இனிப் பாட்டிற்குள் போவோம்.     

பெருஞ்சோறு பயந்து பல்யாண்டு புரந்த
பெருங்களி றிழந்த பைதற் பாகன்
அதுசேர்ந் தல்கிய வழுங்க லாலை
வெளில்பா ழாகக் கண்டுகலுழ்ந் தாங்குக்
கலங்கினே னல்லனோ யானே பொலந்தார்த்
தேர்வண் கிள்ளி போகிய
பேரிசை மூதூர் மன்றங் கண்டே

                                 - புறம் 220

இப்பாடலின் விளக்கம் கூடுவதற்காக, பாடலுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப் போட்டுக் கீழே கொடுத்திருக்கிறேன்.
   
பெரும் சோறு பயந்து பல் யாண்டு புரந்த
பெரும் களிறு இழந்த பயிதல் பாகன்
அது சேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை
வெளில் பாழாகக் கண்டு கலுழ்ந்தாங்கு
யானே
பொலம் தார்த் தேர் வண் கிள்ளி போகிய
பேர் இசை மூதூர் மன்றம் கண்டே
கலங்கினேன் அல்லனோ

இனி ஒருசில சொற்பொருள்களையும் குறிப்புகளையும் பார்ப்போம்.

பெருஞ்சோறு என்பது “பெரிய சோற்றுருண்டை, கோயில்களிற் கொடுக்கும் ”ப்ரசாதம்”, நீத்தார்கடன் நாட்களில் (= முன்னோருக்குப் பிண்டங் கொடுக்கும் திவச நாட்களில்) கூடுவோருக்கு அளிக்கும் விருந்து” என்று வெவ்வேறு பொருள்களிற் சங்க இலக்கியங்களிற் பயிலும். இச் சொற்பொருளைப் பல உரையாசிரியருஞ் சரியாக உள்வாங்கிக் கொண்டதில்லை. பெருஞ்சோற்று உருண்டை என்பது அதன் பரும அளவாற் கொண்ட பொருள். “ப்ரசாதம்” என்பது பெருஞ்சோற்றின் நேரடிச் சங்கத மொழிபெயர்ப்பு; தெய்வப் படையலென்பதால் “பெருமெ”னும் அடைபெற்று விதந்தது. “நீத்தார் கடன் விருந்து என்பது” பெரியோர் நினைவுகருதிச் செய்யும்விருந்து என்ற பொருளில் எழுந்தது. இங்கு யானையைத் தொடர்புறுத்துவதால் “பெருஞ் சோற்றுருண்டை” என்பதே பொருந்தும். பயத்தல்= கொடுத்தல். பயன்/பலன்  என்ற பெயர்ச்சொற்கள் பயிலுமளவிற்கு இவ் வினைச்சொல் இக்காலத் தமிழிற் பயன்படாதிருக்கிறது; புரத்தல்= காப்பாற்றல். ”பெரும்சோறு பயந்து பல்யாண்டு புரந்த” என்பதற்குப் “பெருஞ்சோற்றைக் கொடுத்துப் பல்லாண்டு புரந்த” என்பதையே பொருளாகக் கொள்ளலாம்.

பயிதல் என்பது படிதல், வாடுதலாகும். இச்சொல்லைப் புறம் 212 இல் பார்த்திருக்கிறோம். படி>பயி>பசி என்றும் சொற்றிரிவு ஏற்படும். பயிதற் பாகன்= வாடும் பாகன், சோகமுற்ற பாகன். ”பெரும் களிறு இழந்த பைதல் பாகன்” என்பது “பெரும் யானையை (இப்போது) இழந்து வாடும் பாகன்” என்ற பொருள்கொள்ளும். அல்குதல்= தங்கல். அழுங்கல்= ஆரவாரம்; பொதுவாகக் காட்டுயானைகள் குடும்பம் குடும்பமாயிருக்கும். வெவ்வேறு குடும்பங்களைப் பிடித்து ஒரே கூடத்திற் கட்டிப்போடும் போது ஒன்றிற்கு ஒன்று ஆரவாரஞ் செய்து தம் இருப்பையும், புலத்தையும் உறுதிசெய்யும்.

யானைக்குடும்பங்கள் பலவுள்ள கூட்டம் ஆரவாரத்தோடிருப்பது இயல்பே யாகும். ”அதுசேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை”= ”அவை சேர்ந்து தங்கிய ஆரவாரக்கூட்டத்தில்” . வெளில் என்பது யானைகட்டும் தூண், கம்பம் அல்லது தறி. பாழ்= வெறுமை, வெற்றிடம், சுன்னம், சுழியம் (zero) என்பதற்குப் பாழ் என்பதையே பரிபாடலிற் பயன்படுத்துவர். புள்ளியின் நீட்சியாய்ப் புள்ளியம்> பூழியம்>பூஜ்யம் என்பதும் பாழையே குறிக்கும். இப்படி zero விற்கு இணையாய் 4 வேறு தமிழ்ச்சொற்கள் நம்மிடம் இருக்கையில் அவற்றைவிடுத்துத் திரிவுச் சொல்லான பூஜ்யத்தையும், பூச்சியத்தையும் நாமேன் பயன்படுத்துகிறோம்? ஆழ ஆய்ந்தால், சுழியக்கருத்தீடு தெற்கிருந்து வடக்கே போனதே. கலுழ்தல்= கலங்குதல்; ”வெளில் பாழாகக் கண்டு கலுழ்ந்தாங்கு” = (யானை கட்டும்) கம்பம் பாழாயிருக்கக் கண்டு கலங்கியதுபோல.

வண் கிள்ளி = வள்ளன்மை காட்டுங் கிள்ளி. ”பொலம் தார்த் தேர் வண் கிள்ளி” என்பதை “பொன்மாலைகள் வேய்ந்த தேரிற் (பயணித்து) வள்ளன்மை காட்டுங் கிள்ளி” என்று சொல்லலாம். தமிழில் எல்லாவிடங்களிலும் விதப்புச்சொல்லை ஆளுவதில்லை. இடம், பொருள், காலம் கருதிப் பொதுமைச்சொல்லையே விதப்பிற்கு நிகராய்ப் பலவிடங்களிற் பயன் படுத்துவது உண்டு. ஓர் இறப்பு நிகழ்விற்குப் போகிறோம். அப்பொழுது ஒருவருக்கொருவர் “இப்படிப் போய்ச்சேருவாருன்னு நான் நினைக்கவே இல்லை” என்று சொல்கிறோமல்லவா? போகிய= போய்ச்சேர்ந்த, இறந்த. ”பொலம் தார்த் தேர் வண் கிள்ளி போகிய” என்பதற்குப் “பொன்மாலைத் தேரில் வள்ளன்மை காட்டும் கிள்ளி போய்ச்சேர்ந்த” என்று பொருள் சொல்லலாம்.

அக்காலத்தில் ஒரு மரத்தடியிற்றான் ஊர்மன்றங்கள் கூடும். பொதியில், அம்பலம், மன்றம் என்பதெல்லாம் ஒருபொருட் சொற்கள். திருவரங்கத்தின் அடையாளமான அம்மரத்தடியில் இந்த ஊர்மன்றம் இருந்திருக்கலாம். மூதூர் மன்றமென்பது பல்லாண்டுகளாய்க் கூடிய ஊர்மன்றத்தைக் குறிக்கிறது பேரிசைப் பட்ட முதூரென்பது பெரும்புகழ் கொண்ட மூதூரென்று பொருள் கொளும். ”பேர் இசை மூதூர் மன்றம் கண்டே” = ”பெரும்புகழ் மூதூர் மன்றத்தைக் கண்டு”

பாட்டின் மொத்தப் பொருள்:

பெருஞ்சோற்றைக் கொடுத்துப் பல்லாண்டு புரந்த பெரும் யானையை
(இப்போது) இழந்து வாடும் பாகன் அது சேர்ந்து தங்கிய ஆரவாரக் கூடத்தில்
(யானை கட்டும்) கம்பம் பாழாயிருக்கக் கண்டு கலங்கியது போல
பொன்மாலைத் தேரில் வள்ளன்மை காட்டும் கிள்ளி போய்ச்சேர்ந்த
பெரும்புகழ் மூதூர் மன்றத்தைக் கண்டு யான் கலங்கினேன் அல்லனோ 

மூதூர் மன்றத்தைக் கண்டு கிள்ளி இவ்வுலகை விட்டுப் போனதையெண்ணிப் பொத்தியார் கலங்குகிறார், நண்பன் பிரிவைத் தாங்க இயலாத் துக்கம். களிறு கட்டிய தறியின் வழியாய் வெளிப்படுகிறது.

அன்புடன்,
இராம.கி.  .   

No comments: