Monday, September 23, 2019

சிலம்பு ஐயங்கள் - 26

வேறு

இவ்வளவு நேரம் கோவலனைச் சாடியவள் “நம்மைவிட்டு இவன் போய் விடான்” என்ற நம்பிக்கையோடு, அவன் குணங்களைச்சொல்லிச் சாய்வதால், இது 3 தாழிசைகளால் ஆன சாயல் வரி.

43.
கைதை வேலிக் கழிவாய் வந்துஎம்
பொய்தல் அழித்துப் போனார் ஒருவர்
பொய்தல் அழித்துப் போனார் அவர்நம்
மையல் மனம்விட்டு அகல்வார் அல்லர்.

44
கானல் வேலிக் கழிவாய் வந்து
நீநல்கு என்றே நின்றார் ஒருவர்
நீநல்கு என்றே நின்றார் அவர்நம்
மான்நேர் நோக்கம் மறப்பார் அல்லர்.

45
அன்னந் துணையோடு ஆடக் கண்டு
நென்னல் நோக்கி நின்றார் ஒருவர்
நென்னல் நோக்கி நின்றார் அவர்நம்
பொன்நேர் சுணங்கிற் போவார் அல்லர்.

தாழையை வேலியாயுடைய இக்கழியின் வழிவந்து எம் விளையாட்டை இவர் அழித்துப் போனார்; அப்படிப்போனவர் நம் மையல் மனம்விட்டு அகல்வார் அல்லர் (எனக்கு இவர் தப்புச் செய்தும் இவர் என்னை அகலவாரல்லர்)

கழிக்காட்டை வேலியாயுடைய இக்கழிவழி வந்து நீ கொடுவென்று ஒருவர் நின்றார். அப்படி நின்றவர் நம்.மான்நேர் பார்வையை மறக்கமாட்டார் (வசந்த மாலைக்காக என்னை மறக்கமாட்டார்.)

அன்னம் துணையோடு நான் ஆடக்கண்டு நேற்று என்னைநோக்கி ஒருவர் நின்றார். அப்படி நின்றவர் நம் பொன்போன்ற தேமலைக் கண்டபின் நம்மை விட்டுப் போகார்.  (என்னவிட்டுக் கோவலன் போகான் என்ற நம்பிக்கை.)

வேறு

அடுத்துவருவது இன்னதென யாரையும் குறிப்பிட்டுச் சொல்லாது பொதுவே இயற்கையிடஞ் சொல்லும் முகமில்(லாத) வரி.

46.
அடையல் குருகே அடையல்எம் கானல்
அடையல் குருகே அடையல்எம் கானல்
உடைதிரைநீர்ச் சேர்ப்பற்கு உறுநோய் உரையாய்
அடையல் குருகே அடையல்எம் கானல்.

குருகே (கொக்கு, நாரை போன்றன) எம்மிடம் வந்து அடையாதே! என் கழிக் கானலுக்கு வந்து அடையாதே உடையும் அலைகளையுடைய சேர்ப்பனுக்கு நான் உற்ற நோயைக் கூறுவாயாக!  (கோவலனுக்குத் திரும்பத் திரும்ப உரை.)

வேறு

47 (கட்டுரை)

ஆங்கனம் பாடிய ஆயிழை பின்னரும்
காந்தள் மெல்விரல் கைக்கிளை சேர்குரல்
தீந்தொடைச் செவ்வழிப் பாலை இசைஎழீஇப்
பாங்கினில் பாடிஓர் பண்ணும் பெயர்த்தாள்.

அப்படி வாய்ப்பாட்டுப் பாடிய இழையுடை. (இங்கே ஆடை என்பது மாதவிக்கு ஆகுபெயரானது. இழை= linen. இச்சொல்லின் பிறப்புரைத்தால் அது பெரிதும் நீளும். வேறிடத்திற் தனிக்கட்டுரையிற் சொல்வேன்.) பின்னர் யாழில் தன் காந்தள் மெல்விரலால் கைக்கிளை குரலாகிய செவ்வழிப்பாலையால் (இதைத் தேவார காலத்திற் காந்தாரப் பண்ணென்பர். இற்றைப்பெயர் இரு மத்திமத் தோடி ச-ரி1-க1-ம1-ம2-த1-நி1. கைக்கிளை குரலாதல் என்பது தலைமைப் பெரும்பண்ணாகிய செம்பாலையில் - அரிகாம்போதியில் - கைக்கிளையை - க2 - குரலாகக் (ச) கொண்டு பண்ணுப்பெயர்த்தால் செவ்வழிப்பெரும்பண் கிடைக்கும். தமிழிசைக் கலைக் களஞ்சியம் தொகுதி 2 - முனைவர் வீ.ப.கா. சுந்தரம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் பக்கம் 202. தமிழிசை பற்றி இங்கு நான் மேலுஞ் சொன்னால் கட்டுரை நீளும். செவ்வழிப்பாலையும், கீழேவரும் விளரிப்பாலையும் வருத்தத்திற்கும், இரங்கலுக்கும் உரியவை. மாலை நேரத்தில் பாடக்கூடியவை.) கருவியிசை யெழுப்பி அதை முறையோடு பாடிப் பின் வேறொரு பண்ணிற் பெயர்த்து வாய்ப்பாட்டெடுப்பாள்.

வேறு

கீழே வரும் நாலுமே முகமில் வரி

48.
நுளையர் விளரி நொடிதரும்தீம் பாலை
இளிகிளையில் கொள்ள இறுத்தாயால் மாலை
இளிகிளையில் கொள்ள இறுத்தாய்மன் நீயேல்
கொளைவல்லாய் என்ஆவி கொள்வாழி மாலை.

49
பிரிந்தார் பரிந்துஉரைத்த பேர்அருளின் நீழல்
இருந்துஏங்கி வாழ்வார் உயிர்ப்புறத்தாய் மாலை
உயிர்ப்புறத்தாய் நீஆகில் உள்ஆற்றா வேந்தன்
எயில்புறத்து வேந்தனோடு என்ஆதி மாலை.

50
பையுள்நோய் கூரப் பகல்செய்வான் போய்வீழ
வையமோ கண்புதைப்ப வந்தாய் மருள்மாலை
மாலைநீ ஆயின் மணந்தார் அவர்ஆயின்
ஞாலமோ நல்கூர்ந் ததுவாழி மாலை.

வேறு

51
தீத்துழைஇ வந்தஇச் செல்லன் மருள்மாலை
தூக்காது துணிந்தஇத் துயரெஞ்சு கிளவியால்
பூக்கமழ் கானலில் பொய்ச்சூள் பொறுக்கென்று
மாக்கடல் தெய்வம்நின் மலர்அடி வணங்குதும்      .

வசந்தமாலையே! நுளையரின் விளரிப்பாலையில் (விளரி குரலாகப் பிறப்பது. இதை விளரிப்பண் என்றுஞ் சொல்வர். இக்காலத்தில் தோடி இராகம் என்பர். இதன் சுரவரிசை சரி1க1ம1 ப த1 நி1. இதை ஒரு மண்டிலத்துள்/ஸ்தாயியுள் அமைத்தும் பாடலாம். அன்றேல் ஒரு மண்டிலத்திலிருந்து  இன்னொரு மண்டிலம் விரவியும் பாடலாம். மெலிவு, சமன், வலிவு என்று 3 மண்டிலங்களில் வலிவு மண்டிலத்திற் பாடுவது எல்லா மகளிர்க்கும் முடியாது.) சமன் இளியிற் (ப) தொடங்கிக் வலிவு கைக்கிளையிற் (க1) கொள்ளும்படி முடித்தாயோ? அப்படி முடித்தாயானால், கொள்வதில் நீ வல்லையாவாய்! (வலிந்த இவனைக் கைக்குள் கொண்டு அடக்கியவளுமாவாய். ஒருவேளை காமச்செயலில் வசந்தமாலை இன்னும் தேர்ந்தவளோ, என்னவோ?) வசந்தமாலையே! என் ஆவியையுங் கொள் (என் ஆவியையும் நீயே வைத்துக்கொள்.)

வசந்தமாலையே! என்னைப் பிரிந்தவர் பரிந்துரைத்த பேரருளின் நிழலில் இருந்து ஏங்கி வாழ்வாரின் உயிரைச் சூழ்ந்துள்ளாய். அப்படிச் சூழ்ந்துளாய் எனில், உ:ள்ளிருக்கும் நிறைவடையா வேந்தன் (காமம் மிகுந்த கோவலன்) மதிலுக்கு வெளியிருக்கும் வேந்தனுக்கு (காத்திருக்கும் customer) என்ன உறவாவான்?

வசந்தமாலையே! தும்ப நோய் மிக, பகல்செய்வான் வீழ, உலகோர் கண் புதைப்ப, நீ வந்தாய், நீ அப்படியாயின் அவர் உன்னை மணந்தவர் ஆயின், உலகம் நல்லது அடைந்தது வாழி! (மாதவி வசந்தமாலையைச் சூளுறைத்துச் சவிக்கிறாள்.)

பெருங்கடல் தெய்வமே! தீயைப் பரப்பிவந்த செல்லள் மருள்மாலை (எனக்கு வேண்டிய வசந்தமாலை) என்னைத் தூக்காது (தொங்கவிடாது) துணிந்த இத் துயர்மிஞ்சும் கிளவியால், ”பூக்கமழ் கானலில் நானிட்ட என் பொய்ச்சூள் பொறுக்கு” என்று உன் மலரடி வணங்குகிறேன்.   
   .
இந்த வரிகள் எல்லாமே கோவலனையும், வசந்தமாலையையும் வைத்துக் கொண்டு அவர் முன்னே மாதவியிட்ட குமறல்கள் தான். முடிவில் ஒரு சாவம். இதற்கு அப்புறம் கோவலன் அங்கிருப்பானா, என்ன? “கானல்வரி யான்பாடத் தானொன்றின் மேல் மனம்வைத்து (வசந்தமாலையோடு நடந்ததை மனம் வைத்து) மாயப்பொய் பலகூட்டும் மாயத்தாள் பாடினாள்” என ஏவலாளர் சூழ்தர கோவன் அங்கிருந்து போகிறான்.

ஆக யாழிசைமேல் வைத்துக் கோவலனின் ஊழ்வினை வந்து உருத்தது.

கானல்வரி என்னும் பகுதி 3 மனங்களிடை நடந்த ஆழமான உரையாட்டு,

அன்புடன்,
இராம.கி.

No comments: