”உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும் கல்லார் அறிவிலாதார்” எனும் போதும், ”உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு” எனும் போதும் உலகமெனும் அஃறினைப் பெயர் உயர்திணை மாந்தர்க்கு ஆகுபெயர் ஆகும். அதுபோல் மான்பதை> மன்பதை என்பது மாந்தரின் இடங் குறிக்கும். பற்று> பட்டு> பத்து> பது என்பது தங்கும் இடத்தைக் குறிக்கும். (செங்கழுநீர்ப் பற்று> செங்கற்பட்டு) பதுவின் நீட்சி பதி. பதி-தல்= தங்கு-அல். பல ஊர்கள் பதியில் முடியும். பது> பதை என்றுமாகும். ஐந்திணையிலும் மக்கள் வாழ்ந்த பின் எழுந்த சொல் பதையாகும். இதே கருத்தில் ”ஐந்திணையும்” எழுந்தது. ”நடுவண் ஐந்திணை நடுவணது ஒழிய”- பொருள். அகத்:2/2. ஐந்திணை = உலகம். கைக்கிளை முதலா பெருந்திணை வரைக்குள், ”குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல்” என்பவை நடுவண் ஐந்திணை. இவற்றின் நட்ட நடுவில் பாலை. மற்ற 4 திணைகளுக்கும் தனித்தனியே உரிய நிலமுண்டு. பாலைக்குக் கிடையாது.
முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்கு துயர்உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்
எனும் சிலம்பு காடுகாண் காதை 64-66 ஆம் அடிகள், பாலைக்கு இலக்கணஞ் சொல்லும். ஐந்திணை என்பது மாந்தர்வாழ் நிலத்தை, மாந்தருக்கு ஆகுபெயர் ஆக்கியதாகும். ”அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்”- என்பது பொருள். கள:1/2. “மக்கள் நுதலிய அகன் ஐந்திணையும்” என்பது பொருள். அகத்:54/1. தொல்காப்பியக் காலத்தில் மட்டும் ஐந்திணை எனும் சொல்லாட்சியில்லை. பதினெண் கீழ்க்கணக்குக் காலம் வரை அது பயின்றுள்ளது. பதினெண் கீழ்க் கணக்கு வரிசையில் ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணை மாலை நூற்றைம்பது என்பன சில நூல்கள். இவற்றிலும் ஐந்திணை என்பது மாந்தர்வாழ் நிலத்தைக் குறிப்பதே.
சங்க இலக்கியங்களில் புலமென்ற சொல் நிலம், இடம், வயல், விலங்குகள், மக்களெனப் பெருங்காட்டுகளிலும் புலன்/sense எனும் பொருளைச் சிறுங் காட்டுகளிலும் குறித்தது. எட்டுத் தொகை, பத்துப்பாட்டில் 116 காட்டுகளில் ”புலம்” பயிலும். விதப்பாய், “ஆ புலம், உடை புலம், கடி புலம், கண் புலம், குட புலம், குண புலம், செல்லல் புலம், செறுநர் புலம், சேண் புலம், தென் புலம், தெவ்வு புலம், தொடு புலம், நேரார் புலம், பகை புலம், பிற புலம், புன் புலம், மழ புலம், முனை புலம், மேய் புலம், மை புலம், வட புலம், வறும் புலம், வன் புலம், வாடு புலம் வித்திடு புலம், வேண்டுபுலம், வேறு புலம்” என்ற கூட்டுச் சொற்கள் பயிலும். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் 10 இடங்களிலும் இதே பொருள்களில் புலம் வரும். ”நன் புலம், புன் புலம், நுழை புலம், தென் புலம், ஐம் புலம்” என்றும் விதப்பாய்ப் பயிலும். ”கண்புலம், விண்புலம், தென்புலம், வேற்றுபுலம், செவிபுலம், பகைபுலம்” என்று சிலம்பு, மேகலையிலும் இதே சொல் பயிலும்.
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான் என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை
என்று திருக்குறள் அறத்துப்பால், இல்லறவியல், இல்வாழ்க்கை 43 ஆம் குறளில் வரும். (இக்கட்டுரைக்கான பொறி இதிற்றான் கிடைத்தது.) எல்லா உரைகாரரும் ”தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான்” எனக் கணக்கிட்டு ஐம்புலத்திற்குப் பொருள் சொல்வர். நான் சற்று வேறுபடுவேன். ஐம்புலம் என்பது மேற்சொன்ன .நிலம், இடம், வயல், விலங்குகள், மக்கள் எனும் பொருள்களைக் குறிக்கும் சொல்லெனக் கொள்வேன். தென்புலத்தார் என்பது ”முன்னோர் தென்புலத்தில் உளார்” எனும் தொன்மக் குறிப்பாகும். (இற்றைத் தமிழகத்தின் தென்பக்கம் தொடர்ந்து கடற்கோள் ஏற்பட்டு, நிறைய மாந்தர், நில அழிவுகளைத் தமிழர் சந்தித்தார். இது குமரிக் கண்டக் குறிப்பில்லை; குமரிநில அழிவுக்குறிப்பு.) ”தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்றபடி, ஐம்புலத்தின் (தமிழ்நாட்டின்) ஆற்றை (வழியை) ஓம்புவது தலையாகும்” என இக்குறளுக்குப் பொருள்கொண்டு பாருங்கள். பொருள் இன்னும் சிறக்கும்.
மேற்சொன்ன வள்ளுவரின் ஐம்புலத்தைப் பைம்புலம் என்றும் சொல்லலாம். பைஞ்சு என்பது இந்திய வடபுலத்தில் ”பாஞ்ச்” ஆகும். நாம் கை>செய்>ஐ என இன்று கொண்டுள்ளோம். பைஞ்சு>அஞ்சு என்பதும் நம்மிடம் இல்லாமல் இல்லை. இதே இடப்பொருளில் புலத்திற்கு மாறாய் நிலத்தையும் புழங்கலாம். நகர, ஞகரப் போலியில் பைந்நிலம்>பைஞ்ஞிலம் எனலாம் இதுவே திவாகரத்திலும் மக்கட் பரப்பிற்கு இணையாய்ச் சொல்லப்பட்டது. பதி 17.9, 31.6, புற 62.10-13 ஆகியவற்றில் இச்சொல் பயிலும். பல்வேறு உரைகாரரும் பைஞ்ஞிலத்திற்குப் பசிய நிலம் என்றே பொருள் சொல்வார். காட்டாக பதி 17-9 இல் வரும் ”நனந்தலைப் பைஞ்ஞிலம்” என்பதற்கு அப்படிப் பொருள் சொல்வர்.,
இங்கே, இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனின் நிலம் வெறும் பசியநிலம் மட்டுமா? - எனில் இல்லை. மற்ற திணைகள் அவன்நாட்டில் இல்லையா, என்ன? மாறாக நனந்தலைப் பைஞ்ஞிலம் என்பதற்கு “அகல்நிறை ஐம்புலம்” எனப் பொருள் கொண்டால், மேலும் சிறக்கும். அதே பொழுது பதி. 31-6 இல், ”உண்ணாப் பைஞ்ஞிலத்திற்கு”, ”உண்ணா நோன்புற்றோர்” எனப் பொருள் சொல்வார். இங்கும் ”ஐம்புல மக்கள்” என்பதே சரியாகும். இனிப் புறம் 62.10-13 ஆம் அடிகளைப் பார்ப்போம். சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் அவனுடைய மைத்துனன் வேற்பல் தடக்கைப் பெருவிரற் கிள்ளியும் (இவன் நற்சோணையின் சோதரன், சேரன் செங்குட்டுவனின் தாய்மாமன்) போர்ப் புறத்துப் பொருது வீழ்ந்தாரைக் கழாத்தலையார் பாடியது என்று சொல்வர். இருவரும் போரில் காயமுற்று மாய, ஒருவரும் வெல்லமுடியாது அமைந்த சோகத்தைக் கழாத்தலையார் பாடுவார்.
“பன்னூறு அடுக்கிய வேறுபடு பைஞ்ஞிலம்
இடங்கெட வீண்டிய வியன்கட் பாசறை
களங்கொளற்கு உரியோர் இன்றி
தெறுவர உடன் வீழ்ந்தன்றால் அமர்” =
இதன் பொருளாய். “பலநூறாக அடுக்கப்பட்ட பதினெண்பாடை மக்களாகிய படைத்தொகுதி, இடமிலாகும்படி தொக்க வீண்டிய, அகன்ற பாடிவீட்டின் கண் போர்க்களத்தைத் தமதாய் ஆக்கிக் கொள்வதற்கு உரியோர் ஒருவரும் இன்றி, கண்டார்க்கு அச்சம் வரப் பூசல் மடிந்தது ” என ஔவைத் துரைசாமியார் சொல்வதில், பல கேள்விகள் எனக்குள் எழும். அடிப்படையில் இது மாமன் - மச்சான் சண்டை; இருவரும் தமிழர். ஒருவன் சேரன், மற்றவன் சோழன். இதில் பதினெண் பாடை(மொழி) மக்களாகிய படைத்தொகுதி எங்கு வந்தது? பாட்டில் அப்படி ஒரு குறிப்பே இல்லையே? “வேறுபடு பைஞ்ஞிலம்” என்பது இதுவா?
மாறாய், “பன்னூற்றுவர் அடுக்கிய வேறுபட்ட பைம்புலங்களான சோழ நாடும், சேரநாடும் இடமிலாது போகும்படி தொக்க அழிய (= வீண்டிய), அகன்ற பாடி வீட்டின் கண், “இப்போர்க்களம் எமது” என்று கொண்டாட, உரியார் இல்லாதாகி, கண்டார்க்கு அச்சம் வர, பூசல் மடிந்தது” எனலாமே? இதில் ”வேறுபடு பைஞ்ஞிலம்” என்பது ஐம்புலங்களைக் கொண்ட வேறுபட்ட சோழ, சேர நாடுகளைக் குறிக்கிறது என்றால் தவறா. (சொந்தக்காரராய் அவர் இருந்தாலும் தம்முள் வேறுபட்ட நாட்டார் தானே?) இப்படிப் பார்த்தால் பைம்புலம் / பைஞ்ஞிலம் என்பது வெவ்வேறு நாடுகளைக் குறிக்கிறது என்பதும் அந்நாட்டு மக்களை ஆகுபெயரால் குறிக்கிறது என்பதும் புலப் படும். ”பைம்புலம்” என்பதே என்னைக் கிளரச் செய்தது. இதைப் பயின்றால் public தொடர்பான ஆங்கிலச் சொற்களுக்குத் இணைச்சொற்கள் தமிழில் கிடைக்குமே? - என்று தோன்றியது. பைம்புலர் என்பது மக்களுக்கு (people) இணையாவதும் விளங்கியது.
அன்புடன்,
இராம.கி.

No comments:
Post a Comment