Thursday, April 30, 2020

Rubber

corona case பற்றிய இடுகையில் ஒரு முன்னிகையாக கிருசுணன் திருவரங்கம் என்பார், “அரப்பரென்று rubber இக்கு ஆங்கில சொல்லையே தமிழில் பயன்படுத்தி உள்ளீர்களே? ஏன் தொய்வை என்ற சொல்லை தமிழில் அதற்குப் பயன்படுத்த வில்லை???  அது மட்டுமல்ல. அரப்பு என்றால் பேறுகால மருந்து (நெல்லைத் தமிழ்) அதன் கூட்டுப்பொருட்களை அம்மியில் வைத்து அரைத்து போடுவதால் ஆகுபெயராக வந்திருக்கும் வேறு எந்த அரைத்தலும் இப்படிக் கடினமாக அரைப்பதில்லை எனவே இதற்கான சிறப்புச்சொல்லாக மாறி ஆகுபெயராக மாறிவிட்டன...அரப்பர் என்றால் அதற்கான நபரை குறிப்பிடுவதாக உள்ளது. ஆனால் அது நடை வழக்கில் இல்லை அரைக்கிறவர் பெண் என்பதால் அரப்பு கொடுக்கிறவள் என்றுதான் அழைப்பர். அரப்பர் என்றாலும் தமிழில் வேறு பொருளுக்கு போய்விடும். எனவே தொய்வை என்றே அழைக்கலாமே ஐயா? எதேனும் தவறுகள் இருக்கின்றவா?” என்று கேட்டார்.  இது அவருக்கான மறுமொழி.
----------------------
என்னுடைய corona case இடுகையில் அரப்பர் என்று தவறாக எழுதி விட்டேன். http://valavu.blogspot.com/2008/04/tyre-brake-and-acceleration.html என்ற என் இடுகையைப் புரட்டிய பிறகு தான் நான் ஐகார ஈற்றில் உரப்பை/அரப்பை  என்று எழுதியது தெரிந்தது.  எனவே இவ் இடுகையைச் சற்று திருத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

முதலில் rubber என்ற பெயர்ச்சொல் பாராதீர்கள். rub என்ற வினைச்சொல் பாருங்கள். இதன்பொருள் உரசுதல். தமிழில் இது உர்> உரை> உரையு> உரைசு>உரசு என்று வளரும். ஒரு பொருள் இன்னொன்றோடு பட்டு, முட்டி நகரும்போது பொருள்களின் இயல்பிற்கும், நகரும் வேகம், விசை, தகை ஆகியவற்றிற்குத் தக்க ஒன்று இன்னொன்றோடு  உரசலாம். உரசு என்ற சொல் உர் எனும் ஒலியாலெழுவது. உரசு ஓர் ஒலிக்குறிப்புச் சொல். உர் எனும் குறிப்பு ஒரு மொழிக்கும் மட்டும் உரியதல்ல. பல மொழிகளும் அதை விதம்விதமாய் கையாளலாம். உரசுதலை உரஞ்சுதல், உரிஞ்சுதல் என்றுந் தமிழிற் சொல்வர். இன்னொரு விதமாய் உர்>உரை>உராய்>உராய்தல் என்றும் சொல்லப்படும். உராய்தல் உராய்ஞ்சுதல் என்றும் ஆகும். முதலில் முட்டுதல், பின் உராய்தல், முடிவில் தேய்தல். வரை இச்சொற்கள்  பொருள் உணர்த்தும்.  ஆங்கிலத்தில்

rub (v.) early 14c., transitive and intransitive, of uncertain origin, perhaps related to East Frisian rubben "to scratch, rub," and Low German rubbeling "rough, uneven," or similar words in Scandinavian (compare Danish rubbe "to rub, scrub," Norwegian rubba), of uncertain origin. Related: Rubbed; rubbing.

rubber (n.)
"thing that rubs" (a brush, cloth, etc.), 1530s, agent noun from rub (v.). The meaning "elastic substance from tropical plants" (short for India rubber) first recorded 1788, introduced to Europe 1744 by Charles Marie de la Condamine, so called because it originally was used as an eraser.

என்றுஞ் சொல்வார். உர, உரப்பு, உரப்புத் தூள், உரசல், உராய்வு, உரைதல், உரிஞ்சல் என்று இத்தனை சொற்களைக் கொண்ட தமிழருக்கு, rub எங்கு இருந்து போயிருக்கும் என ஊகிக்கத் தெரியவில்லையா? வியப்புத் தான். ஏதேதோ மாற்றுச் சொற்களைப் பலரும் தேடிக்கொண்டிருக்கிறார். அந்த அளவு அடிப்படைத் தமிழ்ச்சொற்களை விட்டு வெளியே வந்துவிட்டோம். 

முன்சொன்ன ஒலிக்குறிப்புச் சொல்லை அர் என்றும் சொல்லலாம்.  சொல்லி யிருக்கிறோம். அர்>அர> அரவு>அராவு என்பதும் உரசுதல், உரஞ்சுதல், உரிஞ்சுதல், உராய்தல், உராய்ஞ்சுதல், தேய்த்தல் ஆகியவற்றைக் குறிக்கும் தானே?  கரட்டுமை (hardness) குறைந்துள்ள ஓர் இரும்புத் துண்டை  கரட்டுமை அதிகம் கொண்ட இரும்புத் துண்டாலோ, அன்றேல் வயிரத்தாலோ தேய்த்து அரிக்கிறோமே?- அக்கருவிக்கு அரமென்று பெயர். வளர்ந்த நெற்கதிர்க் குரலை,  கருக்கரிவாள் கொண்டு அரிக்கிறோமே? அதுவும் அரச்செயல் தான். வீட்டில் அரிவாள் மனையில் காய்கறிகளை அரிகிறோமே, அதுவும் அரச் செயலே. இது அறுக்கும் செயலாயும் நீளும்.  முட்டல், உராய்தல், தேய்தல், அரிதல், அறுத்தல் என பொருள் வளர்ச்சி நீண்டுகொண்டே போகும். ஆயினும் அவற்றை விதப்பாய்க் குறிக்கச் சொல்லில் சிறுசிறு வேறுபாடுகள் நடக்கும்.  அருவி என்று சொல்கிறோமே அதுவும் அரச்செயல் தான். நீர் கல்லை அரிக்கிறது.

இனி rubberக்கு வருவோம்.. ஒரு பனையின் தாளியைக் கத்தி கொண்டு கீறினால் சற்றே பால் நிறத்தில் சருக்கரை நீர் அதனின்றும் இழியும். அதைப் பால் என்றே சொல்வார். பனம் பால், தென்னம் பால், கமுகம் பால் என்ற சொல்லாட்சிகளைக் கவனியுங்கள். இதேபோல் அரப்பை - Rubber- மரத்திலும் (இம்மரத்திற்கு இப்பெயர் எப்படி வந்தது என்பதைக் கீழே பார்ப்போம். கீறும் போது ஒரு பால் வடியும். ஆனால் இது மரத்தைக் கீறி வருவது. தாள்>தார் எனும் உறுப்பு அரப்பர் மரத்தில் கிடையாது. (பால் வருவதால் தாளுக்குப் பால்>பாள்>பாளை என்றும் பெயர் உண்டு. பனம்பாளை, தென்னம் பாளை, கமுகம்பாளை என்ற சொற்களை நோக்குங்கள். பாளை கொண்ட மரங்களைப் பாளை மரங்கள் என்றே புதலியலார் சொன்னார். palmyra என்பது பாளைமரத்தின் ஆங்கில ஒலிபெயர்ப்பு. நாம்தான் சொற்பிறப்பு அறியாமல் இருக்கிறோம். பின் அதைப் பொதுப்படையாக்கி வெவ்வேறு palm trees பற்றிப் புதலியர் சொன்னதும் இதன்வளர்ச்சியே. புல்மரக் குடும்பங்களுக்கான புதலியற் பெயர் வந்தது நம் தமிழின் அடிப்படையிலே தான்.)

rubber  பொருளை இயற்கையில் கண்டெடுத்த போது, உராய்ந்து கரிக் கறையை அழிக்கவே அது முதலில் பயன்பட்டது. எனவே rubber material (உராய்க்கும் பொருள்) என்று  கூட்டுச்சொல்லாகவே முதலில் அழைத்தார். பின், அதிகப் புழக்கத்தில் பொருளென்ற பின்சொல் சொல்லப் படாது போனது.  தமிழில் மிக எளிதில் rubber ஐ ”உரப்பை அல்லது அரப்பை” என்று சொல்லி விடலாம். (ஒருகாலத்தில் இழுவை என்றும் சொன்னேன்.) ஏதும் குறை வராது. இலுப்பை மரம் போல் உரப்பை/அரப்பை மரம் (rubber tree) என்ற சொல்லாட்சியை ஏற்றுக் கொள்ளலாம். மனம் தான் வேண்டும். தேய்வை, இழுவை, மீள்வை என்பவை இதற்குச் சரிவராது.

கரிக்குச்சியால் எழுதியதை உரப்பை/அரப்பை கொண்டு அரிக்கிறோம்> அழிக்கிறோம் (= தேய்க்கிறோம், உராய்க்கிறோம்) இச் செயலால் கரிக்கறை  போய்விடுகிறது. உரப்பை/அரப்பை என்று அப் பொருளுக்கு அரவுவதால் பெயர் எழுந்தது.  அதேபெயர் அரப்பைப் பாலுக்கும் அரப்பை மரத்திற்கும் நீண்டது. தொடக்க காலத்தில் அரப்பை தொய்யும் (=தளரும்) என்று முதலில் பலருக்கும் தெரியாது. அது பின்வந்த புரிதல்.

அரவுதல் என்ற சொல்லிற்கு   அரத்தால் தேய்த்தல், to file என்பது ஒரு பொருள். “வை அராவிய மாரன் வாளியும்” என்பது கம்பரா. அயோத். கைகேயி.58  இன்னொரு பொருள் உரசுதல் to rub, grate “பொருப்பு அராவி இழிபுனல்” என்பது தேவா 5.30: 7. அறுத்தல் to cut என்பது மூன்றாவது பொருள். ”மெய் அராவிட” என்பது கம்பரா. அயோத். கைகேயி 58. அர்>அர> அரவு?அராவு. அரவுதல் என்பது தமிழ்ச்சொல்லே. இராம.கி. இதில் எதையும் இட்டுக் கட்ட வில்லை. மலையாளத்திலும், “அராவுக” வினைச்சொல் உண்டு. மேலை நாடுகளில் அது rub ஆனது. வகரம் இந்தையிரோப்பியனில் baகரம் ஆகும். நாம் அதைப் பகரம் என்போம். அரப்பு = உராய்க்கும் பொருள். வேறொரு அரப்புத் தூளும் நாம் புழங்குகிறோம். எண்ணெய் தேய்த்துக் குளித்தால் அரப்புக்காய்த் தூள்கொண்டு உடம்புதேய்த்து எண்ணெய்க் கறையைப் போக்குகிறோம் . அரப்புத்தூள் அரைப்புத்தூள் என்றே நம் அகர முதலிகளில் பதிவாகியுள்ளது. நீங்கள் சொன்ன பேறுகால அரைப்புத் தூள் இன்னுங் கொஞ்சம் விதப்பானது.

உரப்பை/அரப்பை என்று rubber இக்கு வைத்துக்கொண்டால்  அரைப்புத் தூளோடு குழம்பாது. அப்புறம் ஏன் இந்த அர் ஈறு? இகரம் பயன்படுத்தினால் அரப்பு> அரப்பி ஆகும். கொஞ்சம் சொல்லக் கூச்சமாய் இருந்தது. அப்பியோடு குழம்புமோ? - என்று தோன்றியது. அரப்பான் என்பது கொஞ்சம் ஆண் ஆதிக்கமாய்த் தோன்றியது. பேசாமல் ”ஐ” சேர்த்து விடலாம் என்று எண்ணினேன். உயர்திணைப் பெயர் அஃறிணைக்கு வைக்கக் கூடாதோ?

அரப்பை rubber இன் ஒலிபெயர்ப்பாய்த் தென்படுமே? - என்பது அடுத்த கேள்வி. என் விடை: இருந்தால் தான் என்ன? அவரல்லவா, நம் அரவு-தலைப் பயன் படுத்துகிறார்? தேவாரக் காலம் என்பது இங்கே 7 ஆம் நூற்றாண்டு. முதலில் பயன்படுத்திய நாம் ஏன் சொல்லத் தயங்குகிறோம்?  நாம் ஏன் தொய்வை என்று இன்னொரு பிந்தைக் குணத்திற்குப் (property) போக வேண்டும்? நம் பெருமிதம் குலையவேண்டாம் ஐயா!       

அன்புடன்,
இராம.கி.

Wednesday, April 29, 2020

மிதிவண்டி கலைச்சொற்கள்

இது http://vasanthanin.blogspot.com/2005/05/1.html என்ற ஈழத்து நண்பர் வசந்தனின்  வலைப்பதிவில் உள்ளது. 2005 இல் மிதிவண்டியின் பாகங்கள் பற்றி இதிற் சொல்லியுள்ளேன்.  என் கணியிலோ, வலைப்பதிவிலோ அப்போது இதைச் சேமிக்காது விட்டேன். இதுபோல் நான் சேமிக்காத, என் ஆக்கங்கள் இணையத்தில் கிடைத்தால். அவை கண்ணில் படும்போது இப்போதெல்லாம் சேமிக்க முற்படுகிறேன். அந்த வகையில் இப்போது இது என் வலைப்பதிவிற் இது சேருகிறது.  அக்காலத்தில் செயலலிதா  அம்மையாரின் ஆட்சி நடந்துகொண்டிருந்தது.  இந்த என் முன்னிகையை யாரோ ஒருவர் பார்த்து மிதிவண்டியின் பாகங்களைப் பற்றி நான் குறித்ததை அப்படியே எடுத்து,  தான் சேகரித்த வேறு சொற்களோடு  சேர்த்து,

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D

என்ற விக்கிப்பீடியா வலைப்பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். ஆனால் என் பெயரை அங்கே அவர் குறிப்பிடப்பிடவே இல்லை. ஒருவேளை என் பெயர் தரப்படாததால் தான், தமிழ் விக்கிப்பீடியாவினர் சேர்த்தாரோ, என்னவோ? ஏனெனில் பொதுவாய் நான் பரிந்துரைக்கும் சொற்களைத் தமிழ் விக்கிப் பீடியாவில் பார்ப்பது மிக அரிது. பெரும்பாலும் தவிர்த்துவிடுவார்.

இனி வசந்தன் வலைப்பதிவில் நான் கொடுத்த முன்னிகை:
-------------------------------

இராம.கி said ... (04 May, 2005 17:14) :
பந்தை ஆடாமல் பந்தாளியை ஆடுவது எங்களூரில் பெரும்பாலோருக்கு உள்ள வழக்கம். அரசியலில் பெரும்பாலும் அது நடைபெறும். அண்மையில் தமிழ்ப்பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் மருத்துவர் இராமதாசும், தொல்.திருமாவளவனும், மு.சேதுராமனும், பழ.நெடுமாறனும் இன்னும் பலரும் சில செய்திகளைச் சொல்லிவருகிறார்கள். அந்தச் செய்திகளுக்கு மறுமொழியோ, அல்லது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவோ செயற்படாமல் பந்தாளியை ஆடுவது தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் பா.ம.க. தலைவர் கொ.க.மணி தமிழ் பாதுகாப்பு இயக்கம் பற்றிப் பேசத் தொடங்கியவுடனே, அதற்கு மறுமொழி சொல்லாமல், "நீ உன் பெயரை G.K.மணி என்று ஏன் வைத்துக் கொண்டு இருக்கிறாய்? உனக்கு சைக்கிளின் பாகங்களுக்கான தமிழ்ப்பெயர் தெரியுமா?" என்று முதல்வர் கேட்க, அத்தனை ஆளும் கட்சி உறுப்பினர்களும் (இன்னும் சில எதிர்க்கட்சியினரும் அவருடன் சேர்ந்து கொண்டு) கொல் என்று சிரிக்க, "தமிழை என்ன நீங்கள் பாதுகாக்கப் போகிறீர்கள்? ஆங்கிலச் சொல் எல்லாம் தான் தமிழாகி விட்டதே?" என்று முத்தாய்ப்பு வேறு. இந்த மனப்பாங்கில் "நாங்கள் தான் அறிவியல் தமிழ் கொண்டுவந்தோம்" என்ற முழக்கமும் இருக்கிறது.

இந்த பேரவை நிகழ்வைச் சாடி, அண்மையில் அ.வியனரசு என்பவர், தமிழ்ச் சான்றோர் பேரவையின் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர், ஜூ.விகடனில் பேசியிருக்கிறார். கூடவே அவர் மிதிவண்டியின் சில சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கொடுத்திருந்தார். இதைப் போன்ற மிதிவண்டிச் சொற்களின் இன்னும் பெரிய பட்டியலை ஏதோ ஒரு தமிழ்ச் சிற்றிதழில் இரண்டு மூன்று ஆண்டுகள் முன்பு படித்திருந்தேன். அப்போது குறித்துக் கொள்ளாமல் விட்டுவிட்டேன். இப்பொழுது வியனரசு கொடுத்ததை வைத்து, சில திருத்தங்கள் செய்து, மேலும் சில சொற்களைச் சேர்த்து இங்கு தந்துள்ளேன். எம் கடன் பணி செய்து கிடப்பதே.

seat, saddle = குந்துகை, இருக்கை
handle bar = கைப்பிடிப் பாளை (தென்னம் பாளை என்பதில் வரும் பாளை என்பது bar என்பதையே குறிக்கிறது.)
wheel = வளை/வளவி (கையில் போடுவதும் வளவி தான்.)
mud guard = மட் காப்பு (மண்+காப்பு)
stand = தண்டை (தண்டு கொள்ளுதல் என்பது இருத்தலும் நிலைத்தலும் ஆகும்.)
carrier = தூக்கி
pedal = மிதி
spoke = போழ்க்கு (போழுதல் என்பது கூர்மையாகக் குத்துதல். போழ்க்குகள் இங்கே சக்கர விளிம்பில் இருந்து நடுவத்தை நோக்கிப் போவது போழ்க்குவதாய் இருக்கிறது.)
wheel rod = வளை/வளவி உரல் (எல்லாவற்றிற்கும் தண்டு எனவே சொல்லிக் கொண்டிராமல் உரல் என்ற சொல் இங்கே பயனாகிறது. கம்பு, தண்டு, தடி, உரல் எனப் பலவற்றையும் வேறுபாடு விளங்கிப் பயன்படுத்த வேண்டும்.)
bell = மணி
rim = விளிம்பு
tube = தூம்பு
tyre = தோலி (வியப்பாக இருக்கும்; தோலில் இருந்த கிளைத்த தோலி என்பது பழத்திற்கு மட்டுமல்லாமல் எல்லாவிதமான மேல் உறைகளுக்கும் பயன்படக் கூடிய சொல் தான்)
chain = கணை (கண்ணி கண்ணியாய் கோத்துக் கணைத்தது கணை)
break = தடை
forks = பிரிகை
sprocket = பற்சகடு
gears = பல்லிணை
pump = இறைப்பி
dynamo = துனைமி ("கதழ்வும் துனைவும் விரைவுப் பொருள" என்பது தொல்காப்பியம். இந்தச் சொல் ப.அருளியின் அருங்கலைச்சொல் அகரமுதலியில் இருக்கிறது. அருமையான சொல்.)
reflector = மறுபளிப்பி
caliper = இடுக்கி
shoe = கவை
cable = கொப்புழை (மரத்தில் கிளை, கொப்பு என்று உறுப்புகள் பிரிவதை நினைவு கொள்ளுங்கள். உழை என்ற ஈறு கொப்பின் சிறியதைக் குறிப்பது.)
frame = வரம்பை, (வரம்பு கட்டியே ஏதொன்றையும் உருவாக்குகிறோம். வரம்பு என்பது எல்லை மட்டுமல்ல.
lever = எழுவை, நெம்புகோல்

மேலே உள்ள சொற்களுக்கு இன்னும் விளக்கம் கொடுக்கலாம். விரிவு கருதி விடுக்கிறேன்.
------------------------
நான் பா.ம.க. ஆளில்லை என்று சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். இல்லையென்றால் என்னையும் பந்தாடப் பலர் வந்து நிற்பார்கள்.
-----------------
அன்புடன்,
இராம.கி.

Tuesday, April 28, 2020

Case

தமிழில் கலைச்சொற்களைப் பொறுத்து நான் ஏதாவது சொன்னால், சிலருக்குப் பிணக்கும், அகப்பாடும் (ego) வந்துவிடும்.  எவ்வளவுதான் முனைந்து நேரஞ்செலவளித்துச் புதுச்சொல் உரைப்பினும் நொள்ளைக் காரணம் சொல்லி என் பரிந்துரையை  நாசூக்காய் மறுப்பார். காரணமும் சொல்வார். “ரொம்ப இலக்கியத் தமிழாய் இருக்கு. எளிமையாய், பாமரனுக்குப் புரியும் படி இல்லை. 8 கோடித் தமிழருக்கும் விளங்க வேண்டாமா? ஆங்கில ஒலிப்பாயிருக்கு. ஆங்கிலமுறையில் ஏன் சிந்திக்க வேண்டும்? இந்தையிரோப்பியனுக்கும் நமக்கும் தொடர்பே இல்லை. வரலாற்றுக் குழப்பம். 400 ஆண்டுகள் அடிமையானோம்,” என்பார்  பின்னால் ”கால்டுவெல், எல்லிசு, சோன்சு, மாக்சுமுல்லர் ” என மேலையருக்குத் தாசானுதாசர் ஆகவுஞ் செய்வார்.

ஒருபக்கம் தமிழ் அறிவியல் மொழி ஆகவேண்டும் என்பார். இன்னொரு பக்கம் popularization of science in Tamil உக்கு மேல் இம்மியும் நகரார். இவர் பரிந்துரையில் பழந்தமிழ்ச் சொல்லின் பகுதியோடு, விகுதி/ஈற்றை மாற்றி மாற்றி புது வேயம் (வேஷம்)  கட்டினால், “சூ, மந்திரக்காளி” எனக் கலைச் சொற்கள் கொட்டுமாம். முடிவில் ஒரு சொல்லுக்கு  நீளத்தொடரே இணையாய் வந்துசேரும். ஒரே ஆங்கிலச்சொல்லுக்கு தனித்தனிச் சொற்கள் ஒவ்வொரு துறையிலும் நாடிப் பாத்திகட்டுவார். “எம் பாத்திக்குள் வராதீர்” என்றுஞ் சொல்வார். இவருக்கு அறிவியல் தமிழில் தேவைப்படும் துல்லியம், சொற்சுருக்கம், துறைகடந்த புழக்கம் ஆகியவ்ற்றில் அக்கறை இருப்பதாய்த் தெரியவில்லை.   

நான் இட்டுக்கட்டிச் சொல்லவில்லை. நடந்ததைச் சொல்கிறேன். சூடணி வெருவி நோய்க்காலத்தில் case இற்குப் பெரும்பாலோர் வழக்கென்றே சொல்லிவருகிறார். அதைவிடக் ”கட்டு” பொருந்துமென்றேன். பேராசிரியர் ஒருவர், ”கட்டிற்கு” மாற்றுச் சொல் தராது, ”கட்டு அறவே பொருந்தாத சொல்.  750 முள்தொற்றி-19 நோயாளிகளைப் புதிதாகக் பதிவு செய்திருக்கிறார் என்று எளிதாகக் கூறலாமே? ஏன் ஆங்கில வழி சிந்திக்கவேண்டும்? ” என்றார். திகைத்துப் போனேன். அதாவது  ”புதுச்சொல் வேண்டாம், ’நோயாளிகள்’ போதுமாம்.  “கட்டென்று சொல்லாதீர்கள். தமிழை ஒப்பேற்றும் மொழியாகவே வைத்திருங்கள். யார் வேண்டாம் என்றார்? அது உங்கள் உகப்பு. இது  என் உகப்பு. பல்வேறு நோயாளிகளின் (குறிப்புகள்) கட்டுகள் பல்வேறு மருத்துவ மனைகளில் உள்ளன. அவற்றை ஒன்றிணைத்து கட்டுகளின் எண்ணிக்கை கூறப்படுகிறது, கட்டு = தொகுதி என்றே நான் படித்த நூல்கள் சொல்கின்றன” என்றேன்..

மேலும், "You don't treat me as a patient, a human being, You treat me as just a case" என்பது எலும்பும் சதையுமான ஒரு நோயாளி எழுப்பும் குமுறல். இங்கே நோயாளியையும் case ஐயும் ஒன்றாய்ச் சொல்ல முடியுமா?” என்றுங் கேட்டேன். இருவருக்கும் இடையே உரையாடல் சட்டெனச் சூடாகி நின்று போனது. பேராசிரியர் மாற்றுச் சொல் கொடுத்திருந்தால் நான் ஒருவேளை ஏற்றிருப்பேன்  ஆனால் case இற்குப் ”புதுச்சொல்லே வேண்டாம், நோயாளி போதும்” என மேலே நகர விடாது முடக்கி வைத்ததையும் ஆங்கிலச் சிந்தனை என்று சாடியதையும்  என்னால் ஏற்கமுடியவில்லை.   

இன்னொரு கவிஞர் அடுத்துவந்து “நான் கொரோனா தொற்று என்றுமட்டுமே எழுதுகிறேன். அமெரிக்காவில்.. கொரோனா தொற்று 1 மில்லியன் மரணம் 52,000” என்று இதேபோல் பாடம் படித்தார். இவரும் case இற்கு இணையாய்த் தமிழில் சொல்வேண்டுமென உணர்ந்ததுபோல் தெரியவில்லை. ”தொற்று = infection. ’There are X cases in Canada of which Y cases involve co-morbidities along with corona infection’ என்பதைத் தமிழில் சொல்ல infection க்கு ஒரு சொல்லும், case க்கு வேறு சொல்லும் தேவை. இரண்டிற்கும் ஒரே சொல்லை வைத்துச் சொல்வது உப்புக்குச் சப்பாணி வேலை ” என நான் விடையிறுத்தேன்.  நான் சொன்னதற்கு முதலில் மொழிபெயர்ப்புத் தராமல் சுற்றிவளைத்தவர் முடிவில், “எம் மாநிலத்தில் X கொரோனா தொற்றுகள் இருக்கின்றன. அதில் Y மிகவும் சிக்கலானவை, Z சிக்கல் குறைந்தவை” என்று தந்து, என் மொழிபெயர்ப்பைக்  கேட்டார்.

ஏற்கனவே நீண்டுபோன முன்னிகைகளை மேலும் அந்த இடுகையில் நீட்டவேண்டாமென இம் மொழிபெயர்ப்பு தனியிடுகையாய் வருகிறது.

இம் மொழிபெயர்ப்பைச் செய்யுமுன் morbid (adj.) இற்கு இணைச்சொல் வேண்டும். இல்லெனில் சரிவராது. சூடணி வெருவி நோய் வருமுன் பல்வேறு நோயர் (வாழ்நாள் முழுதும் தம் இறப்பு வரை  இருக்கக் கூடிய) வேறு நோய்களுக்கு ஆட்பட்டிருக்கலாம். இந்நோய்களை வெறுமே சுகவீனம் என்று சொல்லிவிடமுடியாது. ஏதோ ஒருவகையில் மருந்து மாத்திரை, சாறு உட்கொண்டு அவற்றைக் கட்டி (இந்தக் கட்டும் மேலே கூறிய கட்டும் ஒன்றல்ல. ஆனால் நெருங்கியவை.) வைத்திருக்கக் கூடிய நோய்கள் இவைகளாகலாம்.  காட்டாக, ஈளை (asthma), மீயழுத்தம் (hypertension), நீரிழிவு (diabetes), குருதயநாள நோய் (cardiovascular disease), கல்லீரல் நோய் (liver disease), உமரிநீரக நோய் (kidney disease), .முளி கழலை (malignant tumours) போன்றவை  இவையாகும்

-----------------------
இங்கே ஓர் இடைவிலகல். kidney யைச் சிறுநீரகம் என்றே பொதுப்புலனில் சொல்வர். அதுவும் பொருத்தமிலாத உப்புக்குச் சப்பாணிச் சொல் தான். (இயக்குநர் என்பது மாதிரி அச்சொல். இயக்குநர் என்பார் operator-ஆ, director- ஆ? ) அது என்ன சிறுநீர்? உடலிலிருந்து வேறேதும் பெருநீர் வெளியாகிறதோ? - என்ற கேள்வியெழும்.  சிறுநீர் என்பது ஒருசில உப்புகள் கரைந்த பால்மமே அதை உமரிநீர் எனலாம். (உப்புக்கு இன்னொரு பெயர் உமரி) உமரிநீரைக் கையாளும் உறுப்பு = உமரிநீரகம். சிறுநீரகத்தை விட இது பொருத்தமான சொல். ஆனால் மருத்துவத்தில் பயனாகும் Nephrologyக்கு இது உதவாது. உமரிநீரகத்திற்குச் சரியான உடற்கூற்றுப் பெயரொன்றை நாம் தர வேண்டும். முயன்றால் கிடைக்கும். சொல்லே வேண்டாம் சிறுநீரகம் போதும் என்று பாமரத்தனம் நாடுவோர்க்கு நான் சொல்வது விளங்காது.

பல்வேறு சிறு தூம்பு (tube)களும் அதைச்சுற்றி ஒரு கூடுங் (shell) கொண்டது உமரிநீரகமாகும். தூம்புகளின் வழிசெல்லும் அரத்தத்தின் வேதிப்பொதுளின் (chemical potential) தூண்டலால்,  சிவப்பணு , வெள்ளணு, ஒருசில பெருதங்கள் (proteins) ஆகியவை தவிர, மிஞ்சியுள்ள பால்மம் (plasma), உப்புகள் (salts) போன்றவை தூம்புப் படலம் (tube membrane) வழியாக நூகமாய் (நுண்ணிதாய்) ஊடுறுவி, கூட்டுப் பக்கம் [ஊடுதலை ஊறுதல் எனலாம்] உமரி நீராய் வெளிப் படும், எனவே  உமரிநீரகத்தை நூவூறகம் என்பது மிகச் சிறந்த சொல் ஆகும்.]

malignant tumours என்பதைத் தமிழில் சொல்வதும் கடினமில்லை. முள்>முளி-தல் என்பது கேடுதரலைக் குறிக்கும். malignant என்பது அதுதான். tumour = கழலைக் கட்டி. இது இராம. கி. படைத்ததல்ல. பழஞ்சொல். இப்போதெல்லாம் இப்படிச் சொல்லவேண்டி யிருக்கிறது. முன்னால் சொன்ன பிணக்கும் அகப்பாடும் என்னைப் பாடாய்ப் படுத்துகிறது. 
-----------------------

இறப்புவரை கூடவரும் ஈளை, மீயழுத்தம், நீரிழிவு, குருதயநாள நோய், கல்லீரல் நோய், உமரிநீரக நோய், முளி கழலை போன்றவைகளைத் தான் co-morbidities என்று ஆங்கிலத்தில் சொல்வர். morbidity 1650s, "of the nature of a disease, indicative of a disease," from Latin morbidus "diseased," from morbus "sickness, disease, ailment, illness," according to de Vaan perhaps connected to the root of mori "to die," as "looking like death" (from PIE root *mer- "to rub away, harm," also "to die" and forming words referring to death and to beings subject to death), or from a non-IE word. Meaning "diseased, sickly" is from 1731. Transferred use, of mental states, "unwholesome, excessive, unreasonable" is by 1834.

இதற்கான தமிழ்ச்சொல்லும் எளிதே. தமிழில் மரித்தல் = இறத்தல். முள்> முளி> முடி> மடி> மரி என்று இச்சொல் விரியும். ஒருவன் மடிந்தால் மரிந்தான்> மரித்தான் என்று பொருள். மடிதலின் பொருள் சாய்தலே.  மரிப்பு, மரிவு போன்ற சொற்கள் போக மரணமென்ற சொல்லுமுண்டு. பெரும்பாலோர் மரணம் சங்கதம் என எண்ணிக்கொள்வார். மரி-த்தல் என்ற வினைச்சொல்லை மறந்து மரணித்தான் என்று விந்தையாய்ச் சொல்வர். பெயர்ச்சொல்லில் இருந்து வினைச்சொல் ஆக்கும் முறை. பேசாமல் மரி-த்தலையே பயன்படுத்தலாம்.  ஆங்கிலத்தில் murder, morbid ஆகிய சொற்களும் நம் மரித்தலோடு தொடர்புள்ளவையே. இராம.கி. morbid க்கு மரித்தலைத் தேடினால் ”அது பெருந்தவறு; இறப்பைத் தான் தேடவேண்டும்  இவர் சொற்கள் பாமரனுக்கு ஆகாது” என்று தூற்றவும் செய்வார்.

சரி morbidity idity என்று வருகிறதே? அதற்கு என்ன செய்வது? - என்று கேட்டால் அதற்கும் வழி இருக்கிறது இள்ளுதல் = தாக்குதல் என்று பொருள்கொள்ளும். இள்>இட்டு>இட்டி->இடி- என்பதும் தாக்குதலே.  அவன் அந்தக் கதவை இடித்தான். அரிசியை உரலில் இட்டு இடித்தார். இடி இடித்தது - என்பன எல்லாமே தாக்குதல்களே. மரியிடி என்பது இறப்பு வரை தாக்கும் நோய்க்கான இராம.கி. யின் புத்தாக்கம். ஆங்கிலத்தில் morbidity என்கிறாரே? அது இதுதான். ”மறுபடியும் ஆங்கில ஒலிப்பு அது இது” என்று சிலரின் பேச்சுவரும். வட்டாரச் சொல்  எனக்கு நினைவிற்கு வருகிறது. ”என்னன்னு தெரியலை. காலையிலேர்ந்து மருக்கிடி(>மறுக்கிடி<மறுக்கடி)யா  இருக்கு” என்பது சிவகங்கைப் பேச்சு. மருள்>மருட்கு>மருக்கு = மயக்கம்.  மருக்கிடி = மயக்கத் தாக்கு.

ஆங்கிலத்தில் -idity க்கும் நம்மூர் இடிக்கும் இங்கே இணை காட்டுகிறேன், பாருங்கள். இதுதான் பலருக்கும் பிடிப்பதில்லை. அது எப்படி தமிழர் இடிக்கலாம்? - என்பதே மேலே சொன்ன பெரியோரின் ”தாவா”. ”இராம. கி. இப்படி ஏதோ கொண்டுவந்து உறவு சொல்லிக்கொண்டே இருக்கிறார்” என்பது அவர் குற்றச்சாட்டு. நான் சொல்வது அவரைப் பெரிதும் நெருடுகிறது.  ”கால்டுவெல், எல்லிசு, சோன்சு, மாக்சுமுல்லர் ” என்ற முன்னவர் கூற்றை மறுத்து Nostratic நோக்கி நான் நகர்கிறேன் பாருங்கள், அது இவரை என்னவோ செய்கிறது. அந்நிலையில் என்னை மடக்க ஒரே வழி ”ஆங்கில ஒலிப்பு என்று போட்டு அடி இவனை?” இதுதான் சில ஆண்டுகளாய் தொடர்ந்து நடக்கிறது. 1000, 2000 சொற்களுக்கு இப்படி நான் இணை காட்டுகிறேன். அவர்களால் ஏற்கவும் முடியவில்லை. நம்பவும் முடியவில்லை. நான் ஏதோ செய்யக் கூடாததைச் செய்வதாய்ப் புலம்புகிறார். 

முடிவாக, ”There are X cases in Canada of which Y cases involve co-morbidities along with corona infection" என்ற வாக்கியத்தின் மொழிபெயர்ப்பு என்ன?

”கனடாவிலுள்ள X கட்டுகளில் சூடணித் தொற்றும், மரியிடிகளும் இணைந்தபடி Y கட்டுகள் உள்ளன”. ஆங்கிலத்தை விடச் சிறிதாய்த் தமிழில் மொழியாக்கம் செய்யலாம்.

அன்புடன்,
இராம.கி.

பி.கு.மணிமேகலை இராமசாமி என்பார் case என்பதன் தேவையை உணர்ந்து, ”case study research என்பதை எப்படிச் சொல்வது?” என்று கேட்டார். இது முன்னோக்கி நகரும் கேள்வி. case என்ற சொல் தமிழில் வரவேண்டும் என்று இவர் எண்ணினார் பாருங்கள். அதுவே பெருஞ்சிறப்பு. ஒரு மருத்துவர் குழு, வழக்கறிஞர் குழு, மானக வல்லுநர் (management experts) குழு கூடி அமர்ந்து case study research, analysis செய்வாரே? அதெல்லாம் தமிழுக்கு வேண்டாமா?  case ஐ மறுத்து என்னத்தைக் கண்டோம்?

case study research = கட்டுப்படிப்பு ஆய்வு (கட்டுப் படிப்பு என்று பிரித்து எழுதிவிடாதீர்
case study analysis = கட்டுப்படிப்பு அலசல் ] 




Tuesday, April 21, 2020

கொழு

”கொழு>கொழுவியர்>கோழியர்>சோழியர்>சோழர் = மஞ்சள்/குங்குமம் பூசியோர்” என்ற என் இன்றைய (21/04.2020) இடுகையை நம்பாதவருக்கு. இன்னும் சில சொற்கள் கொடுக்கலாம் என்று எண்ணினேன். நெஞ்சில் ஊறிப்போனதை மாற்றுவது பலருக்கும் கடினமே. வாழ்நாள் ஊறல் அல்லவா? அவ்வளவு எளிதில் மாறாது. ஆனாலும் உண்மை என்பது தேடிப் பார்த்தால் விளங்கும்.

கொழுவிற்கான பொருளாய் மஞ்சள் , குங்கும/சிவப்பு நிறத்தைத் தவிர்க்க முடியும் என்று தோன்றவில்லை. காடியரங்கில் (acid range) இது ”மஞ்சள்” yellow நிறம் காட்டும். களரி அரங்கில் (alkali range) சுண்ணம் சேர்த்தால் அது குங்கும நிறம் காட்டும். இரண்டும் ஒரு பொருள் தான். ஒன்று சுண்ணம் சேராதது. இன்னொன்று சேர்த்தது. 

கொழித்தல் = மஞ்சள் நிறத் தங்கத்தைப் புடைத்து பிரித்தெடுத்தல்; பின் எல்லாம் புடைத்து, பிரித்தலுக்கும் வந்தது.
கொழிஞ்சிப் பழம் = கிச்சிலிப் பழம் (orange); நாரத்தை
கொழிமணல்/ கொழுந்து மணல் = goldsmith's sand
கொழியால்மட்டி = சிவப்பு
கொழு = bullion
கொழிஞ்சிநாரத்தை  = கிச்சிலி = கமலா ஆரஞ்சு
கொழுந்து = ஒளிநிறம்; எனவே தங்கம். ஆங்கிலத்தில் gold.
மருக்கொழுந்து = உள்ளங்கையில் தடவி ஏற்படும் சிவப்பு நிறக் கரை; அதைச் செய்யும் இலை
கொழுந்து = ஒளிநிறத் தளிர்,
கொழுப்பு = மஞ்சள்நிற உயிரிப்பொருள்
கொழுமரம் = செம்மரம்
கொழுமிச்சை = நாரத்தை; எலுமிச்சை; எலு, எலும்பு போன்றவை மஞ்சட் பொருள்களே.
கொழுதுமை>கோதுமை = gold நிறக் கூலம். ”சிந்து சமவெளி தமிழரது” என்று மாடியில் நின்று கூவுகிறவர், கோதுமை என்ற சொல்லில் உள்ள தமிழ்மையை மறுத்தால் என்ன சொல்வது?
கோதி/கோதிமம்/கோதுமம் = கோதுமை
கோதுகம் = கச்சோலம், long zedoary
கோதுநரம்பு = செடி, இலை, போன்வற்றின் நரம்பு. சற்று மஞ்சள் நிறங் காட்டும்.
கோதுபழம் = புளியம் பழம்.
கோதும்பை/கோதூமம் = கோதுமை
கோதை = கோதமி = கோதாவரி = மஞ்சள்நிறப் பேராறு.
கோழி = சிறகு அரிந்தபிறகு, மஞ்சளுமிலாது, சிவப்புமிலாது, வெண்மையும் இலாது  கலவையான நிறத்தில் காணும் பறவை. இந்நிறமே கோழி எனப் பட்டது. இந்தியாவில் கோழிக்கு இருக்கும் பெரும்பாலான சொற்களுக்குத் தமிழ்வேரேயுண்டு. கோழி இந்தியாவிலிருந்தே உலகம் முழுக்கப் பரவியது.
கோழியூர் = உறந்தை, உறையூர்
கோழிக்கொண்டை = சிவப்புநிறம்
சேவல் /சாவல் = கோழிச்சேவல் = செந்நிறம் கொண்ட ஆண் கோழி (அதனால் தான் கோழிக்குச் செந்நிறத்தை ஒட்டி கோழி நிறம் சொல்லப்படுகிறது..)
கோழித்தலைக் கந்தகம் = சிவந்த கந்தகம்
கோழிமன் = உறையூர் அரசன்
கோழியவரை = மெல்லிய மஞ்சள் நிறப் பருப்பு கொண்ட sword bean.
கோழிவேந்தன் = சோழ அரசன்
கோழை = மூக்கில் வெளிவரும் மஞ்சள்நிறச் சளி; கண்ணில் திரளும் மஞ்சள் நிறக் கசடு
சோளம் = மஞ்சள் நிறக் கூலம்/
 
    

Friday, April 17, 2020

sanitizer

பல ஆண்டுகளுக்கு முன் நண்பர் ஆசீப்பின் வேண்டுகோளின் பேரில் அமீரகத்தில் வெளிவந்த கானல் ஆண்டு மலரில் ”கொன்றையும் பொன்னும்” எனும் தொடரை வெளியிட்டேன். பின் 2006 இல் அக்கட்டுரை 7 பகுதிகளாகப் பிரித்து என் ”வளவு” வலைப் பதிவில் வெளியிட்டேன். ஏராளமான தமிழ்ச் சொற்களின் பிறப்பை அதில் ஆய்ந்தேன். செழிப்பு, கொழுமை, பொலிசு, நலம், சுகம் என்ற சொற்களும் அதில் அடங்கும். sanitizer என்பதற்காகச் சொல் ஒன்றை இப்போது தேடிக் கொண்டிருக்கையில், சுகத்தைப் பற்றிச் சொல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது,  உடனே அத்தொடர் நினைவிற்கு வந்தது. வேறு எந்தப் பகுதியை நீங்கள் படிக்காவிடினும் ”சுக”த்திற்காக,  http://valavu.blogspot.com/2006/01/4.html என்ற பகுதியைப் படித்து விடுங்கள்.

செழிப்பு, கொழுமை. பொலிவு, நலம், சுகம் என்ற சொற்கள் தமிழில் health ஐப் பொதுவாய்க் குறிக்கும். இந்தச் சொற்களின் உள்ளே புலப்படுவது பொன்நிற ஒளியே.  ”அவன் முகத்தைப் பாருங்கள். ஓர் ஒளி தெரிய வில்லையா? அவன் செழிப்பாய்/ கொழுமையாய்/ பொலிவாய்/ நலமாய்/ சுகமாய் இருக்க வேண்டும். இல்லெனில் அவன் முகம் இருளாதோ?” என்பது நாட்டுப் புறத்தார் மரபும் கூற்றுமாகும். (இத்தனை சொற்களையும் ஒதுக்கி இன்று சிலர் ஹெல்த் எனக் குறிக்க முற்படுவது முட்டாள் தனம். பல நாளிதழ்களும் அதையே செய்கின்றன. இல்லாவிடில் சுகாதாரம் என்கின்றன. ”ஆதாரம்” அங்கு எதற்கு? புரியவில்லை.  சுகத்தின் ஆதாரம் சூழமைவு இல்லையோ? health, cleanliness ஐ விட மேம்பட்டதில்லையா? ”நன்றாய் இருங்கள்” எனில், “clean-ஆய் இருங்கள்” என்றா பொருள் கொள்கிறோம்? அதனின் மேம்பட்ட பொருள் அல்லவா நலம்? மேற்சொன்ன சொற்களில் துல்லியம் நமக்கு வேண்டாமா?.

இன்னுஞ் சிலர் “ஆரோக்கியம்” என்ற சொல்லை செழிப்பு, கொழுமை. பொலிவு, நலம், சுகம் என்பதற்கு மாறாய்ப் பயன்படுத்துவர். இதுவோர் இரு பிறப்பிச் சொல். நேரே ஒன்றைச் சொல்லாது சுற்றிவளைத்து மூக்கைத் தொடுவது போற் சொல்வது. “நீங்கள் நல்லா இருக்கீங்களா? “ என்று கேட்காது, ”நீங்கள் கெடாமல் இருக்கீங்களா?” என்பது தமிழில் நாகரிகமான பேச்சா? ரோகம் என்பது உருக்கம் என்ற தமிழ்ச் சொல்லின் சங்கத ஆக்கம். ஆங்கிலத்தில் இதை  metathesis என்பர். முன்னிருக்கும் உகரத்தை அகரமாக்கி அடுத்துவரும் உகரத்தோடு சேர்ந்தொலிப்பது, தமிழில் உருக்கம்/ உருக்கன் என்றால்  உடலை வாட்டும் நோய், இதை metathesis முறையில் ருஅக்கம்> ரோக்கம்> ரோகம் என்று சங்கதம் ஆக்கும்.  (ஆரோக்ய சேது என்ற சொவ்வறையை இறக்கச்சொல்லி இந்திய அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது.. இதன் அரசியல் பின்புலத்தை நான் இங்கு பேசவில்லை.)

உருக்கம் தமிழில்லை என்போருக்கு மற்ற தொடர்பான சொற்களைக் காட்ட வேண்டுமோ?  உரகவாதம் = ஒரு பக்க வாதம. உரஞ்சுதல் = தேய்த்தல். உருத்தல் = அழலுதல், வெருளுதல், உருக்கனடித்தல் = உடம்பை இளைக்கச் செய்தல், உருக்கி = உருகச் செய்வது, இளைக்கச் செய்வது, உருக்கல் = இளகச் செய்தல், மெலியச் செய்தல் அந்த நோய் உடம்பை உருக்கிவிட்டது.
உருக்குலைதல் = உடல் மெலிதல், உருகுதல் = மெலிதல், உருங்கல் = தேய்தல், உருத்திரம் = சினம். உருப்பம் = வெப்பம். உருப்பு = வெப்பு, துயரம். உரும் = சினம். உரும்பு = கொதிப்பு. உரும காலம் = கோடைக்காலம். உருமம் = வெப்பம்.

ஆக, ”ரோகம்” எனில் நோய் தான். அல் எனும் தமிழ் முன்னொட்டு ”அ, அந், ஆ” என்றெல்லாம் சங்கதத்தில் திரியும். அல்+ரோக = ஆரோக>ஆரோக்ய என்று சங்கதத்தில் அது பயன்படும் . நாம் திரும்பக் கடன்வாங்கி ஆரோக்கியம் என்போம். பேசாமல் ”உருக்கற்று” என்று விடலாம். (தமிழில் முன்னொட்டை விடப் பின்னொட்டே மிகுதி.) ஆரோக்கியம் = உருக்கற்றம், ”ஆரோக்யமாய் இருக்கிங்களா?” என்பது, “உருக்கற்று இருக்கீங்களா? - நொய்யாம இருக்கீங்களா? கெடாம இருக்கீங்களா? ” என்பதற்குச் சமம் தமிழில் இதைக் கேட்கும் போது நமக்கு  நாராசமாய்த் தெரிகிறது, இல்லையா? சங்கதத்தில் இனிக்கிறதோ? பேசாமல், பொதிவாய் (positive) ":நல்லா இருக்கீங்களா” என்று கேட்கலாமே? (இப்படித்தான் ”பூவராகன்” என்று  சிலர் தம் பிள்ளைக்குப் பெயர்வைப்பார். ”நிலப்பன்றி” என்று எப்பொழுதாவது பெயர் வைப்பரோ? அருத்தம் புரியாமல் நாம் சங்கதப் பெயர் வைத்துக் கொள்கிறோம்.)

அன்பர்களே! ஆரோக்யம் என்று இனிமேல் மரபு தவறியும் சொல்லாதீர்.  செழிப்பு, கொழுமை. பொலிவு, நலம், சுகம்  என்று தமிழ்மரபில் சொல்லப் பழகுங்கள்.   

இனிச் சொல் வழி எழும்பிய சில சொற்களைப் பார்ப்போம். கொல்>சொல் = சொலிப்பு, ஒளி; சொலித்தல் = ஒளி தருதல்; சொலிதை/ சொலிப்பு = வெளிச்சம். சொல்>solar = சூரியன் ஒளி; சொல்+ஐ = சொலை> சோலை> சுவாலை= flame; சொலி>சுவாலி = ஒளியிடு; இதை ஜ்வாலையாக்கி வடமொழி போல் சிலர் பலுக்குவர். நாமும் அங்கிருந்து இங்கு வந்தது போலும் என எண்ணிக் கொள்வோம். இப்படி நாம் தடுமாறும் சொற்கள் மிகப் பல. சொலை>சோலை = பொன்னிறப் பூக்கள் மலரும் மரங்களைக் கொண்ட காடு. சோலை மலை = அழகர் கோயில்; சொல்=ஒளி, நெல் (மஞ்சளாய் இருக்கும் கூலம்). சொல்>சொன்>சொன்றி = சோறு;  சொல்பட> சொற்பட> சொப்பட = நன்றாக. வெளிச்சம் பட; சொற்படுதல் = பலன் மிகுதல்.

சொல்+நம் = சொன்னம்>சொர்னம்>சொர்ணம் = தங்கம், நாணயம்; வழக்கம் போல வடமொழிப் பலுக்கு இங்கு உள்ளே வந்துசேரும். சொர்ணம்> சுவர்ணம்> சுவர்ணகா = வடமொழியில் கொன்றைக்கு உள்ள பெயர். சொன்னம்>சொன்னல்>சொனாலி = வங்காளியில் கொன்றைக்குப் பெயர். சொன்னல்> சொந்தல்>சொந்தால் என்றும் வங்காளியில் வரும். அசாமியிலே சொனாறு என்பார், (அந்தக் காலத்தில் அறுபதுகளில், "சோனாரே, சோனாரே" என ஒரு பேர் பெற்ற இந்தித் திரைப்பாட்டு, ஆராதனா என நினைக்கிறேன். ”தங்கமானவளே” என்று காதலியைக் கூப்பிடுவான்.) சொன்னம்>சொன்னகாரன் =  பொன் வேலை செய்யும் தட்டான்; சொல் +நை = சொன்னை>சோனை>சோணை= தங்க நிற ஆறு. விகாரை மாநிலத்தில் (பீகாரில்), பாடலிபுரத்துக்கு பக்கத்தில் இருக்கும் ஆறு. கங்கையும் சோனையும் அங்கே பண்பாட்டில் முகமை. கங்கை கருப்பு; சோணை வெளுப்பு; தங்க நிறம்;

(நிறத்தை வைத்து ஆற்றிற்குப் பெயரிடுறது நெடுக உள்ள வழக்கம். நம்மூரில் பொன்னி = தங்கம், வையை = வெள்கை = வெள்ளி, தாம்பர பெருநை = சிவப்பு; ஆறுகள் பற்றி ஒரு முறை சொல்லியுள்ளேன்).

சொல்+கு = சொக்கு = தங்கம். (சொக்குத் தங்கம்' என்பது இரட்டைக் கிளவி. தூய தங்கம் என்றும் பொருள் கொள்ளும். ) சொக்கு = தூய்மை; சொக்கம் = தூய்மை சொள்>சொகு>சொக்கம்; சொக்க வெள்ளி = தூய வெள்ளி. சொக்கத் தாண்டவம் = தூய நட்டம்; மதுரைச் சொக்கன் பொன்னானவன்; அதுதான் அவன் நிறம்.; சொக்கிப் போனான் என்றால் சொலிப்பைக் கண்டு வியந்து போனான் என்று பொருள்; சொக்கம்>சொர்க்கம் = 'பொன்னுலகு' எனும் கற்பித மேலுலகு; இங்கும் வடமொழிப் பலுக்கு வருவதால் குழம்புகிறோம். தங்கம் கிடைக்காத, தங்கம் குறைத்துப் புழங்கிய நாட்டில் சொக்கம் என்ற சொல் எழவே எழாது. பொன்னுலகு எனும் கற்பிதம் முழுக்க முழுக்கத் தமிழ்க் கற்பிதமே.

சொக்கம்>சொகம்>சுகம் = பொலிவோடு மலர்ச்சியோடு இருக்கும் தன்மை; ”சுகமா இருக்கீங்களா?” என்றால் ”சோர்விலாமல் முகத்தில் ஒளிவிடுகிறாற் போல் இருக்கீங்களா?” என்று அருத்தம். health இற்கு இப்போது நாம் அச் சொல்லையேன் புழங்குகிறோம். (இதிலும் சிலர் சொக்கம், சொகம், சுகம் என்று சொல்லாமல் சௌக்கியம் என்று சங்கதமுறையில் ஒலிப்பார். நானும் சிலபோது அறியாமலும், சிலபோது அறிந்தும் சௌக்கியம் பயின்றுள்ளேன். அவ்வளவு சங்கதத் திரிவுகளை நம் முன்னோரும், உறவினரும், ஆசிரியரும் நமக்குள் ஏற்றியிருக்கிறார். மிகவும் சரவல் பட்டே இந்தத் தப்பான பழக்கங்களில் இருந்து வெளிவந்து சொக்கம், சொகம், சுகம் போன்றவற்றைப் பயில வேண்டியுள்ளது.)  மேலையன் ”கொழிதா இருக்கீங்களா?” என்கிறான். கொழுது>கொழிது = health = செழிப்பு, நலம், சுகம்.; சொக்கத்தில் விளைந்த இன்னொரு சொல் சொகுசு = நேர்த்தி, இதம், சிறப்பு. சொகுசுப் பேருந்து என்கிறோமே? சொகுசையும்  வடசொல் என்று சிலர் தவறாய்க் கொள்வர்.

இனிச் சொல் துல்லியத்திற்கு வருவோம். என்னைக் கேட்பின் வெறும் நலத்தை wellness இற்கு ஈடாயும், கொழுமையை உடல்நலம் (body health) பற்றியும்,  பொலிவைத்  தோற்ற நலம் பற்றியும் கொள்ளலாம். செழிப்பு, வெறும் உடல்நலத்திற்குச் சரிவராது. நம் உடல், சூழமைவு, வாய்ப்புகள், ஊற்றுகள் ஆகிய மொத்த வள நலத்திற்கே அது சரிவரும். சுகத்தை ஆதாரம் எனும் நீள்சொல்லோடு சேர்க்காது, சுகனம் எனச் சுருக்கிச் சுகத்தேவையான சூழமைவிற்கு ஈடாக்கலாம். இந்த இடுகையில் அப்படியே கொள்கிறேன்..

இப்பொழுது, sanitize (v.) இற்கு வருவோம். ஆங்கிலச் சொற்பிறப்பியல் அகர முதலியில் 1836, from stem of sanitary + -ize. Metaphoric sense is from 1934. என்று போட்டிருக்கும். அடுத்து, sanitary (adj.) என்பதைப் பார்த்தால், 1823, "pertaining to health," from French sanitaire (1812), from Latin sanitas "health," from sanus "healthy; sane" (see sane). In reference to menstrual pads, first attested 1881 (in sanitary towel) என்பர். முடிவில் sane (adj.) என்பதற்கு வந்தால்  நம்மை வேறெங்கோ திருப்பி விடுவர். ,

"of sound mind, mentally sound; free from disorder," 1721, a back-formation from sanity or else from Latin sanus "sound, healthy," in figurative or transferred use, "of sound mind, rational, sane," also, of style, "correct;" of uncertain origin. Perhaps from PIE *seh-no- from *seh- "to tie." That reconstruction "is purely mechanical," according to de Vaan, the meaning might be "which is in place, in order." Or it could be from a different root meaning "to satisfy" as in Latin satis "enough." Used earlier, of the body, with the sense of "healthy" (1620s).

ஆக, uncertain origin.என்றிருந்தாலும்  இது எப்படிச் சரியாகும்? - என்பது எம் கேள்வி. sanitary ஐயும் sanity ஐயும் குழப்பிக் கொண்டுள்ளார்.  இரண்டும் இரு வேறு சொற்கள்.  பல ஆங்கிலச் சொற்களின் நிலை இது தான். இதை யாரும் அறியாது, எல்லாம் இலத்தீன், கிரேக்கம் என்று சொல்லி விடுவார். இல்லை யென்றால் uncertain origin என்பார். கற்பிதமாய் ஓர் இந்தையிரோப்பியச் சொல்லையும் உருவாக்கிவிடுவார். நான் கேட்பது, “தமிழிய மொழிகளை இங்கு கணக்கில் எடுத்துக் கொண்டீர்களா?” உங்கள் குழப்பம் தீருமே!

சொக்கம்>சொகம்>சுகம் என்பது  பொலிவோடு மலர்ச்சியோடு இருக்கும் தன்மை எனில், சுகனமும் பொலிவோடு மலர்ச்சியோடு இருக்கும் தன்மை குறிக்காதா?. நெருப்புப் பூதத்தின் அடையாளமான  திருவண்ணாமலைக்கு அதன் பொன்னிறம் கருதிச் சோனமலை>சோணமலை>சோணகிரி என்ற பெயருண்டு. பார்ப்பதற்குப் பொலிவோடு இருந்தாலும் பின் ஏமாந்து போகும் வெள்ளந்தியை, “ஏமாந்த சோணகிரி” என்பது சொலவடை.  சொன்னை சோனையைத் திரித்து சொரனை என்கிறோமே? சொன்னம், சோனை ஆகியவை sane ஓடு தொடர்பு காட்டக் கூடாது? சுரணை>சொரணை = உணர்ச்சி, அறிவு. முடிவாக,

sanify = சுகனாக்கு
sanitary = சுகன
unsanitary = சுகனிலா
sanitate = சுகனேற்று
sanitation = சுகனேற்றம்
sanitize - சுகனப் படுத்து
sanitized = சுகனப் பட்ட
sanitizing = சுகனப் படும்
sanitizer = சுகனியர்/சுகனியம்
sanitarium / sanitorium / sanatorium = சுகந்தருவம் (Late Latin word sanitorius, which means health-giving).
sanitary towel = சுகனத் துண்டு
sanitory napkin = சுகனத் துகில்

sane சுரனை
Sanely சுரனையோடு
sanity = சுரனை
insane = சுரனையில்லாது

அன்புடன்,
இராம.கி.

scrubbing pad

ஏனத்தில் பற்றிக்கொள்ளும் அழுக்கு, துரு, தூசு போன்றவை கறையெனப் படும். கறுப்பு, களங்கமென்றும் சொல்வர். மாசு, மறு என்பனவும் இதே பொருள் குறிப்பனவே. கரு>கறு என்று இச்சொல் பிறந்தது. பெரும்பாலான அழுக்கு, துரு, தூசு, மாசு, மறு போன்றன கருநிறத்தில் இருப்பதால் ”கறு” ஏற்பட்டது. கறள் என்பதும் rust, dross, stain தான். கறுவிற்கும் கறளுக்கும் ஆன வேறுபாடு மிக நுண்ணியது. கறு என்பது ”ஏனத்தில் பிடித்துக்கொண்டதா, பிடிக்காததா?” என்று தரம்பார்த்துப் பிரித்துச்சொல்வதில்லை. தனித்து இருந்தாலும் அது கறுவே. கறள் என்பது கறு+அள்= கறள் அள்ளிக்  (பிடித்துக்) கொண்ட கறு கறளாகும். அட்டக்கரி என்று கேள்விப்பட்டுள்ளீர்களா? பாத்திரத்தில் பிடித்துக் கொண்ட கரி. அள்+து= அட்டு>அட்டுதல் = நெருங்குதல், பிடித்துக்கொள்ளல் இதனாலேயே கறள், கறடென்றும் ஆகும்.

கூர்ங்கருவியால் ”கறகற” என்று தேய்த்துக் கறட்டையெடுப்பது கறண்டுதல்/கரண்டுதல் எனப்பட்டது. (கரகர/கறகற என்ற ஒலிக்குறிப்பும் இதனுள் சேர்ந்து கொண்டது.) பாத்திரத்தின் உள்ளே ஒரு கலவைப் பொருள் (நீர்மமும் திண்மத்துகளும் சேர்ந்தது, கூட்டு, பருப்பு, மசியல், பச்சடி, சட்டினி, சாம்பார் என்ற பல்வேறு பொருட்களும் நம் சமையலிற் கலவைகள் தாம்) இருந்தால் திண்மத்துகள் கீழே தேங்காது இருக்கும்படியும், அள்ளும்படியும் இருக்கும் அகப்பையைக் கறண்டி என்பார். கறளித்தல், கறண்டித்தல் என்பது கறளை எடுப்பது. பேச்சுவழக்கில் கரண்டித்தல் எனும் பிறவினைச்சொல் கரண்டுதல் எனும் தன்வினையாகவும் மாறும். கறண்டுதல், வறண்டுதல் என்றுஞ் சொல்லப் படும். இதுவே ஆங்கிலத்தில் scratch, scrub எனப்படுகிறது. தேங்காய் நாரால், தாவரநாரால், புல்லால், மாழைக் கம்பியால், பொத்திகையால் (plastic) என விதவிதமாய் இன்று பெருகிப்போன scrubbing pad ஐக் கறண்டை எனலாம். (கரண்டைக் கால் என்பது வேறு. ஒரு சொல்லுக்கு பல பொருள்கள் இருக்கலாம்.) இது கறளைக் கறண்டியெடுக்கும் கறண்டை.

bacto scrub = பட்டுயுரிக் கறண்டை [பட்டுயிரியைப் (bacteria, பட்டையாய் நீண்டு கிடக்கும் நுண்ணுயிரி; நீளம் அதிகமாகி அகலம் மிகக்குறைந்த பொருள்கள் தமிழில் பட்டை எனப்படும். அது flat ஆக இருக்கத் தேவையில்லை) போக்கும் கறண்டை என்ற சான்றிதழ் பெற்றது.]

அன்புடன்,
இராம.கி. 

Thursday, April 16, 2020

Playlist

தமிழ்ச் சொல்லாய்வுத் தளத்தில், தமிழ் என்பார், “Playlist என்பத்தைத் தமிழில் எப்படி சொல்லலாம்? 'பா-பட்டியல்' என்ற சொல்லைக் காட்டிலும் வேறு ஏதேனும் சொல் உள்ளதா? Playlist இற்குத் தமிழாக்கம் 'பட்டியலை' என்று ஏதோ ஒரு வலைதளத்தை என் நண்பர் குறிப்பிட்டுக் காட்டுகிறார்” என்று கேட்டார். பலரும், “பாமாலை, பாட்டுவரிசை, பா வரிசை” என்று சொன்னார். ஒருவர், “Please note that play in playlist doesn't refer to songs” என்றார். இன்னொருவர், “இயக்குதல் ஓட்டுதல் ஆடுதல் எனறும் பொருள் கொள்ளலாம். இயங்கு வரிசை” என்றார், இனி இடுகைக்கு வருவோம்.

playlist இல் முகன்மை play என்பதே. நாடகம், திரைப்படம் போன்றவற்றைப் பேசுகையில் “he played that part" என வருவதை ”அவர் அப் பாத்திரத்தில் நடித்தார்” என்று  தமிழில் சொல்வோம். ஓர் இசைக் கச்சேரியில் he played that song என்பதை ”அவர் அப்பாட்டைப் பாடினார்” என்போம்.  சிறாருக்கான மாயக் காட்சியில் ” he played a magic" என்பதை ”மாயகர் ஒரு மாயஞ் செய்தார்” என்போம். இந்தியப் பெரும் கிட்டியாட்ட இழையின்  (Indian Primier Cricket League) முடிவில் "CSK played against MI in the knock-out stage" என்பதை, “MIக்கு எதிராய் வீழ்த்தாட்டு நிலையில் CSK விளையாடியது” என்போம். சரி, கிட்டியாட்டம் விடுங்கள்; ஒரு பந்தாட்டத் துளணியில் (tournament), போட்டியில் (contest), அல்லது பந்தயத்தில் (competition) ”இரு வேறு அணிகள் போட்டியிடுகின்றன, ஆடுகின்றன” என்று சொல்லிவிடுவோம்.

played என்பதற்கு ”நடி, பாடு, மாயஞ் செய், விளையாடு, போட்டியிடு, ஆடு” என எத்தனை சொல்கிறோம் பாருங்கள்.  கேட்பின், “எம்தமிழ் சிறப்பெனச்” சட்டைக் கழுத்துப் பட்டையைத் தூக்கிவிட்டுக் கொள்வோம்.  (சிறப்புத்தான். மறுக்கேன். கொஞ்சம் உள்ளமை/real காண்போமா? சிலவற்றில் சிறப்பு, சிலவற்றில் ஒப்பேற்று. நம் குறைகளை எப்போது சரி செய்வோம்? நம் மொழி சிறப்பெனில் நம் மக்கள் ஏன் தமிங்கிலம் பழகுகிறார்? conspiracy theories do not take us long.) "ஒரு மொழி போல் இன்னொன்று வராது". "யானைக்கு நம்மிடம் 37 பெயர்கள் தெரியுமா?" ”நாம் ஆற்றங்கரை, கடற்கரை, ஏரிக்கரை என ஒரேகரையால் சொல்கிறோம், ஆங்கிலேயன் sea shore, river bank, lake shore என விதவிதஞ் சொல்வான்” எனச் சப்பையும் கட்டுவோம். எனக்கும் ஒருசொல் - பலபொருள், பலசொல் - ஒருபொருள் தமிழிலுண்டெனத் தெரியும். பெருமிதம் கொள்வதில் தவறில்லை. ஆனால் எங்கு குறை, போதாமை உண்டோ, அங்கு சரி செய்யவேண்டாமா? இராம.கி.யின் வேண்டுதல் அதுவே. அதைச் செய்ய முனைந்தால் சாடுகிறீர்களே? அது எப்படி?

மீண்டும்  play க்கு வருவோம். இது கலை, இசை, களியாட்டத் துறைகளுக்கு வரும் முன்னார் விளையாட்டுத் துறையில் இருந்தது. அதற்கும் முன் போர்த் துறையில் இருந்தது. போரில் மாந்தர் மடிகிறார். எனவே கொலை தவிர்க்கும் வகையில், எல்லாப் பொருதுகளும் (பொரு>போர், பொருதல் = போர்செய்தல், பொருந்துதல், நடித்தல், பொருநன் = போர்வீரன்) போலச் செய்வதாகின. பொருதலுக்கும் sports இற்கும், கும்மாளத்திற்கும் games இற்கும் இடையே உள்ள உறவை http://valavu.blogspot.com/2008/06/blog-post.html என்ற வலைப்பதிவில் பேசினேன். அதை ஒருமுறை படித்துவிடுங்கள். அப்பொழுது தான் நான் இங்கு தொடர்வது புரியும். இல்லாவிட்டால் புரியாது.

பொருதலின் இன்னொரு வெளிப்பாடு போலுதல். ஒன்றுபோல் இன்னொன்று செய்வது. போலுதல் = to play. இச்சொல் உங்களுக்குச் சற்று தரக் குறைவாய்த் தெரியலாம். ஓர் உதைப் பந்தாட்டட்த்தில் இரு அணியினரும் பந்துதைத்துப் பொருதுவது போல் போலுகிறார் என்றால் தவறா?  வெளியில் இருந்து “அடி, குத்து, உதை” என்று போர்க்களச் சொற்களை, ஆட்டம் பார்ப்போர் வாயால் உதிர்க்கிறோமே? ஆட்டத்த்தில் உனக்கு aggression போதாது என்கிறோமே? இதெல்லாம் போலுதல் இல்லையா? இருந்தாலும் நடிப்பு என்ற செயல்  சற்று நாணத்தைத் தருகிறதோ? எனவே தரங்குறையாமல் பொருதாட்டம் எனலாம். கிட்டியாட்டத்திலும் இரு தொகுவத்தார் (teams) போலித்துக் கொள்கிறார் அல்லது பொருதுகிறார். 

மாயகர் மாயம் செய்கையில் உண்மை போல் போலுகிறார்/ பொருதுகிறார். ஓர் இசைக்கச்சேரியில் பல்வேறு இசைக்கருவியாரும் (பாடுபவர் மிடற்றுக்  கருவி கொண்டுள்ளார்.) பொருதுகிறார்/ பொருந்துகிறார். திரைப்படம்./நாடகத்தில்  ஒரு நடிகர் ஒரு பாத்திரம் போல் போலுகிறார்/ பொருந்துகிறார்.

ஆகப்  போலுதல். பொருதல் என்பது ஓர்ந்து பார்த்தால் எல்லாவிடங்களிலும் to play என்பதற்குச் சரிவரத்தான் செய்கிறது. பொருதல் என்பது ஒருவேளை சற்றுக் கண்ணியம் கூடியது போல் நமக்குத் தோற்றலாம். போலுதல் சற்று charlatan போல் தெரியலாம். எனவே பொருதல்/பொருவல் என்பதை வைத்துக் கொள்வோமா?

முடிக்குமுன் ஆங்கிலச் சொற்பிறப்பியல் பார்த்துவிடலாம். play (v.) என்பதற்கு, Old English plegan, plegian "move rapidly, occupy or busy oneself, exercise; frolic; make sport of, mock; perform music," from Proto-West Germanic *plegōjanan "occupy oneself about" (source also of Old Saxon plegan "vouch for, take charge of," Old Frisian plega "tend to," Middle Dutch pleyen "to rejoice, be glad," German pflegen "take care of, cultivate"), which is apparently connected to the root of plight (v.), but the ultimate etymology is uncertain என்று போட்டிருப்பார். எங்கிருந்து சொல் வந்ததென்று தெரியாது,. ஆனாலும் குத்துமதிப்பாய்ப் (guess) பரபர, விருவிரு, விரைவு என்ர கருத்தில் சொல்லி விட்டார்.  play என்பது விளையாட்டில், பொருதில் மட்டுமில்லையே, இசையில், பாட்டில், மாயம் செய்கையில் என விதவிதமாய் வருகிறதே?  என் பரிந்துரை அப்படியே நிற்கிறது. போலுதல் என்பதே to play யோடு இணை காட்டுகிறது. மற்ற nostratic மொழிகளைக் காணவேண்டும். இது ஒரு முன்னீடு மட்டுமே.

playlist = பொருது வரிசை.   ஒரு மல்லாளி இன்னொரு மல்லாளி பார்த்துக் கூறுகிறான். “பொருதுவோமா?” ஒரு கொக்கியாட்டத் தொகுவம் (hockey team) இன்னொரு தொகுவத்தைப் பார்த்துப் “பொருதுவோமா?” என்று கேட்கிறது. ஒரு மாயக்காரர், காண்போரிடம்  ஒரு மாயத்தைப் பொருதிக் காட்டுகிறார். ஒரு தமிழிசைக்  குழு, பாரதிதாசன் பாட்டோடு ஒரு பண்ணைப் பொருதிக் காட்டுகிறது. ஒரு கலைஞன் அப் பாத்திரத்தோடு பொருதிப் போனான். எல்லாவிடத்திலும் பொருதல் மட்டுமே பயனாகிறது. பொருள் விளங்குமென எண்ணுகிறேன்.   

அன்புடன்,
இராம.கி 

Wednesday, April 15, 2020

வறளையின் வீச்சு

இது 2003 மார்ச்சு 09 இல் திண்ணை வலையிதழில் ஏற்ற்ப்பட்டது. இப்பொழுது சேமிப்பிற்காக என் வலைப்பதிவில் ஏற்றப்படுகிறது.

பொதித்த கமலையிற் பொருகும் மசகு;
கதிர்த்த தொள்ளையிற் கருங்கல் தெரிப;
கதுத்துச் செறிந்து அதிர்த்த வீளையோ,
எதிர்த்து எழும்ப எண்பது நொடியே!
ஊற்றும் பொய்த்தே! உழல்வதும் சேறே!
ஏற்ற மாக்கள் என்பொடு நொய்ந்தே!
உணத்த முள்ளியோ வாய்க்கால் நிரம்ப;
கனத்த களத்தில் கமரும் சிரட்டும்;
சூமிய கதிரோ சாய்ந்தே ஒடிய;
ஏமுடை மக்கள் ஏழுகல் தொலைக்குத்
தடத்தில் புழுதி தாளுறப் பரப்பிக்
குடத்தைக் குறுகில் கொண்டு நடப்பார்;
வறளையின் வீச்சு வாழ்நிலம் முழுதும்;
குறளை விரவக் குரவம் அகலும்;
ஆறலைப் போகா தமைய,
ஏறுக சாலையிற் பெருநகர்ப் புறமே!

இது, தமிழகத்தில் தருமபுரி மாவட்டத்தில் இருந்து அண்மையில் கிட்டத்தட்ட ஓரிலக்கம் பேர் வறட்சியால் பாதிக்கப் பட்டுப் பிழைப்பை நாடி வெங்காலூர் போகின்ற அவல நிலை கண்டு பாடியது. இது பொதுவியல் என்ற திணையும், பொருண்மொழிக் காஞ்சி என்ற துறையுமாம்.

அருஞ்சொற் பொருள்:

கமலை = கவலையின் திரிபு; இராட்டினத்தைக் குறிக்கிறது;
பொருகும் மசகு = பொருபொருவென்று மண்ணும் புழுதியும் கலந்த மசகு எண்ணெய்; கமலை பயனுறாமற் கிடக்கிறது.
கதிர்த்தல் = வெளிப்படுதல்
தொள்ளை = தோண்டப் பட்ட பள்ளம்; இங்கே கிணற்றை உணர்த்துகிறது.
வீளை = whistle
ஏற்ற மாக்கள் = ஏற்றம் இறைக்கும் மாடுகள்
உணத்தல் = காய்ந்து போதல்; ஆற்று வாய்க்காலில் உள்ள முள்ளுச் செடிகளும் காய்ந்து போயின.
கமர் = நிலப்பிளவு
சூம்புதல்>சூமுதல்
குறுகு = இடுப்பு;
வறளை = வறட்சி
குறளை = வறுமை
குரவம் = பெருந்தன்மை, கெளரவம்
ஆறலை = வழிப்பறி

Monday, April 13, 2020

Personal Protection Equipment

ஒரு நண்பர் personal protection equipment ஐத் தமிழில் எப்படிச் சொல்லலாம் என்று கேட்டார். கொஞ்சம் கடினமான கேள்வி. (இப்போது பாதுகாப்பு உபகரணம் என்று நாளிதழில் எழுதுகிறார் )

முதலில் person (n.) இதற்கிணையாய்த் தமிழில் ஆண், பெண் என்று சொல்லிப் பழகிவிட்டோம். 2020 இல் இன்னும் ஆணாதிக்கம் பேண முடியுமா? பால் தழுவாத சொல் வேண்டுமெனும் நிலை வருகையில் ஆள் என்ற சொல் நம்மிடை புழங்கத் தொடங்கியது. ஆங்கிலத்தில் early 13c., from Old French persone "human being, anyone, person" (12c., Modern French personne) and directly from Latin persona "human being, person, personage; a part in a drama, assumed character," originally "a mask, a false face," such as those of wood or clay worn by the actors in later Roman theater என்ற சொல் எழுந்தது. இதைப் புரிந்துகொள்வது கடினமில்லை.

ஒரு நாடகத்தில் பாத்திரம் என்கிறோம் பாருங்கள். அக் காலத்தில் ஒப்பனை செய்து, முகமூடியிட்டு (ஏறத்தாழ கதகளி ஒப்பனை போல்)  அடையாளம் தெரியாதபடி உருமாறி அப்பாத்திரமாய் ஆகிவிடுவர். பாத்திரம் என்பது ஓர் இருபிறப்பி. பகுத்தம்>பாத்தம்>பாத்ரம்  என அச்சொல் வளரும்.  மீள ஆண், பெண் ஈறுகள் சேர்த்துப் பகுத்தன், பகுத்தி என்போம். பங்கு என்ற பொருளில் இதே பகுத்தம்>பாத்தம்>பாத்யம் என்பது சங்கத வடிவில் ஆளப்படும். ”உனக்கு இச்சொத்தில் பாத்தியம் உண்டா? இல்லையா?” என்று ஊர்ப்பக்கம் கேட்பார்.  ஈறு சேர்க்காது, பால் சாராது, சொல்ல தமிழில் வேறு வழியின்றி ஆள் எனச் சொல்லவேண்டியுள்ளது. வேண்டுமெனில் ஆளர், ஆளம் எனலாம்.

அடுத்து protection (n.) புரத்தல், காப்பாற்றுதலென்று பொருள் கொள்ளும். ஏனோ இற்றைத் தமிழர் இதை ஒதுக்கிக் காப்பென்ற சொல் வைத்து முன்னொட்டு, பின்னொட்டுப் பெய்து கிளித்தட்டு ஆடுகிறார். என்னைக் கேட்டால் புரத்தம் என்பது இங்கு தெளிவாய் protection ஐ உணர்த்தும்.

mid-14c., "shelter, defense; keeping, guardianship;" late 14c. as "that which protects," from Old French proteccion "protection, shield" (12c.) and directly from Late Latin protectionem (nominative protectio) "a covering over," noun of action from past-participle stem of protegere "protect, cover in front," from pro "before" (see pro-) + tegere "to cover," from PIE root *(s)teg- "to cover."

கடைசியாய் equipment (v.) பெரும்பாலோர் இதற்கிணையாய்க் கருவி என்றே சொல்வார். ஆனால் கையால் இயக்கும் equipment ஐ மட்டுமே கருவி என்று சொல்ல முடியும். கரத்தில் எழுந்த அச்சொல் tool லுக்குச் சரிவரும். (சிலர் சாதனம் என்பார். செய்தனம் சாதனமானது.) மேலே நாளிதழார் உபகரணம் என்றது துணைக் கருவி என்ற பொருளில் தான். கரத்தில் செய்யப் பயன்படும் கருவியைக் கரணம் என்று சங்கதம் சொல்லும். உவ என்னும் முன்னொட்டு உப என்று சங்கத வழி திரியும்.

வேதிப் பொறியியலில் இப்படிச் சொல்ல முடியாது, அங்கு வெறுங்கலனைக் கூட equipment என்று சொல்லிவிடுவார். எனவே செய்கலன் என்ற சொல்லை உருவாக்கினேன். பின்னால் ஏந்து என்ற சொல்லைப் பொதுவாக்கினேன். இச்சொல்லைப் பாவாணர் வாய்ப்பு என்ற பொருளில் ஆள்வார். ஓர்ந்து பார்த்தால் எத்துறையும் சாராது பொதுச்சொல் வேண்டுமெனில்  ஏந்தையே equipment இற்கு ஈடாக்கலாம்.   ஏந்தனம் equipment என்ற சொல்லையும்  பார்த்திருக்கிறேன். ஏந்து இன்னும் சிறிது.

1520s, from Middle French équiper "to fit out," from Old French esquiper "fit out a ship, load on board" (12c.), probably from Old Norse skipa "arrange, place in order," usually "fit out a ship," but also of warriors manning a hall and trees laden with ripe fruit, from skip "ship" (see ship (n.)). Related: Equipped; equipping. Similar words in Spanish and Portuguese ultimately are from Germanic.

ஆக,  personal protection equipment (PPE) = ஆளர் புரத்த ஏந்து (ஆங்கிலத் தொடரை விடச் சிறியது) - ஆ.பு.ஏ.

personal protective equipment (PPE) ஆளர் புரக்கும் ஏந்து (ஆ.பு.ஏ)

ஒரு நோயர் மனையில்  ஒரு படுக்கை இருந்தால் அதற்குச் சேவை செய்வது குறைந்தது 5 மருத்துவர்/செவிலியர் என்றெடுத்துக் கொள்ளலாம். அப்படி யெனில், (சூடணி வெருவி 4,5 நாட்களாவது ஆ.பு. ஏ. இல் உயிரோடு இருக்கும் எனில்,) ஒரு மருத்துவர்/ செவிலியர் கைவசம் குறைந்தது 7 ஆ.பு.ஏ. ஆவது  இருக்கவேண்டும். இனித் தமிழ்நாட்டின் மொத்தத் தேவையைக் கணக்கிடுவோம். தமிழ் நாட்டில் 72000 படுக்கைகள் இருப்பதாய் எங்கோ ஓரிடத்தில் படித்தேன். அப்படிப் பார்த்தால், 72000*5*7 = 25,20,000 என்ற எண்ணிக்கையில் ”ஆளர் புரத்த ஏந்து” நம்மிடம் இருக்கவேண்டும். மெய்யில் அப்படி உள்ளதா? - என்பது பெருங்கேள்வி.  (நான் மருத்துவர்/ செவிலியர் முகமூடிக்கே வரவில்லை. அவை இன்னுங் கூடும்.)

இவைபோன்ற கேள்விகளைக் கேட்பது ஒருவேளை தவறோ?

https://www.who.int/medical_devices/meddev_ppe/en/

Wednesday, April 08, 2020

கொழுப்புச் சொற்கள்

அண்மையில் கொழுப்பு தொடர்பான பல அறிவியற் கலைச்சொற்களை திரு. இலக்குவனார் திருவள்ளுவன் கொடுத்திருந்தார். நல்ல தொகுதி. அவர் பங்களிப்பைப் பாராட்டவேண்டும். அவருடைய சொல்லாக்கங்களை இந்த இடுகையின் முடிவில் கீழே கொடுத்துள்ளேன். இவற்றில் பலவற்றிலருந்து நான் வேறுபடுவேன். என் பார்வை தமிழொடு மட்டும் நிற்காது வேதியல் சார்ந்ததாயுங் காட்சியளிக்கும். இனி, இராம.கி.யின் ஆக்கங்கள் கீழே.

நான் அறிந்தவரை கொழுப்புகளுக்கான புரிதலை வெறியலிலிருந்து (alcohol) தொடங்கவேண்டும். வெறியலுக்கும் பெரியது களியல் = glycol. இதில் 2 OH குழுக்கள் இருக்கும். அடுத்தது களிக்கரையல் = glycerol. (களிச் சருக்கரையின் சுருக்கம் களிக்கரை). இதில் 3  OH குழுக்கள் இருக்கும். இவற்றிலிருந்து ஒருபக்கம் சருக்கரைகளும் இன்னொரு பக்கம் கொழுப்புகளும் பெருகும். ol என முடியும் எல்லாப் பூண்டுகளுக்கும் (compounds) செந்தரமாய் அல் எனும் ஈற்றைத் தமிழில் கொடுத்தால் சிறக்கும். எனவே திடயல் = sterol. அதனால் கொழுத்திடயல் = chlolesterol

இனிக் கொழுப்பு – fat, அடைப்பொதி  (அடைக்கும் பொதி) = adipose. துகை = tissue. இதைத் திசு என்று எழுத்துப் பெயர்ப்பில் பழகிவிட்டோம்.  துய் என்பது பஞ்சில் இருக்கும் தனியிழை. பல துய்களைச் சேர்த்து இழை. இழைகளைச் சேர்த்து உருவானது துகில். துகிலின் சிறுமை  துகை. அடைப்பொதித் துகை = adipose tissue. இழுது = lipid (எல்லாவற்றையும் கொழுப்பெனச் சொல்வதை நான் விரும்புவதில்லை. கொழுமை என்றசொல்லை நான் health இற்கு ஈடாய்ப் புழங்குகிறேன். எனவே  இழுது என்பதை இங்கு பயன்படுத்துகிறேன். இழுதிற்கு ஏற்கனவே வெண்ணெய்ப் பொருள் உண்டு.)
 
முக் களிக்கரைதைகள் =  triglycerides
பரப்பு இழுது = surface lipid
தனி இழுது – simple lipid
கூட்டு இழுதுகள் – compound lipids
வருத்திய இழுதுகள் – derived lipids
கொழுப்பு = fat
கொழுக் காடி – fatty acid
திகட்டிய கொழுக் காடி – saturated fatty acid (செறிதல் என்பதை concentrated என்பதற்குப் பயன்படுத்துவோம். saturated = திகட்டுதல், தெவிட்டுதல்
திகட்டாக் கொழுக் காடி – unsaturated fatty acid
மேயக் கொழுக் காடிகள் – major fatty acids (major என்பதற்கு மேய என்ற சொல்லை நெடுநாள் பயன்படுத்துகிறேன்.)
கரள் கொழுப்பு – crude fat
விலங்குக் கொழுப்பு – animal fat
நொதுக் கொழுப்பு – neutral fats
கொழுப்பில் கரையும் உயிரூட்டுகள்- fat-soluble vitamins
பல் திகட்டாக் கொழுக் காடி – poly unsaturated fatty acid
உப்பிருப்பு – obesity (உப்பியிருத்தல்)
இழுது ஈரடுக்கு – lipid bilayer
இழுது உயிராக்கம் - lipid biosynthesis
இழுதுப் பொக்குளம் – lipid vesicle
கொழு நெய் - fatty oil
கொழு நெய் விதை –   fatty oil seed
கரையும் இழுது – soluble lipid
படல இழுது – membrane lipid
கொழுப்பை இழிதாக்கும் முகவம் – fat liquoring agent (இழுது வேறு. இழிது = liquid. இழியக்கூடியது இழிது. நீர்மத்திற்கு வேறொரு பெயர். பல இடங்களில் என்னால் பயன்படுத்த முடிகிறது,)
புலனாகாக் கொழுப்பு – invisible fat
மீ இழுதமைவு – hyperlipidemia
மீ முக் களிக்கரை அமைவு – hypertriglyceridemia
மீ இழுதப் பெருத அமைவு  –   hyperlipoproteinemia
குருகு இழுது – galacto lipid (குருகு = வெண்மை. பாலுக்கும் உள்ள பெயர்தான்.)
மாவு இழுது – flour lipid
கொழுத்திடயக் கல் – cholesterol stone
கொழுத்திடயல் அமைவு –  cholesterolemia
வெண்ணெய்க் கொழுப்பு –   butter fat
குருதிக் கொழுத்திடயல் –   blood cholesterol
குருதி இழுது –  blood lipid
அடைப்பொதிச் சில் - adipose cell (சில் cell ஐ சரியாகவே இனங்காட்டும்.)
அடைப்பொதிமை – adiposity
உயர் திணிவு இழுதுப் பெருதம் – high density lipo protein
கொழுப்புச் சில்கள் – fat cells
இழுது நகர்ச்சி – lipid migration
தாழ் திணிவு இழுதப் பெருதம் –   low density lipo protein
நீள் கணை முக் களிக்கரைதைகள் – long chain triglyceride
பலம இழுதுகள் – plasma lipids
கொழுப்புகளின் பொத்திமை  – plasticity of fats
சாறக் கொழுத்திடயல் – serum cholesterol
கட்புலக்கொழுப்பு – visible fat
இழுதச் சிதைவு – lipolysis
இழுத நொதி – lipase
மென் கொழுப்பு – soft fat
கொழுப்புச் சுரப்பி – sebaccous gland

kinch என்பதைத் தேடிப்பார்த்தேன் முடிச்சு என்று போட்டுள்ளது. அது எப்படிக் கொழுப்பி என்று இலக்குவனார் திருவள்ளுவன் தான் விளக்கவேண்டும்.

அன்புடன்,
இராம.கி.

கீழேயுள்ளது இலக்குவனார் திருவள்ளுவன் கொடுத்தது.

நிணம் – cholesterol
கொழுப்பு – fat
கொழுமை – adipose
கொழுமைமெய்ம்மி – adipose tissue
கொழுமியம் – lipid
கொழுப்பி – kinch
முந்நெய்மை – triglycerides
வெளிப்புறகொழுமியம் – surface lipid
எளியகொழுமியம் – simple lipid
கூட்டுக்கொழுமியங்கள் –   compound lipids
வருவிக்கொழுமியங்கள் – derived lipids
செறிகொழுப்பு – saturated fat
கொழுப்புக்காடி – fatty acid
செறிகொழுப்புஅமிலம் – saturated fatty acid
செறிவுறாக்கொழுப்புக்காடி – unsaturated fatty acid
முதன்மைக்கொழுப்புக்காடிகள் – major fatty acids
முதிராக்கொழுப்பு – crude fat
விலங்குக்கொழுப்பு – animal fat
நொதுமல்கொழுப்பு – neutral fats
கொழுப்புக்கரைஉரனிகள்- fat-soluble vitamins
செறிவுறாப்பன்னிலைக்கொழுப்புக்காடி – poly unsaturated fatty acid
கொழுமிகை (பருவுடல்) – obesity
கொழுமியஈரடுக்கு – lipid bilayer
கொழுமியஉயிரியச்சேர்மி- lipid biosynthesis
கொழுமியக்குமிழி – lipid vesicle
கொழுநெய்- fatty oil
கொழுநெய்விதை –   fatty oil seed
கரைகொழுமியம் – soluble lipid
படலக்கொழுமியம் – membrane lipid
கொழுப்புநீர்மவினைமி – fat liquoring agent
புலனாகாக்கொழுப்பு – invisible fat
மீநிலைக்கொழுமியம்– hyperlipidemia
மீநிலைமுந்நெய்மை – hypertriglyceridemia
மீநிலைக்கொழுமியப்புரதம் –   hyperlipoproteinemia
பால்கொழுமியம் – galacto lipid
மாவின்கொழுமியம் –   flour lipid
வகுத்தூண்நிணம்
நிணக்கல் – cholesterol stone
நிண மிகை –  cholesterolemia
வெண்ணெய்க்கொழுப்பு –   butter fat
குருதிநிணம் –   blood cholesterol
குருதிக்   கொழுமியம் –  blood lipid
கொழுமைஉயிர்மி- adipose cell
கொழுமையுடைமை – adiposity
உயரடர்கொழுமிப்புரதம் – high density lipo protein
கொழுப்புஉயிர்மி – fat cells
கொழுமிப்பெயர்வு – lipid migration
நீள்தொடர்முந்நெய்மை –   low density lipo protein
நீள்தொடர்முந்நெய்மை – long chain triglyceride
குருதிநீர்மக்கொழுமியம் –   plasma lipids
கொழுப்புஉருஅமைவு – plasticity of fats
ஊனீர்நிணம் – serum cholesterol
கட்புலக்கொழுப்பு – visible fat
கொழுமிச்சிதைவு – lipolysis
கொழுப்புநொதி – lipase
மென்கொழுப்பு – soft fat
மடிக்கொழுப்பி – udder kinch
கொழுப்புச்சுரப்பி – sebaccous gland



Sunday, April 05, 2020

பைம்புலத்தார் - 3

ஆங்கிலத்தில் people (n.) c. 1300, peple, "humans, persons in general, men and women," from Anglo-French peple, people, Old French pople, peupel "people, population, crowd; mankind, humanity," from Latin populus "a people, nation; body of citizens; a multitude, crowd, throng," a word of unknown origin. Based on Italic cognates and derivatives such as populari "to lay waste, ravage, plunder, pillage," Populonia, a surname of Juno, literally "she who protects against devastation," the Proto-Italic root is said to mean "army" [de Vaan]. An Etruscan origin also has been proposed. The Latin word also is the source of Spanish pueblo, Italian popolo. In English, it displaced native folk என்று சொல்வார். ஆக, a word of unknown origin என இங்கும் சொல்கிறார்.

”பைம்புலரும் people உம்” எனக்கு நெருக்கங் காட்டுகின்றன. ஆங்கிலச் சொற்பிறப்பியலில், “எப்படி?” என்ற கேள்வியை யாருங் கேட்க மாட்டார். தமிழில் பாவாணர் கேட்பார். அதுவே மாற்றார்க்கு வியப்பாகும். பாவாணர் வழி மேலையர் வழியிலிருந்து வேறுபட, இந்த “எப்படி”தான் காரணம். 

இங்கு என் ஒரே ஐயம்  2000 ஆண்டுகளுக்கு முன் தமிழரோடிருந்த யவனத் தொடர்பு ஆகும். தொடர்ந்து அவரிங்கு வணிகம் செய்தார், நம் வேந்தரின் கோட்டைக் காவலில் கூட அவர் ஈடுபட்டார். படையில் இருந்தார். அவர் குடியிருப்புகளும், கோயில்களும் கூட இங்கு இருந்துள்ளன. ஆனால், தமிழ்ச் சொற்களைத் தம் தேசத்திற்கு அவர் கடன்கொண்டு போகவில்லை என எப்படிச் சொல்கிறோம்? எவ்வளவு கிரேக்க நூல்களை நாம் படித்துள்ளோம்? எவ்வளவு பழங்கிரேக்கச் சொற்களை நாம் ஆய்ந்துள்ளோம்? எதையும் சங்கத வழி காண்பதே நமக்கேன் வழக்கமாயிற்று?  இப் புரிதல் வந்துவிட்டாலே, ஆய்வு தொடங்கி விடும். இப்போதைக்கு நான் மேலே சொன்னதைக் கருதுகோளாய் வைத்து, இணைச் சொற்களைத் தருகிறேன்.

public health = பைம்புலக் கொழுமை,
public duty = பைம்புலக் கடமை.
republic = குடியரசு, பைம்புலம், (ப்ரதேஷ் என்பதற்குப் பைதிரம் என்று பாவாணர் பரிந்துரைப்பார்.)
publication = பைம்புல ஆற்றம்,
publicist = பைம்புல ஏற்றுநர்,
publicity = பைம்புல ஏற்றம்,
publicize = பைம்புலத்தில் ஏற்று,
publically = பைம்புலமாய்,
public spirit = பைம்புல உணர்வு

[இங்கே ஓர் இடைவிலகல். நலம் என்னாமல், எங்கும் அச்சொல் பயிலப் பட்டுங் கூட, health இற்கு இணையாய்க் ”கொழுமை” சொல்லக் காரணம் உண்டு. well-being என்பது நலம். goodness உம் நலந்தான். health என்பது வெறும் well-being ஆ? goodness ஆ? இல்லையே? அதற்கும் மேலல்லவா? நலத்தை விடக் கொழுமை விதப்பானது. உடல்நலம் என நீட்டிச் சொல்லாது விதப்பாக, சுருக்கமாகக் ”கொழுமை” புழங்குவது நம் பேச்சில் துல்லியங் கூட்டும். ஏன் இப்படிக் கூர்மையின்றி மொழுங்கையாய் நாம் பேசுகிறோம்? கொழுமைப் பயன்பாடு தமிழில் இல்லாமல் இல்லை; "கொழு கொழு என இருக்கிறான், அவனுக்கு என்ன குறை?" என்கிறோமே? அது நலப் பொருளில் தானே? அதை நீட்டுவதில் தவறென்ன? ஆனால் கொழுமை மிஞ்சினால் கொழுப்பு (அளவுக்கு மிஞ்சின் அமுதமும் நஞ்சு). கொழுமையை கொழுப்பெனின் வேறு பொருள் வந்து விடும். எனவே மைகார ஈற்றைக் கவனமாகப் பலுக்குக.] இதேபோல்,

publish = பைம்புலத்து இடு,
publisher = பைம்புலத்து இடுவார்,
populous = பைம்புல,
population = பைம்புலத்தார் (பன்மை) / பைம்புல நிறைப்பு,
populace = பைம்புலத்தார்,
populate = பைம்புல நிறை-த்தல்,
populist = பைம்புலத்தார் (மதிப்புக் கூடிய தனி ஆள்),
popular = பைம்புல

சரி நான் ஏன் பைம்புலம் என்ற சொல்லைப் பரிந்துரைக்கிறேன்? பல்வேறு ஆங்கிலச் சொற்றொடர்களைப் பாருங்கள்  அவற்றின் நுணுக்கமான விவரிப்பும் விதப்பும் அலாதியானவை. வெறுமே ”மக்கள், பொது” என்ற சொற்களை வைத்து முன்னொட்டும் பின்னொட்டும் பெய்து பைம்புலத்தைச் சொல்ல முற்படுவது tautology இல் தான் வந்து முடியும். அது என்ன  tautology?[எங்களின் முதலாண்டுப் பொறியியல் படிப்பில் குடிமைப் பொறியியல் (civil engineering) சொல்லிக் கொடுக்க ஓர் ஆசிரியர் வந்தார். அருமையான ஆசிரியர், ஆனால் ஆங்கிலம் அவ்வளவாக அவருக்கு வராது,

ச(/ஜ)ல்லியை விளக்க வேண்டிய கட்டம் வந்தது. ஆங்கிலத்தில் இதை road metal என்பார். எங்கள் ஆசிரியர், ”Road metal is ......"என்று சொல்லிவிட்டுக் கம்பீரமாய் எங்களை ஒரு சுற்றுப் பார்த்தார். பிறகு குரலை உயர்த்தி”.... road metal” என்றார். அவ்வளவு தான் அடுத்த செய்திக்குப் போய்விட்டார். ஏனெனில் சல்லியை விளக்கியாயிற்றாம். அதாகுவியல் (tautology) என்பது இது தான். The saying of the same thing twice over in different words, generally considered to be a fault of style e.g. they arrived one after the other in succession.] முன்னொட்டு, பின்னொட்டு, ஈறுகள் வைத்துச் கலைச்சொல் படைக்கையில் பெரும்பாலும் இதுவே நடக்கிறது. நான் அதாகுவியலைப் பெரிதும் மறுப்பவன்,

முன்னொட்டு, பின்னொட்டு வேலை என்பது செருமானிய மொழியில் அதிகம். ஒரு வாக்கியம் சொல்லும்போது முன்னொட்டைப் பிரித்து வாக்கியத்தின்  கடைசியில் கொணர்ந்து வைப்பார். பழக்கமில்லாதவர் இதுகண்டு தடுமாறிப் போய்விடுவார். தமிழைச் செருமானிய மொழி போல் ஆக்கவேண்டுமா? வியக்கிறேன். ஆழ்ந்து ஓர்ந்தால், தீநுண்மி, முள்தொற்றி போன்ற சொற்கள் எதையுமே நமக்கு விளக்கவில்லை. அவை வெறும் இடுகுறிப் பெயர்களாய் நிற்கின்றன. வெருவி என்பது கொஞ்சமாவது virus ஐ விளக்கும். அது போல் ”பொது பொதுமக்கள், பொதுமைய” என்பனவும் பெரிதாய் public, common, general என்பவற்றை விளக்கி விடா.  நீர்வீழ்ச்சி வேண்டுமா, அருவி வேண்டுமா? மகிழுந்து வேண்டுமா. சகடு வேண்டும? நேர்மின்னி, எதிர்மின்னி வேண்டுமா? முன்னி, மின்னி வேண்டுமா? நான் நூற்றுக்கணக்கான சொற்களை அடுக்கிப் போகலாம்.

public, popular, common, general, civic, national, known, communal எனப் பல சொற்களை ஆங்கிலத்தின் Roget's Thesaurus சிற்சில வேறுபாடுகளுடன் பட்டியல் இடும். இதே வேலையைத் தான் திவாகரம் முதற்கொண்டு நம்மூர் நிகண்டுகள் காலங் காலமாய்ச் செய்தன. யானைக்கு 37 பெயர்களைச் சூடாமணி நிகண்டு பட்டியலிடும். இதற்கு மேலும் சில சொற்களை மற்ற நூல்கள் சொல்லும். அவை நம் மரபில் கிளைத்தவை. பொதுவாக நம் மரபில் உள்ளவற்றிற்கு நம்மிடம் சொற்கள் அதிகமாவே இருக்கும். நம் மரபில் இல்லாதவற்றிற்கு, சொற்கள் குறைவாய் இருக்கும்.  எதைச் சரி செய்ய வேண்டும்? குறைவான சொற்களின் இருப்பைத் தானே?

கடந்த 250 ஆண்டுகளில் நம்மிடம் அறிவியல் வளர்ச்சி குறைவு. வரலாற்றுக் குளறுபடிகளால் ஒரு பெரிய இடைவெளி நம் மொழியில் எற்பட்டு விட்டது. அதைச் சரிசெய்யாது, குறைச்சொற்களை நிரப்பாது அறிவியலில் நாம் வளரவே முடியாது. இதைச் செய்ய முயல்வதே எனக்குப் பொல்லாப்பு ஆகிறது. ”பாமரச் சொற்களை விடுத்து ஏதோ இலக்கியம் படைக்க முற்படுகிறார். கவிதை படைக்க முயல்கிறார். அகரமுதலி வைத்துக்கொண்டா தமிழில் அறிவியல் படிக்க முடியும்?” என்றெல்லாம் சாடல்கள் எழும்.  என் கேள்வி எளிமையானது.  அகரமுதலி வைத்துக் கொள்ளாமலா, ஆங்கிலத்தில் அறிவியல் படிக்கிறீர்?

எனவே நம்மரபு எவ்வளவு தொலைவு வந்தது? எங்கு இடைவெளி ஏற்பட்டது? - என்பதில் நமக்கு ஓர் ஆழ்ந்த தெளிவு வேண்டும். நமக்கு இன்று தெரிந்த 3000 சொற்களை வைத்து, முன்னொட்டு, பின்னொட்டு, ஈறுகள் சேர்த்தால் 250 ஆண்டு இடைவெளியைச் சரிசெய்து விடலாம் என்பது வெறும் கற்பனை. ஒரு வகையான களிமண் குதிரையில் பயணம் செய்யும் போக்கு. ஒரு மழையில், காற்றில் அது கரைந்துவிடும். கூரையேறிக் கோழிபிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுன்றம் போக ஆசைப்பட்டானாம். அண்மைக் கால அறிவியல் வளர்ச்சி  மேலும் மேலும் விதப்பித்தல் (speciation), வகைப் படுத்தல் (classification) என்பதில் தான் வளர்ந்தது. நாமும் விதப்பித்தல், வகைப்படுத்தல் மூலம் நம் சொல் தொகுதியைக் கூட்டினால் தான் மேலே வளரமுடியும். இதைச் செய்ய  ”பொது பொதுமக்கள், பொதுமைய” என்ற பாதை சரிவராது.

ஆங்கில எழுத்தாளர் சியர்ச்சு ஆர்வெல் தன் ”1984” புதினத்தில் இது போன்ற ஒரு மொழியை விவரிப்பார். good, supergood, plusgood, doubleplusgood என்று  முன்னொட்டுகளால் சொற்களைப் படைக்கும் தந்திரத்தை அங்கு  சொல்லி யிருப்பார். அது ஓர் இயந்திர மொழியையே உருவாக்கும். தீநுண்மி, முள்தொற்றி போன்றவை  supergood, plusgood, doubleplusgood என்ற வகைச் சொற்களைச் சார்ந்தவை. அப்படிச் சொற்களைத் தமிழில் உருவாக்கினால் ஒரு நாளும் தமிழில் அறிவியல் பரவாது. நாம் காலத்திற்கும் அடிமையாய் இருப்போம்.

அந்தத் தடந்தகை  (strategy) நம்மைக் கவியரங்கம், பட்டிமன்றம், பேச்சரங்கம், கேளிக்கை தவிர வேறு எதற்கும் வல்லமையுள்ளதாய் ஆக்காது. நான் சொல்வது சிலருக்கு வலிக்கலாம். ஆனாலும் என் கருத்தை என் பக்கத்தில் சொல்ல எனக்கு உரிமையுண்டு. பழம் இலக்கியங்களைப் படிக்காமல், வட்டார வழக்குகளை அறியாமல், மற்ற தமிழிய மொழிகளைச் சேர்த்துக் கொள்ளாது, இந்தையிரோப்பிய மொழிச் சொற்களுக்கும், நம் சொற்களுக்கும் உள்ள உறவுகளை ஆய்வு செய்யாது, மொழித்திரிவு விதிகளை அறிந்துகொள்ளாது, புதுச்சொல்லாக்கம் செய்வது குதிரைக் கொம்பே என்பதில் நான் தெளிவாய் இருக்கிறேன்.  என் சொல்லாக்க முறையின் அடிநாதம் அதுதான். ”ஆங்கில ஒலிப்பில் சொல் படைக்கிறேன்” என்பது அறியாப் பேச்சு. I have stated my case.

முடிப்பதற்கு முன் 2 வாக்கியங்களை உங்களுக்குப் படிக்கத் தருகிறேன். ”The general opinion in the society is that most of the common people do not adhere to the lock-down” என்ற வாக்கியத்தை, “பொதுமக்களில் பெரும்பாலோர் ஊரடங்கோடு ஒட்டுவதில்லை என்பது குமுகத்தில் நிலவும் பொதுக்கருத்தாகும்” என்ற மொழிபெயர்ப்பை விட, ”பொதுமக்களில் பெரும்பாலோர் ஊரடங்கோடு ஓட்டுவதில்லை என்பது குமுகத்தில் நிலவும் கணக் கருத்தாகும்” என மொழிபெயர்த்தால் இன்னும் தெளிவான பொருள் தருவதாய் நான் நம்புகிறேன்.   அதேபோல் ”popular democracy is more preferable to the totalitarian rule" என்பதை, “பைம்புல மக்களாட்சி  முற்றாளுமை ஆட்சியை விட அதிகம் உகந்தது” என்பது எனக்குச் சிறந்ததாய்த் தெரிகிறது.

அன்புடன்,
இராம.கி.

பைம்புலத்தார் - 2

”உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும் கல்லார் அறிவிலாதார்” எனும் போதும், ”உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு” எனும் போதும் உலகமெனும் அஃறினைப்  பெயர் உயர்திணை மாந்தர்க்கு ஆகுபெயர் ஆகும். அதுபோல்  மான்பதை> மன்பதை என்பது மாந்தரின் இடங் குறிக்கும். பற்று> பட்டு> பத்து> பது என்பது தங்கும் இடத்தைக் குறிக்கும். (செங்கழுநீர்ப் பற்று> செங்கற்பட்டு) பதுவின் நீட்சி பதி. பதி-தல்= தங்கு-அல். பல ஊர்கள் பதியில் முடியும். பது> பதை என்றுமாகும். ஐந்திணையிலும்  மக்கள் வாழ்ந்த பின் எழுந்த சொல் பதையாகும். இதே கருத்தில் ”ஐந்திணையும்” எழுந்தது. ”நடுவண் ஐந்திணை நடுவணது ஒழிய”- பொருள். அகத்:2/2. ஐந்திணை = உலகம்.  கைக்கிளை முதலா பெருந்திணை வரைக்குள், ”குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல்” என்பவை நடுவண் ஐந்திணை. இவற்றின் நட்ட நடுவில் பாலை. மற்ற 4  திணைகளுக்கும் தனித்தனியே உரிய நிலமுண்டு. பாலைக்குக் கிடையாது. 

முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்கு துயர்உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்

எனும் சிலம்பு காடுகாண் காதை 64-66 ஆம் அடிகள், பாலைக்கு இலக்கணஞ் சொல்லும். ஐந்திணை என்பது மாந்தர்வாழ் நிலத்தை, மாந்தருக்கு ஆகுபெயர் ஆக்கியதாகும். ”அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்”- என்பது பொருள். கள:1/2.  “மக்கள் நுதலிய அகன் ஐந்திணையும்” என்பது பொருள். அகத்:54/1.  தொல்காப்பியக் காலத்தில் மட்டும் ஐந்திணை எனும் சொல்லாட்சியில்லை. பதினெண் கீழ்க்கணக்குக் காலம் வரை அது பயின்றுள்ளது. பதினெண் கீழ்க் கணக்கு வரிசையில் ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணை மாலை நூற்றைம்பது என்பன  சில நூல்கள். இவற்றிலும் ஐந்திணை என்பது மாந்தர்வாழ் நிலத்தைக் குறிப்பதே. 

சங்க இலக்கியங்களில் புலமென்ற சொல் நிலம், இடம், வயல், விலங்குகள், மக்களெனப் பெருங்காட்டுகளிலும் புலன்/sense எனும் பொருளைச் சிறுங் காட்டுகளிலும் குறித்தது. எட்டுத் தொகை, பத்துப்பாட்டில் 116 காட்டுகளில் ”புலம்” பயிலும். விதப்பாய், “ஆ புலம், உடை புலம், கடி புலம், கண் புலம், குட புலம், குண புலம், செல்லல் புலம், செறுநர் புலம், சேண் புலம், தென் புலம், தெவ்வு புலம், தொடு புலம், நேரார் புலம், பகை புலம், பிற புலம்,  புன் புலம், மழ புலம், முனை புலம், மேய் புலம், மை புலம்,  வட புலம், வறும் புலம், வன் புலம், வாடு புலம்  வித்திடு புலம்,  வேண்டுபுலம்,  வேறு புலம்” என்ற கூட்டுச் சொற்கள் பயிலும்.  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் 10 இடங்களிலும் இதே பொருள்களில் புலம் வரும்.  ”நன் புலம், புன் புலம், நுழை புலம், தென் புலம், ஐம் புலம்” என்றும் விதப்பாய்ப் பயிலும்.  ”கண்புலம், விண்புலம், தென்புலம், வேற்றுபுலம், செவிபுலம், பகைபுலம்” என்று சிலம்பு, மேகலையிலும் இதே சொல் பயிலும். 

தென்புலத்தார்  தெய்வம் விருந்தொக்கல் தான் என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

என்று திருக்குறள் அறத்துப்பால், இல்லறவியல், இல்வாழ்க்கை 43 ஆம் குறளில்  வரும். (இக்கட்டுரைக்கான பொறி இதிற்றான் கிடைத்தது.) எல்லா உரைகாரரும் ”தென்புலத்தார்,  தெய்வம், விருந்து, ஒக்கல், தான்” எனக் கணக்கிட்டு ஐம்புலத்திற்குப் பொருள் சொல்வர். நான் சற்று வேறுபடுவேன். ஐம்புலம் என்பது மேற்சொன்ன .நிலம், இடம், வயல், விலங்குகள், மக்கள் எனும் பொருள்களைக் குறிக்கும் சொல்லெனக் கொள்வேன். தென்புலத்தார் என்பது ”முன்னோர் தென்புலத்தில் உளார்” எனும் தொன்மக் குறிப்பாகும். (இற்றைத் தமிழகத்தின் தென்பக்கம் தொடர்ந்து கடற்கோள் ஏற்பட்டு, நிறைய மாந்தர், நில அழிவுகளைத் தமிழர் சந்தித்தார். இது குமரிக் கண்டக் குறிப்பில்லை; குமரிநில அழிவுக்குறிப்பு.) ”தென்புலத்தார்,  தெய்வம், விருந்து, ஒக்கல், தான்  என்றபடி,  ஐம்புலத்தின் (தமிழ்நாட்டின்) ஆற்றை (வழியை) ஓம்புவது தலையாகும்” என இக்குறளுக்குப் பொருள்கொண்டு பாருங்கள். பொருள் இன்னும் சிறக்கும்.

மேற்சொன்ன வள்ளுவரின் ஐம்புலத்தைப் பைம்புலம் என்றும் சொல்லலாம். பைஞ்சு என்பது இந்திய வடபுலத்தில் ”பாஞ்ச்” ஆகும். நாம் கை>செய்>ஐ என இன்று கொண்டுள்ளோம். பைஞ்சு>அஞ்சு என்பதும் நம்மிடம் இல்லாமல் இல்லை. இதே இடப்பொருளில்  புலத்திற்கு மாறாய் நிலத்தையும் புழங்கலாம். நகர, ஞகரப் போலியில் பைந்நிலம்>பைஞ்ஞிலம் எனலாம் இதுவே திவாகரத்திலும் மக்கட் பரப்பிற்கு இணையாய்ச் சொல்லப்பட்டது. பதி 17.9, 31.6, புற 62.10-13 ஆகியவற்றில் இச்சொல் பயிலும். பல்வேறு உரைகாரரும் பைஞ்ஞிலத்திற்குப் பசிய நிலம் என்றே பொருள் சொல்வார். காட்டாக பதி 17-9 இல் வரும் ”நனந்தலைப் பைஞ்ஞிலம்” என்பதற்கு அப்படிப் பொருள் சொல்வர்.,

இங்கே, இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனின் நிலம் வெறும் பசியநிலம் மட்டுமா? - எனில் இல்லை. மற்ற திணைகள் அவன்நாட்டில் இல்லையா, என்ன? மாறாக நனந்தலைப் பைஞ்ஞிலம் என்பதற்கு “அகல்நிறை ஐம்புலம்” எனப் பொருள் கொண்டால், மேலும் சிறக்கும். அதே பொழுது பதி. 31-6 இல்,  ”உண்ணாப் பைஞ்ஞிலத்திற்கு”, ”உண்ணா நோன்புற்றோர்” எனப் பொருள் சொல்வார். இங்கும் ”ஐம்புல மக்கள்” என்பதே சரியாகும். இனிப் புறம் 62.10-13 ஆம் அடிகளைப் பார்ப்போம். சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் அவனுடைய மைத்துனன் வேற்பல் தடக்கைப் பெருவிரற் கிள்ளியும் (இவன் நற்சோணையின் சோதரன், சேரன் செங்குட்டுவனின் தாய்மாமன்) போர்ப் புறத்துப் பொருது வீழ்ந்தாரைக் கழாத்தலையார் பாடியது என்று சொல்வர். இருவரும் போரில் காயமுற்று மாய, ஒருவரும் வெல்லமுடியாது அமைந்த சோகத்தைக் கழாத்தலையார் பாடுவார்.

“பன்னூறு அடுக்கிய வேறுபடு பைஞ்ஞிலம்
இடங்கெட வீண்டிய வியன்கட் பாசறை
களங்கொளற்கு உரியோர் இன்றி
தெறுவர உடன் வீழ்ந்தன்றால் அமர்” =

இதன் பொருளாய்.  “பலநூறாக அடுக்கப்பட்ட  பதினெண்பாடை மக்களாகிய படைத்தொகுதி, இடமிலாகும்படி தொக்க வீண்டிய, அகன்ற பாடிவீட்டின் கண் போர்க்களத்தைத் தமதாய் ஆக்கிக் கொள்வதற்கு உரியோர் ஒருவரும் இன்றி, கண்டார்க்கு அச்சம் வரப் பூசல் மடிந்தது ” என ஔவைத் துரைசாமியார் சொல்வதில், பல கேள்விகள் எனக்குள் எழும். அடிப்படையில் இது மாமன் - மச்சான் சண்டை; இருவரும் தமிழர். ஒருவன் சேரன், மற்றவன் சோழன். இதில் பதினெண் பாடை(மொழி) மக்களாகிய படைத்தொகுதி எங்கு வந்தது? பாட்டில் அப்படி ஒரு குறிப்பே இல்லையே? “வேறுபடு பைஞ்ஞிலம்” என்பது இதுவா?

மாறாய், “பன்னூற்றுவர் அடுக்கிய வேறுபட்ட பைம்புலங்களான சோழ நாடும், சேரநாடும்  இடமிலாது போகும்படி தொக்க அழிய (= வீண்டிய), அகன்ற பாடி வீட்டின் கண், “இப்போர்க்களம் எமது” என்று கொண்டாட, உரியார் இல்லாதாகி, கண்டார்க்கு அச்சம் வர, பூசல் மடிந்தது” எனலாமே? இதில் ”வேறுபடு பைஞ்ஞிலம்” என்பது ஐம்புலங்களைக்  கொண்ட வேறுபட்ட சோழ, சேர நாடுகளைக் குறிக்கிறது என்றால் தவறா. (சொந்தக்காரராய் அவர் இருந்தாலும் தம்முள் வேறுபட்ட நாட்டார் தானே?)  இப்படிப் பார்த்தால் பைம்புலம் / பைஞ்ஞிலம் என்பது வெவ்வேறு நாடுகளைக் குறிக்கிறது என்பதும் அந்நாட்டு மக்களை ஆகுபெயரால் குறிக்கிறது என்பதும் புலப் படும். ”பைம்புலம்” என்பதே என்னைக் கிளரச் செய்தது. இதைப் பயின்றால் public தொடர்பான ஆங்கிலச் சொற்களுக்குத் இணைச்சொற்கள் தமிழில் கிடைக்குமே? - என்று தோன்றியது.  பைம்புலர் என்பது மக்களுக்கு (people) இணையாவதும் விளங்கியது.

அன்புடன்,
இராம.கி.

பைம்புலத்தார் - 1

”சொல்லாய்வு” முகநூற் குழுவின் மட்டுறுத்தரோடு ஒருமுறை முரணி விலகியபின்,  யாரோ ஒருவர் ”சொல்” எனும் குழுவில் என்னைச் சேர்த்தார். 1, 2  முன்னிகைகள் இட்டது தவிர பெரிதாய் அங்கு நான் எதுவும் பேசவில்லை. அண்மையில்,   “public health warrior என்பதைத் தமிழில் எவ்வாறு தரலாம்? ” என்று திரு. Sri Sridharan கேட்டார். பலரும் “public health ஐப் ”பொதுநலம்” என்றார். ”அது common good ஆ, public good ஆ, public health ஆ” என்று எனக்குப் புரியவில்லை. தமிழில் ஏன் இப்படி ஒப்பேற்றுகிறோம்? இம் மொழி எத் திறனும் இல்லாததா? - எனுங் கேள்வி என்னுள் எழுந்தது. “public ஐ ’பொது’ என்று கருதக்கூடாது மாறாக மக்களென்றே கருதல் வேண்டும். அவ்வகையில் ’மக்கள் நல காப்பாளர்’ என்றோ அல்லது ’மக்கள் நல அலுவலர்’ என்றோ அழைக்கலாம்” என இன்னொருவர் புகன்றார்.

“When are we going to differentiate general, common and public In Tamil? எல்லாவற்றிற்கும் பொது தானா?” என ஊடு புகுந்து கேட்டேன். ”public= மக்கள் எனலாம். மற்ற இரண்டையும் எப்படி வேறுபடுத்தலாமெனக் கூறுங்கள்” என Sundar Lakshmanan கேட்டார், 

ஏதுஞ் சொல்லுமுன் எனக்கு வாய்ப்பூட்டிடுவது போல், “general, common, public என்பனவற்றை வேறுபடுத்திக் காட்டுவது இங்கு நோக்கமில்லை. அவை பயன்படும் இடங்களில்,  இயல்பாய் அப்பொருளைக் குறிக்கும் தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்துவதே நோக்கம். 'பொது' எனும் சொல்லின் அடிப்படையில் பொது, பொதுமக்கள், பொதுமைய என அமைந்தாலோ ஒரே சொல்லாகப் பொதுவென இருந்தாலோ ஒருசிறிதும் கவலுறத் தேவையில்லை. நம் மொழியில் நமக்கு விளங்குமாறு பொருந்தியிருந்தால் போதும். 

நாம் public health என்பதைப் பொதுநலமென்றோ, public (referring to people), பொதுமக்களென்றோ, common ஐப் பொது என்றோ சொன்னால் போதும். செயற்கையாக வேறு சொற்கள் ஆக்கி ஆளத் தேவையில்லை. இயல்பாய் நல்ல சொற்கள் சில இடங்களில் பொருந்திவருமாயின், நன்றே, வரவேற்கலாம். ஆனால் வலிந்து ஆங்கிலத்துக்காக வேறுபடுத்திக் காட்டத் தேவையில்லை. நாம் ஆற்றங்கரை, கடற்கரை, ஏரிக்கரை என்றே சொல்கின்றோம், ஆங்கிலேயன் sea shore, river bank, lake shore என்கிறான். இவை யெல்லாம் மொழிக்கு மொழி மாறுபட்டு இருக்கும். அவரவர் தேவை, மரபைப் பொருத்தவை அவை” என்று மதிப்பிற்குரிய நண்பர் ஒருவர்  சொன்னார்.  

நான் மனங்குன்றினேன். ஆனால் நான் பேசக்கூடாதென அவர் விழைவது புரிந்தது,  ”ஆயிரம் பூக்கள் மலரட்டும்; ஆயிரம் கருத்துகள் பிறக்கட்டும்” என்றொரு சீனக்கிழவன் சில ஆண்டுகள் முன்னால் சொன்னான்.  அதெல்லாம் தேய்ந்து பழங்கதை ஆயின போலும்.  “வேறுபடுத்த் தேவையில்லை என்றபின் நானெதுவும் இங்கு சொல்வதாக இல்லை. உங்கள் வேண்டுகோளுக்கு செவி சாய்க்க முடியாமைக்கு மன்னியுங்கள். வேறு நொதுமலான இடத்தில் தொடர்பு கொள்க. அங்கு பேசுவோம். யாரோ என்பெயரை இக்குழுவில் இணைத்து விட்டார். நான் வேண்டிக்கேட்டு இங்கு இணையவில்லை. விலகி இருக்கலாம் என இப்போது எனக்குத் தோன்றுகிறது. மட்டுறுத்தர் என்பெயரை நீக்கலாம்” என சுந்தருக்குச் சொன்னேன். 

அப்புறம் சில சமதான முயற்சிகள் நடந்தன. இருப்பினும் கேளாது நகர்ந்தேன்.  இவ்விடுகை ஏன் எழுகிறது என்பதற்கான  விளக்கம் இது. ”மதியாதார் தலை வாசல் மிதிக்க வேண்டாம்” என்றவொரு பழம் பாட்டியின் அறிவுரையைச் சிற்றகைவையில் படித்தேன். என் நடத்தையில் அது வெளிப்பட்டது. இனி இடுகைக்கு வருவோம்.

general knowledge and common sense என்ற என் இடுகையில் (http://valavu.blogspot.com/…/general-knowledge-and-common-s) ஏற்கனவே general = கண(ம்), common (பொது, குமுன்)  பற்றிப் பேசிவிட்டேன். public பற்றித்தான் பேசவில்லை. 16 ஆம் நூற்றாண்டுச் சூடாமணி நிகண்டில், கணம், (குழு, குழாம்), (கூட்டம், கோட்டி), சங்கம், (சமுதாயம், சமூகம், சமவாயம், சவை, அவை), திரள் எனத் திரண்டோர் பெயரும்,  ஆண்டையர், நரர், (மக்கள், மாக்கள், மனிதர், மனுடர், மானுடர், மானவர், மாந்தர்,மைந்தர்), மண்ணோர் என மனிதர் பெயரும், மன்பதை, பைஞ்ஞீல் என மக்கட் பரப்பின் பெயரும் வரும். இப்பட்டியலில் தமிழுமுண்டு; சங்கதமுமுண்டு, இருபிறப்பிகளுமுண்டு.  ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.

https://valavu.blogspot.com/2018/09/general-knowledge-and-common-sense.html என்ற இடுகையில் கணம் பற்றிச் சொன்னேன். கூடுஞ் செயலைக் கணத்தல் எனலாம். (கள் எனும் கூட்ட வேரடியிற் பிறந்த சொல் கணம். குள்> கள்> கண்> கண> கணத்தல்.  குழு, குழாம் ஆகியவையும் ”குள்”ளில் பிறந்தவையே. குள்> குழு என்பதும் கூட்டச் சொல்லே. குழுவில் பெரியது குழாம். இக் காலத்தில் ”குழுமம், குழும்பு” என்றும் புதுச்சொற்கள் படைத்துள்ளோம். குள் வேரில். குள்> குடு> கூடு> கூட்டம் என்பதும் எழும். கூடு> கோடு> கோட்டி என்பது அடுத்த வளர்ச்சி. கோட்டியைச் சங்கதம் கோஷ்டியாக்கும். சகரச் சொற்களில் முதலில் வருவது சங்கம்.  சுல்> சுல்க்கு> *சல்க்கு> சக்கு என்பது வட்ட, உருண்டைப் பொருள்களைத் தரும். 

சக்கில் பெரியது சக்கம். சக்கத்தின் நீட்சியாய் சக்கடம். சக்கரம், சகடு, சகடை போன்ற வட்டச் சொற்கள் பிறக்கும். ”சக்கின்” மெல்லோசையில்  ”சங்கு”. சங்கிற் பெரியது சங்கம். சக்கு> சங்கு> சங்கம். வடிவியலில் 360 பாகையில் சுற்றி வருகையில் ஒரே ஆர நீளங் கொண்டால் கிட்டுவது வட்டம். சக்கரம் வட்ட வடிவமே. இதில் வளைச் செலுத்தம் (turning process) மட்டும் நடைபெறும். ஒவ்வொரு பாகைக்கும் வளைச் செலுத்தமொடு ஆர நீளமும் சீராகக் கூடின், இரு செலுத்தங்களால் புரிச் சுருவை (spiral curve) உருவாகும். முப் பரிமானப் புரிச்சுற்று நீட்சியில் சங்கு எழும். சங்கின் பொருளும் வட்டமே. (http://valavu.blogspot.com/2018/08/5.html) 70000 ஆண்டுப் பழங்குடி மிச்சமாய் இன்றும் தமிழரிடம் சங்குப் பயன்பாடும் விளக்கங்களும் விதப்பாய் உண்டு, சங்கொலி எழுப்பி இன்றும் தமிழர் கூடுகிறார். (எங்கள் ஊர்க் கோயிலில் உண்டு.) ஒருவேளை கூட்டக் கருத்தே சங்கு வழி  எழுந்ததோ என்னவோ?.

அடுத்து வரும் சகரச்சொற்கள். உம்மையில் கிளர்ந்தன. உம்முதல் = பொருந்தல், கூடுதல். ”அவனும் நானும், இனியனுமாய் பள்ளி சென்றோம்.” உம் எனும் உருபு கூட்டப் பொருளைக் குறிக்கும். உம்>அம் ஆகி, அம்முதலும் பொருந்தலைக் குறிக்கும். அம்>அமை; அமைதல்= பொருந்தல். தெலுங்கில் அம்முதல்= "பொருளின் மதிப்பில் உடன்பட்டு விற்றல்". அம்-முதலில்  கிளைத்தது அங்காடி. தெலுங்கு தெரியாவிடின், ’அங்காடி’ எப்படி வந்தது எனத் தெரியாமல் போயிருக்கும். உம்முதலின் முன் சகரஞ் சேர்த்தும் சொல் அமையலாம். சும்>சும்மை என்பது மிகுதி குறிக்கும். சும்மைக்கு முந்திய ’சும்-’ வினைச் சொல் (கும்- போல்) மிகு-த்தலைக் குறிக்கும். [மிகு-த்தலில் இருந்து கூட்டப் பொருளும் பருத்தற் பொருளும் இயல்பாக வரும்.] சும்முதல் தொடர்பான பெயர்களைப் பதிந்த நம் அகரமுதலிகள் ஏனோ வினைச்சொல் பதியவில்லை.] ஆனால், சுமை, சுமடு, சும்மாடு, சுமத்தல் போன்றவை அகர முதலிகளிற் பதிவாகியுள்ளன.

சும்மின் திரிவான சம்மிலிருந்து ”சமம்” எழும். சமம் எனும் அடிச் சொல்லைத் தமிழ் கடன் வாங்கியிருக்க வழியில்லை. சம்முதல், சமத்தல், சமலுதல்= ஒன்று போல் இன்னொன்று ஒருங்கிருத்தல். இதற்கான வினைச்சொல் இந்தை யிரோப்பியனிலும் நேரடியாயில்லை. same என்ற பெயர்ச்சொல் மட்டுமே  சுற்றி வளைத்துக் கூடுதல், உடனிருத்தல் பொருளில் எழுந்துள்ளது. உடன் இருப்பன ஒன்று போல் இருக்கவேண்டுமே என நாம் புரிந்து கொள்கிறோம். சம்-முதலில் சமுதாயம் எழும். இது வடசொல்லோ என எண்ணித் தனித்தமிழ் இயக்கத்தார் ”குமுகாயம்” படைத்தார். சமுகம்>சமூகம் என்பதும் சமுத்தல் = கூடுதல் பொருளில் எழுந்ததே. ஆட்கள் சமமாகிக் கூடிய ஆயம் சமவாயம். மகரமும் வகரம் இணைப் போலிகள் என்பதால் சமை>சவை என இன்னொரு சொல் எழும். இதேபோல் அமை> அவை என்பதும் உருவாகும். துல்> தில்> திர்*> திரள் என்பது திரட்சிப் பொருள் காட்டும். திரள்+ந்+து> திரண்டு> திரண்டோர் என்றும் ஆகும். 

மாந்தரிலா விலங்குகள், தாவரங்களின் மேல் ஆண்ட மாந்தரை, “ஆண்டையர்” எனக் குறித்துப் பின் வருக்கக் குமுகாயத்தில்  ஆண்ட வருக்கத்தைக் குறிப்பதாய்க் குறுகியது. நரர் என்பது நரலும் (ஓசையிடும், பேசும்) இயல்பு கொண்ட மாந்தரைக் குறித்தது. அடுத்து வரும் சொற்களை மன்-னுதல்= நிலைத்தல் பொருளில் கருத்துமுதல் வாதமாய்ப் பாவாணர் சொல்வார். நான் பொருள்முதல் வாதமாய்ப் பார்ப்பேன். ஒரு மாந்தன் இன்னொருவனை விதப்பாய் அறிய முகமே பயனுற்றது. முகம்> முகன்> மகன், முகள்> மகள் என்பவை அப்படி எழுந்தவை.  பலரைக் குறிக்கும் பெயராய் ”மக்கள்” எழுந்தது. மக்களில் பண்படாதோர் மாக்கள். மகன் நீண்டு மானாகிப் பின் மான்> மாந்து> மாந்தன் உருவானது,  மாந்து என்பது, மைந்து>மைந்தர் என்றும் ஆனது. மான்>மானவர் என்பது இயல்பு நீட்டம். பேச்சு வழக்கில் மாந்தர் என்பது மானிதர்/ மனிதர்> மானிசர்/மனிசர் ஆகி, வடக்கே மானிஷராகி, மீளக் கடன்வாங்கி , மானுடர் என ஆக்கியுள்ளோம். மண்ணில் நிலைத்த மாந்தர் எல்லோரும் மண்ணோர் எனக் குறிக்கப் பெற்றார்.

இனி மன்பதை, பைஞ்ஞீல், மாந்தப் பரப்பு என்பவற்றைப் பார்ப்போம். இவையே இத்தொடரின் அடிச் சொற்கள்.

அன்புடன்,
இராம.கி,

Friday, April 03, 2020

25 Virology terms

https://www.msn.com/en-in/health/in-depth/25-virology-terms-to-help-you-understand-outbreaks/ss-BB1230HK?ocid=msedgdhp
Bacteriophage = பட்டுயிரிவகுப்பி
Animal virus விலங்கு வெருவி
Capsid = கொப்பரை
Viral envelope = வெருவியின் மூடிவலைப்பு
Endocytosis = செல்லுள் கரைதல்
Viral Latency = வெருவி ஆழ்வு
Zoonosis விலங்கு-மாந்தரிடை பரவும் இயல்பு
Direct contact நேரடிக் கணுக்கம்
Droplet spread = துளிவழிப் பரவல்
Airborne transmission = காற்று மிதப்பில் மிடைப்பெயர்வு
Community transmission = குமுன மிடைப்பெயர்வு
R0 (reproductive rate) = இனப்பெருக்க வீதம்
Epidemic = தொற்றுத் தேக்கம்
Pandemic = உலகளாவிய தொற்றுத் தேக்கம்
Antiviral drug = வெருவியெதிர் மருந்து
Vaccine = தடுப்பு மருந்து
Common cold சாத்தாரச் சளி
Corona virus சூடணி வெருவி
SARS-CoV-2 = தீ.அ.சீ.சே-2 (தீவிர அஃகுறு சீவயீரல் சேர்ந்தம் / Severe Acute Respiratory Syndrome)
Isolation = தனித்திருப்பு
Social Distancing = பூதிக இடைவெளி காத்தல்
Quarantine = நாற்பதிகை
Herd Immunity = மந்தை இகலி
spike glycoprotein களிக்கணப் பெருத ஈட்டி
RNA and N protein அரப நெற்றுக்காடியும் (RNA) N பெருதமும் Envelope = வலைமூடி Hemagglutinin-esterase dimer (HE) உதிரக்கொளுவ அத்திநொதி இருமம் Hemagglutinin or haemagglutinin (British English; both /ˌhɛməˈɡluːtɪnɪn/) refers to glycoproteins which cause red blood cells (RBCs) to agglutinate or clump together. (Note that agglutination is one of three steps in the more complex process of coagulation).
அன்புடன்,
இராம.கி.

Thursday, April 02, 2020

கிறுமி

எங்கு பார்த்தாலும் இப்போது கிருமி/கிரிமி என்றே எழுதுகிறார். அது பட்டுயிரியா (bacteria), ஒட்டுண்ணியா (helminth), காளானா (fungus), வெருவியா (virus) என எந்த வேறுபாட்டையும் செய்தியில் சொல்வதில்லை. எந்தத் தொற்றாய் இருந்தாலும் அதைக் கிருமி என்றே எழுதுகிறார்.  கேட்டால் சங்கதச் சொல் என்பார். ”ஆமாம் சங்கதம் என்றால் ரொம்ப ஒசத்தியில்ல?” கிருமி வந்துவிட்டால், நோயை விளக்கிய மாதிரியும் இருக்கும். கொஞ்சம் படிக்கறவரைப் பயமுறுத்திய மாதிரியும் இருக்கும். கூடவே அரக்கன், பூதம் போல் கொடுவாய்ப் பல், கொம்பு, தழையாடை எல்லாம் போட்டு ஒரு கோட்டுப்படம் இட்டுவிட்டால் செய்தியாளர் சொல்வது முழுமையாகிவிடும். காலங்காலமாய் இப்படித்தான் நாளிதழ்களில் எழுதுகிறார்.  ஏம்ப்பா, உண்மையிலேயே அது சங்கதமா? - என்று யாராச்சும் கேள்வி கேட்டீங்களா? அதன் சரியான வடிவமென்ன?

சங்கதத்தில் இதன் பொருள் என்ன தெரியுமோ?  कृमि m. kRmi - spider, कृमि m. kRmi - ant, कृमि.  m. kRmi - insect, कृमि m. kRmi - lac, कृमि  m. kRmi - worm, कृमि m. kRmi - shield-louse, कृमि m. kRmi - silk-worm, क्रिमि  m. krimi - insect, क्रिमि m. krimi - worm, कृमिन् adj. kRmin - affected with worms, कृमिन्  m. kRmin - worm. ஆகச் சிலந்தி, எறும்பு, சிதலை, கறையான், பூச்சி, புழு,  பேன், பட்டுப்புழு இப்படி எல்லாவற்றையும் ஒரு காலத்தில் கிருமியெனச் சொல்லியுள்ளார்.  இங்கு சொன்ன பூச்சிகளில் பெரும்பாலானவை புழு உருவத்தில் தொடங்கிப் பின் குறிப்பிட்ட காலத்தில் பூச்சியாய் உருமாற்றிக் கொள்ளும்  ”ஏதெல்லாம் நகருமோ, அதெல்லாம் கிருமி (meaning of krimi as that which moves or roams about) எனவும் சங்கத நூல்களில் விளக்கஞ் சொல்வார். 

அமரகோசத்தில்,  Krimi is derived from “Kram + en” which denotes Kshudra-jantu and in differentiation of Rogas. It means those which are capable to break or injure the surroundings என்று சொல்வார் . kṣudra = குறு. jantu = animal, உயிரி. ஆகக் குற்றுயிரி என்பது அமர கோசத்தில் கிருமியின் மொழிபெயர்ப்பு. ”சுற்றுச் சூழ்நிலை உடைத்துக் கெடுதல் உண்டாக்கும்” என மேலும் வரையறை சொல்வார். நோய்வருவதை, இவ்விளக்கம் பொருந்தப் புகலும். ஆயுள்வேத வழி, எல்லாப் புழுக்களும் (worms), நூகுயிரிகளும் (microbes) கிருமி எனப்படும். கிருமி, கிருமிரோகம் என நூகுயிரி, தொற்று நோய்கள் பற்றி வேதம் சொன்னதாம். ( நான் எதிலென்று நேரே படித்ததில்லை.) சொற்பிறப்பியலின் படி, துயரம், சுகவீனத்தைக் கிருமிகள் கொணருமாம். ”கிருமி”க்குள் இவ்விளக்கம் எங்குவந்தது? தெரிய வில்லை. இதுவும் சுற்றி வளைத்த புரிதலே.
 .
பாணினிக்கும் முந்தைய யாஷ்காவின் நிருக்தத்திலோ,  The word Krimi is derived from dhatu ‘Kujna Himsayam’ (sidhanta kaumudi) which means to kill or to yield harmful effect. Acharya Yashka has given the meaning of Krimi in the following way. 1. Which means those organisms which grow on raw flesh 2. That which moves with legs - என்றும் சொல்வர். இதுவும் படியாற்றம் (application) பொருத்திய வரையறையே.

9/10 ஆம் நூற்றாண்டுத் திவாகரத்தில், 623 ஆம் நூற்பாவில், “கிருமியும் கீடமும் புழுவின் பெயரே” என வரும். ஆகத் தமிழிலும் சங்கதத்திலும் புழுவே கிருமிச் சிந்தனையின் தொடக்கம்போலும். துளைத்தல் கருத்தின்வழி ”புழு” என்ற சொல் கிளைக்கும்.  புல்> புள்> புழு = துளைத்தழிக்கும் குற்றுயிரி. குள்+து = குற்று. குள்> கிள்> கீள்> கீழ்> கீழம்> கீடம்.  இப்படித்தான் இரண்டாம் சொல் எழுந்தது. ஞாவகம் இருக்கிறதோ? நம்மூர் சோழ மண்டலம் தெலுங்கில் சோட மண்டல என்றாகும். இன்னும் சற்று வடக்கே ஒடியா, வங்காளம் போனால் சோர மண்டல் ஆகும். ஆங்கிலேயன் கோர மண்டல் என்று சொல்லி விடுவான். ழ> ட> ர என்ற மாற்றம் கிட்டத்தட்ட ஓர் ஒழுங்கில் நடை பெறுவதாகும். 

ஆங்கிலத்தில் புழுவைக் குறிக்கும் சொல்லான worm (n.) என்பதற்கு, Old English wurm, variant of wyrm "serpent, snake, dragon, reptile," also in later Old English "earthworm," from Proto-Germanic *wurmiz (source also of Old Saxon, Old High German, German wurm, Old Frisian and Dutch worm, Old Norse ormr, Gothic waurms "serpent, worm"), from PIE *wrmi- "worm" (source also of Greek rhomos, Latin vermis "worm," Old Russian vermie "insects," Lithuanian varmas "insect, gnat"), from PIE *wrmi- "worm," from root *wer- (2) "to turn, bend." என்று சற்று வேறுபட்டு வரையறை சொல்வர். நான் மாறு படுவேன்,  உழுது கொண்டே உட்செல்லும் துளைத்தல் பொருளே worm இக்கும் சரிவரும். ஆனால் மேலையர் ஏனோ அப்படிச் சொல்லவில்லை.

குத்தல், குழித்தல், கீறல், கிண்டல் பொறித்தல், அறுத்தல், பிளத்தல், வெடித்தல், விரிதல், பிரிதல், விடுத்தல், பகுதல், தோண்டல் என்று துளைத்தல் கருத்து சிச்சிறிதாய் விரிந்து போகும். ஆயிரக்கணக்கான சொற்கள் துளைத்தல் பொருளில் உருவாயின. அதில் முதல் வேர்ச்சொல் குல். குல்> குள் என்பது குத்தலுக்கு வழிவகுக்கும். குள், குழித்தலின் பின் கிள்ளலுக்கும் வழி வகுக்கும். கிள்>கீள்>கீழ்>கீழ்-தல் என்பது கிழித்தல், பிளத்தலைக் குறிக்கும். கிழித்தலும் கிள்ளின் வழி எழுந்ததே. கிள்> கிடு> கெடு> கெடு-தல் = சிதைந்து போதல். கிடு>கிடி = கோரைப் பற்களால் மண்ணைக் கீறித் தோண்டும் பன்றி. கிடிகி = பல கண்களாய்த் தோண்டப் பட்ட பலகணி.  கிடிவம் = மரந்துளைக்கும் பறவை. wood-pecker. கிடியம் = பன்றி நெய். கிள்> கிடு> கிறு> கீறு> கீறு-அல் என்பதும் புழுக்கள் பண்ணும் செயல் தாம். சில புழுக்கள்  உடலைக் கீறிக் கெடுக்கவும் செய்யும். கிள்>கிடு>கெடு.

தரு-தல், தருமு-தல் போல், பரு-தல், பருமு-தல், சிறு-தல் சிறு-முதல் போல். (இன்னும் பல்வேறு நீட்சிகள் போல்) கிறு-தல், கிறுமு-தல் என்றும் பேச்சு வழக்கில் திரியலாம். உம்மைப் பொருள் அதற்கு இடங்கொடுக்கும். கிறுமு->கிறுமி என்பது வேறு ஒன்றுமில்லை. கிறுமும் வேலை செய்யும் உயிரி.  கீடம் என்ற சொல்லைத் திவாகரத்தில் நான் காணவில்லையானால், எனக்குள் பொறி தட்டியே இருக்காது. ஆகக் கடைசியில் நம்மூராளு தான். கிறுமி> கிடுமி> கிருமி = புழு என்று வடக்கே பரவியிருக்கிறது. வடக்கே றகரமில்லை. அதனால் டகரமாக்கிப் பின் ரகரமாக்கி விட்டார். அது புரியாமல் கிருமியை நாம் மீண்டுங் கடன் வாங்கியிருக்கிறோம். அடக் கடவுளே! இதற்குப் பேசாமல் நாம் உய்த்தறிந்த நம்மூர்க் கிறுமியை வைத்துக் கொள்ளலாமே? எப்பொழுது பார்த்தாலும் இப்படி ஒரு மடத்தனமா? நம்ம புள்ளையையே நமக்கு அடையாளம் தெரியலையே?

வெருவித் தொற்று காலத்தில் கவனமாய் வீட்டினுள் இருங்கள்

அன்புடன்,
இராம.கி.

Wednesday, April 01, 2020

Fuel and Combustion

fuel என்பதற்கு இந்தனமென்ற சொல்லைச் சிலர் பரிந்துரைத்தார். இது புதுச்சொல் அன்று. விறகிற்கு இந்தனம், முருடு, கட்டை, கறல், சமிதை, காட்டம், ஞெகிழி, முளரி என்ற சொற்களை பல்வேறு நிகண்டுகள் காட்டும். இதில் எதை வேண்டுமெனினும் பயனுறுத்தலாம். அதைவிட எரியை யொட்டிய எரிகி என்ற சொல்லை நான் பயனுறுத்துவேன். எரிதல் என்பது தன்வினை வழிவந்த தொழிற்பெயர். எரித்தல் = பிறவினை வழிவந்த தொழிற்பெயர். எரிவு/எரிகு என்பது தன்வினை வழிவந்த பெயர்ச்சொல் எரிப்பு என்பது பிறவினை வழிவந்த பெயர்ச்சொல். எரிவு. எரிப்பு என்ற இரண்டும் செய்முறையைக் குறிக்கும். இவற்றின் பொதுமையாய் எரிகை என்பது வரும். எரிகுதல் என்பது எரிதலின் நீட்சி. எரிவி/எரிகி என்பது எரிபொருளைக் குறிக்கும். அதாவது எரியெனும் நெருப்பிற்கு அடிப்படை எரிவி/எரிகி. இதை fuel என்று சொல்லாது வேறு எப்படிச் சொல்வோம்?

fuel (n.)
c. 1200, feuel, feul "fuel, material for burning," also figurative, from Old French foaille "fuel for heating," from Medieval Latin legal term focalia "right to demand material for making fire, right of cutting fuel," from classical Latin focalia "brushwood for fuel," from neuter plural of Latin focalis "pertaining to a hearth," from focus "hearth, fireplace" (see focus (n.)). Figurative use from 1570s. Of food, as fuel for the body, 1876. As "combustible liquid for an internal combustion engine" from 1886. A French derivative is fouailler "woodyard." Fuel-oil is from 1882.

”எரிபொருள்” என்பது சொல்லமைப்பில் ”கணிப்பொறி” போன்றது பொறி தொலைத்துக் கணினி என நாம் சொல்லவில்லையா? (இன்னும் அதிகம் போய் ”னி”யையும் தொலைத்துக் “கணி” என்றே சொல்வேன். வினையும் பெயரும் ஒன்றாய்ப் பல சொற்கள் தமிழிலுண்டு.) அதுபோல் எரிபொருளில் வரும் பொருளைத் தொலைத்து எரிவி/எரிகி என்று சொல்லலாம். நான் புரிந்துகொண்டவரை தவறே யில்லை. fuel இலின் சொற்பிறப்பும் அதோடு தொடர்புறும் தமிழ்ச்சொல் பிறப்பும் சொன்னால் என்னை ஏற்க மறுப்போரே மிகுதி. இப்படி மறுப்பு வருவது என் தலைவிதி. இந்தையிரோப்பியத்தையும் தமிழியத்தையும் நான் தொடர்புறுத்தினால் பல தமிழர்க்கும் பிடிப்பதில்லை. ஏதோ செய்யக்கூடாதது செய்வதுபோல் உணர்கிறார். எனவே தவிர்க்கிறேன்.

எரி என்பது பெயர்ச் சொல்லாகாது. எரிகி என அது மாறத்தான் வேண்டும். கொஞ்சம் கூர்ந்துகவனியுங்கள் எரிதலென்பது ஒரு செலுத்தம் (process). அச் செலுத்தத்தின் செய்பொருள் அல்லது கருத்தா (doer கருமத்தைச் செய்பவர்) வேறேதோ ஆகலாம் (பொறி-spark, வேதி-chemical, ஆள்-person என ஏதோ ஒன்று). செலுத்தத்தின் செயப்படு பொருளை (thing on which the process is done) என்பதை எரிகி (fuel) என்கிறோம். எரிதல்/எரித்தல் என்ற 2 வினைகளுக்கும் வினையடி எரி தான். வினைத்தொகையில் இது முன்னொட்டு ஆகும். நாம் செய்யும் கணித்தலில் கணினி செய்பொருள் ஆனதால், ”கணினி” ”கணி”யாயிற்று  (செய்பொருளும் செய்தலும் மயங்கலாம். செயப்படு பொருளும் செய்தலும் மயங்கக் கூடாது.)

இனி combustion க்கு வருவோம். இதை "action or process of burning," early 15c., from Old French combustion (13c.) and directly from Latin combustionem (nominative combustio) "a burning," noun of action from past participle stem of Latin comburere "to burn up, consume," from com-, here probably an intensive prefix (see com-), + *burere, based on a faulty separation of amburere "to burn around," which is properly ambi-urere, from urere "to burn, singe," from PIE root *heus- "to burn" (see ember) என்று www.etymonline.com இல் சொல்வார்.

இதன்பொருள் பற்றி>பத்தி யெரிதல், வெறும் எரிதலல்ல. சுருக்கமாய்ப் பேச்சு வழக்கில் ”பத்திக்கிச்சு” என்கிறோம். நான் இனிச் சொல்வதைப் பலரும் வழக்கம்போல் ஏற்கமாட்டார் பற்றம் என்பதற்கும் bustion என்பதற்கும் தொடர்புள்ளதோ என ஐயப்படுகிறேன். ஏனெனில் burst/bust என்பதையும் ”படாரென வெடித்தது” என்கிறோமே? அந்தப் ”படபட” ஒலிக்குறிப்பு ஏன் வருகிறது? அது வெறும் ஒலி தானா? அல்லது பற்றல் வினையும் அதனுள் இருக்கிறதா? பற்றியெரித்தலையே  தமிழ் இலக்கணப்படி நாம் எரித்தல்/எரிப்பு என்கிறோம். எனவே combustion க்கு இணையாக எரிதல் என்ற தன் வினை வாராது. எரித்தல் என்ற பிறவினையே வரும். உள்ளக எரிப்பு எந்திரத்தில் (internal combustion engine) பொறி (spark) எரிகியை (fuel) எரிக்கிறது.

combust = எரி-த்தல்
combustible = எரிபடக்கூடியது

fracking

fracking long with frack (v.), by 2000 in engineering jargon, short for hydraulic fracturing and with a -k- to keep the -c- hard என்பதற்குத் தமிழாக்கத்தை ஒரு நண்பர் கேட்டிருந்தார். இதுதான் பழைய தஞ்சை சார்ந்த நாலைந்து மாவட்டங்களில் இருக்கும் பாறைநெய் (petroleum), எரிவளி (fuel gas) போன்றவற்றை எடுப்பதற்காக பயன்படுத்தப் படவிருந்த முறையாகும். இம்முறை பயன்பட்டிருந்தால், அம்மாவட்டங்களில் இருந்த எல்லா நிலத்தடி நீரையும் உறிஞ்சி பின் வேதிக் கரைசலை அதிக அழுத்தத்துடன் மண்ணுக்குக் கீழ் அனுப்பி அங்குள்ள பாறைகளை உடைத்து எரிவளி, பாறைநெய் எடுக்கமுயன்றிருப்பார். இந்த மாவட்டங்கள் 10 ஏ ஆண்டுகளில் பாலைவனமாய் மாறியிருக்கும். நல்ல வேளையாய் இப்போது தமிழக அரசு இம்முயற்சியை நிறுத்திக் கொள்வதாய் அறிவித்துவிட்டது மீண்டும் நடுவணரசின் அழுத்தத்தில் மாறிப்போகலாம். நம்மை சின்னாப் பின்னாக்கப் பயன்பட இருந்த முறையின் பெயர் தான்   fracking. அதன் தமிழாக்கத்தைத் தான் இங்கு தருகிறேன்.   

.

பொதுவாகத் தமிழாக்கம் செய்யும்போது வெறுமே ஓர் ஒற்றைச்சொல்லை மட்டும் பார்ப்பது சரியில்லை. (ஒற்றைச் சொல்லை மட்டுமே பார்த்துத் தமிழாக்கஞ் செய்வதால் பல பொதுச் சொற்கள் அந்தந்த விதப்புத் துறைக்குள் தனியே பாத்தி கட்டப்பட்டுப் பொதுமையின்றிப் போயின. வருத்தப்படத் தக்க இச்சிக்கலைச் சொல்லாக்கர் உணரவேண்டும்.) தொடர்புள்ள எல்லாச் சொற்களையும் ஒருங்கே பட்டியலிட்டு அதனுள் பொதிந்திருக்கும் வினை வேர்ச்சொல்லை தேடவேண்டும். (தமிழிற் பெரும்பாலும் வினைச்சொற்களே பெயர்ச்சொற்களுக்கு அடிப்படை. பெயர்ச்சொல்லிலிருந்து வினைச்சொல் அமைவது மிகவுங் குறைவே.) அதைப் பிடித்த பின்னால், தொடர்புள்ள எல்லாச் சொற்களுக்கும் கருவி, கருத்தா, கருமப் பொருள், கருமம் ஆகியவற்றைப் பார்த்துச் சொல்லாக்கம் முயலலாம். தமிழில் தன்வினை, பிறவினை பார்ப்பதும் தேவையான வொன்று. இச்சொற்றொகுதிக்கு வருவோம்.

fraction பாகம், (இதைப் பின்னமென்றுங் குறிப்பார். பில்>பில்நம்> பின்னம்.) பகுதல் தன்வினை. அதன் பிறவினை பகுத்தல். (கால்பாகம், அரைப் பாகம் எனும்போது பாகத்தின் வழி fraction என்றே பொருள் கொள்கிறோம். நம் பாகமும் மேலையரின் fraction உம் தொடர்பு கொண்டவை. இப்படியெலாம் தொடர்பு காட்டுவதாலேயே இராம.கி.க்குப் பொல்லாப்பு.) இதற்கு மாற்றுச் சொற்களாய், நுணுகிய வேறுபாடுகளோடு வகுத்தல், (to divide), பிளத்தல் (to part), உடைத்தல் (to break), பிரித்தல் (to separate), வெட்டுதல் (to cut), தெறித்தல் (to break suddenly), பொளித்தல் (to break by piercing, போழ்தல் (to pierce), பிதிர்த்தல் (to break by plucking), விள்ளுதல் (to break by pinching) என்று பல சொற்களுண்டு. துல்லியங் கருதிப் பகுத்தலை இங்கு கையாள்கிறேன். 

fractional பாகமான, fractionally பாகமாய், fractious பகுபடும் , fracture பகுப்பு, fracturing பகுமுறை, fragile பகுந்துவிடும் , fragment பகுமம், fragmentary பகுமுறு, fragmentation பகும முறை, fractal பகுவல் [2004 இல் "இன்னுங் கொஞ்சமாய் எனமனக் கசகில்” என்ற பாவை திண்ணையில் வெளியிட்டேன். அதில் இந்தச் சொல்லை ஆக்கிப் பயின்றேன். http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=304011512&edition_id=20040115&format=html. பத்தாண்டுகள் கழித்து என் வளவு வலைத்தளத்திலும் சேமிக்கும் முகத்தான் இட்டு வைத்தேன்.. http://valavu.blogspot.in/2014/09/blog-post.html)

பகுவலின் விளக்கம்:
"never-ending pattern," 1975, from French fractal, from Latin fractus "interrupted, irregular," literally "broken," past participle of frangere "to break" (see fraction). Coined by French mathematician Benoit Mandelbrot (1924-2010) in "Les Objets Fractals." Many important spatial patterns of Nature are either irregular or fragmented to such an extreme degree that ... classical geometry ... is hardly of any help in describing their form. ... I hope to show that it is possible in many cases to remedy this absence of geometric representation by using a family of shapes I propose to call fractals -- or fractal sets. [Mandelbrot, "Fractals," 1977]

(hydraulic) fracking = (நீர்ப்பாய்ச்சுப்) பகுமுறை இன்னுங் கொஞ்சம் அழுத்தங் கொடுக்க வேண்டுமென்றால் (நீர்ப்பாய்ச்சுப்) பகுவெடிப்பு என்றுஞ் சொல்லலாம்.

அன்புடன்,
இராம.கி.