Wednesday, January 29, 2020

பாசண்டச் சாத்தன் - 20

முன்சொன்னது போல், பிடவூரின் முதற்செய்தி, (கி.மு.2 ஆம் நூற்றாண்டு) நக்கீரரால் பிடவூர்ப் பெருஞ்சாத்தனைப் பாடிய புறம் 595 ஆல் கிடைத்தது. பாட்டினுள் “நெடுங்கை வேள்மான்” என்றதால் பிடவூர்க் கிழான் ஒரு வேளிர்குலத்தான் என்பதும்,  ”அறப்பெயர்ச் சாத்தன் கிளையேம், பெரும” என்றதால்  பெருஞ்சாத்தனின் முன்னோன் அறச்சாத்தன் (இக்காலத் ”தரும சாஸ்தா”) என்பதும், அவனுக்கெனக் கிளைக்கூட்டம் இருந்ததும் விளங்கும். இத்தொடரில் தரும சாத்தன், பெரும்பாலும் மற்கலி கோசாளன் ஆகலாம் என முன்பகுதிகளில் கோடுகாட்டினேன். ”சாத்துகளைக் காக்கும் தலைவன்” என்ற பொருளில் சாத்தன் பெயரும், ”குறுநில மன்னன், காவற்படைத் தலைவன், சமயத் தோற்றுநன் ”- என்ற முறையில் ”ஐயன்” பெயரும் மற்கலிக்கு ஏற்பட்டிருக்கலாம்.

தெற்கிருந்து படித்தானம் போய் அங்கு தொடங்கும் தக்கணப் பாதையின் முடிவு சாவத்தியானதால், (காடாறு மாசம், நாடாறு மாசம் என்ற படி) பாதிநாள் தமிழகம், பாதிநாள் வடபுலம் (குறிப்பாய் மகதம்) என மற்கலி தங்கியிருந்துள்ளார். ஆழ்ந்து ஓர்ந்து பர்த்தால் அடிப்படையில் அவர் துறவியல்லர்; இல்லற வாழ்வைத் துறந்தவரும் அல்லர்; ஒரு சமயத்தை உருவாக்கிய அறிவர். சமய நெறி போதிப்போர் பெரும்பாலும் துறவியாய் இருந்தபோது, பொற்கலையோடு மற்கலி கொண்ட இல்லறத் தொடர்பு வடபுலத்தில் இழிவாகப் பார்க்கப் பட்டிருக்கலாம். இல்லற வாழ்வேற்கும் தமிழகத்தில் இது தவறாய்க் கொள்ளப்பட்டவில்லை. (இல்லறத்தின் பின் துறவேற்பது, குறிப்பாக விண்ணவ ஆசான்களில், இங்கு அதிகம்.)

மற்கலி, தான் மட்டுமின்றி, பூரணர், (பக்குடுக்கை) நன்கணியார் போன்ற அறுவரோடும் சேர்ந்து அற்றுவிகக் கொள்கையை இறுதி செய்திருக்கிறார். அவருக்கு முன்னும் பல அறிவர் அற்றுவிகச் சிந்தனையில் இருந்தது போல் தெரிகிறது.  குறிப்பாகச் சாங்கியத் தாக்கம் (இதை வேறு தொடரில் பார்ப்போம்) அற்றுவிகத்தின் மேல் தொடர்ந்திருக்கிறது. தனக்கு முன்வந்த பார்சுவர், ஆதிநாதர் ஆகியோரை மற்கலி ஏற்றுள்ளார். நீலகேசியின் படி அற்றுவிகத்தின் ஒரு முகன இடமாய் உறையூர் இருந்துள்ளது.  (வடக்கே சாவத்தி போல் தெற்கே இது. இதனருகில் தான் நாம் பார்த்த பிடவூர் உள்ளது. உறையூருக்கும் பிடவூருக்கும் நடுவிலுள்ள திருவரங்கத்தில் சமணர் (அற்றுவிகர், செயினர், புத்தர்) தங்கிய இடமும் இருந்துள்ளது.)

தொக்குடன் ஆயவென் தொல்வினை தீர்கவென
முக்குடை யானடி மூன்றினும் வந்தித்துக்
குக்குட மாநகர் நின்று கொடிமினின்
தக்கதின் தான்போய்ச் சமதண்டம் புக்காள்

என்று நீலகேசி 666 ஆம் பாட்டு புகலும். குக்குடம்= கோழி. குக்குடமாநகர்= கோழியூர்= உறையூர். பெரும்பாலும் சமண்தண்டமே பிழையால் சமதண்டம் ஆனது போலும். (கிடைத்த 2 சுவடிகளில் சமதண்டமே உளது. இதைப்பதிப்பித்த சக்கரவர்த்தி நாயனார், ”2 சுவடிகள் மட்டுமிருந்ததால் எழுத்து, சீர், தொடர்ப் பிழைகளைச் சரிபார்க்க முடியவில்லை” என்பார்.)  தண்டடித்தல், பேச்சு வழக்கில் தற்காலிகமாய் ஓரிடந்  தங்குவதைக் குறிக்கும். தண்டைத் தரையிலடித்து துணிகளைக் கயிற்றால் கட்டிக் கூடாரமெழுப்புவது 2500 ஆண்டு வழக்கம். temporary encampment. சமண் தண்டம் = அற்றுவிகம், செயினம், புத்தம் மதத்தினருக்கான temporary encampment. இதிற்றான் பூரணனிருந்ததாய் நீலகேசி விவரிக்கும். அவர் பூதிகமாய் (physical) இருந்தாரா என்பது கேள்விக்குறி. ஏனெனில் மணிமேகலை, பூரணனை வஞ்சியில் காட்டும். 2 நூல்களிலும், நீலகேசி, மணிமேகலை பூரணனோடு உரையாடியதாய்ச் சொல்வது நூல் உத்தியெனப் புரிந்துகொள்கிறோம்.

“காரணம் வேண்டா கடவுள் குழாம்தன்னில்
பேருணர்வு எய்திப் பெரிதும் பெரியவன்
பூரணன் என்பான் பொருவறக் கற்றவன்
ஆரணங்கு அன்னாட்கு அறிய உரைக்கும்

என்ற 668 ஆம் பாடலால் உறையூர் பக்கம் (பெரும்பாலும் திருவரங்கச்) சமண்தண்டத்தில் பூரணனிருந்ததாய் அடையாளங் காட்டும் இதே சமண்தண்டத்திற்குத் தான் கவுந்தியடிகள் கோவலனையும் கண்ணகியையும் சிலப்பதிகாரத்தில் கூட்டிவருவாள். 

”கந்தன் பள்ளிக் கடவுளர்க் கெல்லாம்
அந்தில் அரங்கத்து அகன்பொழில் அகவயின்
சாரணர் கூறிய தகைசால் நன்மொழி
மாதவத் தாட்டியும் மாண்புற மொழிந்தாங்கு
அன்றவ ருறைவிடத் தல்கின ரடங்கித்
தென்றிசை மருங்கில் செல்வவு விருப்புற்று
வைகறை யாமத்து வாரணங் கழிந்து”

என்று காடுகாண்காதை 5-11 ஆம் வரிகள் காட்டுவதும்  இதே சமண் தண்டம் தான்.  மணிமேகலையின் படி (bible மாதிரி) ஆசீவிகருக்கு ஒரு தனி நூல் இருந்ததாய் அடையாளஞ் சொல்லும். , நீலகேசியோ அந்நூலின் பெயர் ”கதிர் ஒன்பது” என்று சொல்லும். இதை இயற்றியது மற்கலி என்றே மணிமேகலையும் நீலகேசியும் சொல்லும்.  அற்றுவிக நெறி தென்புலத்தில் மட்டுமின்றி வடபுலத்திலும் கணிசமான சார்வகர்களைக் கொண்டிருந்தது. அதேபோது வடபுலத்தில் புத்த, செயின நெறிகளோடு அது போட்டி போடவேண்டியிருந்தது. தெற்கே அதன் தொடக்க காலத்தில் சிவநெறி, விண்ணவநெறியோடு போட்டி போடவேண்டிய தேவையில்லாது போனது..

சமண நெறிகளின் ஆதிநாதருக்கும் சிவனுக்கும் ஏராளம் ஒப்புமைகளுண்டு. அவ்வகையில் மற்கலியை ஆதிநாதரின் கொள்கைப் புதல்வன் என்றே மற்கலியைப் பின்பற்றியோர் எண்ணி வந்தார். (மகாவீரரும், புத்தருங்கூட ஆதிநாதர், பார்சுவரை தம் முன்னோராயேற்பார்.) இதுபோல் கற்பித்த உறவின் வழி, பெருவாரியான ஐயனார் கோயில்கள் சிவநெறிக்குள் சேர்த்துக் கொள்ளப்பட்டன. திருநீறு கொடுப்பது ஐயனார் கோயில்களின் வழக்கில் வந்தது. ஐயனார் திருநிலைகளுக்கு முன்னால் சிறு இலிங்கங்களும் எழுந்தன. சமண அறிவரை இலிங்கியர் என்றுகூட நீலகேசி அழைக்கும். முருகன், விநாயகன் படிமங்களும் உள்வந்தன.  சாத்தனைச் சிவன்மகனாய் எண்ணும் வழக்கம் சிவநெறியார்க்குமுண்டு. அப்பர் தம் தேவாரத்தில் சாத்தனாரைச் சிவன்பிள்ளை என்றே கூறுவார்.

பார்த்தனுக் கருளும்வைத்தார் பாம்பரை யாடவைத்தார்
சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாமவேதங்
கூத்தொடும் பாடவைத்தார் கோளராமதிய நல்ல
தீர்த்தமுஞ் சடைமேல் வைத்தார் திருப்பயற்றூரனாரே '

அன்புடன்,
இராம.கி.

No comments: