Thursday, September 26, 2019

சிலம்பு ஐயங்கள் - 29

கோட்டைக்குள் சொல்லப்படும் முதல் விவரிப்பு செல்வர் வீதியெனக் கொள்ளாமைக்குக் காரணமுண்டு. மதுரைக்குள் நுழைகையில் கோவலன் அகவை பெரும்பாலும் 21-23. (கண்ணகிக்கு 17 -19.) தான் கோவலன் இதுநாள் வரை ஏற்றுமதி/இறக்குமதி வணிகஞ் செய்தாலும், தந்தையின் உள்நாட்டு வணிகத்தில் மதுரை வாடிக்கையாளர், தொடர்பாளர் விவரங்கள் ஓரளவு தெரிந்திருக்க வாய்ப்புண்டு. அப்படித் தெரிந்தவரிடஞ் செல்லக் கோவலனுக்கு விருப்பமிருந்தால், ”மன்னர் பின்னோரைக் கண்டு தங்க ஏற்பாடு செய்யும் வரை இவளைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று காவுந்தியிடம் கோவலன் சொன்னதின் பின், முறையாகக் கோட்டைக்குள் போனவுடன் விசாரித்துச் செல்வர் வீதிக்குப் போயிருப்பான். அப்படியின்றி அவன் ஊர் சுற்ற முற்பட்டதால், தெரிந்தவரிடம் அடைக்கலந் தேடுவது அவன் குறிக்கோள் அன்றெனப் புரிகிறது. தன்னிலை வெட்கம் பிடுங்கித் தின்றதால், மதுரையை நோட்டம் பார்க்க முற்படுகிறான். இப்பாவனை கொண்டவன் செல்வர் வீதிக்குப் போக மாட்டான். (யாரேனும் அடையாளங் கண்டுவிட்டால் என்ன செய்வது?) எனவே முதலிற் பார்த்தது கேளிக்கை யாடும் மருதந் துறையும், செல்வர் வந்து செல்லும் பொதுமகளிர் வீதி எனவும் பொருள் கொள்கிறோம்..

இனிக் கலை வல்லார் நிரம்பிய இரு வீதிகளைப் பார்க்கப் போகிறோம். மதுரையில் 2/3 வீதிகள் கணிகையரை ஒட்டி இருந்தன போலும். பரத்தை யென்ற சொல்லிற்குத் தமிழிற் இரு பொருள்கள் உண்டு. ஒரு பொருள் பரம் = மேடை; பரத்திலாடுபவள் பரத்தை; பரத்திலாடும் நாட்டியம் பர(த்)த நாட்டியம். (பரத்து நாட்டியத்தின் தமிழ்த்தோற்றம் அறியாது ”பரத முனிவர் அவரின் சாஸ்திரம், அது, இது” என்பது சிலர் பின்னாற் கட்டிய தொன்மம்.) இன்னொரு பொருள் பரர்/பலரைத் தழுவும் பரத்தை. இரு பொருளும் ஒரே மாந்தரிடம் இருக்கத் தேவையில்லை. அதேபோது சிலரிடம் சேர்ந்து இருக்கலாம். நம்மிற் பலரும் இப்பொருள் வேறுபாட்டைப் புரிந்துகொள்ளாது இருக்கிறோம். சங்க காலத்தில் இல்லக்கிழத்தி, இற்பரத்தை (concubines), பொதுப்பரத்தை (prostitutes) என 3 வகையாய்ப் பெண்கள் அறியப்பட்டார். எல்லாப் பரத்தைகளும் நுண்கலையாளரில்லை. எல்லா நுண்கலைப் பெண்களும் பரத்தைகளில்லை. .

இன்னொரு செய்தியை இங்கே சொல்லவேண்டும். ”ஒருவனுக்கொருத்தி, ஒருத்திக்கொருவன்” என்ற இல்லற ஒழுக்கம் சங்ககாலக் குமுகாயத்தில் பெரிதும் இருந்தாலும் செல்வரும், அதிகாரத்தில் இருந்தோரும் என ஆண் மக்கள் பலவகையில் ஒழுக்கத்தை மீறிய குறிப்புக்களுமுண்டு. இல்லை யெனில் இற்பரத்தையும், பொதுப்பரத்தையும் இலக்கியங்களிற் பேசப் பட்டிருக்க மாட்டார். ”சாத்தார மக்கள் இம்மரபை மீறினாரா?” என்பதற்கும், பெண்கள் இதை மீறினார் என்பதற்கும், ஒரு சான்று கூடக் கிடைக்கவில்லை. எனவே சங்ககாலக் குமுகாய உள்ளடக்கம், ஆணாதிக்கம் மிகுந்த வருக்கக் குமுகாயமாகவே (class soceity) தோற்றுகிறது. ஒருபக்கம் குறிஞ்சியிலும், முல்லையிலும் வேடுவச் சேகர (hunter-gatherer) வாழ்க்கை. இன்னொரு பக்கம், முல்லை, மருதம், நெய்தல் திணைகளில் வருக்கக் குமுகாய எழுச்சி எனக் கலவையாகவே சங்கக் குமுகாயம் இருந்தது.. கூடவே நகரஞ் சார்ந்த விழுமியங்களும் (city based values) தோன்றிவிட்டன. 

இன்றும் நாட்டுப்புறங்களில் சாத்தார மக்களிடையே இல்லற ஒழுக்கத்தை மீறியவர் முகத்திற் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி அவரைக் கழுதையிலேற்றி ஊரரங்கில் வலம்வர வைப்பது தண்டனையாய்க் கருதப்படுகிறது. (ஊரின் 4 வீதிகளும் அரக்கப்பட்ட காரணத்தால் அரங்காயிற்று. பிற்காலச் சோழர் காலத்தில் கோயிலைச்சுற்றி தேரோடும் நாற்பெரும் வீதிகளே ஊரின் அரங்காகும். இந்த அரங்கு, பொதியிலில் / அம்பலத்தில் முடியும். பொதியிலும் கோயிலும் அருகருகே ஒன்றைப்பார்த்து இன்னொன்று இருப்பதை இன்றும் பலவூர்களிற் காணலாம்.) இக்குற்றத்திற்கு இன்னொரு தண்டனையும் இருந்தது.

தமிழிற் சுடுமண் என்பது செங்கலைக் குறிக்கும். நாகரிகம் வளர்ந்த நிலையில் எல்லாக் கட்டுமானங்களுக்கும் செங்கல் பயன்பட்டதால், அறத்தொடு நிற்கும் (ஒழுக்கக்) கட்டுமானத்திற்கும் (”படி தாண்டாப் பத்தினி’ என்ற பழமொழிக்கும்) இதுவே குறியீடானது. ஒழுக்கத்தை மீறிப் படி தாண்டியோர் செங்கற் சுமந்து அரங்கைச் சுற்றி வருவது வடுவாக / தண்டனையாகக் கருதப்பட்டது. இதில் பரத்தைக் கொடி பறந்த வீட்டினர்க்கு மட்டுமே விதிவிலக்குண்டு. அதுவே அவர்க்குச் சிறப்புமானது. மணிமேகலை காப்பியத்தில் ”உதயகுமாரனின் பொற்றேரில் எல்லோரும் அறிய மணிமேகலையை ஏற்றேனாகில், என் சிறப்புப் போய்விடும். நான் சாத்தாரப் பெண்கள் போலாகி

சுடுமண் ஏற்றி அரங்கு சூழ் போகி
வடுவொடு வாழும் மடந்தையர் தம்மோர்
அனையேன் ஆகி அரங்கக் கூத்தியர்
மனையகம் புகாஅ மரபினள்

ஆவேன்” என்று சித்திராபதி வஞ்சினம் சாற்றிப் போவாள். படி தாண்டும் வடு என்பது இற்கிழத்திகளுக்கானது. வடு நீங்கு சிறப்பென்பது பரத்தைகளுக்கு ஆனது. இதே கருத்தில் சிலப்பதிகாரத்தின் ஊர்காண் காதையில் 146 ஆம் வரியெழும். (இக்கருத்தை இதுவரை ஒழுங்காய் விளக்கிய எவ்வுரையையும் நான் பார்த்தேனில்லை.) அடுத்து உரைவீச்சில் வருவது ஆடல் மகளிரின் வீதி பற்றிய விவரிப்பாகும். ஆடற் கணிகையருக்கு உரிய சிறப்பையும், நாட்டியக் கூறுகளையும், இசைக்கூறுகளையும் கூறி இவ்வகைப்பெண்கள் மற்றோரைக் கவர்ந்திழுக்கும் பாங்கையும் கூறுகிறது. 

சுடுமண் ஏறாத,
வடுநீங்கு சிறப்புக்கொண்ட,
முடியரசு கூட ஒடுங்கிப்போகும் கடிமனை வாழ்க்கையில்,
”வேத்தியல், பொதுவியல்” என்ற இரு திற இயல்பினை அறிந்து,
சிறிதும் வழுவாத மரபில்,

ஆடல், பாடல், பாணி, தாளம், உடனுறும் குயிலுவக்கருவி ஆகியன உணர்ந்து,
(நிற்றல், இயங்கல், இருத்தல், நடத்தலெனும்) நால்வகை அவிநயக் களத்தில்,
[குரல் (ச), துத்தம் (ரி), கைக்கிளை (க), உழை (ம), இளி (ப), விளரி (த), தாரம் (நி) எனும்]
7 சுரத்தில் எய்தியதை விரிக்கும் பெருஞ்சிறப்புடைய,

தலைக்கோல் பெற்ற அரிவை (19-24 அகவை),
வாரம்பாடும் தோரிய மடந்தை (15-18 அகவை),
தலைப்பாட்டுக் கூத்தி, இடைப்பாட்டுக் கூத்தி
என 4 வகையாருமான நயத்தகு மரபைச்சார்ந்து,

1008 கழஞ்சை நாளுந் தவறாது பெறும், முறைமை வழுவாத,
தாக்கணங்கை ஒப்பியோரின் நோக்கு வலைப்பட்டுத் தவத்தோராயினும்,
நகைப்பதம் பார்க்கும் வண்டுபோல் இளையோரும்,
காமவிருந்தை முன்பறியாப் புதியோராயினும்,

தம் பெறுதற்கரிய அறிவு கெட்டழியும்படி,
நாள்தோறும் ஏமத்தின் இனிய துயிலில் வந்து கிடக்கும்,
பண்ணையும் கிளியையும் பழித்த தீஞ்சொல்லையுடைய,
64 கலைவல்லோரின் இருபெரும் வீதிகளும்

வையமும், பாண்டிலும், மணித்தேரில் பூட்டுங் கொடிஞ்சியும்,
மெய்புகும் கவசமும், விழைமணி பொருத்திய அங்குசமும்,
தோல்புனைச் செருப்பும், அரைப்பட்டிகையும் (waist belt),
வளைதடியும், மிகுந்த வெள்ளையான கவரியும்,
அம்பு தடுக்குங் கேடயம், வாள் தடுக்குங் கேடயம், பன்றிமுட் கேடயம், குத்துக்கால், என செம்பிற் செய்தனவும்,

வெண்கலத்திற் செய்தனவும், புதிதாய் முடிந்தவையும், பழுதிருந்து சரிசெய்யப்பட்டனவும் (reconditioned), வேதித்து வெளிவந்தவையும்,
தந்தம் கடையும் தொழில் சார்ந்தவையும்,
பல்வேறு வாசப்புகைப் பொருள்களும்,
மயிர்ச்சாந்திற்குத் தேவையானவையும்,
பூவால் புனையப்படுவனவும் என வேறுபட்டுத் தெரிவறியா அளவிற்கு வளங்கள் கலந்து கிடக்கும் (அரசன் கூட விரும்பக்கூடிய) அங்காடி வீதியும்

மேலே வேந்தரரங்கில் ஆடும் ஆட்டத்தை வேத்தியலென்பது தட்டையான விவரணையாகும். வேந்தர்க்கான அறங்களை உணர்த்தும் நாட்டியம் என்பதே சரியான பொருள். எல்லாப் பொதுவிடத்தும் பொதுமையாக ஆடக் கூடியதல்ல. சார்ந்தோர் கூடிய அரச களத்தில் அவனுக்கு மட்டுஞ் செய்வது வேத்தியலாகும். பொதுவரங்கில் எல்லோர்க்கும் பொதுவான அறங்களைச் சொல்வது பொதுவியல் ஆகும். “அரங்கேற்று காதை ஆராய்ச்சி” என்ற அரிய நூலை முனைவர் வெ.மு.ஷாஜகான் கனி எழுதி உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது. இன்னும் விளக்கம் அதிற் கூறப்பட்டுள்ளது. (அவரைத் தமிழார்வலர் இதுவரை போற்றாதது பெருங்குறை,) பாணி என்பது பண்ணும் முறை. நட்டுவனாரின் விதப்பு அடவுகளைக் குறிக்கும். காட்டாகப் பந்த நல்லூர்ப் பாணியென்பர். ஒரே பாட்டிற்கு வெவ்வேறு விதமாய் அவிநயஞ் செய்து படைப்பாற்றலைக் காட்டுவர். இதில் நட்டுவனார், நாட்டியமாடுவோர் ஆகியோரின் படைப்பாற்றல் வெளிப்படும். தாளம் ஆடலுக்கு அடிப்படை. நுணுகிய அசைவுகளை நிருணயித்து  ஆடவேண்டும். குயிலுக்கருவி என்பது கூடச்சேரும் ”இசை வாத்தியங்களைக்” குறிக்கும். எந்த அவிநயமும் நிற்றல், இயங்கல், இருத்தல், நடத்தலென்ற 4 வகைகளுள் அடங்கும். குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் எனும் 7 சுரத்தில் எல்லா இசைகளும் அமைகின்றன. (இச்சுரங்களைச் ச, ரி, க, ம, ப, த, நி என்று இன்று அழைக்கிறோம்.) பார்க்க:

http://valavu.blogspot.in/2008/03/1.html
http://valavu.blogspot.in/2008/03/2.html
http://valavu.blogspot.in/2008/03/3.html
http://valavu.blogspot.in/2008/03/4.html

தலைக்கோலென்பது ஆட்டத்திற் சிறந்தவளைக் குறிக்க வேந்தன் தந்த பட்டம். தண்டமென்பது நட்டுவனாரின் கைக்கோலைக் குறிக்கும். தண்டியம் என்பது நாட்டியப் படிப்பைக் குறிக்கும். முதல், வாரம், கூடை, திரள் என்பன தாளத்தின் 4 நடைகள். முதல்நடை தாழ்ந்து செல்லும். திரள்நடை மிக முடுகியது. வாரநடையே பாட்டிற்குச் சிறந்ததென்பார். வாரநடை வேகம் முதல் நடையினும் 2 மடங்காகும். கூடைநடை 4 மடங்கு. திரள்நடை 8 மடங்கு. தோரிய மடந்தை = பாடல், பண், தாளம் போன்றவை அமைத்து ”எது எப்படிச் சேரவேண்டும்?” என்ற வரிசை முறையை அமைப்பவர் (இசையமைப்பாளர்). தோர் = வரிசை; தோரியம் = வரிசையொழுங்கு தோரணை = காரணகாரிய வரிசையொழுங்கு. தலைப்பாட்டுக் கூத்தி = நாட்டியந் தொடங்கையில், தலைவிக்கு மாற்றாய் நடுவிலாடும் மாற்றாளி (substitute dancer). இடைப் பாட்டுக் கூத்தி = தலைவிக்கும், மாற்றாளிக்கும் உடன்வந்து இடையாடும் கூத்திகள். இவரை அடுத்தாடிகள் (assistant dancers) என்றுஞ் சொல்வர்.

1 கழஞ்சு ஏறத்தாழ 5.2 கிராம் எடையைக் குறிக்கும். 1008 கழஞ்சுப் பொன் 5.2 கிலோகிராம் எடைகொண்டது. இதன் பொன்மை 9.625 மாற்றா (22 caret), அல்லது 7.875 மாற்றா (18 caret) என்று தெரியாது. ஒவ்வோராட்டத்திலும் இவ்வளவு பொன் பெறுமளவிற்குத் திறமையானவளென இங்கே குறிப்பிடப் படுகிறது. அணங்கு= ஒருவர் மேலேறிய ஆவி/பேய் (spirit). அணங்குதல் = மேலுறுதல்; தாக்கணங்கு = மோகினிப்பேய்; தன்னழகால் யாரையுந் தாக்கி ஆட்கொள்ளும் திறம் பெற்றதாய் எண்ணப்பட்ட தொன்மம் இங்கு சொல்லப் படுகிறது; நோக்குவலை = பார்வையாற் கட்டப்படும் வலை; நகைப்பதம் பார்க்கும் வண்டுபோல் இளையர் = பெண் குறுநகையைப் பதம் பார்த்து, தேன்குடி வண்டு போல் வந்துசேரும் இளையர்; ஏமம் = safety; 64 கலை வல்லோர் = 64 கலைகளிலுஞ் சிறந்த வல்லமையாளர்

வையம் = சுமையேற்றப்பயன்படும் கூடாரவண்டி (wagon, van). ”அந்த van ஐக் கூப்பிடப்பா” என்பதற்கு நல்ல தமிழில் “அந்த வையத்தைக் கூப்பிடப்பா” எனலாம். பாண்டில் = கிண்ணி போன்ற தட்டின்கீழ் அச்சும் சக்கரங்களும் பொருந்திய திறந்த வண்டி. சுமையேற்றாது, ஓரிருவர் வேகமாய்ப் போகப் பயன்படும். ஒற்றைமாட்டு வண்டிகள் இதிலடங்கும். மணித்தேர்க் கொடிஞ்சி = தேரோட்டும் துரவர் (diver) உட்காரும் ஒட்டுகை (attachment). We call this a driver seat. அம்புகளிலிருந்து துரவரைக் காக்க ஒரு பலகையும் முன்னிருக்கும். மெய்புகு கவசம் = தோலாலும், மெல்லிய மாழையாலும் ஆகி உடம்பின் மேல் அணியுங்க வசம். வீழ்மணித் தோட்டி= மணிகள் தொங்கும் அங்குசம். அதள் புணை அரணம் = தோலாற் செய்த கைத்தாளம் (hand clove). "ஏய், அக் கைத்தாளங்களை எடுத்து வா” என்று ”குளோவ்ஸிற்கு” மாறாய் ஆளலாம்.

அரியா யோகம் = அரைப் பட்டிகை (waist belt). இதையும் தொலைத்தோம். வளைதரு குழியம் = வளைதடி. குழித்தல் = குத்துதல். வால் வெண் கவரி = இமையத்திற்கு அருகிலுள்ள கவரிமா எருமையின் மயிராலான வெண்கவரி. காற்றுவீசப் பயன்படுத்துவது. சாமரமென்றுஞ் சொல்வர். இனிப் புதிதாகவும், பழுதைச் சரி செய்தாகவும், கொல்லன் பட்டறையில் உருவான செப்புக் கேடயங்களையும், வெண்கலக் கருவிகளையும், வேதித்து உருவானவையும் (chemicals; chemistry இன் நேர்குறிப்பு பழந்தமிழ் இலக்கியத்த்தில் இதுவே முதல்.முறையாகும்), கடைந்த தந்தப் பொருட்களையும், பல்வேறு வாசனைப் புகைப் பொருட்களும், மயிர்ச்சாந்திற்குத் தேவை ஆனவையும், பூவால் புனையப்படுவனவும் என வேறுபட்டுத் தெரிவு அறியா அளவிற்கு வளங்கள் கலந்து கிடக்கும் (அரசனும் விரும்பக்கூடிய) அங்காடி வீதியும்

என்று சொல்கிறார். ஊர்காண்காதையின் அடுத்த 30 ஆ, பகுதியில் மணிகளைப் பற்றியும், பொன்னைப் பற்றியும் பார்ப்போம். நான் பதிவிடப் பல நாட்களாகலாம்,

அன்புடன்,
இராம.கி.

Wednesday, September 25, 2019

சிலம்பு ஐயங்கள் - 28

(சற்று நீண்ட பதிவு)

இனிப் பரதகுமாரரும் (பூரியர் = bourgeoisie. விலையைப் பரத்துவோர் பரதர்), அரசகுமாரரும் (king's relatives) வந்து செல்லும் கணிகையர் வீதியின் நீள் விவரிப்பு வருகிறது. நீளத்திற்குப் பொறுத்துக் கொள்ளுங்கள். வேறுவழி யில்லை. இதைச் சுருக்கினாற் சுவை போய்விடும். பொதுவாக எல்லாக் கடைகளின் மேலும் “ அது என்ன கடை?” என்றுதெரிவிக்க (இக்கால விளம்பரம்போல்) கொடிகள் அக்காலத்திற் பறக்கும். அதையொட்டிப் பொதுமகளிர் வீடுகளின் மேல் கொடிகளசைவது இங்கு சொல்லப்படுகிறது. கோட்டைக்கருகில் வந்தவுடன் கோவலன் பார்வையிற்படும் முதல் விவரிப்பே பொதுமகளிர் பற்றியாவதால், “பாம்பின் கால் பாம்பறியும்” எனப் புரிந்து கொள்கிறோம். கணிகையர் பாவனைகளிற் பழக்கப்பட்ட கோவலனுக்கு சட்டென அது தானே புலப்படும்? என்ன சொல்கிறீர்கள்?

காலைப் போதில்,
மேற்குக்காற்று விரைந்துவீசக் கொடிகளசையும் தெருவின்
பொதுமகளிர் தம் காதற்செல்வரோடு,
நீர்பெருகிவரும் வையை மருதந்துறையில்
அதன் விரி பூந் துருத்தியின் (finger jetty with wild flowers)
வெண்மணல் அடைகரையில்,
நீரில் ஓங்கிய மாடங்கொண்ட நாவாயை இயக்கி,
பூக்கள் நிறைந்த புணையைத் தழுவிப்
புனலாடியமர்ந்து பொழுதுபோக்கி,

பகற் பொழுதில்
மூதூருக்குள் (old town. It implies capital) வந்து
தண்ணறும் முல்லையையும், தாள்நீர்க் குவளையையும்,
கண்ணவிழ் நெய்தலையும் கூந்தலில் பொருந்தச் சூடி,
தாது விரிந்த தண் செங்கழுநீர்ப் பிணையலைக்
கொற்கை முத்து மாலையோடு பூண்டு,
தெற்கேயுள்ள பொதியிலின் சந்தனச் சேறை மெய் முழுதும் பூசி,
பொற்கொடி மூதூரின் (மதுரை) பொழிலை ஒட்டியமர்ந்து பொழுதுபோக்கி,

எற்பாட்டு நேரத்தில்,
இளநிலா முற்றத்தில்,
தன் அரையின்மேல் பூப்பின்னிய அரத்தப்பட்டை உடுத்தி,
வால்போல் தொங்கும் கூந்தலில், வெட்பாலைப் பூ பொருந்திய,
சிறுமலையின் (திண்டுக்க;லிலிருந்து மதுரை வரும் வழியில் தென்படும் சிறுமலை) செங்கூதாளமும், நறுமலர்க்குறிஞ்சியின் நாள்மலரும், வேய்ந்து,
குங்குமச் செஞ்சாந்தை கொங்கையில் இழைத்து,
செந்தூரச் சுண்ணம் சேர்ந்த மேனியில்,
செங்கொடு வேரியின் செழும்பூ மாலையை
அழகிய பவளக் கோவை அணியொடு பூண்டு,
தாங்கொண்ட கோலத்தின் தகையைப் பாராட்டும்படி
மலர்ப் படுக்கையின் மேலிருந்து,

மலைச் சிறகை அரிந்த வச்சிர வேந்தனான இந்திரனிடம்
ஆரவாரம் மிகுந்த மதுரை நகரின் செவ்வணி காட்டும்
கார்கால அரசன் வாடையோடு வருகின்ற காலத்திலுமின்றி,

சிற்ப வல்லோராற் செய்யப்பட்ட முகில்தோய் மாடத்தில்
குருங்கண் சாளரப் பக்கலில் அகில் விறகு நெருப்பிற்கு அருகே,
நறிய சாந்து பூசிய மார்புடைய மாந்தரோடு கூடி அமருங் கூதிர்க் காலத்திலும்,

வளமனை மகளிரும், ஆடவரும் விரும்பி இளநிலா முற்றத்தில்
இளவெயிலை நுகரும்படி விரிகதிர் மண்டிலம் தெற்கே போக
வெண்முகில் அரிதில் தோன்றும் முன்பனிக் காலத்திலும்,

அதுவுமின்றி,

உயர்ந்து பரந்த ஆற்று வளைவுகளில் தொண்டு செய்யும் ஊழியரிட்ட
அகில், துகில், ஆரம், வாசம், தொகுத்த கருப்பூரம் ஆகியவற்றின் மணஞ் சுமந்து
உடன்வந்த கீழைக்காற்றோடு புகுந்து, பாண்டியன் கூடலில்,
வெங்கண் நெடுவேளின் வில்விழாக் காணும் பங்குனி முயக்கக் காலத்தில்
பனியரசு எங்கேயிருக்கிறான்?- என்ற படியும்,

குருக்கத்திக் கோதை தன் கொழுங்கொடியை எடுப்ப,
இளமரக் காவும் நந்தவனமும் நறுமலர்களை ஏந்தத்
தென்னவன் பொதியமலைத் தென்றலோடு புகுந்து
மன்னவன் கூடலில் மகிழ்துணையைத் தழுவும்படி
இன் இளவேனில் எங்கு தான் உள்ளதென்றும்

கொடியுரு உடைய மகளிர் தம்மேல் உரிமை கொண்ட பெருங் கொழுநரோடிருந்து பருவங்களை எண்ணும் காலத்தில்
கன்றுகள் அமரும் ஆயத்தோடு களிற்றினம் நடுங்க,
வெயில் நிலைபெற்ற, குன்றுகள் நிறைந்த நன்னாட்டின்
காடுகளில்  தீ உண்டாகும்படி அழலை மூட்டி,
கோடையொடு புகுந்து கூடலை ஆண்ட வேனில் வேந்தன்

வேற்றுப்புலம் படர முயல்கின்ற மிக்க வெயிலுடைய கடைநாளில் 

கூடார வண்டியும் (வையம் = wagon), பல்லக்கும், மணிக்கால் படுக்கையும்,
உய்யானத்தின் உறுதுணை மகிழ்ச்சியும், சாமரைக் கவரியும்,
பொன்னாலான வெற்றிலைப் பெட்டியும், தம் அரசன் கொடுத்த கூரிய நுனிவாளும் எனப் பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கையில்

பொற்றொடி மடந்தையரின் புதுமணம் புணர்ந்து, செம்பொன் வள்ளத்தில்
சிலதியர் (வேலைக்காரர்) ஏந்திய இனியதேறலை மாந்தி மயங்கி,
”வரிங்காரம்”(=ரீங்காரம்) பாடும் வண்டினத்தை அவை பொருந்துமிடத்தில் அன்றியும், நறுமலர் மாலையின் வறிய இடத்திலுங் கடிந்து,

ஆங்கு

இலவு இதழ் போலும் செவ்வாயில்
இளமுத்துப் போலும் பற்கள் அரும்ப,
ஊடற் காலத்துப் போற்றாது உரைத்த
கருங்குவளைக் கண்ணாரின் கட்டுரை எதற்கும்
நாவால் அடங்காத நகைபடுங் கிளவியும்,

அழகிய செங்கழுநீர்ப்பூவின் அரும்பை அவிழ்த்தது போல்,
செங்கயல் நெடுங்கண்ணின் செழுங்கடைப் பூசலும்,
கொலைவில் போன்ற புருவக் கோடிகள் சுருளத்
திலகம் பதித்த சிறுநெற்றியில் அரும்பிய வியர்வைத் துளியும்

எனச் செவ்வையான இருப்பை எதிர்பார்க்கும் செழுங்குடிச் செல்வரோடு,
நிலத்தைப் புரக்கும் அரசருக்கு மகிழ்ச்சிதரும் வீதியும்.

[இனி என் குறிப்புக்கள். வைகைநீரில் மாடங்கொண்ட நாவாயென்பதால் கோடையிலும் ஆற்றில் பெருவெள்ளம் தேங்கியது புலப்படும். இன்று மதுரைக்கருகில் கிட்டத்தட்ட மணலாறு தான் இருக்கிறது; அன்றேல் சாக்கடையும், சவர்க்கார நுரை கலந்த கழிவுநீரும் தான் வைகையிற் பாய்கிறது. மதுரைக்கு அப்புறம் இன்றிருக்கின்ற கடைமடை வேளாண்மை கடினம் தான்.

மூதூர் = old town. பெரும்பாலும் கோட்டையும், மூதூரும் வேறுபட்டவையோ என்ற எண்ணம் எனக்குண்டு. இன்னும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. மூதூருக்கு மருதந்துறை (மருதை) என்ற பெயரும், கோட்டையின் உள்ளிருந்த அரசவூருக்கு மதிரை என்ற பெயரும் இருந்திருக்கலாம். மருதை, மதிரை என்ற இரண்டும் மருவி மதுரை என்றாகியிருக்கலாம். தென்மதுரை, கவாட புரம், கொற்கை, மணலூரென நகர்ந்து வந்தது உண்மையானால், கொற்கையே பாண்டியரின் தோற்றம் என்பதும் உண்மையானால், மூதூரும் கோட்டையும் வேறுபட்டிருக்க வாய்ப்புண்டு. கீழடியின் தொல்லாய்வே அதை நமக்கு வெளிப்படுத்தவேண்டும். காத்திருப்போம்.

ஏற்பாட்டு நேரப் பொழுதை இற்றைத் தமிழில் மறந்து மாலையையும், யாமத்தையும் நாம் நீட்டிச் சொல்லுவது பெருஞ்சோகம். படித்தோர் இப் பிழையை மாற்றினால் மற்றையோருக்கும் பிழையைச் சொல்லிச் சரி செய்ய முடியும். 6 சிறுபொழுதுகளை மீண்டும் நாம் புழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

அரத்த நிறம் என்றதால் சீனப்பட்டை சட்டென இங்கு அடையாளங் கண்டு கொள்கிறோம். கி.மு.,80 வாக்கில் இது இங்கு புழங்கியது என்பது ஓர் அரிய வரலாற்றுக் குறிப்பு. கி.மு. முதல் நூற்றாண்டில் சீனத்தோடு நமக்குத் தொடர்பு இருந்திருக்கிறது, தவிர, காடுகாண்காதையை விவரிக்கையில் சிறுமலைக்காடு, கோடைக்கானல் பற்றிச் சொன்னேன். இங்கும் சிறுமலை சொல்லப்படுகிறது. சிலம்பின்வழிச் சிறுமலையை அடையாளங் காணாது, கவுந்தியைக் கர்நாடகத்திற்கும், திருவரங்கத்தைச் சீரங்கப்பட்டினத்திற்கும் கொண்டு போவாரை நாம் என்சொல்வது? மஞ்சள் கண்ணாடி போட்டுப் பார்த்தால் உலகம் மஞ்சளாய்த்தான் தெரியும்.   

குறிஞ்சியென்பது கோடைக்கானல் பேருயர மலைகளிற் பூப்பது. செங் கூதாளம் என்பது நடுத்தர உயரங் கொண்ட சிறுமலையில் கிடைப்பது. வெட்பாலை விராலி மலையிலிருந்து மதுரை வரும் வரையுள்ள பாலை நிலத்திற் கிடைப்பது மூன்றையும் சேர்த்துச் சொல்வது ஒருவித திணை மயக்கம். ஆனால் அதில் ஒரு நளினம் தென்படுகிறது. எந்தத்திணையும் இன்னொன்றிற்குச் சளைத்ததல்ல. செங்கொடு வேரி என்பது இன்னுஞ் சரியாக அடையாளங் காணாத ஒரு புதலியற் சொல். சிலப்பதிகாரத்தைப் புதலியற் கண்ணோட்டத்தோடு படித்து ஓர் ஆய்வு வரக்கூடாதா? - என்ற ஏக்கம் எனக்குண்டு.

அடுத்துச் சங்க இலக்கியத்திற் பலவிடங்களில் கூறப் படும் புணையையும் நாம் முற்றிலும் புரிந்துகொள்ளவில்லை. நீரைக் கடக்க மாந்தர் மரத் தோணிகளை மட்டும் பயனுறவில்லை. மிதக்கும் புற்கட்டுகளும் அதற்குப் பயன்பட்டன. குறிப்பாகக் கோரைப்புற் கட்டுகள். வளைபொருள் சுட்டும் கொடுக்குப் புற்களைக் கொறுக்குப்புற்களென்றும் அழைத்தார். கொடு> கோடு>கோறு>கோறை> கோரை என்றும் இச்சொல் திரியும். (கோரை அதிகமாய் விளைந்த இடம் கொற்கை. அப்பெயர் அப்படி எழுந்தது தான்.)

இற்றைத் தமிழ்நாட்டிற் பலவிடங்களில் -சென்னை வேளச்சேரிக்கப்புறம் பள்ளிக்கரணை போகும் வழியிலுள்ள சதுப்பு நிலம், சிதம்பரம்-சீர்காழி வழியில் கொள்ளிடந் தாண்டிவரும் தைக்கால், திருநெல்வேலி-செங்கோட்டைச் சாலையில் சேரன்மாதேவிக்குச் சற்று முந்தையப் பத்த மடை - எனப் பல பகுதிகளிற் கோரை செழித்து வளர்கிறது. கொற்கைக்கு அருகிலும் கோரை மிகுதி, தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் போகும் போது இதை நன்கு காணலாம். 

கோரைகளிற் கனம், சன்னம், கோலெனப் பல்வேறு விதப்புகளுண்டு. கோரைப் புற்கட்டுகளைப் புணைத்துச் (>பிணைத்து) செய்தது புணை. ”கொழுங்கோல் வேழத்துப் புணை” என்று அகம் 186-12 இலும், அகம் 152 இலும் பரணர் சொல்வார். கொழுங்கோல்= கொழுத்த கோல். வேழம்= கொறுக்கம் புல் தட்டை. (வெள்ளைநார்த் தட்டை வேழமாகும். இது ஒருவகை நாணல். வேழம் என்ற சொல்லைக் கரும்பிற்கும் நாம் பயன்படுத்துவதாற் குழம்புகிறோம்.) ”புணை” என்ற சொல்லின் கீழ் 38 இடங்களுக்குமேல் சங்ககாலக் குறிப்புக்களுண்டு. அவற்றை ஆய்ந்தால் பலன் கிடைக்கும்.

எகிப்து, சுமேரியா, சிந்து, அசிரிய, பாபிலோனிய. பொனீசிய, அஸ்டெக், மாய, இங்க்கா, (ஈசுடர் தீவு போன்ற) பாலினீசியப் பழம் நாகரிகங்களிற் புழங்கிய reed-ship, read boat ஆகியவை ”புணை”ப் பெயரில் நம்மூரிலும் இருந்தன. அழகன்குளத்தில் கண்டெடுத்த ஓட்டுச் சில்லில் கீறியிருந்த ஓவியமும் புணையையே அடையாளங் காட்டியது. புணைநுட்பியல் மேற்சொன்ன நாடுகளின் தனித்தனியாக எழுந்திருக்க வாய்ப்பில்லை. அதே பொழுது எங்கு முதலிலெழுந்தது எனவென்றும் இன்னும் அறியப்படவில்லை. இவற்றைக் கட்டும் நுட்பம் சில நாடுகளில் மட்டுமே இன்று எஞ்சி யுள்ளது. இவற்றைக்கொண்டு பெருங் கடல்களையும் மாந்தர் ஒருகாலத்திற் கடந்திருக்கலாம் எனக் கடலியல் ஆய்வாளர் எண்ணுகிறார். இற்றைக் கப்பல் நுட்பியல் கூடப் புணை நுட்பியலிலிருந்தே வளர்ந்திருக்குமென எண்ணுகிறார். ஹெர்மன் தீக்கன் சொல்வது போல் 9 ஆம் நூற்றாண்டில் “room" போட்டு யோசித்துச் சங்க இலக்கியத்தை ஏழெட்டுப் புலவர் எழுதியிருந்தால் அழிந்து போன புனையை எப்படி எழுதினார்? - என்று எண்ணவேண்டாமா? இது என்ன மாயமா? மந்திரமா? தீக்கனின் கூற்று ஒரு நம்ப முடியாத கற்பனையாகவேயுள்ளது. ஆனால் அக்குவேறு ஆணிவேறாக அவரை மறுப்பதற்கு எந்தத் தமிழறிஞரும் இதுவரை முயலவில்லை.

முத்துமாலை போலவே பவளக்கோவையும் இங்கு பெரிதும் விரும்பப்பட்டு உள்ளது. பவளம் சோழ நாட்டின் சிறப்பு. கடலுயிரியான சங்குப் பூச்சி, இராமேசுரத்திற்கு வடக்கே பவளத்தை உருவாக்குகிறது. தெற்கே முத்தை உருவாக்குகிறது. இவை யிரண்டுமே பூச்சிகளின் வேலையும், ஊடே கிடைக்கும் இரும்பு மண்ணூறல் (mineral) தூசும் விளைவிக்கும் மாற்றங்கள் தான். இதையும் உயிரியல், வேதியல் கண்ணோட்டத்தோடு சுற்றுச்சூழல் சார்ந்து ஆய்ந்துபார்க்க வேண்டும். இதையெல்லாஞ் செய்யாமல் தமிழாய்வு எங்கோ போய்க்கொண்டிருப்பது நமக்கு வருத்தமே தருகிறது.

மழைக்கடவுள் இந்திரனிடம். மதுரையில் மழைநீர் சிவந்தோடுவதை, அதன் அணியைக் காட்டுவதோடு, அதுவரையிருந்த முதுவேனிலைத் தணிப்பதாய்ச் சற்று வாடையையும் கார்காலம் கொண்டுவரும். இது இங்கு அழகாய்ச் சொல்லப் பெறுகிறது. 

முகில்தோய் மாடம் என்பது உயர்வுநவிற்சி அணி. ஆனால் பெரிய கட்டிடங்கள் மதுரையில் இருந்திருக்கலாம். எவ்வளவு பெரியவை என்பது தொல்லாய்வின் வழி ஓரளவு தெரியலாம். காத்திருப்போம். கூதிர்க்காலம் என்பதைத் தமிழகத்திற் பலரும் தவறாகவே புரிந்துகொள்கிறார். அது autumn. குளிரடிக்கும் காலமல்ல. கூதிரும் கூதலும் வெவ்வேறானவை.. 

விரிகதிர் மண்டிலம் தெற்கே போகும் முன்பனிக் காலத்தில் (புரட்டாசி, ஐப்பசி) இன்றும் இளநிலா முற்றங்களில் வெளியேயிருக்கும் விருப்பங்கள் தமிழருக்குண்டு. இக்காலத்தில் வெண்முகில் அரிதில் தோன்றுமென்பது அரிய வானியல் அவதானிப்பு.

ஓங்கிரும் பரப்பைப் பெருங்கடலென்றும் வங்க ஈட்டத்தை நாவாய்த்திரள்கள் என்றும் தொண்டியோரைத் தொண்டித் துறைமுகத்தோடு தொடர்புறுத்தியும் சில உரைகாரர் சொல்வதை நானேற்கத் தயங்குவேன். இச்செய்திகளுக்கும் தொண்டித் துறைமுகத்திற்கும் தொடர்பிருப்பதாய் நானெண்ணவில்லை. பாண்டியரின் தொண்டி, சங்ககாலத் துறைமுகமேயல்ல; இடைக்காலத்தது. அன்றிருந்த துறைமுகங்கள் கொற்கை, அழகன்குளமெனும் மருங்கூர்ப் பட்டினம் போன்றவை தான். அகில், கீழைநாடுகளில் இருந்து வந்த நறுமண விறகு; துகில்: உள்நாடு, வெளிநாடெனப் பல இடங்களில் இருந்து வந்த ஆடை; இங்கே துணியின் மணம் பேசப்படுகிறது. வேறொரு ஆசிரியர் இதைப் பேசி நான் கேள்விப்படவில்லை.

ஆரமென்பது சந்தனம். பாண்டியிலும், சேரலத்திலுங் கிடைத்தது; நாவாய் மூலம் பாண்டிக்கு வந்ததல்ல. வாசம், பல்வேறிடங்களிலிருந்து பெற்ற மணப்பொருள். கருப்பூரம் வெளிநாட்டிலிருந்து வந்து இங்கிறங்கியது. அடியார்க்குநல்லார் பல்வேறு அகில்கள், துகில்கள், ஆரங்கள்,  வாசங்கள், கருப்பூரங்களையும் விதப்பாய் விவரிப்பார். அவற்றை அடையாளங் காண்பதே ஒரு பெரிய ஆய்வு. இப்படி வந்த உள்நாட்டு, குணகடல் நாட்டு, குடகடல் நாட்டுப் பொருள்களை எல்லாஞ் சேர்த்து நாவாயோடு தொடர்பு உறுத்துவது கொஞ்சமும் பொருத்தம் இல்லாதது. வைகையின் பெரும்பரப்பு ஆற்றுவளைவுகளில் செல்வரும் மகளிரும் ஆங்காங்கு தங்கி, அடித் தொண்டரை வைத்து நறுஞ்சரக்குகளை விரவி இன்பங் களிக்கிறார். அப்படித்தான் நானிங்கு பொருள் கொள்வேன்.

தவிர, இங்கே வெங்கண் நெடுவேள் வில்விழாவைக் காமனோடு தொடர்பு உறுத்தியே உரைகாரர் சொல்வர். ஆனால் வெம்மையான கண் என்பது காமனுக்கு ஒத்து வருமா? காமன் கனிவானவன் அல்லவா? முருகனின் கதைப்படி, சூரபன்மனையும், அவன் தம்பியரையும் முருகன் தோற்கடித்துப் பின் அமைதியுற்று பங்குனி உத்திரத்திற்கு (பங்குனிமுயக்க நாள் அதுதான்.) தேவயானையைக் கைப்பற்றுவான். வெவ்வேறு கோயிற் கடவுள்களுக்கும் பங்குனி உத்திரத்திற்றான் திருமணவிழாக்கள் நடக்கும். வெங்கண் நெடு வேள் வில்விழா என்பது வெம்மையான கண்கொண்ட முருகவேளின் கைவேலும் வில்லும் வெற்றி பெற்ற விழா. அற்றைக்காலத்தில் பின்பனியின் பெரும் பொழுதில் பங்குனி உத்திரம் ஆண்பெண் தழுவலில் தமிழர்கள் முயங்கிக் கிடக்க ஊக்கந் தந்திருக்கலாம்.

உறையூரிலிருந்து மதுரை வரும்போது குன்றுகள் நிறைந்தே காணப்படும். (கூகுள் முகப்பைப் பாருங்கள்.) குன்றுகள் நிறைந்த நன்னாடு என்பது சரியான விவரிப்பு. காவிரி வழியே புகையின கல் (ஹோகனேக்கல்) போகும் வரை ஆற்றிற்கருகில் குன்றுகள் அவ்வளவு தென்படாது. இதற்கப்புறமும் வடகொங்கிற்குச் சிலம்புக் கதையைச் எடுத்துச்செல்வோருக்கு என்னசொல்லி விளங்கவைப்பது?         

பொதுவாக அமெரிக்கக் கலிபோர்னியாக் காடுகள் மாதிரி மரங்கள் உரசித் தீயூண்டாவது ஓரிடத்தின் அளவு குறைந்த ஈரப்பதத்தை ஒட்டியதாகும். அப்படியாயின், அக்காலத் தமிழகத்தின் வெதணம் (climate) எப்படியிருந்தது? குறுகுறுப்பான கேள்வியல்லவா? அக்கால வெதணத்தைக் கண்டுபிடிக்கப் புதலியலின் பூந்தாது அலசல் (botanical pollen analysis), வேதியலின் இசையிடப்பு அலசல் (chenical isotope analysis) போன்றவற்றால் பழம் ஏரிகளிலும், ஆற்றுப் படுகைகளிலும் ஆழமாய் மண்கூற்றை (soil sample) எடுத்து ஆய்வுசெய்ய முடியும். நம் போகூழோ என்னவோ, அது போன்ற ஆய்வுகள் நம்மூரில் நடத்தப்படுவதே இல்லை. வெறுமே இந்த இலக்கியங்களை வைத்து, ”தமிழன் நாகரிகம், அப்படி, இப்படி” என மேடைதோறும் அளந்து கொண்டுள்ளார். உணர்வே உண்மையாகாது என்று இவர்களுக்கு எப்பொழுதுதான் புரியுமோ, தெரியவில்லை? மாறாக இலக்கியங்களை ஆதாரமாக்கி இது போன்ற அறிவியல் ஆய்வுகளையுஞ்செய்து மொத்த உண்மையை எடுத்துக்கூறினால் தான் ஆழிசூழ் உலகம் நம் கூற்றை எடுத்துக்கொள்ளும். தமிழறிஞர் என்று தான்  மாறுவாரெனக் காத்துக்கொண்டிருக்கிறேன்.

"மடைத்தலையில் ஓடுமீனோட உறுமீன் வருமளவும்
வாடி நிற்குமாம் கொக்கு".

வெற்றிலை தென்கிழக்கு ஆசியாவிலிருந்து நமக்கு வந்த பயிர்க்கொடி. சில்ம்புக் காலத்திலேயே அது நமக்கு வந்துவிட்டது என்பது குறிப்பான செய்தி.

கூரிய நுனி வாளை அரசன் செல்வர்க்குக் கொடுத்தானா, பொதுமகளிர்க்குக் கொடுத்தானா என்று என்னால் மேலே விளங்கிக் கொள்ள முடியவில்லை. அறிந்தோர் விளக்கிக் கூறினால் ஓர்ந்து பார்ப்பேன்.
     
இனிய தேறலென்பதும் பல்வேறு வகைப்பட்டது. என்னென்ன வகைகள் பழந்தமிழரிடம் புழக்கத்தில் இருந்தன என்பதையும் புதலியல் (botony), உயிரியல் (biology), வேதியல் (chemistry) பார்வையில் ஒரு உயிர்வேதிப் பொறியாளர் (biochemical engineer) ஆய்ந்துபார்க்க வேண்டும்.

இனி மதுரையின் அடுத்த வீதிகளுக்குப் போவோம்.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, September 24, 2019

சிலம்பு ஐயங்கள் - 27

அடுத்து, ஊர்காண் காதையின் படி, மதுரைக்கோட்டைக்குள் கோவலன் கணிகையர் வீதியைப் பார்த்தது பற்றி இங்கோர் கேள்வி கேட்கப்பட்டது. மேலோட்டமாய் அதற்கு மறுமொழிப்பது முறையில்லை. எப்படி இந்திர விழவூரெடுத்த காதையில் இளங்கோ புகாரை விரித்துச் சொல்கிறாரோ, அதேபோல் ஊர்காண்காதையில் மதுரையைச் சொல்வார். புறஞ்சேரியிறுத்த காதையில் வைகையைக் கடந்து கவுந்தியும், கோவலனும், கண்ணகியும் தென்கரையடைந்தது சொல்லப் பெறும். கோட்டை அகழிக்கு வைகையில் இருந்து ஏரிகள் வழி நீர்வந்திருக்கலாம். ”வளைவுடன் கிடந்த இலங்குநீர்ப் பரப்பெ”ன ஊர்காண்காதை கணுக்கிய (connected) ஏரிகளைக் குறிக்கும். அப்படியோர் இயலுமை இருந்ததாற்றான் மதுரை ஒரு தலைநகராய் அன்று நிலைத்தது போலும்.

பழமதுரையை அடையாளங் காணக் கூகுள் முகப்பின் வழி தேடினால், இற்றைத்தடத்திற்குச் சற்று மேற்கில் ஏரிகளூடே அற்றை யாற்றுத்தடம் உள்ளதோவென ஐயந் தோன்றும். தவிரக் கீழச் சிலைமான்- கொந்தகை- பொட்டப்பாளையம் சாலையின் 2 மருங்கும் மணலூர் ஏரியும், கீழடி ஏரியும் பெரிதாய்த் தென்படும். இவற்றின் தொடர்ச்சியாய் சில குளங்கள் மேற்கிலும், வட மேற்கிலும் வட்டமாய்த் தெரிய வரும். கீழடித் தொல்லாய்வு நடந்துகொண்டிருக்கும் காலத்தில் இவ்விவரிப்பை ஆழ்ந்தறிவது நன்மை பயக்கும். இத்தொல்லாய்வோடு, ஒரு நீர்ப்பாசன வல்லுநரும், ஒரு புவியியல்/மண்ணியல் வல்லுநரும் தொல்லாய்விற்கு உறுதுணையாய் இங்குள்ள ஆறு, ஏரிகளின் பழந்தடங்களை ஆயவேண்டும். இனி நீளமான ஊர்காண் காதையை விரிவாக உரைவீச்சைப்போல் நாலைந்து பகுதிகளாய்ப் பார்ப்போம்.
------------------------------------
வெளிப்பக்கத் தோட்டத்திலும்,
பிறங்கித் தெரியும் நீர்ப்பண்ணையிலும்,
விளைந்து தொங்கும் கதிர்க்கழனியிலும்,
இருக்கும் புள்கள் எழுந்து ஒலிசெய்ய,
பகைவேந்தர் தலை குனியும் படி
வாளேந்தும் செழியனின் ஓங்குயர் கூடலின் ஊர்த்துயிலை
(வைகறையில் குளத்தாமரைப் பொதிகளை அவிழ்க்கும்)
ஞாயிறு தோன்றியெழுப்ப,
நுதல்விழிப் பார்வை கொண்ட இறைவன் கோயிலிலும்,
உயரப் பறக்கும் கருடனில் ஊர்வோன் நியமத்திலும்,
ஏர்த்திறன் உயர்த்திய வெள்ளையன் நகரத்திலும்,
கோழிச் சேவற் கொடியோனின் கோட்டத்திலும்
அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியிலும்,
மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலிலும்,
வெண்சங்கோடு, வகைபெற்று ஓங்கிய காலைமுரசின் கனைகுரல் ஒலிக்க,
மதக் கடமைகளில் ஆழ்ந்த காவுந்தி ஐயையிடங்
கோவலன் சென்று கைதொழுது ஏத்தி,

“தவஞ்செய்பவரே! நெறி விலகியோரின் குணங்கொண்டவன் ஆகி,
நறுமலர் மேனியள் (கண்ணகி) நடுங்குதுயர் எய்யும் படி,
அறியாத் தேயத்தார் இடை வந்து சேரும் சிறுமையுற்றேன்.
தொன்னகர் மருங்கே மன்னருக்கு அடுத்த வணிகருக்கு
என் நிலை உணர்த்தி நான் திரும்பும் வரை,
இவள் பாதுகாக்கப்பட வேண்டியவள் ஆகலின்,
இதைச் செய்வதில் உங்களுக்கு ஏதம் (சரவல்/சிரமம்) உண்டோ?”
என்று சொன்னதும், கவுந்தி கூறுவாள்:

”காதலியோடு துன்பமுற்று, தவத்தோர் மருங்கில் இருப்பவனே!
தீவினை ஊட்டும் வன்முறையிலிருந்து நீங்குவீர் என
அறந்துறை மாக்கள் அழுந்திச் சாற்றி நாக்கால் அடித்து வாய்ப்பறை அறையினும்,
கட்டிலா மக்கள் தம் இயல்பிற் கொள்ளார்.
தீய கொடு வினை ஏற்படுகையில் பேதைமையைக் கட்டாக்கிப் பெருந்துன்பம் அடைவர்.
போக்க இயலா வினைப்பயன் அடையுங்கால்,
கற்றறிந்தோர் கைப்பிடியுங் கொள்ளார். பிரிவாலும், புணர்ச்சியாலும்,
உருவிலாக் காமன் தருவதாலும் வருந் துன்பம்
புரிகுழல் மாதரைப் புணர்ந்தோர்க்கு அன்றி,
தனித்து வாழும் உரநெஞ்சர்க்கு இல்லை.
பெண்டிரும் உண்டியுமே இன்பமென உலகிற் கொண்டோர்
கொள்ள இயலாத் துன்பங் கண்டவராகி
முனிவர் விலக்கிய காமஞ் சார்ந்து அதன்மேற் கொள்ளும் பற்றால் உழந்து,
ஏமஞ் சாரா இடும்பை எய்துவர்.
இற்றையில் மட்டுமின்றித் தொன்று தொட்டும் இப்படிப் பலர் இருந்தார்.

தந்தை ஏவலில் மாதுடன் கானகஞ் சென்ற வேத முதல்வனைப் பயந்தவனும் (திருமாலும் - இங்கே இராமன் குறிப்பிடப் படுகிறான்)
காதலி நீங்கியதால் கடுந்துயர் அடைந்ததை நீயறியாயோ? இது பலரறிந்த நெடுமொழி அன்றோ?
வல்லாடு தாயத்தில் மண்ணரசு இழந்து மனையொடு வெங்கான் அடைந்தோன் (நளன்)
காதலாற் பிரிந்தான் அல்லன்; காதலியும் தீமையாற் சிறுமையுற்றாள் அல்லள்.
இருப்பினும் அடர்கானகத்தில் இருள்யாமத்தில் அவளை விட்டு நீக்கியது வல்வினைதானே?
தமயந்தி பிழையெனச் சொல்ல முடியுமோ?

நீ அவரைப் போன்றவன் அல்லன்.
உன்மனையோடு பிரியா வாழ்க்கை பெற்றாயன்றோ?
(மாதவியோடு தனக்கு நிகழ்ந்ததைக் கவுந்தியிடம் கோவலன் சொல்லவில்லை.)
எனவே இவளைப் பற்றி வருந்தாது பொருந்தும் வழியறிந்து
மன்னவன் கூடலுக்கு ஏகிப் பின் ஈங்கு போதுவாயாக” என்றலும்

கட்டுவேலி சூழ்ந்த காவற் காட்டோடு வளைந்து கிடக்கும்
நீர்ப்பரப்பின் வலப்பக்கம் புணரும் அகழியின் கீழ்
பெருந்துதிக்கை கொண்ட யானைகள்
கூட்டமாய்ப் பெயரும் சுருங்கை வீதியின் மருங்கிற் போய்

ஆங்கு

ஆயிரங்கண் இந்திரனுடைய அருங்கலச் செப்பின் வாய் திறந்தது போல்
தோற்றும் மதிலக வரப்பின் (= gate complex) முன்னே
அகழியும், சுருங்கைவீதியும் அதற்கப்பால்
இலங்குநீர்ப் பரப்பும், ஆற்றின் மருதந்துறையும்
இருப்பதைச்சொல்லி,
அவற்றை ஆட்சிசெய்யும் செல்வரையும் பொதுமகளிரையும்

(0600-1000 மணி) காலை, (1000-1400 மணி) பகல், (1400-1800 மணி) ஏற்பாடு என்ற
முதுவேனிற் சிறுபொழுதுகளிற் பொருத்தி,
ஆடித் திங்கள் முடியுங் காலம் ஆகையால்,
கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என
முடிந்துபோன பெரும்பொழுதுகளை நினைவுகூர்ந்து,
இளங்கோ கணிகை வீதியை விவரிக்கத் தொடங்குவார்.

[மேலே கோயில், நியமம், நகரம், கோட்டமென்ற ஒருபொருட் சொற்களில் கோயிலை மட்டும் இன்று புழங்கி, மற்றவற்றை இழந்திருக்கிறோம். அறவோர் பள்ளி என்பது வேதம், சிவம், விண்ணவம், அற்றுவிகம் (=ஆசீவிகம்), செயினம், புத்தம் என்ற எல்லா நெறியாரின் பள்ளிகளைக் குறிக்கும். காவுந்தியின் உரை சமணரின் பொதுவான உரை. அதைச் செயினத்தின் விதப்பான உரையென்று சொல்ல முடியாது. காவுந்தி சமணத்தின் உள்கட்டுமானத்தில் இன்னுஞ் செல்லாதவராய், அதேபொழுது செல்லமுயன்று கொண்டிருப்பவராகவே தெரிகிறது. இராமன், நளன் கதைகள் காப்பியம் நடந்த காலத்தில் பலருக்கும் தெரிந்திருக்கின்றன. வேதமுதல்வன் என்ற கூற்று இராமனை வேதநெறியோடு அந்தக் காலச் சமணநெறியார் தொடர்புறுத்தியதும் தெரிகிறது. ஒருவேளை காப்பியக் காலம் சமண ராமாயணங்கள் எழுவதற்கு முந்தைய காலமோ, என்னவோ? சமண இராமாயண நூல் எப்பொழுது எழுந்தது என்று பார்க்கவேண்டும்.

இந்திரனின் அருங்கலச் செப்பை மதிலுக்கு உவமையாக்கியது மிகவுஞ் சிறப்பானது. பொதுவாய் மேலையர் கோட்டைகளில் வழக்கமாய்க் காணும் அகழிப்பாலத்திற்கு மாறாய் இங்கே முற்றிலும் ஒரு புதிய அடவாய் (design) அகழிக்கடியில் சுருங்கை வீதி ஒன்று சொல்லப்படுகிறது. இதுவொரு தொல்லியற் குறிப்பு. (கீழடியை ஆய்வு செய்வோர் இக்குறிப்பைப் படித்தாரா என்றுந் தெரியாது கோட்டை வாசலில் ஒரு சுருங்கை, அகழிக்கடியில் இருந்திருக்கிறது. இதைக் கண்டுபிடித்தால் பழமதுரைக்கு அருகில் வந்துவிட்டோம் என்று பொருள்.) இதுபோன்ற கட்டுமானத்தை எந்தத் திரைப்படமும், புதினமும், நூலும் நமக்குச் சுட்டியதில்லை. ஏன், மகதக் கோட்டையை விவரிக்கும் அருத்த சாற்றங் கூட இப்படிக் காட்டாது.)

கோவலன் கோட்டை வாயிலுக்கு வந்து, அங்கேயிருந்த காவலிற் சிறந்த கொல்லும்வாள் யவனர்க்கும் அயிராது புகுவான். (அயிராது = ஐயம் வராது. தன் பெயர், தந்தை பெயர், குடும்ப அடையாளம், ஊர்ப் பெயர் என முழு விவரந் தெரிவித்தே கோவலன் கோட்டையுள் நுழைந்தானென இந்தவொரு சொல்லாட்சியால் நாம் உணர்ந்து கொள்கிறோம். ஆயினும் அவன் நுழைவு வழக்குரை காதை வரை பாண்டியன் நெடுஞ்செழியனுக்குத் தெரியாதது நமக்கு வியப்பையே தருகிறது. ஒருவேளை பாண்டியனின் நிர்வாகத்தில் intelligence gathering என்ற அமைப்பு சரியில்லையோ? என்னவோ? கோட்டைக் காவலர் கொண்ட செய்தி அரசனுக்குப் போகவில்லை, செழியன் வீழ்ச்சிக்கு இதுவே காரணமாய் இருக்குமோ?]

அன்புடன்,
இராம.கி.

Monday, September 23, 2019

சிலம்பு ஐயங்கள் - 26

வேறு

இவ்வளவு நேரம் கோவலனைச் சாடியவள் “நம்மைவிட்டு இவன் போய் விடான்” என்ற நம்பிக்கையோடு, அவன் குணங்களைச்சொல்லிச் சாய்வதால், இது 3 தாழிசைகளால் ஆன சாயல் வரி.

43.
கைதை வேலிக் கழிவாய் வந்துஎம்
பொய்தல் அழித்துப் போனார் ஒருவர்
பொய்தல் அழித்துப் போனார் அவர்நம்
மையல் மனம்விட்டு அகல்வார் அல்லர்.

44
கானல் வேலிக் கழிவாய் வந்து
நீநல்கு என்றே நின்றார் ஒருவர்
நீநல்கு என்றே நின்றார் அவர்நம்
மான்நேர் நோக்கம் மறப்பார் அல்லர்.

45
அன்னந் துணையோடு ஆடக் கண்டு
நென்னல் நோக்கி நின்றார் ஒருவர்
நென்னல் நோக்கி நின்றார் அவர்நம்
பொன்நேர் சுணங்கிற் போவார் அல்லர்.

தாழையை வேலியாயுடைய இக்கழியின் வழிவந்து எம் விளையாட்டை இவர் அழித்துப் போனார்; அப்படிப் போனவர் நம் மையல் மனம் விட்டு அகல்வார் அல்லர் (எனக்கு இவர் தப்புச் செய்தும் இவர் என்னை அகலவாரல்லர்)

கழிக்காட்டை வேலியாயுடைய இக்கழிவழி வந்து நீ கொடுவென்று ஒருவர் நின்றார். அப்படி நின்றவர் நம் மான்நேர் பார்வையை மறக்கமாட்டார் (வசந்த மாலைக்காக என்னை மறக்கமாட்டார்.)

அன்னம் துணையோடு நான் ஆடக்கண்டு நேற்று என்னை நோக்கி ஒருவர் நின்றார். அப்படி நின்றவர் நம் பொன் போன்ற தேமலைக் கண்டபின் நம்மை விட்டுப் போகார்.  (என்ன விட்டுக் கோவலன் போகான் என்ற நம்பிக்கை.)

வேறு

அடுத்து வருவது இன்னதென யாரையும் குறிப்பிட்டுச் சொல்லாது பொதுவே இயற்கையிடஞ் சொல்லும் முகமில்(லாத) வரி.

46.
அடையல் குருகே அடையல்எம் கானல்
அடையல் குருகே அடையல்எம் கானல்
உடைதிரைநீர்ச் சேர்ப்பற்கு உறுநோய் உரையாய்
அடையல் குருகே அடையல்எம் கானல்.

குருகே (கொக்கு, நாரை போன்றன) எம்மிடம் வந்து அடையாதே! என் கழிக் கானலுக்கு வந்து அடையாதே உடையும் அலைகளையுடைய சேர்ப்பனுக்கு நான் உற்ற நோயைக் கூறுவாயாக!  (கோவலனுக்குத் திரும்பத் திரும்ப உரை.)

வேறு

47 (கட்டுரை)

ஆங்கனம் பாடிய ஆயிழை பின்னரும்
காந்தள் மெல்விரல் கைக்கிளை சேர்குரல்
தீந்தொடைச் செவ்வழிப் பாலை இசைஎழீஇப்
பாங்கினில் பாடிஓர் பண்ணும் பெயர்த்தாள்.

அப்படி வாய்ப்பாட்டுப் பாடிய இழையுடை. (இங்கே ஆடை என்பது மாதவிக்கு ஆகுபெயர் ஆனது. இழை= linen. இச்சொல்லின் பிறப்புரைத்தால் அது பெரிதும் நீளும். வேறிடத்திற் தனிக்கட்டுரையிற் சொல்வேன்.) பின்னர் யாழில் தன் காந்தள் மெல்விரலால் கைக்கிளை குரலாகிய செவ்வழிப்பாலையால் (இதைத் தேவார காலத்திற் காந்தாரப் பண்ணென்பர். இற்றைப் பெயர் இரு மத்திமத் தோடி ச-ரி1-க1-ம1-ம2-த1-நி1. கைக்கிளை குரலாதல் என்பது தலைமைப் பெரும்பண்ணாகிய செம்பாலையில் - அரிகாம்போதியில் - கைக்கிளையை - க2 - குரலாகக் (ச) கொண்டு பண்ணுப்பெயர்த்தால் செவ்வழிப்பெரும்பண் கிடைக்கும். தமிழிசைக் கலைக் களஞ்சியம் தொகுதி 2 - முனைவர் வீ.ப.கா. சுந்தரம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் பக்கம் 202. தமிழிசை பற்றி இங்கு நான் மேலுஞ் சொன்னால் கட்டுரை நீளும். செவ்வழிப்பாலையும், கீழே வரும் விளரிப்பாலையும் வருத்தத்திற்கும், இரங்கலுக்கும் உரியவை. மாலை நேரத்தில் பாடக்கூடியவை.) கருவியிசை யெழுப்பி அதை முறையோடு பாடிப் பின் வேறொரு பண்ணிற் பெயர்த்து வாய்ப்பாட்டை எடுப்பாள்.

வேறு

கீழே வரும் நாலுமே முகமில் வரி

48.
நுளையர் விளரி நொடிதரும்தீம் பாலை
இளிகிளையில் கொள்ள இறுத்தாயால் மாலை
இளிகிளையில் கொள்ள இறுத்தாய்மன் நீயேல்
கொளைவல்லாய் என்ஆவி கொள்வாழி மாலை.

49
பிரிந்தார் பரிந்துஉரைத்த பேர்அருளின் நீழல்
இருந்துஏங்கி வாழ்வார் உயிர்ப்புறத்தாய் மாலை
உயிர்ப்புறத்தாய் நீஆகில் உள்ஆற்றா வேந்தன்
எயில்புறத்து வேந்தனோடு என்ஆதி மாலை.

50
பையுள்நோய் கூரப் பகல்செய்வான் போய்வீழ
வையமோ கண்புதைப்ப வந்தாய் மருள்மாலை
மாலைநீ ஆயின் மணந்தார் அவர்ஆயின்
ஞாலமோ நல்கூர்ந் ததுவாழி மாலை.

வேறு

51
தீத்துழைஇ வந்தஇச் செல்லன் மருள்மாலை
தூக்காது துணிந்தஇத் துயரெஞ்சு கிளவியால்
பூக்கமழ் கானலில் பொய்ச்சூள் பொறுக்கென்று
மாக்கடல் தெய்வம்நின் மலர்அடி வணங்குதும்      .

வசந்த மாலையே! நுளையரின் விளரிப்பாலையில் (விளரி குரலாகப் பிறப்பது. இதை விளரிப்பண் என்றுஞ் சொல்வர். இக்காலத்தில் தோடி இராகம் என்பர். இதன் சுரவரிசை சரி1க1ம1 ப த1 நி1. இதை ஒரு மண்டிலத்துள்/ஸ்தாயியுள் அமைத்தும் பாடலாம். அன்றேல் ஒரு மண்டிலத்திலிருந்து  இன்னொரு மண்டிலம் விரவியும் பாடலாம். மெலிவு, சமன், வலிவு என்று 3 மண்டிலங்களில் வலிவு மண்டிலத்திற் பாடுவது எல்லா மகளிராலும் முடியாது.) சமன் இளியிற் (ப) தொடங்கிக் வலிவு கைக்கிளையிற் (க1) கொள்ளும்படி முடித்தாயோ? அப்படி முடித்தாயானால், கொள்வதில் நீ வல்லையாவாய்! (வலிந்த இவனைக் கைக்குள் கொண்டு அடக்கியவளுமாவாய். ஒருவேளை காமச் செயலில் வசந்தமாலை இன்னும் தேர்ந்தவளோ, என்னவோ?) வசந்தமாலையே! என் ஆவியையுங் கொள் (என் ஆவியையும் நீயே வைத்துக்கொள்.)

வசந்தமாலையே! என்னைப் பிரிந்தவர் பரிந்துரைத்த பேரருளின் நிழலில் இருந்து ஏங்கி வாழ்வாரின் உயிரைச் சூழ்ந்துள்ளாய். அப்படிச் சூழ்ந்துளாய் எனில், உ:ள்ளிருக்கும் நிறைவடையா வேந்தன் (காமம் மிகுந்த கோவலன்) மதிலுக்கு வெளியிருக்கும் வேந்தனுக்கு (காத்திருக்கும் customer) என்ன உறவாவான்?

வசந்தமாலையே! தும்ப நோய் மிக, பகல்செய்வான் வீழ, உலகோர் கண் புதைப்ப, நீ வந்தாய், நீ அப்படியாயின் அவர் உன்னை மணந்தவர் ஆயின், உலகம் நல்லது அடைந்தது வாழி! (மாதவி வசந்தமாலையைச் சூளுறைத்துச் சவிக்கிறாள்.)

பெருங்கடல் தெய்வமே! தீயைப் பரப்பிவந்த செல்லள் மருள்மாலை (எனக்கு வேண்டிய வசந்தமாலை) என்னைத் தூக்காது (தொங்கவிடாது) துணிந்த இத் துயர்மிஞ்சும் கிளவியால், ”பூக்கமழ் கானலில் நானிட்ட என் பொய்ச்சூள் பொறுக்கு” என்று உன் மலரடி வணங்குகிறேன்.   
   .
இந்த வரிகள் எல்லாமே கோவலனையும், வசந்தமாலையையும் வைத்துக் கொண்டு அவர் முன்னே மாதவியிட்ட குமறல்கள் தான். முடிவில் ஒரு சாவம். இதற்கு அப்புறம் கோவலன் அங்கிருப்பானா, என்ன? “கானல்வரி யான்பாடத் தானொன்றின் மேல் மனம்வைத்து (வசந்தமாலையோடு நடந்ததை மனம் வைத்து) மாயப்பொய் பலகூட்டும் மாயத்தாள் பாடினாள்” என ஏவலாளர் சூழ்தர கோவன் அங்கிருந்து போகிறான்.

ஆக யாழிசைமேல் வைத்துக் கோவலனின் ஊழ்வினை வந்து உருத்தது.

கானல்வரி என்னும் பகுதி 3 மனங்களிடை நடந்த ஆழமான உரையாட்டு, இதைப் புரிந்து கொள்ளாவிட்டால், நமக்குப் புகார்க் காண்டம் விளங்காது. 

அன்புடன்,
இராம.கி.

Sunday, September 22, 2019

சிலம்பு ஐயங்கள் - 25

வேறு

அடுத்தது ஆறு தாழிசைகளாலான மயங்குதிணை நிலைவரி.

37.
நன்நித்திலத்தின் பூண்அணிந்து நலம்சார்பவளக் கலைஉடுத்துச்
செந்நெல்பழனக் கழனிதொறும் திரைஉலாவு கடல்சேர்ப்ப.
புன்னைப்பொதும்பர் மகரத்திண் கொடியோன்எய்த புதுப்புண்கள்
என்னைக்காணா வகைமறைத்தால் அன்னைகாணின் என்செய்கோ?

38
வாரித்தரள நகைசெய்து வண்செம்பவள வாய்மலர்ந்து
சேரிப்பரதர் வலைமுன்றில் திரைஉலாவு கடல்சேர்ப்ப.
மாரிப்பீரத்து அலர்வண்ணம் மடவாள்கொள்ளக் கடவுள்வரைந்து
ஆர்இக்கொடுமை செய்தார்என்று அன்னைஅறியின் என்செய்கோ?

39
புலவுற்றுஇரங்கி அதுநீங்கப் பொழில்தண்டலையில் புகுந்துஉதிர்ந்த
கலவைச்செம்மல் மணம்கமழத் திரைஉலாவு கடல்சேர்ப்ப.
பலஉற்றுஒருநோய் துணியாத படர்நோய்மடவாள் தனிஉழப்ப
அலவுற்றுஇரங்கி அறியாநோய் அன்னைஅறியின் என்செய்கோ?

வேறு

40
இளைஇருள் பரந்ததுவே எல்செய்வான் மறைந்தனனே
களைவுஅரும் புலம்புநீர் கண்பொழீஇ உகுத்தனவே
தளைஅவிழ் மலர்க்குழலாய் தணந்தார்நாட்டு உளதாம்கொல்
வளைநெகிழ எரிசிந்தி வந்தஇம் மருள்மாலை?

41
கதிரவன் மறைந்தனனே கார்இருள் பரந்ததுவே
எதிர்மலர் புரைஉண்கண் எவ்வநீர் உகுத்தனவே
புதுமதி புரைமுகத்தாய் போனார்நாட்டு உளதாம்கொல்
மதிஉமிழ்ந்து கதிர்விழுங்கி வந்தஇம் மருள்மாலை?

42
பறவைபாட்டு அடங்கினவே பகல்செய்வான் மறைந்தனனே
நிறைநிலா நோய்கூர நெடுங்கண்நீர் உகுத்தனவே
துறுமலர் அவிழ்குழலாய் துறந்தார்நாட்டு உளதாம்கொல்
மறவையாய் என்உயிர்மேல் வந்தஇம் மருள்மாலை?

நன்முத்தால் பூணணிந்து நலஞ்சேர்ந்த பவளமேகலையை உடுத்துச் செந்நெல் பழனக்கழனி தோறும் திரும்பத் திரும்ப உலாவும் கடற்சேர்ப்பனே [இது கோவலனைக் குறிக்கும். அந்தக் காலத்தில் மேகலை என்னும் அணியைப் பெண்கள் மட்டும் இன்றி, ஆண்களும் அணிந்தார் போலும். மேகலை நடுவே செம்பவளமோ (பவள மேகலை), செம்மணியோ (மணிமேகலை) இருக்கலாம்.] புன்னை செறிந்த சோலையில் மகரத் (சுறாமீன்) திண்கொடியோன் (காமன்) எய்த புதுப்புண்கள் (வசந்த மாலையின் காமத்தால் ஏற்பட்ட புண்கள்) என்னைக் காணாவகை மறைத்தால், அதனைத் தாய் (சித்திராபதி) அறிந்தால் என்ன செய்வாய்?   

வளந்த செம்பவள உயிரியின் வாய்திறந்து பெற்ற கடல் தரளங்களால் (முத்தல்ல. உருண்ட பவளம். வேதியலின்படி முத்தும் பவளமும் CaCO3 தான். மாசுகளால் வெவ்வேறு நிறங்களை அவை பெறுகின்றன.) நகை செய்து சேரிப்பரதர் வலைகள் கிடக்கும் முன்றிலில் திரும்பத் திரும்ப உலாவும் கடற்சேர்ப்பனே! மழைக்காலப் பீர்க்க மலரின் (பசலை) நிறத்தை மடவாள் கொள்ள (இங்கு மாதவி தன்னைக் குறிப்பிடுகிறாள். அதிர்ந்து வெளுத்த நிறம். திகைப்பவர்க்கும் இது ஏற்படும்.) ”தலைவனையும் மீறி இக்கொடுமையை யார் செய்தார்?” என்று என் அன்னை அறிந்தால் என்ன செய்வாய்?

புலவு நாற்றம் இரங்கி அது நீங்கப் பொழிற்சோலையிற் புகுந்து உதிர்த்த கலவைச்செம்மலின் (கீழே விழுந்த பல்வேறு பூக்களின் கலவை). மணங் கமழத் திரும்பத் திரும்ப உலாவும் கடற்சேர்ப்பனே! பலவுமுற்று, இன்ன நோயெனத் துணியாத படர்நோய் மடவாள் தனியே உழந்து கிடக்க, ”மெலிந்து போய் இரங்குவதாய் யாரும் அறியாத நோய்” என என் அன்னை அறிந்தால் என்ன செய்வாய்?     

முறுக்கு விரிந்த மலர் சூடிய குழலாளே! இளைய இருள் பரந்தது. பகல் செய்வோன் மறைந்தான். களைவதற்கரிய தனிமை நீரை எம்கண்கள் பொழிந்து உகுக்கின்றன வளை நெகிழ, நெருப்பினைச் சிந்திவந்த இம் மருள்மாலை (வசந்தமாலை) நம்மைப் பிரிந்த தலைவர் நாட்டில் இருப்பாளோ?

புது நிலவை ஒக்கும் முகமுடையவளே! கதிரவன் மறைந்தான், காரிருள் பரந்தது, உதிர்ந்த மலரை ஒக்கும் மையுண்ட கண்கள் துன்ப நீரை உகுக்கின்றன. தன் அறிவை உமிழ்ந்து செல்வத்தை விழுங்கி வந்த இம் மருள்மாலை போனவர் நாட்டில் இருப்பாளோ?

அவிழ்ந்த மலர்களை உடைய குழலாளே! பறவைகளின் பாட்டுகள் அடங்கின. பகல் செய்வான் மறைந்தனன். நிறுத்த முடியாத நோய் கூர்ந்துவர நெடுங்கண்ணீர் உகுத்தன. மறவை (எதிரி) போல் என் உயிர்மேல் வந்த இம் மருள்மாலை என்னைத் துறந்தவர் நாட்டில் இருப்பாளோ? 

மீண்ரும் சொல்கிறேன். பாட்டெங்கும் நிறைந்த இறைச்சிப் பொருளைக் கூர்ந்து கவனியுங்கள்.

அன்புடன்,
இராம.கி,

Saturday, September 21, 2019

சிலம்பு ஐயங்கள் - 24

வேறு

”உன்னை முற்றும் நம்பினேன்; நீ நம்பிக்கை காட்டினாயா?” என ஆற்று வரியில் மாதவி தொடங்குகிறாள். இனி 3 தாழிசையாலான சார்த்துவரி வரும். இது கோவலனோடு அவள் செய்யும் நேர் உரையாட்டு. முதல் இரு வரிகளில் ”மாலை”பற்றிய கேள்வியும், அடுத்த இரு வரிகளில்.”எங்களூரை எப்படி எண்ணிணாய்? முயன்றால் எதையும் நாங்கள் கண்டு விடுவோம்” எனும் விடைக்கூற்றும் வருகிறது..

28.
தீங்கதிர் வாள்முகத்தாள் செவ்வாய் மணிமுறுவல் ஒவ்வாவேனும்
வாங்கும்நீர் முத்துஎன்று வைகலும் மால்மகன்போல் வருதிர்ஐய
வீங்குஓதம் தந்து விளங்குஒளிய வெண்முத்தம் விரைசூழ்கானல்
பூங்கோதை கொண்டு விலைஞர்போல் மீளும் புகாரேஎம்மூர்.

29
மறையின் மணந்தாரை வன்பரதர் பாக்கத்து மடவார்செங்கை
இறைவளைகள் தூற்றுவதை ஏழையம் எங்ஙனம்யாங்கு அறிகோம்ஐய
நிறைமதியும் மீனும் எனஅன்னம் நீள்புன்னை அரும்பிப்பூத்த
பொறைமலிபூங் கொம்புஏற வண்டுஆம்பல் ஊதும் புகாரேஎம்மூர்.

30
உண்டாரை வெல்நறா ஊண்ஒளியாப் பாக்கத்துள் உறைஒன்றுஇன்றித்
தண்டாநோய் மாதர் தலைத்தருதி என்பதுயாங்கு அறிகோம்ஐய
வண்டல் திரைஅழிப்பக் கையால் மணல்முகந்து மதிமேல்நீண்ட
புண்தோய்வேல் நீர்மல்க மாதர் கடல்து஡ர்க்கும் புகாரேஎம்மூர்.

ஐய, திங்களின் வாள்முகங் கொண்ட வசந்த மாலையிடம் செவ்வாய் மணி முறுவல் பெறுவது ஒவ்வாதெனினும், முத்து வாங்குவது போல் மன்மதனாய் நாளும் நீர் வந்தீர். நறுமணங் கொண்ட இக் கழிக்கானலில் (பிச்சாவரம் போன்ற இடம்) வீங்கிய ஓதத்தால் வந்து சேரும் முத்துக்களுக்கு கானற்பூ மாலைகளால் விலைசொல்வோர் போல் மீளுகின்ற புகார் எம்மூராகும். (”எங்களைக் குறைத்து மதிப்பிடாதே. முத்திற்கும் விலையுண்டு. இச் செய்தியை எப்படியோ அறிந்தேன்” என்கிறாள். எப்படி என்பதை இளங்கோ கடைசி வரை சொல்லவேயில்லை.)

ஐய, வன்பரதர் பாக்கத்தில். மறையிடங்களிற் கூடுவாரை (வசந்த மாலையோடு மறையிடங்களில் நீ கொண்ட உன் கூடலை), மகளிரின் சிவந்த கைகளில் வளைகள் கழலுவதை, ஏழையோம் நாங்கள் எங்கு எப்படி அறிகோம் என எண்ணினையோ? நீரீற் கிடக்கும் மீன் மேல் நிறைமதி முகம் தெரிவது போல் நீள்புன்னையரும்பிப் பூப்பாரங் கிடக்கும் கொம்பின் மேல் வெள்ளையன்னம் ஏற (நீ அவளோடு கூடியதையறிய), ஆம்பற்பூவின் ஊடே வண்டுகள் ஊதுவது எம்மூராகும். (வெளியே தெரியாத ஒன்றைச் சிலரறிந்து தம்முள் பேசிக்கொள்வது அம்பலாகும். இது அலருக்கு முந்தைய நிலை. இங்கு அம்பல் ஆம்பலாய் நீண்டு சிலேடை ஆனது. வண்டுகள் போல் அம்பலினூடே ஊதி அறிந்து கொள்வது எம்மூராகும். ஆம்பலந் தீங்குழல் என்பதும் நெய்தல் நிலத் திறப்பண் தான். இதை இந்தளம் என்பர். இந்தோளம் என்பது இற்றைப் பெயர்.சுரவரிசை சக1ம1த1நி1 என்றாகும்.)

ஐய, உண்டாரை வெல்லும் நறவும், ஊணும் ஒழியாத பாக்கத்துள் (கணிகையர் வீட்டை இங்கு உருவகஞ் செய்கிறாள்), ஒரு மருந்தின்றி அமையாத காம நோயை மாதருக்குத் தருகிறாய் என்பதை எங்கு எப்படி நாங்கள் அறிகோம் என எண்ணினாயோ? புண்தோயும் நீண்ட வேலால் குத்தப்பட்ட யானை விழிகளில் நீர்மல்க, சேர்த்து வைத்த வண்டலைக் கடல்திரைகள் அழித்தும், மாதர் தம் கைகளால் மணல்முகந்து கடல்தூர்க்கும் புகாரே எம்மூராகும்.
 
வேறு

அடுத்தது திணைநிலைவரியாகும். நெய்தல்திணையில் நடக்கும் இரங்கலும், இரங்கல் நிமித்தமும் இங்கு 6 தாழிசைகளிற் பேசப்படுகின்றன. தலைவி தன் நிலைக்குத் தானே இரங்குகிறாள்.

31
புணர்த்துணையோடு ஆடும் பொறிஅலவன் நோக்கி
இணர்த்ததையும் பூங்கானல் என்னையும் நோக்கி
உணர்வுஒழியப் போன ஒலிதிரைநீர்ச் சேர்ப்பன்
வணர்சுரி ஐம்பாலோய் வண்ணம் உணரேனால்.

32
தம்முடைய தண்ணளியும் தாமும்தம் மான்தேரும்
எம்மை நினையாது விட்டாரோ விட்டுஅகல்க
அம்மென் இணர அடும்புகாள் அன்னங்காள்
நம்மை மறந்தாரை நாம்மறக்க மாட்டேமால்.

33
புன்கண்கூர் மாலைப் புலம்பும்என் கண்ணேபோல்
துன்பம் உழவாய் துயிலப் பெறுதியால்
இன்கள்வாய் நெய்தால்நீ எய்தும் கனவினுள்
வன்கணார் கானல் வரக்கண்டு அறிதியோ?

34
புள்இயல்மான் தேர்ஆழி போன வழிஎல்லாம்
தெள்ளுநீர் ஓதம் சிதைத்தாய்மற்று என்செய்கோ?
தெள்ளுநீர் ஓதம் சிதைத்தாய்மற்று எம்மோடுஈங்கு
உள்ளாரோடு உள்ளாய் உணராய்மற்று என்செய்கோ?

35
நேர்ந்தநம் காதலர் நேமிநெடுந் திண்தேர்
ஊர்ந்த வழிசிதைய ஊர்க்கின்ற ஓதமே
பூந்தண் பொழிலே புணர்ந்துஆடும் அன்னமே
ஈர்ந்தண் துறையே இதுதகாது என்னீரே.

36
நேர்ந்தநம் காதலர் நேமிநெடுந் திண்தேர்
ஊர்ந்த வழிசிதைய ஊர்ந்தாய்வாழி கடல்ஓதம்
ஊர்ந்த வழிசிதைய ஊர்ந்தாய்மற்(று) எம்மொடு
தீர்ந்தாய்போல் தீர்ந்திலையால் வாழி கடல்ஓதம்.

வளைந்த சுரிகளாற் (waves) பின்னிய ஐம்பாற்சடையாளே! துணையோடு பொருந்தி விளையாடும் புள்ளிநண்டையும் நோக்கி, பூக்கொத்துக்கள் செறிந்த சோலையில் என்னையும் நோக்கி, உணர்வொழிந்து போன (ஓவென்ற அலைச்சத்தங் காட்டும்) நீர்ச்சேர்ப்பனின் இயல்பை நான் உணரமாட்டேனா, என்ன? (உன் போக்கை நான் அறியமாட்டேனா?)

அழகிய மென்கொத்துக்களை உடைய அடப்பங் கொடிகளே! அன்னங்களே! தாமும், தம் தண்ணருளும் தம்குதிரை பூட்டிய தேருமென எம்மை நினையாது போனாரோ? அப்படி விட்டகன்றாலும், நம்மை மறந்தவரை நாம் மறந்து விடுவோமோ, என்ன? (நீ என்னை நினையாது தவறு செய்ததை நான் மறந்துவிடுவேனா, என்ன?)

இனிய கள்திளைக்கும் வாயுடைய நெய்தல் மலரே! வருத்தம் மிகுவிக்கும் வசந்தமாலையாற் புலம்பும் என் கண்ணைப்போல், துன்பம் கலக்கையில் துயில் பெறுவாயோ? நீ காணும் கனவில் வன்கணாரின் காடுகள் வரக் காண்பதை அறியாயோ?  (எதிர்காலத்த்தில் துன்பம் மிகப் போகிறது)     

தெளிந்த நீர் ஓதமே! பறவையின் இயல்போல் விரைவாகிச் சென்ற குதிரை பூட்டிய தேர்ச் சக்கரம் போன வழியெலாம் நீ சிதைத்தாய்! மற்றென்ன செய்கோம்? அப்படிச் சிதைத்தும் அலர் தூற்றி உள்ளாரோடு எதையும் உணராது இங்குள்ளாய்! மற்றென்ன செய்கோம்? (தப்புச் செய்த பிறகும் உன்னோடு இங்குள்ளேனே?)

நம்மோடு பொருந்திய காதலரின் நெடிய திண் தேரின் சக்கரம் ஊர்ந்தவழி சிதைய ஊர்க்கின்ற கடலோதமே! பூந்தண் பொழிலே! புணர்ந்தாடும் அன்னமே! ஈர்ந்தண் துறையே! ”(வசந்த மாலையோடு சேர்வது) தகாது” என்று நீவீர் சொல்லமாட்டீரா?

கடலோதமே! நம்மோடு பொருந்திய காதலரின் நெடிய திண் தோள் ஊர்ந்த வழி ஊர்ந்தாய்; இருப்பினும் வாழி! மற்று எம்மோடு உறவு தீர்ந்ததுபோல் தீர்ந்து விட்டீரோ? வாழி (என்னை விட்டு முற்றிலும் வசந்த மாலையோடு சேர்ந்து விட்டீரோ?)

அன்புடன்,
இராம.கி.

Friday, September 20, 2019

அதென்ன “வேதி”யியல்?

- என்று நண்பர் தாமரைச்செல்வன் முகநூலில் ஒரு கேள்வி கேட்டார்.  நல்ல கேள்வி தான். இதற்கு மறுமொழியளிக்கக் கொஞ்சம் கொல்/பொன் பற்றிய வரலாறும் வேர்ச்சொல் அறிவும் தேவை.  

நாம் கொல்லில் தொடங்குவோம். தமாசுக்கசு எஃகுக் (wootz steel) குறுவாள் பற்றியும் அதில் தமிழரின் பங்கு பற்றியும் வெளியான செய்தியை ஒரு முறை என் முகநூல் பக்கத்தில் முன்வரித்தேன். அதற்கு முன்னிகையாய் (comment), “அடித்தடித்து இரும்பைக் கொல்வதால் கொல்லன்” என திரு. வேந்தனரசு எழுதினார். “கிடையாது. தமிழன் முதலிலறிந்த மாழை பொன் அதன் இன்னொரு பெயர் கொல். பொன்னே பின் பொதுப்பெயராகி, வெண்பொன், செம்பொன், இரும்பொன் என்று பல மாழைகளுக்குப் பெயராகியது. கொல் என்ற சொல்லும் பொதுப் பொருள் கொண்டது. கொல்லில் வேலை செய்தவன் கொல்லன்” என நான் மறுமொழித்தேன்.

இதையேற்காது, “பொன்னுக்கு கொல் எனும் சொல் எங்கு காணலாம்? தங்கால் பொற்கொல்லனார் என்பது ஏன்.?” என வேந்தனரசு வினவினார். இன்னொரு நண்பரான கருப்புச் சட்டைக்காரரோ, இதற்கும் மேலேபோய், நக்கலாய், “தமிழர் முதலிலறிந்த மாழை பொன்னா??? அப்படி எனில் தமிழர் இந்தக் கற்காலம், இரும்பு காலம் என்று உலகவழக்கு எதிலும் வாழ வில்லையா? அட்லாண்டிசு, வகாண்டா, அமேசான் போலத் தமிழர் குமரிக்கண்டத்தில் வாழ்ந்தனர் போலும். வகாண்டா மக்கள் வைப்பிரேனியம் அறிந்தது போல் தமிழர் பொன்னையறிந்து அனைத்தையும் பொன்னால் இழைத்து இருந்தனர் போலும்” என்றெழுதினார். இருவருக்கும் மறுமொழியாய், கொல்/பொன் என்ற தொடரை 2019 ஏப்ரலில் இதே வலைப்பதிவில் எழுதினேன்.  இதைக் கீழே படிக்கலாம். இந்தக் கட்டுரையில் வேதியல் என்ற சொல் என்ன பொருளில் எழுந்தது என்று சொல்கிறேன்.

பொதுவாக, மதிப்புமிக்க மாழைகளில் ஒன்றான பொன்னில் மாந்தர்க்கு இருந்த ஈர்ப்பு வரலாறு எங்கணும் மிகப்பெரிது.  தொடக்க காலத்தில் மிக எளிதாய் சில குறிப்பிட்ட ஆற்றுப் படுகைகளில் மட்டும் பொன் கிடைத்தது. (நம்மூர்ப் பொன்னியிலும் கிடைத்தது.) 

முன்சொன்ன கட்டுரைகளில் பொன் கிடைக்கும் 5 முறைகள் பற்றிச் சொல்லியிருந்தேன்.  ஆற்றுப் படுகையிலும், கரைகளிலும் கிடைப்பனவற்றை புவியியலார் இடப் பொதிகை (placer deposit) என்பார். இவற்றில் கிட்டும் பொன்னை, சல்லடை அல்லது தட்டிலிட்டு நீரால் அலசிப் பொறுக்கி, நுண்டி(> நோண்டி) எடுப்பதைக் கொழித்தல் (Panning) என்பார். 

அடுத்த முறை மடைவாய்த்தல் (Sluicing) என்பதாகும். மாறி மாறி மடைகளுக்கு இடையே கொட்டிய தங்க மணல், மண், கட்டி, பரல் போன்றவற்றை நீரோட்டத்தில் அலசி, பொன் அல்லாதவற்றை வெளிக் கொணர்ந்து, பொன்னை மடைகளிடையே, தொடர்ந்து பாயும் நீரால் சிக்க வைப்பது இம்முறையாகும்.

3 ஆம் முறையை ஆழ்படுகை உறிஞ்சல் (Dredging) என்பார். நல்ல ஈர்ப்புத் திறன் கொண்ட களிமிதவை இறைப்பி (suspension pump) மூலம் நீருக்கு அடியுள்ள ஆற்றுப் படிவை உறிஞ்சிச் சல்லடைக்குக் கொணர்ந்து மடைத்தலுக்கும் அலசலுக்கும் உட்படுத்திப் பொன்னைப் பிரிப்பது இதில் நடக்கும். 

அடுத்து வரும் 4 ஆம் முறையை ஊஞ்சல்பெட்டி (Rocker box) முறை யென்பார். இன்னுங் கடினக் கட்டிகளில் சிக்கிய பொன்னை நீரால் பிரிக்கும் முறை இதுவாகும். இப்படி இந்த 4 முறைகளிலும் பூதிக முறைகளே பயன் படும். 

5 ஆம் முறையில் மட்டுமே வேதியல் குறுக்கிடும். பெரும்பாலான சுரங்கத் திணைக்களங்களில் (mine based plants) இன்று 5 ஆம் முறையே பயன்படுகிறது. இந்த 5 ஆம்முறை எழுந்து 100 ஆண்டுகள் கூட ஆகாது.

இதில் பொற்பாறையை உடைத்துப் பொடியாக்கி சவடியக் கரிங்காலகைக் (Sodium Cyanide) கரைசலோடு வினைபுரிய வைத்து பொடிக்குள் பொதிந்த தங்கம்.வெள்ளியைக் கரைத்துப் பொன்/வெள்ளிக் கரிங்காலகைக் (gold/silver cyanide) கரைசலாக்குவர். பின் அதனோடு, துத்துநாகஞ் (Zinc) சேர்த்து பொன், வெள்ளி மாழைகளைத் திரைய (precipitate) வைத்து, நாகக் கரிங்காலகைக் (Zinc Cyanide) கரைசலைப் பெறுவர். இதோடு, கந்தகக் காடியை (sulphuric acid) வினைக்க வைத்து, கரிங்காலகைக் காடி (Hydrogen Cyanide) ஆக்கி, சமையல் உப்போடு (Cooking salt) மேலும் வினைக்க வைத்து சவடியக் கரிங்காலகை (Sodium Cyanide) செய்வர். சவடியக் கரிங்காலகையை பொற்பாறைப் பொடியோடு மீள வினைக்க வைப்பார். 5 ஆம் முறையில் அதிகத் தங்கம் பிரித்தெடுக்கப் படும். முதல் 4 முறைகளுக்கு ஆகுஞ் செலவை விட 5 ஆம் முறைக்குச் செலவதிகம். சூழியற் கேடும் அதிகம்.

மேலேயுள்ள முதல் 4 பொன்னரிப்பு (இச்சொல் நம் அகரமுதலிகளில் உள்ள்து) முறைகளில் பொற்றுகள் கூடிக் கட்டிகள் குறையுமெனில் அவற்றில் இதள் (mercury) மாழையையும் சேர்ப்பர். 

(இல்>இது>இதல்> இதள்= பளபளப்பு, பளபளக்கும் மாழையான ”இதள்” எனும் பெயரைத் தொலைத்து pArada, rasa என்ற 2 சங்கதச் சொற்களை இணைத்துச் சொல்லத் தொடங்கியது தமிழரின் சோகம். பாரத = பாரமானது. ரஸ = சாறு. திண்மப் பொடியான mercuric oxide இலிருந்து பெற்ற பாரதச்சாறு பாரதரசம் ஆகிப் பின் முதல் ரகரம் நலிந்து, பாதரசமாகும்; quicksilver) 

இதள் மாழையை பெரும்பாலான மாழைகளோடு சேர்ந்து அவற்றை இளக்கி பல்வேறு  மாழ்கங்களை (amalgams) உருவாக்குவர்.  குறிப்பிட்ட மாழ்கத்தைத் தனியே பிரித்துச் சூடாக்கி இதளை ஆவியாக்கி இன்னோரிடத்தில் அதைக் குளிரவைத்து மீண்டும் பயனுறுத்திக் கொள்வர்.  எம்மாழை தேவையோ, அது கிடைத்துவிடும். மேலே, பொன்னைத் தூய்மை செய்வது புடமிடல் எனப்படும், இதற்கும் சூடேற்றம் வேண்டும்,

amalgam (n.)
c. 1400, "a blend of mercury with another metal; soft mass formed by chemical manipulation," from Old French amalgame or directly from Medieval Latin amalgama, "alloy of mercury (especially with gold or silver)," c. 1300, an alchemists' word, probably from Arabic al-malgham "an emollient poultice or unguent for sores (especially warm)" [Francis Johnson, "A Dictionary of Persian, Arabic, and English"], which is itself perhaps from Greek malagma "softening substance," from malassein "to soften," from malakos "soft" (from PIE *meldh-, from root *mel- (1) "soft"). Figurative meaning "compound of different things" is from 1790.

இந்த மாழ்க உருவாக்கத்தின் காரணமாகவே, குறிப்பாகத் தங்கம், வெள்ளித் துகள்களை ஒன்று சேர்ப்பதில், சூழலியற் கேடுகள் இருந்தபோதும் தங்கம் பிரிப்பதில் இதள் பெரிதும் பயன்பட்டு வந்தது. 

மாழ்கம் என்பது இதளும் இன்னொரு மாழையும் சேர்ந்துபெறும் அட்டிழை (alloy) யாகும்.  அதனுள் அமையும் இதளின் அளவைப் பொறுத்து அது நீர்மமாகவோ, மெல்லிய பசையாகவோ, திண்மமாகவோ  அமையலாம். இந்த அட்டிழைகள்  மாழைப் பந்தங்கள் (metallic bonding) வழி ஏற்படுகின்றன, இரும்பு, நரையம் (platinum), துங்கத்திணம் (tungsten), தாண்டலம் (tantalum) தவிர மற்ற  மாழைகளோடும் இது போலும் அட்டிழைகள் உருவாகலாம். வெள்ளி-இதள் மாழ்கம் என்பது பல் மருத்துவத்திலும், பொன் -இதள் மாழ்கம் மண்ணூறல்களில் இருந்து  (mineral ore) பொன் பிரிப்பதிலும் பயன்படுகின்றன.

அறிவியல் அறிவுறாத அக்காலத்தில் , பொன்னுக்கும் இதளுக்கும் ஏற்படும் மாழ்கம் காரணமாகவே, இதளைக் கொண்டு மதிப்பிலா மாழைகளையும் பொன்னாய் மாற்றிவிடலாம் என எண்ணத் துணிந்தார். இதை நம் அகர முதலிகள் மாழாத்தல் [transmutation: late 14c., from Old French transmutacion "transformation, change, metamorphosis" (12c.), from Late Latin transmutationem (nominative transmutatio) "a change, shift," noun of action from Latin transmutare "change from one condition to another," from trans "across, beyond; thoroughly" (see trans-) + mutare "to change" (from PIE root *mei- (1) "to change, go, move"). A word from alchemy.] என்று சொல்லும்.

இதற்காகத் தாவரச் சாறுகளிலும், விலங்குயிரி நீர்களிலும், இதளாவியிலும், வினைசெய்த முயற்சிகள் ஏராளம் ஏராளம்.   மட்டமான மாழைகளைத் தங்கம் ஆக்குவது இன்று வரை நடை பெறவேயில்லை. ஆனாலும், முன்னோர் முயன்றார். இச் செய்முறைகளில் பலவும் (குறிப்பாய்ச் சூடேற்றுவதும், வெதுப்புவதும்,)  கூட வேறு வினைகளுக்குப் பயன்பட்டன. இதில் மூழ்கிப் போனவர்க்கு)  இதளின் மேல் ஒரு பிடிப்பும் ஏற்பட்டது. பொ.உ.300 களில் சங்கதப் பெயரால் வடக்கே குத்தர் காலத்தில் ”ரசாயனம் / இதள்வழிச் ” செலுத்தம் என்ற பெயரும் ஏற்பட்டது. இதள்வழிச் செலுத்தம் என்பது இன்று நேற்று ஏற்படவில்லை. கிட்டத்தட்ட 5000 ஆண்டுகளுக்கு முன் வெண்கலக் காலத்திலேயே ஏற்பட்டுவிட்டது.

பொன்னும் வெள்ளியும் கிடைப்பது அரிதாகிச் செம்பும், ஈயமும், நாகமும் பெரிதும் கிடைத்ததால், வெண்கலம், பித்தளை போன்றவற்றிலிருந்து தங்கம் பெற வழியுண்டா என்ற முயற்சி எகிப்து, சுமேரியா, சிந்துசமவெளி எனப் பலவிடங்களிலும் நடந்தது. தமிழகத்திலும் அது நடந்திருக்க வேண்டும். 

(நான் ஆதிச்சநல்லூரின் காலம் சிந்துசமவெளிக் காலம் என்று நம்புபவன். செம்பு செய்ம்முறை இங்கு நடந்ததற்குச் சான்றுகள் உள்ளன.) 

முதலில் எகிப்து பற்றிப் பார்ப்போம். எகிப்தின் தொடக்க கால அரச குலங்கள் கருப்பு நிறத்தவரே. பின்னால் தான் சிவப்புநிற வேற்றுநிறத்தவர் வந்து கலந்த பின்னால் அரச குலங்கள் பழுப்பு நிறம், செந்நிறம் என்று வேறு நிறங்களில் மாறின. 

எகிப்தின் பழைய பெயர்களில் ஒன்று கருமார்>கம்மார் நாடு என்பதாகும். (chemie என்பது எகிப்திற்கு இன்னொரு பெயர். கருமண் என்று காப்திக் மொழியில் பொருள்.)


மேலுள்ள படத்தில் முதலையின் தோல் காட்டும் பச்சை வடிவம் [k] அல்லது [km] என்று பலுக்கப்படும் அடுத்து வரும் ஆந்தைப் படம் [m] என்று பலுக்கப் படும்  மூன்றாவதான அரைவட்டம் [t] என்றும் பலுக்கப்படும் நாலாவதான  அடையாளம் சொல்லின் முடிவைக் காட்டுகிறது அதற்குப் பலுக்கல் ஒலி கிடையாது. (பார்க்க: https://www.quora.com/What-is-the-meaning-of-the-term-Kemet-and-why-did-some-ancient-Egyptians-call-their-country-by-this-name#)

பழைய எகிப்திய (பின்னால் காப்திக் - coptic - மொழியில்) எழுதும் போது உயிர்கள் காட்டப்படுவதில்லை. அந்தந்த வட்டார வழக்கிற்கேற்ப வெவ்வேறு உயிர்களைப் பெய்துகொள்வார். இதை மொத்தமாய் கெமெட் என்று ஒலிக்கலாம். இதன் பொருள் கம்மார்(கருப்பர்)  நாடு. கம்மார் நாட்டில் இதள் வழி வேலையான  ”கெமெட்” நடந்தது. (All Chemists are in that sense blackeys.)  எகிப்திலிருந்து, குறிப்பாய் அலெக்சாந்திரியாவிலிருந்து, கிரேக்கம், உரோமன், மேலையம்  என்று அறிவியல் செய்திகள் போனபோது இதளை வைத்துச் செய்த சித்துவேலைகள் கம்மார் கலைகள் (black arts) என்றே அழைக்கப் பட்டன. எனவே மேலைநாடுகளில் kemie> kemiya என்று சொல் வளர்ந்தது.

இதள்வழி மாழாத்தல் (ரசவாதம்) நடந்தது நம்மூரிலும் இருந்திருக்கலாம். அது பற்றிய செய்முறை நூல்கள் இன்னும் நம்மூரில் நமக்குக் கிடைக்கவில்லை. பல்வேறு சித்த மருத்துவச் சுவடிகளைத் துருவித் தேடவேண்டும். யாரும் இதை நோக்கி ஆய்வு செய்ததில்லை. இவற்றுள் இச் சிந்தனைகள் ஒருவேளை பொதிந்து கிடக்கலாம். மாழாத்தல் போக வேறு ஒரு சொல்லும் நம்மிடமுண்டு. அது முற்றிலும் தமிழே. அறியாதோர் அதைக் குழப்பி (பேதம் எனும்) சங்கதச் சொல்லோடு பொருத்திக் கொள்வார்.

அத் தமிழ்ச்சொல்லானது வேறுபடுத்தலில் கிளர்ந்த சொல். வேறல் = வேறாதல் ( இயற்கையில் ஒன்று இன்னொன்றாய்த் தானாய் மாறுதல். இதைத் தன்வினை என்பார். இதில் மாந்தத் தலையீடு இருக்குமெனில் மாற்றல் என்றாகும் (பிற வினை). இதேபோல் இடல் என்பது தன்வினை. இட்டல் என்பது பிறவினை; இரண்டு சொற்களையும் சேர்ந்து கூட்டுச்சொல் ஆக்கும்போது வேறிடல் (த.வி+த.வி); வேற்றிடல் (பி.வி+த,வி) வேறிட்டல் (த,வி+பி.வி), வேற்றிட்டல் (பி.வி+பி.வி) என்றாகும். 

இவை பேச்சுவழக்கில் வேதிடல்,  வேத்திடல், வேதித்தல், வேத்தித்தல் என்றுமாகும்.  (ஆற்றுக்குப் போனேன் என்பதை ஆத்துக்குப் போனேன் என்பதும், ஏற்றத்தை ஏத்தம் என்பதும், மாற்றத்தை மாத்தமென்பதும் போல் ஏராளம் காட்டுகள் இப் பேச்சு வழக்கிற்குச் சான்று காட்டும்.) இவ்வளவு எளிமையான விளக்கம் வேதியலுக்கு இருக்கையில் ஏனோ சிலருக்குத் தமிழ்ச் சொற்களைச் சங்கதத்திற்குத் தானமாய் வழங்குவதில் அவ்வளவு விழைவு இருக்கிறது. என்ன செய்வது?

வேதித்தல் என்ற சொல்லிற்கு தமிழ் அகரமுதலிகளில் வேறுபடுத்தல், தாழ்ந்த உலோகங்களை உயர்ந்த உலோகங்களாய் மாற்றல் என்ற பொருள் தருவார்.  வேதகன்= ஒன்றின் தன்மையை வேறுபடுத்துவோன்;  வேதனம் = வேதுச் செயலால் பெறப்படும் பொன்;  வேது= வெம்மை, வேறு பாடு; வேதை = இரசவாதம்.  வேதைச் சிந்தூரம் = உலோகங்களைப் பொன் ஆக்கும் மருந்து . வேதகம் = வேறுபடுத்துகை, வேறுபாடு, புடமிடுகை, புடம் இட்ட பொன், இரும்பு முதலியவற்றைப் பொன்னாக்கும் பண்டம்,  வெளிப் படுத்துகை.  வேதகப் பொன் = புடமிட்ட பொன்; வேத்தியம் = அடையாளம்;   எனவே வேதியல் என்பது ஒன்றை இன்னொன்றாய் மாற்றும் இயல்.   அவ்வளவு தான். இதில் போய்ச் சங்கதம் கூட்டி வந்து பூச்சாண்டி காட்டுவதில் பொருளில்லை

Gr. khymeia என்ற சொல் முதலில் பெரும்பாலும் மருந்து வேதியல் (pharmaceutical chemistry) தொடர்பாகவே புழங்கியது.  பின்னால் மற்ற எல்லாவித வேதியல்களுக்கும் இது பரவியது, அவற்றில் ஒரு சில.

Organic chemistry = அலங்க வேதியல்
Inorganic chemistry = அலங்கா வேதியல்
Physical Chemistry = பூதி வேதியல்.
Organo-metallics = அலங்க மாழையங்கள்.
bio-organic chemistry = உயிர் அலங்க வேதியல். உயிர்வேதியலின் (biochemistry) ஒரு பகுதி.

வேதியலில் ஆர்வமிருந்தால், கீழுள்ள பதிவுகளையும் படியுங்கள்.

https://valavu.blogspot.com/2019/04/1.html
https://valavu.blogspot.com/2019/04/2.html
https://valavu.blogspot.com/2018/07/organ.html
https://valavu.blogspot.com/2018/07/polyester.html
https://valavu.blogspot.com/2018/07/ortho-meta-para.html

அன்புடன்,
இராம.கி.


சிலம்பு ஐயங்கள் - 23

பலருமெழுப்பிய குறுக்கு வினாக்களுக்கு விடையளிக்க முற்பட்டு, "காட்சிக் காதை 163 ஆம் வரியில் வரும் 'ஆரிய மன்னர் ஈரைஞ்ஞூற்றுவர்க்கு' என்பதன் பொருளென்ன?" என்று நாலாங் கேள்விக்கு ஆன நீள விடையில் தோய்ந்து விட்டேன். படித்தோரின் பொறுமைக்கு நன்றி. அடுத்த கேள்விக்கு வருவோம். ”கானல் வரியில் மாதவி மாலையைப் பாடுவதில் ஏதேனுங் குறிப்புண்டா? ’மாலை’ வசந்தமாலையைக் குறிக்குமா?” என்று திரு.முகுந்தன் ஐயப்பட்டது சரிதான். வசந்தமாலை எனும் முழுப்பெயரன்றி, மாலையெனும் விளிப் பெயர் சொல்லி கானல்வரி முழுக்கச் சிலேடையாய் ”பேறு காலத்தில் நம் வீட்டில் நடந்த கள்ளங்கள் எனக்குத் தெரியும், நீ இப்படிச் செய்யலாமா?” என்று கோவலனுக்குச் சுருக்கென உறைக்கும்படி மாதவி உணர்த்துவாள்.

”மருங்கு வண்டு சிறந்தார்ப்ப” என்பதன் பின்வரிகளில், எத்தனை மாலைகள் வரும் தெரியுமா? தவிர, கணவன் எனத் தான் நினைத்தவன் செய்ததைக் குத்திக் கேட்பாள். குட்டு வெளிப்பட்டதைக் கண்டு, கோவலன் முணுக்கெனச் சினந்து போவான். புகார்க் காண்டத்தில் வசந்த மாலையின் சூழ்க்கும இருப்பு மேலோட்டமாய்ப் படிப்போருக்கு விளங்காது. ஆழ்ந்தோருக்கே விளங்கும். இச்சுருக்க மறுமொழியோடு நகர்வதற்கு என் மனம் ஒப்பவில்லை கானல் வரியின் பின்பகுதி விளக்கப்படா விடில் சிலம்பின் முகனக் காதை புரியாது. அது ஏதோ பாட்டுங் கேளிக்கையுமான பகுதியென்றே பலரும் எண்ணுகிறார். கிடையாது. நெய்தலின் சோகம் அதனுளுண்டு. முன் சொன்ன தமிழாசிரியர் திரு. பழநியைத் தவிர வேறு யாரும் கானல்வரிக்குப் பொருள் எழுதி நான் கண்டது இல்லை. அவர் நூலைப் பார்த்தே நானும் புரிந்துகொண்டேன். இப்பொருளை நானும் வேறிடத்தில் எழுதியதில்லை.   

வசந்தமாலை, மாதவி என்ற 2 பெயர்களுமே தமிழரை மயங்கடித்த குருக்கத்தியைக் குறிக்கும். 2009 இல் எழுதிய ”கண்ணகி. கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம்” என்ற என் கட்டுரைத் தொடரைப் படியுங்கள். (இதுவும் திரு.நா.கணேசனை மறுத்தெழுதியது தான். சிலம்பு பற்றிய கணேசன் மடல்களைப் படித்தால் ஒன்று புலப்படும். சிலம்பை இழித்துரைப்பதில் அவருக்கென்னவோ அவ்வளவு விருப்பம். தான் சொன்னதைச் சரியென நிறுவ, எந்த வானத்தையும் வில்லாய் வளைப்பார். அதிற் பட்டகை (fact), இயலுமை (possibility), ஏரணம் (logic), ஒத்திசைவு (consistency) என எதுவும் பாரார்.)

http://valavu.blogspot.in/2009/03/1.html
http://valavu.blogspot.in/2009/03/2.html
http://valavu.blogspot.in/2009/03/3.html
http://valavu.blogspot.in/2009/03/4.html
http://valavu.blogspot.in/2009/03/5_29.html
http://valavu.blogspot.in/2009/03/6.html

பசந்தத்தில்/வசந்தத்தில் மாலுவது (மலர்வது/மயங்குவது) வசந்த மாலை. இக்கூட்டைச் சுருக்கி வசந்தாள், வசந்தி, வாசந்தி என்றெல்லாம் இன்று பெயர் வைத்துக் கொள்வார். ஆனாற் பலரும் அச்சொற்கள் குருக்கத்தியைக் குறிக்கும் என்பதை உணரார். வசந்த காலத்தைக் குறித்ததெனக் குறைப்படப் பொருள் சொல்வார். ”ஜலசமுத்ரத்தைச்” சுருக்கி சமுத்ரமென்பார் பாருங்கள். அதுபோற் குறைப்புரிதல் அதுவாகும். மயக்கந் தருபவள் மாதவி; வசந்தத்தில் மால்க்குபவள் வசந்த மாலை. வசந்தாள், வசந்தி, வாசந்தியென்று சுருக்கி விளிப்பது போல் மாலையென்றும் (= மயக்குபவள் என்றும்) அவள் பெயரைச் சுருக்கலாம். ”மாலை” யெனும் விளிப் பெயரைத் தன் கானல்வரியினூடே இரு பொருள் படப் பலவிடங்களிற் பொருத்தி மாதவி கோவலனைக் குத்திக் காட்டுவாள்.

கானல்வரிப் பாட்டிற்கான உரையாசிரியர் விளக்கங்களை வேங்கடசாமி நாட்டார் நூலிற் பார்த்துக்கொள்ளலாம். வசந்த மாலை குறித்தெழும் உட்பொருளை மட்டுமே இங்கு குறிக்கிறேன். குரல்(ச), துத்தம்(ரி), கைக்கிளை(க), உழை(ம), இளி(ப), விளரி(த) தாரம்(நி) பொருந்திய தமிழிசை அடிப்படை அறிய எழுசுரங்கள் பற்றி மேலும் சில விவரங்கள் அறிய என் தொடரைப் பரிந்துரைப்பேன்
.
http://valavu.blogspot.in/2008/03/1.html
http://valavu.blogspot.in/2008/03/2.html
http://valavu.blogspot.in/2008/03/3.html
http://valavu.blogspot.in/2008/03/4.html

கோவலன் முதலில் கானற்பாணியில் (முல்லையந் தீம்பாணி -மோகனம்- போல் இதுவும் ஒரு திறப்பண் தான். ச க1 ம1 த1 நி1 என்ற 5 சுரங்களில் இப்பண் அமையும்.) 

யாழால் கருவியிசை எழுப்பி, பின் “திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோல் அதுவோச்சி” என்று கானல்வரிப் பாட்டை இசையோடு தொடங்குவான். தன் வரிகளின் உள்ளடக்கமாய், ”என் நடத்தையைக் கண்டு கொள்ளாதே! அப்படி இப்படித் தான் நான் உன்னோடு இருப்பேன்” என்று சொல்வான். அவன் பகுதி வரிகளைத் தவிர்த்து மாதவியின் கானல்வரி மறு மொழிக்கு மட்டுமே இங்கு பொருள் சொல்கிறேன்.

இதுபோல் இரண்டாம் பொருள் (இறைச்சிப் பொருள்) கொள்ளலில் ”காவேரி வழியே மாதவி மனச்சான்றோடு பேசுகிறாள்” என்றே கொள்ள முடியும். அதைக் கோவலனும் புரிந்து கொள்வான். அப்புரிதலில் தான் கோவலனுக்குக் கோவமெழும். கானல் வரி படிக்கும் நாம் உள்ளிருக்கும் உருவகத்தை விடாது பிடித்துக் கொள்ள வேண்டும். முதலில் வருவது 3 தாழிசையால் ஆகும் ஆற்று வரி யென்பர். ஆற்றைப் பாடுவது போல், மாதவி தனக்குத் தெரிந்தவற்றைப் பொதுவிற் போட்டுடைப்பாள். (முந்தைக் கடலாடு காதையின் கடைசி அடிகளின் படி) காட்சியோரத்தில் அமளிக்கு (படுக்கைக்கு) அருகில் வசந்த மாலை வருத்தத்தோடு நிற்கிறாள். (ஏதோ, நடக்கப்போகிறது என்று குறு குறுத்த அவள் நெஞ்சம் வருத்தப்படாது என்செய்யும்?

கீழே வரும் தாழிசைகளில் இரு பொருள்கள் உள்ளன. ஒன்று இயற்பொருள். இன்னொன்று இறைச்சிப் பொருள். இயற்பொருள் மாலை நேரத்தையும். இறைச்சிப் பொருள் வசந்தமாலையையுங் குறிக்கும். பாடுவோளுக்கும், கேட்போனுக்கும், அருகிலிருந்து கவனிப்போளுக்கும் புரிந்து தான் பாட்டு வெளிப்படுகிறது. மூவரிடையே நடப்பது ஒரு நாகரிகமான சண்டை. இருவர் தம் கருத்தைச் சொல்கிறார். ஒருத்தி உம்மென்று வருந்தி நிற்கிறாள். என்ன இருந்தாலும் மாதவி வசந்தமாலைக்கு இயமானி (= எசமானி) அல்லவா? இனிப் பாட்டினுள் வருவோம்.

வேறு
25.
மருங்குவண்டு சிறந்தார்ப்ப மணிப்பூவாடை அதுபோர்த்துக்
கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்தாய்வாழி காவேரி
கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்தவெல்லாம் நின்கணவன்
திருந்துசெங்கோல் வளையாமை அறிந்தேன்வாழி காவேரி.

26.
பூவார்சோலை மயிலாலப் புரிந்துகுயில்கள் இசைபாடக்
காமர்மாலை அருகசைய நடந்தாய்வாழி காவேரி
காமர்மாலை அருகசைய நடந்தவெல்லாம் நின்கணவன்
நாமவேலின் திறங்கண்டே அறிந்தேன்வாழி காவேரி

27.
வாழியவன்றன் வளநாடு மகவாய்வளர்க்குந் தாயாகி
ஊழியுய்க்கும் பேருதவி ஒழியாய்வாழி காவேரி
ஊழியுய்க்கும் பேருதவி ஒழியாதொழுகல் உயிரோம்பும்
ஆழியாள்வான் பகல்வெய்யோன் அருளேவாழி காவேரி

”ஏ, காவேரி (மாதவியின் மனச்சான்று), வண்டுகள் பக்கத்தில் வந்து சிறக்க ஒலிசெய்ய, மணிகளையும், பூவாடைகளை போர்த்துக்கொண்டு, கருங்கயற் கண்ணை (இக்கண்தான் முதலிற் கண்ணகியிடமும், பின் மாதவியிடமும் கோவலனைக் கவிழ்த்தது.) விழித்து, அசைந்து, நடந்து வந்தாய். ஏனப்படிச் செய்தாய் தெரியுமா? உன் கணவனின் செங்கோல் (அதாவது நேரொழுக்கம்) வளையாதென்று அறிந்தே..

ஏ காவேரி, பூக்கள் நிறைந்த சோலைகளில் மயில்களாட, அது புரிந்து குயில்கள் இசைபாட, விரும்பத்தக்க வசந்தமாலை (காமர் மாலை) உடன் வந்து அருகே அசைய நீ நடந்தாய், ஏனப்படிச் செய்தாய் தெரியுமா? உன் கணவனின் நாமவேற்றிறங் (புகழ்பெற்ற வேற்றிறம்; வேறொன்றும் இல்லை சொல் தவறான் என்று ஊரில் கோவலனுக்கிருந்த மதிப்பு) கண்டு அறிந்தே.

ஏ காவேரி, அவன் குலமகவை வளர்க்கும் தாயாகி (மணிமேகலை பிறந்து ஓரிரு மாதங்கள் ஆனபின் கானல்வரி நடந்தது) அவர் குலம் வாழவைக்கும் பேருதவியில் ஒழியாதிருந்தாய். (கண்ணகிக்குப் பிள்ளையில்லை. மேகலையே கோவலன் குடிக்கு முதற்பிள்ளை, இனியும் பிள்ளைகள் பிறந்து குடி தழைக்கலாம் என உணர்த்துகிறாள்). ஏனப்படிச் செய்தாய் தெரியுமா? ஆழியாளும் வெய்யோன் போன்ற அவன் அருளால் தன் உயிரோம்பும் என்றே.

அன்புடன்,
இராம.கி.

Thursday, September 19, 2019

சிலம்பு ஐயங்கள் - 22

இனி கடல்பிறக்கோட்டிய வெல்கெழுகுட்டுவனென முதலிலும் கங்கைப் பேர் யாற்றுக் கரைபோகிய செங்குட்டுவனெனப் பின்னும் பெயர் பெற்றவனைப் பார்ப்போம். இவன்காலம் பொ.உ.மு.131-77 ஆகும். வெல்கெழுகுட்டுவன் வேறு, செங்குட்டுவன் வேறென்று பலகாலம் தமிழறிஞர் பிளவுபட்டார். வேடிக்கையென்ன தெரியுமோ? இவன் இயற்பெயர் என்னவென யாருக்குமே தெரியாது. இன்றுங் கூடக் குட்டுவனைக் குட்டனென்றே மலையாளத்திற் சொல்வார். சிறியவனென்று பொருள். அகவை, அளவு, முறை இப்படி எத்தனையோ வகையில் ஒருவன் குட்டனாகலாம். ஈழப் பெருந்தலைவரான பிறகும் கூடப் பிரபாகரனைத் ”தம்பி” என அழைத்தவர் மிகுதி. அவர் பெயர் உண்மையில் தம்பியா? இல்லையே? அவர் விளிப்பெயரே பரவலாய் ஈழம் எங்கும் எல்லோருக்கும் பழகிப்போயிற்று. குட்டுவனும் அப்படித்தான். வெல்கெழு குட்டுவன்= வெல்லுங் குணங்கொண்ட குட்டுவன்; செங்குட்டுவன்= செந்நிறக் குட்டுவன். அவ்வளவுதான் தமிழரில் இப்படிப் பெயர்கள் அமைவது வியப்பேயில்லை சில பெயர்கள் மக்கள் வழக்காற்றில் சட்டென்று பொருந்திக்கொள்ளும்.

(ஆனாலும் ’பெரியார்’ என்றால் சிலருக்கு முட்டிக்கொள்ளும். ’ஈ.வே. இராமசாமி நாயக்கர்’ என்பதே சரியாம். ’பாவாணர்’ என்று சொல்லக் கூடாதாம். ’ஞா.தேவநேயன்’ என்று சொல்ல வேண்டுமாம். ஒருதமிழ் மடற்குழுவில் முன்பொருவர் இதுபற்றி அடம்பிடித்துச் சொன்னார். சிரித்துக் கொண்டேன். என்றாவது புத்தரைத் திரு. சித்தார்த்தன் என்றோ, மகாவீரரை திரு. வர்த்தமானன் என்றோ யாரேனுஞ் சொல்வாரோ? ’மகாத்மா’வெனில் யாருக்கேனும் விளங்காது போமோ? சரி “மகாப் பெரியவா” என்றால்? ...நான்தான் சொன்னேனே? தமிழரிற் குறிப்புப்பெயர்கள் சரளம், ஏராளம்.)

சென்ற பகுதிகளில் மோரியர், சுங்கர், கனகர், நூற்றுவர்கன்னர், ஆதன்கள், இரும்பொறைகள் என ஆழமாய்க் காலக்கணிப்புக்குள் போனதற்குக் காரணம் உண்டு. வரலாற்றில் பிருக்குமானம் (parsimony) முகன்மையானது. குறைவான ஊன்றுகோள்களில், நிறைவான தரவுகளோடு ஆழமான ஏரணம் இருந்தாற்றான் வரலாறு வழிக்கு வரும். அதைவிடுத்து ஏரணமேயின்றி வரலாற்றுத் தரவுகளை வறட்டுத்தனமாய் அலசினால் ஒருபக்கமும் நகர முடியாது. சேரர் காலக்கணிப்பில் நடக்கும் இருவேறு குழப்பங்களைச் சொல்கிறேன். கேளுங்கள்.

குட்டுவன் 55 ஆண்டுகாலம் ஆட்சிசெய்தான். அவன்விறல் வெளிப்பட வெளிப் பட ஒவ்வொருவரும் விதம்விதமாய் அழைத்திருப்பார். 25 வயதிற் குட்டுவன் இளங்கோ ஆகையில் புலவர் பரணருக்கு 50 வயதென வையுங்கள். கடல் பிறக்கோட்டிய செயல் அடுத்த சில ஆண்டுகளில் நடந்தால், பரணர் அதைச் சொல்வார். கங்கைக் கரை போகையில் செங்குட்டுவனுக்கு 80 ஆனால் பரணர் 105 வயது வரை உயிரோடிருந்து சொல்வாரா? பரணர் சொல்லாததாலே, வெல்கெழு குட்டுவனும் செங்குட்டுவனும் வெவ்வேறு என்போமா? அதுவென்ன ஏரணம்? இப்படியொரு வெட்டிவாதம் இங்கு நெடு நாள் நடந்தது. இல்லையெனில் பதிற்றுப்பத்தின் பதிகம் ”பெருஞ்சோழர் ப்ரசத்தி” போன்றதென்று சொல்லி ஏற்றுக்கொள்ள மறுப்பார்.

என் கேள்வி: ”பெருஞ்சோழர் ப்ரசத்திகளையும் பல்லவர் ப்ரசத்திகளையும்” பின் எப்படி நம்புகிறீர்கள்? அதையும் தூக்கி எறியலாமே? இந்த ப்ரசத்திகளை நம்புவீர்கள், பதிற்றுப்பத்தின் பதிகங்களை நம்பமாட்டீர்கள் என்றால் அது ஓர் ஓரவஞ்சனை தானே? ”6 ஆம் நூற்றாண்டு ஆசாமிகள்” இப்படிச் சொல்லிச் சொல்லியே தமிழரைக் காயடித்தார். ”When it comes to assigning importance to Tamils, always create doubts in people's perception”. இது எந்த அளவிற்குப் போனதெனில், தமிழர் கருத்துச் சொன்னாலே, ’இந்தாலஜி’ குழுமத்தில் கேலியும், சிரிப்பும், நக்கலும் எழுந்துவிடும். அவர்கள் ஐராவதம் மகாதேவனையே பொருட் படுத்தமாட்டார். இதெல்லாம் எப்படி நடந்தது? ”6 ஆம் நூற்றாண்டு ஆசாமிகளின்” தாசானுதாசப் பணிவு தான் காரணம். 

இன்னொரு பக்கம் விவரமிலா ஆர்வலர், 58+25+25+55 எனக் கூட்டிச் செங்குட்டுவன் வரை ஆதன்குடிக்கு 163 ஆண்டு இருப்புச் சொல்வர். சரஞ்சரமாய் ஆண்டுகளைக் கூட்டுவது சரியா? தந்தைக்கும், மகன்களுக்கும், அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையே மேல்மடி (overlap) இருக்காதா? அப்படியொரு கனத்த நூல் (பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்- கணியன் பாலன், எதிர் வெளியீடு) அண்மையில் வெளிவந்தது. அதைப் படிக்கையில் வருத்தமானது. விரிவாய் அலசவும் வேதனையாகிறது. இவ்வளவு பெரிய உழைப்பில் ஏரணங் குறைந்தால் எப்படி? 6 ஆம் ஆண்டு ஆசாமிகள் ஒருமுனையெனில் மேல்மடி கவனியாத இவர்போன்ற ஆர்வலர் இன்னொரு முனை. தமிழர் வரலாறு இந்த இருவரிடமுஞ் சிக்கி அலை படுகிறது. இனிக் காட்சிக்காதை 156-164 வரிகளைப் பார்ப்போம். .

கொங்கணர் கலிங்கர் கொடுங்கரு நாடர்
பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர்
வடவா ரியரொடு வண்டமிழ் மயக்கத்துன்
கடமலை வேட்டமென் கட்புலம் பிரியாது
கங்கைப் பேர்யாற்றுக் கடும்புனல் நீத்தம்
எங்கோ மகளை ஆட்டிய அந்நாள்
ஆரிய மன்னர் ஈரைஞ் ஞூற்றுவர்க்கு
ஒருநீ யாகிய செருவெங் கோலம்
கண்விழித்துக் கண்டது கடுங்கட் கூற்றம்

இது அமைச்சன் வில்லவன்கோதையின் கூற்று. பொதுவாய்ப் பலரும் ஒரு முறையே செங்குட்டுவன் வடக்கே போனதாய் எண்ணிக் கொள்கிறார். கிடையாது. இருமுறை போயிருக்கிறான். கதைக் காலத்தில் (கி.மு.77க்குச் சற்றுமுன்) பாண்டிய நாடு குழப்பம்/கலகத்திலே இருந்தது. வளநாட்டிற்கும் நாகநாட்டிற்கும் பங்காளிச்சண்டை. இளஞ்சேரலிரும்பொறை நடத்திய போருக்குப்பின், குட்டுவனே 2 வேந்தர், 7 குறுநிலமன்னரோடு பொருதித் தன் மாமன் மகனை சோழ வளநாட்டின் தலைவனாக்குவான். புகார்ச் சோழன் (பெரும்பாலும் 2ஆம் கரிகாலன், அல்லது அவன் மகன்) அதை ஏற்றுக் கொள்ளாது முரண்டு பிடித்தான். இக்காலத்தில் சேரனே பேராற்றல் கொண்டவனாய் இருந்தான். அதனாற்றான் தமிழ்நாட்டின் தனிப்பெருந் தலைவனாய்த் தன்னை எண்ணிக்கொண்டான்.

சேரருக்குத் தம்நாட்டின் வடக்கிருந்த கொங்கணரைக் (மங்களூர் தாண்டி மேலைக் கொங்கணம்/கோக(ர்)ணம்/கோவா கடற்கரையை ஒட்டியவர்) கட்டுக்குள் வைப்பது மிகத் தேவை. அப்பொழுது தான் கார்வார் (Karwar) வரை மேலைக் கடல்வணிகத்தைச் சேரர் தம் கட்டுக்குள் வைத்திருக்கலாம். அதற்கும் மேல் சோப்பாராத் (Sopara; nearer to modern mumbai) துறையிலிருந்து இவரின் நண்பர் நூற்றுவர் கன்னர் பார்த்துக்கொள்வார். சேரரையும், கன்னரையும் மீறி நாவலந்தீவின் மேற்குக்கடற்கரையில் அன்றைக்கு யாரும் எதுவுஞ் செய்ய முடியா நிலையே இருந்தது. அந்தக் காலத்தில் கடல்வணிகம் தமிழர்க்கு முகன்மையானது. கொங்கணரை அடக்கியதற்கும் அதுவே காரணம். கடல் பிறக்கோட்டிய செயலென்பது கடற்கொள்ளையரைத் தொலைத்தது தான். மேலைக் கடல் வணிகம் சேரருக்குத் தேவையானது. மிளகை மேற்குநாடுகளுக்கு ஏற்றி அனுப்பவேண்டாமா? 

அடுத்தது கலிங்கர் (கோதாவரிக்கு மேல் இற்றை ஆந்திரமும் ஒடிசாவுஞ் சேர்ந்த பகுதியர்). இவரைக் கட்டுக்குள் கொண்டு வந்ததற்கு வரலாற்றுக் காரணமுண்டு. கதைக்காலத்திற்கு 100 ஆண்டுகள் முன் பொ.உ.மு. 172 இல் கலிங்கத்தைக் காரவேலன் உச்சநிலைக்குக் கொணர்ந்தான். அவனுடைய அத்திக்கும்பாக் கல்வெட்டுத் தமிழர் வரலாற்றை உறுதிசெய்யும். ஆனால் தமிழர் பார்வையில் அதைப் படித்த அறிஞர் மீக்குறைவு. எதிர்காலத்தில் யாரேனுஞ் செய்தால் நல்லது. (Shashi Kant எழுதிய The Hathigumpha inscription of Kharavela and The Bhabru Edict of Asoka, D.K.Printworld (p) Lud, 2nd ed 2000 என்ற பொத்தகத்தையும் படியுங்கள்.) பொ.உ.மு. 424 இலிருந்து தொடர்ந்துவந்த .”த்ராம்ர சங்காத்தத்தை - தமிழர் முன்னணியை (இது 252 ஆண்டுகள் இல்லை 1300 ஆண்டுகள் இருந்தது என்பது இன்னொரு நோக்கு. அதையும் ஆராய வேண்டும்.)” பொ.உ.மு.175 இல் குலைத்து கொங்குக் கருவூர் வரை [கல்வெட்டிற் சொல்லும் பித்துண்டா இதுவே என்பது என் கருத்து. பலரும் பித்துண்டாவை மசூலிப் பட்டினத்திற்கு அருகில் கொண்டுபோவாஎ.] உழிஞைப் போரில் காரவேலன் வந்து, கொங்கு வஞ்சியைத் தொலைத்து அந்துவஞ் சேரல் இரும்பொறையைத் தடுமாற வைத்திருக்கிறான்.

அக்காலம் ஆதன்குடியினரும், இரும்பொறைக் குடியினரும் விரிவடையாக் காலம். அத்திக்கும்பா கல்வெட்டு எழுந்து 6/7 ஆண்டுகள் கழித்து நெடுஞ் சேரலாதன் ஆட்சிக்கு வந்தான். அந்துவஞ்சேரல் காரவேலன் தாக்குதலில் இருந்து தப்பி உதியன்சேரலாதனிடம் ஓடிவந்திருக்கலாம். கருவூரைச் சாய்த்ததோடு பாண்டியரையும் காரவேலன் பதம்பார்த்தான். (கரூரிலிருந்து மதுரை வருவது எளிது.) ஏராளம் முத்துக்கள், செல்வங்களையும் கவர்ந்து சென்றுள்ளான். காரவேலன் கல்வெட்டின் (பொ.உ.மு.172) 11,13ஆம் வரிகளை சேர்த்துப் பொருந்திப் படித்தால், தமிழகத்திற்குப் பெரும்படை வந்தது புலப்படும். இதற்குப் பழிவாங்கவே 60/62 ஆண்டுகள் கழித்து கி.மு.112 இல் செங்குட்டுவன் தன் முதற்படையெடுப்பின் மூலம் கலிங்கத்தைத் தாக்கியிருக்கவேண்டும்.   

[சசிகாந்த் போல் ஒருசிலர் பித்துண்டாவைக் கலிங்கத்திற்குச் சற்றுவெளியே கோதாவரியின் தென்கரை நகரமென்றும் அதைப் பிடித்ததால் கன்ன பெண்ணை (கிருஷ்ணா) வரையிலும் காரவேலன் அரசு விரிந்ததென்றுஞ் சொல்வர். என்னால் அவ்விளக்கம் ஏற்க முடியவில்லை. ஏனெனில் அங்கிருந்து பாண்டியரைத் தாக்க நேரே வரமுடியாது. இடையில் சங்ககாலத் தொண்டைமானும், சோழரும் இருந்திருப்பர். என்னதான் முன்னணி உடைந்தாலும், தம்மை மீறிப் படையெடுத்துப் போவதை சோழர் ஒப்புக் கொள்ளார். தவிர, இவரையும் கடந்து வந்தால் கல்வெட்டில் சோழரைக் கடந்ததாய்ச் செய்தி வந்திருக்கும். ஆனால் அது வரவில்லை. எனவே அன்று நூற்றுவர் கன்னருக்குத் தெற்கே பேரரசாயிருந்த சேரரைக் கருநாடகம் வழி தான் காரவேலன் நெருக்கியிருக்கவேண்டும். தவிரப் பாண்டியர் செல்வங் கவர்ந்தது ”கொற்கைக் கடல்வழி” என்றுந் தோன்றவில்லை. இதுபோல் உழிஞைப்போர் அற்றைநிலையில் கடல்வழி படகுகளைப் பயன்படுத்தி நடக்கமுடியுமா? மிகுந்த ஐயம் வருகிறது.]

கொடுங் கருநாடர் ஒழுங்குமுறையிலா ஆட்சியாளர். இற்றை வட கருநாடகத்தில் இருந்தவர். தென் கருநாடகம் அப்போது தமிழ் பேசிய நாடு. பங்களர், கங்கர், கட்டியராகியோராற் ஆளப்பட்ட பகுதி. கட்டியர் இற்றை வேலூர், சேலம், கோலார்ப் பகுதிகளில் ஆட்சி செய்தார். கங்கர் இற்றைப் பெங்களூரு, மைசூருப் பகுதிகளை ஆண்டார். அற்றை வடகொங்கே பின்னால் கங்க நாடாகியது. பங்களர் நாடென்பது இப்போதையச் சித்தூர், வட ஆர்க்காடு மாவட்டங்களைச் சேர்த்தது. இந்த அரசோடும் குட்டுவன் பொருதினான்.

கொங்கணர், கொடுங்கருநாடர், கலிங்கர் ஆகியோர் சிறிதே தமிழ் கலந்த பாகதம் பேசினார். (இரா. மதிவாணன் ”கருநாட்டிற்குப்” பெருநாடென்றே பொருள்சொல்வார். மயிலை சீனியாரும் ”கரு”விற்குப் “பெரு” எனும் பொருளே சொல்வார். பெருநாடு = மகாராஷ்ட்ரம். அடிப்படையில் வட கருநாடும் மாராட்டியமும் ஒரேபொருளென்று இருவருஞ் சொல்வார்.) இவர் பகுதிகளே (modern maharashtra, North Karnataka, Telingana, North Andhra, and Orissa) மாமூலனார் குறிக்கும் மொழிபெயர் தேயமாகும். பங்களர், கங்கரென்போர் அற்றைக்கால, தமிழ் பேசினார். பின் கொஞ்சங்கொஞ்சமாய் 1000 ஆண்டுகளில் இவர் தமிழ் கன்னடமாகியது. கட்டியர் கடைசி வரை (1950 வரை) தமிழராகவே தங்கிப் போனார். இந்திய விடுதலைக்கு அப்புறமே இவர் வலிந்து தெலுங்கராக்கப் பட்டார். இப்பகுதிகளின் வடக்கே பொ.உ.மு.100 அளவில் நூற்றுவர்கன்னர் (சாதவா கன்னர்) ஓரோபொழுது தனியாகவும், மற்றபோதுகளில் மகதப்பேரரசிற்கு அடங்கியுமிருந்தார்.  கொங்கணர்,  கலிங்கர், கொடுங்கருநாடர், பங்களர், கங்கர், கட்டியராகிய அனைவரும் விந்தியமலைக்குத் தெற்கிருந்தவர். வடவாரியர் அம்மலைகளுக்கு அப்பாலிருந்தவர். (தமிழிலக்கியத்தில் ஆரியர் என்றழைப்பதில் விந்திய மலைகளே விளிம்பை வரையறுத்தன.) இந்த எழுவரையும், செங்குட்டுவன் தன் முதற்படையெடுப்பில் தோற்கடித்தான். இதில் ஆரியர் பெரும்பாலும் விதிசாவில் ஆட்சி செய்த சுங்கராகலாம். அகண்ட மகதத்தை மோரியரிடம் கைப்பற்றிய சுங்கர் வெகுவிரைவிற் சுருங்கினார். பாடலிபுத்தத்தைச் சுற்றிய நிலம் காரவேலன் காலத்தில் சுங்கரிடமில்லை. விதிசா. மகிழ்மதி, உச்செயினி நகரங்களைச் சூழ்ந்தநிலமே அவரிடம் எஞ்சியது. காரவேலன் தன் பாகதக் கல்வெட்டில் ’பகசத்தி மித்தா’ என்றே பாடலிபுத்த அரசனைக் குறிப்பான். (சங்கதத்தில் ’ப்ரகசக்தி மித்ரா’ என்றாகும். பஞ்சதந்திரத்து மகத குமாரர் ”வசுசக்தி, உக்ரசக்தி, அனந்தசக்திப்” பெயர்களை இது நினைவு படுத்தும்) ”மித்ராக்” கொடிவழியார் எத்தனையாண்டு பாடலிபுத்தம் ஆண்டாரெனத் தெரியாது.

”இந்த 7 பேரோடு நடந்த வண்டமிழ் மயக்கத்தில் (போரில்) யானைமேலிருந்து சேரன் செய்த வேட்டை என் கட்புலத்திற் பிரியவில்லை. இவ்வேட்ட முடிவில் கங்கைப்பேர்யாற்றுப் பெருவெள்ளத்தில் எம் “அரசமகளை” (நற்சோணையை) முழுக்காட்டிய அந்நாளில் ஆயிரம் ஆரிய மன்னருக்கு எதிரே நீயொருவனே நின்ற போர்க்கோலம் என் விழியில் அப்படியே நிற்கிறது” என்று வில்லவன் கோதை புகழ்ந்து பேசுகிறான். “இன்னொரு முறை வடக்கே போவோம்; ஆரிய அரசருக்குப் பாடம் கற்பிப்போம்” என்று சொல்லாமற் சொல்லுகிறான். இங்கு ஆயிரம் ஆரியமன்னரென்பதை  அப்படியே எண்ணிக்கையிற் கொள்ளக்கூடாது. அதுவொரு சொலவடை. ”ஆயிரம் பேருக்கு முன் செய்துகாட்டினான்” என்று நாம் சொல்வதில்லையா? (ஆயிரம் என்பது தமிழ்வேர் கொண்ட சொல்லே. பேரனைத் தாத்தனாக்கும் வழக்கங்கொண்ட திரு. நா.கணேசன் தலைகீழாய் ஸஹஸ்ரம்>ஸாஸிரம்> ஸாயிரம்>ஆயிரம் என்பார். இவருக்கு மறுமொழி சொன்னால் நீளும்  இருப்பினும் வேறொரு தொடரில் சொல்லியுள்ளேன் (http://valavu.blogspot.com/2018/08/7.html)

நாலாங் கேள்வியில் நெடுங்காலம் செலவழித்துவிட்டோம். இனி அடுத்த கேள்விக்குப் போவோம்.

அன்புடன்,
இராம.கி.

Friday, September 13, 2019

சிலம்பு ஐயங்கள் - 21

சேரர் குடியின் இரும்பொறைக் கிளைக்குப் போவதற்குமுன் விட்டுப்போன வேறொரு செய்தி சொல்லவேண்டும். ஆடுகோட்பாட்டுச் சேரலாதனுக்கிருந்த ஆட்டனத்தியெனும் இன்னொரு பாகம். ஆடுவதில் பெருந்திறன் பெற்றவன் ஆட்டனத்தி. செந்நிறத்தால், அத்தியெனும் விளிப்பெயரும் பெற்றான். (அத்து= சிவப்பு.. ஒன்றுவிட்ட இவன் அண்ணனைச் செங்குட்டுவன் என்றாரே?) ஆதன் குடியைச் சேர்ந்த நெடுஞ்சேரலாதன் சோழ வளநாட்டிற் பெண்ணெடுத்தான். அவன் மகன் சோழ நாகநாட்டில் பெண்ணெடுத்தான். பெரும்பாலும் இவனே 2 ஆம் கரிகாலன் மகள் ஆதிமந்தியை மணந்தவன் ஆவான். ஆட்டனத்தி ஆதிமந்தி காதலைச் சங்க இலக்கியம் பரவலாய்ச் சொல்லும். பரணரும் பாடுவார். நம்மைக் குடையும் ஒரேசெய்தி. தம்பியின் மாமனோடா (நார்முடிச் சேரலெனும்) பெருஞ்சேரலாதன் சண்டையிட்டு உண்ணா நோன்பிருந்தான்? பெரிதும் வியப்பளிக்கிறது. என் செய்வது? சேரரும் சோழரும் பலமுறை தமக்குள் பெண்கொடுத்துப் பெண்வாங்கி இருக்கிறார். அதே பொழுது ஒருவருக்கொருவர் முரணிப் பொருதியும் இருக்கிறார். உறவுக்குள் மணஞ்செய்வதும் பின் மாமன், மச்சான், என்று சண்டையிடுவதும் தமிழர் மரபில் நெடுங்காலம் தொடர்ந்து நடைபெருவது ஆயிற்றே?       

இனி இரும்பொறைக் கிளைக்கு வருவோம். கருவூரேறிய ஒள்வாட் கோப் பெருஞ்சேரல் இரும்பொறை தான் இக்கிளையின் மூத்தவன். இவனை நரிவெரூஉத்தலையார் புறம் 5 இல் பாடுவார். இவன் எந்தக் காலமெனத் தெரியவில்லை. ”கருவூரேறிய” என்பதால் இவனுக்கு முந்தைய சேரர் கருவூரிலில்லாதது தெரியும். (சங்ககாலம் என்றாலே கொங்குவஞ்சியை வலிந்து இழுப்போருக்குத் தான் இச்செய்தி புரியாதுள்ளது.) அடுத்து அந்துவன்சேரல் இரும்பொறை. இவன்காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 190-149. உதியஞ்சேரலுக்கு இவன் பங்காளி. உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் அந்துவஞ் சேரலின் மாடத்திருந்தபோது கருவூர் அரசவீதியில் முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளியின் யானை மதம்பிடித்துத் தடுமாறியதை அடையாளங் காட்டி விவரிப்பார். அந்துவன்மனைவி பெரும்பாலும் வல்வில் ஓரியின் சோதரி ஆவாள். ஏழாம்பத்துப் பதிகத்தில் ”ஒருதந்தை ஈன்றமகள் பொறையன் பெருந்தேவி” என வரும். பலரும் ஒருதந்தையை அடையாளங் காண்பதிற் சரவற்படுவர். பெரும் முயற்சிக்கு அப்புறம் அது விளங்கியது.

தமிழில் உல்>உரு>உரம் என்பது வலிமையைக் குறிக்கும். உரு>ஒரு>ஒருதல், வலியுறுதலைக் குறிக்கும். புல்வாய், புலி, உழை, மரை, கவரி, கராம், யானை, பன்றி, எருமை (தொல்.பொருள் 590, 591, 592) போன்ற வலியுள்ள ஆண் விலங்குகளின் பொதுப்பெயரை ஒருத்தல்/ஓரி என்று குறிப்பார். வலியுள்ள ஆண் மகனுக்கும் ஒருத்து, ஓரிப் பெயர்களை இட்டிருக்கிறார். அப்படியிடும் போது ஒருத்தின் அந்தை ஒருத்தந்தை, ஒரியின் அந்தை ஓரியந்தை என்று அமைவர். இரு சொற்களும் பிணைந்து ஒருதந்தை எனவுமாகலாம். சாத்து அந்தை = சாத்தந்தை, கொற்று அந்தை = கொற்றந்தை, பூது அந்தை = பூதந்தை என்ற பெயர்கள் அமைவதுபோல் இதைக் கொள்ளலாம். ஆக ஒருதந்தையின் மகளை அந்துவனுக்குக் கட்டி வைத்தால் கொல்லிமலை தம் உரிமைக்குள் வருமென்று சேரர் நினைத்தார். அது நடக்கவில்லை. பின்னால் மலையமான் திருமுடிக்காரியோடு கூட்டுச் சேர்ந்து ஓரியைத் தோற்கடித்துக் கொல்லியை இணைப்பார்.

”வேளிரைத் தொலைத்து நிலஞ் சேர்க்கும் அரசியலை” மூவேந்தர் தொடர்ந்து செய்தார். மணவுறவும், இல்லையேல் போர்ச்செயலும் தொடர்ந்து பயன் பட்டன. சங்ககால முடிவில் சிச்சிறிதாய் வேளிர் ஒழிக்கப்பட்டார். Eventually the segmentary states were unified into 3 large states. சங்க இலக்கியம் படிக்கையில் வரலாற்று வரிதியாய் இதையுணரலாம். பொ.உ.மு. 250 - 75 கால அளவில் இவ்வாட்சி மாற்றங்கள் நடந்தன. இனக்குழு வரலாற்றில் சங்க இலக்கியத்தின் உச்சகட்ட வெளிப்பாடு இக்காலத்திற்றான் எழுந்தது. இதற்குமுன் பொ.உ.மு. 600-250 வரையும், இதற்குப் பின் பொ.உ.மு.75 - பொ.உ.150 வரையும் சங்க இலக்கியம் விரவினும், உச்சகட்டம் நடுவிலிருந்த காலந் தான். இப்புரிதலை அடையாமற் செய்வதற்காகவே சங்க காலம் பொ.உ. 5, 6 ஆம் நூற்றாண்டென்று சிலர் குழப்பியடிக்கிறார். குறைத் தொன்மங் கொண்ட secular literature ஐ உணரவிடாது குழப்புவதுங் கூட ஒருவித நிகழ்ப்புத் (agenda) தான். இந்நிகழ்ப்பிற்குள் பல தமிழாசிரியரும் சிக்கிக் கொண்டார். நிகழ்ப்புக் கொண்டோர், மோரியர் பங்களிப்பையும் குறைத்தே பேசினார். குப்தரையே தூக்கிவைத்தார். தொல்லியல் செய்திகள் இவற்றைக் குப்புறத் தள்ளி மோரியர் பங்கை உணரவைத்தன. தமிழ்ர்பங்கும் எதிர் காலத்தில் வெளிப்படும். கீழடி, பொருந்தல், கொடுமணம், பட்டணம் போன்றவை தொடர்ந்தால்...... எனவே தான் இதுபோலும் ஆய்வுகள் நடைபெறாது தடுக்க ஒருசில நிகழ்ப்பாளர் முயல்கிறார். 

அடுத்துச் சிக்கற் பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதன் காலத்திற்கு வருவோம் இது பெரும்பாலும் பொ.உ.மு. 164-140 ஆகும். அந்துவனுக்கும், ஒருதந்தை மகளான பொறையன் பெருந் தேவிக்கும் பிறந்தவன். தவிர, நெடுஞ்சேரலாதன் மனைவியின் தங்கையான சிறிய பதுமன்தேவியை மணந்தவன். எனவே செல்வக்கடுங்கோ நெடுஞ்சேரலாதனுக்குத் தந்தைவழியில் ஒன்றுவிட்ட தம்பியும், மனைவிவழியில் சகலையும் ஆவான். குடவஞ்சியில் நெடுஞ்சேரலாதனுக்கு இளையனாய் இவன் வளர்கையில், கொங்குக்கருவூரின் மேல் காரவேலன் படையெடுப்பு நடந்திருக்கலாம். அப்படையெடுப்பு ஒருவித வஞ்சிப்போர். உழிஞைப்போரல்ல. வயதானபின் சேரலப் பூழிநாட்டிற் சிலகாலமிருந்த வாழியாதன், அந்துவன்சேரலுக்குத் துணையாய் கொங்குக்கருவூருக்கு நகர்ந்தான். வேள்பாரி இறந்த பிறகு கபிலர் வாழியாதனிடம் பரிசில் பெற்றிருக்கிறார். தமிழரல்லா இரு அரசரோடு உழிஞைப் போர் நடத்தி ஏராளமான பொருள்களை இவன் கொள்ளையடித்ததை

சிறியிலை உழிஞைத் தெரியல் சூடிக்
கொண்டி மிகைப்படத் தண்டமிழ் செறித்துக்
குன்றுநிலை தளர்க்கும் உருமிற் சீறி
ஒருமுற்று இருவர் ஓட்டிய ஒள்வாள்
செருமிகு தானை வெல்போ ரோயே

என்று ஏழாம்பத்தின் 3-ஆம் பாட்டில் கபிலர் சொல்வார். இவ்விரு அரசர் யார்? தெரியவில்லை. ஒருவேளை வாழியாதன் தந்தைகாலத்தில் கரூரைக் கார வேலன் சூறையாடியாதற்குப் பழிவாங்கும் ...முயற்சியை இது குறிக்குமோ? ஏதோ மருமம் இதில் புதைந்துள்ளது. மொத்தத்தில் வாழியாதன், அவன்மகன், பேரன் ஆகிய மூவருமே நெடுஞ்சேரலாதனையும், அவன்மகன் செங்குட்டுவனையும் பார்க்கக் குறைந்த காலமே ஆண்டார். ஆனாற் சேரர் குடிக்கு பெரிய அடித்தளம் போட்டார். இம்மூவரைப் பற்றிய விவரம் இலக்கியத்திலன்றி வேறு முறையிலும் உறுதி செய்யப்பட்டது புகளூர்க் கல்வெட்டின் மூலமாகும்.

மூதா அமண்ணன் யாற்றூர் செங்காயபன் உறைய
கோ ஆதன் சேல்லிரும்பொறை மகன்
பெருங்கடுங்கோன் மகன் [இ]ளங்
கடுங்கோ [இ]ளங்கோ ஆக அறுத்த கல்

என்று வரும் புகளூர்க் கல்வெட்டில் கோ ஆதன் சேல்லிரும்பொறை என்பது (செல்வக்கடுங்)கோ (வாழி)ஆதன் சே(ர)ல்லிரும்பொறையைக் குறித்தது. பெருங்கடுங்கோன் என்பது (தகடூர் எறிந்த) பெருஞ்சேரல் இரும்பொறையையும், இளங்கடுங்கோ என்பது (குடக்கோ) இளஞ்சேரல் இரும்பொறையையுங் குறிக்கும். ஆகச் சங்ககாலம் என்பது கற்பனை யில்லை. [“சங்க இலக்கியம் என்பது room போட்டு யோசித்து 7,8 பண்டிதர் 9 ஆம் நூற்றாண்டிற் செய்த பெரிய ஏமாற்று” என்பார் பேரா. ஹெர்மன் தீக்கன். (இதே வார்த்தைகள் இல்லெனினும் பொருள் இதே). அதேபோற்றான் “சிலம்பு  என்பது ஒரு கற்பனைப் புதினம். 6 ஆம் நூற்றாண்டில் room போட்டு யோசித்தார்” என்று திரு.நாகசாமியும், திரு. திரு.நா.கணேசனுஞ் சொல்கிறார்.

மொத்தத்தில் தமிழர் ஏமாற்றுப் பேர்வழிகள் என்று இவர் சொல்கிறார். தேமேயென்று நாமெல்லோருங் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.] “இளங் கடுங்கோ இளங்கோவாக அறுத்த கல்” என்பதால் கல்வெட்டுக் காலம் பொ.உ.மு. 122 க்கு அருகிலிருக்கும். ஆனால் திரு. ஐராவதம் மகாதேவனோ பொ.உ. 3 ஆம் நூற்றாண்டு என்று சொல்வார். பொதுவாகத் திரு.ஐராவதம் மகாதேவனுக்கும், மற்ற கல்வெட்டாய்வாளருக்கும் சங்ககாலக் கல்வெட்டுக்களில் 2.3 நூற்றாண்டுகள் வேறுபாடுண்டு. பொருந்தல் ஆய்விற்கு அப்புறம்தான் மகாதேவனிடம் சில மாற்றங்கள் தென்பட்டது. ஆனால் முன் சொன்ன நிகழ்ப்பாளரோ, மகாதேவனின் பழங்கூற்றையே பிடித்துத் தொங்குவர். அது அவர்களுக்கு ஏந்து இல்லையா?]

அடுத்து வருவது வாழியாதனின் மகன் தகடூரெறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை. இவன்காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 139-123. இவனே சங்க இலக்கியத்தின் பாலைபாடிய பெருங்கடுங்கோ என்பர். இவனும் தன் தாத்தன், தந்தையின் வழியொட்டி வேளிரை ஒடுக்குவதில் கவனஞ் செலுத்தினான். குறிப்பாக தகடூர் அதியமான்களைச் சாய்த்ததில் இவனுக்குப் பெரும் பங்குண்டு. அசோகன் காலத்தில் சேர, சோழ, பாண்டிய மூவேந்தரோடு, தக்கணப்பாதையின் காணிப்பரான (Supervisor) அதியமான்களைத் “சத்தியபுதோ” என்று குறித்திருப்பார். இத்தனைக்கும் அதியர் சேரரின் ஒன்றுவிட்ட பங்காளி. ஆயினும் தனியிருப்பை உறுதி செய்தவர். அதிகை ஊரிலிருந்து குடிபெயர்ந்ததால் அதியமான் எனப்பட்டார். சேரரின் கிளை என்பதால், சேரரின் கண்ணியும் தாரும் அதியருக்கும் அடையாளம் ஆகின. இவரே கரும்பைத் தமிழகத்துள் கொண்டுவந்தாரென்ற தொன்மமுமுண்டு.

மலையமான் திருமுடிக்காரியோடு போரிட்டு திருக்கோவிலூரை நெடுமான் அஞ்சி கைப்பற்றியதாலும், வேறேதோ காரணத்தாலும், அதியமானுக்கும் சேரருக்கும் முரணேற்பட்டு களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் அதியமான் நெடுமிடலோடு போரிட்டு அவனைச் சாய்ப்பான். இச்செய்தி நாலாம்பத்து 2 ஆம் பாடலில் பதியப்பெறும். பின் நெடுமிடலின் மகன் அஞ்சியோடும் சேரர்பகை தொடரும் போர்த் தளவாடங்கள் குறைந்ததால் கோட்டைக்குள் நெடுமானஞ்சி அடைந்து கிடந்து, பின் உழிஞைப்போர் நீண்டதால் வேறுவழியின்றி வெளிவந்து, வஞ்சிப்போராய் மாறும். பெருஞ் சேரல் இரும்பொறையுடன் போர் உடற்றி நெடுமானஞ்சி உயிர்துறப்பான். இச்செய்திகள் ”தகடூர்யாத்திரை”யில் பதிவு செய்யப்பட்டதாம். ஆனால் உ.வே.சா.விற்கு இந்நூல் கிடைக்கவில்லை, அங்கும் இங்குமாய் 56 பாடல்களே கிடைத்தன. அவற்றில் ஒருபாடல் நமக்குச் செய்தி பகர்கிறது.

கால வெகுளிப் பொறைய!கேள் நும்பியைச்
சாலுந் துணையுங் கழறிச் சிறியதோர்
கோல்கொண்டு மேற்சேரல் வேண்டா வதுகண்டாய்
நூல்கண்டார் கண்ட நெறிசு.

என்ற பாட்டின் மூலம் பெருஞ்சேரல் இரும்பொறைக்கு ஒரு தம்பி இருந்த செய்தி தெரியும். இதற்குச் சான்றாய், குட்டுவன் (=சிறியவன்) இரும்பொறை என்பவனையே இளஞ்சேரல் இரும்பொறையின் தந்தையாய் ஒன்பதாம் பத்தின் பதிகம் அடையாளங் காட்டும். மேலுள்ள கல்வெட்டு, தகடூர் யாத்திரைப் பாட்டு, ஒன்பதாம் பத்தின் பதிகம் ஆகிய மூன்றையும் பொருத்திப் பார்த்தால், இளஞ்சேரல் இரும்பொறை, பெருஞ்சேரல் இரும்பொறையின் தத்துப்புதல்வன் போலிருக்கிறது. அவனுடைய இயல்பான தந்தை குட்டுவன்சேரல் இரும்பொறையே.

இன்னொரு செய்தி சேரநாட்டின் தோல்வினைஞரான படுமரத்து மோசி கீரனார் பற்றியது. பெருஞ்சேரல் இரும்பொறையின் சிறப்பைக் கூறுவது. புறம் 50 இல் “மன்னா! அலங்காரஞ் செய்து உழிஞைப் போருக்குப் போய் வெற்றி பெற்று மண்ணுமங்கலஞ் செய்துவரும் முரசமெனில், நான் சேக்கையில் ஏறியிரேன். முரசம் பேணவந்த நான் மிகுந்த அசதியால் கட்டிலிலேறி அமர்ந்துவிட்டேன். உன் வீரர் அதைக் குற்றமாய்க் கொண்டு உன்னிடம் உரைத்திருக்கிறார், நீயோ பெருந்தன்மையோடு அதைப் பொருட்படுத்தாது களைப்புத் தீரக் கவரி வீசிச் சிறப்புச் செய்தாய். முரசைப் பேணும் செருமார் வேலை மட்டுமல்ல, நற்றமிழும் எனக்குத் தெரியுமென நீ பாராட்டினாய்! உன்செயல் புகழவேண்டியதே? - என்று சொல்வார். (மோசிகீரனாரென்ற என் கட்டுரைத்தொடரைப் படியுங்கள்.) . .

http://valavu.blogspot.in/2010/09/1.html
http://valavu.blogspot.in/2010/09/2.html
http://valavu.blogspot.in/2010/10/3.html

அடுத்தது குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை. இவன் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 122-107 ஆகும். குறைந்த காலமே இவன் ஆட்சி செய்திருக்கிறான். இவனே மருதம் பாடிய இளங்கடுங்கோ என்பர். குட்டுவஞ்சேரல் இரும்பொறைக்கும், மையூர்கிழானின் (இற்றை மைசூரைச் சேர்ந்த பெருஞ் செல்வந்தன். அரசனல்லன்) வேண்மகள் (வேளிர்மகள்) அந்துவஞ் செள்ளைக்கும் (செள்ளை இயற்பெயர், அந்துவன் பெரும்பாலும் மையூர்கிழானின் பெயராகலாம்.) பிறந்தவன். (வேந்தரென்பார், ”அரசர், மன்னர், வேந்தரில்” மட்டுமல்லாது கிழாரிலும் பெண்ணெடுப்பார் போலும்.) மையூர் கிழானான இவன் தாத்தனே இவன் அமைச்சனாய் இருந்துள்ளான். புரோகிதனை விடவும் உயர்வாய் இளஞ்சேரல் இரும்பொறை இவ்வமைச்சனைக் கருதினான்.

இந்த இரும்பொறை தம்மை எதிர்த்த இரு வேந்தரையும், விச்சிக் கோவையும் வீழ்த்தினான். இவன் காலத்தில் செங்குட்டுவன் தாய்மாமனான வேற்பல் தடக்கைப் பெருவிறற்கிள்ளி நெடுஞ்சேரலாதனோடு பொருதி இறந்ததன் பின், சோழ வளநாட்டில் பங்காளிச் சண்டை பெருகியது. உறையூர் மணிமுடிக்குப் பலரும் உரிமைகொண்டாடினார். அதிலொருவன் பொத்தியாண்ட பெருஞ்சோழன். (பெருஞ்சோழன் என்பது பொதுவான பெயர். விதப்பான பெயரன்று. பல உரையாசிரியரும், தமிழாசிரியரும் இவனைக் கோப்பெருஞ்சோழனோடு குழம்பித் தவிப்பதை என்னால் ஏற்க இயலாது. கோப்பெருஞ் சோழன் முற்றிலும் வேறுகாலத்தவன். இன்னொர் இடத்தில் விளக்குவேன்.) இளஞ்சேரல் இரும்பொறை பொத்திச் சோழனையும், வித்தைகளில் வல்லவனான பழையன் மாறனையும் (இவன் பாண்டியருக்குக் கீழிருந்த குறுநில மன்னனாகலாம்.) தோற்கடித்து ஏராளம் பொருள்கவர்ந்து பலருக்கும் பிரித்துக்கொடுத்து உதவினான். (இளஞ்சேரல் இரும்பொறைக்கு அப்புறம் சோழரிடையே நடந்த பங்காளிச் சண்டையை முற்றிலும் முடிவிற்குக் கொண்டு வந்தவன் சிலம்பின் படி செங்குட்டுவனே ஆவான்).

தவிரக் கொங்கு வஞ்சியில் சதுக்க பூதத்தை நிறுவிச் சாந்தி வேண்டி, இளஞ்சேரல் இரும்பொறை வழிபாடுகள் நடத்தினானாம்.  (சாந்திசெய்தல் என்பது குறிப்பிட்ட படையல்கள் மூலம் வழிபாடு செய்தலாகும். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மேல்சாந்தி, கீழ்சாந்தி என்ற சொற்கள் இன்றுங் குருக்கள்மாரைக் குறிப்பதை ஓர்ந்து பார்த்தால் சாந்தியின் பொருள் விளங்கும். இந்தச் சொல் பழந்தமிழில் குறிப்பிட்ட பூதப்பூசகருக்கு இருந்தது புரியும். குருக்கள் என்பதெல்லாம் பின்னால் வந்த சொற்கள்.) சதுக்க பூதமே பின்னாளில் பிள்ளையாராய் மாறிப் புரிந்துகொள்ளப்பட்டதென்று பேரா. ந.சுப்பிரமணியன் ”Tamil polity" என்ற நூலிற் சொல்வார். இந்நாளில் ஊருக்கொரு (ஏன், வீதிக்கொரு) பிள்ளையார் இருப்பது போல் அந்நாளில் ஊருக்கொரு சதுக்கபூதம் இருந்தது. சதுக்க பூத விவரிப்பு அப்படியே பிள்ளையார் விவரிப்புப் போலவே இருக்கும். சதுக்க பூதம் கி.பி. 4,5 ஆம் நூற்றாண்டுகளில் சிவனின் பிள்ளையாய் மாறிவிட்டது போலும்.
   . 
இனி அடுத்த பகுதியில் கடல்பிறக்கோட்டிய வெல்கெழு குட்டுவன் என்று முதலிலும் கங்கைப் பேர்யாற்றுக் கரைபோகிய செங்குட்டுவன் என்று பிற்காலத்திலும் பெயர் பெற்றவனைப் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

Thursday, September 12, 2019

சிலம்பு ஐயங்கள் - 20

முதலில் சேரர் குடியின் ஆதன் கிளையைப் பார்ப்போம். (செங்குட்டுவனைப் பின்னர் விரிவாய்ப் பார்ப்போம்.)

சங்ககாலச் சேரரில் சுள்ளியம் பேரியாற்றங் கரைக் குடவஞ்சியில் (கொடுங்களூர்) ஆதன்குடியும், அமராவதி (ஆன்பொருநை) ஆற்றங்கரைக் கொங்கு வஞ்சியில் (கரூர்) இரும்பொறைக் குடியும் ஆட்சிபுரிந்தார். குட வஞ்சி, கொங்கு வஞ்சியினுங் காலத்தால் முந்தையது. இக்கிளைகள் எப்பொழுது பிரிந்தன? தெரியாது. அதே பொழுது இப்பிரிவுகள் தமக்குள் இறுக்கங் கொண்டனவென்றுஞ் சொல்லமுடியாது. (இரும்பொறைப் பிரிவின் செல்வக் கடுங்கோவிற்கு வாழியாதன் என்ற பெயருமுண்டு.) நமக்குக் கிடைத்த பாடல்களின் படி ஆதன்களில் மூத்தவன் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன். (இவன் போக, மாவலியாதன்/ மகாபலி, பெருகலாதன்/ ப்ரஹ்லாதன் என்ற தொன்மத்தாரும் இவர் குடியினரே என்பார்.) 2 கிளையாரின் ஆட்சிக் காலங்கள் பதிற்றுப்பத்துப் பதிகங்களால் அறியலாம். ஒரு சேரன் காலத்தை ஏரணத்தோடு நிறுவினால், மற்றவர் நிலைப்புகளைப் பதிகச் செய்தியால் ஓரளவு சீர்ப்படுத்தலாம். பொ.உ.மு.80 இல் செங்குட்டுவன் வட படையெடுப்பு நடந்தது என்று கொண்டு மற்ற சேரரின் காலத்தைச் சிலம்புக் கால ஆய்வின் மூலம் நான் குறித்தேன்.

மணிகள், மாழைகள் (metals), மண்ணூறல்கள் (minerals) கிடைத்த கொங்குநாடு என்பது மூன்று வேந்தரும் தொடர்ந்து பந்தாடிய மேட்டு நிலமாகும். கொங்கு நாட்டை வேளிர்கள் ஆண்டு, மூவேந்தருக்கும் பொதுவாக இருந்தவரை ”த்ராமிர சங்காத்தம்” என்பது நீண்டகாலந் தொடர்ந்தது. என்றைக்குக் கொங்கு வேளிரிற் பெண்ணெடுத்து, மணவுறவு கொண்டாடிச் சேரர் கொங்கு வேளிரை தம்பக்கம் வளைத்தாரோ, அதன்பின் தமிழருள் உட்பகை பெரிதாகிப் போய் தமிழர் முன்னணி குலைந்தது. கலிங்கத்துக் காரவேலன் அதைப் பயன்படுத்திப் ”பித்துண்டா” எனுங் கொங்குக் கருவூரைக் கைப்பற்றினான். அந்துவஞ் சேரல் இரும்பொறை காலத்தில் இது பெரும்பாலும் நடந்திருக்கலாம். கொங்குக் கருவூரை மீண்டும் சேரர் பிடித்திருக்கிறார்.

காரவேலனின் பாகதக் கல்வெட்டும், மாமூலனாரின் அக.31 உம் ஆழ்ந்து பொருத்திப் பார்க்க வேண்டிய செய்திகளாகும். சங்கப்பாடல்களின் ஆய்வு ஆழப் படுகையில், சமகால ஆளுமைகளைப் பொருத்தி, உள்ளார்ந்த ஒத்திசைவை (internal consistency) நாடுவதால் நான்செய்த காலமதிப்பீடு கடந்த 7,8 ஆண்டுகளாய்ச் சிறிது சிறிதாய் மாறிக் கொண்டேயுள்ளது. பதிற்றுப் பத்தில் இல்லாத சேரர் காலத்தை இன்னும் நான் பொருத்தவில்லை. கீழ்வரும் காலப்பிரிவுகளை ஒருவித முன்னீடுகளென்றே சொல்லலாம். எதிர்காலத்திற் சான்றுகள் வலுப்படும்போது மேலும் திருத்தங்கள் நடக்கலாம். It has still not reached a definitive stage.

வானவரம்பன் பெருஞ்சோற்றுதியன் சேரலாதனின் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 190-153 ஆகும். இவனை முரஞ்சியூர் முடிநாகராயர் புறம் 2 இல் பாடுவார். இவன் காலத்தில் அசோக மோரியனின் தாக்கம் சேரர் மேல் தொடங்கி விட்டது. கூடவே சுங்கர் மேல் சேரருக்குக் கடுப்பிருந்தது நாட்பட்ட கதையாகும். (ஐவரான) சுங்கருக்கும் நூற்றுவர் கன்னருக்கும் இடைநடந்த வஞ்சி/தும்பைப் போரிற் கன்னரின் பக்கம் சேரரிருந்தார். உதியன்சேரல் காலத்திருந்தே 2,3 தலைமுறைகள் இவ்வுறவு தொடர்ந்திருக்கலாம். சேரருக்கும் நூற்றுவர் கன்னருக்கும் இடையிருந்த நல்லுறவு சிலம்பாற் புரியும். என் ”புறநானூறு - 2 ஆம் பாட்டு” என்ற கட்டுரைத் தொடரையும் படியுங்கள்.

http://valavu.blogspot.in/2010/08/2-1.htmlம்
http://valavu.blogspot.in/2010/08/2-2.html
http://valavu.blogspot.in/2010/08/2-3.html
http://valavu.blogspot.in/2010/08/2-4.html
http://valavu.blogspot.in/2010/08/2-5.html

இப்பாட்டில் வரும் ஈரைம்பதின்மர் என்பார் நூற்றுவர் கன்னரே. பலருஞ் சொல்வதுபோல் பாரதப்போரின் கௌரவரல்ல. புறம் 2 இல் வருஞ்செய்தியை கௌரவ - பாண்டவப் போராய்ச் சித்தரிப்பதை நான் ஒப்புவதில்லை. அப்படிச் சொல்வது தேவையற்ற ”பௌராணிகப்” பார்வை. காலப்பொருத்து இன்றிக் கௌரவர்க்குச் சேரர் பெருஞ்சோற்று மிகுபதங் கொடுத்தாரென்பது விழுமிய  வழியாகவும் பொருந்தவில்லை. ”நண்பருக்கானது தமக்கானது” போல் கன்னரின் தும்பைப் போர்த் தோல்விகளைச் சேரர் நினைத்து, போரில் இறந்தவருக்காகச் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்திருக்கலாம். கன்னரின் முன்னோருக்குப் படையலெடுத்து, ”சேரரும் அவரும் ஒரே குலம் போல்” என ஊருக்குணர்த்திச் சேரன் நட்பும்சொந்தமுங் கொண்டாடுகிறான். “சேரனே! கன்னருக்காக நீ பரிந்து முன்வந்து பெருஞ்சோற்று மிகுபதம் கொடுத்தாயே? அவன் குலமும், உன் குலமும் ஒன்றெனப் பறைந்தாயே? உன் சிறப்பை என்னவென்போம்?” என்று முரஞ்சியூர் முடிநாகர் வியக்கிறார்.

உதியன் சேரலாதன் பொதினி ஆவியர்குலத்து வேண்மாள் நல்லினியை மணஞ்செய்தான். (இற்றைப் பழனியே பழம்பொதினி. அதன் அடிவாரத்தில் ஆவினன் குடியுள்ளது.) ஆவியர் குடியோடு சேரர் குடியினர் கொடிவழி தோறும் மணத்தொடர்பு கொண்டார். உதியனின் முதல்மகன் இமைய வரம்பன் நெடுஞ்சேரலாதனாவான். இவனைக் குடக்கோ நெடுஞ்சேரலாதன் என்றுஞ் சொல்வர். (குடக்கோ என்று பெயர்வைத்துக் கொண்டு, கொங்கு வஞ்சியில் இவனாண்டான் என்பது நம்பக் கூடியதாய் இல்லை.) இவன் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 166 - 110. இவனுக்கு 2 மனைவியர். தன் தாய் நல்லினியின் சோதரனான வேளாவிக் கோமானின் (இவன் மன்னனில்லை; வெறுங் கோமான்; கூட்டத் தலைவன்.) முத்த மகள் பதுமன் தேவியை முதல் மனைவியாகப் பெற்றான்.

இவள் வழி களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல். ஆடுகோட்பாட்டுச் சேரலாதனென இருவர் பிறந்தார். அடுத்தவள் ஞாயிற்றுச் சோழன் மகள் நற்சோணை. (=சோணாட்டுக்காரி; பொன் போன்றவள். சோணையெனும் பொன்னாறு மகதத்திலும், பொன்னி சோழநாட்டிலும் ஓடின. சோழருக்கும் பொன்னிறத்திற்குமான இனக்குழுத்தொடர்பை நாம் இன்னும் உணர்ந்தோம் இல்லை. அகம் 6-இன் 3,4 ஆம் அடிகளைக் காணின், ஐயை என்பது இவளுக்கு விதுப்பெயராயும், நற்சோணை என்பது பொதுப்பெயராயும் ஆகலாம்.) இவளுக்குப் பிறந்த செங்குட்டுவன், முந்தை உடன்பிறந்தோர் இருவருக்கும் இடைப்பட்ட புதல்வன். இளங்கோவின் இருப்பு சிலம்பின் வரந்தருகாதை 171-183 வரிகளிலன்றி வேறெங்கும் தென்பட வில்லை. அக்காதை இடைச் செருகல் என நான் ஐயுறுவதால் இளங்கோ என்பார் செங்குட்டுவன் தம்பியென என்னால் நம்ப முடியவில்லை. (நான் அப்படிக் கொள்ளவும் இல்லை.)

”வடவர் உட்கும் வான்தோய் வெல்கொடிக்
குடவர் கோமான் நெடுஞ்சேர லாதற்குச்
சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன்”

என்று பதிற்றுப்பத்தில் 5 ஆம் பத்தின் பதிகம் செங்குட்டுவனைக் குறிக்கும். இந்த மணக்கிள்ளி யார்? - என்பது அடுத்த கேள்வி. மருவல்= தழுவல், சேர்தல். (”மருவுகை” இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் -ஆங்கிலத்தில் marriage- போயிருக்கிறது.) மருமகன்/மகள் தழுவிச் சேர்த்துக்கொண்ட மகனும் மகளுமாவர். மருவற் பொருளில் இன்னொரு சொல் மணத்தலாகும். ஒரு குடும்பம் இன்னொன்றைத் தழுவி உறவுகொளும் நிகழ்வே மணமாகும். (அகம் 86-இன்படி மண்ணுதலெனும் மஞ்சள்நீராடலும். பூ,நெல் சொரிவதும், வாழ்த்தலுமே மணமாகும்.) மணமகனும் மணமகளும் பந்தங் கொண்ட மகனும் மகளுமாவர். மணமகன்/மணமகள் வீடு, மணவீடு/மருவீடு ஆகும். (சிவகங்கைப் பக்கம் மருவீடு என்ற சொல்லுண்டு.) மணக்கிள்ளியின் பொருள் ”சம்பந்தங் கொண்ட கிள்ளி” என்பது தான். மணக்கிள்ளியெனும் உறவுப் பெயரைப் பதிகம் பாடியோர் காரணம் புரியாது இயற்பெயர் ஆக்கினார். பதிகத்திற்கு புத்துரை எழுதியோரும் இதை உணரவில்லை. சோழன் மணக்கிள்ளி(யின் வழி) நெடுஞ்சேரலாதற்கு ஈன்ற மகன்” என்றே மேலேயுள்ள அடியைப் புரிந்துகொள்ளவேண்டும்.

சேரரின் மணவீட்டைச் சேர்ந்தவன், ஐயை/நற்சோணையின் தந்தை, உறையூர்ச் சோழன் தித்தனாவான். யா என்பது இருளைக் குறிக்கும் இற்றல்= போக்குதல்; யாயிற்றன் = இருளை இற்றுகிறவன்/ போக்குகிறவன். யா>ஞா> நா என்ற திரிவில் யாயிற்றன் என்பவன் ஞாயிற்றனாவான். யாயிற்றன்> ஆயிற்றன்>ஆதிற்றன்>ஆதித்தன்>ஆதித்த என்பது வடபுல மொழிகளில் சூரியனைக் குறித்தது. தமிழில் ஆதித்தனின் முதற்குறை தித்தன் ஆகும். முதற்குறைப் பெயர்கள் சங்ககாலத் தமிழிற் பரவலாயுண்டு. தித்தனே பட்டமேறும் போது முடித்தலைக் கோப்பெருநற் கிள்ளியெனும் பெயர் பெறுவான். புறம் 13 இல் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், கொங்குக் கருவூரில் இவன் யானை மதங்கொண்டு தடுமாறியதை அந்துவஞ் சேரல் இரும்பொறைக்கு அடையாளங் காட்டுவார். செங்குட்டுவன் பாட்டனைத் திகழொளி ஞாயிற்றுச் சோழனென்று சிலம்பு புகலும். சமகால அரசரைப் பார்த்தாற் முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளி எனும் தித்தனே, செங்குட்டுவனின் தாத்தனான ஞாயிற்றுச் சோழனாவான்.

அதே பொழுது தித்தனின் மகன் பட்டஞ் சூடுமுன் வெளியன் எனப்படுவான் ஏதோவொரு காரணத்தால் தித்தனுக்கும் வெளியனுக்கும் மனம் வேறாகி உறையூரை விட்டு விலகித் தந்தையின் வள நாட்டுத் துறையான கோடிக் கரையில் வீர விளையாட்டு, இசை, நடனக் கூத்துகளென வெளியன் சில காலங் கழிப்பான். தித்தனுக்குப் பின், வேற்பல் தடக்கை பெருவிறற்கிள்ளி (பல்வேறு தடங்களில்/ வழிகளில் வேல்வீசுந் திறன்கொண்ட கிள்ளி) என்ற பெயரில், வெளியன் உறையூரை ஆண்டான். நெடுஞ்சேரலாதனின் மைத்துனனும் செங்குட்டுவனின் தாய்மாமனும் ஆனவன்  தித்தன்வெளியன் எனும் வேற்பல்தடக்கை பெருவிரற்கிள்ளியே ஆவான். சேரலாதனும் வெளியனும் ஒருவருக்கொருவர் முரணிச் சண்டையிட்டு போர்க்களத்தில் இறந்ததைக் கழாத்தலையார் பாடினார் (புறம் 62, 368). புறம் 62 இல் சொல்லப் படும் போர் மச்சான்-மைத்துனன் இடையே ஏற்பட்டதாகும். பெருவிறற் கிள்ளிக்குப் பின் வளநாடு தடுமாறிப் பங்காளிச்சண்டைகள் கூடி செங்குட்டுவனே அதைத்தீர்த்து 9 அரசருடன் போரிட்டு தன் மாமன்மகனைப் (இவன் பெரும்பாலும் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் ஆகலாம்) பட்டமேற்றுவான். வஞ்சிக்காண்ட வழி இவ்வளவு பொருத்தங்களை உணர்ந்த பிறகாவது, சிலம்பைச் சங்கம் மருவிய காலமென்றும், 6 ஆம் நூற்றாண்டென்றுங் குழம்பி ஒழிவதை நிறுத்தலாம்.

பல்யானைச் செல்கெழு குட்டுவனின் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 156 - 132. இவனே இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் தம்பி. இவன் வேந்தன் ஆகாததால், வானவரம்பன் எனும் பட்டங் கொள்ளாதவன். அண்ணன் நெடுஞ்சேரலாதனே நெடுங்காலம் ஆண்டான். அண்ணன் தம்பிக்கிடையே மிகுந்த அகவை வேறுபாட்டிற்குக் காரணமில்லை. 25 ஆண்டு காலம் தம்பி இருந்ததால் அண்ணன் ஆட்சி நடந்த போதே தம்பி இறந்திருக்கலாம். பதிற்றுப்பத்து தவிர வேறெங்கினும் இவன்செய்திகள் குறைவு. பல்யானைச் செல்கெழு குட்டுவனுக்கு அப்புறம் சேர இளையரே ஆட்சியைக் கவனித்துக் கொண்டிருக்கலாம். (பொதுவாக வேந்தப் பொறுப்புக் கொண்டவரே நீண்ட காலம் ஆண்டார். அம்முறையில் நெடுஞ்சேரலாதனும், செங்குட்டுவனும், ஆடுகோட்பாட்டுச் சேரலாதனுமே இயல்முறையில் வேந்தனாகிறார். பல்யானைச் செல்கெழு குட்டுவனும், களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலும் நீட்சிமுறையில் ஒன்றாகி, நார்முடிச்சேரல் மீக்குறைந்த காலமே வேந்தன் ஆகியுள்ளான்.. 

அடுத்தது களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல். இவன் காலம் பொ.உ.மு. 131-107. இவனுடைய இயற்பெயர் தெரியவில்லை. “களங்காய்க்கண்ணி நார்முடி” என்பது ஒருவகை முடியைக் குறிக்கும். நெடுஞ்சேரலாதன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் இறந்த பின்னால், மூத்தாள் மகனுக்கும், இளையாள் மகனுக்கும் சமகாலத்தில் நெடுஞ்சேரலாதன் இளவரசுப் பட்டஞ் சூட்டியிருக்க வேண்டும். [இங்கே தமிழகப் பட்டஞ்சூட்டு முறை பற்றிச் சொல்லவேண்டும், முடிசூட்டல் என்பது இளவரசுப் பட்டத்திற்கு மட்டுமே. குறிப்பிட்டவன் எப்போது  அரசனானான் என்பது தமிழ் முறைப்படி தெரிய வராது. அரசன் இறந்த பின்னால் இளவரசரில் மூத்தவன் ஆட்சிக்கு வருவான். அதற்கு எந்தப் பெரிய கொண்டாட்டமும் இராது. (Ruling is a continuous affair.) இதனால் ஆட்சிப் பருவங்கள் என்று கூறப்படுபவற்றில் overlap என்பது இருந்துகொண்டே யிருக்கும். நான் சொல்வதைக் கூர்ந்து ஓர்ந்துபார்த்து அறியுங்கள்.]  இந்த நாட்பட்ட பட்டஞ் சூடலால், நெடுஞ்சேரலாதனுக்கு அப்புறம் நார்முடிச்சேரலே வானவரம்பன் என்ற பட்டஞ்சூடி அரசுகட்டில் ஏறியிருக்கலாம். இவனுக்கு இன்னொரு பெயரும் இருந்திருக்கலாமெனவும் ஊகிக்கிறோம். 

புறம் 62 ஆம் பாட்டில் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் வளநாட்டு வேற்பல் தடக்கைப் பெருவிறற் கிள்ளியும், பொருதுகையில் இருவரும் இறந்து பட்டதாய்க் கழாத்தலையார் சொல்வார். அதேபொழுது புறம் 65 ஆம் பாட்டில் நாகநாட்டுக் கரிகால் வளவன் [பெரும்பாலும் இரண்டாம் கரிகாலன். முதற் கரிகாலன் கி.மு.462 இல் மகதத்தின்மேற் படையெடுத்ததைச் சிலம்பால் அறிவோம். இந்த முதற் கரிகாலனையும், அடுத்தவனையும் தமிழாசிரியர் பலரும் குழம்பித் தடுமாறுவார்] வெற்றி பெற்றதையும், பெருஞ்சேரலாதன் வடக்கிருந்ததையும் சொல்வார். எனவே நெடுஞ்சேரலாதன் என்பான் வேறு, பெருஞ்சேரலாதன் வேறென்று புரியும். ஆழவாய்ந்தால் 62 ஆம் பாவில் இறந்ததாய் விவரிக்கப்படுவோன் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்பது விளங்கும். அப்படியெனில் 65 ஆம் பாட்டில் வரும் பெருஞ்சேரலாதன் என்பவன் யார்? .

நார்முடிச்சேரல் வாகைப்பெருந்துறையில் நன்னனை வெற்றிகொண்டது பதிற்றுப்பத்தில் ஒரு பெருஞ்செயலாய்ச் சொல்லப்பெறும். ”வாகைப் பெருந்துறைச் சேரலாதன்” என்ற கூற்றே, ”பெருஞ் சேரலாதன்” பெயருக்கு விளிகொடுத்ததாகலாம். அதை வைத்துப் பார்த்தால், கி.மு.131-107 என்ற இடைப்பகுதியில் அண்ணனைப் பெருஞ்சேரலாதனென்றும் நடுத்தம்பியைக் குட்டுவச் (=சிறிய) சேரலாதன் என்றும், கடைத் தம்பியை ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்றும் அழைத்திருக்கலாம். பெரும்பாலும் நார்முடிச்சேரலே பெருஞ்சேரலாதனாக வாய்ப்புண்டு. இவ்விளக்கத்தோடு புறநானூற்றில் சோழன் கரிகாற் பெருவளத்தானை வெண்ணிக்குயத்தியார் பாடிய 66ஆம் பாட்டையும் பார்க்கலாம். இப்பாட்டில் கரிகால் வளவன் பெயர் வெளிப்பட வரும். பெருஞ்சேரலாதனைப் பெயர் சொல்லாமற் சுட்டும் குறிப்பு மட்டுமே வரும். 

செங்குட்டுவனுக்குமுன் அவன்தம்பி வானவரம்பன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைக் காண்போம். ஆடுகோட்பாட்டிற்கு பதிற்றுப்பத்தின் பதிகம் ”நெடுந்தொலைவுள்ள தொண்டகக் காட்டினுள் பகைவர் கொண்டுபோன வருடைக் (ஆடு) கூட்டத்தைப் பெருமுயற்சியால் தொண்டித்துறைக்குத் திரும்பக் கொண்டு வந்தவனெ”னப் பொருள் சொல்லும். பழங்காலப் போர்களில் ஆக்களைக் கவர்வதை வெட்சித்திணையென்றும், அவற்றை மீட்டு வருவதைக் கரந்தைத்திணையென்றும் சொல்வர். இப்போரை ஆகோட் பூசலென்றுஞ் சொல்வதுண்டு. அதேபோல் ஆடுகோட் பூசலுமுண்டு. தொல்காப்பியர் கரந்தையை வெட்சிக்குள் ஒரு பகுதியாகவே சொல்வார். அதுபோல் ஆடுகோள் மீட்பும் ஆடுகோட்பாட்டின் பகுதியாய்க் கொண்டால் இச்சேரலாதனின் சிறப்புப் புரியும்.

பெரும்பாலும் இவன் காலம் பொ.உ.மு. 106 - 69 ஆகும். செங்குட்டுவன் கங்கைக்கரை போகிய செயல் பதிற்றுப்பத்தின் 4 ஆம் பத்தில் வாராது பதிகத்தில் மட்டுமே வரும். எனவே கண்ணகிக்குக் கல்லெடுத்தது குட்டுவன் கடைசிக்காலத்தில் நடந்திருக்கலாம். செங்குட்டுவனுக்கப்புறம் ஆடுகோட் பாட்டுச் சேரலாதன் பட்டத்திற்கு வருவான். அதுவுமின்றி வானவரம்பன் என்ற பட்டமும் சூடுவான் அவன் வேந்தனானதற்கு அதுவே அடையாளம். அண்ணனுக்கப்புறம் பட்டத்திற்கு வந்ததால் பெரும்பாலும் சிலப்பதிகாரம் இவனுடைய அரசவையில் தான் அரங்கேறியிருக்க வாய்ப்புண்டு. செங்குட்டுவனின் மகன் குட்டுவன் சேரல் (இயற்பெயர் தெரியாது) பற்றிய விவரம் தெரியவில்லை.

அன்புடன்,
இராம.கி.