Monday, October 15, 2018

உண்ணா நோன்பும் வடக்கிருத்தலும் - 10

 இப்பொழுது, காலவொழுங்கு கருதி, அடுத்துவரும் புறம் 217 க்குட் போகாது, புறம் 212 க்குள் போகிறோம். இப்பாட்டின் திணையும் பாடாணே. துறை: இயன் மொழி. உறையூருக்கருகில் கோப்பெருஞ் சோழன் வடக்கிருக்குஞ் செய்தி பாண்டிய நாட்டைச் சேர்ந்த ”சோழக் கிறுக்கன்” பிசிராந்தைக்கு உடனேயே தெரியவில்லை. அவன் சோழனைப்பற்றிப் பிதற்றிக்கொண்டே இருக்கிறான். (பேதையும், பிதற்றலும் தொடர்புள்ள சொற்கள்.) உண்ணாது நோன்ற சோழன் தெற்கத்தி உணவைப்பற்றி ஏக்கத்தோடு பேசியதைச் சென்ற பகுதியிற் பார்த்தோம். இங்கோ, உணவாலும், மதுவாலும் ஒயில் காட்டும் சோழநாட்டுப் பெருமையை, பசிப்பகைச் சிறப்பை, வறள்நாட்டுப் புலவன் பாடுகிறான். உணவு என்றால் அப்படியொரு உணவாம், நல்ல நாள், பெரிய நாளில் மட்டுமே பாண்டிநாட்டானுக்குக் கிடைக்கும் விதப்பான கறியுணவாம்; கூடவே உடம்பைச் சூடேற்றுங் கள். முதலிற் பாட்டைப் படியுங்கள்.   

நுங்கோ யாரென வினவி னெங்கோக்
களமர்க் கரித்த விளையல் வெங்கள்
யாமைப் புழுக்கிற் காமம் வீடவாரா
ஆரற் கொழுஞ்சூ டங்கவு ளடாஅ
வைகுதொழின் மடியு மடியா விழவின்
யாணர் நன்னாட் டுள்ளும் பாணர்
பைதற் சுற்றத்துப் பசிப்பகை யாகிக்
கோழி யோனே கோப்பெருஞ் சோழன்
பொத்தி னண்பிற் பொத்தியொடு கெழீஇ
வாயார் பெருநகை வைகலு நக்கே

                                                                            - புறம் 212

இப்பாடலின் விளக்கம் கூடுவதற்காக, பாடலுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப் போட்டுக் கீழே கொடுத்திருக்கிறேன்.

நும் கோ யார் என வினவின்
எம் கோக்
களமர்க்கு அரித்த விளையல் வெம் கள்
யாமைப் புழுக்கின் காமம் வீழ்த ஆரா
ஆரல் கொழும் சூடு அங்கவுள் அடாஅ
வைகு தொழில் மடியும் மடியா விழவின்
யாணர் நல் நாட்டுள்ளும்
பாணர் பயிதல் சுற்றத்துப் பசிப்பகை ஆகிக்
பொத்தில் நண்பின் பொத்தியொடு கெழீஇ
வாயார் பெரு நகை வைகலும் நக்கே
கோப்பெருஞ் சோழன் கோழியோனே

இனி ஒருசில சொற்பொருள்களையும் குறிப்புகளையும் பார்ப்போம்.

தொடக்கமே ஒரு சாற்றுரை (declaration) போல் தோற்றுகிறது. பாண்டியன் அறிவுடைநம்பியை ஏற்கனவே பார்த்து, நல்லதை ஓதிய பிசிரோன், சோழப் பித்து தலைக்கேறி, “நும் கோ யார் என வினவின் எம் கோ” என்று தொடங்குகிறான்.

களமர் என்பார் field workers, agricultural labourers. உழவரெனும் (farmers) நிலக் கிழாரிலும் வேறுபட்டவர். ஒவ்வொரு நாட்டிலும் இயல்பாகக் களமர் இருந்தாலும், நெல் வேளாண்மையில் மானவப் பங்காற்றம் (manual participation) அக்காலத்திற் கூடவே தேவைப்பட்டது. 1960, 70 களிற் கூடக் பாண்டிக் களமர் தம் புன்செய் வேளாண்மையை விட்டு காசு,பணத்திற்காக வேலை நாடிச் சோழநாடு சென்றார். (உள்ளூர்க் களமரை ஒதுக்கி, ஊரலையும் களமரைப் பண்ணைக்குப் பயன்படுத்தி ஓராயிரஞ் சண்டைகளைக் கிளப்பியதும் பல காலம் நடந்திருக்கிறது.) அதற்கும் முன்னால் கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்குப் பாண்டியிலிருந்து பர்மா சென்றார். (பர்மா வளமே பாண்டி வறள்நிலக் களமரால் எழுந்தது.) அதற்கும் முன் எங்கெல்லாம் போனாரோ? நமக்குத் தெரியாது. நெல் விளைச்சலுக்காகப் பாண்டிக் களமர் நாடு விட்டு நாடு போனது ஒரு தொடர்கதை. நெற்சோற்று நினைவுகள் நாவில் நீரூறும் அளவிற்குப் பாண்டிநாட்டாருக்கு அவை நிறைந்தேயிருந்தன. இங்கு பிசிரோனுக்கும் இருந்தது.

வெம் கள் என்பது வெம்மையான கள்; கடுக மயக்குங் கள்; வீரியமான கள்; highly intoxicating liquor. வெறியத்தின் (alcohol) செறிவு (concentration) கூடக்கூட கள்ளின் வெம்மை (இங்கு வீரியம் என்று பொருள் கொள்ளும்; சூடெனும் இயல்பான பொருள் அமையாது.), தள்ளாட வைக்கும் தன்மை, குதூகல உணர்வு, கூடும். கள்ளைத் தொடர்ந்து குடித்துப் பழகியோர் வெங்கள்ளையே நாடுவர். கதிரோன் எழுந்ததிலிருந்து 8,10 மணிநேரம் களத்திற்படும் களமர் தம்சோர்வு தீர்க்க வெங்கள்ளைத் தேடுவது வியப்பில்லை. அடுத்த நாள் வேலைசெய்ய வேண்டுமே? தூக்கத்திற்கு என்ன செய்வது? விளையல் வெங்கள் என்பது விளைய வைத்த வெங்கள்ளாகும். அதாவது முதிர்ந்த கடுங்கள். பனஞ்சாற்றோடு நொதியத்தைச் (enzyme) சேர்த்து நாட்பட நாட்பட (நாட்படுவதே முதிரவைத்தலாகும்.) வேதிவினை கூடிச் சர்க்கரைப் பொருள் வெறியமாகிறது. முதிர்ந்த கள்ளில் வெறியச் செறிவு கூடியிருக்கும்.

அரித்தலென்பது விவரமாய் அறியவேண்டிய பூதிகச் செலுத்தமாகும் (physical process). பல்வேறு துகள் அளவுகள் (particle sizes) கொண்ட பொடியைச் சலித்துப் பரும அளவாற் பிரித்தெடுப்பது அரித்தலாகும். சல்லடை மேல் தேய்த்துத் தேய்த்துப் பிரிப்பதால் அரித்தலாயிற்று. நெல்லரைத்தபின் அரிசி-உமியைச் சுளகாற் புடைத்துப் பின் சலிக்கிறோம். இவ்வகை அரித்தலில் திண்மத் துகள்களே பிரிபடும். இன்னொருவகை அரித்தலில் திண்மத் துகளோடு நீருங் கலந்திருக்கும் அதாவது ஒரு கலங்கலை திண்மத்துகள் - நீர் எனப் பிரிக்காது திண்மப் பெருந்துகள் (large solid particles) ஒரு பகுதியாகவும், திண்ம நூகத் துகளும் (micro solid particles) நீரும் இன்னொரு பகுதியாகவும் பிரிப்பதாகும். இதைப் புரிந்துகொள்ள, இன்னும் இருவேறு செலுத்தங்களைத் (processes) தெரியவேண்டும்.

ஒரு கலங்கலிலிருந்து சாய்த்து வார்த்துத் (decantation) தெளிநீரைப் பிரிக்கிறோம். முற்றிலும் நீரைப் பிரிக்க வடித்தலைப் (filtration) பயன் உறுத்துவோம். இதில் வடிதை filtrate; வடிக்கசடு filtered material. வடிக்கசட்டிற் பல்வேறு நூகத் (microns) துகள்களுண்டு. ஒரு குறிப்பிட்ட நூகத்திற்கு (காட்டாக 500 நூகம்) மேலே பருமனுள்ள துகளை வடிக்கசட்டில் இருத்தி, கீழுள்ள நூகங்களை நீரோடு சேர்த்துப் பிரிப்பதே 2 ஆம் வகை அரித்தலாகும். கள்ளைப் பிரிப்பதில் இவ்வகை அரித்தலே பயன்படுகிறது. கள்ளென்பது சர்க்கரையோடு இலைகள், கடுக்காய், பல்வேறு சரக்குகளைச் சேர்த்துப் பொடித்துப் பின் நொதியமோ (enzyme), கொதியமோ (yeast), பட்டுயிரியோ (bacterium), உள்ளிட்டு, வெறியம் உருவாகிறது. நொதிவிணை கணிசமாய் நடந்தபின், தெளிந்ததை மட்டுமே கள்ளாகப் பிரிப்பதில்லை. அரித்துப் பிரித்த துருப்படைக் (turbid) கள்ளே நுகரப் படுகிறது. [சப்பான்நாட்டு தோப்பிக் கள்ளான (அரிசிக் கஞ்சியிற் செய்த கள்) சாக்கேயிலும் தெளிவு, துருப்படை என்ற 2 வகையுண்டு.] எனவே ”களமர்க்கு அரித்த விளையல் வெங்கள்” என்பது “களமருக்காக அரித்த முதிர்கடுங் கள்(ளொடு)” என்று பொருள்படும்.

அடுத்தறியவேண்டியது புழுக்கலெனுஞ் சொல்லாகும். புள்ளுதலென்பது துளையிடுதலைக் குறிக்கும். தண்நீரைச் சூடேற்றும்போது குறிப்பிட்ட வெம்மையில், நீர் நுரைக்கத் தொடங்கும். ஒவ்வொரு நுரைக் குமிழுள்ளும் புரை, துளை அல்லது ”புள் (குமிழ்)” இருக்கிறது. தொடர்ந்து குமிழ்வதை நுரைத்தல், புழுங்குதல், கொதித்தல் (boiling) என்கிறோம் நீரோடு நெல்லைச் சேர்த்து பாதியளவு கொதித்ததை உமி எடுத்த பின்னாற் புழுங்கரிசி (parboiled rice) யென்போம். புழுங்கா நெல்லின் உமியை எடுத்த பின்னாற் பச்சரிசி (raw rice) என்போம். பொதுவாகப் பச்சரிசியாற் சோறானதைப் பொங்கலென்றும், புழுங்கரிசியாற் சோறானதைப் புழுக்கென்றும் அழைப்பர்.

யாமைப் புழுக்கு, யாமைக்கறியும், புழுக்கும் சேர்ந்த புலவுசோறாகும். ”புலவு சோறு” இக்காலத்தின் Biriyaani யைக் குறிக்கிறது. இதைச் சோறு தவிர்த்துப் புலவென்றும் (pilav என ஆங்கிலத்திற் திரித்து எழுதுவார்.) சிலர் சொல்கிறார். வெவ்வேறுவகைப் புலவுகளைச் சேர்த்து, கோழிச்சோறு (Chicken Biriyaani), மீன்சோறு (Fish Biriyaani), நிணச்சோறு  (Mutton Biriyaani) முட்டைச்சோறு (Egg Biriyaani), என விதவிதமாய் இக்காலஞ் செய்வதுபோல் அக்காலம் யாமைப் புழுக்கையுஞ் செய்திருக்கிறார். யாமைக்கறியோடு வெவ்வேறு மணப் பொருள்களையும், சரக்குகளையும் சேர்த்துச் சமைத்துச் சோறோடு கலந்திருக்கலாம். என்ன கலவையோ? தெரியவில்லை. அதுவும் மாந்தர் சாப்பிடும் நன்னீர் ஆமைக்கறியாகலாம். ஏனெனிற் கடலாமைகள் கடற்பஞ்சு எனும் உயிரினத்தைச் சாப்பிடுவதால், அதன் நஞ்சு ஆமைகளுக்கு ஏறும்; ஆமைகளுக்கு ஏதுஞ்செய்யாத நஞ்சு, ஆமைக்கறி சாப்பிடும் மாந்தருக்கு ஊறுவிளைவிக்கும். (இவ்விவரங்கள் முழுதும் எனக்குத் தெரியவில்லை. விலங்கியல் அறிவுள்ளவர் இதை ஆயவேண்டும்.) ”யாமைப் புழுக்கின் காமம் வீழ்த ஆரா” என்ற தொடர் ”ஆமைச் சோறின் வேட்கை வீழும்படி ஆர்ந்து” என்ற பொருள் கொள்ளூம்.

அடுத்தது ஆரல்பற்றிய செய்தியாகும். இந்நன்னீர்மீன்கள் ஆறு, குளங்களில் நீரின்மேற் கிளம்பாமல், அடிமணலுக்கருகில், மண்/சேற்றிற் புதைந்தும், திரியும். நீராழத்திற் திரிவதால் ஆழல்>ஆரல் என்று இவைகளின் பெயர் ஆயிற்று. (ஆராலென்றுஞ் சொல்லப்படும்.) கூர்மோவாய் கொண்ட இவைகள் விலாங்குமீன் போல வளைவதால், மணல் விலாங்கு (Brownish or greenish sand-eel; Rhynchobdella aculeata), பாம்புமீன் என்றும் அழைப்பதுண்டு. சேற்றாரல், சிற்றாரல், பேயாரல், கல்லாரல், கிழங்காரல் என்பவை இவற்றின் வகைகளாகும். ஆரலும், வராலும் முற்றிலும் வெவ்வேறு மீன்களாகும். இரண்டையும் குழப்பிப் புரிந்து சில தமிழ் அகரமுதலிகள் ஒன்றாய்ப் பதிந்திருக்கின்றன. ஆனாற் புறம் 18 இல் 9 ஆம் வரியில் “நுண் ஆரல், பரு வரால்” என இரண்டு மீன்களும் தனித்த இருப்போடு அடுத்தடுத்துக் குறிக்கப்படும். கார்த்திகை நாள்மீனை அறுமீன் என்பதால் ஆறு+ அல்= ஆறல்>ஆரல் என்ற பெயரும் இதனோடு ஒலியொப்புமை காட்டும். "ஆரல் கொழும் சூடு அங்கவுள் அடாஅ" என்று வருந் தொடர் "கொழுத்த ஆரலை மூடியகதுப்பில் அடைத்து" என்ற பொருள்கொள்ளும். கவுள்= கன்னக்கதுப்பு; அங்கவுள்= மூடிய கன்னக்கதுப்பு’ அங்குதல்= முடல். அடவு>அடா= அடைப்பு

வைகு தொழில்= (மயக்கத்திற்) தங்கல்; மடியுமென்பது சாயுமெனவும் பொருள்படும். ”இவ்வளவு கள்ளைக் குடித்து, கறிச்சோறு சாப்பிட்ட களமர் சாய்ந்து விட்டார்” என்றிங்கே விளங்கிக் கொள்ளலாம்.. மடியா விழவு என்பது சாய்ந்து விடாத, முடிவிலாத விழா. ”விடியவிடிய முடியாத விழா” என்போம் இல்லையா? ”வைகு தொழில் மடியும் மடியா விழவின்” என்ற தொடர் ”மயக்கத்திற் சாயும் முடிவிலா விழாவுடைய” என்று பொருள் கொள்ளும். யாணருக்குப் பல உரையாசிரியரும் ”புதுவருவாய்” என்ற பொருளையே தந்து பூசிமெழுகுவார். ஆனால் ”யாணருக்கு” இன்னும் பல பொருள்கள் உண்டு. ”யாணர் நல்நாட்டுள்ளும்” என்பதற்கு ”வளமுள்ள நன்னாட்டுள்ளும்” என்பதே பொருத்தமாய்த் தெரிகிறது.

பாணரென்போர் ஊரூராய்ப் பாடிப் பரிசில்பெறுபவர். இடதுசாரிக் கருத்துள்ள இற்றைத் தமிழறிஞர், புலவரையும், பாணரையும் தனித்தனியாகப் பார்த்து, ”பாணர் என்போர் முந்தையர், படியாதவர், தான்தோன்றிகள்; புலவர் என்போர் பிந்தையர்; படித்தவர், கற்றுச்சொல்லிகள்” என்று தங்களின் விதப்பான தேற்றங்களை எடுத்துப்புகல்வர். புலவர் பாணரைப் போல்மமாக்கிப் பாடி யிருக்கிறார் என்றுஞ் சொல்வார்  இப்பாடலைப் படித்தால் எனக்கு அப்படி யெல்லாந் தோன்றவில்லை. பிசிராந்தையாரென்பார் புலவரா, பாணரா?- என்று இதன்படி முடிவுசெய்வது கடினமான கேள்வி. உண்மையில் அவர் புலவராயுந் தெரிகிறார்; பாணராயுந் தெரிகிறார். எனக்குப் புரிந்தவரை பாணர்/புலவர் என்ற பிரிப்பு இடதுசாரிக் கருத்தாரின் தற்குறிப்பேற்றமாகவே தெரிகிறது. பாடியவன் பாணன்; புலந்தவன் புலவன். என்பதே தமிழரின் புரிதல். ஒருபாணன் புலவனாய்ப் புலந்தெளியலாம். ஒருபுலவன் பாணனாய்ப் பாடவுஞ் செய்யலாம். பாணரோ, புலவரோ, வளமை, பணம், காசு என்பதிற் தடுமாறியே போயுள்ளார். பயிதல்= படிதல், வாடுதல். படி>பயி>பசி என்றும் திரிவேற்படும். பயிதற் சுற்றம்= வாடுஞ் சுற்றம். பசிப்பகையாதல்= பசியை விரட்டும்படி பகைத்தொழில் செய்தல்; ”பாணர் பயிதல் சுற்றத்துப் பசிப்பகை ஆகி” என்ற தொடருக்கு ”வாடிய பாணர்சுற்றத்துப் பசிக்குப் பகையாகிய” என்று பொருள் கொள்ளலாம். சோழனின் வள்ளன்மையைக் குறிக்கும் தொடராகவே இதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

கோப்பெருஞ்சோழனுக்கும், பொத்தியாருக்கும் இருந்த நட்பு பாண்டியநாடு வரை தெரிந்திருக்கிறது. ”பொத்தில் நண்பின் பொத்தியொடு கெழீஇ வாயார் பெரு நகை வைகலும் நக்கே” என்ற தொடரை “புரைபடா நட்பின் பொத்தியோடு பொருந்தி வாயாருஞ் சிரிப்பொடு நாடோறும் மகிழும்” என்று பொருள்கொள்ளலாம். கடைசியாகக் “கோழி யோனே கோப்பெருஞ் சோழன்” என்று வரும். கோழியூர் என்பது உறையூரைக் குறிக்கிறது. சந்தனம்/சாரல் பூசிய இனக்குழு சாரல்>சாரலர்>சேரலர் என்றும், பாண்டில் (= சாம்பல்) பூசிய இனக்குழு பாண்டியரென்றும், கோழிநிறம் (= சிவந்த பொன்னிறம் அமிலச் செறிவைப் பொறுத்து இது மஞ்சளும்/சிவப்புமாய் மாறும் ஒரு வேதிப் பொருளின் நிறம் கோழி. கோழியூர்= உறையூர்) பூசிய இனக்குழு கோழி> சோழி>சோழியர் என்றும் அழைக்கப்பட்டன. இன்றைக்கும் சாரல் (=சந்தனம்), திருநீறு, மஞ்சள்/குங்குமம் ஆகியவற்றின் மிச்ச சொச்சம் எல்லாத் தமிழர்/மலையாளிகளிடையே பெரிதும் விரிவாய்ப் பரவியிருப்பதை உணர்ந்தால் இனக்குழுப் பழக்கம் எங்கிருந்து பிறந்ததென உணரமுடியும். சாரல், திருநீறு, மஞ்சள்/குங்குமம் பூசும் பழக்கங்கள் உறுதியாகச் சமயநெறி சார்ந்தவை அல்ல.

[இவற்றை வடவர் தேடி அணிவதில்லை என்பதை எண்ணிப்பார்க்கலாம். தென்னாட்டிற்கு வந்தால் நம்மைப் பார்த்து அணிவர்.] அவை இனக்குழு (tribal) சார்ந்த வழக்கங்கள். இன்றும் ஆத்திரேலியப் பழங்குடிகள் பண்டிகை நாட்களில் பல்வேறு வண்ணங்கள் பூசித் தம்மை அடையாளம் காண்பிப்பதை ஓர்ந்துபார்க்கலாம். [அவரில் ஒருகுடியினர், தென்பாண்டியினர் போலவே முப்பட்டைத் திருநீறை உடலெங்கும் அணியும் வழக்கமுண்டு. நம்மூர்ச் சிவநெறியா அவருக்கிருக்கிறது? ஓர்ந்துபாருங்கள்.] ஆத்திரேலியப் பழங் குடியினரும், பழந்தமிழரும் ஈனியல் முறையில் உறவுகொண்டவர் என்ற ஆய்வு முடிபையும் இங்கு எண்ணிப்பார்க்கலாம். மஞ்சள்/குங்குமம் இட்டுக்கொள்ளும் பழக்கமும் சோழநாட்டுப் பழக்கம் தான்.]

பாட்டின் மொத்தப்பொருளை கீழே தந்திருக்கிறேன்.
-------------------------------------------------------
நும் அரசன் யாரென வினவின்
எம் அரசன்,
”களமருக்காக அரித்த முதிர்கடுங் கள்(ளொடு),
ஆமைச்சோறின் வேட்கை வீழும்படி ஆர்ந்து,
கொழுத்த ஆரலை மூடியகதுப்பில் அடைத்து,
மயக்கத்திற் சாயும் முடிவிலா விழாவுடைய
வளமுள்ள நன்னாட்டுள்ளும்,
வாடிய பாணர்சுற்றத்துப் பசிக்குப் பகையாகி
புரைபடா நட்பின் பொத்தியொடு பொருந்தி,
வாயாருஞ் சிரிப்போடு நாடோறும் மகிழும்
கோப்பெருஞ் சோழனெனும் கோழியோனாவான்.
--------------------------------------------------------

முதலிற் படிக்கும்போது கடிதாய்த் தோற்றினும், பாடல் புரியச் சரவலில்லை. தவிரப் பிசிராந்தையாரும் மெய்யியல் சார்ந்தவராய், கருத்தியற்காரராய், இப்பாட்டில் சட்டெனத் தெரியவில்லை. ஆனால் ஆந்தையார் என்றசொல் என்னை வேறுபக்கம் இழுக்றது. அந்தை>ஆந்தை என்பது அச்சன்/அப்பன் என்ற பொருள்கொண்டது..இன்றும் மலையாளத்தில் கிறித்துவத் தேவாலயப் பூசாரியை, மதத்தில் தம்மை முன்னெடுத்துச் செல்பவரை, :”அச்சன்” என விளிப்பார். சொந்த அச்சன்போல் கருதப்படக் கூடியவரென்ற பொருள் அதற்கு உண்டு. இத்தகைய பழக்கம் பல்வேறு நாடுகளிலுண்டு. சங்க இலக்கியம் முழுதும் ”ஆந்தையார்” பெயர் ஒருவேளை இனக்குழுப் பூசாரியை உணர்த்தியதோ?” என்று நான் எண்ணியதுண்டு. பிசிராந்தையார் பிசிர் ஊரின் பூசாரியோ? அதாவது ஐயனார் கோயில் பூசாரியோ?) இப்பூசாரி கோப்பெருஞ்சோழன் மேல் தணியாத நட்புரிமை கொண்டவராகய்க் காட்சி அளிக்கிறார். அடுத்தடுத்த பாடல்களைப் படிக்க ஆவலெழுகிறது..

அன்புடன்,
இராம.கி.

No comments: