Monday, September 09, 2019

சிலம்பு ஐயங்கள் - 17

"காட்சிக்காதை 163 ஆம் வரியில் வரும் 'ஆரிய மன்னர் ஈரைஞ்ஞூற்றுவர்க்கு' என்பதன் பொருளென்ன?" என்று நாலாவதாய் ஒரு குறுக்குக் கேள்வி எழுந்தது: இதன் விடை சற்று நீளமானது. அதைச் சொல்லுமுன் சங்ககாலச் சேரர் வரலாற்றையும், அதற்குதவியாய் இணையத்திலுள்ள மகத அரசர் காலங்களையும் சற்று ஆழமாய்ப் பார்க்கவேண்டும்.

சிலப்பதிகாரக் காலத்தில் வடக்கே மகத அரசே பேரரசாயிருந்தது. (என் ”சிலம்பின் காலம்” நூலையும் படியுங்கள்.) மகதத்தோடு பொருதாதவன் அக் காலத்தில் வடக்கே மேலெழ முடியாது. அல்லா விடில் மகதத்திற்கு அடங்கிக் கப்பங் கட்டவேண்டும். தெற்கிருந்து படையெடுத்துப் போனவன் (இப் படையெடுப்பை இதுவரை எந்த வடவரும் ஏற்றதில்லை. பாகதச் சான்றுகள்  ஏதும் இதுவரை நமக்குக்  கிடைக்கவில்லை. வெறுமே “தமிழ் வாழ்க” என்று நாம் கூப்பாடு போடுவதிற் பயனில்லை. சிலப்பதிகாரத்தைச் சரியாய்ப் பொருத்தித் தேட வேண்டும். இல்லாவிட்டால், வேறு சிலர் போல் 5/6 ஆம் நூற்றாண்டுப் புதினம் என்று சொல்லித் திரிய வேண்டும். அப்படிச் சொல்ல நிறையத் தமிழரே முன்வருகிறார்.) மகதத்தைச் சண்டைக்கு இழுக்காது தமிழன் வடக்கே போய்வந்தானென்பது கட்டுக்கதையாகி விடும் ”இளங்கோ வடிகட்டிய பொய் சொல்கிறார்” என்று கருதவில்லையெனில், கதைக்காலம் மகதத்தோடு பொருந்த வேண்டும்.

கதையை 5, 6 ஆம் நூற்றாண்டிற்குத் தள்ளுகிறவர் வஞ்சிக் காண்டத்தையே மறுக்கிறார். “எல்லாமே கப்சா, இதுவொரு புதினம்” என்பார் ஒரு நாளும் வஞ்சிக் காண்ட முகன்மையைப் புரிந்தவரில்லை என்று பொருளாகும். அவர் தமிழரை இழிவுசெய்கிறாரென்பது இன்னொரு ஆழமான பொருள். அப்படி மறுக்கிறவர் ”சேரன் யாரோடு போர்செய்திருப்பான்?” என்பதையாவது ஆதாரத்தோடு சொல்ல வேண்டும். இளங்கோவென்ற எழுத்தாளர் கற்பனைக் கதை சொல்லியிருந்தால், மதுரைக் காண்டத்தோடு முடிப்பதே சரியான உச்ச கட்ட உத்தியாகும். அதற்கப்புறம் காதையில் ஓரிரு காட்சிகளைச் சொல்லி “சுபம்” என முடித்திருக்கலாம். (அப்படியே சிறுவயதில் இரவெலாம் நான் விழித்துப்பார்த்த 15 நாள் கண்ணகி கூத்துக்கள் நடைபெற்றன. இக் கூத்துகளை 3,4 முறை பார்த்துள்ளேன். கோவலன் கதையெனும் நாட்டுப்புறக் கூத்துப்பாட்டும் அப்படித்தானிருக்கும். வஞ்சிக்காண்டம் இருக்காது.)

ஒரு கதையை எங்கு முடிக்கவேண்டும் என்பதற்கு உளவியல் தொடர்பாய்க் கதையிலக்கணமுண்டு. அக்கதையிலக்கணம் மீறிச் சிலப்பதிகாரமுள்ளது. கண்ணகி பாண்டியனைப் பழிவாங்கியதும் மதுரையை எரித்ததும் கூடச் சிலம்பின் முடிவல்ல. மதுரைக்காண்டத்தில் முடிவது சிலம்பு அணிகலனின் அதிகரிப்பால் வந்தது. வஞ்சிக்காண்டத்தில் முடிவதோ, சிலம்பெனும் மலையரசின் அதிகாரம். அது வடக்கே போய் வெற்றி கொண்டு தமிழகத்திற் தன்னைப் பேரரசனாய்க் காட்டிக்கொள்கிறது. அதனாற்றான் சிறைப்பிடித்த ஆரியவரசரை மற்ற வேந்தருக்குக் காட்டச் சொல்கிறான். சிலம்பென்ற சொல்லிற்கு காப்பியத்தில் இரு பொருளுண்டு. ”இளங்கோ வஞ்சிக் காண்டத்தை ஏன் நூலில் வைத்தான்? அதிலென்ன சொல்ல விழைகிறான்? உட்கருத்தென்ன? ஒரு காட்சி, காதை, காண்டம் நூலில் ஏன் வருகிறது?” என்பதே கட்டுக் கதைக்கும், காப்பியத்திற்குமான வேறுபாடு.

சிலம்பில் வரும் ஆரியவரசர் பெரும்பாலும் மகதத்திலும், மகத்தைச் சுற்றியும் இருந்தவரே. வடக்கென்றவுடன் நம்மையறியாது தில்லியையும், தில்லிக்கு வடமேற்கையுமே எண்ணிக் கொள்கிறோம். அது பிற்காலப் பார்வை. பழங்காலத்தில் வடக்கென்பது வாரணாசி, பாடலி புத்தம் சுற்றிய பகுதிகளே. சங்க காலத்திற் கங்கையே வடக்கின் வற்றாத ஊற்று பாடலி புத்தத்தை தக்க சீலத்தோடு உத்தரப் பாதையும், தென்னாட்டோடு தக்கணப் பாதையும் கலிங்கத்தோடு கடற்கரைப் பாதையும் இணைத்தன. மூன்றாம் பாதை அக்காலத்தில் தமிழகத்தை இணைக்கவில்லை. பெரும்பாலான பயணங்கள், படையெடுப்புக்கள் உத்தர, தக்கணப்பாதைகளின் வழியே நடந்தன. இற்றை அவுரங்காபாதிற்குத் தெற்கே கோதாவரி வடகரைப் படித்தானத்தில்> பயித்தான்> பைத்தான்)  தக்கணப் பாதை முடிந்தது. மோரியருக்கான தண்டல் நாயகராய் படித்தானத்திலிருந்து, பின்பு ஆளுநர் ஆகவும் மன்னராகவும் நூற்றுவர்கன்னர் (சாதவாகன்னர்) மாறினார். நூற்றுவர்/ சாத்துவருக்கு, நொறுக்குபவர் என்ற பொருளுண்டு. நூறென்ற எண்ணிக்கைப் பொருள் கிடையாது. சிலம்புக்காலத்தில் நூற்றுவர் கன்னரும், அவருக்கு மேலிருந்த மகதக் கனக அரசரும் வலியிழந்திருந்தார்.

மொழிபெயர் தேயக் கருநாடக, வேங்கடவழி (காடுவிரவிய வேகுங்கடத்தில் மக்கள்வதிவது மிகக்குறைவு)  தகடூரூடே மூவேந்தர் நாட்டிற்கு தக்கணப் பாதையின் தொடர்ச்சியிருந்தது. Plus there was a standing Tamil army to protect the language-changing country as per Maamuulanaar. மொழிபெயர் தேயத்தைத் ”திராமிர சங்காத்தம் 1300 ஆண்டுகள் காப்பாற்றியது என்றும், தானே சங்காத்தத்தை உடைத்ததாயும்” கலிங்கக் காரவேலன் தன் கல்வெட்டிற் குறிப்பான். மொழி பெயர் தேயத்தை ஒட்டியதால் நூற்றுவர்கன்னர் நாணயத்தின் ஒருபக்கம் தமிழும், இன்னொரு பக்கம் பாகதமும் இருந்தது. நூற்றுவர் கன்னர் தாம் சுருங்கிய காலத்தில் ஆந்திர அமராவதிக்குத் தலைநகரை மாற்றிக் கொண்டார். நூற்றுவர்கன்னர் தொடங்கியது படித்தானம்; முடிந்ததோ அமராவதி. கன்னருக்குப் பின் படித்தானத்தில் கள அப்ரர்>களப்ரர்  அரசு ஏறினார். பின்னாளில் அவரே மூவேந்தரைத் தொலைத்தார். சங்க காலத்தில் தொண்டைநாட்டின்மேல் கலிங்கம் வரை கடற்கரை தவிர்த்த நிலம் தொண்டகக் காடு (>தண்டக ஆரண்யம்) எனவாயிற்று. பின் இக்காடழிந்து இற்றை ஆந்திரமானது. காடு அழித்த காரணத்தால் பல்லவர்க்குக் காடவர்/ காடுவெட்டி என்ற பெயர் வந்தது.
      .
தகடூரிலிருந்து வயநாடு வழியே குடவஞ்சிக்கும், கொங்குவஞ்சி வழியே உறையூருக்கும், பொதினி (பழனி) வழியே மதுரைக்கும் பாதைகளிருந்தன. (இன்றும் பாதைகள் இப்படித்தான்.) குறிப்பிட்ட இக் கூட்டுச்சாலைகள் இருந்ததாலேயே அதியமான்கள் வடக்கே அறியப்பட்டார். காரணமின்றி அசோகன் சத்தியபுத்திரரைச் சொல்லவில்லை. மகதத்திலிருந்து தமிழகம்வர தகடூர் அதியமானைத் தாண்டி வரமுடியாது. இன்று சிங்கப்பூரை மீறி இந்தியப் பெருங்கடலிலிருந்து பசிபிக் பெருங்கடலுக்குள் எந்தக் கப்பலாவது போகமுடியுமா? அதன் தடந்தகை இருப்பாற் (strategic existence) சிங்கப்பூர் பெரிதாகப் பேசப்படுகிறது. அப்படியே தான் தகடூரின் இருப்பு தமிழகத்தில் இருந்து வடக்கே போவதற்கு ஒருகாலத்தில் இருந்தது.

(சங்கப் பாடல்களில் பாதிக்குமேல் பாலைத்திணைப் பாடல்கள். அவற்றிற் பெரும்பகுதி வணிகத்திற்போன செய்திகள் தாம். வணிகரெலாம் எங்கு தான் போனார்? முடிவில் எல்லாமே மகதத்திற்குத் தான். அதேபோல் மகதத்தில் இருந்தும் தமிழகம் வந்தார். அவருக்கு வேண்டிய பொன் (வட கொங்கிற்- பிற்காலத் தென்கருநாடகம் - கிடைத்தது. எவன் கொங்கைக் கவர்ந்தானோ அவனே தமிழரிற் பெருவேந்தன்), மணிகள் (தென்கொங்கிற் கிடைத்தன. கொங்கு வஞ்சி இதனாலேயே சிறப்புற்றது), முத்து (நித்தில்>நிதி என்ற சொல் முத்திலெழுந்தது. பாண்டிநாடு முத்திற்குப் பெயர் போனது), பவளம் (சோழ நாட்டிற் கிடைத்தது.) இன்ன பிற செல்வங்கள் (குறிப்பாய்ச் செலாவணிச் சரக்குகள்-exchange goods) கிடைக்கவேண்டுமெனில், 2000 ஆண்டுகளுக்கு முன் தமிழகம் வராது முடியாது. எந்த நாடு செலாவணிச் சரக்குகளை அதிகம் கொண்டதோ, அதுவே அக்கால வணிகத்தில் வென்றது. மகதத்தை விடச் சிறு பரப்பே கொள்ளினும், செலாவணிச் சரக்குகளால் தமிழர் அக்காலத்தில் தனிப்பெரும் நிலை கொண்டார்.

இவ்வணிகத்தில் கொங்கு வஞ்சியும், தகடூரும் முகன்மையாயிருந்தன. அதை யாரும் மறுக்கவில்லை. தொல்லியல் வெளிப்பாடுகள் அதையே  காட்டின. மணிகளுக்கும், மாழைகளுக்கும் கொங்கு மண்டலம் பெயர் பெற்றது. அதை வைத்துச் ”சேரர் தலைநகரே இங்குதான் இருந்தது” என்பது சற்று அதிகம். வானத்திற்கும் புவிக்குமாய் கோட்டை கட்ட முயல்வதாகும். கொங்கு வஞ்சி என்றுமே குட வஞ்சிக்குக் கீழ்ப்பட்டிருந்தது. வேண்டுமென்றே கொங்கு வஞ்சியைத் தூக்கிப் பிடிப்பவர் ஆய்வின்றிப் பேசுகிறார். (ஒவ்வொருவரும் தம் வாழிடங்களைத் தூக்கிப் பிடிப்பதற்காய் ஏரணத்தைக் கடாசுவது பொருளற்றது. ”திருச்சியிலிருந்து மதுரைக்கு காரைக்குடி வழிதான் எல்லோரும் போனார்” என்று நான் சொன்னால் பலருஞ் சிரிப்பார். விராலி மலை வழியே குறைத்தொலைவுப் பாதை என்பது உள்ளமை நடைமுறை. மக்கள் மதிப்பார்.) கொங்கு வஞ்சி வாணிகத்தில் தகடூரோடு தொடர்புற்றது இயற்கையே. ஆனால் சிலம்பை ஆழப் படித்தால் குட வஞ்சியின் சிறப்புப் புரியும். (கொஞ்சம் பொறுக்க வேண்டும். இப்பொழுது தானே 4,5 ஆண்டுகள் முன் தொல்லியலார் முசிறிப் பட்டணத்தைக் கண்டுபிடித்தார். அங்கிருந்து சிறு தொலைவிற் குட வஞ்சி கிடைத்துவிடும்.)

அன்புடன்,
இராம.கி.

No comments: