Wednesday, October 24, 2018

உண்ணா நோன்பும் வடக்கிருத்தலும் - 17

அடுத்ததாய்ப் புறம் 217 ஐப் பார்க்கலாம். இதன் திணை பொதுவியல்; துறை கையறு நிலை. சோழன் வடக்கிருந்தது தெரியாமலோ, அன்றி அது தெரிந்து தான் உணர்ச்சி வசப்பட்டோ, பிசிராந்தையார் உறையூருக்கு வந்திருக்க முடியாது; சிந்தனைத் தெளிவிற்றான் பாண்டிநாட்டுக்காரரான அவர் வந்திருக்கிறார். அப்படியென்றால், கோப்பெருஞ் சோழன் இறந்ததை பாண்டி நாட்டிலேயே பிசிராந்தையார் அறிந்திருக்கவேண்டும். தெரிந்தேதான் அவர் சோழன் நடுகல்லைத் தேடிவருகிறார். வந்தவிடத்தில் பிசிராந்தையாரும் வடக்கிருந்தாரென்று கிட்டத்தட்ட எல்லா உரையாசிரியருமே சொல்வது மிகைக் கூற்றாகவும் அற்றுவிகத்திற்கு மாறுபட்டதாகவும் தோற்றுகிறது. பார்க்க வருபவரெல்லாம் ஆற்றாமையில் சோழனோடு சேர்ந்து வடக்கு இருப்பதை அற்றுவிகம் என்ற சமயநெறி ஏற்றுக் கொள்ளாது. “வடக்கு இருந்தானுழைச் சென்ற பிசிராந்தையாரைக் கண்டு பொத்தியார் பாடியது” என்றே பாட்டின் கீழுள்ள கொளுக்குறிப்புச் சொல்கிறது. இற்றைக்கால உரை யாசிரியர் பிசிராந்தையாரையும், ஏன் பொத்தியாரையுங் கூட, வடக்கு இருந்ததாய் எழுதிவிட்டார். ஏன் இந்த முடிவிற்கு வந்தாரென்று புரிய வில்லை. இதைப்பற்றி அடுத்தபாட்டிலும் ஆழ்ந்து பேசுவோம். இப்போது இப்பாட்டைப் படியுங்கள்..

நினைக்குங் காலை மருட்கை யுடைத்தே
எனைப்பெருஞ் சிறப்பினோ டீங்கிது துணிதல்
அதனினு மருட்கை யுடைத்தே பிறனாட்டுத்
தோற்றஞ் சான்ற சான்றோன் போற்றி
இசைமர பாக நட்புக் கந்தாக
இனையதோர் காலை யீங்கு வருதல்
வருவ னென்ற கோனது பெருமையும்
அதுபழு தின்றி வந்தவ னறிவும்.
வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந் தன்றே
அதனால்,
தன்கோ லியங்காத தேயத் துறையும்
சான்றோ னெஞ்சுறப் பெற்ற தொன்றிசை
அன்னோனை யிழந்தவிவ் வுலகம்
என்னா வதுகொ லளியது தானே

                            -புறம் 217

இப்பாடலின் விளக்கம் கூடுவதற்காக, பாடலுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப் போட்டுக் கீழே கொடுத்திருக்கிறேன்.

எனைப்பெருஞ் சிறப்பினோடு ஈங்கு இது துணிதல்
நினைக்கும் காலை மருட்கை உடைத்தே!
பிறன் நாட்டுத் தோற்றம் சான்ற சான்றோன்
இசை மரபாக, நட்புக் கந்தாக, போற்றி ஈங்கு வருதல்
அதனினும் மருட்கை உடைத்தே!
இனையதோர் காலை
வருவன் என்ற கோனது பெருமையும்
அது பழுதின்றி வந்தவன் அறிவும்.
வியத்தொறும் வியத்தொறும் வியப்பு இறந்தன்றே
அதனால்,
தன் கோல் இயங்காத தேயத்து உறையும்
சான்றோன் நெஞ்சு உறப்பெற்ற
தொன்று இசை அன்னோனை இழந்த இவ் உலகம்
என் ஆவது கொல்? அளியது தானே

இனி ஒருசில சொற்பொருள்களையும் குறிப்புகளையும் பார்ப்போம். எனைப் பெருஞ் சிறப்பினோடு ஈங்கு இது துணிதல்= எல்லாப் பெருஞ்சிறப்போடு இது செய்ய முற்படல்; ஆழ்ந்து ஓர்ந்துபார்த்தால், இங்கே ”இது” என்பது வடக்கு இருத்தலைக் குறிக்கிறது. முந்தைய நிகழ்ச்சிகளை அறிந்தாற்றான் ”இது” எனுங்குறிப்புப் புலப்படும். வடக்கிருந்த சோழன் வாடியிறந்துவிட்டான். அவனுக்கான நடுகல்லும் எழுப்பப்பட்டுவிட்டது. யாரும் எண்ணா இந் நிலையில் பாண்டிநாட்டுப் பிசிராந்தையார் நடுகல்லெதிரே வந்துநிற்கிறார். கூடியிருந்த சான்றோர் எதிர்பார்க்காநிலையில் இதுநடந்தது கண்டு திகைத்துப் போனார். முல்>மல்>மர்>மரு>மருள்>மருட்கை என்பது வியப்பும், திகைப்பும் கலந்த மயக்கத்தைக் குறிக்கும். ”நினைக்குங்காலை மருட்கை உடைத்தே”= நினைக்கையிற் திகைக்க வைக்கிறது.     

பிறன்நாட்டுத் தோற்றம் சான்ற சான்றோன்= வெளிநாட்டுத் தோற்றங் கொண்ட சான்றோன். தமிழகம் பொதுவெனினும், பாண்டிநாடு, பிறன்நாடு தானே? சோழநாட்டுப் புலவரான பொத்தியார் அப்படித் தானே குறிப்பிடுவார்? இசை மரபாக, நட்புக் கந்தாக, போற்றி ஈங்கு வருதல்= புகழ் மரபாக, நட்பின் பற்றுக்கோடாக (எம் அரசனைப்) போற்றி இங்கு (பிசிராந்தையார்) வருதல். சோழனுக்கும் ஆந்தையாருக்கும் இடையுள்ள நட்பே இவ்வருகைக்குப் பற்றுக் கோடாகும். அதனினும் மருட்கை உடைத்தே = அதைக் காட்டிலும், திகைக்க வைக்கிறது. இனையதோர் காலை = இத்தகைய காலத்தில். வருவன் என்ற கோனது பெருமையும் = ”(என்னைத்தேடிப் பிசிராந்தை) வருவான்” என்று சொன்ன எம் அரசனின் பெருமையும்

அது பழுதின்றி வந்தவன் அறிவும்.= அப்பெருமைக்குப் பழுதின்றி ஆக்கி வந்தவனின் அறிவும். இங்கே அறிவென்ற குறிப்பு முகன்மையானது. எல்லாம் தெரிந்தேதான் சோழனின் நடுகல்லைப் பார்க்கப் பிசிராந்தையார் வருகிறார். வியத்தொறும் வியத்தொறும் வியப்பு இறந்தன்றே = எத்தனை முறை வியந்தாலும் வியப்புண்டாகிறது. (இவ்வளவு வியப்பு உண்டென்றால், ஒரு வேளை பாண்டியன் அறிவுடை நம்பிக்கும், கோப்பெருஞ் சோழனுக்கும் தீராப் பகை இருந்தது போலும்! பாண்டிநாட்டார் யாரும் சோழநாட்டிற்குள் சட்டென்று உறவாட மாட்டார் போலும். அதனாற்றான் பாண்டிய அரசனின் பெருமையைச் சற்றும் விட்டுக் கொடுக்காது 191 ஆம் பாடலிற் பிசிராந்தையார் சொன்னார் போலும்.) 

தன் கோல் இயங்காத தேயத்து உறையும் = தன் செங்கோல் இயங்காத (பாண்டிய) தேசத்தில் உறையும்; செங்கோல் இயங்கும் இடமே ஆட்சி நடக்குமிடமாகும். சான்றோன் நெஞ்சு உறப்பெற்ற = சான்றோனின் நெஞ்சை (உரிமையோடு) அடையப்பெற்ற. தொன்று இசை அன்னோனை இழந்த இவ் உலகம் = பழம்புகழ் பெற்ற அன்னவனை இழந்த இவ்வுலகம் என் ஆவது கொல்? அளியது தானே! = என்னாகும்? இரங்கத் தக்கது தானே?

பாட்டின் மொத்தப் பொருள்:

எல்லாப் பெருஞ்சிறப்போடு வடக்கிருத்தலைச் செய்ய (எம் அரசன்) முற்பட்டதை நினைக்கையிற் திகைக்க வைக்கிறது. வெளியார்நாட்டிற் தோற்றங்கொண்ட சான்றோன், புகழ்மரபாக, நட்பின் பற்றுக் கோடாகப் (எம் அரசனை) போற்றி இங்குவருதல் அதைக்காட்டிலும் திகைக்கவைக்கிறது. இத்தகைய காலத்தில் “(என்னைத் தேடிப் பிசிராந்தை) வருவான்” என்று சொன்ன எம் அரசனின் பெருமையும், அப்பெருமைக்குப் பழுதின்றி ஆக்கி வந்தவனின் அறிவும் எத்தனை முறை வியந்தாலும் வியப்புண்டாகிறது. தன்செங்கோல் இயங்காத (பாண்டிய) தேசத்தில் உறையும் சான்றோனின் நெஞ்சை (உரிமையோடு) அடையப் பெற்ற, பழம்புகழ் பெற்ற அன்னவனை இழந்த இவ்வுலகம் என்னாகும்? இரங்கத்தக்கது தானே?

சோழனை வியந்தே இங்கு பொத்தியார் பாடுகிறார். பிசிராந்தையாரைப் பற்றி ஊடே ஒரு செய்தி வருகிறது. அவ்வளவுதான். அடுத்த பாட்டிற்குள் போவோம்.

அன்புடன்,
இராம.கி. 

No comments: