Friday, January 31, 2020

பாசண்டச் சாத்தன் - 22

மெலனின் என்ற நிறப்படிகம் உடலின் மேல்தோல் நீரில் எவ்வளவு கரைகிறது / தேங்குகிறது  என்பதைப் பொறுத்தே  மாந்தநிறம் வேறுபடுகிறது. மெலனின் வெகுவாகத் தோல்நீரில் கரைந்தால்  செம்மை, பூங்கை (pink), ஏன் வெள்ளையாகவும் தோலமையும். மாறாகத் தோல்நீர் குறைந்து மெலனின் படிவமாகத் தேங்கினால் தோல்நிறம் பழுப்பு, அரக்கு, புகர் (brown), ஏன் கருப்பாயும் அமையும்.  யானையிலும் இப்படியே. மெலனின் போன்றது யானையின் தோல்நீரில் கரைந்தால், சாம்பல், பூங்கை நிறத்தில் அது அமையும். இல்லெனில் கருத்துக்  காணும். வெள்ளானை (white/ albino elephant) என்பது அரியவகை யானை ஆனால் தனித்த விதப்புயிரி (species) அல்ல.  வெள்ளானை= வெளிறிய யானை.  ஓவியங்களில்  சிந்து வெள்ளையாய்க் (snow white) நிறங் காட்டினும்,  மெய்யாய், அது சொவ்வும் செம் புகர் நிறமே (soft reddish-brown).அதே யானையை ஈரத்தோடு காண்கையில் பூங்கையாயும் தோற்றும்.

யானைத்தோலில் நீர்ச்சத்து கூடுவது குறித்தே ஈர்+ஆவது+அம் = ஈராவதம் என்ற பெயர் ஏற்பட்டது. இதைச் சங்கதம் கடன்வாங்கி ஐராவதமாக்கும். தமிழ்த்தோற்றம் அறியாத நம்மவர் தடுமாறுவர். பர்மாவின் பேராறான ஐராவதியும் ஈர்>ஞீர்>நீர் என்ற பொருள்வழியே பெயர்பெற்றது. தேவரும் அசுரரும் பாற்கடலைக் கடைகையில் இந்த யானை வெளிப்பட்டதாயும், பறக்கும் யானை என்றும் கற்பனைக் கதை சொல்வர். உண்மையில் ஈரத்தில் கரையும் நிறப்பொருளால் பெற்ற பெயர் இது. இக்கட்டுரையின்  13 ஆம் பகுதியில் ஸெச்சநாகா எனும் வெளிறிய யானையை  பிம்பிசாரன் வைத்திருந்ததையும், தன் இளையமகனுக்கு யானை  கொடுத்ததையும், மூத்தமகன் அசாதசத்து அதற்கு ஆசைப்பட்டதையும்,  அசாதசத்துவுக்கும் அவன் தாய்வழித் தாத்தனுக்கும் இடையே போர் ஏற்பட்டதையும், மகதம் பேரரசாய் உருவான கதையையும் முன்பார்த்தோம்.  ஆக வெள்ளானை, தொன்மத்தில் மட்டுமின்றி இந்திய வரலாற்றிலும் பெரும்பங்கு கொண்டுள்ளது.


இன்றுங்கூட பர்மா, தாய்லந்து, கம்போடியா போன்றவற்றில் வெள்ளானை வைத்திருப்பது அரச/அதிகாரக் குடும்பங்களின் வெளிப்பாடாகும். (பர்மாவின் இற்றைத் தலைநகரான நேப்பிடௌவில்    (Nay-pyi-daw) நாங்கள் நேரடியாய்ப் பார்த்த யானையின் படத்தை  இங்கு இணைத்துள்ளேன். வெள்ளானை என்பது அந்தக் காலத்தில் நம்மூரில் இருந்ததா என்பது தெரியாது. ஆனால் கட்டாயம் வடக்கே இருந்திருக்கிறது. வெள்ளானையின் இந்த இயலிருப்புச் செய்தி சேக்கிழாருக்குத் தெரியாதா, என்ன? (வடக்கின் கவரிமா வள்ளுவருக்குத் தெரிந்ததே?) பின், வெள்ளானை பறக்குமெனும் தொன்மக் கதையைச் சேக்கிழார் ஏன் சொன்னார்? ஒருவேளை சுவையான கற்பனை என்று சொன்னாரோ? தெரியவில்லை. வெள்ளானைச் சருக்கத்தில் சேரமான் குதிரை பறந்ததும், “வாயு வேகம், மனோவேகம்” போல் ஒரு கற்பனையே. ஓர் இலக்கிய ஆசிரியருக்கு அப்படிச் சொல்ல உரிமையுண்டு தான். பெரும்பாலும் சிவப்பெருமானரிடம் அக்கதையை சேக்கிழார் கேட்டிருக்கலாம். அதைச் சொல்வது தம் கதைநாயகனுக்கு மேலும் புகழ் சேர்க்குமெனப் பெரியபுராணத்தில் சேர்த்தார் போலும். சரி, சேரமான் செய்த திருக்கயிலை ஞான உலாவிற்குள் வருவோம்.

உலா எனும் சிற்றிலக்கியத்தில் இறைவனோ, அரசனோ, தலைவனோ யானை, குதிரை, தேர் போன்றவற்றில் நகரைச் சுற்றிவரும்போது பேதை (5 முதல் 8 வயது), பெதும்பை (9 - 10), மங்கை (11 - 14), மடந்தை (15 - 18), அரிவை (19 - 24), தெரிவை (25 - 29), பேரிளம்பெண் (30 வயதுக்கு மேல்) எனும் வெவ்வேறு பெண்கள் தம் வயதுக்கேற்ப அவனை விரும்பி (கைக்கிளை எனும் ஒருதலைக் காமங் கொள்வதை) விவரிப்பதாய் கலிவெண்பா நடையில் உலா இலக்கியம் நகரும். கயிலாய நகரில் இறைவன் தேரில் செல்லும் இந்த ஆதியுலாவை படித்தால் இது இறைவனைப் போற்றுகின்ற, உலா விதப்பை விவரிக்கின்ற, துதிப்பாடலாகவே தெரிகிறது.  இதை எப்படிச் சமய சாத்திரமாகக் கொண்டார்? எப்படித் திருப்பிடவூரோடு தொடர்புற்றது? - என்பதும் விளங்கவில்லை. ஏனெனில் சுந்தரரும், சேரமான் பெருமாள் ஆகிய இருவருமே பிடவூருக்கு வரவேயில்லை. எனக்குத் தோன்றுகின்ற ஒரே குறிப்பு:

சுந்தர நாயனார் ஒரு சிவப்பெருமானர். பிடவூர் சிவப் பெருமானராலான பிரமதேயம். இங்கு குடியிருந்தோர் சோழப் பேரரரசில் பெரும்பதவிகளை வகித்தார். பிடவூர்க் கல்வெட்டுகளை ஆழமாய்ப் படியுங்கள். அவற்றின் ஆள்பெயர்களை இங்கு எழுதி மாளாது. ஆனால் அந்தப் பட்டியலிலுள்ள பெரும்பாலோர் பெரும்பதவி கொண்டவராயும், சிலர் பிரம்மராயராகவும், சிலர் சாமந்தராகவும் கூடத் தெரிகிறார். எனவே பிடவூர்க் குடியிருப்பு ஒரு சாமான்யப் பிரமதேயம் அல்ல. சோழநாட்டு முதலமைச்சர் சேக்கிழாரையுங் கூடக் கலக்கியடிக்கும் விளவுத்திறன் (influence) கொண்டவர் தங்கிய பிரம தேயம். இப்படியொரு பிரமதேயத்தார் தமக்கென ஓர் ஓவம் (Icon) கைக் கொள்வர். அந்த ஓவமே சுந்தரர்.  பிடவூர் வைப்புத்தலமாயும் அப்பராலும், சுந்தரராலும் குறிப்பிடப்படுகிறது.

உள்ளூரில் முந்நாள் பெருமகனான சாத்தன் ஒரு நூல் செய்ததையும், தமக்குத் தெரிந்த சுந்தரர் கதையில், சுந்தரரோடு சேரமான் பெருமாள் கயிலாயம் போனதையும், அங்கு ஏழிசைப் பதிகமும், திருக்கயிலாய ஞான உலா பாடப்பட்டதையும் சேர்த்து பொதுப்புத்தி பிணைத்திருக்கிறது. பின்னால் சில ஆண்டுகள் கழித்து இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் சேக்கிழாருக்குப் பிணைத்துப் பெருகிய  கதை சொல்லப்பட்டிருக்கிறது. அவர் அதன் சுவைகருதித் தன் புராணத்தின் முடிவுச் சருக்கமாய் இதை வடிக்கிறார்.

”சேரர் காவலர் விண்ணப்பம் செய்த அத்திரு உலாப்புறம் அன்று
சாரல் வெள்ளியங் கயிலையில் கேட்ட மாசாத்தனார் தரித்து இந்தப்
பாரில் வேதியர் திருப்*பிடவூர்*தனில் வெளிப்படப் பகர்ந்து எங்கும்
நார வேலை சூழ் உலகினில் விளங்கிட நாட்டினர் நலத்தாலே”

என்றபாடல் எப்படிப் பார்க்கினும், உண்மைச் செய்தியல்ல. ஆனால் முத்தாய்ப்பான செய்தி. சாத்தனின் பழைய நூல் அரங்கேற்றம் மறந்துபோன நிலையில் இங்கே ஒரு புதுநூலை அவன் வெளிப்படுத்தினான் என்பதன் மூலம் அரங்கேற்றம் என்ற சொல்லைத் தொடர்வதற்கு வாய்ப்பும் ஆயிற்று. சுந்தரர் கதையைத் தங்கள் ஊருக்கு இழுத்தது மாதிரியும் ஆயிற்று. தெற்றிக்கு அரங்கமென்ற விதப்புப் பொருளும் இதன்மூலம் கொடுக்கலாம். பொதுப்புத்தி அதை மறுக்காது ஏற்றுக்கொள்ளும், நாளாவட்டத்தில் சிறு சுவடி வைத்தது போல் ஐயனாருக்கு ஒரு புதுப்படிமமும் வைக்கலாம்.  பழம்படிமம் பிரமனாய் உருக்கொள்ளலாம். தவிர, பிடவூருக்குச் சாத்தனும் கொடுங்களுரூக்கு வாரணனும் உரைகாரர் மாதிரிப்போய் நூல். பதிகத்தை வெளிப்படுத்தியதாய்ச் சொன்னது ஓர் அருமையான இலக்கிய உத்தி.

இத்தொடரில் சாத்தன் யாரெனப் பார்த்தோம். அவன், புத்தனும் மகாவீரரும் அல்லனெனப் பார்த்தோம். பெரும்பாலும் அவன் அறப்பெயர்ச் சாத்தனே எனப் பார்த்தோம். மற்கலிக்கும் ஐயனாருக்கும் தொடர்பு சொல்லிக்  கோசாளர், மற்கலி என்ற பெயர்களின் பின்புலங்களைப் பார்த்தோம்.  மற்கலி துறவியாய் இருந்திருக்கத் தேவையில்லை என்றும் பார்த்தோம். 

பூரணை, பொற்கலை என்ற துணைகளின் பின்புலங்கள்,
பாசம், பாசண்டம், செண்டு ஆகியவற்றின் உள்ளடக்கம்,
ஐயனார்கோயில் உறுப்புகள் (குறிப்பாக யானை, குதிரை, கய-இலக்குமிக்  குறியீடுகள்)

ஆகியவற்றையும் பார்த்தோம்.  மற்கலி ஆதிநாதரின் மகன் என்று உறவு கற்பித்தது, அது ஐயனார், சிவனின் மகன் என்று பொதுபுத்தியில் ஏறியது ஆகியவற்றையும் பார்த்தோம். பிடவூரென்ற ஊரின் பெயர் விளக்கத்தையும்,  பிடவூர்க்கோயில் விவரங்களையும், கல்வெட்டுகளையும் பார்த்தோம். பிடவூர் ஐயனாரைத் திருவேட்பந் தெற்றியுடையார், திருமண் தவஞ்செய்தார் என்றும் அழைத்ததைக்  கல்வெட்டுகளின் வழி அறிந்தோம். பிடவூர் ஐயனார் கோயிலின் படிமங்கள் மாறியிருக்கலாம் என்பதையும், குறிப்பாய் அங்குள்ள பிரமன் படிமம் பெரும்பாலும் பழமையான ஐயனாராகலாம் என்பதையும் கோடு காட்டினேன். பிடவூர், குக்குடமாநகர் (=உறையூர்), சமண்தண்டம் ஆகிய ஊர்ச்செய்திகளையும் அறிந்தோம்.  இத்தொடரின் முடிவிற்கு நாம் இப்போது வந்து விட்டோம். இன்னும் 96 வகைப் பாசண்டம், கதிர் ஒன்பது என்பவற்றோடு தொடர்புடைய அற்றுவிகக் கொள்கைகளை நான் தொடவேயில்லை. அது மிகப்பெரிய வேலை. வேறுதொடரில் பார்ப்போம்.

உங்களுக்கு ஏதேனும் ஐயங்கள் இருந்தால் கேளுங்கள். என்னால் இயன்றதை மறுமொழிப்பேன்.

அன்புடன்,
இராம.கி.

2 comments:

Prasath said...

ஐயா,மிக விளக்கமான தெள்ளிய கட்டுரை. ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்துக் காத்திருந்து படித்தேன். மிக்க நன்றி.
எனக்கு ஒரே ஒரு மாறுபட்ட சிந்தனை, பூரணை மற்றும் பொற்கலை குறித்து... ஓக‍க் கலையில் இடகலை, பிங்கலை (இடது மற்றும் வலது சுவாசம்) இவற்றை மதிக்கலை, ரவிக்கலை என்றும் குறிப்பர். இங்கு வரும் பூரணை மதிக்கலையையும், பொற்கலை ரவிக்கலையையும் குறிப்பால் உணர்த்துவதாகவே எனக்குத் தோன்றுகிறது...

தங்கள் ஆழ்ந்த ஆய்வுக்கும் பகிர்வுக்கும் மீண்டும் நன்றி.

Anonymous said...

மிக்க அழகுடைய கட்டுரைகள். நன்றி ஐயா.