Sunday, January 12, 2020

பாசண்டச் சாத்தன் - 5 .

சரி, பாசம் பார்த்தாயிற்று. அதென்ன, பாசண்டம்? பாசு+அண்டம் = பாசண்டம். அண்டுதல் என்பது பொருந்தல், பற்றுக்கோடாதல், அழுந்தல் என்று பொருள் கொள்ளும். அண்டு>அண்டம் என்பது support, apparatus என்று பொருள் கொள்ளும். ”அந்த மேசைக்கு ஏதாச்சும் அண்டு கொடுப்பா! இல்லைன்னா குப்புற விழுந்துரும்“ என்பது சிவகங்கை மாவட்ட வழக்கு. பாசண்டம் = காவல் கருவி.  குதிரைச் சவுக்கு, சாட்டை. பாசண்டச் சாத்தன் = கையில் குதிரைச் சவுக்கு கொண்டுள்ள சாத்தன்.  ”செண்டையும்” கூடப் பாசண்டத்திற்கு இணையாய்ச் சொல்வர்.

சுள்>சுளி-தல் = வளை-தல். சுள்>சுள்வு>சுவு>சவு>சவுக்கு. சவு>சவள்-தல் = வளை-தல், நெளி-தல். சவள்தடி = வளையக்கூடிய தடி,  மரக்கிளைகள் சவளும். புளியம் விளாருஞ் சவளும்.  கயிறு கட்டிய சவுக்கிற்கு முன், விளாரே குமுகத்தில் பயனுற்றது. ஈட்டியும் சவள் என்பதன் வளர்ச்சியே. சவள் கொண்ட போர்வீரர் சவளக்காரர் ஆனார்.  சவள்த்தல்>சவட்டல் = வளையக்கூடிய விளாரால் அடித்து வெளுப்பது. சவட்டு> சாட்டு>சாட்டை; சவட்டு-தல்> சவண்டு-தல் = வளைதல், நெளிதல். அதில் விளையும் பெயர்ச்சொல் சவண்டு = நெளிவு காட்டும் சாட்டை. சுள்>செள்> செண்டு என்பதும் சாட்டையையே குறிக்கும்.  ஆகப் பாசண்டமும் செண்டும் ஒரே பொருள் கொண்டுள்ளவை. பிற்காலத்தில் பாசண்டம்/செண்டை என்பதைச் சிறிய உருள்முனை கொண்ட தடியில் கயிறு கட்டியதாய் உருவகித்தார். கயிற்றின் இருப்பை விளங்கிக் கொள்ளாச் சிற்பிகள், ஐயனார் தம் வலதுகையில் தண்டம் வைத்தது போல் வடிவமைத்தார். இவ்வகையில் செண்டு, வளைந்த குச்சி போன்ற ஆயுதமாகும்.

தேராது தெளிதல் செண்டு வெளியில் - மணி 27/67
புரவியில் பொரு_இல் செண்டு ஆடிப் போர்கலை  கம்ப. பால: 3 67/3
சென்உ இயங்கு பரியும் செறிந்ததுவே கம்ப. அயோ. 11 10/4
பருத்தது ஓர் மால் வரையை பண்டு ஒருகால் செண்டால் திரித்த கோ இங்கு இருந்த சேய் - நள 142/3,4
செண்டு கொண்டு கரிகாலன் ஒருகாலின் இமய சிமய மால் வரை திரித்தருளி மீள அதனை - கலிங்:178/1

என்று செண்டின் சொல்லாட்சி வரும். ”பத்தி” இலக்கியங்களிலும் இச் சொல்லாட்சி உண்டு. ”முதற் கரிகாலன் வடக்கே படையெடுத்தபோது, இமயத்தைச் செண்டாலடித்துப் புலிச்சின்னம் பொறித்ததாய்” ஒரு  பழஞ் செய்யுளைக் காட்டி, இந்திரவிழவு ஊரெடுத்தகாதையின் 95-98 ஆ வரிகளை அடியார்க்கு நல்லார் விளக்குவார்.

"கச்சி வளைக்கைச்சி காமகோட்  டங்காவல்
மெச்சி யினிதிருக்கும் மெய்ச்சாத்தன் - கைச்செண்டு
கம்பக் களிற்றுக் கரிகாற் பெருவளத்தான்
செம்பொற் கிரிதிரித்த செண்டு"

[இடையிலோர் இடைவிலகல். பழந் தாராதேவி கோயிலான காஞ்சி காமாட்சி கோட்டத்தில்  பல புத்த உருக்கள் இருந்ததாகவும் அவைகளில், உயரமாய் நிற்கும் புத்த உருவைச் சென்னைப் பொருட்காட்சிசாலைக்கு நகர்த்தினர் என்றும் மயிலை சீனி வேங்கடசாமி தன்னுடைய ”பௌத்தமும் தமிழும்” நூலில் பதிவார். இவ்வுருவை சாத்தனென்றே அவர் சொல்வார். பல ஆண்டுகளுக்கு முன் கோபி நாத ராயர் இதைப் படம்பிடித்து வெளியிட்டாதாயும் (Indian Antiquary Vol. XLIV) ம.சீ.வே சொல்வார்.  மேலே பாட்டுக் குறிக்கும் சாத்தன் இந்த உருவா? - என்பது தெரியாது.  நின்ற சிலையைக் காட்சிச்சாலையில் வைத்து, அதனிடத்தில் இரு கைகளைக் கால்முட்டியின் மேல் தாங்கி உட்காரும் ஐயப்பன் உருவைப் புதிதாகச் செய்துவைத்துள்ளார். மலையாளச் சாத்தன் காவுகளில் புத்த விக்கிரங்கள் எடுக்கப்பட்டு இது போல் ஐயனார் உருவங்களை வைத்தார் என ம.சீ.வே சொல்வார். ஆகச் சிலை மாற்றங்கள் நெடுகவும் நம்மூரில் நடந்துள்ளன.]
 
செண்டு பற்றி இன்னொரு செய்தி திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தின் வளைவேல் செண்டுகொடுத்த திருவிளையாடலில் வரும். இதில் மதுரைச் சொக்கன் தன் புதல்வன் உக்கிர வழுதிக்கு வளை, வேல், செண்டு கொடுத்த செய்தியுண்டு.

அறமலி தனது புதல்வன் உக்கிரனுக்கு அருள்சுரந்து அரும்புகழ் ஓங்க
மறுவில் ஓர் வளையை இந்திரன் பெரிய மவுலியில் அறை என அளித்துச்
செறிகடல் வலியை அற, எறி என்று  சிறந்தது ஓர்  வேலினை நல்கி
அறிவட கிரியைப் பந்து போல் சுழல அடியெனச் செண்டையும் கொடுத்தான்

”உக்கிரனுக்குச் சிவன் செண்டு வழங்கியதும், வடமேருவை பாண்டியன் ஆயுதத்தால் அடித்ததும் பரஞ்சோதி திருவிளையாடற் புராணத்தின் செண்டால் அடித்த படலத்திலும் குறிக்கப்படும். கீழுள்ள படத்தில் பாசண்டம்/ செண்டைக் காணலாம்.



இனி இக்கால ஐயனார் கோயிலின் கட்டகத்தைக் காண்போம். கோயில் நாயகமான ஐயனார் தலையில் சடைமுடி மகுடமும், முகத்தில் மீசையும், காதுகளில் குழையும் , கழுத்தில் அணிகளும், மணிக்கட்டில் வளையமும், வலக்கையில் செண்டும், இடக்கால் மேல் இடக்கையிருந்தும், இடக்கால் குத்திட்டும், வலக்கால் தொங்கவிட்டும் சாந்தப் பார்வையில் தோற்றங் காட்டுவர்.   பல ஐயனார் திருமேனிகளில் குறுக்கே பூணூலுண்டு.  பல கோயில்களில் ஐயனாரின் வலப்புறம் பூரணையும், இடப்புறம் பொற்கலையும் (புஷ்கலை/புட்கலை என்றும் பலுக்குவர்) இருப்பர். பூரணை, பொற்கலை என்போரை இந்திரன் மக்கள் என்பார்.  (சிவன், பெருமாள் கோயில்கள் போல், இங்கு தேவியருக்கு என்று தனித் திருநிலைகள் கிடையா.) சில கோயில்களில் தேவியர் இன்றி ஐயனாரின் தனிநில் கோலமும், தனிஅமர் கோலமும் உண்டு.

ஐயனாரைச் சுற்றி பதினெட்டாம்படிக் கருப்பர் முதல், 21 பரிவார உருவங்கள் உண்டு. இவர் யார் யார் என்பதில் கோயிலுக்குக் கோயில் விவரம் வேறுபடும். ”இருபத்தொரு பந்தி அறுபத்தொரு சேனைத்தளம்” என்பது தென்பாண்டி நாட்டு ஐயனார் சொலவடை. (61 சேனைத்தளம் எதுவென இன்னுந் தெரிய வில்லை. தேடுகிறேன். ) ஐயனார் திருநிலை முன் யானை இருக்கும். யானையும், குதிரையுமில்லாத சாத்துகள் இல்லை. என்பதால் அவையே ஐயனார் வாகனங்கள். ஐயனார் ஆயுதமாய்ச் செண்டும் ஈட்டியும் (= வேல்), அவர் கொடியாய்க் கோழியும் சொல்லப்படும். [முருகன் வாகனங்களாய் யானையும் மயிலும், ஆயுதமாய் வேலும், கொடியாய்க் கோழியுமுண்டு. முருகனுக்கும் ஐயனாருக்கும் இப்படிச் சில தோற்ற ஒப்புமைகள் உண்டு.]

ஐயனார் கோயில் வளாகத்தில் யானை, குதிரைகளின் மட்பொம்மைகள் உண்டு.  கோயில்விழாக்களில் ஐயனார்க்கு வெறியாட்டமும், அரத்தப் பலியுங் கிடையாது. அரத்தப்பலி என்பது பரிவாரங்களுக்கே நடைபெறும். இந் நேரங்களில் ஐயனார் திருநிலைக்குச் சீலையிடுவர்.  மக்கள் மரபில் ஐயனார் என்பார் மரக்கறி வழக்கத்தார். ஐயனாரின் கொடிவழிப் பூசாரிகள் பெரும்பாலும் பூணூல் அணிந்த, அதேபொழுது கறியுண்ணும் வழக்கமுடைய குயவர். இவருக்கு வேளார்/ வேளகாரர் என்ற பட்டமுண்டு. சிவன், விண்ணவக் கோயில்களில் இருக்கும் வேளும் பார்ப்பார் போலவே இவரும் வேளுங் குயவர். வேளாப் பார்ப்பார் போல் வேளாக் குயவரும் உண்டு. பூணூல் அணியாதவரும் மீசை வைத்தவரும் ஐயனாருக்குத் தொண்டுசெய்ய அனுமதியில்லை.

அன்புடன்,
இராம.கி.

1 comment:

பெஞ்சமின் said...

அரிய தகவல்.
வேளார், வேளக்காரர் என்ற சொற்களுக்கான மூலம் மற்றும் வேர்ச்சொல் குறித்து அறிய ஆவல். விளக்க இயலுமா?