Sunday, September 22, 2019

சிலம்பு ஐயங்கள் - 25

வேறு

அடுத்தது ஆறு தாழிசைகளாலான மயங்குதிணை நிலைவரி.

37.
நன்நித்திலத்தின் பூண்அணிந்து நலம்சார்பவளக் கலைஉடுத்துச்
செந்நெல்பழனக் கழனிதொறும் திரைஉலாவு கடல்சேர்ப்ப.
புன்னைப்பொதும்பர் மகரத்திண் கொடியோன்எய்த புதுப்புண்கள்
என்னைக்காணா வகைமறைத்தால் அன்னைகாணின் என்செய்கோ?

38
வாரித்தரள நகைசெய்து வண்செம்பவள வாய்மலர்ந்து
சேரிப்பரதர் வலைமுன்றில் திரைஉலாவு கடல்சேர்ப்ப.
மாரிப்பீரத்து அலர்வண்ணம் மடவாள்கொள்ளக் கடவுள்வரைந்து
ஆர்இக்கொடுமை செய்தார்என்று அன்னைஅறியின் என்செய்கோ?

39
புலவுற்றுஇரங்கி அதுநீங்கப் பொழில்தண்டலையில் புகுந்துஉதிர்ந்த
கலவைச்செம்மல் மணம்கமழத் திரைஉலாவு கடல்சேர்ப்ப.
பலஉற்றுஒருநோய் துணியாத படர்நோய்மடவாள் தனிஉழப்ப
அலவுற்றுஇரங்கி அறியாநோய் அன்னைஅறியின் என்செய்கோ?

வேறு

40
இளைஇருள் பரந்ததுவே எல்செய்வான் மறைந்தனனே
களைவுஅரும் புலம்புநீர் கண்பொழீஇ உகுத்தனவே
தளைஅவிழ் மலர்க்குழலாய் தணந்தார்நாட்டு உளதாம்கொல்
வளைநெகிழ எரிசிந்தி வந்தஇம் மருள்மாலை?

41
கதிரவன் மறைந்தனனே கார்இருள் பரந்ததுவே
எதிர்மலர் புரைஉண்கண் எவ்வநீர் உகுத்தனவே
புதுமதி புரைமுகத்தாய் போனார்நாட்டு உளதாம்கொல்
மதிஉமிழ்ந்து கதிர்விழுங்கி வந்தஇம் மருள்மாலை?

42
பறவைபாட்டு அடங்கினவே பகல்செய்வான் மறைந்தனனே
நிறைநிலா நோய்கூர நெடுங்கண்நீர் உகுத்தனவே
துறுமலர் அவிழ்குழலாய் துறந்தார்நாட்டு உளதாம்கொல்
மறவையாய் என்உயிர்மேல் வந்தஇம் மருள்மாலை?

நன்முத்தால் பூணணிந்து நலஞ்சேர்ந்த பவளமேகலையை உடுத்துச் செந்நெல் பழனக்கழனி தோறும் திரும்பத் திரும்ப உலாவும் கடற்சேர்ப்பனே [இது கோவலனைக் குறிக்கும். அந்தக் காலத்தில் மேகலை என்னும் அணியைப் பெண்கள் மட்டும் இன்றி, ஆண்களும் அணிந்தார் போலும். மேகலை நடுவே செம்பவளமோ (பவள மேகலை), செம்மணியோ (மணிமேகலை) இருக்கலாம்.] புன்னை செறிந்த சோலையில் மகரத் (சுறாமீன்) திண்கொடியோன் (காமன்) எய்த புதுப்புண்கள் (வசந்த மாலையின் காமத்தால் ஏற்பட்ட புண்கள்) என்னைக் காணாவகை மறைத்தால், அதனைத் தாய் (சித்திராபதி) அறிந்தால் என்ன செய்வாய்?   

வளந்த செம்பவள உயிரியின் வாய்திறந்து பெற்ற கடல் தரளங்களால் (முத்தல்ல. உருண்ட பவளம். வேதியலின்படி முத்தும் பவளமும் CaCO3 தான். மாசுகளால் வெவ்வேறு நிறங்களை அவை பெறுகின்றன.) நகை செய்து சேரிப்பரதர் வலைகள் கிடக்கும் முன்றிலில் திரும்பத் திரும்ப உலாவும் கடற்சேர்ப்பனே! மழைக்காலப் பீர்க்க மலரின் (பசலை) நிறத்தை மடவாள் கொள்ள (இங்கு மாதவி தன்னைக் குறிப்பிடுகிறாள். அதிர்ந்து வெளுத்த நிறம். திகைப்பவர்க்கும் இது ஏற்படும்.) ”தலைவனையும் மீறி இக்கொடுமையை யார் செய்தார்?” என்று என் அன்னை அறிந்தால் என்ன செய்வாய்?

புலவு நாற்றம் இரங்கி அது நீங்கப் பொழிற்சோலையிற் புகுந்து உதிர்த்த கலவைச்செம்மலின் (கீழே விழுந்த பல்வேறு பூக்களின் கலவை). மணங் கமழத் திரும்பத் திரும்ப உலாவும் கடற்சேர்ப்பனே! பலவுமுற்று, இன்ன நோயெனத் துணியாத படர்நோய் மடவாள் தனியே உழந்து கிடக்க, ”மெலிந்து போய் இரங்குவதாய் யாரும் அறியாத நோய்” என என் அன்னை அறிந்தால் என்ன செய்வாய்?     

முறுக்கு விரிந்த மலர் சூடிய குழலாளே! இளைய இருள் பரந்தது. பகல் செய்வோன் மறைந்தான். களைவதற்கரிய தனிமை நீரை எம்கண்கள் பொழிந்து உகுக்கின்றன வளை நெகிழ, நெருப்பினைச் சிந்திவந்த இம் மருள்மாலை (வசந்தமாலை) நம்மைப் பிரிந்த தலைவர் நாட்டில் இருப்பாளோ?

புது நிலவை ஒக்கும் முகமுடையவளே! கதிரவன் மறைந்தான், காரிருள் பரந்தது, உதிர்ந்த மலரை ஒக்கும் மையுண்ட கண்கள் துன்ப நீரை உகுக்கின்றன. தன் அறிவை உமிழ்ந்து செல்வத்தை விழுங்கி வந்த இம் மருள்மாலை போனவர் நாட்டில் இருப்பாளோ?

அவிழ்ந்த மலர்களை உடைய குழலாளே! பறவைகளின் பாட்டுகள் அடங்கின. பகல் செய்வான் மறைந்தனன். நிறுத்த முடியாத நோய் கூர்ந்துவர நெடுங்கண்ணீர் உகுத்தன. மறவை (எதிரி) போல் என் உயிர்மேல் வந்த இம் மருள்மாலை என்னைத் துறந்தவர் நாட்டில் இருப்பாளோ? 

மீண்ரும் சொல்கிறேன். பாட்டெங்கும் நிறைந்த இறைச்சிப் பொருளைக் கூர்ந்து கவனியுங்கள்.

அன்புடன்,
இராம.கி,

No comments: