Wednesday, October 10, 2018

உண்ணா நோன்பும் வடக்கிருத்தலும் - 5

இனி அடுத்தது பாண்டியன் அறிவுடைநம்பியைப் பிசிராந்தை பாடிய புறம் 184 ஆம் பாட்டு. அறிவுடை வேந்தனென்று பாட்டில் வருவதாற் புறநானூற்றைத் தொகுத்தார் அறிவுடை நம்பியெனப் பட்டங் கொடுத்தார் போலும். இதே அரசன் புறம் 188 ஆம் பாடலில் பிள்ளைப் பேற்றின் பெருஞ்சிறப்புப் பற்றி ஒரு பாட்டுப் பாடியிருக்கிறான். இவனொரு மாறனோ, செழியனோ, வழுதியோ அறியோம். இவன் இயற்பெயர் என்னவென்றும் தெரியவில்லை. அதே பொழுது, கி.மு.80 ஐ ஒட்டிய ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், வெற்றிச் செழியன், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆகியோரின் பங்காளி இவனென்று ஊகிக்கலாம். திணை: பாடாண்; துறை: செவியறிவுறூஉ.(செறிந்த உயர்கருத்தைச் செவிவழி அறிவுறுத்துவது.) இப்பாட்டில் மா, செறு என்ற பழந்தமிழர் பரப்பளவுகள் ஒப்பிடப்படுகின்றன. இவற்றை விளக்குவதற்காக இவ்விடுகை நீளுகிறது.

பொதுவாக நீட்டலளவு தெளிந்தாற்றான் பரப்பளவு புரியும். 2000 ஆண்டுகளுக்கு முன், நீட்டலளவின் குறுந்தொலை வாய்ப்பாடு வட புலத்திலும் தென்புலத்திலும் ஒன்றாகவே இருந்தது. அருத்தசாற்ற அளவைகளும் தமிழ் மரபுசார் வாய்ப்பாடுகளும் இணையாகவே இருந்தன. ஆனால் இப் பழம்மரபை விடுத்து, ஆப்கனிசுத்தான் வழியாக இசுலாமிய வெளிநாட்டார் வருகைக்குப் பின் வடபுலத்தில் மேலையர், நடுக்கிழக்கு நடைமுறைகளைப் பின்பற்றி, 1 விரற்கிடை= 12/16 அங்குலம், 1 சாண்= 9 அங்குலம், 1 கோல்= 6 அடி என்றானது பெருஞ்சோகமாகும். 400 ஆண்டுகள் நடந்த மேலையர் கிழக்கிந்தியக் குழும அதிகாரத்திலும், ஊடேவந்த இசுலாமிய வழக்கே தொடர்ந்தது, தென்புலத்திலும் இவ்வழக்கு தொடர்ந்தது. காலமாற்றங்களைக் கணக்கிற்கொள்ளாது, பழையன மறந்து, மேலை அளவைகள் வரலாற்றில் வழக்கானது இன்றுந்தொடர்கிறது. (யாரைக் கேட்டாலும் இதையே அடித்துச்சொல்லுவார்.) இணைய வலைத்தளங்களும் மேலை வழக்கையே கிளிப்பிள்ளைபோல் ஒப்பிக்கின்றன. தமிழகச் செந்தர நீட்டளவையை மீட்டுத் திரு.கொடுமுடி. ச. சண்முகன் தன் ஆய்வேட்டை “பழந்தமிழர் பொறியியல் நுட்பத்திறன்" என்று 2 நூல்களாய் வெளியிட்டார். அவையில்லெனில், நீட்டளவைப் பரிமானங்கள் நமக்கு ஒழுங்காக விளங்கி இருக்காது. கீழே வடபுலம், தென்புலம் இரண்டிற்கும் பொதுவான குறுந்தொலை வாய்ப்பாட்டைப் பார்க்கலாம்.

1 விரற்கிடை = 11/16 அங்குலம்
2 விரற்கிடை = 1 பெருவிரல் = 1 3/8 அங்குலம்
12 விரற்கிடை = 6 பெருவிரல் = 1 சாண் = 8 1/4 அங்குலம்
2 சாண் = 1 முழம் = 1.3/8 அடி
2 முழம் = 1 சிறுகோல் = 2 3/4 அடி
2 சிறுகோல் = 1 கோல் = 5 1/2 அடி
2 கோல் = 1 பெருங்கோல் (= தண்டம்) = 11 அடி
8 பெருங்கோல் (= தண்டம்) = 1 கயிறு

மேலேயுள்ளதில் அடியென்பது ஆங்கிலக் கணக்கிற் பயிலும் 12 அங்குலம் ஆகும். நம்மூர் கல்வெட்டுக்களிற் குறிக்கும் அடியோ, குதிகாலிலிருந்து பெருவிரல் வரையுள்ள பாதத்தைக் குறித்துச் சாணிற்குச்சமம்..கொடுமுடியார் தம் முதல்நூலின் பக்கம் 103 இல் சாண், (தமிழ்) அடி, முழம் போன்றவற்றைப் படம்போட்டு விளக்கியிருப்பார். இந்த அடிவேறுபாட்டைக் கூட அறியாது பல்வேறு ஆய்வாளரும் அளவைகள்பற்றிப் புதுப்புதுக் கட்டுரைகள் படைக்கிறார். சிறுகோல், கோல், பெருங்கோல் அளவுகள் தமிழ்க்குமுகாயம் விரியவிரிய வளர்முகமாய் உருவாகியிருக்கலாம். இம்மூன்றையும் இலக்கியங்கள், கோல் என்றே கல்வெட்டுக்களில் அழைத்ததால், இடம், பொருள், ஏவல் பார்த்து, “எங்கு எதைக் குறித்தார்? சிறுகோலா? கோலா? பெருங்கோலா?” என்றாய வேண்டும். (தவிரக் கோல்களுக்கடுத்த ”கூப்பீடு” இயலுமைகளை, புகார்-மதுரை, காசி-குமரி, குமரியாறு-பஃறுளியாற்று போன்ற தொலைவுக் கணக்கீடுகளை வைத்தும் உணரவேண்டும்.) கீழுள்ள ”பழந்தமிழர் நீட்டளவைக்” கட்டுரைத்தொடர் இதற்கானதொரு முயற்சி ஆகும். முடிந்தால், படியுங்கள். 

http://valavu.blogspot.in/2009/06/1.html
http://valavu.blogspot.in/2009/06/2.html
http://valavu.blogspot.in/2009/06/3.html
http://valavu.blogspot.in/2009/07/4.html
http://valavu.blogspot.in/2009/07/5.html
http://valavu.blogspot.in/2009/07/6.html
http://valavu.blogspot.in/2009/07/7.html
http://valavu.blogspot.in/2009/07/8.html
http://valavu.blogspot.in/2009/08/9.html
http://valavu.blogspot.in/2009/10/10.html

மேற்சொன்ன காரணங்களால் தென்புல நெடுந்தொலை வாய்ப்பாடு வெவ்வேறு காலங்களில் மாறித்தோற்றியது.. [கி.மு.1000க்கும் முந்தைய] முதற்சங்க காலத்திற் கீழ்வரும் ஒப்பீடுகள் இருந்திருக்கலாம்.

500 சிறு கோல் = 15.625 கயிறு = 1 கூப்பீடு = 1375 அடி = 0.2604167 மைல் = 0.4190899 கி.மீ 
4 கூப்பீடு = 1 காதம் = 5500 அடி = 1.0416663 மைல் = 1.6763594 கி.மீ
4 காதம் = 1 யோசனை = 22000 அடி = 4.166665 மைல் = 6.7054375 கி.மீ

இடைச்சங்க காலத்திலும் அதன் பின்னும் [கி.மு.1000-500] பெரிய அளவைகள் தமிழகத்திலும், வடபுலத்துச் சனபதங்களிலும் இருந்திருக்கலாம்.

500 கோல் = 31 1/4 கயிறு = = 1 கூப்பீடு = 2750 அடி = 0.522222 மைல் = 0.8381305 கி.மீ.(இதுவே வட புலத்தில் நிலைத்திருக்கலாம், பின்னால் பல்லவர், சோழப் பேரரசில் வடமரபு ஆதிக்கம் கூடிப் பின் தெற்கில் புகுந்து நிலைபெற்றிருக்கலாம்)
4 கூப்பீடு = 1 காதம் = 11000 அடி = 2.088888 மைல் = 3.3525219 கி.மீ
4 காதம் = 1 யோசனை = 44000 அடி = 8.33333 மைல் = 13.410875 கி.மீ

கடைச்சங்க காலத்தில் [கி.மு.500-கி.பி.200] இன்னும் பெரிய அளவைகள் இருந்திருக்கலாம்.

500 பெருங்கோல் (= தண்டம்) = 62 1/2 கயிறு = 1 கூப்பீடு = 5500 அடி = 1.04167 மைல்.= 1.6763595 கி.மீ  (கி.பி.200 வரையிலும் பயன்பாட்டிலிருந்து, பின் கொஞ்சங் கொஞ்சமாய் மாறிப் பல்லவர் ஆட்சியில் 1 கூப்பீடு = 500 கோல் என்ற வடபுல வாய்ப்பாட்டிற்கு தமிழகமும் ஓரோவழி மாறியிருக்கலாம். அதேபொழுது, 1 கூப்பீடு = 500 பெருங்கோல் என்பது முற்றிலும் வழக்கு இழந்ததாய்த் தெரியவில்லை. இரு நடைமுறைகளும் தமிழகத்தில் அருகருகே இருந்தன போலும்.)
4 கூப்பீடு = 1 காதம் = 22000 அடி = 4.166667 மைல் = 6.7050438 கி.மீ
4 காதம் = 1 யோசனை = 88000 அடி = 16.66666 மைல் = 26.82175 கி.மீ

இனிப் பரப்பளவிற்குப் போவோம். மேற்சொன்ன சிறுகோல், கோல், பெருங் கோல் ஆகியவற்றின் சதுரங்களே பரப்பின் அடியலகுகளாயின. செவ்வக நீளத்தை அகலத்தாற் பெருக்கிப் பரப்பிற்கு இணை ஆக்குதலைக் குழித்தல் என்றும், பெருக்கி வந்ததைக் குழியென்றுஞ் சொல்வர். சிறுகோற் சதுரமும், கோற் சதுரமும் வழக்கிலிருந்ததை எந்தத் தமிழிக் கல்வெட்டும் உணர்த்த வில்லை. ஆனால் (தண்டக்) குழி, பல்லவர் செப்பேடுகளிலும், கல்வெட்டுக்களிலும் தெரிய வருகிறது. தவிரச் சிலம்பில் வரும் புகார்-மதுரைத் தொலைவுச் செய்தி பெருங்கோல் வழக்கை உறுதி செய்கிறது. அதியமான்வழி பற்றிய தொலைவுக்கற் செய்தியும், நெடுந்தொலை வாய்ப்பாட்டை உறுதி செய்கிறது. எனவே பெருங்கோற் சதுரம் (= தண்டச் சதுரம்) என்பது 121 சதுர அடிகளாகும்.

அதேபொழுது வெவ்வேறு மண்டலங்களில் வெவ்வேறு அடிப்படைகளும் சோதனையாகக் கொள்ளப்பட்டன. கல்வெட்டாய்வர் திரு.சு.இராசுகோபால் எடுவிப்பில் (editing) வெளிவந்த “Kaveri - Studies in Epigraphy, Archaeology and History” [பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை 2001] நூலில் பேரா. ஒய்.சுப்பராயலுவின் ”Land measurements in Medieval Tamilnadu" என்னும் கட்டுரையில் பல மாவட்டங்களிற் கிடைத்த, கி.பி. 800 இலிருந்து 1350 வரையிலுமான, நில அளவுகளைக் குறிக்கும் 51 கல்வெட்டுக்களின் வழி ஒரு புள்ளிவிவரம் குறித்திருப்பார். அதன்மூலம் 12, 14, 16, 18 சாண் பெருங்கோல்கள் தமிழகத்திற் புழங்கியதும், 16 சாண் (=132” = 11 அடி) பெருங்கோல் தமிழகத்திற் கிட்டத்தட்ட 57% பரவலான புழக்கத்தில் 550 ஆண்டுகள் வரையிருந்ததென்பதும், பல்லவர் காலத்திலும், பேரரசுச்சோழர் காலத்திலும் இது பெரிதும் புழங்கியதென்றும், பாண்டியர் 18 சாண் கோலாய் மாற்றமுயன்றும், அது நிலைக்காது, 16 சாண் கோலே பெரும்பான்மை புழங்கியதென்றும் தெரிகிறது. (காட்டாக, கி.பி.921 ஆம் ஆண்டில் உத்தரமேரூரில் பராந்தக சோழன் ஏற்படுத்திய கல்வெட்டுச் செய்திகளைக் காணலாம்.)

[இதையும் மீறி மேலைப்பழக்கத்தை நம்மூரிற் பதிப்பதாய் 1 குழி = 144 சதுர அடியென்று பல்வேறு இணையத்தளங்களில் எழுதுகிறார்; தமிழரின் அலட்சியப் போக்கினாற் செந்தரமெனவும் இது பதிவு செய்யப்படுகிறது. அண்மையில் ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு (Unicode Consortium) திரு இரமண சர்மா என்பார் அனுப்பிவைத்த ”தமிழ்ப்பின்னங்கள், குறியீடுகளுக்கான முன்னீட்டிலும்” 1 குழி = 144 சதுர அடியாகவே பிழைபடக் குறிக்கப்பட்டது. மேலையர் வழக்கின் படி 1 விரற்கிடை = 3/4 அங்குலமாய்க் கொண்டு அதைப் 16 சாணாற் பெருக்கினாற்றான் ஒரு கோல் = 12 அடி எனும் மேலை, நடுக்கிழக்கு வழக்கே கிடைக்கும். இப்படி நம்மரபைத் தூக்கியெறிந்து, மேலையர் வழக்கை நம்முடையதாய்ப் பதிவுசெய்வது வழக்கமாகின், அப்புறம் வரலாறென்பது நமக்கெதற்கு வேண்டும்?]   . 

குழிக்கும் மேலே, பெரும் பரப்பளவைகளாய் பின்னப் பெயரான முந்திரி, காணி, மா, என்பனவும், குண்டு, பாடகம், செய், செறு, பட்டி, வேலி என்பனவும் வெவ்வேறு காலங்களிற் பயன்பட்டுள்ளன.  (ஆனாற் சதுரத்தின் அடிப்படைக் கோல் - 12 சாணா, 14 சாணா, 16 சாணா, 18 சாணா என்பது - மண்டலத்திற்கு மண்டலம் வேறாகி, ஒரு செந்தரம் ஏற்படாது போனது.) கீழே அடிப்படைக் கோலை (பெரும்பான்மை வழக்கான) 16 சாணாகக் கொண்டு பரப்பளவுச் சமன்பாடுகளைக் குறித்துள்ளேன்.

1 முந்திரி = 6 1/4 குழி = 756.25 சதுர அடிகள் (27.5 அடி X 27.5 அடி என்ற சதுர நிலம்) 
1 குண்டு = 9 குழி = 1089 சதுர அடிகள் (33 அடி X 33 அடி என்ற சதுர நிலம்) [இது தொண்டை மண்டல வழக்கு]
1 காணி = 25 குழி = 3025 சதுர அடிகள் (55 அடி X 55 அடி என்ற சதுர நிலம்) [காணி நிலம் என்பது கிட்டத்தட்ட 1 ground = 2400 சதுர அடிகள் என்று மேலையர் வழக்கிற் சொல்கிறோமே, அதற்கருகில் வரும். ”காணி நிலம் வேண்டும், பராசக்தி, காணிநிலம் வேண்டும்” என்பது பாரதியார் பாட்டு. காணியைத் தவறாகப் புரிந்து பல வலைத்தளங்களிலும் மாவினும் பெரிய அளவையாகக் காட்டுவர். அது பின்ன வழக்கின் படியும் சரியாக அமையாது.]
1 மா = 100 குழி = 12100 சதுர அடிகள் (110 அடி X 110 அடி என்ற சதுர நிலம்). இற்றைக்கால 6 ground (14400 சதுர அடிகள்) நிலத்திற்குச் சற்று குறைந்தது. சிவகங்கை மாவட்டத்திற் கூட்டுக் குடும்பங்கள் வாழும் வகையில் ஒவ்வொரு பெரிய வீடும் மா நிலத்திற்றான் கட்டப்பட்டது. ”மா தோட்டம்” எனப்படும் வீட்டுத் தோட்டங்களும் இந்த அளவிற்றான் பேணப்பட்டன. அந்தக் காலத்தில் மிகவும் பெரிதில்லாத, மிகவுஞ் சிறிதில்லாத நிரவலான இடம் மாவென்று அழைக்கப்பட்டது. [A.R.E. 5/1899 என்ற கல்வெட்டு 1 மா = 128 குழி = 15488 சதுர அடிகள் (176 அடி X 88 அடி என்ற செவ்வக நிலம்) என்றுங் குறிக்கும். அதேபொழுது 100 குழி என்பதே தமிழ்நாடெங்கிலும் பரவலான வழக்காய் இருந்திருக்கிறது.]
1 பாடகம் = 240 குழி = 29040 சதுர அடிகள்.(220 அடி X 132 அடி என்ற செவ்வக நிலம்) [”மஞ்சிக்கமாகக் கிடந்த நிலத்தில் மூன்று பாடகந் திருத்தி S.I.I.i.iii 203]
1 செய் = 625 குழி = 75625 சதுர அடிகள் (275 அடி X 275 அடி என்ற சதுர நிலம்) ஓர் அடிப்படை நிலம் இந்த [செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, மடலம் 3, பாகம் 3, பக் 57)
1 செறு = 810 குழி 101640 சதுர அடிகள் (330 அடி X 297 அடி என்ற செவ்வக நிலம்) [புளியங்கொல்லையிற் தீர்த்தநென்று திருத்திந செறு குழி எண்ணூற்றொருபது குழியும் S.I.I volume VII page 66 No.154.  on the south wall of the central shrine in the Tintrinisvara temple at Tindivanam]
1 பட்டி = 1200 குழி = 145200 சதுர அடிகள் (440 அடி X 330 அடி என்ற செவ்வக நிலம்) [இதுவும் தொண்டை மண்டல வழக்கு. கூரம் செப்பேடு 59 ஆவது வரியில் ஒரு பட்டி நிலம் ஆயிரத்திரு நூறுகுழி கொண்டது என்று சொல்லப்படுகிறது.] 
1 வேலி = 20 மா = 2000 குழிகள் = 242000 சதுர அடிகள் (550 அடி X 440 அடி என்ற செவ்வக நிலம்)   

மேலேயுள்ள அளவைச் சொற்களில், குண்டு என்பது குழித்தலின் தொடர்பால் வந்தசொல் என்பது விளங்கும். காணி = மாவின் கால்நிலம். மா, விரிந்ததென்ற பொருளிலெழுந்தது. பாடகம் = இயல் நிலத்தைத் திருத்திப் பாடுற்றது. செய்= செய்யப்பட்டது. (நன்செய், புன்செய் என்கிறோமே? அவை வெறும் வயல்கள் அல்ல. இயல்நிலத்தை மட்டப்படுத்திக் கொத்திச் செய்யப்பட்டவை.) செறு= நன்செய் நிலங்களைச் சார்ந்த மேட்டுப்பகுதியைக் கல்லித் திருத்தி நன்செய்யோடு செறித்துக்கூட்டிய நிலம். வேலி= வரப்புக்கட்டிய பெருநிலம். பழையமரபில் வேலியே பரப்பளவிற் பெரியதாகும்.   

இந்த விரிவான விளக்கத்தின் பின் பாட்டிற்குள் போவோம்.

காய்நெல் லறுத்துக் கவளங் கொளினே
மாநிறை வில்லதும் பன்னாட் காகும்
நூறுசெறு வாயினுந் தமித்துப்புக் குணினே
வாய்புகு வதனினுங் கால்பெரிது கெடுக்கும்
அறிவுடை வேந்த நெறியறிந்து கொளினே
கோடி யாத்து நாடுபெரிது நந்தும்
மெல்லியன் கிழவ னாகி வைகலும்
வரிசை யறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவுதப வெடுக்கும் பிண்ட நச்சின்
யானை புக்க புலம்போலத்
தானு முண்ணா னுலகமுங் கெடுமே

                         - புறம் 184

இந்தப் பாடலின் விளக்கம் கூடுவதற்காக, பாடலுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப் போட்டு கீழே கொடுத்திருக்கிறேன்.

காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே
மா நிறைவு இல்லதும் பன்னாட்கு ஆகும்
நூறு செறு ஆயினும் தமித்துப் புக்கு உ(ண்)ணினே
வாய் புகுவதனினுங் கால் பெரிது கெடுக்கும்
அறிவுடை வேந்த! நெறி அறிந்து கொ(ள்)ளினே
நாடு கோடி யாத்து பெரிது நந்தும்
மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்
வரிசை அறியாக் கல் என் சுற்றமொடு
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம் போலத்
தானும் உண்ணான் உலகமும் கெடுமே

இனி சொற்பொருளுக்கு வருவோம். மேலே விவரித்த அளவைகள் போக இப்பாட்டைப் புரிந்து கொள்வது எளிதுதான். இதில் வருஞ் சொற்களிலும் நாலைந்தைத் தவிர மற்றையவை இன்றும் புழக்கத்தில் உள்ளவையே.

கவளம் என்ற சொல் சோற்றுருண்டையைக் குறிக்கும். நெல்லறுத்து அரிசியாக்கிப் பதப்படுத்திச் சோறாக்கி உருண்டையானது இங்கே பொருள் பொதிந்து கிடக்கிறது. குல் என்னும் வேர்ச்சொல்லில் வளைவுப் பொருளில் எழுந்த சொற்களைச் சிறிது கண்டாற் பொருள் விளங்கும். 

குல்>குள்>குவ்>குவள்>குவளம் = உருண்டை
குல்>குள்>குவ்>குவள்>குவளம்>கோளம் = உருண்டை
குல்>குள்>குவ்>குவள்>குவளம்>கவளம் = உருண்டை

வாயிற் கவ்வியதும் கவளமே. அடுத்தது ஆறாவதுவரியில் வரும் கோடி என்ற சொல். இது 10000000 என்னும் பேரெண்ணைக் குறிக்கும், சங்ககாலத்தில் கோடி, குவளை என்ற 2 சொற்கள் இருந்தன. கோடி இன்றும் புழக்கத்திலுள்ளது. குவளையைத் தொடர்ந்து பயிலத் தவறினோம். “நெய்தலும் குவளையும் ஆம்பலும், சங்கமும் நுதலிய செய்குறியீட்டம்- பரிபா.2:13.” தமிழ் எண்களின் சொற்பிறப்புப் பற்றி எழுதுவாய்த் தெரிவித்திருந்தேன். இன்னும் செய்ய முடியாது தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 என்பவற்றைப் பேசாது பெரிய எண்களை மட்டும் இங்கு பார்ப்போம்.

நூறென்பது சிறுசிறு பாகங்களாய் நொறுங்கியதை, நூறியதைக் குறிப்பது. இன்னுஞ் சிறிதாக அயிர்ந்ததே ஆயிரமாயிற்று. (ஐ = அய் = நுண்மை). அயிர்ந்ததை மேலுஞ்சிறிதாய் நொய்த்தது நொய்தமாகி 100000 யைக் குறித்தது. (நொய்தம்>ந்யுதம் வடக்கே எண்ணியலிற் போகும்.) நொய்தல்>நெய்தலாகி இதே எண்ணைத் தமிழிற்குறிக்கும். சில்லென்பது கல்லின் சிறுசிதைவு. [சில்லுதல்> சில்லித்தல்> சில்லாகல் என்பவை சுக்குநூறாவதைத் தெரிவிக்கும். (சுக்குநூறு என்பங்கூடச் சில்க்குநூறு தான்.) சகரந் தவிர்த்த சில், இல்லாகும். (சகரம் தவிர்த்துப் பயன்கொண்ட சொற்கள் தமிழில் மிகுதி.) இல்/ இல்லி என்பதற்கு மீச்சிறிதென்ற பொருளுண்டு. இல்லின் தொடர்ச்சியாய் இல்லாக்கம்>இலாக்கம்>இலக்கம்>லக்கம்>லக்ஷம் என்பது வடக்கே நிலை கொண்ட தமிழ்வேர்ச்சொல்]. நொய்யைக் குவித்தாற் குவியலாகும். குவியல் திரட்சி, கூட்டம், மேட்டுநிலம், மலை, குன்று, மலையுச்சி, என்பவை ஒன்றிற்கொன்று தொடர்புள்ள சொற்கள். குல்லெனும் வேர் திரட்சிப் பொருளிற் குவவு, குவளை, குவடு, கோடு, கோடியை உருவாக்கும். குவளையின் எண்ணுப்பொருள் தெரியாது நான்தவித்த காலமுண்டு. இரா. மதிவாணனின் அறிவுறுத்தலுக்குப் பின் குவளை, கோடியின் சொற்பிறப்பிற் தெளிவேற்பட்டது.
      .
குல்>குள்>குவ்>குவ்வு>குவவு= திரட்சி, குவியல், கூட்டம்
குல்>குள்>குவ்>குவள்>குவளை; ஒரு பேரெண். குல்>குள்>குவ்>குவள்+து>குவடு = திரட்சி, மலை, குன்று, மலையுச்சி,
குல்>குள்>குவ்>குவள்>குவடு>கோடு = மலையுச்சி, மலை, மேட்டுநிலம்,
குல்>குள்>குவ்>குவள்>குவடு>கோடு>கோடி = நூறு இலக்கம், எண்ணின் மிகுதி, தொகுதி,

நந்தும் = தூண்டும், தழைக்கும்; கிழவன் = உரிமையாளன். நிலக்கிழார் = நில உரிமையாளர்; வரிசை = ஒழுங்கு, எது, எப்படி என்ற அறியும் முறை; கல் என் சுற்றம் = ”கல்” என்று சத்தம் போடும் (ஆரவாரமிடும்) சுற்றத்தார்; தபுத்தல் = கெடுதல்; தப்பு = கேடு; பிண்டம் = பொருள்; புலம் = field; நச்சுதல் = விரும்புதல். இனி மொத்தப் பொருளையும் பார்ப்போம்.

(விளைந்து) காயும் நெல்லை அறுத்து (அரிசியாக்கிக்) கவளமாய் (யானைக்குக்) கொடுத்தாலும்,
மாவினுங் குறைவான நிலத்தின் விளைவு பன்னாட்களுக்கு வரும்.
மாறாக நூறு செறு நிலமாயினும்,
(யானை) தனித்துப் புகுந்து உண்ணத் தொடங்கினால்,
(யானையின்) வாயிற் புகுவதை விடக் காலே பெரிதுங் கெடுக்கும்.
அறிவுடை வேந்தனே!
நெறியை அறிந்து (இறையைக்) கொண்டால்,
கோடியாய்ச் சேர்த்து நாடும் பெரிதாய்த் தழைக்கும்.
நாட்டுரிமையாளன் நாள்தோறும்
அறிவால் மெலிந்து,
ஒழுங்கறியாத, ஆரவாரச் சுற்றத்தோடு பரிவுகெடப் பொருளாசை கொண்டால்,
யானைபுகுந்த வயல்போல தானும் உண்ணான்;
இவ்வுலகமும் கெடும்.       

இப் பாண்டியவரசன் நெறியறியாது இறைகொண்டான் போலும். அவனுக்கு நேர்மையான ஆட்சிமுறையில் வரிப்பணம் பெறுவதுபற்றிப் பிசிராந்தையார் புகல்கிறார். இந்தப்பார்வை வேதம், அற்றுவிகம், செயினம், புத்தமென எல்லாப் பார்வையிலும் சொல்லக்கூடிய அறிவுறுத்தலே. இப்பாடல் மூலம் வெளிப் படுவது பிசிராந்தையின் அச்சமில்லாத பார்வையே. அதேபொழுது அறிவுடை நம்பியும் பெருந்தப்பு பண்ணியவன் போல் தோற்றவில்லை. ஏனெனில் புறம் 191 இல் இதே வேந்தனைப்பற்றி ”வேந்தனும் அல்லவை செய்யான்” என்று பிசிராந்தையாரே சொல்கிறார். அல்லது புறம் 184 இல் பேசப்படும் அறிவுடை நம்பியும், 191 இல் பேசப்படும் வேந்தனும் வெவ்வேறானவரா? - என்பதும் தெரியவில்லை. 184, 188, 191 எனும் 3பாடல்களையுஞ் சேர்த்துப்பார்த்தால் ஏதோவொரு குழப்பந் தெரிகிறது.

அன்புடன்,
இராம.கி.   

No comments: