இதுவரை 14 பகுதிகள் முகுந்தன் கேள்விகளுக்கே ஆகிவிட்டன. இனிவரும் பகுதிகளில் பலரெழுப்பிய குறுக்கு வினாக்களுக்கு விடையளிக்க முற்படுவேன். முதற்கேள்வி முகுந்தன் எழுப்பியது. ”நெடுஞ்செழியன் மகன் தீக்கிரையாகினான் என்று எப்படிச்சொல்கிறீர்கள்?” என்றும் ”அதற்கான வரிகள் எங்குள்ளன?” என்றுங் கேட்டார். நேரடி வரிகள் கிடையா. ஆனாற் சுற்றிவளைத்து ஊகிக்கலாம். பாண்டிய இனக்குழு கொற்கையிலிருந்தே முதலில் எழுந்தது என்பதை இக்கட்டுரையின் நடுவே உரைத்திருந்தேன். நினைவு கொள்ளுங்கள்.
---------------------------------------------
இந்தியாவிற்குள் 70000 ஆண்டுகளுக்குமுன் M130 வகை மாந்தன் நுழைந்த போது (A Journy of Man - A Genetic Odyssey by Spencer Wells) கடற்கரையை ஒட்டிப் பரவியதாய் இற்றை அறிவியல் சொல்லும். இவரை நெய்தலாரென்றே (Coastal peolple) ஈனியல் கூறும். பாண்டிய இனக்குழு இந்நெய்தலாரிலிருந்து நெடுங் காலம் முன்னே தெற்கேகிளைத்த இனக்குழுவாகும். குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல் என்ற திணைவரிசை பின்னாலெழுந்த அணிவரிசையாகும். (தமிழர் குறிஞ்சியில் தொடங்கியதாகவே பலரும் நினைக்கிறார். அப்படித் தேவையில்லை) நெய்தலார்வழித் தோற்றம், பாண்டியரின் முடிவளை, மீன்கொடி, கவரி/சோழிகளின் நாணயமரபு, முத்துவிழைவு, நித்திலின்(> நித்தி>நிதி; முத்து) செல்வ வளர்ச்சி, முத்துவழி மாந்தப்பெயர்கள், முத்துவழி ஊர்ப்பெயர்கள், கோரை ஊர்ப்பெயர்கள் (கொற்கை-மாறோக்கம் என்ற சொற்கள் கோரையாற் தோன்றின), [புனை நாவாய், கோரைப்பாய், கோரைப் படியாற்றங்கள் (applications) எனக்] கோரைப்பயன்பாடுகள், சுறா எலும்பு / கற்றாழை நார் சேர்ந்த இசைக்கருவி எனக் கணக்கற்ற செய்திகளால் உறுதிப்படும்.

பொதுவாகச் சங்ககாலத்தில் பாண்டியனென்பது இனக்குழுப்பெயர். செழியன் மாறன் என்பவை பட்டப்பெயர்கள். வேல், வழுதி - இயற்பெயர் முடிபுகள் செழியன், மாறன் என்ற குடிப்பெயரை பாண்டிக் கொடிவழியார் மாறிமாறி வைத்துக்கொண்டார். மாறனும் செழியனும் தண்பொருநை யாற்றின் (தாமிர பரணியின்) முடிவிற்கிடக்கும் கோரைப்பகுதியால் எழுந்த பெயர்கள். (மாறு = கோரை; செழி>செடி = புதர். கோரைப்புதரைக் குறிக்கும்.) செழியன்<செடியன்>செடையன் பின்னாளிற் சடையனும் ஆனது. வெற்றி வேற் செழியனில் வரும் வேல் என்பது இயற்பெயர் முடிபு. பெரும்பற்றப் புலியூர் நம்பியின் திருவாலவாயுடையார் புராணத்தில் ஞானோபதேசம் செய்த திருவிளையாடல் 2 ஆம் பாடலில் ”மாணிக்க வாசகர் தானைவேல் வாகைமாறனிடம் அமைச்சராய் இருந்தார்” என்ற செய்தி வரும். (அரி மர்த்தன பாண்டியன் என்பதெலாம் பிழை மிகுந்த “திருவிளையாடற் புராணத்தால்” ஏற்பட்ட குழப்பம். பல திருவிளையாடல்களில் திருவாலவாயுடையார் புராணமே கற்பனையைக் குறைத்துச் சொல்கிறது. பிழைமிகுந்த திருவிளையாடற் புராணமே பலரும் படிப்பதால் பிழைகளே பரவிக்கொண்டுள்ளன.) இங்கும் வேலென்பது இயற்பெயர் முடிபு.
இன்னொரு வகையில் வேள்விக்குடிச் செப்பேட்டில் நாலாம் ஏட்டின் முன் புறத்தில் 45-46 ஆம் வரிகளில் ”கடுங்கோன் என்னும் கதிர்வேல் தென்னன்” என்ற பெயர் வரும். இவன்தான் களப்பாளரை எதிர்த்துப் பாண்டிக்குடியை மீளஆட்சிசெய்ய வைத்தவன். இவன் இயற்பெயர் கதிர்வேல். இதே போல் கனகவேல் என்றபெயரை வேறு பாண்டியர்க்கு ஆன பெயரா வேறெங்கோ படித்துள்ளேன். எந்த இடம் என்று இப்போது நினைவிற்கு வரவில்லை. ஆக, வெற்றிவேல், தானைவேல், கதிர்வேல், கனகவேல் போன்ற இயற்பெயர்கள் பாண்டியருக்கு இருந்துள்ளன. ஆழ்ந்து பார்த்தால், திருச்செந்தூர்ப் பக்கத்துத் தெற்கத்தி மாறருக்கும், செழியருக்கும் வழுதி போலவே இன்னொரு இயற் பெயராய் வேல் இருந்ததில் வியப்பேயில்லை :-)
மூவேந்தர் தத்தம் மூத்த மக்களுக்கே பொதுவாய் இளங்கோப் பட்டம் சூட்டுவர். ஏதோ காரணத்தால் இளங்கோவிற்கு ஊறு ஏற்பட்டால், அடுத்த மகனுக்கோ, அன்றேல் சோதரனுக்கோ, சோதரன் மகனுக்கோ பட்டஞ் சுட்டுவார். முற்காலச் சோழரும் பிற்காலப் பாண்டியரும் பங்காளிச் சண்டையிற் சீரழிந்தது வரலாற்றிலுண்டு. ”இளங்கோ வேந்தன் துளங்கொளி ஆரம்...” எனும் கொலைக்களக் காதை 193ஆம் வரியில் மதுரையிலிருந்த இளங்கோ வேந்தனின் ஆரத்தை கொள்ளையன் கவர வந்த கதையைப் பொற்கொல்லன் சொல்வான். அதைக் கேட்ட வீரர் சமதானமாகிக் கோவலனைக் கொல்வர் எனவே நெடுஞ்செழியனின் இளங்கோ மதுரையில் இருந்ததும், கொள்ளையனால் அவன் ஆரமிழந்ததும் உண்மையாகலாம். அதே பொழுது, பாண்டியரிடையே கொற்கைக்கு முதன்மை யிருந்த காரணத்தால் பட்டத்திற்கு முதலுரிமையாளன் ஆளுநனாக கொற்கையில் இருத்தப் பட்டதும் உண்மை. சில போது இளங்கோவின் சிற்றப்பன் ஆளுநன் ஆகலாம்.
இந்நிலையில் கொலைக்களக் காதை, ஆய்ச்சியர் குரவை, துன்பமாலை, ஊர்சூழ்வரி, வழக்குரைகாதை, வஞ்சினமாலை, அழற்படுகாதை, கட்டுரை காதை என்று மதுரைக்காண்டம் நகரும். முடிவில் யார் அரசனானான்? உரைபெறு கட்டுரை மூலம் ”அன்று தொட்டுப் பாண்டியனாடு மழைவறங் கூர்ந்து வறுமையெய்தி வெப்புநோயுங் குருவுந் தொடரக் கொற்கையில் இருந்த வெற்றிவேற்செழியன் நங்கைக்குப் பொற்கொல்லர் ஆயிரவரைக் கொன்று களவேள்வியால் விழவொடு சாந்திசெய்ய நாடுமலிய மழைபெய்து நோயும் துன்பமும் நீங்கியது” என்ற கூற்றால், வெற்றிவேற்செழியனே நெடுஞ்செழியனுக்கப்புறம் அரசு கட்டில் ஏறியது புலப்படும். அப்படியானால் மதுரை இளங்கோ என்னவானான்?
மதுரை எரிபடுகையில், நெடுஞ்செழியனுக்கு 50 அகவையிருக்கலாம் (கோப்பெருந்தேவியோடு காமத்தால் ஊடியவன் 60 அகவை என்பது சற்று அரிது. சிலம்புக் காலத்தில் அவனை முதிர்ந்தவனாய்க் கொள்வதை ஏற்க முடியாது.) மதுரையிலிருந்த அவன்மகன் 20/25 அகவைக்குள்ளிருக்கலாம். நேரியவாய்ப்பில் நெடுஞ்செழியனின் பின் அவனே மாறனெனும் பெயரோடு வேந்தனாக வேண்டியவன். ஆனால் அடுத்தேறியவனோ வெற்றிவேற் செழியன் எனப்பட்டான். இவன் நெடுஞ்செழியனின் 2 ஆம் மகனாயிருப்பின் இவனகவை 20க்கும் குறைந்திருக்கும். பின்னால் அகம் 149 இல் எருக்காட்டுத் தாயங்கண்ணனார் தெரிவிப்பது போல் தும்பைப்போர் செய்து, வஞ்சியில் இருந்து கண்ணகி படிமத்தைக் கவர்ந்துவர ஏற்பாடு செய்பவன் 20க்கும் குறைவான அகவையில் இருக்க முடியாது. அதற்குப் பட்டறிவும் தந்திரமும், சூழ்ச்சியும் வேண்டும். மாறாக வெற்றிவேற் செழியன் நெடுஞ்செழியனின் தம்பியாக இருப்பானேயானால், நிகழ்வுகள் முற்றிலும் அச்சாகப் பொருந்துகின்றன. எனவே அரண்மனை எரிப்பில் நெடுஞ்செழியன் மகன் இறந்திருக்கலாம் என்றே கொள்ள வேண்டியுள்ளது. கொற்கையிலிருந்த தம்பியே இன்னொரு செழியனாய்ப் பெயர் கொண்டு பட்டமேறினான்.
[சிலம்பின் காலம் கி.மு.75 என்று நான் சொன்னதற்கு அகம் 149 உம் ஒரு காரணம். சிலம்பு கி.பி. 5/6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று சிலர் சொல்வது எல்லாம் ஆதாரமில்லாத கூற்று. வெறுமே “அவர் சொன்னார், இவர் சொன்னார்” என்று பழம் ஆசிரியர் கூற்றுக்களையும் 2 ஆம் நிலை ஆவணங்களையும் வைத்துக் கொண்டு தட்டாமாலை சுற்றாது, தாமே ஊற்றாவணங்களை (original documents) வைத்து ஏரணத்தோடு (logic) ஒன்றின் கீழ் ஒன்றாய் தன் தேற்றத்தை (thesis) மாற்றுக்கருத்தார் நிறுவினால், அவருக்கு எதிர்நின்று உரையாடலாம். அதைவிடுத்து இலக்கியக் காணிப்பையே (literature survey) செய்துகொண்டு இருப்பவரோடு என்னசெய்ய? “இராமா, ஓடிவா, இக் கயிற்றைத் தாவு. ஆங்... தாண்டிட்டான். இப்படித்தான் தாண்டோணும்” என்பது போல் சில அறிஞர் செய்யும் வேடிக்கையை (திரு. நா.கணேசன் போன்றோர் செய்யும் வேடிக்கையை)ப் பார்த்துப் போக வேண்டியது தான்.]
சங்ககாலத்தில் நாமறிந்து, நம்பி நெடுஞ்செழியன், தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், வெற்றிவேற் செழியன் ஆகிய பல செழியரைப் பார்க்கிறோம். இன்னும் சில செழியரைப் பற்றியுங் குறிப்புகளும் உள்ளன. ஆனால் அவற்றை முறைப் படுத்தி யார் முன், யார் பின் என்பதில் இன்னுங் குழப்பமிருக்கிறது. நானும் ஆய்வை முடித்தேன் இல்லை. கொற்கையில் இருந்த தம்பிக்கு வயது 40-45 இருக்கலாம். பஞ்சகாலம். நாட்டிற்பலரும் எள்ளுங் கொள்ளுமாய் வெடித்து இருந்த காலம். நெடுஞ்செழியன்மேல் பலருக்கும் கோவமிருந்தது. வார்த்திகன் காரணமாய் ஒரு முறையும், கோவலன்/கண்ணகி காரணமாய் மறு முறையும் மதுரையில் கலகம் விளைகிறது. அரசன் உயிர் துறக்கிறான். அரண்மனை எரிக்கப் படுகிறது. (எரிப்பு கண்ணகி கொங்கையின் பாசுபரகால் அல்ல. அது ஓர் இலக்கிய உருவகம். விவரங் கெட்ட ”விமரிசகரே” ”கொங்கை என்ன பாசுபரசா?” என்று கேலிசெய்து பேசுவர்.) மேலே கூறிய உரைபெறு கட்டுரை வாசகத்தில் ,”அன்று தொட்டு” என்பதை அரண்மனை எரிக்கப்பட்ட நாளிலிருந்து என்று பொருள் கொள்ளலாம். அடுத்து 2/3 மாதங்கள் நாட்டில் குழப்பம் நிலவியிருக்கலாம்.
பஞ்சத்தால் (”பஞ்சமென்று எப்படிச் சொல்கிறீர்?” என்று ஒருமுறை புவியியலாளர் நண்பர் சிங்கநெஞ்சன் கேட்டார். உரைபெறு கட்டுரையால் தெள்ளெனத் தெரிகிறது.) அடிபட்ட மக்களை ஆற்றுப்படுத்த பொற்கொல்லரைக் கொன்று, களவேள்வி (இச்சொல் ஓர் ஆழமான குறிப்பு. போருக்கு அப்புறஞ் செய்யும் வேள்வி போல brutal repression மூலம் கலகத்தை அடக்கிச் செய்யப்படும் வேள்வி. என்று இங்கு குறிக்கப் படுகிறது) செய்து தன் அதிகாரத்தால் வெற்றிவேற் செழியன் சட்டம், ஒழுங்கைக் காப்பாற்றுகிறான். [தமிழ்வேந்தரை ஏதோ அருளாளரென்று எண்ணிக் கொள்ள வேண்டாம். அவரிலும் அறம் வழுவி நின்றவர் பலரும் இருந்தார். வெற்றி வேற் செழியனும் அப்படிப்பட்டவனே.]
2 ஆங் கேள்வியாய் “பொற்கொல்லர் ஆயிரவரைக் கொன்று” என்பதை எண்ணிக்கையாய் எடுக்காது, “திசையாயிரத்து ஐஞ்ஞூற்றுவரை” என்பது போல் கூட்டத்தாராய்க் கொள்ளலாமா எனில், கொள்ளலாம். ஆனால் பொற்கொல்லரில் அப்படிக் கூட்டக் குறிப்பு இருந்ததா என்று பார்க்க வேண்டும். [மேலே வணிகரைக் குறிக்கும் சொல்லில் ஐஞ்ஞூற்றுவர் என்பதே சரி. இன்றும் காரைக்குடிக்கு அருகே மாற்றூர் நகரத்தார் கோயிலின் ஈசர் ஐஞ்ஞூற்றீசரென்றே அழைக்கப்படுவார். ஆயிரத்து ஐஞ்ஞூற்றீசரல்ல. திசையாயிரம் என்பது ”எல்லாத்திசைகளும்” என்றே பொருள்கொள்ளும். நானா தேசம் என்பதும் இதே பொருள்தான். அதேபோல ஆயிரவைசியர் என்றொரு கூட்டமுண்டு. 1500 வைசியர் கேள்விப்பட்டதில்லை. நீங்கள் சொன்ன முன்மொழிவு எண்ணிப் பார்க்கவேண்டியது. ஆனால் வேறொரு ஆதாரம் வேண்டும். சமணரில் எண்ணாயிரம், பார்ப்பனரில் எண்ணாயிரம் என்பதையுங் கூட சொற்பொருள் காணாது உட்பொருள் காணவேண்டும்.
இனி மூன்றாங் கேள்வியில் ”தீத்திறத்தார் பக்கமே சேர்க” என்பதைப் புரிந்துகொள்ள வஞ்சின மாலைக்கு வருவோம்.
அன்புடன்,
இராம.கி.

No comments:
Post a Comment