Friday, April 17, 2020

sanitizer

பல ஆண்டுகளுக்கு முன் நண்பர் ஆசீப்பின் வேண்டுகோளின் பேரில் அமீரகத்தில் வெளிவந்த கானல் ஆண்டு மலரில் ”கொன்றையும் பொன்னும்” எனும் தொடரை வெளியிட்டேன். பின் 2006 இல் அக்கட்டுரை 7 பகுதிகளாகப் பிரித்து என் ”வளவு” வலைப் பதிவில் வெளியிட்டேன். ஏராளமான தமிழ்ச் சொற்களின் பிறப்பை அதில் ஆய்ந்தேன். செழிப்பு, கொழுமை, பொலிசு, நலம், சுகம் என்ற சொற்களும் அதில் அடங்கும். sanitizer என்பதற்காகச் சொல் ஒன்றை இப்போது தேடிக் கொண்டிருக்கையில், சுகத்தைப் பற்றிச் சொல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது,  உடனே அத்தொடர் நினைவிற்கு வந்தது. வேறு எந்தப் பகுதியை நீங்கள் படிக்காவிடினும் ”சுக”த்திற்காக,  http://valavu.blogspot.com/2006/01/4.html என்ற பகுதியைப் படித்து விடுங்கள்.

செழிப்பு, கொழுமை. பொலிவு, நலம், சுகம் என்ற சொற்கள் தமிழில் health ஐப் பொதுவாய்க் குறிக்கும். இந்தச் சொற்களின் உள்ளே புலப்படுவது பொன்நிற ஒளியே.  ”அவன் முகத்தைப் பாருங்கள். ஓர் ஒளி தெரிய வில்லையா? அவன் செழிப்பாய்/ கொழுமையாய்/ பொலிவாய்/ நலமாய்/ சுகமாய் இருக்க வேண்டும். இல்லெனில் அவன் முகம் இருளாதோ?” என்பது நாட்டுப் புறத்தார் மரபும் கூற்றுமாகும். (இத்தனை சொற்களையும் ஒதுக்கி இன்று சிலர் ஹெல்த் எனக் குறிக்க முற்படுவது முட்டாள் தனம். பல நாளிதழ்களும் அதையே செய்கின்றன. இல்லாவிடில் சுகாதாரம் என்கின்றன. ”ஆதாரம்” அங்கு எதற்கு? புரியவில்லை.  சுகத்தின் ஆதாரம் சூழமைவு இல்லையோ? health, cleanliness ஐ விட மேம்பட்டதில்லையா? ”நன்றாய் இருங்கள்” எனில், “clean-ஆய் இருங்கள்” என்றா பொருள் கொள்கிறோம்? அதனின் மேம்பட்ட பொருள் அல்லவா நலம்? மேற்சொன்ன சொற்களில் துல்லியம் நமக்கு வேண்டாமா?.

இன்னுஞ் சிலர் “ஆரோக்கியம்” என்ற சொல்லை செழிப்பு, கொழுமை. பொலிவு, நலம், சுகம் என்பதற்கு மாறாய்ப் பயன்படுத்துவர். இதுவோர் இரு பிறப்பிச் சொல். நேரே ஒன்றைச் சொல்லாது சுற்றிவளைத்து மூக்கைத் தொடுவது போற் சொல்வது. “நீங்கள் நல்லா இருக்கீங்களா? “ என்று கேட்காது, ”நீங்கள் கெடாமல் இருக்கீங்களா?” என்பது தமிழில் நாகரிகமான பேச்சா? ரோகம் என்பது உருக்கம் என்ற தமிழ்ச் சொல்லின் சங்கத ஆக்கம். ஆங்கிலத்தில் இதை  metathesis என்பர். முன்னிருக்கும் உகரத்தை அகரமாக்கி அடுத்துவரும் உகரத்தோடு சேர்ந்தொலிப்பது, தமிழில் உருக்கம்/ உருக்கன் என்றால்  உடலை வாட்டும் நோய், இதை metathesis முறையில் ருஅக்கம்> ரோக்கம்> ரோகம் என்று சங்கதம் ஆக்கும்.  (ஆரோக்ய சேது என்ற சொவ்வறையை இறக்கச்சொல்லி இந்திய அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது.. இதன் அரசியல் பின்புலத்தை நான் இங்கு பேசவில்லை.)

உருக்கம் தமிழில்லை என்போருக்கு மற்ற தொடர்பான சொற்களைக் காட்ட வேண்டுமோ?  உரகவாதம் = ஒரு பக்க வாதம. உரஞ்சுதல் = தேய்த்தல். உருத்தல் = அழலுதல், வெருளுதல், உருக்கனடித்தல் = உடம்பை இளைக்கச் செய்தல், உருக்கி = உருகச் செய்வது, இளைக்கச் செய்வது, உருக்கல் = இளகச் செய்தல், மெலியச் செய்தல் அந்த நோய் உடம்பை உருக்கிவிட்டது.
உருக்குலைதல் = உடல் மெலிதல், உருகுதல் = மெலிதல், உருங்கல் = தேய்தல், உருத்திரம் = சினம். உருப்பம் = வெப்பம். உருப்பு = வெப்பு, துயரம். உரும் = சினம். உரும்பு = கொதிப்பு. உரும காலம் = கோடைக்காலம். உருமம் = வெப்பம்.

ஆக, ”ரோகம்” எனில் நோய் தான். அல் எனும் தமிழ் முன்னொட்டு ”அ, அந், ஆ” என்றெல்லாம் சங்கதத்தில் திரியும். அல்+ரோக = ஆரோக>ஆரோக்ய என்று சங்கதத்தில் அது பயன்படும் . நாம் திரும்பக் கடன்வாங்கி ஆரோக்கியம் என்போம். பேசாமல் ”உருக்கற்று” என்று விடலாம். (தமிழில் முன்னொட்டை விடப் பின்னொட்டே மிகுதி.) ஆரோக்கியம் = உருக்கற்றம், ”ஆரோக்யமாய் இருக்கிங்களா?” என்பது, “உருக்கற்று இருக்கீங்களா? - நொய்யாம இருக்கீங்களா? கெடாம இருக்கீங்களா? ” என்பதற்குச் சமம் தமிழில் இதைக் கேட்கும் போது நமக்கு  நாராசமாய்த் தெரிகிறது, இல்லையா? சங்கதத்தில் இனிக்கிறதோ? பேசாமல், பொதிவாய் (positive) ":நல்லா இருக்கீங்களா” என்று கேட்கலாமே? (இப்படித்தான் ”பூவராகன்” என்று  சிலர் தம் பிள்ளைக்குப் பெயர்வைப்பார். ”நிலப்பன்றி” என்று எப்பொழுதாவது பெயர் வைப்பரோ? அருத்தம் புரியாமல் நாம் சங்கதப் பெயர் வைத்துக் கொள்கிறோம்.)

அன்பர்களே! ஆரோக்யம் என்று இனிமேல் மரபு தவறியும் சொல்லாதீர்.  செழிப்பு, கொழுமை. பொலிவு, நலம், சுகம்  என்று தமிழ்மரபில் சொல்லப் பழகுங்கள்.   

இனிச் சொல் வழி எழும்பிய சில சொற்களைப் பார்ப்போம். கொல்>சொல் = சொலிப்பு, ஒளி; சொலித்தல் = ஒளி தருதல்; சொலிதை/ சொலிப்பு = வெளிச்சம். சொல்>solar = சூரியன் ஒளி; சொல்+ஐ = சொலை> சோலை> சுவாலை= flame; சொலி>சுவாலி = ஒளியிடு; இதை ஜ்வாலையாக்கி வடமொழி போல் சிலர் பலுக்குவர். நாமும் அங்கிருந்து இங்கு வந்தது போலும் என எண்ணிக் கொள்வோம். இப்படி நாம் தடுமாறும் சொற்கள் மிகப் பல. சொலை>சோலை = பொன்னிறப் பூக்கள் மலரும் மரங்களைக் கொண்ட காடு. சோலை மலை = அழகர் கோயில்; சொல்=ஒளி, நெல் (மஞ்சளாய் இருக்கும் கூலம்). சொல்>சொன்>சொன்றி = சோறு;  சொல்பட> சொற்பட> சொப்பட = நன்றாக. வெளிச்சம் பட; சொற்படுதல் = பலன் மிகுதல்.

சொல்+நம் = சொன்னம்>சொர்னம்>சொர்ணம் = தங்கம், நாணயம்; வழக்கம் போல வடமொழிப் பலுக்கு இங்கு உள்ளே வந்துசேரும். சொர்ணம்> சுவர்ணம்> சுவர்ணகா = வடமொழியில் கொன்றைக்கு உள்ள பெயர். சொன்னம்>சொன்னல்>சொனாலி = வங்காளியில் கொன்றைக்குப் பெயர். சொன்னல்> சொந்தல்>சொந்தால் என்றும் வங்காளியில் வரும். அசாமியிலே சொனாறு என்பார், (அந்தக் காலத்தில் அறுபதுகளில், "சோனாரே, சோனாரே" என ஒரு பேர் பெற்ற இந்தித் திரைப்பாட்டு, ஆராதனா என நினைக்கிறேன். ”தங்கமானவளே” என்று காதலியைக் கூப்பிடுவான்.) சொன்னம்>சொன்னகாரன் =  பொன் வேலை செய்யும் தட்டான்; சொல் +நை = சொன்னை>சோனை>சோணை= தங்க நிற ஆறு. விகாரை மாநிலத்தில் (பீகாரில்), பாடலிபுரத்துக்கு பக்கத்தில் இருக்கும் ஆறு. கங்கையும் சோனையும் அங்கே பண்பாட்டில் முகமை. கங்கை கருப்பு; சோணை வெளுப்பு; தங்க நிறம்;

(நிறத்தை வைத்து ஆற்றிற்குப் பெயரிடுறது நெடுக உள்ள வழக்கம். நம்மூரில் பொன்னி = தங்கம், வையை = வெள்கை = வெள்ளி, தாம்பர பெருநை = சிவப்பு; ஆறுகள் பற்றி ஒரு முறை சொல்லியுள்ளேன்).

சொல்+கு = சொக்கு = தங்கம். (சொக்குத் தங்கம்' என்பது இரட்டைக் கிளவி. தூய தங்கம் என்றும் பொருள் கொள்ளும். ) சொக்கு = தூய்மை; சொக்கம் = தூய்மை சொள்>சொகு>சொக்கம்; சொக்க வெள்ளி = தூய வெள்ளி. சொக்கத் தாண்டவம் = தூய நட்டம்; மதுரைச் சொக்கன் பொன்னானவன்; அதுதான் அவன் நிறம்.; சொக்கிப் போனான் என்றால் சொலிப்பைக் கண்டு வியந்து போனான் என்று பொருள்; சொக்கம்>சொர்க்கம் = 'பொன்னுலகு' எனும் கற்பித மேலுலகு; இங்கும் வடமொழிப் பலுக்கு வருவதால் குழம்புகிறோம். தங்கம் கிடைக்காத, தங்கம் குறைத்துப் புழங்கிய நாட்டில் சொக்கம் என்ற சொல் எழவே எழாது. பொன்னுலகு எனும் கற்பிதம் முழுக்க முழுக்கத் தமிழ்க் கற்பிதமே.

சொக்கம்>சொகம்>சுகம் = பொலிவோடு மலர்ச்சியோடு இருக்கும் தன்மை; ”சுகமா இருக்கீங்களா?” என்றால் ”சோர்விலாமல் முகத்தில் ஒளிவிடுகிறாற் போல் இருக்கீங்களா?” என்று அருத்தம். health இற்கு இப்போது நாம் அச் சொல்லையேன் புழங்குகிறோம். (இதிலும் சிலர் சொக்கம், சொகம், சுகம் என்று சொல்லாமல் சௌக்கியம் என்று சங்கதமுறையில் ஒலிப்பார். நானும் சிலபோது அறியாமலும், சிலபோது அறிந்தும் சௌக்கியம் பயின்றுள்ளேன். அவ்வளவு சங்கதத் திரிவுகளை நம் முன்னோரும், உறவினரும், ஆசிரியரும் நமக்குள் ஏற்றியிருக்கிறார். மிகவும் சரவல் பட்டே இந்தத் தப்பான பழக்கங்களில் இருந்து வெளிவந்து சொக்கம், சொகம், சுகம் போன்றவற்றைப் பயில வேண்டியுள்ளது.)  மேலையன் ”கொழிதா இருக்கீங்களா?” என்கிறான். கொழுது>கொழிது = health = செழிப்பு, நலம், சுகம்.; சொக்கத்தில் விளைந்த இன்னொரு சொல் சொகுசு = நேர்த்தி, இதம், சிறப்பு. சொகுசுப் பேருந்து என்கிறோமே? சொகுசையும்  வடசொல் என்று சிலர் தவறாய்க் கொள்வர்.

இனிச் சொல் துல்லியத்திற்கு வருவோம். என்னைக் கேட்பின் வெறும் நலத்தை wellness இற்கு ஈடாயும், கொழுமையை உடல்நலம் (body health) பற்றியும்,  பொலிவைத்  தோற்ற நலம் பற்றியும் கொள்ளலாம். செழிப்பு, வெறும் உடல்நலத்திற்குச் சரிவராது. நம் உடல், சூழமைவு, வாய்ப்புகள், ஊற்றுகள் ஆகிய மொத்த வள நலத்திற்கே அது சரிவரும். சுகத்தை ஆதாரம் எனும் நீள்சொல்லோடு சேர்க்காது, சுகனம் எனச் சுருக்கிச் சுகத்தேவையான சூழமைவிற்கு ஈடாக்கலாம். இந்த இடுகையில் அப்படியே கொள்கிறேன்..

இப்பொழுது, sanitize (v.) இற்கு வருவோம். ஆங்கிலச் சொற்பிறப்பியல் அகர முதலியில் 1836, from stem of sanitary + -ize. Metaphoric sense is from 1934. என்று போட்டிருக்கும். அடுத்து, sanitary (adj.) என்பதைப் பார்த்தால், 1823, "pertaining to health," from French sanitaire (1812), from Latin sanitas "health," from sanus "healthy; sane" (see sane). In reference to menstrual pads, first attested 1881 (in sanitary towel) என்பர். முடிவில் sane (adj.) என்பதற்கு வந்தால்  நம்மை வேறெங்கோ திருப்பி விடுவர். ,

"of sound mind, mentally sound; free from disorder," 1721, a back-formation from sanity or else from Latin sanus "sound, healthy," in figurative or transferred use, "of sound mind, rational, sane," also, of style, "correct;" of uncertain origin. Perhaps from PIE *seh-no- from *seh- "to tie." That reconstruction "is purely mechanical," according to de Vaan, the meaning might be "which is in place, in order." Or it could be from a different root meaning "to satisfy" as in Latin satis "enough." Used earlier, of the body, with the sense of "healthy" (1620s).

ஆக, uncertain origin.என்றிருந்தாலும்  இது எப்படிச் சரியாகும்? - என்பது எம் கேள்வி. sanitary ஐயும் sanity ஐயும் குழப்பிக் கொண்டுள்ளார்.  இரண்டும் இரு வேறு சொற்கள்.  பல ஆங்கிலச் சொற்களின் நிலை இது தான். இதை யாரும் அறியாது, எல்லாம் இலத்தீன், கிரேக்கம் என்று சொல்லி விடுவார். இல்லை யென்றால் uncertain origin என்பார். கற்பிதமாய் ஓர் இந்தையிரோப்பியச் சொல்லையும் உருவாக்கிவிடுவார். நான் கேட்பது, “தமிழிய மொழிகளை இங்கு கணக்கில் எடுத்துக் கொண்டீர்களா?” உங்கள் குழப்பம் தீருமே!

சொக்கம்>சொகம்>சுகம் என்பது  பொலிவோடு மலர்ச்சியோடு இருக்கும் தன்மை எனில், சுகனமும் பொலிவோடு மலர்ச்சியோடு இருக்கும் தன்மை குறிக்காதா?. நெருப்புப் பூதத்தின் அடையாளமான  திருவண்ணாமலைக்கு அதன் பொன்னிறம் கருதிச் சோனமலை>சோணமலை>சோணகிரி என்ற பெயருண்டு. பார்ப்பதற்குப் பொலிவோடு இருந்தாலும் பின் ஏமாந்து போகும் வெள்ளந்தியை, “ஏமாந்த சோணகிரி” என்பது சொலவடை.  சொன்னை சோனையைத் திரித்து சொரனை என்கிறோமே? சொன்னம், சோனை ஆகியவை sane ஓடு தொடர்பு காட்டக் கூடாது? சுரணை>சொரணை = உணர்ச்சி, அறிவு. முடிவாக,

sanify = சுகனாக்கு
sanitary = சுகன
unsanitary = சுகனிலா
sanitate = சுகனேற்று
sanitation = சுகனேற்றம்
sanitize - சுகனப் படுத்து
sanitized = சுகனப் பட்ட
sanitizing = சுகனப் படும்
sanitizer = சுகனியர்/சுகனியம்
sanitarium / sanitorium / sanatorium = சுகந்தருவம் (Late Latin word sanitorius, which means health-giving).
sanitary towel = சுகனத் துண்டு
sanitory napkin = சுகனத் துகில்

sane சுரனை
Sanely சுரனையோடு
sanity = சுரனை
insane = சுரனையில்லாது

அன்புடன்,
இராம.கி.

4 comments:

ந.குணபாலன் said...
This comment has been removed by the author.
ந.குணபாலன் said...
This comment has been removed by the author.
வீரையா சுப்புலட்சுமி said...

தங்களைபோன்றோரின் அயரா முயற்சியானது, தமிழர்களை, மீண்டும் இனிய தமிழில் பேச வைக்கும் என நம்புகின்றேன்.. தமிழர்களாய் வாழ்வோம்; வளர்வோம்..

ஓதியரசு said...

அருமை தமிழே