Friday, October 12, 2018

உண்ணா நோன்பும் வடக்கிருத்தலும் - 7

அடுத்தது புறம் 214 ஆம் பாடல். இதிற் கோப்பெருஞ்சோழன் தான் வடக்கு இருந்ததற்கு நேரடி விளக்கங் தராது சுற்றி வளைத்து மெய்யியல் விளக்கந் தெரிவிப்பான். பாட்டின் திணை வெட்சி/கரந்தை, வஞ்சி, உழிஞை/நொச்சி, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்ற தொல்காப்பிய வகைப்பாட்டில் வராது, பன்னிருபடலம், புறப்பொருள் வெண்பாமாலை போன்றவை பின்பற்றிப் பொதுவியலெனப்படும். அதன் படி, (போரிலிறந்த மறவோர்க்கான) நடுகற் பொதுவியல், சிறப்புப் பொதுவியல், காஞ்சிப் பொதுவியல், முல்லைப் பொதுவியல் என்ற 4 இயல்களில் 3 ஆவதைச் சேர்ந்தது இப்பாட்டாகும். காஞ்சிப் பொதுவியலில் இதன் துறை, பொருண்மொழிக் காஞ்சியாகும். இந்தத் திணை, இயல், துறைகளை விளக்கு முன், காஞ்சிப் போரின் விதப்பைத் தெரிவது நல்லது.

காஞ்சியை ஆற்றுப்பூவரசு/ஆத்துப்பூவரசு/ஆற்றரசு/ஆடலரசு/செடிப்பூவரசு, ஆயில்/ஆயிலி/ஆவில், கச்சி/கஞ்சி, கடற்கேசிதம், ஆனத்துவரை/சன்னத் துவரை, நாய்க்குமிழ், பிண்டாரம் என்றும் அழைப்பர். பிண்டாரத்தையொட்டி வடபுலத்து மொழிகளிற் பெயரிருக்கிறது. ”காஞ்சி” கன்னடத்திலும், ஆற்றுப் பூவரசு/ஆற்றரசு மலையாளத்திலும் பயில்கிறது. எல்லாவித நீர்க்கரைகளிலும், குறிப்பாகக் அகழிக் கரைகளிலும் இம்மரத்தைப் பயிரிட்டிருக்க வாய்ப்புண்டு. பப்பாளிபோல் இம்மரத்திலும் ஆண், பெண் வகைகளுண்டு. ஆண்பூக்கள் மஞ்சளாயும், பெண்பூக்கள் பச்சையாயும் இருக்கும்.

மாற்றுநாட்டைக் கவரவிரும்பி ஓர் அரசன் வலிந்து படையெடுத்ததை வலிஞ்சி>வயிஞ்சி>வஞ்சியென்பார். (வஞ்சிப்போரின் அடையாளம் வஞ்சிப் பூவாகும்.) வஞ்சிப்போர் எதிர்ப்பில் தற்காப்பாய் (defence) எழுந்தது காஞ்சிப் போராகும். (கள்>கவ்வு>கா என்றதிரிவில் காக்குஞ்செயல் வெளிப்படும். கள்+சு= கச்சு என்பது மெய்புதைக்கும் ஆடை. மூக்கொலிபெற்றுக் கச்சு கஞ்சுகமாகும். கஞ்சி>காஞ்சி என்பவை நாட்டைக்காக்கும் செயற்பாடுகள். இவற்றின் அடையாளமாய் rebus principle இன் படி தற்காப்பாளர் காஞ்சிப்பூ சூடினர். (காஞ்சிமரங்கள் மிகுந்தது கச்சிப்பேடு, காஞ்சிபுரம்.) காஞ்சித்திணை, காஞ்சிப் பொதுவியல், காஞ்சித் துறை என்பவை நாடு, கருத்து, மெய்யியல் போன்றவற்றைத் தற்காக்கும் நிலைப்பாடுகள் ஆயின. தன்வாழ்வில் உண்மையெனக் கண்டுணர்ந்த மெய்ப்பொருளைச் வடக்கிருக்க முற்பட்ட போது சோழன் பாடியதாற் பாட்டின் துறையும் பொருண்மொழிக் காஞ்சி யானது. .

செய்குவங் கொல்லோ நல்வினை யெனவே
ஐய மறாஅர் கசடீண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்துத் துணிவில் லோரே
யானை வேட்டுவன் யானையும் பெறுமே
குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே
அதனால்,
உயர்ந்த வேட்டத் துயர்ந்திசி னோர்க்குச்
செய்வினை மருங்கி னெய்த லுண்டெனிற்
றொய்யா வுலகத்து நுகர்ச்சியுங் கூடும்
தொய்யா வுலகத்து நுகர்ச்சி யில்லெனின்
மாறிப் பிறப்பி னின்மையுங் கூடும்
மாறிப் பிறவா ராயினு மிமயத்துக்
கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்
தீதில் யாக்கையொடு மாய்தறவத் தலையே

                           - புறம் 214.
இப்பாடலின் விளக்கம் கூடுவதற்காக, பாடலுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப் போட்டுக் கீழே கொடுத்திருக்கிறேன்.

கசடு ஈண்டு காட்சி நீங்கா நெஞ்சத்துத் துணிவில் லோரே
நல்வினை செய்குவம் கொல்லோ எனவே ஐயம் அறாஅர்
யானை வேட்டுவன் யானையும் பெறுமே
குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே
அதனால்,
உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்குச்
செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனில்
தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்
தொய்யா உலகத்து நுகர்ச்சி இல் எனின்
மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்
மாறிப் பிறவார் ஆயினும் இமயத்துக்
கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டு,
யாக்கையொடு தீது இல் மாய்தல் தவத்தலையே

பாட்டின் பொருளுக்கு வருமுன், கசடெனுஞ் சொல்லைப் புரிந்துகொளப் பார்ப்போம். "கரும்பொருள், அழுக்கு/மாசு, வடு/தழும்பு, வழு, குற்றம்" என 2, 3 ஆம் நிலைப் பொருட்பாடுகளையே பல்வேறு உரையாசிரியரும் இதற்குத் தருகிறார். உரையாசிரியர் கூற்றை உச்சிமேலேற்றி தமிழாசிரியரும் மாணவர்க்குக் கற்பிக்கிறார். நாமுங் ”கசடு ஈண்டு காட்சியின்” கூடுகை (context) புரியாதிருக்கிறோம். பட்டறிவு வழியும் (செக்கில் ஆட்டிவந்த எண்ணெயின் அடிமண்டியைக் கசடென்று சொல்கிறோமே, நினைவிற்கு வருகிறதா?), படியாற்ற அறிவியற் பட்டகைகளின் (facts of applied science) படியும் பார்த்தால் கசடின் முதற்பொருள் சற்று வேறுபட்டதாகும்.  .
 . 
வேதியலில் ஒருபொதியை (body) இன்னொன்றோடு கலந்துகிடைக்கும் 3 ஆம் பொதியைக் கலவை (mixture) என்பர் [ஒரு பொதி இன்னொன்றோடு வேதி வினை செய்து கிடைப்பது பூண்டு அல்லது சேர்மம் (compund) ஆகும்.] இப் பொதிகள் திண்மம் (solid), நீர்மம் (liquid), வளிமம் (gas) என்று வெவ்வேறு வாகைகளில் (phase) இருக்கலாம். ஒருபொதி இன்னொன்றில் முழுக்கக் கரைந்து (dissolve) கிடைப்பதைக் கரைசல் (solution) என்றும் [கரைவு = solute; கரைப்பான் அல்லது கரைப்பு = solvent]. ஒருபொதி இன்னொன்றுள் கலங்கிக் (suspend) கிடைப்பதைக் கலங்கல் (suspension) [கலங்கு = suspendent; கலக்கு= the body that suspends] என்றும் இருவகைக் கலவைகளைச் சொல்வர். தமிழிற் கரைசலுக்கும், கலங்கலுக்குமுள்ள வேறுபாட்டை வரையறுக்கப் படியாற்ற வேதியல் (applied chemistry), வேதிப் பொறியியல் (chemical engineering) போக வேண்டியிருக்கும். கலங்கலை உதிரல் (dispersion) என்றுஞ் சொல்லலாம். (உதிரி = That which is dispersed; உதிர்ப்பி = dispersant.).

லகர>யகர>சகர ஒலித்திரிவில் கலங்கல்/கலக்கல் -> கயங்கல்/கயக்கல் -> கசங்கல்>கசக்கல் என்றும் மாறும். இணைச்சொல்லான குழம்பலும் கலங்கலையே குறிக்கும். பல்வேறு சரக்குகளை நறுக்கி உதிர்த்துக் கொதிக்க வைக்கும் குழம்பும் கலங்கல்தான். போதிய நேரங்கொடுப்பின், ஒவ்வொரு கலங்கலும் தெளிந்து (தெளிதல் = clarification) பொதிகள் பிரியும். காட்டாகத் திண்ம-நீர்மக் கலவையில், கலங்கிய திண்மத்தூள் படிந்தும் (படிதல் = settling), கலக்கிய நீர்மம் தெளிவாகி மேலேயும் பிரியும். மீண்டும் கிளறும்போது (agitation) 2 பொதிகளும் ஒன்றினுளொன்றாய்க் கூடும். தெளிந்த கலங்கலை ஈர்ப்பு விசைக்கோ (gravity force), அழுத்தத்திற்கோ, வெற்றகத்திற்கோ (vaccuum) ஆட்படுத்தி, வடித்துப் (filtration) பிரிக்கலாம் (வடிதை = filtrate; வடிக்கசடு = filtered material). கசங்கலின் பொருள் மேலும் விரிந்து ஒரு செல்லுலோசுத் தாளைக் கையால் ஒழுங்கற்று மடித்துக் குலைப்பதையுங் கசக்கலென்கிறோம்.

கசங்கலும் கசள்தலும்>கசடலும் ஒருபொருட் சொற்களாகும். கசங்கும் பொதியே பேச்சுவழக்கிற் கசடாகிறது. ஒரு குளத்துச் சேற்றில் நீரும் மண்துகட் கசடும் கலந்துகிடக்கின்றன. குளத்துநீர்க் கசடு, நாட்பட நாட்பட நீரினடியிற் படிகிறது. நம்மைச் சுற்றிய ஊதுமக் கோளக் காற்றில் (atmospheric air), கலங்கிய துகட் பொருள் - க.து.பொ (suspended particulate matter - SPM) குறிப்பிட்ட அலகிற்கு மேற்செறிந்து (ஈண்டுதல் = செறிதல்) பரவியிருந்தால் உடம்பிற்கு ஊறாகிறது; நம் முன்னிருக்கும் காட்சியும் கலங்கலாய்த் தெரிகிறது. ”கசடு” மேலும் பொருள் விரிந்து, பூதிகப் (physical) பொருட்பாடு மட்டுமன்றி, கருத்தியலாய்க் கலங்கு, வழு, குற்றம் போன்ற பொருட்பாடுகளையும் குறிக்கிறது. குழம்பல் என்ற பூதிகச் சொல்லும், கருத்தியல் விரிவால் ”குழப்பக்” கருத்தைச் சிந்தனையிற் காட்டும். ”கசகு” என்ற சொல்லால் இக்காலத்திற் choas ஐக் குறிக்கிறோம். ”கற்கக் கசடு அற” எனும் போது தெளிவுபடக் கற்றுக் கொள்வதைச் சொல்கிறோம்.   

”கசடு ஈண்டு காட்சி” என்பது ”கலங்கு செறிந்த காட்சி” எனுங் கருத்தியற் பொருளாற் சிந்தனையைக் கலக்கும் காட்சியைக் குறிக்கும். ”செய்குவங் கொல்லோ நல்வினை யெனவே ஐயம் அறாஅர் கசடு ஈண்டு காட்சி நீங்கா நெஞ்சத்துத் துணிவில்லோரே” என்ற வரிகளுக்கு, “கலங்கஞ் செறிந்த காட்சியை விட்டு நீங்காத நெஞ்சத் துணிவில்லாதோரே ’இனி நல்வினை செய்வோமா, மாட்டோமா?’ எனும் ஐயத்தை போக்கிக்கொள்ளார்.” என்று பொருள் சொல்லலாம். தெளிந்த சிந்தனையாளருக்கு, “இனி நல்வினை செய்வோமா? மாட்டோமா?” என்ற குழப்பமும் ஐயமும் இருக்காது. ஆனால் மனங் கலங்கிய காட்சியரோ, சிந்தனை தெளியாது, நல்வினை செய்ய ஐயங்கொண்டிருப்பார். (சிந்தனை தெளிந்தார் நல்வினை செய்ய ஐயப்படார். உறுதியாகச் செய்வார்.)
     
அடுத்த 2 வரிகளையும் புரிந்து கொள்ளப் பட்டறிவையும், பெருதகையையும் (probability), ஏரணத்தையும் பயன்படுத்தி முடிவில் மெய்யியலைப் புரிந்து கொள்ள வேண்டும். யானைகள் உலவும் நம்மூர்க் காட்டில் யானைகளைக் காட்டிலும் புட்களே (பறவைகளே) எண்ணிக்கையில் அதிகமென்று பட்டறிவால் உணர்வோம். நேரிய (normal) காலங்களில் நாள்முழுக்க வேட்டையில் ஈடுபட்டால், குறும்பூழின் (குறுகியபுள்) கிடைப்புப் பெருதகை (probability of getting), யானையின் கிடைப்புப் பெருதகையை விட அதிகமாகும். ஆனாற் கோப்பெருஞ்சோழன் ”யானை வேட்டுவன் யானையும் பெறுமே, குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே” என்றொரு மாற்றுக்கூற்றைச் சொல்கிறான். அப்படியெனில் அவன் கூற்றுக்கு இன்னொரு காரணி இருக்க வேண்டுமே?

அற்றுவிக மெய்யியல் தெரிந்தவர் அதை விதி அல்லது நியதியென்பர். விதியென்பது இக்காலத்தில் மூடநம்பிக்கையென்றே புரிந்துக்கொள்ளப் படினும், தொடக்கத்தில் அதற்கு வேறு பொருளுண்டு. ஒரு செலுத்தத்தின் (process) இயலுமைத் தீர்வுகளில் (possible solutions) ஒருசிலவே முடிவில் அமையும்வகையில், தீர்வு வெளி (solution space) முந்தையக் கட்டியங்களாலும் (initial conditions), வரம்புக் கட்டியங்களாலும் (boundary conditions), துனைவியக்கங்களாலும் (dynamics; துனைவு= விரைவு) ஒருங்கு செய்யப்படுகிறது. வகைப்புக் கலனத்தில் (differential calculus) வகைப்புச் சமன்பாடுகளை (differential equations) பயின்றோர்க்கு நான்சொல்வது புரியும். எச்செலுத்தத்திற்கும் தீர்வுகிடைக்க ”விதி”யிருந்தால் (அதாவது மேற்சொன்ன கட்டியங்கள் கூடிவந்தால்), ”யானை வேட்டுவன் யானையும் பெறுவான்; குறும்பூழ் வேட்டுவன் வெறுங்கையோடும் போவான்.” தீர்வு கிடைக்க “விதி” இல்லெனில், தீர்மானிக்க முடியாதவை (indeterminate) ஆகி, ஈறிலி (infinity) காலத்திற்கும் சுற்றிச்சுற்றி வந்து கொண்டேயிருக்கும். கலனம் வளராக் காலத்தில் அற்றுவிகச் சிந்தனையாளர் மெய்யியல் வழியே இப்புரிதலைப் பெற்றிருக்கிறார். இப்பொழுது பாட்டிற்குத் திரும்புவோம்.

அடுத்த வரிகளில் மேற்காட்டிய உவமையின் தொடர்ச்சி வருகிறது. ”அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்குச் செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனில்” என்பதற்குப் பொருள் “அதனால் உயர்விருப்போடு உயர்ந்தோருக்கு, தாம்செய்யும் வினைப்பக்கம், எய்தல் உண்டென்றால்” என்று கட்டியங் காட்டும். ”எய்தல் உண்டெனில் (if there is a fate to achieve)” என்ற கட்டியங் கூறலே கோப்பெருஞ் சோழன் விதியை/நியதியை இப்பாட்டில் மெய்யியல்வழி உணர்த்துவதைப் புரியவைக்கும். இக்கட்டியமே, அற்றுவிகத்தின் வழிப்பட்ட 214 ஆம் புறப்பாட்டிற்குச் சிறப்புத் தருகிறது. கோப்பெருஞ் சோழன் அற்றுவிக நெறியையே இப்பாட்டிற் குறிக்கிறான்.
   
தொய்யா உலகமென்பது வானோருலகமாகும். (இது அரும்பெறல் உலகத்தின் கீழுள்ளது என்றே சமண இலக்கியங்கள் கூறும்.) மண்ணுலகம் தொய்ந்தும் தொய்யாமலும் அதாவது துன்பமும், இன்பமும் மாறி மாறி ஊடியிருக்கும். தொய்யா உலகமோ துன்பமே இல்லாவுலகமாகும். ”தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்”  என்பது ”மேலுலகத்து நுகர்ச்சியுங் கூடும்” என்று சொல்வதாகும். நல்வினை செய்வோருக்கு இரண்டு வித விளைவுகள் ஏற்படலாம். ஒன்றில் மேலுலக நுகர்ச்சி கூடும். இரண்டாவது விளைவை “தொய்யா உலகத்து நுகர்ச்சி இல் எனின் மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்” என்ற வரி சொல்லுகிறது. அதாவது, ”மேலுலக நுகர்ச்சி இல்லையென்றால், அதற்கு மாறாகப் பிறவாமை கூடலாம்” என்ற பொருளைச் சொல்கிறது.. 

பிறவாமை பற்றி விருப்பொடு பேசிய கோப்பெருஞ்சோழன் தன்புகழ் நாட்டும் படி, பாட்டின் கடைசி வரியில் “தீது இல் மாய்தல்” எனும் ஆழமான, தற்குறிப்புள்ள, தொடர்பற்றிப் பேசுகிறான். இது ”உண்ணா நோன்பும் வடக்கு இருத்தலும்” என்ற இக்கட்டுரைத் தொடருக்கும் மையமானது. உண்ணா நோன்பெனுங் குறிப்பை பாடல்களின் கீழ்வரும் கொழுக்களாலும், உரை யாசிரியர் விளக்கங்களாலுமே இதுகாறும் பெற்றுவந்தோம். பாடல்களின் உள்ளேயே குறிப்புண்டாவெனில், 214 ஆம் புறப்பாட்டிற்றான் அது வருகிறது. பாகதத்திற் செயினவழக்கை வைத்து வடக்கிருத்தலுக்குச் “சல்லேகனை” என்பர். 2000 ஆண்டுகளுக்கு முன் இது செயினருக்கு மட்டுமே உரித்ததல்ல. புத்தர் தவிர்த்த மற்ற சமணருக்கும் உரியதுதான். [அற்றுவிகத்தின் தோற்றுநர்களில் ஒருவரான முருக்கழி குயவாளர் (மற்கலி கோசாலர்) கூட வடக்கிருத்தல் மூலமே உயிர்துறந்தார்.] செயினர் அல்லாதாரும் இதைக் கைக்கொண்டு பழகியதற்குச் செயின, புத்த நூல்களிலேயே சான்றுகளுள்ளன. ஆனால் இன்றைக்கோ, செயினர் மரபிலிருந்தே ”உண்ணா நோன்பும் வடக்கிருத்தலும்” என்ற பொதுப்புரிதலை நாம் அடையவேண்டியிருக்கிறது.

சல்லேகனை = சல் (=சம்) + லேகணை என்பதைப் பாகதத்திற் சம்லேகனை என்றுஞ் சொல்வர். (அநாசனா, சந்தாரா என்ற பாகதப் பெயர்களுமுண்டு.) சம் என்பது “சரியான, சிறந்த, பண்பட்ட” என்ற பொருள்கொள்ளும். இம் முன்னொட்டிற்கு இணையாக அதேபொருளிற் செம், செவ் என்ற முன்னொட்டுக்கள் தமிழிலுமுண்டு. (செங்கதமென்பது சங்கதமென்று சொல்லப்படுவதை இங்கு நோக்கலாம்.) லேகணை என்பது சாப்பாட்டு அளவையும், பல்வேறு பற்றுக்களையும் கொஞ்சங் கொஞ்சமாய்க் குறைத்து உடம்பிளைப்பது பற்றியதாகும். தமிழில் இளைத்தல் என்பது தன்வினைச் சொல். (ஒழுங்காகச் சாப்பிடாது எடை குறைந்தவரை “என்னா ஆச்சு, இளைச்சுப் போயிட்டீங்களே?” என்று சொல்கிறோமல்லவா?)

இளைக்கவைத்தல் என்பது பிறவினைச் சொல். அண்ணுதல்= நெருங்குதல், பொருந்துதல். அணமென்பது பொருந்தல் தொடர்பான ஈறு. இலக்கணமென்பது இலக்கைப் பொருந்துவது. அணையென்றாலும் அணத்திற்குச் சமமே.. இலக்கணியென்பார் இலக்கைப் பொருந்துகிறவர். இளைக்கணை, வடக்கே ஆந்திரம்வழி போய் லகரத்திரிவில் இலைக்கணை> லேகனை என்றாகும். தமிழுக்கும் பாகதத்திற்குமான சொல்லிணைகள் தெலுங்கு, கன்னட வழக்குகளால் வெளிப்பட்டுள்ளன. தமிழ் ”இலது” தெலுங்கில் “லேது”வாகும். இல>லே திரிவு பல்வேறு தெலுங்குச் சொற்களிலுமுண்டு. தெலுங்கு வட்டாரத்திலிருந்து பாகதத்திற்குக் கடன்போவது இயல்பானதே. சொல்மூலம் தென்னகமெனினும் ”சல்லேகனை” பாகதச்சொல்லே. பிறவாமையை எண்ணி, உண்ணாநோன்பிருந்து, சிச்சிறிதாய் யாக்கையைப் பயிற்றி, மெய் சுருக்கி, பசி மறந்து, நாடிகளையொடுக்கி, உயிர்விட எத்தனிக்கிறார். எனவே இது தீதில்லாது மாய்தலாயிற்று. (இற்றைத்தமிழில் புனித மரணமென்பர்.) மாய்தலென்பது வெறுமே மடிதலை, மறைதலை, சாதலைக் குறிக்காது. அறவழி நின்று பாடுறுவதைக் குறிக்கும். தீதில் மாய்தல் எனும்போது ”தீமை யிலாத” என்ற அடைமொழியும் சேர்ந்துகொள்கிறது. ஆங்கிலத்தில் ”Jain art of dying. Fasting unto death” என்றுகுறிப்பர். தீதில் மாய்தல் என்பது சல்லேகனைக்குப் பகரியாய் இங்கு செயற்படுகிறது.

தவ, நனி போன்ற உரிச்சொற்கள் மிகுபொருள் உடையன.

”மாறிப் பிறவார் ஆயினும் இமயத்துக்கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டுத் தீது இல் யாக்கையொடு மாய்தல் தவத்தலையே” எனும் கடைசி 3 வரிகள் “ மாறிப் பிறக்கமாட்டாராயினும் இமையமலை ஓங்கினாற்போலத் தம்புகழ் நாட்டி உடம்போடு தீதிலாது மாய்தல் மிகவுந் தலையாயது: என்று பொருள் கொள்ளும்.

பாட்டின் மொத்தப் பொருள்:
--------------------------------------
கலக்கஞ் செறிந்த காட்சியை விட்டு நீங்காத நெஞ்சத் துணிவில்லாதோரே  ”இனி நல்வினை செய்வோமா?” எனும் ஐயத்தைப் போக்கிக் கொள்ளாதிருப்பர். விதியிருந்தால், யானை வேட்டையாடுவான் யானையும் பெறுவான்; குறும்புள் வேட்டையாடுவான் வெறுங்கையோடும் வருவான். எனவே, உயர்விருப்பொடு உயர்ந்தோருக்கு தாம்செய்யும் வினைப்பக்கம், எய்தது நடக்கும் விதியிருந்தால், வாட்டம் இல் மேலுலகத்து நுகர்ச்சியுங் கூடும். வாட்டமில் மேலுலகத்து நுகர்ச்சி இல்லெனில், மாறிப் பிறவாமையும் கூடலாம். மாறிப் பிறவாராயினும், இமயமலை ஓங்கினாற்போல, தம்புகழ் நாட்டி உடம்போடு தீதிலாது மாய்தல் மிகவுந் தலையானதாகும்.
--------------------------------------

நன்றாய் ஆழப்புரிந்தே தீதில் மாய்தலுக்கு (சல்லேகனைக்கு) சோழன் முற்படுகிறான்.

அன்புடன்,
இராம.கி.

No comments: