Wednesday, September 25, 2019

சிலம்பு ஐயங்கள் - 28

(சற்று நீண்ட பதிவு)

இனிப் பரதகுமாரரும் (பூரியர் = bourgeoisie. விலையைப் பரத்துவோர் பரதர்), அரசகுமாரரும் (king's relatives) வந்து செல்லும் கணிகையர் வீதியின் நீள் விவரிப்பு வருகிறது. நீளத்திற்குப் பொறுத்துக் கொள்ளுங்கள். வேறுவழி யில்லை. இதைச் சுருக்கினாற் சுவை போய்விடும். பொதுவாக எல்லாக் கடைகளின் மேலும் “ அது என்ன கடை?” என்றுதெரிவிக்க (இக்கால விளம்பரம்போல்) கொடிகள் அக்காலத்திற் பறக்கும். அதையொட்டிப் பொதுமகளிர் வீடுகளின் மேல் கொடிகளசைவது இங்கு சொல்லப்படுகிறது. கோட்டைக்கருகில் வந்தவுடன் கோவலன் பார்வையிற்படும் முதல் விவரிப்பே பொதுமகளிர் பற்றியாவதால், “பாம்பின் கால் பாம்பறியும்” எனப் புரிந்து கொள்கிறோம். கணிகையர் பாவனைகளிற் பழக்கப்பட்ட கோவலனுக்கு சட்டென அது தானே புலப்படும்? என்ன சொல்கிறீர்கள்?

காலைப் போதில்,
மேற்குக்காற்று விரைந்துவீசக் கொடிகளசையும் தெருவின்
பொதுமகளிர் தம் காதற்செல்வரோடு,
நீர்பெருகிவரும் வையை மருதந்துறையில்
அதன் விரி பூந் துருத்தியின் (finger jetty with wild flowers)
வெண்மணல் அடைகரையில்,
நீரில் ஓங்கிய மாடங்கொண்ட நாவாயை இயக்கி,
பூக்கள் நிறைந்த புணையைத் தழுவிப்
புனலாடியமர்ந்து பொழுதுபோக்கி,

பகற் பொழுதில்
மூதூருக்குள் (old town. It implies capital) வந்து
தண்ணறும் முல்லையையும், தாள்நீர்க் குவளையையும்,
கண்ணவிழ் நெய்தலையும் கூந்தலில் பொருந்தச் சூடி,
தாது விரிந்த தண் செங்கழுநீர்ப் பிணையலைக்
கொற்கை முத்து மாலையோடு பூண்டு,
தெற்கேயுள்ள பொதியிலின் சந்தனச் சேறை மெய் முழுதும் பூசி,
பொற்கொடி மூதூரின் (மதுரை) பொழிலை ஒட்டியமர்ந்து பொழுதுபோக்கி,

எற்பாட்டு நேரத்தில்,
இளநிலா முற்றத்தில்,
தன் அரையின்மேல் பூப்பின்னிய அரத்தப்பட்டை உடுத்தி,
வால்போல் தொங்கும் கூந்தலில், வெட்பாலைப் பூ பொருந்திய,
சிறுமலையின் (திண்டுக்க;லிலிருந்து மதுரை வரும் வழியில் தென்படும் சிறுமலை) செங்கூதாளமும், நறுமலர்க்குறிஞ்சியின் நாள்மலரும், வேய்ந்து,
குங்குமச் செஞ்சாந்தை கொங்கையில் இழைத்து,
செந்தூரச் சுண்ணம் சேர்ந்த மேனியில்,
செங்கொடு வேரியின் செழும்பூ மாலையை
அழகிய பவளக் கோவை அணியொடு பூண்டு,
தாங்கொண்ட கோலத்தின் தகையைப் பாராட்டும்படி
மலர்ப் படுக்கையின் மேலிருந்து,

மலைச் சிறகை அரிந்த வச்சிர வேந்தனான இந்திரனிடம்
ஆரவாரம் மிகுந்த மதுரை நகரின் செவ்வணி காட்டும்
கார்கால அரசன் வாடையோடு வருகின்ற காலத்திலுமின்றி,

சிற்ப வல்லோராற் செய்யப்பட்ட முகில்தோய் மாடத்தில்
குருங்கண் சாளரப் பக்கலில் அகில் விறகு நெருப்பிற்கு அருகே,
நறிய சாந்து பூசிய மார்புடைய மாந்தரோடு கூடி அமருங் கூதிர்க் காலத்திலும்,

வளமனை மகளிரும், ஆடவரும் விரும்பி இளநிலா முற்றத்தில்
இளவெயிலை நுகரும்படி விரிகதிர் மண்டிலம் தெற்கே போக
வெண்முகில் அரிதில் தோன்றும் முன்பனிக் காலத்திலும்,

அதுவுமின்றி,

உயர்ந்து பரந்த ஆற்று வளைவுகளில் தொண்டு செய்யும் ஊழியரிட்ட
அகில், துகில், ஆரம், வாசம், தொகுத்த கருப்பூரம் ஆகியவற்றின் மணஞ் சுமந்து
உடன்வந்த கீழைக்காற்றோடு புகுந்து, பாண்டியன் கூடலில்,
வெங்கண் நெடுவேளின் வில்விழாக் காணும் பங்குனி முயக்கக் காலத்தில்
பனியரசு எங்கேயிருக்கிறான்?- என்ற படியும்,

குருக்கத்திக் கோதை தன் கொழுங்கொடியை எடுப்ப,
இளமரக் காவும் நந்தவனமும் நறுமலர்களை ஏந்தத்
தென்னவன் பொதியமலைத் தென்றலோடு புகுந்து
மன்னவன் கூடலில் மகிழ்துணையைத் தழுவும்படி
இன் இளவேனில் எங்கு தான் உள்ளதென்றும்

கொடியுரு உடைய மகளிர் தம்மேல் உரிமை கொண்ட பெருங் கொழுநரோடிருந்து பருவங்களை எண்ணும் காலத்தில்
கன்றுகள் அமரும் ஆயத்தோடு களிற்றினம் நடுங்க,
வெயில் நிலைபெற்ற, குன்றுகள் நிறைந்த நன்னாட்டின்
காடுகளில்  தீ உண்டாகும்படி அழலை மூட்டி,
கோடையொடு புகுந்து கூடலை ஆண்ட வேனில் வேந்தன்

வேற்றுப்புலம் படர முயல்கின்ற மிக்க வெயிலுடைய கடைநாளில் 

கூடார வண்டியும் (வையம் = wagon), பல்லக்கும், மணிக்கால் படுக்கையும்,
உய்யானத்தின் உறுதுணை மகிழ்ச்சியும், சாமரைக் கவரியும்,
பொன்னாலான வெற்றிலைப் பெட்டியும், தம் அரசன் கொடுத்த கூரிய நுனிவாளும் எனப் பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கையில்

பொற்றொடி மடந்தையரின் புதுமணம் புணர்ந்து, செம்பொன் வள்ளத்தில்
சிலதியர் (வேலைக்காரர்) ஏந்திய இனியதேறலை மாந்தி மயங்கி,
”வரிங்காரம்”(=ரீங்காரம்) பாடும் வண்டினத்தை அவை பொருந்துமிடத்தில் அன்றியும், நறுமலர் மாலையின் வறிய இடத்திலுங் கடிந்து,

ஆங்கு

இலவு இதழ் போலும் செவ்வாயில்
இளமுத்துப் போலும் பற்கள் அரும்ப,
ஊடற் காலத்துப் போற்றாது உரைத்த
கருங்குவளைக் கண்ணாரின் கட்டுரை எதற்கும்
நாவால் அடங்காத நகைபடுங் கிளவியும்,

அழகிய செங்கழுநீர்ப்பூவின் அரும்பை அவிழ்த்தது போல்,
செங்கயல் நெடுங்கண்ணின் செழுங்கடைப் பூசலும்,
கொலைவில் போன்ற புருவக் கோடிகள் சுருளத்
திலகம் பதித்த சிறுநெற்றியில் அரும்பிய வியர்வைத் துளியும்

எனச் செவ்வையான இருப்பை எதிர்பார்க்கும் செழுங்குடிச் செல்வரோடு,
நிலத்தைப் புரக்கும் அரசருக்கு மகிழ்ச்சிதரும் வீதியும்.

[இனி என் குறிப்புக்கள். வைகைநீரில் மாடங்கொண்ட நாவாயென்பதால் கோடையிலும் ஆற்றில் பெருவெள்ளம் தேங்கியது புலப்படும். இன்று மதுரைக்கருகில் கிட்டத்தட்ட மணலாறு தான் இருக்கிறது; அன்றேல் சாக்கடையும், சவர்க்கார நுரை கலந்த கழிவுநீரும் தான் வைகையிற் பாய்கிறது. மதுரைக்கு அப்புறம் இன்றிருக்கின்ற கடைமடை வேளாண்மை கடினம் தான்.

மூதூர் = old town. பெரும்பாலும் கோட்டையும், மூதூரும் வேறுபட்டவையோ என்ற எண்ணம் எனக்குண்டு. இன்னும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. மூதூருக்கு மருதந்துறை (மருதை) என்ற பெயரும், கோட்டையின் உள்ளிருந்த அரசவூருக்கு மதிரை என்ற பெயரும் இருந்திருக்கலாம். மருதை, மதிரை என்ற இரண்டும் மருவி மதுரை என்றாகியிருக்கலாம். தென்மதுரை, கவாட புரம், கொற்கை, மணலூரென நகர்ந்து வந்தது உண்மையானால், கொற்கையே பாண்டியரின் தோற்றம் என்பதும் உண்மையானால், மூதூரும் கோட்டையும் வேறுபட்டிருக்க வாய்ப்புண்டு. கீழடியின் தொல்லாய்வே அதை நமக்கு வெளிப்படுத்தவேண்டும். காத்திருப்போம்.

ஏற்பாட்டு நேரப் பொழுதை இற்றைத் தமிழில் மறந்து மாலையையும், யாமத்தையும் நாம் நீட்டிச் சொல்லுவது பெருஞ்சோகம். படித்தோர் இப் பிழையை மாற்றினால் மற்றையோருக்கும் பிழையைச் சொல்லிச் சரி செய்ய முடியும். 6 சிறுபொழுதுகளை மீண்டும் நாம் புழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

அரத்த நிறம் என்றதால் சீனப்பட்டை சட்டென இங்கு அடையாளங் கண்டு கொள்கிறோம். கி.மு.,80 வாக்கில் இது இங்கு புழங்கியது என்பது ஓர் அரிய வரலாற்றுக் குறிப்பு. கி.மு. முதல் நூற்றாண்டில் சீனத்தோடு நமக்குத் தொடர்பு இருந்திருக்கிறது, தவிர, காடுகாண்காதையை விவரிக்கையில் சிறுமலைக்காடு, கோடைக்கானல் பற்றிச் சொன்னேன். இங்கும் சிறுமலை சொல்லப்படுகிறது. சிலம்பின்வழிச் சிறுமலையை அடையாளங் காணாது, கவுந்தியைக் கர்நாடகத்திற்கும், திருவரங்கத்தைச் சீரங்கப்பட்டினத்திற்கும் கொண்டு போவாரை நாம் என்சொல்வது? மஞ்சள் கண்ணாடி போட்டுப் பார்த்தால் உலகம் மஞ்சளாய்த்தான் தெரியும்.   

குறிஞ்சியென்பது கோடைக்கானல் பேருயர மலைகளிற் பூப்பது. செங் கூதாளம் என்பது நடுத்தர உயரங் கொண்ட சிறுமலையில் கிடைப்பது. வெட்பாலை விராலி மலையிலிருந்து மதுரை வரும் வரையுள்ள பாலை நிலத்திற் கிடைப்பது மூன்றையும் சேர்த்துச் சொல்வது ஒருவித திணை மயக்கம். ஆனால் அதில் ஒரு நளினம் தென்படுகிறது. எந்தத்திணையும் இன்னொன்றிற்குச் சளைத்ததல்ல. செங்கொடு வேரி என்பது இன்னுஞ் சரியாக அடையாளங் காணாத ஒரு புதலியற் சொல். சிலப்பதிகாரத்தைப் புதலியற் கண்ணோட்டத்தோடு படித்து ஓர் ஆய்வு வரக்கூடாதா? - என்ற ஏக்கம் எனக்குண்டு.

அடுத்துச் சங்க இலக்கியத்திற் பலவிடங்களில் கூறப் படும் புணையையும் நாம் முற்றிலும் புரிந்துகொள்ளவில்லை. நீரைக் கடக்க மாந்தர் மரத் தோணிகளை மட்டும் பயனுறவில்லை. மிதக்கும் புற்கட்டுகளும் அதற்குப் பயன்பட்டன. குறிப்பாகக் கோரைப்புற் கட்டுகள். வளைபொருள் சுட்டும் கொடுக்குப் புற்களைக் கொறுக்குப்புற்களென்றும் அழைத்தார். கொடு> கோடு>கோறு>கோறை> கோரை என்றும் இச்சொல் திரியும். (கோரை அதிகமாய் விளைந்த இடம் கொற்கை. அப்பெயர் அப்படி எழுந்தது தான்.)

இற்றைத் தமிழ்நாட்டிற் பலவிடங்களில் -சென்னை வேளச்சேரிக்கப்புறம் பள்ளிக்கரணை போகும் வழியிலுள்ள சதுப்பு நிலம், சிதம்பரம்-சீர்காழி வழியில் கொள்ளிடந் தாண்டிவரும் தைக்கால், திருநெல்வேலி-செங்கோட்டைச் சாலையில் சேரன்மாதேவிக்குச் சற்று முந்தையப் பத்த மடை - எனப் பல பகுதிகளிற் கோரை செழித்து வளர்கிறது. கொற்கைக்கு அருகிலும் கோரை மிகுதி, தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் போகும் போது இதை நன்கு காணலாம். 

கோரைகளிற் கனம், சன்னம், கோலெனப் பல்வேறு விதப்புகளுண்டு. கோரைப் புற்கட்டுகளைப் புணைத்துச் (>பிணைத்து) செய்தது புணை. ”கொழுங்கோல் வேழத்துப் புணை” என்று அகம் 186-12 இலும், அகம் 152 இலும் பரணர் சொல்வார். கொழுங்கோல்= கொழுத்த கோல். வேழம்= கொறுக்கம் புல் தட்டை. (வெள்ளைநார்த் தட்டை வேழமாகும். இது ஒருவகை நாணல். வேழம் என்ற சொல்லைக் கரும்பிற்கும் நாம் பயன்படுத்துவதாற் குழம்புகிறோம்.) ”புணை” என்ற சொல்லின் கீழ் 38 இடங்களுக்குமேல் சங்ககாலக் குறிப்புக்களுண்டு. அவற்றை ஆய்ந்தால் பலன் கிடைக்கும்.

எகிப்து, சுமேரியா, சிந்து, அசிரிய, பாபிலோனிய. பொனீசிய, அஸ்டெக், மாய, இங்க்கா, (ஈசுடர் தீவு போன்ற) பாலினீசியப் பழம் நாகரிகங்களிற் புழங்கிய reed-ship, read boat ஆகியவை ”புணை”ப் பெயரில் நம்மூரிலும் இருந்தன. அழகன்குளத்தில் கண்டெடுத்த ஓட்டுச் சில்லில் கீறியிருந்த ஓவியமும் புணையையே அடையாளங் காட்டியது. புணைநுட்பியல் மேற்சொன்ன நாடுகளின் தனித்தனியாக எழுந்திருக்க வாய்ப்பில்லை. அதே பொழுது எங்கு முதலிலெழுந்தது எனவென்றும் இன்னும் அறியப்படவில்லை. இவற்றைக் கட்டும் நுட்பம் சில நாடுகளில் மட்டுமே இன்று எஞ்சி யுள்ளது. இவற்றைக்கொண்டு பெருங் கடல்களையும் மாந்தர் ஒருகாலத்திற் கடந்திருக்கலாம் எனக் கடலியல் ஆய்வாளர் எண்ணுகிறார். இற்றைக் கப்பல் நுட்பியல் கூடப் புணை நுட்பியலிலிருந்தே வளர்ந்திருக்குமென எண்ணுகிறார். ஹெர்மன் தீக்கன் சொல்வது போல் 9 ஆம் நூற்றாண்டில் “room" போட்டு யோசித்துச் சங்க இலக்கியத்தை ஏழெட்டுப் புலவர் எழுதியிருந்தால் அழிந்து போன புனையை எப்படி எழுதினார்? - என்று எண்ணவேண்டாமா? இது என்ன மாயமா? மந்திரமா? தீக்கனின் கூற்று ஒரு நம்ப முடியாத கற்பனையாகவேயுள்ளது. ஆனால் அக்குவேறு ஆணிவேறாக அவரை மறுப்பதற்கு எந்தத் தமிழறிஞரும் இதுவரை முயலவில்லை.

முத்துமாலை போலவே பவளக்கோவையும் இங்கு பெரிதும் விரும்பப்பட்டு உள்ளது. பவளம் சோழ நாட்டின் சிறப்பு. கடலுயிரியான சங்குப் பூச்சி, இராமேசுரத்திற்கு வடக்கே பவளத்தை உருவாக்குகிறது. தெற்கே முத்தை உருவாக்குகிறது. இவை யிரண்டுமே பூச்சிகளின் வேலையும், ஊடே கிடைக்கும் இரும்பு மண்ணூறல் (mineral) தூசும் விளைவிக்கும் மாற்றங்கள் தான். இதையும் உயிரியல், வேதியல் கண்ணோட்டத்தோடு சுற்றுச்சூழல் சார்ந்து ஆய்ந்துபார்க்க வேண்டும். இதையெல்லாஞ் செய்யாமல் தமிழாய்வு எங்கோ போய்க்கொண்டிருப்பது நமக்கு வருத்தமே தருகிறது.

மழைக்கடவுள் இந்திரனிடம். மதுரையில் மழைநீர் சிவந்தோடுவதை, அதன் அணியைக் காட்டுவதோடு, அதுவரையிருந்த முதுவேனிலைத் தணிப்பதாய்ச் சற்று வாடையையும் கார்காலம் கொண்டுவரும். இது இங்கு அழகாய்ச் சொல்லப் பெறுகிறது. 

முகில்தோய் மாடம் என்பது உயர்வுநவிற்சி அணி. ஆனால் பெரிய கட்டிடங்கள் மதுரையில் இருந்திருக்கலாம். எவ்வளவு பெரியவை என்பது தொல்லாய்வின் வழி ஓரளவு தெரியலாம். காத்திருப்போம். கூதிர்க்காலம் என்பதைத் தமிழகத்திற் பலரும் தவறாகவே புரிந்துகொள்கிறார். அது autumn. குளிரடிக்கும் காலமல்ல. கூதிரும் கூதலும் வெவ்வேறானவை.. 

விரிகதிர் மண்டிலம் தெற்கே போகும் முன்பனிக் காலத்தில் (புரட்டாசி, ஐப்பசி) இன்றும் இளநிலா முற்றங்களில் வெளியேயிருக்கும் விருப்பங்கள் தமிழருக்குண்டு. இக்காலத்தில் வெண்முகில் அரிதில் தோன்றுமென்பது அரிய வானியல் அவதானிப்பு.

ஓங்கிரும் பரப்பைப் பெருங்கடலென்றும் வங்க ஈட்டத்தை நாவாய்த்திரள்கள் என்றும் தொண்டியோரைத் தொண்டித் துறைமுகத்தோடு தொடர்புறுத்தியும் சில உரைகாரர் சொல்வதை நானேற்கத் தயங்குவேன். இச்செய்திகளுக்கும் தொண்டித் துறைமுகத்திற்கும் தொடர்பிருப்பதாய் நானெண்ணவில்லை. பாண்டியரின் தொண்டி, சங்ககாலத் துறைமுகமேயல்ல; இடைக்காலத்தது. அன்றிருந்த துறைமுகங்கள் கொற்கை, அழகன்குளமெனும் மருங்கூர்ப் பட்டினம் போன்றவை தான். அகில், கீழைநாடுகளில் இருந்து வந்த நறுமண விறகு; துகில்: உள்நாடு, வெளிநாடெனப் பல இடங்களில் இருந்து வந்த ஆடை; இங்கே துணியின் மணம் பேசப்படுகிறது. வேறொரு ஆசிரியர் இதைப் பேசி நான் கேள்விப்படவில்லை.

ஆரமென்பது சந்தனம். பாண்டியிலும், சேரலத்திலுங் கிடைத்தது; நாவாய் மூலம் பாண்டிக்கு வந்ததல்ல. வாசம், பல்வேறிடங்களிலிருந்து பெற்ற மணப்பொருள். கருப்பூரம் வெளிநாட்டிலிருந்து வந்து இங்கிறங்கியது. அடியார்க்குநல்லார் பல்வேறு அகில்கள், துகில்கள், ஆரங்கள்,  வாசங்கள், கருப்பூரங்களையும் விதப்பாய் விவரிப்பார். அவற்றை அடையாளங் காண்பதே ஒரு பெரிய ஆய்வு. இப்படி வந்த உள்நாட்டு, குணகடல் நாட்டு, குடகடல் நாட்டுப் பொருள்களை எல்லாஞ் சேர்த்து நாவாயோடு தொடர்பு உறுத்துவது கொஞ்சமும் பொருத்தம் இல்லாதது. வைகையின் பெரும்பரப்பு ஆற்றுவளைவுகளில் செல்வரும் மகளிரும் ஆங்காங்கு தங்கி, அடித் தொண்டரை வைத்து நறுஞ்சரக்குகளை விரவி இன்பங் களிக்கிறார். அப்படித்தான் நானிங்கு பொருள் கொள்வேன்.

தவிர, இங்கே வெங்கண் நெடுவேள் வில்விழாவைக் காமனோடு தொடர்பு உறுத்தியே உரைகாரர் சொல்வர். ஆனால் வெம்மையான கண் என்பது காமனுக்கு ஒத்து வருமா? காமன் கனிவானவன் அல்லவா? முருகனின் கதைப்படி, சூரபன்மனையும், அவன் தம்பியரையும் முருகன் தோற்கடித்துப் பின் அமைதியுற்று பங்குனி உத்திரத்திற்கு (பங்குனிமுயக்க நாள் அதுதான்.) தேவயானையைக் கைப்பற்றுவான். வெவ்வேறு கோயிற் கடவுள்களுக்கும் பங்குனி உத்திரத்திற்றான் திருமணவிழாக்கள் நடக்கும். வெங்கண் நெடு வேள் வில்விழா என்பது வெம்மையான கண்கொண்ட முருகவேளின் கைவேலும் வில்லும் வெற்றி பெற்ற விழா. அற்றைக்காலத்தில் பின்பனியின் பெரும் பொழுதில் பங்குனி உத்திரம் ஆண்பெண் தழுவலில் தமிழர்கள் முயங்கிக் கிடக்க ஊக்கந் தந்திருக்கலாம்.

உறையூரிலிருந்து மதுரை வரும்போது குன்றுகள் நிறைந்தே காணப்படும். (கூகுள் முகப்பைப் பாருங்கள்.) குன்றுகள் நிறைந்த நன்னாடு என்பது சரியான விவரிப்பு. காவிரி வழியே புகையின கல் (ஹோகனேக்கல்) போகும் வரை ஆற்றிற்கருகில் குன்றுகள் அவ்வளவு தென்படாது. இதற்கப்புறமும் வடகொங்கிற்குச் சிலம்புக் கதையைச் எடுத்துச்செல்வோருக்கு என்னசொல்லி விளங்கவைப்பது?         

பொதுவாக அமெரிக்கக் கலிபோர்னியாக் காடுகள் மாதிரி மரங்கள் உரசித் தீயூண்டாவது ஓரிடத்தின் அளவு குறைந்த ஈரப்பதத்தை ஒட்டியதாகும். அப்படியாயின், அக்காலத் தமிழகத்தின் வெதணம் (climate) எப்படியிருந்தது? குறுகுறுப்பான கேள்வியல்லவா? அக்கால வெதணத்தைக் கண்டுபிடிக்கப் புதலியலின் பூந்தாது அலசல் (botanical pollen analysis), வேதியலின் இசையிடப்பு அலசல் (chenical isotope analysis) போன்றவற்றால் பழம் ஏரிகளிலும், ஆற்றுப் படுகைகளிலும் ஆழமாய் மண்கூற்றை (soil sample) எடுத்து ஆய்வுசெய்ய முடியும். நம் போகூழோ என்னவோ, அது போன்ற ஆய்வுகள் நம்மூரில் நடத்தப்படுவதே இல்லை. வெறுமே இந்த இலக்கியங்களை வைத்து, ”தமிழன் நாகரிகம், அப்படி, இப்படி” என மேடைதோறும் அளந்து கொண்டுள்ளார். உணர்வே உண்மையாகாது என்று இவர்களுக்கு எப்பொழுதுதான் புரியுமோ, தெரியவில்லை? மாறாக இலக்கியங்களை ஆதாரமாக்கி இது போன்ற அறிவியல் ஆய்வுகளையுஞ்செய்து மொத்த உண்மையை எடுத்துக்கூறினால் தான் ஆழிசூழ் உலகம் நம் கூற்றை எடுத்துக்கொள்ளும். தமிழறிஞர் என்று தான்  மாறுவாரெனக் காத்துக்கொண்டிருக்கிறேன்.

"மடைத்தலையில் ஓடுமீனோட உறுமீன் வருமளவும்
வாடி நிற்குமாம் கொக்கு".

வெற்றிலை தென்கிழக்கு ஆசியாவிலிருந்து நமக்கு வந்த பயிர்க்கொடி. சில்ம்புக் காலத்திலேயே அது நமக்கு வந்துவிட்டது என்பது குறிப்பான செய்தி.

கூரிய நுனி வாளை அரசன் செல்வர்க்குக் கொடுத்தானா, பொதுமகளிர்க்குக் கொடுத்தானா என்று என்னால் மேலே விளங்கிக் கொள்ள முடியவில்லை. அறிந்தோர் விளக்கிக் கூறினால் ஓர்ந்து பார்ப்பேன்.
     
இனிய தேறலென்பதும் பல்வேறு வகைப்பட்டது. என்னென்ன வகைகள் பழந்தமிழரிடம் புழக்கத்தில் இருந்தன என்பதையும் புதலியல் (botony), உயிரியல் (biology), வேதியல் (chemistry) பார்வையில் ஒரு உயிர்வேதிப் பொறியாளர் (biochemical engineer) ஆய்ந்துபார்க்க வேண்டும்.

இனி மதுரையின் அடுத்த வீதிகளுக்குப் போவோம்.

அன்புடன்,
இராம.கி.