Wednesday, April 01, 2020

Fuel and Combustion

fuel என்பதற்கு இந்தனமென்ற சொல்லைச் சிலர் பரிந்துரைத்தார். இது புதுச்சொல் அன்று. விறகிற்கு இந்தனம், முருடு, கட்டை, கறல், சமிதை, காட்டம், ஞெகிழி, முளரி என்ற சொற்களை பல்வேறு நிகண்டுகள் காட்டும். இதில் எதை வேண்டுமெனினும் பயனுறுத்தலாம். அதைவிட எரியை யொட்டிய எரிகி என்ற சொல்லை நான் பயனுறுத்துவேன். எரிதல் என்பது தன்வினை வழிவந்த தொழிற்பெயர். எரித்தல் = பிறவினை வழிவந்த தொழிற்பெயர். எரிவு/எரிகு என்பது தன்வினை வழிவந்த பெயர்ச்சொல் எரிப்பு என்பது பிறவினை வழிவந்த பெயர்ச்சொல். எரிவு. எரிப்பு என்ற இரண்டும் செய்முறையைக் குறிக்கும். இவற்றின் பொதுமையாய் எரிகை என்பது வரும். எரிகுதல் என்பது எரிதலின் நீட்சி. எரிவி/எரிகி என்பது எரிபொருளைக் குறிக்கும். அதாவது எரியெனும் நெருப்பிற்கு அடிப்படை எரிவி/எரிகி. இதை fuel என்று சொல்லாது வேறு எப்படிச் சொல்வோம்?

fuel (n.)
c. 1200, feuel, feul "fuel, material for burning," also figurative, from Old French foaille "fuel for heating," from Medieval Latin legal term focalia "right to demand material for making fire, right of cutting fuel," from classical Latin focalia "brushwood for fuel," from neuter plural of Latin focalis "pertaining to a hearth," from focus "hearth, fireplace" (see focus (n.)). Figurative use from 1570s. Of food, as fuel for the body, 1876. As "combustible liquid for an internal combustion engine" from 1886. A French derivative is fouailler "woodyard." Fuel-oil is from 1882.

”எரிபொருள்” என்பது சொல்லமைப்பில் ”கணிப்பொறி” போன்றது பொறி தொலைத்துக் கணினி என நாம் சொல்லவில்லையா? (இன்னும் அதிகம் போய் ”னி”யையும் தொலைத்துக் “கணி” என்றே சொல்வேன். வினையும் பெயரும் ஒன்றாய்ப் பல சொற்கள் தமிழிலுண்டு.) அதுபோல் எரிபொருளில் வரும் பொருளைத் தொலைத்து எரிவி/எரிகி என்று சொல்லலாம். நான் புரிந்துகொண்டவரை தவறே யில்லை. fuel இலின் சொற்பிறப்பும் அதோடு தொடர்புறும் தமிழ்ச்சொல் பிறப்பும் சொன்னால் என்னை ஏற்க மறுப்போரே மிகுதி. இப்படி மறுப்பு வருவது என் தலைவிதி. இந்தையிரோப்பியத்தையும் தமிழியத்தையும் நான் தொடர்புறுத்தினால் பல தமிழர்க்கும் பிடிப்பதில்லை. ஏதோ செய்யக்கூடாதது செய்வதுபோல் உணர்கிறார். எனவே தவிர்க்கிறேன்.

எரி என்பது பெயர்ச் சொல்லாகாது. எரிகி என அது மாறத்தான் வேண்டும். கொஞ்சம் கூர்ந்துகவனியுங்கள் எரிதலென்பது ஒரு செலுத்தம் (process). அச் செலுத்தத்தின் செய்பொருள் அல்லது கருத்தா (doer கருமத்தைச் செய்பவர்) வேறேதோ ஆகலாம் (பொறி-spark, வேதி-chemical, ஆள்-person என ஏதோ ஒன்று). செலுத்தத்தின் செயப்படு பொருளை (thing on which the process is done) என்பதை எரிகி (fuel) என்கிறோம். எரிதல்/எரித்தல் என்ற 2 வினைகளுக்கும் வினையடி எரி தான். வினைத்தொகையில் இது முன்னொட்டு ஆகும். நாம் செய்யும் கணித்தலில் கணினி செய்பொருள் ஆனதால், ”கணினி” ”கணி”யாயிற்று  (செய்பொருளும் செய்தலும் மயங்கலாம். செயப்படு பொருளும் செய்தலும் மயங்கக் கூடாது.)

இனி combustion க்கு வருவோம். இதை "action or process of burning," early 15c., from Old French combustion (13c.) and directly from Latin combustionem (nominative combustio) "a burning," noun of action from past participle stem of Latin comburere "to burn up, consume," from com-, here probably an intensive prefix (see com-), + *burere, based on a faulty separation of amburere "to burn around," which is properly ambi-urere, from urere "to burn, singe," from PIE root *heus- "to burn" (see ember) என்று www.etymonline.com இல் சொல்வார்.

இதன்பொருள் பற்றி>பத்தி யெரிதல், வெறும் எரிதலல்ல. சுருக்கமாய்ப் பேச்சு வழக்கில் ”பத்திக்கிச்சு” என்கிறோம். நான் இனிச் சொல்வதைப் பலரும் வழக்கம்போல் ஏற்கமாட்டார் பற்றம் என்பதற்கும் bustion என்பதற்கும் தொடர்புள்ளதோ என ஐயப்படுகிறேன். ஏனெனில் burst/bust என்பதையும் ”படாரென வெடித்தது” என்கிறோமே? அந்தப் ”படபட” ஒலிக்குறிப்பு ஏன் வருகிறது? அது வெறும் ஒலி தானா? அல்லது பற்றல் வினையும் அதனுள் இருக்கிறதா? பற்றியெரித்தலையே  தமிழ் இலக்கணப்படி நாம் எரித்தல்/எரிப்பு என்கிறோம். எனவே combustion க்கு இணையாக எரிதல் என்ற தன் வினை வாராது. எரித்தல் என்ற பிறவினையே வரும். உள்ளக எரிப்பு எந்திரத்தில் (internal combustion engine) பொறி (spark) எரிகியை (fuel) எரிக்கிறது.

combust = எரி-த்தல்
combustible = எரிபடக்கூடியது

No comments: