Monday, September 02, 2019

சிலம்பு ஐயங்கள் -10

 இனிக் காடுகாண்காதை வரிகளின் மூலம் மதுரைக்குப்போகும் 3 வழிகளைப் பார்ப்போம்.

அறையும் பொறையும் ஆரிடை மயக்கமும்
நிறைநீர் வேலியும் முறைபடக் கிடந்த இந்
நெடும்பேர் அத்தம் நீந்திச் சென்று
கொடும்பை நெடுங்குளக் கோட்டகம் புக்கால்
பிறைமுடிக் கண்ணிப் பெரியோன் ஏந்திய
அறைசாய்ச் சூலத்து அருநெறி கவர்க்கும்

அறை = ஒற்றைக்கற் பாறை (இப்பயன்பாட்டிற்கான ஒரு காட்டு திருச்சிக்கு அருகேயுள்ள திருவெள்ளறையாகும். வெள்ளைப்பாறை மேல் பெருமாள் கோயில் உள்ளது.) பொறை = சிறுமலை. (கரூருக்கருகே சிறு மலைகளுண்டு. இரும்பொறை = இருள்நிறப் பாறை. இந்நாடு இரும்பொறை நாடெனப்பட்டது. இங்கு ஆண்ட சேரர் கிளையினர் இரும்பொறையினர் எனப்பட்டார்.) இடை மயக்கம் = பாறையா, பொறையா என்று சொல்லமுடியா இடைநிலைப் பொருப்புகள். நிறைநீர் வேலி= நீர்நிறை ஏரி. மதிரைக்கு அருகில் நிறைநீர் வேலிகள் நிறையவுண்டு. உறையூரிலிருந்து கிளம்பினால், நீர்வேலிகள் குறைந்தே காணப்படும். அறை, பொறை, இடைமயக்கம் அப்புறம் நீர்வேலி என்று முறைபடக் கிடக்கும் நெடிய அத்தத்தை (=பெருவழி) இளங்கோ குறிக்கிறார். நீளச் செல்லுதல் நீண்டு போதலும் ஆகும் நீள்ந்திப் போதலும் ஆகும். நீள்ந்துதல்>நீண்டுதல்; நீள்ந்துதல்>நீந்துதல்

கொடும்பை நெடுங்குளக் கோட்டகம்= kodumbaalur region. இது கொடும்பாளூர் அல்ல. கோட்டத்தையும் ஊரையும் குழம்பிக் கொள்ளக் கூடாது. கோட்டத்தை இன்று taluk ற்கு இணையாய்ப் பயனுறுத்துவார். ”பிறைமுடிக் கண்ணிப் பெரியோன் ஏந்திய அறைசாய்ச் சூலத்து அருநெறி கவர்க்கும்” என்ற வாசகம் விராலிமலைக்கருகிற் சூலம்போற் பிரியும் முக்கோற் பிரிவைச் சொல்கிறது. திருச்சியிலிருந்து வருகையில் விராலி மலை ஒருமுனையாயும் மதுரை மாற்றுமுனையாயுங் கொண்டு வலக்கையில் வத்தலக்குண்டு/நிலக் கோட்டைப் பகுதியை ஒருமுனையாயும், இடக் கையில் புதுக்கோட்டையை இன்னொரு முனையாயும் கொண்டு கிட்டத்தட்ட ஒரு செவ்வகத்தை மனதில் உருவகஞ் செய்யுங்கள் விராலி மலையிலிருந்து வலப்பக்கம் ஒருவழியும், இடப்பக்கம் ஒருவழியும், செவ்வகத்தின் குறுன (கர்ண)வழியே மூன்றாவதும் தோன்றும். இவ்வழிகள் இன்றுமட்டும் இருப்பவையல்ல. பழங்கால வழிகளுங் கூட. பொதுவாய்ப் பழங்கால வழிகளே சிறுமாற்றங்களுடன் சற்றே அகலமாகி மேடுபள்ளம் சீராகி, கோணல்கள் ஒழுங்குற்று இக்கால வழிகளாகும். இவை குமுகாயத்தின் தொடர்முயற்சி விளைவுகள். எனவே இற்றை வழிகள் நமக்குத் தெளிவைக் கொடுக்கும்.

இன்றும் விராலிமலைக்கு வலப்பக்கம் மணப்பாறை, இளங்குறிச்சி, அய்யலூர், வடமதுரை, திண்டுக்கல், நத்தம், நெட்டியாபட்டி என அழகர் கோயிலைச் சுற்றிக்கொண்டு மதுரைக்கு ஒருவழியுண்டு. [இதற்குச் சற்று மாறாயும் திண்டுக்கல்லிலிருந்து சின்னாளப்பட்டி, கோடைரோடு, வாடிப் பட்டி, சமயநல்லூர், பரவை என்று ஒரு பெருவழி மதுரைக்குண்டு. இன்றைய இருள்வாய்ப் பாதையும் புதுவழி தான் போகிறது.] திண்டுக்கல் தாண்டினாற் சிறுமலைக் காடு வந்துவிடும். (மேற்கில் கோடைக்கானலும் தென்படும்.) பொதுவாகக் காடும் மலையும் கூடியவ ழி. அக்காலத்தில் இவ்வழி சிக்கல் ஆனது. முதல் வழியை விவரிக்கும் இளங்கோ ”தென்னவன் சிறுமலை” என்று இக்காடுகளைக் குறிப்பிடுவார். இன்று வரை அதே பெயரிருப்பது வியப்புத் தான். சிறுமலைக் காடுகளை வலங்கொண்டு நத்தம் போயிருக்க வேண்டும் என ஊகிக்கிறோம். அதன்பின் திருமால் குன்றம் காண்பதாய் வருவதால் நத்தம் போகாது இவ்வழி அமையாது. திருமால்குன்றத்தின் அருகே பிலத்தையும், புண்ணிய சரவணம், பவகாரணி, இட்டசத்தி என்ற பொய்கைகளையும், சிலம்பாற்றையும் உடன்தொடர்பான தொன்மக் கதைகளையும் மாங்காட்டுப் பார்ப்பான் சொல்வான். (இங்கே தொன்மக் கதைகளை விவரிக்க நான் விரும்பவில்லை.)

விராலிமலைக்கு இடப்பக்கம் இலுப்பூர், சிற்றன்னவாசல், புதுக்கோட்டை, (நற்சாந்துபட்டி, பொன்னமராவதி, நெற்குப்பை, முறையூர், கோட்டைப்பட்டி), கீழவளவு, மேலூர், வழியேயும் மதுரைக்குப் போகமுடியும். மலைகளும், காடுகளுங் குறைவான. இதுவும் நீள்வழியே. ஆனாற் சற்று வரண்டபகுதி. திருச்சி/விராலிமலையிலிருந்து வருவோர் தொலைவு கருதி இப்பாதை விரும்பார். நற்சாந்து பட்டி, பொன்னமராவதி, நெற்குப்பை, முறையூர், கோட்டைப்பட்டி இடைவழிக்கு மாறாய்த் திருமயம், திருப்புத்தூர், கோட்டைப் பட்டியென இன்னொரு இடைவழியும் உண்டு. பொன்னமராவதி வழிக்கு மாறாய் இதில் வாய்ப்புகள், ஏந்துகள் அதிகம். வியப்பென்னவெனில் இட வழியை இளங்கோ விவரிக்கவேயில்லை. இடப்பக்கம் வழியுண்டென்று மட்டுமே குறிக்கிறார். Perhaps this way was inconsequential then.

விராலிமலையிலிருந்து செந்நெறியாய், குறுன வழியாய், கொடும்பாளூர், மருங்காபுரி, துவரங்குறிச்சி, கொட்டாம்பட்டி, நத்தம், ரெட்டியாபட்டி, என திருமால்குன்றைச் சுற்றிக்கொண்டு தல்லாகுளம் வழியாக மதுரைக்குவரும் வழி சொல்லப்படும். இச்செந்நெறியிலும் திருமால்குன்றம் வந்துசேரும். இதைத்தாண்டின்,  வழிகளும் சேருமிடத்தில் ஒரு தெய்வம் உள்ளதாம் சந்திப்புகள் சேருமிடத்தில் அம்மன் கோயில்கள் இருப்பது தென்பாண்டிப் பழக்கம். ”பயணம் ஒழுங்காய் அமைய வழிவிடும் அம்மனுக்கு ஒரு தேங்காய் உடையப்பா” என்பர்.

ஆரிடையுண்டோர் ஆரஞர்த்தெய்வம்
நடுக்கஞ்சாலா நயத்தின் தோன்றி
இடுக்கண் செய்யாது இயங்குநர்த் தாங்கும்
மடுத்து உடன் கிடக்கும் மதுரைப் பெருவழி.

என்று சொல்லி “நான் வேங்கடம் போகிறேன்; நீங்கள் மதுரை செல்லுங்கள்” என்று மாங்காட்டுப்பார்ப்பான் முடித்துவிடுகிறான். ஆரிடை= ஆருகின்ற இடம்; நிறைகின்ற இடம். சேருமிடம். மூன்று வழிகளும் சேரும் இவ்விடத்தில் ஓர் ஆரஞர்த்தெய்வம் உண்டு. இவ்வழியிடைத் தெய்வம் உமக்குத் துன்பம் தராது; ஆனால் உம்மைத் தங்க வைத்துவிடும். (மேற்சொன்ன அம்மன் கோயில்களோடு இயக்கிகளைப் பொருத்துங்கள். தேங்காய் உடைப்பதைச் சேருங்கள். தங்கற் பொருள் புரிந்துவிடும்.) அத்தெய்வத்தை மடுத்து மதுரைப் பெருவழி கிடக்கும். இச்சந்திப்பிலிருந்து எவ்வளவு தொலைவு மதுரை இருக்கும் என்ற செய்தி சிலம்பில் எங்குஞ் சொல்லப்படவில்லை.

இற்றைநிலையில் மேற்சொன்ன 3 வழிகளும் மதுரை மேம்பாலத்தருகே வந்துவிடுகின்றன. பாலந் தாண்டினால் வெளிவீதியின் முனை வந்துவிடும். இற்றை மதுரை இச்சந்திப்பிலிருந்து 200/300 மீட்டருக்குள் உள்ளது. தவிர ஆற்றைக் கடக்க வேண்டும். சிலம்பிலோ இதற்கப்புறம் ஒரு பெருவழி சொல்லப் படுகிறது. அப்படியெனில் இற்றை மதுரை அன்றிருந்தல்ல. அதற்கப்புறம் வைகையை ஒட்டி வடகரையில் கவுந்தியும், கோவலனும், கண்ணகியும் நடப்பார். எவ்வளவு தொலைவு? தெரியாது. (ஒரு 12 கி.மீ. இருக்குமா?) சிலைமானுக்கருகில் கீழடியிற் கிடைத்த தொல்லாய்வுச் செய்திகளை சிலம்போடு ஒட்டிப் பார்த்தால், பழமதுரை கீழடிக்கு அடியில் இருக்குமோ?  நம் மனத்திற் குறுகுறுப்பு ஏற்படுகிறதல்லவா? சங்க கால மதுரையை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோமா?.

அன்புடன்,
இராம.கி.

No comments: