Friday, September 20, 2019

அதென்ன “வேதி”யியல்?

- என்று நண்பர் தாமரைச்செல்வன் முகநூலில் ஒரு கேள்வி கேட்டார்.  நல்ல கேள்வி தான். இதற்கு மறுமொழியளிக்கக் கொஞ்சம் கொல்/பொன் பற்றிய வரலாறும் வேர்ச்சொல் அறிவும் தேவை.  

நாம் கொல்லில் தொடங்குவோம். தமாசுக்கசு எஃகுக் (wootz steel) குறுவாள் பற்றியும் அதில் தமிழரின் பங்கு பற்றியும் வெளியான செய்தியை ஒரு முறை என் முகநூல் பக்கத்தில் முன்வரித்தேன். அதற்கு முன்னிகையாய் (comment), “அடித்தடித்து இரும்பைக் கொல்வதால் கொல்லன்” என திரு. வேந்தனரசு எழுதினார். “கிடையாது. தமிழன் முதலிலறிந்த மாழை பொன் அதன் இன்னொரு பெயர் கொல். பொன்னே பின் பொதுப்பெயராகி, வெண்பொன், செம்பொன், இரும்பொன் என்று பல மாழைகளுக்குப் பெயராகியது. கொல் என்ற சொல்லும் பொதுப் பொருள் கொண்டது. கொல்லில் வேலை செய்தவன் கொல்லன்” என நான் மறுமொழித்தேன்.

இதையேற்காது, “பொன்னுக்கு கொல் எனும் சொல் எங்கு காணலாம்? தங்கால் பொற்கொல்லனார் என்பது ஏன்.?” என வேந்தனரசு வினவினார். இன்னொரு நண்பரான கருப்புச் சட்டைக்காரரோ, இதற்கும் மேலேபோய், நக்கலாய், “தமிழர் முதலிலறிந்த மாழை பொன்னா??? அப்படி எனில் தமிழர் இந்தக் கற்காலம், இரும்பு காலம் என்று உலகவழக்கு எதிலும் வாழ வில்லையா? அட்லாண்டிசு, வகாண்டா, அமேசான் போலத் தமிழர் குமரிக்கண்டத்தில் வாழ்ந்தனர் போலும். வகாண்டா மக்கள் வைப்பிரேனியம் அறிந்தது போல் தமிழர் பொன்னையறிந்து அனைத்தையும் பொன்னால் இழைத்து இருந்தனர் போலும்” என்றெழுதினார். இருவருக்கும் மறுமொழியாய், கொல்/பொன் என்ற தொடரை 2019 ஏப்ரலில் இதே வலைப்பதிவில் எழுதினேன்.  இதைக் கீழே படிக்கலாம். இந்தக் கட்டுரையில் வேதியல் என்ற சொல் என்ன பொருளில் எழுந்தது என்று சொல்கிறேன்.

பொதுவாக, மதிப்புமிக்க மாழைகளில் ஒன்றான பொன்னில் மாந்தர்க்கு இருந்த ஈர்ப்பு வரலாறு எங்கணும் மிகப்பெரிது.  தொடக்க காலத்தில் மிக எளிதாய் சில குறிப்பிட்ட ஆற்றுப் படுகைகளில் மட்டும் பொன் கிடைத்தது. (நம்மூர்ப் பொன்னியிலும் கிடைத்தது.) 

முன்சொன்ன கட்டுரைகளில் பொன் கிடைக்கும் 5 முறைகள் பற்றிச் சொல்லியிருந்தேன்.  ஆற்றுப் படுகையிலும், கரைகளிலும் கிடைப்பனவற்றை புவியியலார் இடப் பொதிகை (placer deposit) என்பார். இவற்றில் கிட்டும் பொன்னை, சல்லடை அல்லது தட்டிலிட்டு நீரால் அலசிப் பொறுக்கி, நுண்டி(> நோண்டி) எடுப்பதைக் கொழித்தல் (Panning) என்பார். 

அடுத்த முறை மடைவாய்த்தல் (Sluicing) என்பதாகும். மாறி மாறி மடைகளுக்கு இடையே கொட்டிய தங்க மணல், மண், கட்டி, பரல் போன்றவற்றை நீரோட்டத்தில் அலசி, பொன் அல்லாதவற்றை வெளிக் கொணர்ந்து, பொன்னை மடைகளிடையே, தொடர்ந்து பாயும் நீரால் சிக்க வைப்பது இம்முறையாகும்.

3 ஆம் முறையை ஆழ்படுகை உறிஞ்சல் (Dredging) என்பார். நல்ல ஈர்ப்புத் திறன் கொண்ட களிமிதவை இறைப்பி (suspension pump) மூலம் நீருக்கு அடியுள்ள ஆற்றுப் படிவை உறிஞ்சிச் சல்லடைக்குக் கொணர்ந்து மடைத்தலுக்கும் அலசலுக்கும் உட்படுத்திப் பொன்னைப் பிரிப்பது இதில் நடக்கும். 

அடுத்து வரும் 4 ஆம் முறையை ஊஞ்சல்பெட்டி (Rocker box) முறை யென்பார். இன்னுங் கடினக் கட்டிகளில் சிக்கிய பொன்னை நீரால் பிரிக்கும் முறை இதுவாகும். இப்படி இந்த 4 முறைகளிலும் பூதிக முறைகளே பயன் படும். 

5 ஆம் முறையில் மட்டுமே வேதியல் குறுக்கிடும். பெரும்பாலான சுரங்கத் திணைக்களங்களில் (mine based plants) இன்று 5 ஆம் முறையே பயன்படுகிறது. இந்த 5 ஆம்முறை எழுந்து 100 ஆண்டுகள் கூட ஆகாது.

இதில் பொற்பாறையை உடைத்துப் பொடியாக்கி சவடியக் கரிங்காலகைக் (Sodium Cyanide) கரைசலோடு வினைபுரிய வைத்து பொடிக்குள் பொதிந்த தங்கம்.வெள்ளியைக் கரைத்துப் பொன்/வெள்ளிக் கரிங்காலகைக் (gold/silver cyanide) கரைசலாக்குவர். பின் அதனோடு, துத்துநாகஞ் (Zinc) சேர்த்து பொன், வெள்ளி மாழைகளைத் திரைய (precipitate) வைத்து, நாகக் கரிங்காலகைக் (Zinc Cyanide) கரைசலைப் பெறுவர். இதோடு, கந்தகக் காடியை (sulphuric acid) வினைக்க வைத்து, கரிங்காலகைக் காடி (Hydrogen Cyanide) ஆக்கி, சமையல் உப்போடு (Cooking salt) மேலும் வினைக்க வைத்து சவடியக் கரிங்காலகை (Sodium Cyanide) செய்வர். சவடியக் கரிங்காலகையை பொற்பாறைப் பொடியோடு மீள வினைக்க வைப்பார். 5 ஆம் முறையில் அதிகத் தங்கம் பிரித்தெடுக்கப் படும். முதல் 4 முறைகளுக்கு ஆகுஞ் செலவை விட 5 ஆம் முறைக்குச் செலவதிகம். சூழியற் கேடும் அதிகம்.

மேலேயுள்ள முதல் 4 பொன்னரிப்பு (இச்சொல் நம் அகரமுதலிகளில் உள்ள்து) முறைகளில் பொற்றுகள் கூடிக் கட்டிகள் குறையுமெனில் அவற்றில் இதள் (mercury) மாழையையும் சேர்ப்பர். 

(இல்>இது>இதல்> இதள்= பளபளப்பு, பளபளக்கும் மாழையான ”இதள்” எனும் பெயரைத் தொலைத்து pArada, rasa என்ற 2 சங்கதச் சொற்களை இணைத்துச் சொல்லத் தொடங்கியது தமிழரின் சோகம். பாரத = பாரமானது. ரஸ = சாறு. திண்மப் பொடியான mercuric oxide இலிருந்து பெற்ற பாரதச்சாறு பாரதரசம் ஆகிப் பின் முதல் ரகரம் நலிந்து, பாதரசமாகும்; quicksilver) 

இதள் மாழையை பெரும்பாலான மாழைகளோடு சேர்ந்து அவற்றை இளக்கி பல்வேறு  மாழ்கங்களை (amalgams) உருவாக்குவர்.  குறிப்பிட்ட மாழ்கத்தைத் தனியே பிரித்துச் சூடாக்கி இதளை ஆவியாக்கி இன்னோரிடத்தில் அதைக் குளிரவைத்து மீண்டும் பயனுறுத்திக் கொள்வர்.  எம்மாழை தேவையோ, அது கிடைத்துவிடும். மேலே, பொன்னைத் தூய்மை செய்வது புடமிடல் எனப்படும், இதற்கும் சூடேற்றம் வேண்டும்,

amalgam (n.)
c. 1400, "a blend of mercury with another metal; soft mass formed by chemical manipulation," from Old French amalgame or directly from Medieval Latin amalgama, "alloy of mercury (especially with gold or silver)," c. 1300, an alchemists' word, probably from Arabic al-malgham "an emollient poultice or unguent for sores (especially warm)" [Francis Johnson, "A Dictionary of Persian, Arabic, and English"], which is itself perhaps from Greek malagma "softening substance," from malassein "to soften," from malakos "soft" (from PIE *meldh-, from root *mel- (1) "soft"). Figurative meaning "compound of different things" is from 1790.

இந்த மாழ்க உருவாக்கத்தின் காரணமாகவே, குறிப்பாகத் தங்கம், வெள்ளித் துகள்களை ஒன்று சேர்ப்பதில், சூழலியற் கேடுகள் இருந்தபோதும் தங்கம் பிரிப்பதில் இதள் பெரிதும் பயன்பட்டு வந்தது. 

மாழ்கம் என்பது இதளும் இன்னொரு மாழையும் சேர்ந்துபெறும் அட்டிழை (alloy) யாகும்.  அதனுள் அமையும் இதளின் அளவைப் பொறுத்து அது நீர்மமாகவோ, மெல்லிய பசையாகவோ, திண்மமாகவோ  அமையலாம். இந்த அட்டிழைகள்  மாழைப் பந்தங்கள் (metallic bonding) வழி ஏற்படுகின்றன, இரும்பு, நரையம் (platinum), துங்கத்திணம் (tungsten), தாண்டலம் (tantalum) தவிர மற்ற  மாழைகளோடும் இது போலும் அட்டிழைகள் உருவாகலாம். வெள்ளி-இதள் மாழ்கம் என்பது பல் மருத்துவத்திலும், பொன் -இதள் மாழ்கம் மண்ணூறல்களில் இருந்து  (mineral ore) பொன் பிரிப்பதிலும் பயன்படுகின்றன.

அறிவியல் அறிவுறாத அக்காலத்தில் , பொன்னுக்கும் இதளுக்கும் ஏற்படும் மாழ்கம் காரணமாகவே, இதளைக் கொண்டு மதிப்பிலா மாழைகளையும் பொன்னாய் மாற்றிவிடலாம் என எண்ணத் துணிந்தார். இதை நம் அகர முதலிகள் மாழாத்தல் [transmutation: late 14c., from Old French transmutacion "transformation, change, metamorphosis" (12c.), from Late Latin transmutationem (nominative transmutatio) "a change, shift," noun of action from Latin transmutare "change from one condition to another," from trans "across, beyond; thoroughly" (see trans-) + mutare "to change" (from PIE root *mei- (1) "to change, go, move"). A word from alchemy.] என்று சொல்லும்.

இதற்காகத் தாவரச் சாறுகளிலும், விலங்குயிரி நீர்களிலும், இதளாவியிலும், வினைசெய்த முயற்சிகள் ஏராளம் ஏராளம்.   மட்டமான மாழைகளைத் தங்கம் ஆக்குவது இன்று வரை நடை பெறவேயில்லை. ஆனாலும், முன்னோர் முயன்றார். இச் செய்முறைகளில் பலவும் (குறிப்பாய்ச் சூடேற்றுவதும், வெதுப்புவதும்,)  கூட வேறு வினைகளுக்குப் பயன்பட்டன. இதில் மூழ்கிப் போனவர்க்கு)  இதளின் மேல் ஒரு பிடிப்பும் ஏற்பட்டது. பொ.உ.300 களில் சங்கதப் பெயரால் வடக்கே குத்தர் காலத்தில் ”ரசாயனம் / இதள்வழிச் ” செலுத்தம் என்ற பெயரும் ஏற்பட்டது. இதள்வழிச் செலுத்தம் என்பது இன்று நேற்று ஏற்படவில்லை. கிட்டத்தட்ட 5000 ஆண்டுகளுக்கு முன் வெண்கலக் காலத்திலேயே ஏற்பட்டுவிட்டது.

பொன்னும் வெள்ளியும் கிடைப்பது அரிதாகிச் செம்பும், ஈயமும், நாகமும் பெரிதும் கிடைத்ததால், வெண்கலம், பித்தளை போன்றவற்றிலிருந்து தங்கம் பெற வழியுண்டா என்ற முயற்சி எகிப்து, சுமேரியா, சிந்துசமவெளி எனப் பலவிடங்களிலும் நடந்தது. தமிழகத்திலும் அது நடந்திருக்க வேண்டும். 

(நான் ஆதிச்சநல்லூரின் காலம் சிந்துசமவெளிக் காலம் என்று நம்புபவன். செம்பு செய்ம்முறை இங்கு நடந்ததற்குச் சான்றுகள் உள்ளன.) 

முதலில் எகிப்து பற்றிப் பார்ப்போம். எகிப்தின் தொடக்க கால அரச குலங்கள் கருப்பு நிறத்தவரே. பின்னால் தான் சிவப்புநிற வேற்றுநிறத்தவர் வந்து கலந்த பின்னால் அரச குலங்கள் பழுப்பு நிறம், செந்நிறம் என்று வேறு நிறங்களில் மாறின. 

எகிப்தின் பழைய பெயர்களில் ஒன்று கருமார்>கம்மார் நாடு என்பதாகும். (chemie என்பது எகிப்திற்கு இன்னொரு பெயர். கருமண் என்று காப்திக் மொழியில் பொருள்.)


மேலுள்ள படத்தில் முதலையின் தோல் காட்டும் பச்சை வடிவம் [k] அல்லது [km] என்று பலுக்கப்படும் அடுத்து வரும் ஆந்தைப் படம் [m] என்று பலுக்கப் படும்  மூன்றாவதான அரைவட்டம் [t] என்றும் பலுக்கப்படும் நாலாவதான  அடையாளம் சொல்லின் முடிவைக் காட்டுகிறது அதற்குப் பலுக்கல் ஒலி கிடையாது. (பார்க்க: https://www.quora.com/What-is-the-meaning-of-the-term-Kemet-and-why-did-some-ancient-Egyptians-call-their-country-by-this-name#)

பழைய எகிப்திய (பின்னால் காப்திக் - coptic - மொழியில்) எழுதும் போது உயிர்கள் காட்டப்படுவதில்லை. அந்தந்த வட்டார வழக்கிற்கேற்ப வெவ்வேறு உயிர்களைப் பெய்துகொள்வார். இதை மொத்தமாய் கெமெட் என்று ஒலிக்கலாம். இதன் பொருள் கம்மார்(கருப்பர்)  நாடு. கம்மார் நாட்டில் இதள் வழி வேலையான  ”கெமெட்” நடந்தது. (All Chemists are in that sense blackeys.)  எகிப்திலிருந்து, குறிப்பாய் அலெக்சாந்திரியாவிலிருந்து, கிரேக்கம், உரோமன், மேலையம்  என்று அறிவியல் செய்திகள் போனபோது இதளை வைத்துச் செய்த சித்துவேலைகள் கம்மார் கலைகள் (black arts) என்றே அழைக்கப் பட்டன. எனவே மேலைநாடுகளில் kemie> kemiya என்று சொல் வளர்ந்தது.

இதள்வழி மாழாத்தல் (ரசவாதம்) நடந்தது நம்மூரிலும் இருந்திருக்கலாம். அது பற்றிய செய்முறை நூல்கள் இன்னும் நம்மூரில் நமக்குக் கிடைக்கவில்லை. பல்வேறு சித்த மருத்துவச் சுவடிகளைத் துருவித் தேடவேண்டும். யாரும் இதை நோக்கி ஆய்வு செய்ததில்லை. இவற்றுள் இச் சிந்தனைகள் ஒருவேளை பொதிந்து கிடக்கலாம். மாழாத்தல் போக வேறு ஒரு சொல்லும் நம்மிடமுண்டு. அது முற்றிலும் தமிழே. அறியாதோர் அதைக் குழப்பி (பேதம் எனும்) சங்கதச் சொல்லோடு பொருத்திக் கொள்வார்.

அத் தமிழ்ச்சொல்லானது வேறுபடுத்தலில் கிளர்ந்த சொல். வேறல் = வேறாதல் ( இயற்கையில் ஒன்று இன்னொன்றாய்த் தானாய் மாறுதல். இதைத் தன்வினை என்பார். இதில் மாந்தத் தலையீடு இருக்குமெனில் மாற்றல் என்றாகும் (பிற வினை). இதேபோல் இடல் என்பது தன்வினை. இட்டல் என்பது பிறவினை; இரண்டு சொற்களையும் சேர்ந்து கூட்டுச்சொல் ஆக்கும்போது வேறிடல் (த.வி+த.வி); வேற்றிடல் (பி.வி+த,வி) வேறிட்டல் (த,வி+பி.வி), வேற்றிட்டல் (பி.வி+பி.வி) என்றாகும். 

இவை பேச்சுவழக்கில் வேதிடல்,  வேத்திடல், வேதித்தல், வேத்தித்தல் என்றுமாகும்.  (ஆற்றுக்குப் போனேன் என்பதை ஆத்துக்குப் போனேன் என்பதும், ஏற்றத்தை ஏத்தம் என்பதும், மாற்றத்தை மாத்தமென்பதும் போல் ஏராளம் காட்டுகள் இப் பேச்சு வழக்கிற்குச் சான்று காட்டும்.) இவ்வளவு எளிமையான விளக்கம் வேதியலுக்கு இருக்கையில் ஏனோ சிலருக்குத் தமிழ்ச் சொற்களைச் சங்கதத்திற்குத் தானமாய் வழங்குவதில் அவ்வளவு விழைவு இருக்கிறது. என்ன செய்வது?

வேதித்தல் என்ற சொல்லிற்கு தமிழ் அகரமுதலிகளில் வேறுபடுத்தல், தாழ்ந்த உலோகங்களை உயர்ந்த உலோகங்களாய் மாற்றல் என்ற பொருள் தருவார்.  வேதகன்= ஒன்றின் தன்மையை வேறுபடுத்துவோன்;  வேதனம் = வேதுச் செயலால் பெறப்படும் பொன்;  வேது= வெம்மை, வேறு பாடு; வேதை = இரசவாதம்.  வேதைச் சிந்தூரம் = உலோகங்களைப் பொன் ஆக்கும் மருந்து . வேதகம் = வேறுபடுத்துகை, வேறுபாடு, புடமிடுகை, புடம் இட்ட பொன், இரும்பு முதலியவற்றைப் பொன்னாக்கும் பண்டம்,  வெளிப் படுத்துகை.  வேதகப் பொன் = புடமிட்ட பொன்; வேத்தியம் = அடையாளம்;   எனவே வேதியல் என்பது ஒன்றை இன்னொன்றாய் மாற்றும் இயல்.   அவ்வளவு தான். இதில் போய்ச் சங்கதம் கூட்டி வந்து பூச்சாண்டி காட்டுவதில் பொருளில்லை

Gr. khymeia என்ற சொல் முதலில் பெரும்பாலும் மருந்து வேதியல் (pharmaceutical chemistry) தொடர்பாகவே புழங்கியது.  பின்னால் மற்ற எல்லாவித வேதியல்களுக்கும் இது பரவியது, அவற்றில் ஒரு சில.

Organic chemistry = அலங்க வேதியல்
Inorganic chemistry = அலங்கா வேதியல்
Physical Chemistry = பூதி வேதியல்.
Organo-metallics = அலங்க மாழையங்கள்.
bio-organic chemistry = உயிர் அலங்க வேதியல். உயிர்வேதியலின் (biochemistry) ஒரு பகுதி.

வேதியலில் ஆர்வமிருந்தால், கீழுள்ள பதிவுகளையும் படியுங்கள்.

https://valavu.blogspot.com/2019/04/1.html
https://valavu.blogspot.com/2019/04/2.html
https://valavu.blogspot.com/2018/07/organ.html
https://valavu.blogspot.com/2018/07/polyester.html
https://valavu.blogspot.com/2018/07/ortho-meta-para.html

அன்புடன்,
இராம.கி.


No comments: