Tuesday, October 09, 2018

உண்ணா நோன்பும் வடக்கிருத்தலும் - 4

பெருஞ்சேரலாதன் (கி.மு.130-105) வடக்கிருந்ததையும், 2 ஆம் கரிகாலன் அவனை வென்றதையும் கண்ட நாம் இனிக் கோப்பெருஞ்சோழனெனும் பெருங்கோக்கிள்ளியைச் சற்று விரிவாகவே பார்க்கப் போகிறோம். 2 ஆம் கரிகாலன், புகாரைக் கொண்ட, நாகநாட்டையாண்ட, உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியின் மகனாவான். கரிகாலனுக்கும், பெருங்கோக் கிள்ளிக்கும் இடைக்காலம் எவ்வளவு என்று தெரியவில்லை. சோழநாட்டைச் சேர்ந்த உறையூர்க் கிள்ளிகளும் புகார்ச் சென்னிகளும் ஒருவருக்கொருவர் பங்காளிகளாவர். (கிள்ளிகள் புகாரிலும், சென்னிகள் உறையூரிலும் மாறி ஆண்டதும் உண்டு.) செந்நி>சென்னி என்ற சொல் சிவப்புணர்த்தியது போற் (செம்பியனும் இதேபொருள் தான்.) கிள்ளியென்ற பெயர், ஒளி/மஞ்சளை உணர்த்தியது. காடிச்செறிவில் (acidic concentration) மஞ்சளும், சுண்ணஞ் சேர்த்தபின் களரிச்செறிவிற் (alkaline concentration) சிவந்த குங்குமமும் சோழர் இனக்குழுவின் அடையாளங்களாகும். (பாண்டியர்க்கு (பாண்டு = வெள்ளை) நீறும், சேரர்க்குச் சந்தனச்சாரலும் அடையாளங்களாகும். இன்றுந் தமிழர் தம் மெய்யிற் பூசும் நீறு, சாரல், மஞ்சள்/குங்குமம் ஆகியவை சமயக்குறிகளே அல்ல; அவை இன்னும் மறையா இனக்குழு எச்சங்களாகும்.)

கிள்ளி= ஒளியன், சூரியகுலத்தான். கொல்>சொல்>சொலிப்பு ஒளிப்பொருளே தரும். சொல் வழி, solar எனும் இந்தையிரோப்பியச்சொல் சூரியனை உணர்த்தும். சொல்+ஐ= சொலை>சோலை>சுவாலை பொன்னிற flame. சொல்> சோல்>சோழன்= ஒளிரும் சூரிய குலத்தான். கொல்லெனும் வேர்ச்சொல்லிற் தோன்றிய கோழி/கோழியூர்= உறையூர்= பொன்னிக்கு அருகில் கோழியர்/சோழியர் ஊர். புறப்பட்ட இடத்திலிருந்து பொற்றுகள்களைப் பெற்றுக் கொழித்தோடும் பொன்னியைப் போல், கோழியூருக்கும் கொழுது (gold) நிறத்திற்கும் தொடர்புண்டு போலும். (கோழி பறந்தது; அது யானையை எதிர்த்தது; இது வீரம்விளைந்த மண்ணென எண்ணிச் சோழன் தலைநகர் வைத்தானென்ற புனைகதையை நானேற்பது கடினம்.) கோழித்தலைக் கந்தகம்= சிவந்த கந்தகமெனிற் கோழிக்கொண்டை சிவந்தது தானே! 

இங்குபார்ப்பது கோப்பெருஞ்சோழனை பிசிராந்தையார் பாடிய புறம் 67ஆம் பாட்டாகும். திணை பாடாண். புகழ், வலிமை, கொடை, அருளெனும் நல்லியல்பு சொல்லித் தலைவனைப் பாடல் பாடாண் திணையாகும். ”அகத்திணை ஐந்தும், புறத்திணை ஆறும் புதலியற் பெயர்களைக் கொள்ள, ஏழாம் புறத்திணையான ’பாடாண்’ மட்டும் எப்படி வேறுபடும்?” என்ற கேள்விக்கு விடையாய்த் தி.பி.2043 இல் (கி.பி.2012 இல்) உலகத் தமிழ்மொழி மெய்யியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனம் வெளியிட்ட “தமிழர் மெய்யியலும் அறிவுமரபும்” நூலில் (மனிதம், 54, இராசாராம் தெரு, கலைஞர் கருணாநிதி நகர், திருச்சி-2) ”பாடாண் திணை- ஒரு மூலிகை மருந்தறிவியல் ஆய்வு” என்றதோர் அருங்கட்டுரையைப் பேரா. இரா.குமாரசுவாமி வெளியிட்டார். இதிற் பாடாணைப் பாடு + ஆண் எனப் பிரித்துப் பாடிற்கு இறப்புப்பொருள் உணர்த்தி, ”பல்வேறு நஞ்சுகளை முறிக்கும் மரத்தை ஆண்மரமாய்” மரபுசார் மருத்துவஞ் சுட்டுவதுஞ் சொல்லி, ஆண்மரம் (தொல்காப்பியம்) சங்க காலத்தில் ஓமையானதுஞ் சொல்லி (உயிர் ஓமுவது/ஓம்புவது ஓமை; ஓம்= காப்பாற்று.), பிற்காலத்தில் அழிஞ்சில், அங்கோலமென்று பெயர்பெற்றதுஞ் சொல்லி அடையாளங்காட்டுவார். இப்பாட்டின் துறை இயன்மொழி என்பர். 
     
அன்னச் சேவ லன்னச் சேவ
லாடுகொள் வென்றி யடுபோ ரண்ணல்
நாடுதலை யளிக்கு மொண்முகம் போலக்
கோடுகூடு மதிய முகிழ்நிலா விளங்கும்
மையன் மாலையாங் கையறு பினையக்
குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி
வடமலை பெயர்குவை யாயி னிடையது
சோழநன் னாட்டுப் படினே கோழி
உயர்நிலை மாடத்துக் குறும்பறை யசைஇ
வாயில் விடாது கோயில் புக்கெம்
பெருங்கோக் கிள்ளி கேட்க விரும்பிசிர்
ஆந்தை யடியுறை யெனினே மாண்டநின்
இன்புறு பேடை யணியத்தன்
நன்புறு நன்கல நல்குவ னினக்கே 

                                                                    - புறம் 67

இப்பாடலின் விளக்கம் கூடுவதற்காக, பாடலுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப் போட்டு கீழே கொடுத்திருக்கிறேன்.

அன்னச் சேவல்! அன்னச் சேவல்!
ஆடுகொள் வென்றி அடு போரண்ணல்
நாடு தலையளிக்கும் ஒண்முகம் போலக்
கோடு கூடு மதியம் முகிழ்நிலா விளங்கும்
மையல் மாலை யாம் கையறுபு இனையக்
குமரியம் பெருந்துறை அயிரை மாந்தி
வடமலை பெயர்குவையாயின்
இடையது சோழ நல்நாட்டுப் படினே
கோழி உயர்நிலை மாடத்துக் குறும்பறை அசைஇ
வாயில் விடாது கோயில் புக்கு
எம் பெருங்கோக் கிள்ளி கேட்க
இரும் பிசிர் ஆந்தை அடியுறை எனினே
மாண்ட நின் இன்புறு பேடை அணிய,
நினக்கே தன் நன்புறு நன்கலம் நல்குவன் 

ஒருவகையிற் பார்த்தால் இதுவே தமிழில் தூதிலக்கிய முதற்பாட்டாகும். அன்னமெனும் முதற்சொல்லே சட்டென்று கவனம் ஈர்க்கிறது. குமரியந் துறையிருந்து வட இமையம் வரைப் பறக்கும், தமிழகஞ் சேரா விருந்தாளி அன்னங்களிற் சேவலையழைத்து, பெருங்கோக்கிள்ளியிடம் பிசிராந்தையார் கேட்கச்சொல்கிறார். அன்னத்தை வடமொழியில் ஹம்சமென்றும், மேலை மொழிகளில் Swan/zwaan என்றும் அழைப்பர். Luft-hansa என்ற செருமானியப் பறனைக்குழுமப் (airlines) பெயரையும் எண்ணிப்பார்க்கலாம். அன்னத்திற்கும் இந்தையிரோப்பிய இணைகளுக்கும் உள்ள கொடுக்கல்-வாங்கலைப் பார்த்தாற் செய்திகள் விரியும். அன்னச்சொல் நம்மூரிற் பிறந்ததுமில்லை; தமிழ்வேர் அதில் இல்லாதுமில்லை. அன்னத்தின் வாழிடம் குளிர்நிலமாகும். கோடையில் தண்படு (temperate) நாடுகளில் வாழ்ந்து, பின் வாடையில் வெப்ப நாடுகளுக்கு வந்துசேரும். இப்பாடலெழுந்தது நம்மூர் வெதணம் (climate) தண்ணிலைக்கு வந்து, பனிபெயும் மார்கழி, தை, மாசியாகலாம். பனியும் (dew), சிலிரும் (chill), சிந்தும் (snow), ஆலியும் (ice) வெவ்வேறானவை. அதோடு 2000 ஆண்டுகள்முன், புவியின் நிரவல் (average) வெம்மை இன்னும் 2 பாகை செல்சியசாவது குறைந்திருக்கும். அப்போது நம்மூர் நீர்நிலைகளுக்கு அன்னம் வந்திருக்கலாம். இன்றோ, இராசசுத்தானுக்குத் தெற்கே அன்னம் வருவதே இல்லை. புவிச்சூடேற்றம் (earth warming) கட்டாயம் நடந்துள்ளதைப் பிசிராந்தையார் பாடல்வழி நாம் உணரமுடியும்.

அடுத்த வரியில் முழுமதிக்குப் பிசிராந்தையார் உருவகஞ் சொல்கிறார். ”ஆடுதல்” என்பது பொருதலைக் குறிக்கும். ஆடுகொள் வென்றி= பொருதலிற் பெற்ற வெற்றி. போரண்ணல்= போர்த்தலைவன்.  அடு போரண்ணல் என்பது வினைத்தொகை, இங்கே விதப்பாய் இறந்தகாலங் குறிக்கிறது. அடுதல்= அடைதல். அடு போரண்ணல்= அடைந்த போர்த்தலைவன். அதாவது பொருதல் வெற்றியடைந்த போர்த் தலைவன் எனலாம். நாடு தலையளிக்கும்= விரும்பி அருள்காட்டும்; ஒண்முகம்= ஒளிமுகம். ”பொருதல் வெற்றியடைந்த போர்த் தலைவன் விரும்பி அருள்காட்டும் ஒளிமுகம்” என்பது 2, 3ஆம் அடிகளுக்குப் பொருந்தும்.

”கோடு கூடு மதியம் முகிழ்நிலா விளங்கும் மையல் மாலை யாம் கையறுபு இனைய” என்பதற்குப் பொருளறிய முதலில் “கோடு கூடு மதியம்” என்பது புரியவேண்டும். பதிற்றுப்பத்து 31:12 இலும் இது வருகிறது. பொதுவாகப் பிறைநிலவிற்கு 2 முனைகளுண்டு. கோடென்பது முனையைக் குறிக்கும். பிறை வளரவளர 2 கோடுகளும் நெருங்கிவரும். அவையிரண்டுங் கூடுகின்ற மதியம், பூரணை முழு மதியைக் குறிக்கும். அடுத்தது நிலவென்ற சொல். இதன் முதற்பொருள் ஒளியே. (அப்பொருளிற்றான் புலவர் பயில்கிறார். சில நேரங்களில் நிலா, மதியத்திற்கும் பகரியாகும்.) ”மதியம் முகிழ்நிலா விளங்கும்” என்பது ”மதியம் முகிழ்த்துவரும் ஒளியால் விளங்கும்” என்ற பொருளையுணர்த்துகிறது. மேலேசொன்ன மொத்தத் தொடருக்கும் ”ஒளிமுகம் போன்ற முழுமதி முகிழ்க்கும் நிலவொளி விளங்க, மயக்கும் மாலையில், நாங்கள் செயலற்று வருந்த”.என்று பொருள் சொல்லமுடியும். (மறக்கவேண்டாம். மாலையென்பது 18 மணிக்கு மேற்பட்டு 22 மணிக்குள்ளான நேரம். இக்காலத்தில் நேர வரையறை மாறிப் புரிந்துகொள்ளப்படுகிறது. விடியல்/வைகறை 2 - 6 மணி, காலை 6 - 10 மணி, பகல் 10 - 14 மணி, எற்பாடு 14 - 18 மணி, மாலை 18 - 22 மணி, யாமம் 22 - 2 மணி.)
 
அயிரைமீனென்பது குளம், வாய்க்கால், சிற்றாறுகள் போன்றவற்றில் வாழும்மீன். இதனை வாங்கியுண்போர் எண்ணிக்கை இன்றதிகம். இதன்விலையும் பிற ஆற்றுமீன்களை விட அதிகம். மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டக் கறியுணவகங்களில் இம் மீன்குழம்பு கிடைக்கும். அதுவென்ன குமரியம் பெருந்துறை அயிரை?- என்பது சற்று ஓர்ந்துபார்க்க வைக்குங் கேள்வி. இதைவைத்துக் ”குமரியாற்றை இப்பாட்டு குறிக்கிறது” என உயர்வுநவிற்சியிற் தமிழறிஞர் பலருஞ் சொல்லுவதுண்டு. ஆனால் குமரி யென்பது முனை, ஆறு, கடல் மட்டுங் குறித்ததா, என்ன? நிலம், நாட்டைக் குறிக்காதா? குமரியம் பெருந்துறை என்பதை உள்ளமையோடு (யதார்த்தத்தோடு) குமரிநாட்டுப் பெருந்துறையென (குளங்கள், கண்மாய்கள், சிற்றாறுகள், ஓடைகளின் பெருந்துறை) ஏன் கொள்ளக்கூடாதென்று புரிய வில்லை. ஏனிங்கு உயர்வுநவிற்சி? கி.மு. முதல்நூற்றாண்டிற் குமரி முனைக்குத் தெற்கே நிலச்சான்றில்லாத போது, குமரிநிலத்திலிருந்து வடமலை பெயர்குவையாயின் என்றுகொள்வதே பொருத்தமாகத் தெரிகிறது..

இடையது சோழ நல்நாட்டுப் படினே = இடையுறுஞ் சோழநாட்டிற் படியும் போது; கோழி உயர்நிலை மாடத்துக் குறும்பறை அசைஇ= உறையூர் உயர்மாடத்திற் குறுஞ்சிறகை இளைப்பாற்றி [பறபறவென்று அடித்துக்கொள்வதால் சிறகு பறையாகும். (பைங்காற் கொக்கின் மென்பறைத் தொழுதி. நெடுநல்வாடை 15) பறபறவென்ற ஒலிக்குறிப்பிற்றான் பறத்தல் வினையெழுந்தது. சிலுக்கும் ஒலியும் பறபறத்தலை, படபடக்கும் அசைவைக் குறிப்பதுதான். சிலுகு>சிறகு என்றாகி பறக்கும்/ அசைக்கும் உறுப்பைக் குறிக்கும் ”பறபற” போன்ற ”பகபக” ஒலிக் குறிப்புச் சொல்லிலிருந்தே பக்கி>பட்சி என்ற பாகதச்சொல் பிறந்தது. அசை-தல், இளைப்பாறுதற் பொருள் கொள்ளும். இடைவிடாது சிறகடித்துப் பறந்துவந்த அன்னம் சோழன் உயர்மாடத்திற் தங்கி இளைப்பாறப் பிசிராந்தையார் பரிந்துரைக்கிறார்.]

வாயில் விடாது கோயில் புக்கு = அரண்மனை வாயிலில் தங்கிவிடாது உட்புகுந்து எம் பெருங்கோக் கிள்ளி கேட்க இரும் பிசிர் ஆந்தை அடியுறை எனினே = எம் பெருங்கோக்கிள்ளி கேட்கும்படி பெரிய பிசிர் என்னும் ஊரைச் சேர்ந்த ஆந்தையின் அடியே உறைபவன் என்றால் மாண்ட நின் இன்புறு பேடை அணிய, நினக்கே தன் நன்புறு நன்கலம் நல்குவன் = மதிப்பிற்குரிய உன் இனிய பேடை அணியும் படி தன் விருப்பத்திற்குரிய நன்கலத்தை உனக்கு நல்குவான்.   

இப்போது முழுப்பொருளுக்கும் வருவோம்.
 
அன்னச்சேவலே! அன்னச்சேவலே!
பொருதல் வெற்றியடைந்த போர்த்தலைவன் விரும்பி அருள்காட்டும் ஒளிமுகம் போன்ற
முழுமதி முகிழ்க்கும் நிலவொளி விளங்க,
மயக்கும் மாலையில்,
நாங்கள் செயலற்று வருந்த,
குமரியம் பெருந்துறை அயிரை மாந்தி,
வட இமையம் வரை பெயர்குவையாயின்
இடையுறுஞ் சோழநாட்டிற் படியும்போது,
உறையூர் உயர்மாடத்தில் உன் குறுஞ்சிறகை இளைப்பாற்றி,
அரண்மனை வாயிலில் தங்கிவிடாது உட்புகுந்து,
எம் பெருங்கோக்கிள்ளி கேட்கும்படி,
பெரிய பிசிரைச்சேர்ந்த ஆந்தையின் அடியில் உறைபவன் என்பாயானால்,
மதிப்பிற்குரிய உன் இனிய பேடை அணியும்படி,
தன் விருப்பத்திற்குரிய நன்கலத்தை உனக்கு நல்குவான்

வடதிசையேகும் அன்னத்திற்குப் பெருங்கோக்கிள்ளியின் கொடைச்சிறப்பை இவ்வாறுசொல்லி ஆற்றுப்படுத்துகிறார் பிசிராந்தையார். ”என்பெயர் சொன்னால் என்நண்பன் கேட்பான்” என்பது புலவரின் ஆழ்ந்த நம்பிக்கை. இருவருக்கும் இடையிருந்த கேண்மை அவ்வளவு ஆழம் போலும்.

அன்புடன்,
இராம.கி.

No comments: