Sunday, October 14, 2018

உண்ணா நோன்பும் வடக்கிருத்தலும் - 9

அடுத்த பாட்டிற் கோபெருஞ்சோழனின் தன்னிலை விளக்கம் தொடருகிறது. இது மிகமிக எளிதான பாட்டு. பிசிராந்தையாரின் நல்லியல்புகளைச் சொல்வதால் இதன்திணையும் பாடாணே. துறை சென்ற பாடலைப் போலவே இயன்மொழியாகும். கலைச்சொற்கள் இதில் மிகுதியில்லை. இற்றைத் தமிழரும் உரையின்றி உணர்ந்துவிடலாம். உணவின்மேல் ஏங்கியதுமாறி, தன்னை ஆற்றுப்படுத்தி, ”பிசிரோன் வருவான்” என்றுசொன்ன சோழன், இப் பாட்டில் (இதுவரை பார்த்தறியாத, கேட்ட மாத்திரமே அறிந்த) இருவர் நட்பை விதந்து, “ஐயப்படாதீர்! அவன் வாராது நில்லான்; வருவான்; உண்ணாநோன்பு இருக்கும் இக்களத்தில், என்னருகே அவனுக்கும் இடமொழித்து வையுங்கள்” என்று தன் உள்ளக்கிடக்கையைச் சொல்கிறான். 

கேட்டன் மாத்திரை யல்ல தியாவதும்
காண்ட லில்லா தியாண்டுபல கழிய
வழுவின்று பழகிய கிழமைய ராகினும்
அரிதே தோன்ற லதற்பட வொழுகலென்
றையங் கொள்ளன்மி னாரறி வாளீர்
இகழ்வில னினிய னியாத்த நண்பினன்
புகழ்கெட வரூஉம் பொய்வேண் டலனே
தன்பெயர் கிளக்குங் காலை யென்பெயர்
பேதைச் சோழ னென்னுஞ் சிறந்த
காதற் கிழமையு முடைய னதன்றலை
இன்னதோர் காலை நில்லலன்
இன்னே வருகுவ னொழிக்கவவற் கிடமே

                           - புறம் 216
இப்பாடலின் விளக்கம் கூடுவதற்காக, பாடலுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப் போட்டுக் கீழே கொடுத்திருக்கிறேன்.

ஆர் அறிவாளீர்!
கேட்டல் மாத்திரை அல்லது
யாவதும் காண்டல் இல்லாது
யாண்டு பல கழிய
வழுவின்று பழகிய கிழமையர் ஆகினும்
தோன்றல் அதல்பட ஒழுகல் அரிதே  என்று
ஐயங் கொள்ளன்மின்
இகழ்விலன் இனியன் யாத்த நண்பினன்
புகழ்கெட வரூஉம் பொய் வேண்டலனே
தன் பெயர் கிளக்குங் காலை,
"என் பெயர் சோழன் பேதை" என்னும்
சிறந்த காதற் கிழமையும் உடையன்
அதன் தலை
இன்னதோர் காலை நில்லலன்
இன்னே வருகுவன்,
அவற்கு இடமே ஒழிக்க

இனி ஒருசில சொற்பொருள்களையும் குறிப்புகளையும் பார்ப்போம்.

ஆர் அறிவாளீர்! = நிறைந்த அறிவாளிகளே! [அறிவாளி என்பது முகனச் (modern) சொல் அல்லாது முதிய பழஞ்சொல் தான் போலிருக்கிறது.]
கேட்டல் மாத்திரை அல்லது = கேட்ட மாத்திரமல்லது (மாத்திரை என்ற சொல் மட்டுமென்ற பொருளில் இக்காலத்தில் மாத்திரம் என்றாளப்படுகிறது. வட ஆற்காடு மாவட்டத்தில் இன்றும் பேச்சுவழக்கிலுண்டு.)
யாவதும் காண்டல் இல்லாது = என்றுங் காணவே இல்லாது
யாண்டு பல கழிய = பல்லாண்டுகள் கழிய (யாண்டு என்பதே முந்தையச் சொல். ஆண்டென்று இன்று ஆளுகிறோம்.)
வழுவின்று பழகிய கிழமையர் ஆகினும் = குறையின்றிப் பழகிய உரிமையர் ஆயினும் (வழு = குறை; கிழமை = உரிமை; கிழார் = உரியவர். கிழார் என்பதை feudal olrd என்ற விதப்பான பொருளிற் பயன்படுத்துவதும் உண்டு)
தோன்றல் அதற்பட ஒழுகல் அரிதே என்று = தலைவன் முறைப்பட (நட்புப்) பாராட்டுவது அரிதே என்று; (தோன்றிற் புகழொடு தோன்றுக என்பதால் தோன்றல் என்பது புகழ் படைத்தோருக்கு ஆகுபெயராயானது. இங்கு தலைவனைக் குறிக்கிறது. அதர்>அதல் = முறை; அதல் என்ற வடிவம் தமிழ் அகரமுதலிகளில் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் இந்தப் பாடலில் இருக்கிறது.)
ஐயங் கொள்ளன்மின் = ஐயம் கொள்ளாதீர்.
இகழ்விலன் இனியன் யாத்த நண்பினன் = (பிசிரோன்) இகழ்ச்சியில்லாதவன், இனியவன், (என்னோடு) பொருந்திய நட்பாளன்

[இப்பாடலில் இனியனென்பது தன்னையறியாது வெளிப்படும், மெய்யியற் சுமையேறிய சொல்லாகும். தம்மையோ, இன்னொருவரையோ, இனியன் என்று செயினர் சொல்லிக்கொள்ள விரும்பார். வாழ்க்கையில் இனிமை தேடலென்பது செயினருக்கு உகந்ததல்ல. வாழ்வின் எல்லாவினைகளும் குமுகநலம் வாய்ந்ததாக, அடுத்தார்க்கு ஊறுவிளைக்காததாக, பொறுப்பு உள்ளதாக, அதேபொழுது வீடுபேறு அடையத் தூண்டுவதாக, இருக்கவே அவர் நினைப்பார் சாவக நோன்பிகள் தவக்குறையால் இனிமைதேடுவதைத் தவிர்க்கச்சொல்லிச் செயினத்துறவிகள் அறிவுறுத்துவர். மாந்தவாழ்வைக் கடமையாகக் கருதி, நல்வினை, தீவினை மதிப்பீட்டின் வழியாகவே, செயினத் துறவிகள் எதையும் நோக்குவர். இனிமைநாடலை உலகாய்தப் (materialistic) போக்காகவே தீவிர மெய்யியல்கள் நோக்கும். தமிழருக்கோ உலகாய்தம் விலக்கல்ல. நம்பி நெடுஞ்செழியனைப்பற்றி பேரெயில் முறுவலார் பாடிய புறம் 239 ஆம் பாடல் ”செய்பவெல்லாம் செய்தனன் ஆகலின் இடுகவொன்றோ, சுடுகவொன்றோ படுவழிப் படுக இப் புகழ்வெய்யோன் தலையே” என்று முடித்து உலகாய்தத்தை அழுத்திப் பேசும். இனிமைதேடிப் பாடுபடுவது விலக்கவேண்டியதென்றே செயினராற் சொல்லப்படும். அற்றுவிகத்திற்கு இனிமைப்போக்கு தகாததல்ல. செயினத்தோடு ஒப்பிட்டால், அற்றுவிகம் உலகாய்தத்தை நெருங்கும். இனிமைபற்றி கோப்பெருஞ்சோழன் சொல்வது அற்றுவிகத் தோற்றுநரில் ஒருவரான பக்குடுக்கை நன்கணியாரின் புறம் 194 ஆம் பாட்டிற் சொல்லும் “இன்னாதம்ம இவ்வுலகம். இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே” என்பதை ஒக்கும்.] 

புகழ்கெட வரூஉம் பொய் வேண்டலனே = புகழ்கெட வரும் பொய்யை வேண்டாதவன், (பொய்வேண்டாமை சமண நெறிகள் மூன்றிற்குமே உகந்தது.)
தன்பெயர் கிளக்குங் காலை, “என்பெயர் சோழன் பேதை” என்னும் சிறந்த காதற்கிழமையும் உடையன் = (யாராவது) தன் பெயரைக் கேட்கும் போது, “என் பெயர் சோழப் பித்தன்” என்று சொல்லும் (அளவிற்குச்) சிறந்த அன்புரிமை உடையவன், (பித்தனைக் கிறுக்கனென்றும் பைத்தியமென்றுமே இக்காலத்திற் சொல்கிறோம்.. காதற்கிழமை என்பது ஒர் அழகான தொடர்.) 
அதன் தலை = அதனால்
இன்னதோர் காலை நில்லலன் = இச்சமயத்தில் நின்றுவிடமாட்டான்,
இன்னே வருகுவன் = இப்பொழுதே வந்துவிடுவான். (சோழனின் நம்பிக்கை அவ்வளவு ஆழமானது.)
அவற்கு இடமே ஒழிக்க = அவனுக்கு (இங்கு) இடம் ஒழித்து வையுங்கள். (இடமொழித்து வைக்கச்சொல்லும்போது பிறவாமைநாடுஞ் சோழனுக்குப் பிசிராந்தையாரும் தன்னோடு சேர்ந்து நோற்று உயிர் துறப்பது, உவப்பாய் இருந்தது போலும்.)

பாட்டின் மொத்தப் பொருள்:
----------------------------------------------------
நிறைந்த அறிவாளிகளே! கேட்ட மாத்திரமன்றி என்றுங் காணவேயில்லாது, பல்லாண்டுகள் கழிய, குறையின்றிப் பழகிய உரிமையர் ஆயினும், ”(நம்) தலைவன் முறைப்பட (நட்பு) பாராட்டுவது அரிதே” என்று ஐயங்கொள்ளாதீர்! (பிசிரோன்) இகழ்ச்சியில்லாதவன். இனியவன். (என்னோடு) பொருந்திய நட்பாளன். புகழ்கெட வரும் பொய்யை வேண்டாதவன். தன்பெயரை (யாராவது) கேட்கும் போது, “என் பெயர் சோழப் பித்தன்” என்று சொல்லும் (அளவிற்குச்) சிறந்த அன்புரிமை உடையவன். அதனால், இச்சமயத்தில் நின்றுவிடமாட்டான். இப்பொழுதே வந்துவிடுவான். அவனுக்கு (இங்கு) இடமொழித்து வையுங்கள்.
-----------------------------------------------------

இனியன் என்ற ஒரு சொல்லே பாட்டில் ஊடுறுவும் மெய்யியலை நமக்கு உணர்த்துகிறது. அடுத்த பாட்டிற்குப் போவோம்.

அன்புடன்,
இராம.கி.

No comments: