Tuesday, September 03, 2019

சிலம்பு ஐயங்கள் - 11

மாங்காட்டுப் பார்ப்பான் வழி சொன்னதற்கு அப்புறம் அவன் கூறிய தொன்மக் கதைகளைக் காவுந்தி ஐயை மறுத்து .

கப்பத்து இந்திரன் காட்டிய நூலின்
மெய்ப்பாட்டு இயற்கையின் விளக்கங் காணாய்

இறந்த பிறப்பின் எய்திய எல்லாம்
பிறந்த பிறப்பின் காணாயோ நீ

வாய்மையின் வழாது மன்னுயிர் ஓம்புநர்க்கு
யாவதும் உண்டோ எய்தா அரும்பொருள்?   

என்ற 3 கட்டுரைகள் சொல்வாள். முதற்கூற்றில் வரும் கப்பத்து இந்திரன் ஒரு சமணநூல் ஆசானாகலாம். (அவனை தேவலோக இந்திரனாய்க் காட்டுவது வேதநெறி விளக்கமாகும்.) இந்திரன் நூலில் மெய்ப்பாட்டியற்கை பற்றிய விளக்கமிருக்கலாம். (அது என்னவென நமக்குத் தெரியாது.) தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்பவற்றையும், அவை தொடர்பான  உணர்வுகளைப் பற்றியும் மெய்ப்பாட்டியல் கூறும். இவ்விளக்கத்தை ஓர் இலக்கணப் பகுதியாக அக்கால கட்டத்தில் எந்தப் பாகதநூலும். சங்கத நூலும் சொன்னதாகச் சான்றுகளில்லை. (பின்வந்த சங்கத நாட்டிய நூலைப் பிடித்துக் கொண்டு ”தொல்காப்பியர் இதைப் படியெடுத்தார்” என்றுரைத்துத் தொல்காப்பியத்தை நாகசாமி, ஹெர்மன் தீக்கன் போன்றோர்  கீழே வலிந்து இழுப்பர். பாட்டனைப் பேரன் என்பது தான் இவர் போன்றோர் வழக்கம் ஆயிற்றே? சங்கதமென்றால் மறுபேச்சின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்வோர் இப்பொழுது பெருகிவிட்டார்.) ”மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என்று சிறப்புப் பாயிரம் கூறுவதால், கப்பத்து இந்திரன் நூல் தொல்காப்பியத்திற்கு முன்பே கூட எழுந்திருக்கலாம். ஒருவேளை பாயிர ஐந்திரமும், கப்பந்து இந்திரன் நூலும் ஒன்றோ, என்னவோ? யாருக்குத் தெரியும்?

அடுத்த கூற்றான “முற்பிறப்புக்களில் செய்த வினைகளை ஒட்டியே இப் பிறப்பு” என்பது சமணத்தின் 3 நெறிகளுக்கும் பொதுவானது. ”இப்பிறப்பில் நல்லதைச் செய்; செயின நெறிகளைக் கடைப்பிடி. அடுத்த பிறப்பில் உனக்கு நல்லது விளையும். 84 இலக்கம் பிறவிகளைக் குறைக்கமுடியும்.” என்று செயினம் நம்பிக்கை சொல்லும். “இப்பிறப்பில் நல்லதையே செய். சுற்றாருக்கு உதவு. அடுத்த பிறப்பில் என்ன நடக்குமென யாரறிவார்? என்ன விதியோ அது நடக்கும். கலங்காதே. 84 இலக்கம் பிறவிகளானாலும் உனக்கு வீடு பேறு உண்டு.” என்று அற்றுவிகம் மனவுறுதியூட்டும். “இப்பிறப்பில் நல்லது செய். எண்ணமுஞ் செயல்களும் சிறப்பாக இருக்கவேண்டும். உன்னை வருத்திக் கொள்ளாதே. நடுவழிப்பாதையிற் துணிந்துநில். 84 இலக்கம் பிறவிகளைக் குறைத்துவிடலாம்.” என்று நெருக்கங் காட்டி புத்தம் அமைதி சொல்லும். ஆக 3 வெவ்வேறு வேதமறுப்பு நெறிகளும் கொஞ்சங் கொஞ்சமே தம்முள் வேறுபடும்.

”வாய்மையில் வழுவாது மன்னுயிரைக் காப்போற்றுவோருக்கு பெறமுடியாத பொருள் ஏதேனும் உண்டோ?” என்பது மூன்றாவது கூற்றின் பொருள்

இம் 3 கட்டுரைகளையுஞ் சொன்ன காவுந்தி ஐயை “விருப்பப்பட்ட தெய்வத்தைக் கண்டு அடிபணிய நீ போ, நாங்கள் இந்த நீள்நெறியுள் படர்கிறோம்” என்பாள். இவ்வுரையாடல் விராலிமலைக்குச் சற்று முன்னர் நடைபெறுகிறது. கடைசியில் எந்த வழியைக் கவுந்தி தேர்ந்தாளென்பது நமக்குத் தெரியாது. செந்நெறியையே எடுத்ததாய் நாம் எண்ணிக் கொள்கிறோம். மாங்காட்டுப் பார்ப்பானோடு நடந்த உரையாடலுக்குப் பின்  ஒருபகல் தங்கி, மாலையிற் கிளம்புகிறார். ஒரு நாளைக்கு ஒரு காதமென்ற பயணம். சிலம்பில் தென்புலத் தொலைவு வாய்ப்பாடே பயன்பட்டுள்ளது என்று பல காதைகளின் வழி அறிகிறோம். இதன்படி

500 பெருங்கோல் (தண்டம்) = 62 1/2 கயிறு = 1 கூப்பீடு = 5500 அடி = 1.04167 மைல்.= 1.6763595 கி.மீ
4 கூப்பீடு = 1 காதம் = 22000 அடி = 4.166667 மைல் = 6.7050438 கி.மீ
4 காதம் = 1 யோசனை = 88000 அடி = 16.233333 மைல் = 26.820175 கி.மீ

அதாவது ஒருநாளைக்கு 6.7 கி.மீ.யென மெதுவே நடந்து ஓய்வெடுத்து மதுரை நோக்கி நகர்கிறார். பாவம், செல்வந்தர்வீட்டுப் பெண் இதற்கு மேல் எப்படிச் செல்வாள்? முன்சொன்ன ஆரஞர் தெய்வம் கோயில் கொண்ட இடத்திற்குச் (இற்றைக் கணக்கின் படி கோரிப் பாளையத்தில், வைகையாற்று மேம்பாலத்திற்குச்) சற்று முன்னால் (பழம் மதுரை இன்னுஞ் சற்று தள்ளித் தெற்கேயுள்ளது.) கருந்தடங் கண்ணியும், கவுந்தியடிகளும் “வகுந்துசெல் வருத்தத்து வழி மருங்கிருப்பச்” சாலையை விட்டுப் பக்கத்திலிருக்கும் ஒரு பொய்கைக்குச் சென்று  நீர்வேட்கையில்  அதன் படித்துறையில் கோவலன் நிற்கிறான்.   அடுத்த பகுதிக்கு வருவோம்.

அன்புடன்,
இராம.கி.

No comments: