Sunday, January 12, 2020

பாசண்டச் சாத்தன் - 4

ஆகச் சாத்தனுக்கு,  வாணிகன், பொதுப்பெயர். சாத்துக் காவலன், தக்கணப்பாதைக் காவலன் என 4 பொருள்களைக் கண்டோம். சாத்தனை அறியாது இந்திய வரலாற்றைப் புரிந்துகொள்வது கடினம். 

முன்சொன்ன சங்ககாலச் சாத்தன் பெயர்களில், நற்சாத்தன், மாசாத்தன், பெருஞ்சாத்தன், பேரி சாத்தன், கதுவாய்ச் சாத்தன் (கோணவாய்ச் சாத்தன்), பெருந்தலைச் சாத்தன்,  பெருந்தோள் குறுஞ்சாத்தன் போன்றன தனிப் பெயர்களாயும்,  முதுகண்ணன் சாத்தன், கதப்பிள்ளைச் சாத்தன், பிரான் சாத்தன், பூதஞ் சாத்தன், அந்துவஞ் சாத்தன், கீரஞ் சாத்தன் போன்றவை தந்தைப் பெயரைச் சேர்ந்த கூட்டுப் பெயர்களாயும் தென்படும். கூடவே அழிசி, ஆடுதுறை, மதுரை ஆருலவியநாட்டு ஆலம், உறையூர், ஒக்கூர், கருவூர், சீத்தலை, தொண்டி ஆமூர், ஒல்லையூர், சோழநாட்டுப் பிடவூர் என்ற ஊர்ப் பெயர் களும், சேரமான் (வழிப் படைத்தலைவன்) செய்தி வள்ளுவன் (= செய்தி பறைவோன்) , மோசி (தோல்வினைஞன்), கிழான் (மருதநிலப் பெரு நிதியன்), பாண்டியன் (வழிப் படைத் தலைவன்) என்ற தொழிற்பெயர்களும்  சேரும். அப்படியெனில் சிலம்பிலும் பெருங்கதையின் உஞ்சைக் காண்டத்திலும் வருகின்ற பாசண்டச் சாத்தன் என்பவன் யார்? 

பாசண்டச் சாத்தற்கு பாடுகிடந்தாளுக்கு - புகார் 9/15
தொண்ணூற்று அறுவகை பாசண்டத் துறை - வஞ்சி 26/130
பாசண்டன் யான் பார்ப்பனி-தன்மேல் - வஞ்சி 30/69
பாசண்டன்-பால் பாடுகிடந்தாட்கு - வஞ்சி 30/78 

பலவகை மரபின் பாசண்டியர்கள்
சலசல மிழற்றும் சமய விகற்பமும் - பெருங்கதை உஞ்சை. 32/3,4

என்ற பயன்பாடுகளைக் காணில், பாசண்டம் ஒரு தொழிற்பெயராகவே தோன்றுகிறது. வணிகச் சாத்துகளோடு காவலிற் போகையில், சாத்துவாகர் பெரும்பாலும் குதிரை, யானையிற் பயணிப்பர்.  தக்கண, உத்தரப்பாதைகள் போன்ற கல் பாவிய பெருவழிகள் தவிர்த்து, மற்ற வழிகளில் குதிரைகளுக்கு ஆங்காங்கே ஊறுகள் ஏற்படலாம். (மறவாதீர் குதிரைகள் நம்மூர் விலங்குகள் இல்லை. அவை இறக்குமதி ஆனவை. ”இலாடம்” அடிக்குங் கலையில் தமிழர் சிறக்கவில்லை. தவிர, அரபிகள் அதைத் தமிழருக்குக் கற்றுக் கொடுக்கவும் இல்லை. எனவே தமிழர் படைச் சேவையில் குதிரைகளின் வாழ்நாள் என்பது குறைவு. தொடர்ந்து  சாத்துவாகருக்குப் புதுக்குதிரைகளைக்  கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இதற்காகவே சாத்தில் வியன் (extra) குதிரைகளும் கூடவர வேண்டும்.) இவற்றைச் சேமக் குதிரைகள் என்று தென்பாண்டியில் சொல்வார்.  சேமக் (/ங்) குதிரை = ஐயனார் கோயிலின் முன்புறம், முன்னங் கால்களைத் தூக்கி, பூதங்கள் தாங்கி, அணியமாகும் வண்ணம் பேரளவில் தோற்றங் காட்டும் குதிரைகள்.


இனி உள்ளமைக்கு (reality) வருவோம். நம்மூர் ஐயனார் கோயில்களில் ஒரு திறம் வாய்ந்த, சாத்துவாகரைத் தெய்வமாய்த் தொழுகிறார். இக் கோயில்களில் புரவி எடுப்பதையும் மேற்சொன்ன சேமக் குதிரைகள் வேண்டும் இயலுமையால் புரிந்து கொள்ளலாம். களிமண்ணில் செய்த குதிரை, யானைப் பொம்மைகளை ஐயனாருக்கு நேர்ந்துவிடுவது குதிரை/ யானைகளை நேர்வதற்குச் சமம். அதன் மூலம் “எம் தொழிலைக் காப்பாற்று” என மக்கள் ஐயனாரை வேண்டுகிறார். அக்காலத்தில் சாத்தின் வெற்றிக்கும், இக்காலத்தில் தாம் தொடங்கும் பணியின் வெற்றிக்குமாய் இப்படி ஊர் மக்கள் நேர்ந்துவிடுகிறார். (சாத்துகளில்லா இக்காலத்தில் ஐயனார் நீரைக் காக்கிறார் என்றும் மக்கள் நம்புகிறார்.)

சரி, பாசண்டம் என்பது என்ன? ஐயனார் திருமேனிகளைக் கூர்ந்து காணின், கையில்  சவுக்குக்கயிறு இருப்பது நன்றாகவே தெரியும். சங்கத் தமிழிலும், காப்பியங்களிலும், பதினெண்கணக்கு நூல்களிலும்  பாசம் என்ற சொல்  பிணைக்கும்/பற்றும் கயிற்றுக்கு இணையாகப் பயன்பட்டுள்ளது.  கீழுள்ள எடுகோள்களைப் படியுங்கள்

பாசம் தின்ற தேய் கால் மத்தம் - நற் 12/2
பலி கொண்டு பெயரும் பாசம் போல - பதி 71/23
கறை கெழு பாசத்து_கை அகப்படலும் - மது 15/79
கட்டிய பாசத்து கடிது சென்று எய்தி - மது 15/81
கறை கெழு பாசத்து_கை அகப்படலும் - மது 15/79

கை கொள் பாசத்து கைப்படுவோர் என - சிலம்பு, புகார் 5/132
பவம் தரு பாசம் கவுந்தி கெடுக என்று - சிலம்பு, புகார் 10/211

தொடுத்த பாசத்து தொல் பதி நர - மணி 1/23
கை பெய் பாசத்து பூதம் காக்கும் என்று - மணி 3/51
தொடுத்த பாசத்து பிடித்த சூலத்து - மணி 6/46
கட்டாது உன்னை என் கடும் தொழில் பாசம்
   மன் முறை எழு நாள் வைத்து அவன் வழூஉம் - மணி 22/71,72

பாசத்தால் ஆக்கப்பட்ட ஆவியள் அல்லது எல்லாம் - சிந்தா:6 1539/2
பாசி பாசத்து பைம்பொன் நிரை தாலி பூத்த வேங்கை - சிந்தா:7 1649/1
நாள் முதல் பாசம் தட்ப நடுங்கினார் நிற்ப நில்லான் - சிந்தா:2 470/3
பலி கொண்டு பேராத பாசம் இவள் கண் - சிந்தா:3 653/1
குல பிறப்பு என்னும் கையால் கோல பாசம் கொளுத்தி - சிந்தா:3 711/2
பாசம் ஆகிய பந்து கொண்டு ஆடுநர் - சிந்தா:5 1320/3
கூன் பிறை நுதல் ஓர் கூற்றம் குவி முலை நமன் கை பாசம்
   யான் பிறன் அளியன் வாழ்வான் ஆசைப்பட்டிருக்கின்றேனே - சிந்தா:6 1487/3,4
பாசம் ஆக நின்று பல் மலர் கழுநீர் - சிந்தா:12

மனை பாசம் கைவிடாய் மக்கட்கு என்று ஏங்கி - நாலடி:13 10/1
ஆசை பிறன்கண் படுதலும் பாசம்
   பசிப்ப மடியை கொளலும் கதித்து ஒருவன் - திரி 20/1,2
பரந்து ஒழுகும் பெண்பாலை பாசம் என்பானும் - திரி 73/2
பாசம் பட்டு ஓடும் படு கல் மலை நாடற்கு - கைந்:1 3/3
பற்று என்னும் பாச தளையும் பல வழியும் - திரி 22/1
பாசத்துள் இட்டு விளக்கினும் கீழ் தன்னை - நான்மணி 97/3

பாசத்தின் சொல்லாட்சி இலக்கியங்களில் இப்படி மேலே கூறியது போல் வெளிப்படும். இதன் சொற்பிறப்பு என்ன? ”பல்” எனும் வேரில்  உருவான “பல்லி” என்பது சுவரைப் பற்றி நகரும் உயிரியைக் குறிக்கும். பல்+து = பற்று> பற்று-தல் = பிடி-த்தல், ற>த>ச திரிவில் பற்றுதல்> பத்துதல்>பச்சுதல் ஆகும். தரையைப் பச்சிய நுண்ணுயிர் பாசி. ”பச்சை/பசிய” என்ற நிறப்பெயரும் அதிலிருந்தே உருவாகும். ஒலிக்குறிப்பாகவும் இதைப் பயன் படுத்துவோம். ”பச்சக்கென்று பிடித்துக்கொண்டது” என்கிறோம், இல்லையா? பசை என்ற ஒட்டுக்கருத்தும், பொருளும் எழும், பாசம் என்பது ஒட்டுக்கருத்தில் உருவானது. பல்வேறு நூல் திரிகளைப் பின்னி, திரித்து, திருகி, ஒன்றை யொன்று பற்றி உருவானது பாசம். ”கயிறு” கூடக் கள்ளுதல், திரளுதல் பொருளில் உருவானது தான். கள்>கய்>கய்+இறு= கயிறு என்றெழும்,

அன்புடன்,
இராம.கி.

No comments: