அண்மையில் ”உண்ணாநோன்பைக் கொச்சைப் படுத்தாதீர்” என்று இலக்குவனார் திருவள்ளுவன் ஒருமுறை இணையத்தில் மொழிந்திருந்தார். இற்றைக் காலத்தில் உண்ணா நோன்பு என்ற சங்ககாலப் பழக்கம் பெரிதுங் கொச்சைப்படுத்தப் பட்டு அதன் மெய்யியற்பொருள் இழிந்து புரிந்து கொள்ளப் படுகிறது. ”இன்னவற்றிற்குத் தான் உண்ணா நோற்பது, இன்னவற்றிற்கு இப்படி நோலவியலாது” என்ற கட்டியங்கள் நீர்த்துப் போய், ஊரை ஏமாற்றும் உத்தியாக இன்றாகிப் போய்விட்டது. உண்ணாநோன்பில் வடக்கிருந்தல் என்பது ஒரு வெளிப்பாடு. அதுபற்றிய சங்ககால விதயங்களைச் சற்று ஆழ உணர்வது ஒரு தெளிவைக் கொணரும். முதலில் பல்வேறு சங்கப் பாடல்களை எடுத்துவைத்து அவற்றிற்குப் பொருளுரைத்துப் பின் தருக்கத்துள் போகிறேன். கூடவே நடந்துவாருங்கள்.
[மகாவீரர், மற்கலி கோசலர், பூரண காசியபர் காலத்தில் உண்ணா நோன்பு என்பது பல்வேறு வகைப்பட்டது. அவை பற்றியெல்லாம் தருக்கத்துள் பார்ப்போம். தொடக்க காலத்தில் உண்ணாநோன்பென்பது சமணக் கருத்து ஆக்கமாகவே கருதப்பட்டது. சமணமென்றவுடன் ”அது செயினத்தை மட்டுமே” குறிப்பதாய் எண்ணிக்கொள்ளக் கூடாது. நம் வரலாற்றிற் சமணம் செயினமாகப் புரிந்துகொள்ளப் பட்டது மிகவும் பிற்காலத்திலாகும். சங்க காலத்திற் சமணம் என்பது ஆசீவிகம், செயினம், புத்தம் என்ற மூன்று பெரும் வேதமறுப்பு நெறிகளையும், இன்னும் சில உதிரி மெய்யியல்களையும் குறிக்கும். புத்தம் .உண்ணா நோன்பைத் தொடக்கத்திற் கொண்டது; பின்னால் அதை மறுத்தது.]
முதலில் புறநானூறு 65 ஆம் பாடலுக்கு வருவோம். இதன் திணை: பொதுவியல்; துறை: கையறுநிலை. சேரமான் பெருஞ் சேரலாதன் சோழன் கரிகாற் பெருவளத்தானொடு பொருது புறப்புண் நாணி வடக்கிருந்தானைக் கழாத்தலையார் பாடியது. இந்தக் குறிப்பு மட்டும் நமக்குக் கிடைக்க வில்லையெனிற் கீழே வரும் புறப்பாட்டே விளங்கியிருக்காது. முதலிற் பாட்டைப் படியுங்கள். புணர்ச்சியைக் கண்டு மருளவேண்டாம். சங்கப் பாடல்கள் பலாப் பழம் போலவே தோற்றமளிக்கும். அவற்றை வகுந்து எண்ணெய் தடவிப் பிசினை விலக்கி, கொட்டையைப் பிரித்துக் கொஞ்சங் கொஞ்சமாய்ச் சுளையைச் சுவைக்க வேண்டும். வாழை போல் தோலை விலக்கி வாய்க்குள் சுவைக்க முடியாது.
மண்முழா மறப்பப் பண்யாழ் மறப்ப
இருங்கட் குழிசி கவிழ்ந்திழுது மறப்பச்
சுரும்பார் தேறல் சுற்ற மறப்ப
உழவ ரோதை மறப்ப விழவும்
அகலு ளாங்கட் சீறூர் மறப்ப
உவவுத்தலை வந்த பெருநா ளமயத்
திருசுடர் தம்மு ணோக்கி யொருசுடர்
புன்கண் மாலை மலைமறைந் தாங்குத்
தன்போல் வேந்தன் முன்புகுறித் தெறிந்த
புறப்புண் ணாணி மறத்தகை மன்னன்
வாள்வடக் கிருந்தன னீங்கு
நாள்போற் கழியல ஞாயிற்றுப் பகலே
- புறம் 65
இந்தப் பாடலின் விளக்கம் கூடுவதற்காக, பாடலுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப் போட்டு கீழே கொடுத்திருக்கிறேன்.
-------------------------------------------
முழா மண் மறப்ப,
யாழ் பண் மறப்ப,
இருங்கண் குழிசி கவிழ்ந்து இழுது மறப்ப,
சுற்றம் சுரும்பு ஆர் தேறல் மறப்ப,
உழவர் ஓதை மறப்ப,
சீறூர் அகலுள் ஆங்கண் விழவும் மறப்ப,
உவவுத் தலைவந்த பெருநாள் அமயத்து,
இருசுடர் தம்முள் நோக்கி,
ஒருசுடர் புன்கண் மாலை மலை மறைந்தாங்கு,
தன் போல் வேந்தன் முன்பு குறித்தெறிந்த
புறப்புண் நாணி மறத்தகை மன்னன்
வாள் வடக்கிருந்தனன்
ஈங்கு நாள்போல் கழியல ஞாயிற்றுப் பகலே.
------------------
இனி ஒருசில சொற்பொருள்களையும் விளக்கக்குறிப்புகளையும் பார்ப்போம்.
மண் என்பது முழவின் வலப்பக்கத் தோலில் பூசப்பட்ட கருமை நிறங்கொண்ட கரணையாகும். அதைச் சோறு,. மண். கருஞ்சாந்து, மார்ச்சனை என்றெல்லாம் சொல்வார். இந்தக் கரணை இரும்புத் தூளாகவும், (இந்தக் காலத்தில் மாங்கனீசுத் தூளாகவும்), பழங்காலத்தில் பொடியாக்கப்பட்ட இரும்புத் தாது ஆகவும் கொள்வர். கரணை பூசப்பட்ட வட்டத்தோலை ஒரு மேசையில் வைத்தால் சப்பைக் கூம்பு போலவே தொல்லின் நடுவிற் கனமாகவும், தோலின் விளிம்புல் தடிமன் இல்லாதும் தோற்றமளிக்கும். இந்த இரும்புத்தூள் பிசினைக் கொண்டு பூசப்படும். மண்ணின் தடிமன் தோல் நடுவிலிருந்து விளிம்பு வரை வேறுபடுவதால் வெவ்வேறு சுருதிகளை எளிதிற் கொண்டு வந்து இன்னிசை எழுப்ப முடியும். மண் இல்லாத முழவு கற்பனை செய்யமுடியாதது. முழவிற்கு மண்ணே உயிர்.
அதே போல யாழ்த் தந்திகளின் தடிமன், நீளம், தந்தத் திகை (tensile stress) ஆகியவற்றைப் பொறுத்துச் சுருதியெழும். யாழில் இருக்கும் தந்திகளின் எண்ணிக்கை, வகைகளைப் பொறுத்து வெவ்வேறு பண்களை எழுப்பமுடியும். தொடக்க காலத்தில் ஒவ்வொரு பண்ணிற்கும் ஒவ்வொரு யாழ் இருந்தது. குறிஞ்சிப் பண் குறிஞ்சியாழில் எழுப்பப்பட்டது. அதே போல் நெய்தற்பண் நெய்தல் யாழில் எழுப்பப்பட்டது. ஒரே யாழை வைத்துப் பல்வேறு பண்களை எழுப்பும் நுட்பம் கிட்டத்தட்ட சங்க காலம் முடிவதற்குச் சற்றுமுன்னர் வந்துவிட்டது. யாழுக்குப் பண்ணே உயிர்.
குழிசி என்பது குடம். பெரிய குடமென்பதால், அதன் வாய்/கண்ணைப் பெரிது படுத்த முடியாது. கண்ணிலிருந்து குடத்தின் அடிப்பாகம் ஆழமாய்த் தெரிவதாற் கண் இருண்டு தெரியும். இருங்கண் குழிசி எனும்போது பெரிய குடம் என்ற புரிதல் நமக்கு வந்துவிடவேண்டும். பெரிய குடங்களிற்றான் இழுது எனும் வெண்ணெய் சேகரிக்கப்படும். வெண்ணெயில்லாப் பெரியகுடம் சற்று முரணான படிமம்.
தேறல் என்பது தெளிந்த கள். ”என்ன கள்?” என்று புலவர் தெரிவிக்கவில்லை. ”வண்டுகள் மொய்க்கின்றன” என்பது மட்டும் தெரிகிறது. தேறலில்லாத சுற்றம் - தமிழர் மேல் புலவரின் சாடல்
அகலுள் என்பது அகண்ட தெரு. சிறியவூர் தன் தெருவின் கண் நடக்கும் விழவை மறந்துவிட்டதாம். விழா இல்லாத சீறூர் தெருவா? அது எப்படி?
புவியின் ஒருபக்கம் சூரியன் என்றால் இன்னொரு பக்கம் நேரெதிரில் நிலவு. பூரணை நாள் இப்படித்தான் இருக்கும். அந்தநாள் மாலையில் சூரியன் மறைகிறான். நிலவு எழுகிறது. ஒரு வேந்தன் அம்பு பட்டுச் சாய இன்னொரு பக்கம் இன்னொரு வேந்தன் முன்னிற்கிறான்.
வில்லால் அம்பு எறிவதும், உடம்பின் முன்பக்கம் தைப்பதும் இழுக்கல்ல. ஆனால் அது உடம்பைத் துளைத்துப் பின்பக்கம் வந்துவிட்டால், அதன் வழி மன்னவன் விழுந்துவிட்டால் அது வீரத்திற்கு இழுக்கு என்ற புரிதல் இருந்திருக்கிறது. ”இவர் வலிமையோடு இருந்திருந்தால் அம்பு உடம்பில் இருந்து வெளிவராது தடுத்திருக்க முடியுமே? - என்ற தொன்மம் இங்கு வேலைசெய்கிறது.
வடக்கிருந்த போது வாளும் சேர்ந்து இருக்கவேண்டும். ஏன் வடக்கு என்பதைத் தருக்கத்திற் பார்ப்போம். இப்பொழுது முழுப்பொருளுக்கும் வருவோம்.
__________________________
தோலிற் பூசிய மண்ணை, முழவு மறந்தது போல்,
தந்திக்குள் உறைந்த பண்ணை, யாழ் மறந்ததுபோல்,
உள்ளிருந்த வெண்ணெயை, இருண்ட கண்ணுள்ள குடம் கவிழ்ந்து மறந்ததுபோல்,
வண்டு மொய்க்கும் கள்ளை, சுற்றத்தார் மறந்ததுபோல்,
தம் தொழிலோடு எழுப்பும் பாடல்களை, உழவர் மறந்ததுபோல்,
விழாவை, அகன்ற தெருவுடைய சீறூர் மறந்ததுபோல்,
பூரணை நாள் அமையம், இரு சுடரும் ஒன்றையொன்று நோக்கும் போதில், புல்லிய மாலைப்போதில், மலையின் பின் ஒருசுடர் மறைந்தது போல்,
தன்னையொத்த வேந்தன், தன் மாரைக் குறித்தெறிந்த வேல், தன் பின்புறம் வழியே வெளிப்பட்டதுகண்டு நாணி, மறங்கொண்ட மன்னன் தன் வாளோடு உயிர் மறைவான் வேண்டி வடக்கிருந்தனன்.
இங்கு நேற்றுக் கழிந்த இரவுபோல், சூரியன் நிறையும் இப் பகல் இனிக் கழியாது.
____________________________
மேலே உயிர் போலிருந்தவை மறந்ததுபோல், மறைந்ததுபோல் என்பதால் இங்கு உயிர் பிரிய வடக்கிருந்தது சொல்லப்படுகிறது. இந்த உவமைகள் தான் நமக்குப் பொருளை உணர்த்துகின்றன. உவமைகள் இல்லெனில் வடக்கிருத்தலின் பொருள் புரியாது. இனி அடுத்த புறப்பாட்டிற்குப் போவோம்.
அன்புடன்,
இராம.கி.

No comments:
Post a Comment