Thursday, April 02, 2020

கிறுமி

எங்கு பார்த்தாலும் இப்போது கிருமி/கிரிமி என்றே எழுதுகிறார். அது பட்டுயிரியா (bacteria), ஒட்டுண்ணியா (helminth), காளானா (fungus), வெருவியா (virus) என எந்த வேறுபாட்டையும் செய்தியில் சொல்வதில்லை. எந்தத் தொற்றாய் இருந்தாலும் அதைக் கிருமி என்றே எழுதுகிறார்.  கேட்டால் சங்கதச் சொல் என்பார். ”ஆமாம் சங்கதம் என்றால் ரொம்ப ஒசத்தியில்ல?” கிருமி வந்துவிட்டால், நோயை விளக்கிய மாதிரியும் இருக்கும். கொஞ்சம் படிக்கறவரைப் பயமுறுத்திய மாதிரியும் இருக்கும். கூடவே அரக்கன், பூதம் போல் கொடுவாய்ப் பல், கொம்பு, தழையாடை எல்லாம் போட்டு ஒரு கோட்டுப்படம் இட்டுவிட்டால் செய்தியாளர் சொல்வது முழுமையாகிவிடும். காலங்காலமாய் இப்படித்தான் நாளிதழ்களில் எழுதுகிறார்.  ஏம்ப்பா, உண்மையிலேயே அது சங்கதமா? - என்று யாராச்சும் கேள்வி கேட்டீங்களா? அதன் சரியான வடிவமென்ன?

சங்கதத்தில் இதன் பொருள் என்ன தெரியுமோ?  कृमि m. kRmi - spider, कृमि m. kRmi - ant, कृमि.  m. kRmi - insect, कृमि m. kRmi - lac, कृमि  m. kRmi - worm, कृमि m. kRmi - shield-louse, कृमि m. kRmi - silk-worm, क्रिमि  m. krimi - insect, क्रिमि m. krimi - worm, कृमिन् adj. kRmin - affected with worms, कृमिन्  m. kRmin - worm. ஆகச் சிலந்தி, எறும்பு, சிதலை, கறையான், பூச்சி, புழு,  பேன், பட்டுப்புழு இப்படி எல்லாவற்றையும் ஒரு காலத்தில் கிருமியெனச் சொல்லியுள்ளார்.  இங்கு சொன்ன பூச்சிகளில் பெரும்பாலானவை புழு உருவத்தில் தொடங்கிப் பின் குறிப்பிட்ட காலத்தில் பூச்சியாய் உருமாற்றிக் கொள்ளும்  ”ஏதெல்லாம் நகருமோ, அதெல்லாம் கிருமி (meaning of krimi as that which moves or roams about) எனவும் சங்கத நூல்களில் விளக்கஞ் சொல்வார். 

அமரகோசத்தில்,  Krimi is derived from “Kram + en” which denotes Kshudra-jantu and in differentiation of Rogas. It means those which are capable to break or injure the surroundings என்று சொல்வார் . kṣudra = குறு. jantu = animal, உயிரி. ஆகக் குற்றுயிரி என்பது அமர கோசத்தில் கிருமியின் மொழிபெயர்ப்பு. ”சுற்றுச் சூழ்நிலை உடைத்துக் கெடுதல் உண்டாக்கும்” என மேலும் வரையறை சொல்வார். நோய்வருவதை, இவ்விளக்கம் பொருந்தப் புகலும். ஆயுள்வேத வழி, எல்லாப் புழுக்களும் (worms), நூகுயிரிகளும் (microbes) கிருமி எனப்படும். கிருமி, கிருமிரோகம் என நூகுயிரி, தொற்று நோய்கள் பற்றி வேதம் சொன்னதாம். ( நான் எதிலென்று நேரே படித்ததில்லை.) சொற்பிறப்பியலின் படி, துயரம், சுகவீனத்தைக் கிருமிகள் கொணருமாம். ”கிருமி”க்குள் இவ்விளக்கம் எங்குவந்தது? தெரிய வில்லை. இதுவும் சுற்றி வளைத்த புரிதலே.
 .
பாணினிக்கும் முந்தைய யாஷ்காவின் நிருக்தத்திலோ,  The word Krimi is derived from dhatu ‘Kujna Himsayam’ (sidhanta kaumudi) which means to kill or to yield harmful effect. Acharya Yashka has given the meaning of Krimi in the following way. 1. Which means those organisms which grow on raw flesh 2. That which moves with legs - என்றும் சொல்வர். இதுவும் படியாற்றம் (application) பொருத்திய வரையறையே.

9/10 ஆம் நூற்றாண்டுத் திவாகரத்தில், 623 ஆம் நூற்பாவில், “கிருமியும் கீடமும் புழுவின் பெயரே” என வரும். ஆகத் தமிழிலும் சங்கதத்திலும் புழுவே கிருமிச் சிந்தனையின் தொடக்கம்போலும். துளைத்தல் கருத்தின்வழி ”புழு” என்ற சொல் கிளைக்கும்.  புல்> புள்> புழு = துளைத்தழிக்கும் குற்றுயிரி. குள்+து = குற்று. குள்> கிள்> கீள்> கீழ்> கீழம்> கீடம்.  இப்படித்தான் இரண்டாம் சொல் எழுந்தது. ஞாவகம் இருக்கிறதோ? நம்மூர் சோழ மண்டலம் தெலுங்கில் சோட மண்டல என்றாகும். இன்னும் சற்று வடக்கே ஒடியா, வங்காளம் போனால் சோர மண்டல் ஆகும். ஆங்கிலேயன் கோர மண்டல் என்று சொல்லி விடுவான். ழ> ட> ர என்ற மாற்றம் கிட்டத்தட்ட ஓர் ஒழுங்கில் நடை பெறுவதாகும். 

ஆங்கிலத்தில் புழுவைக் குறிக்கும் சொல்லான worm (n.) என்பதற்கு, Old English wurm, variant of wyrm "serpent, snake, dragon, reptile," also in later Old English "earthworm," from Proto-Germanic *wurmiz (source also of Old Saxon, Old High German, German wurm, Old Frisian and Dutch worm, Old Norse ormr, Gothic waurms "serpent, worm"), from PIE *wrmi- "worm" (source also of Greek rhomos, Latin vermis "worm," Old Russian vermie "insects," Lithuanian varmas "insect, gnat"), from PIE *wrmi- "worm," from root *wer- (2) "to turn, bend." என்று சற்று வேறுபட்டு வரையறை சொல்வர். நான் மாறு படுவேன்,  உழுது கொண்டே உட்செல்லும் துளைத்தல் பொருளே worm இக்கும் சரிவரும். ஆனால் மேலையர் ஏனோ அப்படிச் சொல்லவில்லை.

குத்தல், குழித்தல், கீறல், கிண்டல் பொறித்தல், அறுத்தல், பிளத்தல், வெடித்தல், விரிதல், பிரிதல், விடுத்தல், பகுதல், தோண்டல் என்று துளைத்தல் கருத்து சிச்சிறிதாய் விரிந்து போகும். ஆயிரக்கணக்கான சொற்கள் துளைத்தல் பொருளில் உருவாயின. அதில் முதல் வேர்ச்சொல் குல். குல்> குள் என்பது குத்தலுக்கு வழிவகுக்கும். குள், குழித்தலின் பின் கிள்ளலுக்கும் வழி வகுக்கும். கிள்>கீள்>கீழ்>கீழ்-தல் என்பது கிழித்தல், பிளத்தலைக் குறிக்கும். கிழித்தலும் கிள்ளின் வழி எழுந்ததே. கிள்> கிடு> கெடு> கெடு-தல் = சிதைந்து போதல். கிடு>கிடி = கோரைப் பற்களால் மண்ணைக் கீறித் தோண்டும் பன்றி. கிடிகி = பல கண்களாய்த் தோண்டப் பட்ட பலகணி.  கிடிவம் = மரந்துளைக்கும் பறவை. wood-pecker. கிடியம் = பன்றி நெய். கிள்> கிடு> கிறு> கீறு> கீறு-அல் என்பதும் புழுக்கள் பண்ணும் செயல் தாம். சில புழுக்கள்  உடலைக் கீறிக் கெடுக்கவும் செய்யும். கிள்>கிடு>கெடு.

தரு-தல், தருமு-தல் போல், பரு-தல், பருமு-தல், சிறு-தல் சிறு-முதல் போல். (இன்னும் பல்வேறு நீட்சிகள் போல்) கிறு-தல், கிறுமு-தல் என்றும் பேச்சு வழக்கில் திரியலாம். உம்மைப் பொருள் அதற்கு இடங்கொடுக்கும். கிறுமு->கிறுமி என்பது வேறு ஒன்றுமில்லை. கிறுமும் வேலை செய்யும் உயிரி.  கீடம் என்ற சொல்லைத் திவாகரத்தில் நான் காணவில்லையானால், எனக்குள் பொறி தட்டியே இருக்காது. ஆகக் கடைசியில் நம்மூராளு தான். கிறுமி> கிடுமி> கிருமி = புழு என்று வடக்கே பரவியிருக்கிறது. வடக்கே றகரமில்லை. அதனால் டகரமாக்கிப் பின் ரகரமாக்கி விட்டார். அது புரியாமல் கிருமியை நாம் மீண்டுங் கடன் வாங்கியிருக்கிறோம். அடக் கடவுளே! இதற்குப் பேசாமல் நாம் உய்த்தறிந்த நம்மூர்க் கிறுமியை வைத்துக் கொள்ளலாமே? எப்பொழுது பார்த்தாலும் இப்படி ஒரு மடத்தனமா? நம்ம புள்ளையையே நமக்கு அடையாளம் தெரியலையே?

வெருவித் தொற்று காலத்தில் கவனமாய் வீட்டினுள் இருங்கள்

அன்புடன்,
இராம.கி.

No comments: