Sunday, October 07, 2018

உண்ணா நோன்பும் வடக்கிருத்தலும் - 2

சென்ற பகுதியில் இப் புறப்பாட்டுக்களின் காலநிலை பற்றியும், குறிப்பிட்ட அரசர்களின் அடையாளம் பற்றியுஞ் சொல்ல மறந்தேன். புறம் 65ஆம் பாட்டில் நாகநாட்டுக் கரிகால் வளவன் (இவன் பெரும்பாலும் இரண்டாம் கரிகாலன். முதற் கரிகாலன் கி.மு.462 இல் மகதத்தின்மேற் படையெடுத்தான் என்பதைச் சிலப்பதிகாரத்தால் அறிகிறோம்.) வெற்றி பெற்றதைச் சொல்லும் கழாத் தலையார், 62 ஆம் பாட்டில் வளநாட்டு வேற்பல் தடக்கைப் பெருவிறற் கிள்ளி இறந்ததையும் சொல்லுகிறார். தவிர, 62ஆம் பாட்டில் குடக்கோ நெடுஞ் சேரலாதன் இறந்ததும், 65ஆம் பாட்டில் பெருஞ்சேரலாதன் வடக்கிருந்ததும் சொல்லப்படுவதால், நெடுஞ்சேரலாதன் வேறு, பெருஞ்சேரலாதன் வேறு என்பதும் புலப்படும். சற்று ஆழ ஆய்ந்தால் 62 ஆம் பாட்டில் இறந்ததாய் விவரிக்கப்படுபவன் செங்குட்டுவன் தந்தை இமையவரம்பன் நெடுஞ் சேரலாதன் என்பது விளங்கிவிடும். 65 ஆம் பாட்டின் பெருஞ்சேரலாதன் யாரென்றறிய ஆழ்ந்த அவதானிப்பு வேண்டும்.
-----------------------------------------
சங்ககாலச் சேர, சோழ, பாண்டிய நாடுகளின் கீழ், அவற்றின் உள்நாடுகளை ஆளும் பங்காளி அரசருமுண்டு. பொதுவாக மூவேந்தருக்கு ஆளுநர் போலச் செயற்பட்ட இவரும் சேர, சோழ, பாண்டியர் என்றே அறியப்பட்டார். வேந்தர் - பங்காளிகள் இடையிருந்த சூழ்க்குமத்தை உள்வாங்காததாலேயே வரலாற்று நோக்கிற் சங்க இலக்கியங் குழப்புவதாய்த் தோற்றுகிறது. இராசராசன், இராசேந்திரன் காலத்துப் பேரரசு நடைமுறையை பழவரலாற்றிற் பொருத்துவதால் இப்படியாகிறது. தொடக்கக் கிழாரியம் (feudalism), உச்சக் கிழாரியத்தினும் வளராத குமுகாயம் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். இதன் காரணமாய்ச் சங்ககால வரலாற்று நூற்கண்டிற் சிக்கைப் பிரித்து எடுப்பதற்குள் போதும் என்றாகிவிடுகிறது. (தமிழகத்திலும், அண்டை நாடுகளிலும் இருந்த) சமகால அரசர், புலவர், தொடர்ச்சிகள் எனப் பலவற்றை உள்வாங்காவிடிற் இதன் கூறுகளைத் தெளிவாக்க முடியாது.   

சேர நாட்டில், சுள்ளியம் பேரியாற்றங் கரையில் கொடுங்களூருக்கு அருகே குடவஞ்சியும், அமராவதி (ஆன் பொருநை) ஆற்றங்கரையில் கரூரென்ற கொங்குவஞ்சியும் இருந்தன. குடவஞ்சி, கொங்கு வஞ்சியினுங் காலத்தால் முந்தையது. குடவஞ்சியில் உதியஞ் சேரல் மரபினரும், கொங்குவஞ்சியில் இரும்பொறை மரபினரும் ஆட்சி புரிந்தார். எந்த வஞ்சி சேரர் தலைநகரென்பது காலத்திற்குக் காலம் மாறியது. புறம் 65 இன் போது குடவஞ்சியே தலைநகர் ஆகலாம். மணிகள், மாழைகள் (metals), மண்ணூறல்கள் (minerals) கிடைத்த கொங்குநாடு மூவேந்தரும் தொடர்ந்து பந்தாடிய மேட்டு நிலமாகும். கொங்கு நாட்டை வேளிராண்டு, மூவேந்தருக்கும் பொதுவாக இருந்தவரை ”த்ராமிர சங்காத்தம்” நீண்டகாலந் தொடர்ந்தது. கொங்குவேளிரிற் பெண்ணெடுத்துச் சேரர் மணவுறவு கொண்டாடித் தம்பக்கம் முற்றிலும் கொங்கை வளைத்தபின் தமிழர் உட்பகை பெரிதாகி ”முன்னணி” குலைந்ததால், கலிங்கத்துக் கார வேலன் ”பித்துண்டா” எனுங் கொங்குக் கருவூரைக் கைப்பற்றினான். கார வேலனின் பாகதக் கல்வெட்டும், மாமூலனாரின் அகநானூறு 31 ஆம் பாட்டும் ஆழ்ந்து பொருத்திப் பார்க்கவேண்டிய செய்திகளாகும்.

கடைச்சங்கப் பாண்டியர் தலைநகர்பற்றிக் குழப்பமில்லை. பாண்டிய இனக் குழு தோன்றியது கொற்கைக்கு அருகெனினும் (தென்மதுரை, கபாடபுரம் போன்றன கடலில் மறைந்தபின்) கொற்கை என்றுமே மதுரைக்கு அடங்கி இருந்தது. பாண்டிய இளவல் (மகனோ, தம்பியோ, குடிவழியானோ) கொற்கை ஆளுநனாய், மதுரை வேந்தனுக்குக் கட்டுப்பட்டான். (சிலம்புக் காலத்திற்குச் சற்று முன்னர் பாண்டியர் ஐந்திடங்களிற் பஞ்சவராய் இருக்கத் தலைப்பட்டனர்.) 

சேர, பாண்டியர் போலன்றி சோழர் புகார், உறையூரிற் பங்காளிகளாகி, நாக நாடு, வளநாடுகளிடை உறவும் பொறாமையும் நிலவி ஆண்டிருக்கிறார். (அழுந்தூர் போன்ற ஊர்களிலும் பங்காளிகள் இருந்தார்). நாகநாடும், வள நாடும், தொண்டைநாடுஞ் சேர்ந்தது சோழநாடாகும். புகார் உறையூருக்கு முழுதும் அடங்கியோ, அன்றி உறையூர் புகாருக்கு முழுதும் அடங்கியோ போனதாயில்லை. சோழர் தம்முள்ளேயே பொருதியது சங்க இலக்கியத்திற் பதிவாகியது.
----------------------------------------
நெடுஞ்சேரலாதனிலிருந்து பெருஞ்சேரலாதனைப் வேறுபட்டறியச் சிலம்பில் இருந்தே தொடங்கவேண்டியிருக்கிறது. ஏற்கனவே ஐயத்திற்குரிய கயவாகு-செங்குட்டுவன் சமகாலவொப்பை (synchronism) உதறித் தள்ளிச் ”செங்குட்டுவன் வடபுலப் படையெடுப்பு கி.மு.80 அளவில் நடந்ததாய்க் கொண்டாலொழிய தமிழர் வரலாற்றாய்வில் எள்ளளவும் முன்னேற முடியாது” என்ற உறுதியான முடிவிற்கு ஏற்கனவே வந்தேன். [என்னுடைய “சிலம்பின் காலம்” என்ற நூலைப் படியுங்கள்.] செங்குட்டுவன் காலம் ஒரு முனையெனில், அவன் தந்தை நெடுஞ்சேரலாதன் காலம் இன்னொரு முனையாகும். அதை முடிவு செய்யவும் வழியுள்ளது. நெடுஞ்சேரலாதனைப் பாடிய கபிலர் மோரியரிற் கடைசியான ஆரியவரசன் பெருகத்தனுக்கு (=ப்ருகத்ரத; கி.மு.187-180) தமிழ் சொல்லுமாறும் பாடியிருக்கிறார். பெருகத்தனைச் சாய்த்தே கி.மு.185 இல் புஷ்யமித்திர சுங்கன் ஆட்சிக்கு வந்தான். மகதத்தைச் சேர்ந்த பெருகத்தன் / புஷ்யமித்திர சுங்கன் காலத்தையொட்டியே இமையவரம்பன் நெடுஞ் சேரலாதனின் தொடக்கம் தோற்றுகிறது.

இமையவரம்பனை இமைய வரம்பன் என்று புரிந்துகொண்டு அல்லலுற்ற தமிழ் வரலாற்றாளர் மிகுதியாவர். அதைச் சரியாயுணர்ந்தவர் மயிலை சீனி வேங்கடசாமியேயாகும். அவர் அதை இமையவர் அன்பன்> இமையவர் அம்பன் என்றுகொள்வார். இது ”தேவானாம்பிய” என்ற பாகத விருதின் நேரடி மொழிபெயர்ப்பாகும். இவ்விருதை முதலிற்கொண்ட சேரன் இவனே. வானவர் அம்பன் என்பதும் மொழிபெயர்ப்பின் இன்னொரு புடைப்பாகும். நாளடைவில் ”வானவர்” சேரருக்கு அடைமொழியானது. மோரிய அசோகனின் (கி.மு..268-232) ”தேவனாம்பிய” விருது போலவே அவன் பெயரன் தசரதனும் (கி.மு.232-224), மகதப் பேரரரசின் எல்லையில் இலங்கைத் தீசனும் (கி.மு.247-207), நெடுஞ்சேரலாதனும் கொண்டிருந்திருக்கலாம் என்பது சரியான புரிதலாகும். ஒரு விருது பற்றிய தொடர்ச் சிந்தனை ஒரு வியாழச் சுற்றிற்கு மேல் (= 5 மாமாங்கம், 60 ஆண்டுகள்) இருக்க வாய்ப்பில்லாததால், விருதையொட்டிய காலப்பொருத்தம் நெடுஞ்சேரலாதனைக் கி.மு.182க்கு அருகிற் கொணர்கிறது. இவன் ஆட்சிக்காலம் பதிற்றுப்பத்துப் பதிகத்தின்படி 58 ஆண்டுகளாகும். கி.மு.182 இல் 25 அகவையில் நெடுஞ்சேரலாதன் பட்டத்திற்கு வந்திருந்தால் கி.மு.124 இல் 83 அகவையில் இறந்தான் என்பதே கிட்டத்தட்டச் சரியாகத் தோற்றுகிறது. 4/5 முற்றாண்டுகள் (absolute years) முன்பின் வேண்டுமெனில் மாறலாம்..

நெடுஞ்சேரலாதனுக்கும் செங்குட்டுவனுக்குமிடையே பதிற்றுப்பத்தில் வருவோர் நெடுஞ்சேரலாதன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவனும், முதல்மனைவி மகனான களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலுமாவர். இருவர் ஆட்சிக்காலங்களும் பதிற்றுப்பத்துப் பதிகத்தின் படி 25, 25 ஆண்டுகள்தாம். செல்கெழு குட்டுவனுக்கும் நெடுஞ்சேரலாதனுக்கும் இடையே, மிகுந்த அகவை வேறுபாடு கொள்ளக் காரணமில்லை. செங்குட்டுவன் தன் இறுதிக்குச் சற்றுமுன் (அதாவது கி.மு.80 இல்) வடக்கே படையெடுத்தான் என்பதால் செங்குட்டுவன் இறப்பை கி.மு.75 எனலாம். பதிற்றுப்பத்துப் பதிகத்தின்படி செங்குட்டுவன் 55 ஆண்டு ஆண்டான். ஆட்சிக்கு வந்த போது செங்குட்டுவனுக்கு 25 அகவை என்பது நேரியலான ஊகமாகும். தந்தைக்கும் மகனுக்குமிடையில் சிறிது காலமாவது சிற்றப்பன் ஆண்டானெனில் (25 ஆண்டுகள் என்று பதிற்றுப்பத்தின் பதிகம் வழி அறிகிறோம்), தோராயமாய் கி.மு.148-123 என்பதே செல்கெழு குட்டுவன் காலமாக வாய்ப்புண்டு. அண்ணன் இறந்த ஓராண்டில் தொண்டு கிழத் தம்பியும் இறந்திருக்கலாம். இவன் காலத்தில் இளையரே ஆட்சிப்பொறுப்பைக் கவனித்துக் கொண்டிருக்கலாம். செல்கெழு குட்டுவனுக்குப் பின் என்ன? - என்பது அடுத்த கேள்வியாகும்

நெடுஞ்சேரலாதனுக்கு இரு மனைவியர். ஒருத்தி வேளாவிக் கோமான் பதுமனின் மகள். வேளாவிக் கோமானென்பது இற்றைப் பழனியைச் சேர்ந்த கொங்கு நிலத்தலைவனைக் குறிக்கும். இன்னொருத்தி ஞாயிற்றுச் சோழன் மகள் நற்சோணை (சோணைய நாடு சோழிய நாடு தான். இரண்டிற்குமே பொன் நாடென்பது பொருள். பொன்னி பாயும் நாடு அப்படிப் பெயர் கொள்வதில் வியப்பொன்றுமில்லை). ஞாயிற்றுச் சோழன் பெரும்பாலும் வேற்பல் தடக்கைப் பெருவிறற் கிள்ளிக்கும் நற்சோணைக்கும் தந்தையாகக் கூடும். புறம் 62 இல் சொல்லப்படும் போர் பெரும்பாலும் மச்சான் - மைத்துனன் இடையே ஏற்பட்டதாகும். ஏனென்றாற் பெருவிறற் கிள்ளி இறந்து வளநாடு தடுமாறிப் பங்காளிச் சண்டைகூடி செங்குட்டுவனே அதைத் தீர்த்துத் மாமன் மகன் கிள்ளிவளவனை (அவன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆகலாம்.) பட்டமேற்றுகிறான். இது பற்றிய செய்தி சிலம்பிற் பதிவு செய்யப் பட்டிருக்கிறது. 

பதுமன் தேவிக்கு நார்முடிச் சேரல், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்று இருமகன்கள். நற்சோணைக்குச் செங்குட்டுவன். (நற்சோனையின் இரண்டாம் மகனாய்ச் சொல்லப்படும் இளங்கோ பற்றிய செய்தியை ”சிலம்பின் காலம்” நூலில் மறுத்திருப்பேன்.) செல்கெழு குட்டுவன் இறந்தது கி.மு.123 என்றால் அதற்கு ஏழெட்டு ஆண்டுகள் முன் அண்ணன் மக்களில் யாருக்காவது இளவரசுப் பட்டஞ் சூட்டியிருக்க வேண்டும். நெடுஞ்சேரலாதனுக்கு இரு மனைவிகள் எனும்போது நார்முடிச்சேரல், செங்குட்டுவன் என்ற இருவருக்கும் சிற்றப்பன் முடிசூட்டுவதே உசிதமாகும். இதன்படி கி.மு.130 இல் இருவருக்கும் முடிசூட்டி, நார்முடிச்சேரல் ஆட்சிப்பொறுப்பெடுத்து, தம்பி துணைநின்று, 25 ஆண்டுகள் கழித்து செங்குட்டுவனே முதல் நிலைக்கு வந்திருக்கலாம். கி.மு.130-105 என்ற இடைப்பகுதியில் அண்ணனைப் பெருஞ்சேரலாதன் என்றும் தம்பியைக் குட்டுவன் (=சிறியவன்) சேரலாதன் என்றும், கடைசித் தம்பியை ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்றும் அழைத்திருக்கலாம். பெரும்பாலும் நார்முடிச் சேரலே பெருஞ் சேரலாதனாவான். நார்முடிச்சேரல் வாகைப்பெருந்துறையில் நன்னனை வெற்றிகொண்டதே பதிற்றுப்பத்தில் பெருஞ்செயலாகச் சொல்லப்பெறுகிறது. ”வாகைப் பெருந்துறைச் சேரலாதன்” என்ற கூற்றே, ”பெருஞ்சேரலாதன்” பெயருக்கு விளிகொடுத்ததாகலாம்.

இந்த முன்விளக்கத்தோடு புறநானூற்றின் மிக எளிமையான 66ஆம் பாட்டிற்கு வருவோம். இக்காலத் தமிழ்நடைக்கும், இதற்கும் பெருத்த வேறுபாடு கிடையாது. திணை வாகை. துறை: அரசவாகை. சோழன் கரிகாற் பெருவளத்தானை வெண்ணிக் குயத்தியார் பாடியது. இங்கு பாட்டிலேயே கரிகால் வளவன் பெயர் வருகிறது. பெருஞ்சேரலாதனைப் பெயர் சொல்லாமலே குறிப்பு வருகிறது. 

நளியிரு முந்நீர் நாவா யோட்டி
வளிதொழி லாண்ட வுரவோன் மருக
களியியல் யானைக் கரிகால் வளவ
சென்றமர்க் கடந்தநின் னாற்ற றோன்ற
வென்றோய் நின்னினு நல்ல னன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப்புக ழுலக மெய்திப்
புறப்புண் ணாணி வடக்கிருந் தோனே

                        - புறம் 66

இந்தப் பாடலின் விளக்கம் கூடுவதற்காக, பாடலுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப் போட்டு கீழே கொடுத்திருக்கிறேன்.

நளியிரு முந்நீ(ரில்)
நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால் வளவ!
சென்று நின்னாற்றல் தோன்ற அமர்க் கடந்த வென்றோய்!
நின்னினும் நல்லன் அன்றே,
யாணர் கலிகொள் வெண்ணிப் பறந்தலை(யில்),
மிக உலகப்புகழ் எய்தி,
புறப்புண் நாணி,
வடக்கிருந்தோனே

இனி ஒருசில சொற்பொருள்களையும் குறிப்புகளையும் பார்ப்போம்.

நளியென்பது இங்கு செறிவையும், அடர்த்தியையுங் குறிக்கும். முந்நீர் என்ற சொல் மழைநீர், ஆற்றுநீர், ஊற்றுநீர் என்ற மூன்றுஞ் சேர்ந்த கடல்நீரைக் குறிக்கும். கடல்நீருள் உப்புச் சேர்ந்ததால் அதன் அடர்த்தி கூடியது. எனவே நளியிரு முந்நீர் ஆயிற்று. செறிவு, அடர்த்திக்கு இன்னொரு மாற்றுச் சொல் நளியாகும். இற்றைக் காலத்தில் செறிவு என்பதைக் concentration க்கும், அடர்த்தி என்பதை density க்கும் பயன்படுத்துகிறோம். நளி என்பதை எதற்குப் பயன் படுத்தலாம்? - ஓர்ந்து பார்க்கவேண்டும். நாவாய் = நாவுங் கலம். நாவுதல் = நீரைக் கொழித்துத் துடுப்பாலோ, வேறுவகையாலோ நகர்த்துவது. இந்தை யிரோப்பிய மொழிகளில் பயிலும் naval, navy என்ற சொற்கள் இந்த வினையோடு தொடர்புடையவை. பாய்மரங் கட்டிக் கடலோடும் மரக்கலமே நாவாயெனப்படுகிறது. வீசுங் காற்றால் வேண்டும் வகையில் பாயைத் திருப்பிக் கலஞ் செலுத்தலை வளிதொழில் என்ற சொல் குறிக்கிறது. உரவோன் = வலிகொண்டவன்; மருவுதல் = தழுவிக்கொள்ளுதல்; மருகன் = தழுவிக்கொள்ளத் தக்கவன். பெண்ணின் கணவனும் மருகன் என்றே அழைக்கப் படுகிறான். மருமகன், மருமகள் என்போர் தழுவிக்கொள்ளத் தக்கவர். மருவுகை = marriage.

முதலிரண்டு வரிகள் மூலம் புகாரை ஆளும் கரிகாலன் சிறப்பு கூறப்படுகிறது. இற்றைக்கு 2100 ஆண்டுகள் முன் நாவாயோட்டும் தொழில் தமிழர்க்குச் சிறப்பாகவே தெரிந்திருக்கிறது.

களியியல் யானைக் = மதம் கொள்ளத் தக்க யானையைக் கொண்ட; சென்று அமர்க் கடந்த = சென்று போரைக் கடந்த; யாணர் கலிகொள் வெண்ணிப் பறந்தலை: கலி என்பது சத்தம். கலகல என்று சத்தம் கேட்டது - சொல்கிறோம் இல்லையா? யாணர் கலி என்பது புதிய சத்தம். யாணர் கலிகொள் என்னுந் தொடர் ”புதுச்சத்தங் கொண்ட” என்பதைக் குறிக்கிறது. பறந்தலை என்பது ஒரு பொட்டல்; இங்கு போர்க்களம். இது போன்ற பொட்டல்களிலும் அக்காலப் போர்கள் நடந்தன. சோழநாட்டு வெண்ணியெனும் ஊரின் பொட்டலில் இப் போர் நடந்திருக்கிறது.

கடைசித் தொடர்கள் “புறப்புண் நாணி வடக்கிருந்தவன் பெரும் உலகப்புகழ் எய்தி உன்னிலும் நல்லவன் ஆயினான்” என்பதைக் குறிக்கின்றன. இப்பொழுது முழுப்பொருளுக்கும் வருவோம்.

”அடர்ந்த கடல்நீரில் (காற்றால்) நாவாயை ஓட்டி ஆளும் வலியோன் மருகனே! மதங்கொள் யானையைக் கொண்ட கரிகால் வளவனே! போரின் மேற்பட்டு நின் ஆற்றல் வெளிப்பட்டு அதைக் கடந்து வென்றவனே! புதுச்சத்தம் நிறைந்த வெண்ணிப் பறந்தலையில் தன் புறப்புண்ணை நாணி வடக்கிருந்தவன் மிகுந்த உலகப்புகழெய்தி உன்னிலும் நல்லவன் ஆகிவிட்டான்”     .

இனி அடுத்து ஓர் அகப்பாட்டிற்கு வருவோம்.

அன்புடன்,
இராம.கி.

No comments: