Tuesday, April 28, 2020

Case

தமிழில் கலைச்சொற்களைப் பொறுத்து நான் ஏதாவது சொன்னால், சிலருக்குப் பிணக்கும், அகப்பாடும் (ego) வந்துவிடும்.  எவ்வளவுதான் முனைந்து நேரஞ்செலவளித்துச் புதுச்சொல் உரைப்பினும் நொள்ளைக் காரணம் சொல்லி என் பரிந்துரையை  நாசூக்காய் மறுப்பார். காரணமும் சொல்வார். “ரொம்ப இலக்கியத் தமிழாய் இருக்கு. எளிமையாய், பாமரனுக்குப் புரியும் படி இல்லை. 8 கோடித் தமிழருக்கும் விளங்க வேண்டாமா? ஆங்கில ஒலிப்பாயிருக்கு. ஆங்கிலமுறையில் ஏன் சிந்திக்க வேண்டும்? இந்தையிரோப்பியனுக்கும் நமக்கும் தொடர்பே இல்லை. வரலாற்றுக் குழப்பம். 400 ஆண்டுகள் அடிமையானோம்,” என்பார்  பின்னால் ”கால்டுவெல், எல்லிசு, சோன்சு, மாக்சுமுல்லர் ” என மேலையருக்குத் தாசானுதாசர் ஆகவுஞ் செய்வார்.

ஒருபக்கம் தமிழ் அறிவியல் மொழி ஆகவேண்டும் என்பார். இன்னொரு பக்கம் popularization of science in Tamil உக்கு மேல் இம்மியும் நகரார். இவர் பரிந்துரையில் பழந்தமிழ்ச் சொல்லின் பகுதியோடு, விகுதி/ஈற்றை மாற்றி மாற்றி புது வேயம் (வேஷம்)  கட்டினால், “சூ, மந்திரக்காளி” எனக் கலைச் சொற்கள் கொட்டுமாம். முடிவில் ஒரு சொல்லுக்கு  நீளத்தொடரே இணையாய் வந்துசேரும். ஒரே ஆங்கிலச்சொல்லுக்கு தனித்தனிச் சொற்கள் ஒவ்வொரு துறையிலும் நாடிப் பாத்திகட்டுவார். “எம் பாத்திக்குள் வராதீர்” என்றுஞ் சொல்வார். இவருக்கு அறிவியல் தமிழில் தேவைப்படும் துல்லியம், சொற்சுருக்கம், துறைகடந்த புழக்கம் ஆகியவ்ற்றில் அக்கறை இருப்பதாய்த் தெரியவில்லை.   

நான் இட்டுக்கட்டிச் சொல்லவில்லை. நடந்ததைச் சொல்கிறேன். சூடணி வெருவி நோய்க்காலத்தில் case இற்குப் பெரும்பாலோர் வழக்கென்றே சொல்லிவருகிறார். அதைவிடக் ”கட்டு” பொருந்துமென்றேன். பேராசிரியர் ஒருவர், ”கட்டிற்கு” மாற்றுச் சொல் தராது, ”கட்டு அறவே பொருந்தாத சொல்.  750 முள்தொற்றி-19 நோயாளிகளைப் புதிதாகக் பதிவு செய்திருக்கிறார் என்று எளிதாகக் கூறலாமே? ஏன் ஆங்கில வழி சிந்திக்கவேண்டும்? ” என்றார். திகைத்துப் போனேன். அதாவது  ”புதுச்சொல் வேண்டாம், ’நோயாளிகள்’ போதுமாம்.  “கட்டென்று சொல்லாதீர்கள். தமிழை ஒப்பேற்றும் மொழியாகவே வைத்திருங்கள். யார் வேண்டாம் என்றார்? அது உங்கள் உகப்பு. இது  என் உகப்பு. பல்வேறு நோயாளிகளின் (குறிப்புகள்) கட்டுகள் பல்வேறு மருத்துவ மனைகளில் உள்ளன. அவற்றை ஒன்றிணைத்து கட்டுகளின் எண்ணிக்கை கூறப்படுகிறது, கட்டு = தொகுதி என்றே நான் படித்த நூல்கள் சொல்கின்றன” என்றேன்..

மேலும், "You don't treat me as a patient, a human being, You treat me as just a case" என்பது எலும்பும் சதையுமான ஒரு நோயாளி எழுப்பும் குமுறல். இங்கே நோயாளியையும் case ஐயும் ஒன்றாய்ச் சொல்ல முடியுமா?” என்றுங் கேட்டேன். இருவருக்கும் இடையே உரையாடல் சட்டெனச் சூடாகி நின்று போனது. பேராசிரியர் மாற்றுச் சொல் கொடுத்திருந்தால் நான் ஒருவேளை ஏற்றிருப்பேன்  ஆனால் case இற்குப் ”புதுச்சொல்லே வேண்டாம், நோயாளி போதும்” என மேலே நகர விடாது முடக்கி வைத்ததையும் ஆங்கிலச் சிந்தனை என்று சாடியதையும்  என்னால் ஏற்கமுடியவில்லை.   

இன்னொரு கவிஞர் அடுத்துவந்து “நான் கொரோனா தொற்று என்றுமட்டுமே எழுதுகிறேன். அமெரிக்காவில்.. கொரோனா தொற்று 1 மில்லியன் மரணம் 52,000” என்று இதேபோல் பாடம் படித்தார். இவரும் case இற்கு இணையாய்த் தமிழில் சொல்வேண்டுமென உணர்ந்ததுபோல் தெரியவில்லை. ”தொற்று = infection. ’There are X cases in Canada of which Y cases involve co-morbidities along with corona infection’ என்பதைத் தமிழில் சொல்ல infection க்கு ஒரு சொல்லும், case க்கு வேறு சொல்லும் தேவை. இரண்டிற்கும் ஒரே சொல்லை வைத்துச் சொல்வது உப்புக்குச் சப்பாணி வேலை ” என நான் விடையிறுத்தேன்.  நான் சொன்னதற்கு முதலில் மொழிபெயர்ப்புத் தராமல் சுற்றிவளைத்தவர் முடிவில், “எம் மாநிலத்தில் X கொரோனா தொற்றுகள் இருக்கின்றன. அதில் Y மிகவும் சிக்கலானவை, Z சிக்கல் குறைந்தவை” என்று தந்து, என் மொழிபெயர்ப்பைக்  கேட்டார்.

ஏற்கனவே நீண்டுபோன முன்னிகைகளை மேலும் அந்த இடுகையில் நீட்டவேண்டாமென இம் மொழிபெயர்ப்பு தனியிடுகையாய் வருகிறது.

இம் மொழிபெயர்ப்பைச் செய்யுமுன் morbid (adj.) இற்கு இணைச்சொல் வேண்டும். இல்லெனில் சரிவராது. சூடணி வெருவி நோய் வருமுன் பல்வேறு நோயர் (வாழ்நாள் முழுதும் தம் இறப்பு வரை  இருக்கக் கூடிய) வேறு நோய்களுக்கு ஆட்பட்டிருக்கலாம். இந்நோய்களை வெறுமே சுகவீனம் என்று சொல்லிவிடமுடியாது. ஏதோ ஒருவகையில் மருந்து மாத்திரை, சாறு உட்கொண்டு அவற்றைக் கட்டி (இந்தக் கட்டும் மேலே கூறிய கட்டும் ஒன்றல்ல. ஆனால் நெருங்கியவை.) வைத்திருக்கக் கூடிய நோய்கள் இவைகளாகலாம்.  காட்டாக, ஈளை (asthma), மீயழுத்தம் (hypertension), நீரிழிவு (diabetes), குருதயநாள நோய் (cardiovascular disease), கல்லீரல் நோய் (liver disease), உமரிநீரக நோய் (kidney disease), .முளி கழலை (malignant tumours) போன்றவை  இவையாகும்

-----------------------
இங்கே ஓர் இடைவிலகல். kidney யைச் சிறுநீரகம் என்றே பொதுப்புலனில் சொல்வர். அதுவும் பொருத்தமிலாத உப்புக்குச் சப்பாணிச் சொல் தான். (இயக்குநர் என்பது மாதிரி அச்சொல். இயக்குநர் என்பார் operator-ஆ, director- ஆ? ) அது என்ன சிறுநீர்? உடலிலிருந்து வேறேதும் பெருநீர் வெளியாகிறதோ? - என்ற கேள்வியெழும்.  சிறுநீர் என்பது ஒருசில உப்புகள் கரைந்த பால்மமே அதை உமரிநீர் எனலாம். (உப்புக்கு இன்னொரு பெயர் உமரி) உமரிநீரைக் கையாளும் உறுப்பு = உமரிநீரகம். சிறுநீரகத்தை விட இது பொருத்தமான சொல். ஆனால் மருத்துவத்தில் பயனாகும் Nephrologyக்கு இது உதவாது. உமரிநீரகத்திற்குச் சரியான உடற்கூற்றுப் பெயரொன்றை நாம் தர வேண்டும். முயன்றால் கிடைக்கும். சொல்லே வேண்டாம் சிறுநீரகம் போதும் என்று பாமரத்தனம் நாடுவோர்க்கு நான் சொல்வது விளங்காது.

பல்வேறு சிறு தூம்பு (tube)களும் அதைச்சுற்றி ஒரு கூடுங் (shell) கொண்டது உமரிநீரகமாகும். தூம்புகளின் வழிசெல்லும் அரத்தத்தின் வேதிப்பொதுளின் (chemical potential) தூண்டலால்,  சிவப்பணு , வெள்ளணு, ஒருசில பெருதங்கள் (proteins) ஆகியவை தவிர, மிஞ்சியுள்ள பால்மம் (plasma), உப்புகள் (salts) போன்றவை தூம்புப் படலம் (tube membrane) வழியாக நூகமாய் (நுண்ணிதாய்) ஊடுறுவி, கூட்டுப் பக்கம் [ஊடுதலை ஊறுதல் எனலாம்] உமரி நீராய் வெளிப் படும், எனவே  உமரிநீரகத்தை நூவூறகம் என்பது மிகச் சிறந்த சொல் ஆகும்.]

malignant tumours என்பதைத் தமிழில் சொல்வதும் கடினமில்லை. முள்>முளி-தல் என்பது கேடுதரலைக் குறிக்கும். malignant என்பது அதுதான். tumour = கழலைக் கட்டி. இது இராம. கி. படைத்ததல்ல. பழஞ்சொல். இப்போதெல்லாம் இப்படிச் சொல்லவேண்டி யிருக்கிறது. முன்னால் சொன்ன பிணக்கும் அகப்பாடும் என்னைப் பாடாய்ப் படுத்துகிறது. 
-----------------------

இறப்புவரை கூடவரும் ஈளை, மீயழுத்தம், நீரிழிவு, குருதயநாள நோய், கல்லீரல் நோய், உமரிநீரக நோய், முளி கழலை போன்றவைகளைத் தான் co-morbidities என்று ஆங்கிலத்தில் சொல்வர். morbidity 1650s, "of the nature of a disease, indicative of a disease," from Latin morbidus "diseased," from morbus "sickness, disease, ailment, illness," according to de Vaan perhaps connected to the root of mori "to die," as "looking like death" (from PIE root *mer- "to rub away, harm," also "to die" and forming words referring to death and to beings subject to death), or from a non-IE word. Meaning "diseased, sickly" is from 1731. Transferred use, of mental states, "unwholesome, excessive, unreasonable" is by 1834.

இதற்கான தமிழ்ச்சொல்லும் எளிதே. தமிழில் மரித்தல் = இறத்தல். முள்> முளி> முடி> மடி> மரி என்று இச்சொல் விரியும். ஒருவன் மடிந்தால் மரிந்தான்> மரித்தான் என்று பொருள். மடிதலின் பொருள் சாய்தலே.  மரிப்பு, மரிவு போன்ற சொற்கள் போக மரணமென்ற சொல்லுமுண்டு. பெரும்பாலோர் மரணம் சங்கதம் என எண்ணிக்கொள்வார். மரி-த்தல் என்ற வினைச்சொல்லை மறந்து மரணித்தான் என்று விந்தையாய்ச் சொல்வர். பெயர்ச்சொல்லில் இருந்து வினைச்சொல் ஆக்கும் முறை. பேசாமல் மரி-த்தலையே பயன்படுத்தலாம்.  ஆங்கிலத்தில் murder, morbid ஆகிய சொற்களும் நம் மரித்தலோடு தொடர்புள்ளவையே. இராம.கி. morbid க்கு மரித்தலைத் தேடினால் ”அது பெருந்தவறு; இறப்பைத் தான் தேடவேண்டும்  இவர் சொற்கள் பாமரனுக்கு ஆகாது” என்று தூற்றவும் செய்வார்.

சரி morbidity idity என்று வருகிறதே? அதற்கு என்ன செய்வது? - என்று கேட்டால் அதற்கும் வழி இருக்கிறது இள்ளுதல் = தாக்குதல் என்று பொருள்கொள்ளும். இள்>இட்டு>இட்டி->இடி- என்பதும் தாக்குதலே.  அவன் அந்தக் கதவை இடித்தான். அரிசியை உரலில் இட்டு இடித்தார். இடி இடித்தது - என்பன எல்லாமே தாக்குதல்களே. மரியிடி என்பது இறப்பு வரை தாக்கும் நோய்க்கான இராம.கி. யின் புத்தாக்கம். ஆங்கிலத்தில் morbidity என்கிறாரே? அது இதுதான். ”மறுபடியும் ஆங்கில ஒலிப்பு அது இது” என்று சிலரின் பேச்சுவரும். வட்டாரச் சொல்  எனக்கு நினைவிற்கு வருகிறது. ”என்னன்னு தெரியலை. காலையிலேர்ந்து மருக்கிடி(>மறுக்கிடி<மறுக்கடி)யா  இருக்கு” என்பது சிவகங்கைப் பேச்சு. மருள்>மருட்கு>மருக்கு = மயக்கம்.  மருக்கிடி = மயக்கத் தாக்கு.

ஆங்கிலத்தில் -idity க்கும் நம்மூர் இடிக்கும் இங்கே இணை காட்டுகிறேன், பாருங்கள். இதுதான் பலருக்கும் பிடிப்பதில்லை. அது எப்படி தமிழர் இடிக்கலாம்? - என்பதே மேலே சொன்ன பெரியோரின் ”தாவா”. ”இராம. கி. இப்படி ஏதோ கொண்டுவந்து உறவு சொல்லிக்கொண்டே இருக்கிறார்” என்பது அவர் குற்றச்சாட்டு. நான் சொல்வது அவரைப் பெரிதும் நெருடுகிறது.  ”கால்டுவெல், எல்லிசு, சோன்சு, மாக்சுமுல்லர் ” என்ற முன்னவர் கூற்றை மறுத்து Nostratic நோக்கி நான் நகர்கிறேன் பாருங்கள், அது இவரை என்னவோ செய்கிறது. அந்நிலையில் என்னை மடக்க ஒரே வழி ”ஆங்கில ஒலிப்பு என்று போட்டு அடி இவனை?” இதுதான் சில ஆண்டுகளாய் தொடர்ந்து நடக்கிறது. 1000, 2000 சொற்களுக்கு இப்படி நான் இணை காட்டுகிறேன். அவர்களால் ஏற்கவும் முடியவில்லை. நம்பவும் முடியவில்லை. நான் ஏதோ செய்யக் கூடாததைச் செய்வதாய்ப் புலம்புகிறார். 

முடிவாக, ”There are X cases in Canada of which Y cases involve co-morbidities along with corona infection" என்ற வாக்கியத்தின் மொழிபெயர்ப்பு என்ன?

”கனடாவிலுள்ள X கட்டுகளில் சூடணித் தொற்றும், மரியிடிகளும் இணைந்தபடி Y கட்டுகள் உள்ளன”. ஆங்கிலத்தை விடச் சிறிதாய்த் தமிழில் மொழியாக்கம் செய்யலாம்.

அன்புடன்,
இராம.கி.

பி.கு.மணிமேகலை இராமசாமி என்பார் case என்பதன் தேவையை உணர்ந்து, ”case study research என்பதை எப்படிச் சொல்வது?” என்று கேட்டார். இது முன்னோக்கி நகரும் கேள்வி. case என்ற சொல் தமிழில் வரவேண்டும் என்று இவர் எண்ணினார் பாருங்கள். அதுவே பெருஞ்சிறப்பு. ஒரு மருத்துவர் குழு, வழக்கறிஞர் குழு, மானக வல்லுநர் (management experts) குழு கூடி அமர்ந்து case study research, analysis செய்வாரே? அதெல்லாம் தமிழுக்கு வேண்டாமா?  case ஐ மறுத்து என்னத்தைக் கண்டோம்?

case study research = கட்டுப்படிப்பு ஆய்வு (கட்டுப் படிப்பு என்று பிரித்து எழுதிவிடாதீர்
case study analysis = கட்டுப்படிப்பு அலசல் ] 




1 comment:

கவிஞர்.வீ.சிவ ஓவியம். said...

மிக்க நன்றி.அருமை ஐயா.