Thursday, October 25, 2018

உண்ணா நோன்பும் வடக்கிருத்தலும் - 18

அடுத்து புறம் 218 ஆம் பாடலைப் பார்ப்போம். இதன் திணையும் முந்தையதைப் போற் பொதுவியல் தான். துறையும் கையறுநிலை தான். இந்தப் பாடலைக் கண்ணகனார் எனும் புலவர் பாடியுள்ளார். இவர் நற்றிணையில் 19 ஆம் பாடலையும் பாடியுள்ளார். கோப்பெருஞ் சோழனின் வடக்கிருத்தலின் ஓரிமையும் (uniqueness), அதையொட்டிப் பொத்தியாரும், பிசிராந்தையாரும், மற்றோரும் ”நல்லாரைக் காண்பதுவும் நன்றே” என்றபடி, அடுத்தடுத்து விதப்பாய் ஓரிடத்திற் கூடியதையும் வியந்து, ”சாலுதல்” வினைச்சொல்லின் பொருளை வைத்து ”இனம் இனத்தோடு சேரும்” என்ற கருத்தில் இப்பாட்டு அமைகிறது. ”இப்படி வியக்கின்ற பாட்டைக் கையறுநிலைத் துறையாக வகைப்படுத்தியது ஏன்?” என்பது தான் எனக்குப் புரியவில்லை. பாட்டைப் படியுங்கள்.

பொன்னுந் துகிரு முத்து மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்
இடைபடச் சேய வாயினுந் தொடைபுணர்ந்
தருவிலை நன்கல மமைக்குங் காலை
ஒருவழித் தோன்றியாங் கென்றுஞ் சான்றோர்
சான்றோர் பால ராப
சாலார் சாலார் பாலரா குபவே

                        - புறம் 218

இப்பாடலின் விளக்கம் கூடுவதற்காக, பாடலுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப் போட்டுக் கீழே கொடுத்திருக்கிறேன்.

பொன்னும் துகிரும் முத்தும்
மன்னிய மாமலை பயந்த காமரு மணியும்
இடைபடச் சேய ஆயினும்,
தொடை புணர்ந்து அருவிலை நன்கலம் அமைக்கும் காலை
ஒருவழித் தோன்றியாங்கு
என்றும்
சான்றோர் சான்றோர் பாலர் ஆ(கு)ப
சாலார் சாலார் பாலர் ஆகுபவே

இனி ஒருசில சொற்பொருள்களையும் குறிப்புகளையும் பார்ப்போம். பொன்னும் துகிரும் முத்தும் = தங்கமும், பவளமும், முத்தும்; இம்மூன்றோடு தென்கொங்கில் மெருகேற்றிப் பளிச்சிட வைத்து மாலையாக்கப்பட்ட sapphire, beryl, agate, carnelian, amethyst, lapis lazulli, jasper, garnet, soapstone and quartz போன்ற மணிகளும் (இவையெல்லாமே கொங்கிற் கிடைத்தவையல்ல; சில வேற்றிடங்களிலிருந்தும், இன்னும் வேறு நாடுகளிலிருந்தும் இறக்குமதி யானவை), ஈழத்திற் கிடைத்த மரகதமும் (emarald) பரிமாற்றுச் சரக்குகள் (exchange goods) ஆயின. தவிர மிளகு போன்றவையும் ஏற்றுமதியில் உரோமப் பேரரசு போன்றவற்றிலிருந்து நிறைய பரிமாற்றச் சரக்குகளைக் கொண்டு வந்து குமித்தன. இவை இங்கு கிடைத்ததே/பட்டை தீட்டப்பெற்றதே தமிழகம் நாவலந்தீவில் மகதத்திற்கு எதிராய்ச் சூளுரைத்ததற்குக் காரணமாகும்.

வரலாற்றாசிரியர் பலரும் பொருளியல் வழியில் இப்பரிமாற்றுச் சரக்குகள் இந்தியவரலாற்றைப் பலகாலம் நிருணயித்ததை இன்னும் உணரவே யில்லை. தமிழகத்தை வெறும் தொங்குசதையாக ஒதுக்கிப் பார்த்தவருக்கும், வடபுலம் வழியாகவே இந்தியாவை உணர முற்படுவோருக்கும் இது விளங்கவே விளங்காது. வயிரம் இற்றைத் தென்னாப்பிரிக்காவைத் தூக்கி நிறுத்துவதையும், தங்கமும், மற்ற மாழை மண்ணூறல்களும் (minerals) இற்றை ஆத்திரேலியாவை உயர்த்திவைப்பதையும் புரிந்தவரே, பரிமாற்றச் சரக்குகள் அற்றைத் தமிழகத்தை பொருளியல் உயர்த்திப் பிடித்ததைப் புரிந்து கொள்ள முடியும். தமிழிலக்கியத்தை இப்படிப்படித்தவர் நம்மில் மிக அரிது. தமிழாய்வும் இன்று குறைந்தேயிருக்கிறது. (அந்தச் சோகம்பற்றிப் பேசினால் நான் பொங்கிவிடுவேன். எனவே வேண்டாம்.)

பொன்னென்பது (இற்றைக் கருநாடகக் குவலாளபுரமெனும் கோலாருக்கு அருகில்) வடகொங்கிற் கிடைத்தது. கொங்குநாடென்பது, காலத்திற்குத்தக்க மூவேந்தரிடையே தொடர்ந்து பந்தாடப்பட்டது. (முடிவில் வடகொங்கு, கன்னடம்பேசும் நிலமாய் மாறிப்போனது. தென்கொங்கு மட்டுமே தமிழ்பேசும் நிலமாய்த் தங்கியது.) சங்ககாலக் கடைசியில் (கிட்டத்தட்ட இரும்பொறை அரசர் கொங்குக் கருவூரில் ஆளத்தொடங்கிய பின்) பெரும்பாலும் சேரர் பக்கமே வாய்த்தது. சேரராட்சி, பொருளியலில் உயர்ந்து நின்றதற்கு பொன்னும் ஒரு காரணமாகும். பொன்னென்பது இப்பாட்டிற் சோழனை உருவகமாய்க் குறிக்கிறது. பொன்னின் மேற்றான் துகிரும், முத்தும் மணிகளும் பதிக்கப்படுகின்றன. இங்கே சோழனின் மேற்றான் பொத்தியாரும் (துகிர்), பிசிராந்தையாரும் (முத்து), மற்ற மணிகளும் (கூடியுள்ள மற்ற சான்றோர்) அன்பாற்பதிகிறார். இம் மொத்த உருவகத்திற்கும் ஒரு பொருளுண்டு.

துகிரெனும் பவளம் பெரும்பாலும் சோழநாட்டுக் கிழக்குக் கடற்கரையிலே கிடைத்தது. பொன்னும், முத்தும் பொருளாதாரத்தில் நிலைக்கையில், துகிரின் கிடைப்பு ஒப்பீட்டளவிற் குறையத்தொடங்கியதும் சங்க காலத்திற் சிறிது சிறிதாய்ச் சோழராட்சி குன்றியதற்குக் காரணமாகும். இங்கே துகிரென்பது உருவகத்தாற் சோழநாட்டைச் சேர்ந்த பொத்தியாரைக் குறிக்கிறது.)

முத்து, மிகப்பெரிய அளவு தென்பாண்டிக் கிழக்குக் கடற்கரையிலே கிடைத்தது. பாண்டியரே முத்து வணிகத்தை நிலைநாட்டியவர் ஆனார். சேர நாட்டுச் சுள்ளியம் பெரியாறு கடலிற் சேரும் இடத்திற் கிடைத்த சூரணி முத்து வணிகத்தின் சிறுபகுதியே வகித்தது. ஆனால் கவாட முத்தும் (கவாடபுரம் என்பதே முத்தால் ஏற்பட்ட பெயர்தான்.), கொற்கை முத்தும் முத்து வணிகத்தின் 90% ஆளுமையை ஒருங்கே கொண்டிருந்தன. இங்கே முத்து என்பது பாண்டிநாட்டைச் சேர்ந்த பிசிராந்தையாரை உருவகத்தாற் குறிக்கிறது.

மன்னிய மாமலை பயந்த காமரு மணியும் = நிலைத்த பெருமலை தந்த, விரும்பத்தக்க, மணியும். இது கொடுமணத்தைச் சுற்றி மலைப் பகுதிகளிற் தென்கொங்கிற் கிடைத்தது. இங்கே மணிகள் என்பன வடக்கிருந்த சோழனைப் பார்க்க வெவ்வேறு இடங்களிலிருந்து கூடிவந்த சான்றோரை உருவகத்தாற் குறிக்கின்றன. 

இடைபடச் சேய ஆயினும் = (ஒன்றிற்கொன்று) இடைப்படத் தொலைவு ஆயினும். பொன்னும், பவளமும், முத்தும், மணியும் அருகருகே கிடைக்க வில்லை. ஒவ்வொன்றிற்கும் அடுத்ததிற்கும் இடையிருந்த தொலைவு கூடத்தான். எங்கிருந்தோ வந்த இந்தச் செய்பொருள்கள் அணிகலன் செய்வதற்காய் ஓரிடத்தில் ஒன்றுசேர்ந்தன. தொடுத்தது தொடையானது. “தொடை புணர்ந்து அருவிலை நன்கலம் அமைக்குங் காலை” = (மாலையாகத்) தொடுத்துச் சேர்த்து அரியவிலைக்குப் போகும் அணிகலனாக அமைக்கும் பொழுதில். ஒருவழித் தோன்றியாங்கு = ஒரேபாதையிற் தோன்றினாற் போல. என்றும் = என்றைக்கும். சான்றோர் சான்றோர் பாலர் ஆ(கு)ப = சான்றோர் சான்றோர் பக்கமே சேருவர். (சாலுதல் என்ற வினைச்சொல் நிறைதற் பொருளிற் சான்றோர் என்ற பெயர்ச்சொல்லை உருவாக்கும். சாலார் சாலார் பாலர் ஆகுபவே = சாலாதோர் சாலாதோர் பக்கமே சேருவர். (சாலுதலின் எதிர்மறையாளர் சாலாதவர்.)

மொத்தப் பொருள்:

தங்கமும், பவளமும், முத்தும்,
நிலைத்த பெருமலை தந்த, விரும்பத்தக்க, மணியும்
(ஒன்றிற்கொன்று) இடைப்படத் தொலைவாயினும்.
(மாலையாகத்) தொடுத்துச் சேர்த்து
அரியவிலைக்குப் போகும் அணிகலனாக அமைக்கும் பொழுதில் 
ஒரேபாதையிற் தோன்றினாற் போல
என்றைக்கும் 
சான்றோர் சான்றோர் பக்கமே சேருவர்;
சாலாதோர் சாலாதோர் பக்கமே சேருவர்.

மொத்தத்தில் ”இனம் இனத்தோடு சேரும்” என்று புலவர் கண்ணகனார் இங்கு சொல்கிறார்.

அன்புடன்,
இராம.கி. 

1 comment:

முத்தையா சுப்பிரமணியம் said...

அருமையான விளக்கம் ஐயா. மிக்க மகிழ்ச்சி.மூவேந்தர் வரலாற்றினை இணைத்து உரையெழுதியது நல்லசெய்திகளை அறியவுதவியது.