Tuesday, September 24, 2019

சிலம்பு ஐயங்கள் - 27

அடுத்து, ஊர்காண் காதையின் படி, மதுரைக்கோட்டைக்குள் கோவலன் கணிகையர் வீதியைப் பார்த்தது பற்றி இங்கோர் கேள்வி கேட்கப்பட்டது. மேலோட்டமாய் அதற்கு மறுமொழிப்பது முறையில்லை. எப்படி இந்திர விழவூரெடுத்த காதையில் இளங்கோ புகாரை விரித்துச் சொல்கிறாரோ, அதேபோல் ஊர்காண்காதையில் மதுரையைச் சொல்வார். புறஞ்சேரியிறுத்த காதையில் வைகையைக் கடந்து கவுந்தியும், கோவலனும், கண்ணகியும் தென்கரையடைந்தது சொல்லப் பெறும். கோட்டை அகழிக்கு வைகையில் இருந்து ஏரிகள் வழி நீர்வந்திருக்கலாம். ”வளைவுடன் கிடந்த இலங்குநீர்ப் பரப்பெ”ன ஊர்காண்காதை கணுக்கிய (connected) ஏரிகளைக் குறிக்கும். அப்படியோர் இயலுமை இருந்ததாற்றான் மதுரை ஒரு தலைநகராய் அன்று நிலைத்தது போலும்.

பழமதுரையை அடையாளங் காணக் கூகுள் முகப்பின் வழி தேடினால், இற்றைத்தடத்திற்குச் சற்று மேற்கில் ஏரிகளூடே அற்றை யாற்றுத்தடம் உள்ளதோவென ஐயந் தோன்றும். தவிரக் கீழச் சிலைமான்- கொந்தகை- பொட்டப்பாளையம் சாலையின் 2 மருங்கும் மணலூர் ஏரியும், கீழடி ஏரியும் பெரிதாய்த் தென்படும். இவற்றின் தொடர்ச்சியாய் சில குளங்கள் மேற்கிலும், வட மேற்கிலும் வட்டமாய்த் தெரிய வரும். கீழடித் தொல்லாய்வு நடந்துகொண்டிருக்கும் காலத்தில் இவ்விவரிப்பை ஆழ்ந்தறிவது நன்மை பயக்கும். இத்தொல்லாய்வோடு, ஒரு நீர்ப்பாசன வல்லுநரும், ஒரு புவியியல்/மண்ணியல் வல்லுநரும் தொல்லாய்விற்கு உறுதுணையாய் இங்குள்ள ஆறு, ஏரிகளின் பழந்தடங்களை ஆயவேண்டும். இனி நீளமான ஊர்காண் காதையை விரிவாக உரைவீச்சைப்போல் நாலைந்து பகுதிகளாய்ப் பார்ப்போம்.
------------------------------------
வெளிப்பக்கத் தோட்டத்திலும்,
பிறங்கித் தெரியும் நீர்ப்பண்ணையிலும்,
விளைந்து தொங்கும் கதிர்க்கழனியிலும்,
இருக்கும் புள்கள் எழுந்து ஒலிசெய்ய,
பகைவேந்தர் தலை குனியும் படி
வாளேந்தும் செழியனின் ஓங்குயர் கூடலின் ஊர்த்துயிலை
(வைகறையில் குளத்தாமரைப் பொதிகளை அவிழ்க்கும்)
ஞாயிறு தோன்றியெழுப்ப,
நுதல்விழிப் பார்வை கொண்ட இறைவன் கோயிலிலும்,
உயரப் பறக்கும் கருடனில் ஊர்வோன் நியமத்திலும்,
ஏர்த்திறன் உயர்த்திய வெள்ளையன் நகரத்திலும்,
கோழிச் சேவற் கொடியோனின் கோட்டத்திலும்
அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியிலும்,
மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலிலும்,
வெண்சங்கோடு, வகைபெற்று ஓங்கிய காலைமுரசின் கனைகுரல் ஒலிக்க,
மதக் கடமைகளில் ஆழ்ந்த காவுந்தி ஐயையிடங்
கோவலன் சென்று கைதொழுது ஏத்தி,

“தவஞ்செய்பவரே! நெறி விலகியோரின் குணங்கொண்டவன் ஆகி,
நறுமலர் மேனியள் (கண்ணகி) நடுங்குதுயர் எய்யும் படி,
அறியாத் தேயத்தார் இடை வந்து சேரும் சிறுமையுற்றேன்.
தொன்னகர் மருங்கே மன்னருக்கு அடுத்த வணிகருக்கு
என் நிலை உணர்த்தி நான் திரும்பும் வரை,
இவள் பாதுகாக்கப்பட வேண்டியவள் ஆகலின்,
இதைச் செய்வதில் உங்களுக்கு ஏதம் (சரவல்/சிரமம்) உண்டோ?”
என்று சொன்னதும், கவுந்தி கூறுவாள்:

”காதலியோடு துன்பமுற்று, தவத்தோர் மருங்கில் இருப்பவனே!
தீவினை ஊட்டும் வன்முறையிலிருந்து நீங்குவீர் என
அறந்துறை மாக்கள் அழுந்திச் சாற்றி நாக்கால் அடித்து வாய்ப்பறை அறையினும்,
கட்டிலா மக்கள் தம் இயல்பிற் கொள்ளார்.
தீய கொடு வினை ஏற்படுகையில் பேதைமையைக் கட்டாக்கிப் பெருந்துன்பம் அடைவர்.
போக்க இயலா வினைப்பயன் அடையுங்கால்,
கற்றறிந்தோர் கைப்பிடியுங் கொள்ளார். பிரிவாலும், புணர்ச்சியாலும்,
உருவிலாக் காமன் தருவதாலும் வருந் துன்பம்
புரிகுழல் மாதரைப் புணர்ந்தோர்க்கு அன்றி,
தனித்து வாழும் உரநெஞ்சர்க்கு இல்லை.
பெண்டிரும் உண்டியுமே இன்பமென உலகிற் கொண்டோர்
கொள்ள இயலாத் துன்பங் கண்டவராகி
முனிவர் விலக்கிய காமஞ் சார்ந்து அதன்மேற் கொள்ளும் பற்றால் உழந்து,
ஏமஞ் சாரா இடும்பை எய்துவர்.
இற்றையில் மட்டுமின்றித் தொன்று தொட்டும் இப்படிப் பலர் இருந்தார்.

தந்தை ஏவலில் மாதுடன் கானகஞ் சென்ற வேத முதல்வனைப் பயந்தவனும் (திருமாலும் - இங்கே இராமன் குறிப்பிடப் படுகிறான்)
காதலி நீங்கியதால் கடுந்துயர் அடைந்ததை நீயறியாயோ? இது பலரறிந்த நெடுமொழி அன்றோ?
வல்லாடு தாயத்தில் மண்ணரசு இழந்து மனையொடு வெங்கான் அடைந்தோன் (நளன்)
காதலாற் பிரிந்தான் அல்லன்; காதலியும் தீமையாற் சிறுமையுற்றாள் அல்லள்.
இருப்பினும் அடர்கானகத்தில் இருள்யாமத்தில் அவளை விட்டு நீக்கியது வல்வினைதானே?
தமயந்தி பிழையெனச் சொல்ல முடியுமோ?

நீ அவரைப் போன்றவன் அல்லன்.
உன்மனையோடு பிரியா வாழ்க்கை பெற்றாயன்றோ?
(மாதவியோடு தனக்கு நிகழ்ந்ததைக் கவுந்தியிடம் கோவலன் சொல்லவில்லை.)
எனவே இவளைப் பற்றி வருந்தாது பொருந்தும் வழியறிந்து
மன்னவன் கூடலுக்கு ஏகிப் பின் ஈங்கு போதுவாயாக” என்றலும்

கட்டுவேலி சூழ்ந்த காவற் காட்டோடு வளைந்து கிடக்கும்
நீர்ப்பரப்பின் வலப்பக்கம் புணரும் அகழியின் கீழ்
பெருந்துதிக்கை கொண்ட யானைகள்
கூட்டமாய்ப் பெயரும் சுருங்கை வீதியின் மருங்கிற் போய்

ஆங்கு

ஆயிரங்கண் இந்திரனுடைய அருங்கலச் செப்பின் வாய் திறந்தது போல்
தோற்றும் மதிலக வரப்பின் (= gate complex) முன்னே
அகழியும், சுருங்கைவீதியும் அதற்கப்பால்
இலங்குநீர்ப் பரப்பும், ஆற்றின் மருதந்துறையும்
இருப்பதைச்சொல்லி,
அவற்றை ஆட்சிசெய்யும் செல்வரையும் பொதுமகளிரையும்

(0600-1000 மணி) காலை, (1000-1400 மணி) பகல், (1400-1800 மணி) ஏற்பாடு என்ற
முதுவேனிற் சிறுபொழுதுகளிற் பொருத்தி,
ஆடித் திங்கள் முடியுங் காலம் ஆகையால்,
கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என
முடிந்துபோன பெரும்பொழுதுகளை நினைவுகூர்ந்து,
இளங்கோ கணிகை வீதியை விவரிக்கத் தொடங்குவார்.

[மேலே கோயில், நியமம், நகரம், கோட்டமென்ற ஒருபொருட் சொற்களில் கோயிலை மட்டும் இன்று புழங்கி, மற்றவற்றை இழந்திருக்கிறோம். அறவோர் பள்ளி என்பது வேதம், சிவம், விண்ணவம், அற்றுவிகம் (=ஆசீவிகம்), செயினம், புத்தம் என்ற எல்லா நெறியாரின் பள்ளிகளைக் குறிக்கும். காவுந்தியின் உரை சமணரின் பொதுவான உரை. அதைச் செயினத்தின் விதப்பான உரையென்று சொல்ல முடியாது. காவுந்தி சமணத்தின் உள்கட்டுமானத்தில் இன்னுஞ் செல்லாதவராய், அதேபொழுது செல்லமுயன்று கொண்டிருப்பவராகவே தெரிகிறது. இராமன், நளன் கதைகள் காப்பியம் நடந்த காலத்தில் பலருக்கும் தெரிந்திருக்கின்றன. வேதமுதல்வன் என்ற கூற்று இராமனை வேதநெறியோடு அந்தக் காலச் சமணநெறியார் தொடர்புறுத்தியதும் தெரிகிறது. ஒருவேளை காப்பியக் காலம் சமண ராமாயணங்கள் எழுவதற்கு முந்தைய காலமோ, என்னவோ? சமண இராமாயண நூல் எப்பொழுது எழுந்தது என்று பார்க்கவேண்டும்.

இந்திரனின் அருங்கலச் செப்பை மதிலுக்கு உவமையாக்கியது மிகவுஞ் சிறப்பானது. பொதுவாய் மேலையர் கோட்டைகளில் வழக்கமாய்க் காணும் அகழிப்பாலத்திற்கு மாறாய் இங்கே முற்றிலும் ஒரு புதிய அடவாய் (design) அகழிக்கடியில் சுருங்கை வீதி ஒன்று சொல்லப்படுகிறது. இதுவொரு தொல்லியற் குறிப்பு. (கீழடியை ஆய்வு செய்வோர் இக்குறிப்பைப் படித்தாரா என்றுந் தெரியாது கோட்டை வாசலில் ஒரு சுருங்கை, அகழிக்கடியில் இருந்திருக்கிறது. இதைக் கண்டுபிடித்தால் பழமதுரைக்கு அருகில் வந்துவிட்டோம் என்று பொருள்.) இதுபோன்ற கட்டுமானத்தை எந்தத் திரைப்படமும், புதினமும், நூலும் நமக்குச் சுட்டியதில்லை. ஏன், மகதக் கோட்டையை விவரிக்கும் அருத்த சாற்றங் கூட இப்படிக் காட்டாது.)

கோவலன் கோட்டை வாயிலுக்கு வந்து, அங்கேயிருந்த காவலிற் சிறந்த கொல்லும்வாள் யவனர்க்கும் அயிராது புகுவான். (அயிராது = ஐயம் வராது. தன் பெயர், தந்தை பெயர், குடும்ப அடையாளம், ஊர்ப் பெயர் என முழு விவரந் தெரிவித்தே கோவலன் கோட்டையுள் நுழைந்தானென இந்தவொரு சொல்லாட்சியால் நாம் உணர்ந்து கொள்கிறோம். ஆயினும் அவன் நுழைவு வழக்குரை காதை வரை பாண்டியன் நெடுஞ்செழியனுக்குத் தெரியாதது நமக்கு வியப்பையே தருகிறது. ஒருவேளை பாண்டியனின் நிர்வாகத்தில் intelligence gathering என்ற அமைப்பு சரியில்லையோ? என்னவோ? கோட்டைக் காவலர் கொண்ட செய்தி அரசனுக்குப் போகவில்லை, செழியன் வீழ்ச்சிக்கு இதுவே காரணமாய் இருக்குமோ?]

அன்புடன்,
இராம.கி.

No comments: