Wednesday, April 01, 2020

Pteris/fern

ஒருமுறை pteris என்பதும் fern என்பதும் ஒரே சொற்பிறப்புக் கொண்டனவா  என்று கேட்கப்பட்டது. அவற்றில் நுணுகிய வேறுபாடுண்டு. ஆங்கிலச் சொற் பிறப்பியல் அகரமுதலிகள் வெறுமே இந்தையிரோப்பிய மொழிகளை மட்டும் பார்த்து, வேரின் ஆழங் காணாததால் தடுமாறுகிறார். முதலில் fern ஐப் பார்ப்போம்.

www.etymonline.com வலைத்தளத்தில் fern (n.) என்பதற்கு Old English fearn "fern," from Proto-Germanic *farno- (source also of Old Saxon farn, Middle Dutch vaern, Dutch varen, Old High German farn, German Farn). Watkins and other sources propose an etymology on the notion of "having feathery fronds" from a possible PIE *por-no- "feather, wing" (source also of Sanskrit parnam "feather, leaf;" Lithuanian papartis "fern;" Russian paporot'; Greek pteris "fern"), a proposed suffixed form of the root *per- (2) "to lead, pass over," on the notion of "that which carries a bird in flight." என்று போட்டிருப்பார்.

அடுத்த கேள்வியாய் இவற்றை எப்படித் தமிழிற் சொல்வது? என்ற கேள்வியும் எழும். fern உம் pteris உம் நம்மோடு தொடர்பு உள்ளவையே. கோடைக்கானல் போம் வழியில் சாலையின் இரு மருங்கும் மீவுயரமான இடங்களில் fern காட்சியளிக்கும்.நம் கண்ணைக் கட்டிப்போட்டிருக்கும் ஒரு குறிப்பிட்ட மாயத்திரையை எடுத்துவிட்டு ஓர்ந்துபார்த்தால், இதன் தமிழ்ச் சொற்கள் புரிந்துவிடும். ஆனால் நாம் தான் நம்மைக் கட்டிப் போட்டிருக்கும் கண் திரையைக் கழட்ட மறுக்கிறோமே?

பல், பல்லாக இருக்குமிலை, தமிழில் பன் எனப்படும். கூர்ந்த பல்கொண்ட விலங்கு பன்றி. பன்னம் = கீற்று, இலை, இதைப் பன்னகமென்றுஞ் சொல்வர். தென்னங்கீற்று நினைவிற்கு வருகிறதா? அது ஒரு பன்னம். பனை, ஈச்ச ஓலைகளுங் கூடப் பன்னவகை சேர்ந்தவை தான். பன்ன கண்டம் = ஓலைக் கீற்றுகள் இலைகளாயுள்ள பனை, ஈச்சம், தென்னை போன்ற மரங்கள். பன்னகந்தி = கருவேம்பு; வேம்பின் இலையோரம் பல் பல்லாக இருப்பதால் வந்த பெயர். fern = பன்னம் இக் கேள்வியில் விதப்புப் பொருள் கொள்ள வேண்டும். ”மரகதப் பன்னத் தாம்பல்” என்பது கல்லாடம் 53,28. இலையெனும் பொதுப் பொருளில் இது வந்தது. இதே பொருளில் பன்னகாசனன் என்ற இரு பிறப்பிச் சொல் பிறக்கும். ஆலிலை மேல் படுத்துக்கிடக்கும் திருமாலை அச் சொல் குறிக்கும்.

நம்மூரில் வெற்றிலையையும் பன்னமென்பர். வெற்றிலைக் கொடி ஒரு கீற்றுப் போலவும், அதிலுள்ள இலைகள் கீற்றில் தொங்கும் இழைகள் போலவும் தோற்றங் காட்டுவதால் இப்பெயர் வந்தது. பன்னச் சத்தகம் = ஓலை பின்னுவோரின் கையரிவாள்; பன்னரி வாள் = கருக்கரி வாள். பன்னம் என்ற சொல்லின் பொருள் நீட்சியுற்று ஓலை முடைதலும் பன்னத் தொழில் எனப் பட்டது. பன்னக சாலை = கீற்றால் முடையப்பட்ட குடில். காட்டில் முனிவர் வாழ்தற்கும் இது பயன்பட்டது. இதைப் பர்ண சாலை என்று சங்கதம் பெருமிதமாய்ச் சொல்லிக் கொள்ளும். (மேலுள்ள etymonline வரையறையைத் திரும்பப் படியுங்கள்.) நம்மூர் பன்னம் தான் சங்கதத்தில் பர்ணமானது. (பர்ணத்துள் அடங்கியுள்ள பல்லின் தோற்றங் காண, வேரைக் காண, இந்தையிரோப்பிய மொழிகளுள் தேட வேண்டும்.)

இனி pterisக்கு வருவோம். இச்சொல்வளர்ச்சி சற்று வேறுபட்டது. சங்கதத்தில் பத்ர எனப்படும். பர்ணவோடு தொடர்பில்லாதது. பத்ரவிற்குத் தொடர்புடைய தமிழ்ச்சொல் என்ன? நம் கண்ணைத் திறந்து பார்த்தால் இதுவும் எளிது. முப்பரிமான உயரம் மீக் குறைந்து இரு பரிமான நீளமும், அகலமும் கொண்ட வற்றை தட்டை, பட்டை, மட்டை என்றழைக்கிறோம். (இவை தள், பள், மள் போன்ற வேர்களில் உருவான சொற்கள்.) இவை எல்லாவற்றிலும் மூன்றாம் பரிமானம் இல்லாதது போலவே நடைமுறையில் கொள்வர். பரப்பு இவற்றிற்கு முகன்மை யானது.

தள்+து என்பது தட்டாகும். ’தட்டு’ நீண்டு இகர ஈற்றைக் கூட்டித் தட்டியாகும். தட்டிற் பெரியது தட்டம் = தட்டையான ’பாத்திரம்’. (சாப்பிடும் தட்டு, தட்டம்) தள்கியது தகடாகும். ஒரு தட்டை நெட்டங்குத்தாக வைக்கும்பொழுது தடுத்தலை உணர்வோம். தடுப்பது தடை. ’தடு’விலிருந்து தடுக்கு என்ற சொல் உருவாகும். நெட்டங்குத்தில் இது தடை, கிடைமட்டத்தில் சிறு தட்டி போன்ற பாய். (சிவகங்கைப் பக்கம் கீழே உட்காரத் தடுக்குப் போடுவார்.) ’தள்’ திரிந்து தட்டைப் பொருளில் தழு* என்பது உருவாகும். தழு*>தழை. ’இலை தழை’ என்கிறோமே, நினைவிற்கு வருகிறதா? நீளங் கூடிய அதே பொழுது அகலங் குறைந்த இரு பரிமான இலை தழையாகும். தழையின் நீட்சி தாழை. நெய்தல் நிலத்துத் தாவரம். தாழை மடல் நீளமாய், பட்டையாய், படுத்தாற்போல் இருக்கும். பட்டை மடல்கள் பல தாவரங்களுக்கு உண்டு. தள் நீண்டு தாள் என்று அமையும். நெல்லின் தாள், புல்லின் தாள், கரும்பின் தாள் என்று பல்வேறு தாவரங்களில் தாளுண்டு. எல்லாமே தட்டைப் பொருள் தான். (இவ்விழையில் மட்டம், மடல் போன்ற மகரச் சொற்களை நான் பேசவில்லை.)

இதே போல் பள் எனும் வேரில், பள்+து = பட்டு>பட்டம் = பட்டையான தகடு என்ற சொல் எழும். (பட்டு>படு>படி = அடியில் தாங்குதல். இதிலெழுந்த சொற்கள் பல. அவற்றை இங்கு பேச வில்லை.) பட்டை = அகலங் குறைந்து இரு பரிமானமாய் இருக்கும் பொருள், வாழைப் பட்டை, மரப் பட்டை, பொற் சரிகைப் பட்டை, கழுத்துப் பட்டை, பனைப் பட்டை போன்றவற்றை நினைவு கொள்ளலாம். வண்டிச்சக்கரத்தின் மேற்பொருத்தும் வண்டிப்பட்டையும் இதைச் சேர்ந்ததுதான். இரும்பைச் சூடாக்கி சுத்தியலால் அடித்துப் பட்டை யாக்குமிடம் பட்டடை/ பட்டறை. பட்டிப் படிய வைத்தது பட்டயம். மாழை ஏடு, தகடு, செப்பேடு போன்றவை பட்டயங்களாகும். பட்டம் நீண்டு பாட்டமும் ஆகும், (பாட்டம் சங்கதத்தில் பாத்ரமாகும்.) பாடான அரம் பாடரம் (தட்டை யரம்). பாடவரை என்ற சொல் வாளவரையைக் குறிக்கும். (”பாடவரங்காய் பறிக்க வாரோம்” என்றோர் நாட்டுப்புறப்பாடல் எழும்.) பட்டிகை என்பது தாழைக்கு இன்னொரு பெயர். தவிர, ஏடு, அரையில் பட்டையாய்க் கட்டும் கச்சை, மேகலை, முலைக் கச்சு, அரச பத்திரம், தோளில் போட்டுக் கொள்ளும் ஓகப் பட்டி (இக்காலத்தில் மடித்துப் பட்டையாய்த் தோளிற் போட்டுக் கொள்ளும் துண்டு) போன்றவற்றையும் இச்சொல் குறிக்கும். ஊர்ப் பெரியமனிதன் எனில் பட்டிகை போடாது இருக்கார்.

பட்டோலை= பட்டையாய் இருக்கும் ஒலை; எழுத்தாணியால் கீறிச் சுவடியில் சேர்க்கும் ஆவணம். டகரம் ஊடுவரும் தமிழ்ச்சொற்கள் ஒலிமாறி றகரமோ, தகரமோ எடுப்பது பல சொற்களில் உண்டு,. இச்சொல்லிலும் அது நடந்துள்ளது. பட்டை> பற்றை> பத்தை = தட்டையானது. பட்டம்> பத்தம்> பத்ரம் என்றாவது சங்கத இயல்பு. பத்ரம் சங்கதத்தில் விதப்புப் பொருள் கொள்ளாது பொதுமைப் பொருளே கொள்ளும். தமிழிலோ பட்டிகை, விதப்பாக நெய்தல் தாழையைக் குறிக்கும். எம்மொழியிலும் விதப்புப் பயன்பாட்டிலிருந்தே பொதுப்பயன்பாட்டிற்கு சொற்கள் வரும். (நெய் முதலில் விதப்புப் பயன்பாடு, பின் அது பொதுப் பொருளுக்கு வந்தது. எள்நெய்>எண்ணெய் என்பது விதப்புப் பயன்பாடு கடலை எண்ணையில் வரும் எண்ணெய் பொதுப் பயன்பாடு.) எம்மொழியில் விதப்பும் பொதுமையும் உண்டோ, அதுவே பெரும்பாலும் சொல் தோற்றுவித்ததாய் அமையும். பத்ரம் என்பதற்குச் சங்கதத்தில் தாழைப்பொருள் கிடையாது. 

பட்டத்தில் எழுதப் படுவது படம். பட்டம்>படம் = பட்டையான, பரந்த, தாள், ஓலை, மடல், துணியில் எழுதப்படும் ஓவியம். படாம் = துணி, துணிக்கச்சு, யானையின் முகப்படாம்; படாத்தின் நீட்சி படாகை>பதாகை = பெருங்கொடி. இதிலும் ஓவியம் வரைந்திருக்கும். இன்றைக்குப் பல்வேறு போராட்டங்களில் பதாகைகள் வைக்கப் படுகின்றன. படம்>படகம் = திரைச்சீலை, படமாடம். தட்டையான பொருள் படர்ந்து பரவும். படல் = தாள். அடைப்பு வகை, மறைப்புத் தட்டி, பூந்தடுக்கு, நெல்தாள் என்பதே வைக்கோல் எனப்படுகிறது. படல்+பு = படப்பு = வைக்கோற் போர். படப்பை = வைக்கோற் போர் உள்ள தோட்டப் பகுதி. படல்தல்>படர்தல் = பரவல். படல்>படலம்>பரப்பு = இயலினும் பரந்த நூற்பகுதி, திரைபோற் கண்ணிற் படரும் சதை.

படல்>படலம் = மறைப்புத் தட்டி, அடைப்பு. படல்>படலி = வீட்டின் மேற்கூரை (தாள்களால் மேற்கூரை வேய்வது நாட்டுப்புற வழக்கம்.) தடுப்பிற்கும் தாள்களைப் பயன்படுத்திப் பின்னுவது உண்டு. அதைப் படலை>பதலை என்றழைப்பர். படலை = படர்கை, பரந்த இடம், தாழை, பூவும் தழையும் விரவித் தொடுத்த மாலை. (குறித்துக் கொள்ளுங்கள் தாழைக்குப் படலை என்ற சொல்லும் உண்டு.) பதலை என்பது பின்னாளில் இரு பரிமானமாய்த் தோற்றும் தோலுக்கும் ஆனது. பதலையைக் கட்டி வாயகன்ற பறை உருவாக்கப்பட்டது. பதலையின் metathesis தபலை. இதன் வளர்ச்சி வட புலத்தில் தபலா என்றாகும்.

இத்தனை செய்திகளையும் நாம் ஏதோ கற்பனையில் சொல்ல வில்லை. தமிழென்றால் கற்பனை என்பதே பலருக்கு வழக்கமாய் உள்ளது. fern உம் pteris உம் நம்மோடு தொடர்பு உள்ளவை தான். கோடைக்கானல் போம் வழியில் சாலையின் இருமருங்கும் மீவுயர இடங்களில் fern காட்சியளிக்கும். சட்டென்று பார்த்தால் pteris என்பதற்கு பட்டம் என்ற சொல்லை இணையாய்ச் சொல்ல முடியும் தான். ஆனால், விவரந் தெரியாதோர் உடனே பத்ரமே பட்டமாகியது என்று தலைகீழாய்ச் சொல்லிவிடுவர். இதைச் சரிசெய்ய அப்புறம் மீண்டும் ஒரு நீண்ட கட்டுரை எழுத வேண்டியது ஆகிவிடும். எனவே நான் பரிந்துரைப்பது படலை. glossapteris என்பதற்கு நாவுப்படலை என்று சொல்வேன்..

முடிவாக ஒன்று. தமிழிய மொழிகளுக்கும், இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் உறுதியாக முந்தையத் தொடர்புண்டு. விடாது நானிதைச் சொன்னாலும் கேட்பதற்கு யாரையுங் காணோம். (மறுபடியும் ஆங்கில ஒலிப்பிற்குத் தக்கச் சொற்களைப் படைக்கிறாரென இராம.கியை இளக்காரம் பேசுவோர்,. கூடவே கல்லாட ஆசிரியரையும், நம்மூர் வேளாண் காரரையும் இளக்காரம் பேசுங்கள்.) இவ்வுறவைப் பேசாத ஜோன்சும், மாக்சு முல்லருமே பலருக்குப் பெரிதாய்த் தெரிகிறார். ”இது போன்ற மேலையர் சொல்வதே வேதவாக்கு. இந்தாலஜியே பெரியது?!  தமிழாலஜி சிறியது; இந்தையிரோப்பிய மொழிகளுக்கு இணையாகத் தமிழை நிறுத்துவதா? Nostratic பற்றிப் பேசுவதா? எனன அவச்சாரம், மடத் தனம்? தள்ளு, தள்ளு, ஐருகண்டி, ஜருகண்டி!!!” என்று கண்ணை மூடிக் கொள்பவரை நான் என்ன செய்யமுடியும்?

அன்புடன்,
இராம.கி.
   



No comments: