Friday, September 13, 2019

சிலம்பு ஐயங்கள் - 21

சேரர் குடியின் இரும்பொறைக் கிளைக்குப் போவதற்குமுன் விட்டுப்போன வேறொரு செய்தி சொல்லவேண்டும். ஆடுகோட்பாட்டுச் சேரலாதனுக்கிருந்த ஆட்டனத்தியெனும் இன்னொரு பாகம். ஆடுவதில் பெருந்திறன் பெற்றவன் ஆட்டனத்தி. செந்நிறத்தால், அத்தியெனும் விளிப்பெயரும் பெற்றான். (அத்து= சிவப்பு.. ஒன்றுவிட்ட இவன் அண்ணனைச் செங்குட்டுவன் என்றாரே?) ஆதன் குடியைச் சேர்ந்த நெடுஞ்சேரலாதன் சோழ வளநாட்டிற் பெண்ணெடுத்தான். அவன் மகன் சோழ நாகநாட்டில் பெண்ணெடுத்தான். பெரும்பாலும் இவனே 2 ஆம் கரிகாலன் மகள் ஆதிமந்தியை மணந்தவன் ஆவான். ஆட்டனத்தி ஆதிமந்தி காதலைச் சங்க இலக்கியம் பரவலாய்ச் சொல்லும். பரணரும் பாடுவார். நம்மைக் குடையும் ஒரேசெய்தி. தம்பியின் மாமனோடா (நார்முடிச் சேரலெனும்) பெருஞ்சேரலாதன் சண்டையிட்டு உண்ணா நோன்பிருந்தான்? பெரிதும் வியப்பளிக்கிறது. என் செய்வது? சேரரும் சோழரும் பலமுறை தமக்குள் பெண்கொடுத்துப் பெண்வாங்கி இருக்கிறார். அதே பொழுது ஒருவருக்கொருவர் முரணிப் பொருதியும் இருக்கிறார். உறவுக்குள் மணஞ்செய்வதும் பின் மாமன், மச்சான், என்று சண்டையிடுவதும் தமிழர் மரபில் நெடுங்காலம் தொடர்ந்து நடைபெருவது ஆயிற்றே?       

இனி இரும்பொறைக் கிளைக்கு வருவோம். கருவூரேறிய ஒள்வாட் கோப் பெருஞ்சேரல் இரும்பொறை தான் இக்கிளையின் மூத்தவன். இவனை நரிவெரூஉத்தலையார் புறம் 5 இல் பாடுவார். இவன் எந்தக் காலமெனத் தெரியவில்லை. ”கருவூரேறிய” என்பதால் இவனுக்கு முந்தைய சேரர் கருவூரிலில்லாதது தெரியும். (சங்ககாலம் என்றாலே கொங்குவஞ்சியை வலிந்து இழுப்போருக்குத் தான் இச்செய்தி புரியாதுள்ளது.) அடுத்து அந்துவன்சேரல் இரும்பொறை. இவன்காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 190-149. உதியஞ்சேரலுக்கு இவன் பங்காளி. உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் அந்துவஞ் சேரலின் மாடத்திருந்தபோது கருவூர் அரசவீதியில் முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளியின் யானை மதம்பிடித்துத் தடுமாறியதை அடையாளங் காட்டி விவரிப்பார். அந்துவன்மனைவி பெரும்பாலும் வல்வில் ஓரியின் சோதரி ஆவாள். ஏழாம்பத்துப் பதிகத்தில் ”ஒருதந்தை ஈன்றமகள் பொறையன் பெருந்தேவி” என வரும். பலரும் ஒருதந்தையை அடையாளங் காண்பதிற் சரவற்படுவர். பெரும் முயற்சிக்கு அப்புறம் அது விளங்கியது.

தமிழில் உல்>உரு>உரம் என்பது வலிமையைக் குறிக்கும். உரு>ஒரு>ஒருதல், வலியுறுதலைக் குறிக்கும். புல்வாய், புலி, உழை, மரை, கவரி, கராம், யானை, பன்றி, எருமை (தொல்.பொருள் 590, 591, 592) போன்ற வலியுள்ள ஆண் விலங்குகளின் பொதுப்பெயரை ஒருத்தல்/ஓரி என்று குறிப்பார். வலியுள்ள ஆண் மகனுக்கும் ஒருத்து, ஓரிப் பெயர்களை இட்டிருக்கிறார். அப்படியிடும் போது ஒருத்தின் அந்தை ஒருத்தந்தை, ஒரியின் அந்தை ஓரியந்தை என்று அமைவர். இரு சொற்களும் பிணைந்து ஒருதந்தை எனவுமாகலாம். சாத்து அந்தை = சாத்தந்தை, கொற்று அந்தை = கொற்றந்தை, பூது அந்தை = பூதந்தை என்ற பெயர்கள் அமைவதுபோல் இதைக் கொள்ளலாம். ஆக ஒருதந்தையின் மகளை அந்துவனுக்குக் கட்டி வைத்தால் கொல்லிமலை தம் உரிமைக்குள் வருமென்று சேரர் நினைத்தார். அது நடக்கவில்லை. பின்னால் மலையமான் திருமுடிக்காரியோடு கூட்டுச் சேர்ந்து ஓரியைத் தோற்கடித்துக் கொல்லியை இணைப்பார்.

”வேளிரைத் தொலைத்து நிலஞ் சேர்க்கும் அரசியலை” மூவேந்தர் தொடர்ந்து செய்தார். மணவுறவும், இல்லையேல் போர்ச்செயலும் தொடர்ந்து பயன் பட்டன. சங்ககால முடிவில் சிச்சிறிதாய் வேளிர் ஒழிக்கப்பட்டார். Eventually the segmentary states were unified into 3 large states. சங்க இலக்கியம் படிக்கையில் வரலாற்று வரிதியாய் இதையுணரலாம். பொ.உ.மு. 250 - 75 கால அளவில் இவ்வாட்சி மாற்றங்கள் நடந்தன. இனக்குழு வரலாற்றில் சங்க இலக்கியத்தின் உச்சகட்ட வெளிப்பாடு இக்காலத்திற்றான் எழுந்தது. இதற்குமுன் பொ.உ.மு. 600-250 வரையும், இதற்குப் பின் பொ.உ.மு.75 - பொ.உ.150 வரையும் சங்க இலக்கியம் விரவினும், உச்சகட்டம் நடுவிலிருந்த காலந் தான். இப்புரிதலை அடையாமற் செய்வதற்காகவே சங்க காலம் பொ.உ. 5, 6 ஆம் நூற்றாண்டென்று சிலர் குழப்பியடிக்கிறார். குறைத் தொன்மங் கொண்ட secular literature ஐ உணரவிடாது குழப்புவதுங் கூட ஒருவித நிகழ்ப்புத் (agenda) தான். இந்நிகழ்ப்பிற்குள் பல தமிழாசிரியரும் சிக்கிக் கொண்டார். நிகழ்ப்புக் கொண்டோர், மோரியர் பங்களிப்பையும் குறைத்தே பேசினார். குப்தரையே தூக்கிவைத்தார். தொல்லியல் செய்திகள் இவற்றைக் குப்புறத் தள்ளி மோரியர் பங்கை உணரவைத்தன. தமிழ்ர்பங்கும் எதிர் காலத்தில் வெளிப்படும். கீழடி, பொருந்தல், கொடுமணம், பட்டணம் போன்றவை தொடர்ந்தால்...... எனவே தான் இதுபோலும் ஆய்வுகள் நடைபெறாது தடுக்க ஒருசில நிகழ்ப்பாளர் முயல்கிறார். 

அடுத்துச் சிக்கற் பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதன் காலத்திற்கு வருவோம் இது பெரும்பாலும் பொ.உ.மு. 164-140 ஆகும். அந்துவனுக்கும், ஒருதந்தை மகளான பொறையன் பெருந் தேவிக்கும் பிறந்தவன். தவிர, நெடுஞ்சேரலாதன் மனைவியின் தங்கையான சிறிய பதுமன்தேவியை மணந்தவன். எனவே செல்வக்கடுங்கோ நெடுஞ்சேரலாதனுக்குத் தந்தைவழியில் ஒன்றுவிட்ட தம்பியும், மனைவிவழியில் சகலையும் ஆவான். குடவஞ்சியில் நெடுஞ்சேரலாதனுக்கு இளையனாய் இவன் வளர்கையில், கொங்குக்கருவூரின் மேல் காரவேலன் படையெடுப்பு நடந்திருக்கலாம். அப்படையெடுப்பு ஒருவித வஞ்சிப்போர். உழிஞைப்போரல்ல. வயதானபின் சேரலப் பூழிநாட்டிற் சிலகாலமிருந்த வாழியாதன், அந்துவன்சேரலுக்குத் துணையாய் கொங்குக்கருவூருக்கு நகர்ந்தான். வேள்பாரி இறந்த பிறகு கபிலர் வாழியாதனிடம் பரிசில் பெற்றிருக்கிறார். தமிழரல்லா இரு அரசரோடு உழிஞைப் போர் நடத்தி ஏராளமான பொருள்களை இவன் கொள்ளையடித்ததை

சிறியிலை உழிஞைத் தெரியல் சூடிக்
கொண்டி மிகைப்படத் தண்டமிழ் செறித்துக்
குன்றுநிலை தளர்க்கும் உருமிற் சீறி
ஒருமுற்று இருவர் ஓட்டிய ஒள்வாள்
செருமிகு தானை வெல்போ ரோயே

என்று ஏழாம்பத்தின் 3-ஆம் பாட்டில் கபிலர் சொல்வார். இவ்விரு அரசர் யார்? தெரியவில்லை. ஒருவேளை வாழியாதன் தந்தைகாலத்தில் கரூரைக் கார வேலன் சூறையாடியாதற்குப் பழிவாங்கும் ...முயற்சியை இது குறிக்குமோ? ஏதோ மருமம் இதில் புதைந்துள்ளது. மொத்தத்தில் வாழியாதன், அவன்மகன், பேரன் ஆகிய மூவருமே நெடுஞ்சேரலாதனையும், அவன்மகன் செங்குட்டுவனையும் பார்க்கக் குறைந்த காலமே ஆண்டார். ஆனாற் சேரர் குடிக்கு பெரிய அடித்தளம் போட்டார். இம்மூவரைப் பற்றிய விவரம் இலக்கியத்திலன்றி வேறு முறையிலும் உறுதி செய்யப்பட்டது புகளூர்க் கல்வெட்டின் மூலமாகும்.

மூதா அமண்ணன் யாற்றூர் செங்காயபன் உறைய
கோ ஆதன் சேல்லிரும்பொறை மகன்
பெருங்கடுங்கோன் மகன் [இ]ளங்
கடுங்கோ [இ]ளங்கோ ஆக அறுத்த கல்

என்று வரும் புகளூர்க் கல்வெட்டில் கோ ஆதன் சேல்லிரும்பொறை என்பது (செல்வக்கடுங்)கோ (வாழி)ஆதன் சே(ர)ல்லிரும்பொறையைக் குறித்தது. பெருங்கடுங்கோன் என்பது (தகடூர் எறிந்த) பெருஞ்சேரல் இரும்பொறையையும், இளங்கடுங்கோ என்பது (குடக்கோ) இளஞ்சேரல் இரும்பொறையையுங் குறிக்கும். ஆகச் சங்ககாலம் என்பது கற்பனை யில்லை. [“சங்க இலக்கியம் என்பது room போட்டு யோசித்து 7,8 பண்டிதர் 9 ஆம் நூற்றாண்டிற் செய்த பெரிய ஏமாற்று” என்பார் பேரா. ஹெர்மன் தீக்கன். (இதே வார்த்தைகள் இல்லெனினும் பொருள் இதே). அதேபோற்றான் “சிலம்பு  என்பது ஒரு கற்பனைப் புதினம். 6 ஆம் நூற்றாண்டில் room போட்டு யோசித்தார்” என்று திரு.நாகசாமியும், திரு. திரு.நா.கணேசனுஞ் சொல்கிறார்.

மொத்தத்தில் தமிழர் ஏமாற்றுப் பேர்வழிகள் என்று இவர் சொல்கிறார். தேமேயென்று நாமெல்லோருங் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.] “இளங் கடுங்கோ இளங்கோவாக அறுத்த கல்” என்பதால் கல்வெட்டுக் காலம் பொ.உ.மு. 122 க்கு அருகிலிருக்கும். ஆனால் திரு. ஐராவதம் மகாதேவனோ பொ.உ. 3 ஆம் நூற்றாண்டு என்று சொல்வார். பொதுவாகத் திரு.ஐராவதம் மகாதேவனுக்கும், மற்ற கல்வெட்டாய்வாளருக்கும் சங்ககாலக் கல்வெட்டுக்களில் 2.3 நூற்றாண்டுகள் வேறுபாடுண்டு. பொருந்தல் ஆய்விற்கு அப்புறம்தான் மகாதேவனிடம் சில மாற்றங்கள் தென்பட்டது. ஆனால் முன் சொன்ன நிகழ்ப்பாளரோ, மகாதேவனின் பழங்கூற்றையே பிடித்துத் தொங்குவர். அது அவர்களுக்கு ஏந்து இல்லையா?]

அடுத்து வருவது வாழியாதனின் மகன் தகடூரெறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை. இவன்காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 139-123. இவனே சங்க இலக்கியத்தின் பாலைபாடிய பெருங்கடுங்கோ என்பர். இவனும் தன் தாத்தன், தந்தையின் வழியொட்டி வேளிரை ஒடுக்குவதில் கவனஞ் செலுத்தினான். குறிப்பாக தகடூர் அதியமான்களைச் சாய்த்ததில் இவனுக்குப் பெரும் பங்குண்டு. அசோகன் காலத்தில் சேர, சோழ, பாண்டிய மூவேந்தரோடு, தக்கணப்பாதையின் காணிப்பரான (Supervisor) அதியமான்களைத் “சத்தியபுதோ” என்று குறித்திருப்பார். இத்தனைக்கும் அதியர் சேரரின் ஒன்றுவிட்ட பங்காளி. ஆயினும் தனியிருப்பை உறுதி செய்தவர். அதிகை ஊரிலிருந்து குடிபெயர்ந்ததால் அதியமான் எனப்பட்டார். சேரரின் கிளை என்பதால், சேரரின் கண்ணியும் தாரும் அதியருக்கும் அடையாளம் ஆகின. இவரே கரும்பைத் தமிழகத்துள் கொண்டுவந்தாரென்ற தொன்மமுமுண்டு.

மலையமான் திருமுடிக்காரியோடு போரிட்டு திருக்கோவிலூரை நெடுமான் அஞ்சி கைப்பற்றியதாலும், வேறேதோ காரணத்தாலும், அதியமானுக்கும் சேரருக்கும் முரணேற்பட்டு களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் அதியமான் நெடுமிடலோடு போரிட்டு அவனைச் சாய்ப்பான். இச்செய்தி நாலாம்பத்து 2 ஆம் பாடலில் பதியப்பெறும். பின் நெடுமிடலின் மகன் அஞ்சியோடும் சேரர்பகை தொடரும் போர்த் தளவாடங்கள் குறைந்ததால் கோட்டைக்குள் நெடுமானஞ்சி அடைந்து கிடந்து, பின் உழிஞைப்போர் நீண்டதால் வேறுவழியின்றி வெளிவந்து, வஞ்சிப்போராய் மாறும். பெருஞ் சேரல் இரும்பொறையுடன் போர் உடற்றி நெடுமானஞ்சி உயிர்துறப்பான். இச்செய்திகள் ”தகடூர்யாத்திரை”யில் பதிவு செய்யப்பட்டதாம். ஆனால் உ.வே.சா.விற்கு இந்நூல் கிடைக்கவில்லை, அங்கும் இங்குமாய் 56 பாடல்களே கிடைத்தன. அவற்றில் ஒருபாடல் நமக்குச் செய்தி பகர்கிறது.

கால வெகுளிப் பொறைய!கேள் நும்பியைச்
சாலுந் துணையுங் கழறிச் சிறியதோர்
கோல்கொண்டு மேற்சேரல் வேண்டா வதுகண்டாய்
நூல்கண்டார் கண்ட நெறிசு.

என்ற பாட்டின் மூலம் பெருஞ்சேரல் இரும்பொறைக்கு ஒரு தம்பி இருந்த செய்தி தெரியும். இதற்குச் சான்றாய், குட்டுவன் (=சிறியவன்) இரும்பொறை என்பவனையே இளஞ்சேரல் இரும்பொறையின் தந்தையாய் ஒன்பதாம் பத்தின் பதிகம் அடையாளங் காட்டும். மேலுள்ள கல்வெட்டு, தகடூர் யாத்திரைப் பாட்டு, ஒன்பதாம் பத்தின் பதிகம் ஆகிய மூன்றையும் பொருத்திப் பார்த்தால், இளஞ்சேரல் இரும்பொறை, பெருஞ்சேரல் இரும்பொறையின் தத்துப்புதல்வன் போலிருக்கிறது. அவனுடைய இயல்பான தந்தை குட்டுவன்சேரல் இரும்பொறையே.

இன்னொரு செய்தி சேரநாட்டின் தோல்வினைஞரான படுமரத்து மோசி கீரனார் பற்றியது. பெருஞ்சேரல் இரும்பொறையின் சிறப்பைக் கூறுவது. புறம் 50 இல் “மன்னா! அலங்காரஞ் செய்து உழிஞைப் போருக்குப் போய் வெற்றி பெற்று மண்ணுமங்கலஞ் செய்துவரும் முரசமெனில், நான் சேக்கையில் ஏறியிரேன். முரசம் பேணவந்த நான் மிகுந்த அசதியால் கட்டிலிலேறி அமர்ந்துவிட்டேன். உன் வீரர் அதைக் குற்றமாய்க் கொண்டு உன்னிடம் உரைத்திருக்கிறார், நீயோ பெருந்தன்மையோடு அதைப் பொருட்படுத்தாது களைப்புத் தீரக் கவரி வீசிச் சிறப்புச் செய்தாய். முரசைப் பேணும் செருமார் வேலை மட்டுமல்ல, நற்றமிழும் எனக்குத் தெரியுமென நீ பாராட்டினாய்! உன்செயல் புகழவேண்டியதே? - என்று சொல்வார். (மோசிகீரனாரென்ற என் கட்டுரைத்தொடரைப் படியுங்கள்.) . .

http://valavu.blogspot.in/2010/09/1.html
http://valavu.blogspot.in/2010/09/2.html
http://valavu.blogspot.in/2010/10/3.html

அடுத்தது குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை. இவன் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 122-107 ஆகும். குறைந்த காலமே இவன் ஆட்சி செய்திருக்கிறான். இவனே மருதம் பாடிய இளங்கடுங்கோ என்பர். குட்டுவஞ்சேரல் இரும்பொறைக்கும், மையூர்கிழானின் (இற்றை மைசூரைச் சேர்ந்த பெருஞ் செல்வந்தன். அரசனல்லன்) வேண்மகள் (வேளிர்மகள்) அந்துவஞ் செள்ளைக்கும் (செள்ளை இயற்பெயர், அந்துவன் பெரும்பாலும் மையூர்கிழானின் பெயராகலாம்.) பிறந்தவன். (வேந்தரென்பார், ”அரசர், மன்னர், வேந்தரில்” மட்டுமல்லாது கிழாரிலும் பெண்ணெடுப்பார் போலும்.) மையூர் கிழானான இவன் தாத்தனே இவன் அமைச்சனாய் இருந்துள்ளான். புரோகிதனை விடவும் உயர்வாய் இளஞ்சேரல் இரும்பொறை இவ்வமைச்சனைக் கருதினான்.

இந்த இரும்பொறை தம்மை எதிர்த்த இரு வேந்தரையும், விச்சிக் கோவையும் வீழ்த்தினான். இவன் காலத்தில் செங்குட்டுவன் தாய்மாமனான வேற்பல் தடக்கைப் பெருவிறற்கிள்ளி நெடுஞ்சேரலாதனோடு பொருதி இறந்ததன் பின், சோழ வளநாட்டில் பங்காளிச் சண்டை பெருகியது. உறையூர் மணிமுடிக்குப் பலரும் உரிமைகொண்டாடினார். அதிலொருவன் பொத்தியாண்ட பெருஞ்சோழன். (பெருஞ்சோழன் என்பது பொதுவான பெயர். விதப்பான பெயரன்று. பல உரையாசிரியரும், தமிழாசிரியரும் இவனைக் கோப்பெருஞ்சோழனோடு குழம்பித் தவிப்பதை என்னால் ஏற்க இயலாது. கோப்பெருஞ் சோழன் முற்றிலும் வேறுகாலத்தவன். இன்னொர் இடத்தில் விளக்குவேன்.) இளஞ்சேரல் இரும்பொறை பொத்திச் சோழனையும், வித்தைகளில் வல்லவனான பழையன் மாறனையும் (இவன் பாண்டியருக்குக் கீழிருந்த குறுநில மன்னனாகலாம்.) தோற்கடித்து ஏராளம் பொருள்கவர்ந்து பலருக்கும் பிரித்துக்கொடுத்து உதவினான். (இளஞ்சேரல் இரும்பொறைக்கு அப்புறம் சோழரிடையே நடந்த பங்காளிச் சண்டையை முற்றிலும் முடிவிற்குக் கொண்டு வந்தவன் சிலம்பின் படி செங்குட்டுவனே ஆவான்).

தவிரக் கொங்கு வஞ்சியில் சதுக்க பூதத்தை நிறுவிச் சாந்தி வேண்டி, இளஞ்சேரல் இரும்பொறை வழிபாடுகள் நடத்தினானாம்.  (சாந்திசெய்தல் என்பது குறிப்பிட்ட படையல்கள் மூலம் வழிபாடு செய்தலாகும். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மேல்சாந்தி, கீழ்சாந்தி என்ற சொற்கள் இன்றுங் குருக்கள்மாரைக் குறிப்பதை ஓர்ந்து பார்த்தால் சாந்தியின் பொருள் விளங்கும். இந்தச் சொல் பழந்தமிழில் குறிப்பிட்ட பூதப்பூசகருக்கு இருந்தது புரியும். குருக்கள் என்பதெல்லாம் பின்னால் வந்த சொற்கள்.) சதுக்க பூதமே பின்னாளில் பிள்ளையாராய் மாறிப் புரிந்துகொள்ளப்பட்டதென்று பேரா. ந.சுப்பிரமணியன் ”Tamil polity" என்ற நூலிற் சொல்வார். இந்நாளில் ஊருக்கொரு (ஏன், வீதிக்கொரு) பிள்ளையார் இருப்பது போல் அந்நாளில் ஊருக்கொரு சதுக்கபூதம் இருந்தது. சதுக்க பூத விவரிப்பு அப்படியே பிள்ளையார் விவரிப்புப் போலவே இருக்கும். சதுக்க பூதம் கி.பி. 4,5 ஆம் நூற்றாண்டுகளில் சிவனின் பிள்ளையாய் மாறிவிட்டது போலும்.
   . 
இனி அடுத்த பகுதியில் கடல்பிறக்கோட்டிய வெல்கெழு குட்டுவன் என்று முதலிலும் கங்கைப் பேர்யாற்றுக் கரைபோகிய செங்குட்டுவன் என்று பிற்காலத்திலும் பெயர் பெற்றவனைப் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

No comments: