Thursday, September 12, 2019

சிலம்பு ஐயங்கள் - 20

முதலில் சேரர் குடியின் ஆதன் கிளையைப் பார்ப்போம். (செங்குட்டுவனைப் பின்னர் விரிவாய்ப் பார்ப்போம்.)

சங்ககாலச் சேரரில் சுள்ளியம் பேரியாற்றங் கரைக் குடவஞ்சியில் (கொடுங்களூர்) ஆதன்குடியும், அமராவதி (ஆன்பொருநை) ஆற்றங்கரைக் கொங்கு வஞ்சியில் (கரூர்) இரும்பொறைக் குடியும் ஆட்சிபுரிந்தார். குட வஞ்சி, கொங்கு வஞ்சியினுங் காலத்தால் முந்தையது. இக்கிளைகள் எப்பொழுது பிரிந்தன? தெரியாது. அதே பொழுது இப்பிரிவுகள் தமக்குள் இறுக்கங் கொண்டனவென்றுஞ் சொல்லமுடியாது. (இரும்பொறைப் பிரிவின் செல்வக் கடுங்கோவிற்கு வாழியாதன் என்ற பெயருமுண்டு.) நமக்குக் கிடைத்த பாடல்களின் படி ஆதன்களில் மூத்தவன் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன். (இவன் போக, மாவலியாதன்/ மகாபலி, பெருகலாதன்/ ப்ரஹ்லாதன் என்ற தொன்மத்தாரும் இவர் குடியினரே என்பார்.) 2 கிளையாரின் ஆட்சிக் காலங்கள் பதிற்றுப்பத்துப் பதிகங்களால் அறியலாம். ஒரு சேரன் காலத்தை ஏரணத்தோடு நிறுவினால், மற்றவர் நிலைப்புகளைப் பதிகச் செய்தியால் ஓரளவு சீர்ப்படுத்தலாம். பொ.உ.மு.80 இல் செங்குட்டுவன் வட படையெடுப்பு நடந்தது என்று கொண்டு மற்ற சேரரின் காலத்தைச் சிலம்புக் கால ஆய்வின் மூலம் நான் குறித்தேன்.

மணிகள், மாழைகள் (metals), மண்ணூறல்கள் (minerals) கிடைத்த கொங்குநாடு என்பது மூன்று வேந்தரும் தொடர்ந்து பந்தாடிய மேட்டு நிலமாகும். கொங்கு நாட்டை வேளிர்கள் ஆண்டு, மூவேந்தருக்கும் பொதுவாக இருந்தவரை ”த்ராமிர சங்காத்தம்” என்பது நீண்டகாலந் தொடர்ந்தது. என்றைக்குக் கொங்கு வேளிரிற் பெண்ணெடுத்து, மணவுறவு கொண்டாடிச் சேரர் கொங்கு வேளிரை தம்பக்கம் வளைத்தாரோ, அதன்பின் தமிழருள் உட்பகை பெரிதாகிப் போய் தமிழர் முன்னணி குலைந்தது. கலிங்கத்துக் காரவேலன் அதைப் பயன்படுத்திப் ”பித்துண்டா” எனுங் கொங்குக் கருவூரைக் கைப்பற்றினான். அந்துவஞ் சேரல் இரும்பொறை காலத்தில் இது பெரும்பாலும் நடந்திருக்கலாம். கொங்குக் கருவூரை மீண்டும் சேரர் பிடித்திருக்கிறார்.

காரவேலனின் பாகதக் கல்வெட்டும், மாமூலனாரின் அக.31 உம் ஆழ்ந்து பொருத்திப் பார்க்க வேண்டிய செய்திகளாகும். சங்கப்பாடல்களின் ஆய்வு ஆழப் படுகையில், சமகால ஆளுமைகளைப் பொருத்தி, உள்ளார்ந்த ஒத்திசைவை (internal consistency) நாடுவதால் நான்செய்த காலமதிப்பீடு கடந்த 7,8 ஆண்டுகளாய்ச் சிறிது சிறிதாய் மாறிக் கொண்டேயுள்ளது. பதிற்றுப் பத்தில் இல்லாத சேரர் காலத்தை இன்னும் நான் பொருத்தவில்லை. கீழ்வரும் காலப்பிரிவுகளை ஒருவித முன்னீடுகளென்றே சொல்லலாம். எதிர்காலத்திற் சான்றுகள் வலுப்படும்போது மேலும் திருத்தங்கள் நடக்கலாம். It has still not reached a definitive stage.

வானவரம்பன் பெருஞ்சோற்றுதியன் சேரலாதனின் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 190-153 ஆகும். இவனை முரஞ்சியூர் முடிநாகராயர் புறம் 2 இல் பாடுவார். இவன் காலத்தில் அசோக மோரியனின் தாக்கம் சேரர் மேல் தொடங்கி விட்டது. கூடவே சுங்கர் மேல் சேரருக்குக் கடுப்பிருந்தது நாட்பட்ட கதையாகும். (ஐவரான) சுங்கருக்கும் நூற்றுவர் கன்னருக்கும் இடைநடந்த வஞ்சி/தும்பைப் போரிற் கன்னரின் பக்கம் சேரரிருந்தார். உதியன்சேரல் காலத்திருந்தே 2,3 தலைமுறைகள் இவ்வுறவு தொடர்ந்திருக்கலாம். சேரருக்கும் நூற்றுவர் கன்னருக்கும் இடையிருந்த நல்லுறவு சிலம்பாற் புரியும். என் ”புறநானூறு - 2 ஆம் பாட்டு” என்ற கட்டுரைத் தொடரையும் படியுங்கள்.

http://valavu.blogspot.in/2010/08/2-1.htmlம்
http://valavu.blogspot.in/2010/08/2-2.html
http://valavu.blogspot.in/2010/08/2-3.html
http://valavu.blogspot.in/2010/08/2-4.html
http://valavu.blogspot.in/2010/08/2-5.html

இப்பாட்டில் வரும் ஈரைம்பதின்மர் என்பார் நூற்றுவர் கன்னரே. பலருஞ் சொல்வதுபோல் பாரதப்போரின் கௌரவரல்ல. புறம் 2 இல் வருஞ்செய்தியை கௌரவ - பாண்டவப் போராய்ச் சித்தரிப்பதை நான் ஒப்புவதில்லை. அப்படிச் சொல்வது தேவையற்ற ”பௌராணிகப்” பார்வை. காலப்பொருத்து இன்றிக் கௌரவர்க்குச் சேரர் பெருஞ்சோற்று மிகுபதங் கொடுத்தாரென்பது விழுமிய  வழியாகவும் பொருந்தவில்லை. ”நண்பருக்கானது தமக்கானது” போல் கன்னரின் தும்பைப் போர்த் தோல்விகளைச் சேரர் நினைத்து, போரில் இறந்தவருக்காகச் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்திருக்கலாம். கன்னரின் முன்னோருக்குப் படையலெடுத்து, ”சேரரும் அவரும் ஒரே குலம் போல்” என ஊருக்குணர்த்திச் சேரன் நட்பும்சொந்தமுங் கொண்டாடுகிறான். “சேரனே! கன்னருக்காக நீ பரிந்து முன்வந்து பெருஞ்சோற்று மிகுபதம் கொடுத்தாயே? அவன் குலமும், உன் குலமும் ஒன்றெனப் பறைந்தாயே? உன் சிறப்பை என்னவென்போம்?” என்று முரஞ்சியூர் முடிநாகர் வியக்கிறார்.

உதியன் சேரலாதன் பொதினி ஆவியர்குலத்து வேண்மாள் நல்லினியை மணஞ்செய்தான். (இற்றைப் பழனியே பழம்பொதினி. அதன் அடிவாரத்தில் ஆவினன் குடியுள்ளது.) ஆவியர் குடியோடு சேரர் குடியினர் கொடிவழி தோறும் மணத்தொடர்பு கொண்டார். உதியனின் முதல்மகன் இமைய வரம்பன் நெடுஞ்சேரலாதனாவான். இவனைக் குடக்கோ நெடுஞ்சேரலாதன் என்றுஞ் சொல்வர். (குடக்கோ என்று பெயர்வைத்துக் கொண்டு, கொங்கு வஞ்சியில் இவனாண்டான் என்பது நம்பக் கூடியதாய் இல்லை.) இவன் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 166 - 110. இவனுக்கு 2 மனைவியர். தன் தாய் நல்லினியின் சோதரனான வேளாவிக் கோமானின் (இவன் மன்னனில்லை; வெறுங் கோமான்; கூட்டத் தலைவன்.) முத்த மகள் பதுமன் தேவியை முதல் மனைவியாகப் பெற்றான்.

இவள் வழி களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல். ஆடுகோட்பாட்டுச் சேரலாதனென இருவர் பிறந்தார். அடுத்தவள் ஞாயிற்றுச் சோழன் மகள் நற்சோணை. (=சோணாட்டுக்காரி; பொன் போன்றவள். சோணையெனும் பொன்னாறு மகதத்திலும், பொன்னி சோழநாட்டிலும் ஓடின. சோழருக்கும் பொன்னிறத்திற்குமான இனக்குழுத்தொடர்பை நாம் இன்னும் உணர்ந்தோம் இல்லை. அகம் 6-இன் 3,4 ஆம் அடிகளைக் காணின், ஐயை என்பது இவளுக்கு விதுப்பெயராயும், நற்சோணை என்பது பொதுப்பெயராயும் ஆகலாம்.) இவளுக்குப் பிறந்த செங்குட்டுவன், முந்தை உடன்பிறந்தோர் இருவருக்கும் இடைப்பட்ட புதல்வன். இளங்கோவின் இருப்பு சிலம்பின் வரந்தருகாதை 171-183 வரிகளிலன்றி வேறெங்கும் தென்பட வில்லை. அக்காதை இடைச் செருகல் என நான் ஐயுறுவதால் இளங்கோ என்பார் செங்குட்டுவன் தம்பியென என்னால் நம்ப முடியவில்லை. (நான் அப்படிக் கொள்ளவும் இல்லை.)

”வடவர் உட்கும் வான்தோய் வெல்கொடிக்
குடவர் கோமான் நெடுஞ்சேர லாதற்குச்
சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன்”

என்று பதிற்றுப்பத்தில் 5 ஆம் பத்தின் பதிகம் செங்குட்டுவனைக் குறிக்கும். இந்த மணக்கிள்ளி யார்? - என்பது அடுத்த கேள்வி. மருவல்= தழுவல், சேர்தல். (”மருவுகை” இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் -ஆங்கிலத்தில் marriage- போயிருக்கிறது.) மருமகன்/மகள் தழுவிச் சேர்த்துக்கொண்ட மகனும் மகளுமாவர். மருவற் பொருளில் இன்னொரு சொல் மணத்தலாகும். ஒரு குடும்பம் இன்னொன்றைத் தழுவி உறவுகொளும் நிகழ்வே மணமாகும். (அகம் 86-இன்படி மண்ணுதலெனும் மஞ்சள்நீராடலும். பூ,நெல் சொரிவதும், வாழ்த்தலுமே மணமாகும்.) மணமகனும் மணமகளும் பந்தங் கொண்ட மகனும் மகளுமாவர். மணமகன்/மணமகள் வீடு, மணவீடு/மருவீடு ஆகும். (சிவகங்கைப் பக்கம் மருவீடு என்ற சொல்லுண்டு.) மணக்கிள்ளியின் பொருள் ”சம்பந்தங் கொண்ட கிள்ளி” என்பது தான். மணக்கிள்ளியெனும் உறவுப் பெயரைப் பதிகம் பாடியோர் காரணம் புரியாது இயற்பெயர் ஆக்கினார். பதிகத்திற்கு புத்துரை எழுதியோரும் இதை உணரவில்லை. சோழன் மணக்கிள்ளி(யின் வழி) நெடுஞ்சேரலாதற்கு ஈன்ற மகன்” என்றே மேலேயுள்ள அடியைப் புரிந்துகொள்ளவேண்டும்.

சேரரின் மணவீட்டைச் சேர்ந்தவன், ஐயை/நற்சோணையின் தந்தை, உறையூர்ச் சோழன் தித்தனாவான். யா என்பது இருளைக் குறிக்கும் இற்றல்= போக்குதல்; யாயிற்றன் = இருளை இற்றுகிறவன்/ போக்குகிறவன். யா>ஞா> நா என்ற திரிவில் யாயிற்றன் என்பவன் ஞாயிற்றனாவான். யாயிற்றன்> ஆயிற்றன்>ஆதிற்றன்>ஆதித்தன்>ஆதித்த என்பது வடபுல மொழிகளில் சூரியனைக் குறித்தது. தமிழில் ஆதித்தனின் முதற்குறை தித்தன் ஆகும். முதற்குறைப் பெயர்கள் சங்ககாலத் தமிழிற் பரவலாயுண்டு. தித்தனே பட்டமேறும் போது முடித்தலைக் கோப்பெருநற் கிள்ளியெனும் பெயர் பெறுவான். புறம் 13 இல் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், கொங்குக் கருவூரில் இவன் யானை மதங்கொண்டு தடுமாறியதை அந்துவஞ் சேரல் இரும்பொறைக்கு அடையாளங் காட்டுவார். செங்குட்டுவன் பாட்டனைத் திகழொளி ஞாயிற்றுச் சோழனென்று சிலம்பு புகலும். சமகால அரசரைப் பார்த்தாற் முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளி எனும் தித்தனே, செங்குட்டுவனின் தாத்தனான ஞாயிற்றுச் சோழனாவான்.

அதே பொழுது தித்தனின் மகன் பட்டஞ் சூடுமுன் வெளியன் எனப்படுவான் ஏதோவொரு காரணத்தால் தித்தனுக்கும் வெளியனுக்கும் மனம் வேறாகி உறையூரை விட்டு விலகித் தந்தையின் வள நாட்டுத் துறையான கோடிக் கரையில் வீர விளையாட்டு, இசை, நடனக் கூத்துகளென வெளியன் சில காலங் கழிப்பான். தித்தனுக்குப் பின், வேற்பல் தடக்கை பெருவிறற்கிள்ளி (பல்வேறு தடங்களில்/ வழிகளில் வேல்வீசுந் திறன்கொண்ட கிள்ளி) என்ற பெயரில், வெளியன் உறையூரை ஆண்டான். நெடுஞ்சேரலாதனின் மைத்துனனும் செங்குட்டுவனின் தாய்மாமனும் ஆனவன்  தித்தன்வெளியன் எனும் வேற்பல்தடக்கை பெருவிரற்கிள்ளியே ஆவான். சேரலாதனும் வெளியனும் ஒருவருக்கொருவர் முரணிச் சண்டையிட்டு போர்க்களத்தில் இறந்ததைக் கழாத்தலையார் பாடினார் (புறம் 62, 368). புறம் 62 இல் சொல்லப் படும் போர் மச்சான்-மைத்துனன் இடையே ஏற்பட்டதாகும். பெருவிறற் கிள்ளிக்குப் பின் வளநாடு தடுமாறிப் பங்காளிச்சண்டைகள் கூடி செங்குட்டுவனே அதைத்தீர்த்து 9 அரசருடன் போரிட்டு தன் மாமன்மகனைப் (இவன் பெரும்பாலும் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் ஆகலாம்) பட்டமேற்றுவான். வஞ்சிக்காண்ட வழி இவ்வளவு பொருத்தங்களை உணர்ந்த பிறகாவது, சிலம்பைச் சங்கம் மருவிய காலமென்றும், 6 ஆம் நூற்றாண்டென்றுங் குழம்பி ஒழிவதை நிறுத்தலாம்.

பல்யானைச் செல்கெழு குட்டுவனின் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 156 - 132. இவனே இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் தம்பி. இவன் வேந்தன் ஆகாததால், வானவரம்பன் எனும் பட்டங் கொள்ளாதவன். அண்ணன் நெடுஞ்சேரலாதனே நெடுங்காலம் ஆண்டான். அண்ணன் தம்பிக்கிடையே மிகுந்த அகவை வேறுபாட்டிற்குக் காரணமில்லை. 25 ஆண்டு காலம் தம்பி இருந்ததால் அண்ணன் ஆட்சி நடந்த போதே தம்பி இறந்திருக்கலாம். பதிற்றுப்பத்து தவிர வேறெங்கினும் இவன்செய்திகள் குறைவு. பல்யானைச் செல்கெழு குட்டுவனுக்கு அப்புறம் சேர இளையரே ஆட்சியைக் கவனித்துக் கொண்டிருக்கலாம். (பொதுவாக வேந்தப் பொறுப்புக் கொண்டவரே நீண்ட காலம் ஆண்டார். அம்முறையில் நெடுஞ்சேரலாதனும், செங்குட்டுவனும், ஆடுகோட்பாட்டுச் சேரலாதனுமே இயல்முறையில் வேந்தனாகிறார். பல்யானைச் செல்கெழு குட்டுவனும், களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலும் நீட்சிமுறையில் ஒன்றாகி, நார்முடிச்சேரல் மீக்குறைந்த காலமே வேந்தன் ஆகியுள்ளான்.. 

அடுத்தது களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல். இவன் காலம் பொ.உ.மு. 131-107. இவனுடைய இயற்பெயர் தெரியவில்லை. “களங்காய்க்கண்ணி நார்முடி” என்பது ஒருவகை முடியைக் குறிக்கும். நெடுஞ்சேரலாதன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் இறந்த பின்னால், மூத்தாள் மகனுக்கும், இளையாள் மகனுக்கும் சமகாலத்தில் நெடுஞ்சேரலாதன் இளவரசுப் பட்டஞ் சூட்டியிருக்க வேண்டும். [இங்கே தமிழகப் பட்டஞ்சூட்டு முறை பற்றிச் சொல்லவேண்டும், முடிசூட்டல் என்பது இளவரசுப் பட்டத்திற்கு மட்டுமே. குறிப்பிட்டவன் எப்போது  அரசனானான் என்பது தமிழ் முறைப்படி தெரிய வராது. அரசன் இறந்த பின்னால் இளவரசரில் மூத்தவன் ஆட்சிக்கு வருவான். அதற்கு எந்தப் பெரிய கொண்டாட்டமும் இராது. (Ruling is a continuous affair.) இதனால் ஆட்சிப் பருவங்கள் என்று கூறப்படுபவற்றில் overlap என்பது இருந்துகொண்டே யிருக்கும். நான் சொல்வதைக் கூர்ந்து ஓர்ந்துபார்த்து அறியுங்கள்.]  இந்த நாட்பட்ட பட்டஞ் சூடலால், நெடுஞ்சேரலாதனுக்கு அப்புறம் நார்முடிச்சேரலே வானவரம்பன் என்ற பட்டஞ்சூடி அரசுகட்டில் ஏறியிருக்கலாம். இவனுக்கு இன்னொரு பெயரும் இருந்திருக்கலாமெனவும் ஊகிக்கிறோம். 

புறம் 62 ஆம் பாட்டில் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் வளநாட்டு வேற்பல் தடக்கைப் பெருவிறற் கிள்ளியும், பொருதுகையில் இருவரும் இறந்து பட்டதாய்க் கழாத்தலையார் சொல்வார். அதேபொழுது புறம் 65 ஆம் பாட்டில் நாகநாட்டுக் கரிகால் வளவன் [பெரும்பாலும் இரண்டாம் கரிகாலன். முதற் கரிகாலன் கி.மு.462 இல் மகதத்தின்மேற் படையெடுத்ததைச் சிலம்பால் அறிவோம். இந்த முதற் கரிகாலனையும், அடுத்தவனையும் தமிழாசிரியர் பலரும் குழம்பித் தடுமாறுவார்] வெற்றி பெற்றதையும், பெருஞ்சேரலாதன் வடக்கிருந்ததையும் சொல்வார். எனவே நெடுஞ்சேரலாதன் என்பான் வேறு, பெருஞ்சேரலாதன் வேறென்று புரியும். ஆழவாய்ந்தால் 62 ஆம் பாவில் இறந்ததாய் விவரிக்கப்படுவோன் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்பது விளங்கும். அப்படியெனில் 65 ஆம் பாட்டில் வரும் பெருஞ்சேரலாதன் என்பவன் யார்? .

நார்முடிச்சேரல் வாகைப்பெருந்துறையில் நன்னனை வெற்றிகொண்டது பதிற்றுப்பத்தில் ஒரு பெருஞ்செயலாய்ச் சொல்லப்பெறும். ”வாகைப் பெருந்துறைச் சேரலாதன்” என்ற கூற்றே, ”பெருஞ் சேரலாதன்” பெயருக்கு விளிகொடுத்ததாகலாம். அதை வைத்துப் பார்த்தால், கி.மு.131-107 என்ற இடைப்பகுதியில் அண்ணனைப் பெருஞ்சேரலாதனென்றும் நடுத்தம்பியைக் குட்டுவச் (=சிறிய) சேரலாதன் என்றும், கடைத் தம்பியை ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்றும் அழைத்திருக்கலாம். பெரும்பாலும் நார்முடிச்சேரலே பெருஞ்சேரலாதனாக வாய்ப்புண்டு. இவ்விளக்கத்தோடு புறநானூற்றில் சோழன் கரிகாற் பெருவளத்தானை வெண்ணிக்குயத்தியார் பாடிய 66ஆம் பாட்டையும் பார்க்கலாம். இப்பாட்டில் கரிகால் வளவன் பெயர் வெளிப்பட வரும். பெருஞ்சேரலாதனைப் பெயர் சொல்லாமற் சுட்டும் குறிப்பு மட்டுமே வரும். 

செங்குட்டுவனுக்குமுன் அவன்தம்பி வானவரம்பன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைக் காண்போம். ஆடுகோட்பாட்டிற்கு பதிற்றுப்பத்தின் பதிகம் ”நெடுந்தொலைவுள்ள தொண்டகக் காட்டினுள் பகைவர் கொண்டுபோன வருடைக் (ஆடு) கூட்டத்தைப் பெருமுயற்சியால் தொண்டித்துறைக்குத் திரும்பக் கொண்டு வந்தவனெ”னப் பொருள் சொல்லும். பழங்காலப் போர்களில் ஆக்களைக் கவர்வதை வெட்சித்திணையென்றும், அவற்றை மீட்டு வருவதைக் கரந்தைத்திணையென்றும் சொல்வர். இப்போரை ஆகோட் பூசலென்றுஞ் சொல்வதுண்டு. அதேபோல் ஆடுகோட் பூசலுமுண்டு. தொல்காப்பியர் கரந்தையை வெட்சிக்குள் ஒரு பகுதியாகவே சொல்வார். அதுபோல் ஆடுகோள் மீட்பும் ஆடுகோட்பாட்டின் பகுதியாய்க் கொண்டால் இச்சேரலாதனின் சிறப்புப் புரியும்.

பெரும்பாலும் இவன் காலம் பொ.உ.மு. 106 - 69 ஆகும். செங்குட்டுவன் கங்கைக்கரை போகிய செயல் பதிற்றுப்பத்தின் 4 ஆம் பத்தில் வாராது பதிகத்தில் மட்டுமே வரும். எனவே கண்ணகிக்குக் கல்லெடுத்தது குட்டுவன் கடைசிக்காலத்தில் நடந்திருக்கலாம். செங்குட்டுவனுக்கப்புறம் ஆடுகோட் பாட்டுச் சேரலாதன் பட்டத்திற்கு வருவான். அதுவுமின்றி வானவரம்பன் என்ற பட்டமும் சூடுவான் அவன் வேந்தனானதற்கு அதுவே அடையாளம். அண்ணனுக்கப்புறம் பட்டத்திற்கு வந்ததால் பெரும்பாலும் சிலப்பதிகாரம் இவனுடைய அரசவையில் தான் அரங்கேறியிருக்க வாய்ப்புண்டு. செங்குட்டுவனின் மகன் குட்டுவன் சேரல் (இயற்பெயர் தெரியாது) பற்றிய விவரம் தெரியவில்லை.

அன்புடன்,
இராம.கி.

No comments: