Saturday, October 20, 2018

உண்ணா நோன்பும் வடக்கிருத்தலும் - 13

அடுத்து புறம் - 221 ஆம் பாடலைப் பார்ப்போம். இதன் திணை: பொதுவியல்; துறை: கையறு நிலை. ”கொடையிற் சிறந்த கோப்பெருஞ்சோழன், தான் கொண்ட கொள்கையுறுதியால் வடக்கிருந்து உயிர்துறந்தான். அவனிறப்பைத் தொடர்ந்து, தாழியில் இருத்தியோ, அன்றிப் பதுக்கையிற் கிடத்தியோ, உடலைப்புதைத்து அதன்மேல் நடுகல்லும் நிறுத்தியாயிற்று. (காவிரிப் படுகையின் புவியமைப்பில், சோழன் ஈமக்குழி பதுக்கையாயிராது, பெரும்பாலும் தாழியாகவே வாய்ப்புண்டு.) அக்கல்லும் நின்றதோ, இருந்ததோ காட்டாது, கிடந்த கோலமே காட்டியிருக்கும். சோழனோடு தானும் வடக்கிருக்க முற்பட்டபோது சோழன்தடுத்ததை வேறுபாடலில் நினைவு கொள்ளும் பொத்தியார் இப்பாடலில் நடுகல்லைக் கண்டு நெகிழ்ந்து பாடுகிறார்.   

பாடுநர்க் கீத்த பல்புக ழன்னே
ஆடுநர்க் கீத்த பேரன் பினனே
அறவோர் புகழ்ந்த வாய்கோ லன்னே
திறவோர் புகழ்ந்த திண்ணன் பினனே
மகளிர் சாயன் மைந்தர்க்கு மைந்து
துகளறு கேள்வி யுயர்ந்தோர் புக்கில்
அனைய னென்னா தத்தக் கோனை
நினையாக் கூற்ற மின்னுயி ருய்த்தன்று
பைத லொக்கற் றழீஇ யதனை
வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்
நனந்தலை யுலக மரந்தை தூங்கக்
கெடுவி னலிசை சூடி
நடுக லாயினன் புரவல னெனவே.

                      - புறம் 221

இப்பாடலின் விளக்கம் கூடுவதற்காக, பாடலுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப் போட்டுக் கீழே கொடுத்திருக்கிறேன்.

பாடுநர்க்கு ஈத்த பல்புகழன்னே
ஆடுநர்க்கு ஈத்த பேர் அன்பினனே
அறவோர் புகழ்ந்த ஆய்கோலன்னே
திறவோர் புகழ்ந்த திண் அன்பினனே
மகளிர் சாயல்
மைந்தர்க்கு மைந்து
துகள் அறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்
அனையன் என்னாது
அத் தக்கோனை நினையாக் கூற்றம்
நனந்தலை உலகம் அரந்தை தூங்க
இன்னுயிர் உய்த்தன்று
வாய்மொழிப் புலவீர்!
கெடுவில் நல்லிசை சூடி
நடுகல் ஆயினன் புரவலன் எனவே.
பைதல் ஒக்கல் தழீஇ அதனை
வைகம் வம்மோ

இனி ஒருசில சொற்பொருள்களையும் குறிப்புகளையும் பார்ப்போம்.

”பாடுநர், ஆடுநர்” என்பன இன்றும் பலருக்குத் தெரிந்த சொற்களேயாகும். பாடுநர்க்கும், ஆடுநர்க்கும் பரிசுகொடுத்த சோழன் "புகழுடையோன், பேரன்பினன்" என்றெல்லாம் பாராட்டப் பெறுகிறான். [இப்பாராட்டினூடே ஒரு நுணுகிய விதயத்தைக் கவனிக்கவேண்டும். பாடுநருக்கும் ஆடுநருக்கும் பரிசில்கொடுப்போன், செயினநெறியை ஆழ்ந்து கடைப்பிடிப்போனாகி, வடக்கிருந்து, வாழ்நாளை முடிப்பது பெரிதும் அரிது. ஏனெனில் பாடலும், ஆடலும், கேளிக்கைகொள்ளலும் செயினத்தின் சாவகக் கைப்பிடியாளருக்கு ஏற்பென்றாலும், வடக்கிருக்கும் அளவிற்குத் துறவுகொண்டவருக்கு அது புறம்பான செயலேயாகும். ஆனால் ஓர் அற்றுவிகச் சாவகனுக்கோ, துறவிக்கோ அது முடியும். ஏனெனிற் பாடுவதையும், ஆடுவதையும், ஏன் இன்னும் பல கலைகளில் ஈடுபடுவதையும், முடிவில் வடக்கிருப்பதையும் அற்றுவிகம் ஏற்றுக்கொள்ளும்; அற்றுவிகத்தின் அடிப்படையான நியதிவழிச் செயற்படும் நடைமுறை ஆழமான பொருள்கொண்டது. அதை மூடநம்பிக்கை என்பது மேலோட்டமான பார்வையாகும்.]

”ஊழ்வினை” என்ற கருத்தீட்டை இருவேறு நெறிகளும் இருவிதமாய்ப் பார்க்கும். ஊழெனும் வினையாய், இருபெயர்த் தொகுதியாய், அற்றுவிகம் பார்க்கும்போது, ஊழ்ந்த (= ஊன்றிய) வினையாக, வினைத்தொகைப் பெயராக, செயினம் பார்க்கும். பாடுநர், ஆடுநரைப் புரக்கும் செயலை மெய்யியல்வழி செயினமும் அற்றுவிகமும் இருவகையிற் பார்க்கும் வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். அது நெடிய புலனம்; எனவே தவிர்க்கிறேன்.

பாடுநர்க்கு ஈத்த பல்புகழன்னே = பாடுவோருக்குக் கொடுத்த பல்புகழன்;
ஆடுநர்க்கு ஈத்த பேர் அன்பினனே = ஆடுவோர்க்குக் கொடுத்த பேரன்பினன்;

அறவோர் என்போர் அறநெறியை நாடுவோர். அறமென்ற சொல்லைப் பற்றி ஏராளமான விளக்கங்கள் வெவ்வேறு பார்வைகளிற் தமிழிற் கூறப்பட்டு விட்டன. ஆய் கோல் என்பது எதையும் சீர் தூக்கிப் பார்க்கும் கோலாகும். ”வளையாச் செங்கோலைக் கையில் வைத்துள்ள அரசன் யார்பக்கமும் வளையாது தன்னாட்சியில் நேர்மையைக் கடைப்பிடிப்பான்” என்றபொருளில் அச்சொல் ஆளப்படுகிறது. ஆட்சியிற் தொடர்ந்திருக்க வேண்டிய தொழில் ஆய்தலாகும். ”அறவோர் புகழ்ந்த ஆய்கோலன்னே” = அறவோர் புகழ்ந்த, எதையும் ஆய்ந்தறியும் செங்கோலன்

திறவோர் என்பது வெவ்வேறு புலங்கள், கலைகளிற் தேர்ச்சியும், திறமும் பெற்றவரைக் குறிக்கும். இவரைத்தான் experts என்று இக்காலத்தில் ஆங்கிலத்திற் சொல்லுகிறார். இக்காலத்திற் திறனை smartness க்கு ஈடாகச் சிலர் பொதுப்படப் புழங்குகிறார்; smart phone என்பதைத் திறன்பேசி என்றும் வழங்கத் தலைப்படுகிறார். ஆழ்ந்தோர்ந்தால் இரண்டும் வேறானவை. smartness என்பது ”எது வேண்டும், வேண்டாம்?” என்பதைப் பிரித்தறியும் தன்மையாகும்; தன்னளவில் நல்லது கெட்டது பிரித்தறியும் தன்மை. இதை சமர்த்தெனும் சங்கதச்சொல்லாலும் அழைப்பர். திறன் (capability) என்பது குறிப்பிட்ட புலத்தில் நுண்மாண் நுழைபுலம் காட்டுவதாகும். smart phone  ஐத் தெளிதிறன் பேசி அல்லது சூடிகை பேசி என்பதே சரியாக இருக்கும். இங்கே ”திறவோர் புகழ்ந்த திண் அன்பினனே” என்பது ”திறமுடையோர் புகழ்ந்த திட அன்பினன்” என்ற பொருள் கொள்ளும்.

சாயல், இங்கே சாய்மானம் என்று பொருள்படும். சங்ககாலக் குமுகாயம், ஆணாதிக்கக் குமுகாயமாக மாறிவிட்டது. தொடக்கத்திலிருந்த தாய்வழி மரபுகள் ஒருசில இடங்களிற் தொடர்ந்தாலும், பெண் என்பவள் மெல்லியள்; கொடிபோன்றவள். அவள்சாய ஆண்தோள் வேண்டுமென்ற எண்ணம் சங்க காலத்திற் தோன்றிவிட்டது. சாயலிற்கு நிறம், அழகு, தோற்றுருவம் போன்ற பொருட்பாடுகள் சரி வராது. மகளிர் சாயல் = மகளிர்(க்குச்) சாய்மானம், அதே போல மல்>மள்>மயி>மை>மைந்து= வலிமை என்று பொருள்கொள்ளும். மைந்தர்க்கு மைந்து = வலியோர்க்கு வலி,

துகள் என்பதற்குத் ”தூள், பூந்தாது, குற்றம்” போன்ற பொருட்பாடுகளைக் கூறுவார். இங்கே “துகளறு” என வருவதாற் குற்றம் (blemish) என்ற பொருளே சரியாகப் பொருந்தும். துகள் அறு கேள்வி உயர்ந்தோர் புக்கில் = குற்றமற்ற கல்வியில் உயர்ந்தவருக்கான புகலிடம்; அனையன் என்னாது = அத் தன்மையன் (எம் தலைவன்) என்றுசொல்லாது; அத் தக்கோனை நினையாக் கூற்றம் = அத்தகையோனை நினையாத கூற்றம்; நனந்தலை உலகம் அரந்தை தூங்க= அகன்ற உலகின் வருத்தம் கூடும்படி; இன்னுயிர் உய்த்தன்று= (அவன்) இன்னுயிரைக் கொண்டுபோனது.

 ”வாய்மொழிப் புலவீர்” என்றவிளி கூர்ந்து கவனிக்கவேண்டிய ஒன்றாகும். இத்தொடரின் 10ஆம் பகுதியில், ”பாணரை முந்தையர், படியாதவர், தான் தோன்றி” என்றும், ”புலவரைப் பிந்தையர்; படித்தவர், கற்றுச்சொல்லி” என்றும் தனித்தனியாகப் பார்க்கும் இடதுசாரித் தமிழறிஞர் விதப்பான தேற்றங்களை எடுத்துப்புகல்வதாகச் சொன்னேன். ”புலவர் பாணரைப் போல்மமாக்கிப் பாடி யுள்ளார்” என்றுஞ் சில தமிழறிஞர் சொல்லப்புகுவார். ”பிசிராந்தையார் புலவரா, பாணரா?” என முடிவுசெய்வது கடினமெனில், ”பொத்தியார் புலவரா, பாணரா?” என்பதும் கடுங்கேள்வி தான்.. ஆழ்ந்துபார்த்தால், இருவருமே எனக்குப் புலவராயும் பாணராயுந் தெரிகிறார்.

”பாணர் என்பார் நிகழ்த்து கலையாளர்” என்று குமுகவியல் ஆய்வாளர் பக்தவத்சல பாரதி சொல்வார். எனக்குப் புரிந்தவரை பாணர்/புலவர் என்ற பிரிப்பு ஆராய்ச்சியாளரின் தற்குறிப்பேற்றமாகவே தெரிகிறது. ”பாடியவன் பாணன் என்றும், புலந்தவன் புலவன் என்றுமே வரையறையாற் சொல்ல முடியும். பாணன் புலவனாய்ப் புலந் தெளியலாம். புலவன் பாணனாய்ப் பாடவுஞ் செய்யலாம். பாணரோ, புலவரோ, இருவருமே வளமை, பணம், காசு என்பதிற் தடுமாறிப் போயிருக்கிறார். இங்கே “வாய்மொழிப் புலவீர்” என்பது பாணரைக் குறிக்கும் விளியாகும். இதை மாற்றிவைத்து “படிப்புமொழிப் பாணரே” என்று புலவரைச் சொல்லமுடியுமோ?

பாணரோடு, பொருநர், கோடியர், கூத்தர், அகவர், இயவர், கண்ணுளர், துடியர், கடம்பர், பறையர், கிணையர், குயிலுவர், வயிரியர், விறலியர், மதங்கியர் என்று பல்வேறு நிகழ்த்து கலைக்காரரை சேர்த்துச் சொல்லமுடியும். பண்ணைப் பண்ணுவார் பாணர்; பொருந்துவார் பொருநர்; கோடு = ஊதுகொம்பு; கோடுவார் கோடியர்; குல்>குத்து>கூத்து. குத்துவார் கூத்தர்; அகவுவார் அகவர்; இயைவார் இயவர்; கண்ணுதல் = பொருத்துதல், கட்டுதல். கட்டுவார் கண்ணுளர்; துடிப்பது துடி, எனவே துடியர்; குடம்>கடம் = குடமுழா; கடத்தை அடிப்பவர் கடம்பர்; பறை = தாளக் கருவி; பறைவார் பறையர்; கிணை என்பது தாளக்கருவியே, கிணையர்; குயிலுவர் = கூவுவார்; கருவி வாசிப்போர்; வயிர் = மூங்கில் கருவி’ வயிரியர்; விற>விறல்>விறலி = உள்ளக்குறிப்பிற் தோன்றி உடம்பில் வேறுபாடு காட்டுவோர் விறலியர்; மதங்கம் = இக்கால ம்ருதங்கம் அன்று மதங்கமென்றே சொல்லப்பட்டது, மதங்கியர் மதங்கம் வாசிப்போர்.

கெடுவில் நல்லிசை சூடி = கேடிலா நற்புகழ் சூடி; நடுகல் ஆயினன் புரவலன் எனவே.= நடுகல்லாயினான் புரவலனென்று; பைதல் ஒக்கல் தழீஇ அதனை = வாடும் சுற்றம் தழுவி அதனை; வைகம் வம்மோ  = புலர்த்துவோம், வருவீரா?

பாட்டின் மொத்தப் பொருள்:

பாடுவோருக்குக் கொடுத்த பல்புகழன்,
ஆடுவோர்க்குக் கொடுத்த பேரன்பினன்,
அறவோர் புகழ்ந்த, ஆயும் செங்கோலன்,
திறமுடையோர் புகழ்ந்த திட அன்பினன்,
மகளிர்(க்குச்) சாய்மானம் (ஆனவன்),
வலியோர்க்கு வலி(யானவன்),
குற்றமற்ற கல்வியால் உயர்ந்தோர்க்குப் புகலிடம் (ஆனவன்),
அத்தன்மை (உடை)யவன் (எம் தலைவன்) என்று சொல்லாது,
அத்தகையோனை நினையாத கூற்றம்
அகன்ற உலகின் வருத்தம் கூடும்படியாக,
(அவன்) இன்னுயிரைக் கொண்டு போனது.
வாய்மொழிப் புலவரே!
கேடிலா நற்புகழ் சூடி நடுகல்லாயினான் புரவலனென்று
வாடும் சுற்றம் தழுவி
அதனைப் புலர்த்துவோம், வருவீரா?

பாட்டைப்பாடிய பொத்தியார் செயின நெறியினரோ, அற்றுவிக நெறியினரோ அல்லர். ஆனால் சோழனோடு இழைந்தவர். அவனுக்காக உயிரையும் கொடுக்கத் தயங்காதவர்.  அடுத்த பாடலைப் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

No comments: