Saturday, January 25, 2020

பாசண்டச் சாத்தன் - 17

ஏற்கனவே கொடுத்த 21 க்கும் மேலாக,  8 புதிய கல்வெட்டுகளைத் தொல்லியல் துறை திருப்பிடவூர் நூல் காட்டும். அதில் 2 கல்வெட்டுகள் மட்டும் இக்கட்டுரையோடு தொடர்புடையவை. ஐயனார் கோயில் அர்த்த மண்டப வெளிப்புறச் சுவரிலுள்ள கி.பி.11-12 நூற். கல்வெட்டில் ”தெற்றி ஆராதநன்” என்ற பெயர் வரும். தெற்றியை (- மேட்டை, திண்ணையை) ஆராதிக்கிறவன் என அதற்குப் பொருள் சொல்லலாம். அதேபோது ஐயன் இருந்த தெற்றியை அரங்கமென்பது சரியா? - என்ற ஐயமும் நமக்கெழுகிறது. இன்னொரு சிதைந்த கல்வெட்டு (கி.பி1726) பிரமன் கருவறைத் தென்பக்கச் சுவரிலுள்ளது, இதில் பண்டாரத் தாண்டவ ராயன் என்ற பெயர் பயிலும். இக்கல்வெட்டிருப்பையும், கருவறை அமைப்பையும் பார்த்தால், பிரமன் கருவறை, பெரும்பாலும் கி.பி. 1726க்கு முன் நாயக்கர் ஆட்சியில் ஏற்பட்டு இருக்கலாமென ஊகிக்கிறோம். அதற்குமுன் பிரமன்கருவறை இருந்ததற்குச் சான்றில்லை.

சரி, மற்ற செய்திகளுக்கு வருவோம். முன்சொன்னது போல் எந்த மரபார்ந்த ஐயனார் கோயிலிலும் சிவராத்திரியே முகன்மைப் பண்டிகை. ஆனால், திருப்பிடவூர் கோயிலில் இப்போது அது கொண்டாடப்படுகிறதா என்றே தெரியவில்லை. அதேபோது சிவன்கோயிலில் கொண்டாடப்படுவதாய்க் கோயில் வலைத்தளம் சொல்கிறது. இதுபோக, ஆடிபூரம், ஆடிச்சுவாதி, திருக் கயிலாய ஞானவுலா அரங்கேற்ற நிகழ்வு,  சுந்தரர், சேரமான்பெருமாள் குருபூசை ஆகியவை அங்கு மிக விரிவாக நடக்கின்றன. தவிர, பங்குனி உத்தரம், திருக்கார்த்திகைக்கும் ஊர் விழாக்கோலம் பூணுகிறது. மொத்தத்தில் ஊர் பெருந்தெய்வக் கோயில் நடைமுறைக்கு மாறிவிட்டது.

தவிரவும், திருப்பிடவூர் ஐயனார் மூலவர் ”கழுத்து, மார்பு, விரல்கள், கணுக்கைகள், தோள்பட்டைகள் ஆகியவற்றில்” உருத்திராக்கம் துலங்க, வலக்கையில் செண்டும், இடக்கையில் சிறு சுவடியும் கொண்டு சிவப் பழமாய்க் காட்சியளிக்கிறார். பிற்காலச் சிவநெறிக்குள் அவரைச் சேர்த்த பிறகு இத்தோற்றம் எழுந்தது போலும்.   மண்ணால் செய்யப்பட்ட ஐயனார் கோயிலைக் கற்றளியாய் மாற்றியவன் பெரும்பாலும் இராசேந்திரன் I என்பர். ஏற்கனவே  பல்லவர் காலம் தொடங்கி (3000 பேரை உறுப்பினராய்க் கொண்ட)  சிவப்பெருமானரின் பிரமதாயம் இம்மாற்றத்தை ஏற்று கொஞ்சங் கொஞ்சமாய்த் தன்வயப்படுத்தியது. The temple could have slowly moved into brahminized practices.

இராசேந்திரன் காலத்தில், சிவப்பெருமானரின் அனந்தீசர் கோயிலும் பெரிதாகிக் குலோத்துங்கன் காலத்தில் அநபாய ஈச்சுரமாகி  விசயநகரக் காலத்தில் பிரமபுரீச்சுரமானது. அதேகாலத்தில் பிரமதேயத்தின் முழுக் கட்டுப்பாட்டினுள் ஐயனார் கோயில், வந்துசேர்ந்ததும் புலப்படுகிறது. இன்னொரு வெளிப்பாடாய், குலோத்துங்கனாட்சியின் பின் நாயக்கராட்சி ஓங்கி, பிரமதேயமே குலையத் தொடங்கியது. நிலங்களை விற்ற பெருமானர் ஊரிலிருந்து நகர்களை நோக்கி நகர்ந்து விட்டார். இனிச் சாத்தனார் பற்றிய உரையாடலுக்குச் சற்று இடைவெளி விட்டு, சிவநெறியார் புகுத்திய சேர மான் பெருமாள் - சுந்தரர்- ஐயனார் செய்திக்கு வருவோம். இதைச் சுருங்கச் சொல்லிப் புறந்தள்ள முடியாது. ஏனெனில் 100 க்கு 98 பேர் இதை நம்புகிறார். சாத்தன் பற்றி நாம்சொன்ன பல கூற்றுகளையும் ஏற்க மறுக்கிறார். அந்த அளவிற்குப் பொதுப்புத்தியில் பல்வேறு செய்திகள் ஏறத்தாழ 900 ஆண்டுகளாய்ப் பரவியுள்ளன. ப்லருக்கும் அற்றுவிகம், செயினம், புத்தம் போன்ற நெறிகள் இங்கிருந்தன என்பதே மறந்துபோயிற்று. 

எனவே சேரமான் பெருமாள் - சுந்தரர்- ஐயனார் செய்தியை நீளவே பார்க்க வேண்டியுள்ளது. இதைச் சுந்தரரில் இருந்தே தொடங்குவோம். சிவப் பெருமானருக்குச் சுந்தர நாயனார் பெரும் அடையாளமாவார். சுந்தரர் காலம் கி.பி. 694-712 எனலாம்  (அப்பர் கி.பி. 580-661; சம்பந்தர் கி. பி.. 640-656) சுந்தரரோடு தொடர்புற்ற திருநாவலூர், திருவெண்ணெய் நல்லூர் ஆகியவை சிவப்பெருமானர் நிறைந்த ஊர்கள். தில்லை மூவாயிரர் (தீக்கிதர்) போலவே பிடவூர் சிவப் பெருமான மூவாயிரவரும் சோழநாட்டில் முகன்மையுற்றவர் போலும்.  பிடவூர், ஓர் ஊராய் மட்டுமன்றி. நெல்விளையும் நாடாயும் இருந்துள்ளது. பிற்காலத்தில் சிவன்கோயில் பெருவலமாகத் தொடங்கியது முன்கொடுத்த கல்வெட்டு வாசகங்களைப் படித்தாலே விளங்கும்.   தேவார மூவர் திருப்பிடவூர்ச் சிவன் கோயிலுக்கு நேரே வரவில்லை. ஆனால்  அப்பர், “தெய்வப் புனற்கெடில (6-7-6) என்ற பாடலாலும், “ஆரூர் மூலத்தானம்” (6-70-2) என்ற பாடலாலும் சுந்தரர்,

அம்மானே ஆகம சீலர்க் கருள்நல்கும்
பெம்மானே பேரரு ளாளன் பிடவூரன்
தம்மானே தண்டமிழ் நூற்புல வாணர்க்கோர்
அம்மானே பரவையுண் மண்டளி அம்மானே.

என்ற பாடலாலும் (7-96-6),  “நன்குன்றப் பொழில்வளர் மகிழ் திருப்*பிடவூர்* என்ற (9.78 திருவிடைக்கழி) திருஇசைப்பாவாலும் திருப்பிடவூர் வைப்புத் தலமாகப் பேசப்படுவது தெரிகிறது. சுந்தரரின் வாழ்வு பற்றிய கதைகளின் ஊடே அவருக்கும் கழறிற்று அறிவார் நாயனார் எனப்படும் சேரமான் பெருமாள் நாயனாருக்கும் ஏற்பட்ட நட்பு சொல்லப்படும். திருத்தொண்டத் தொகை ஆறாம் பாடலில் ”கார்கொண்ட கொடைகழறிற்று அறிவார்க்கும் அடியேன்” என்று கழறிற்று அறிவாரின் கொடை பேசப்படும். சேரமான் பெருமாள் நாயனாரின் வாழ்வில் நடந்த இரு நிகழ்வுகளை விவரித்து, திருத்தொண்டர் திருவந்தாதியில் 45 ஆம் பாட்டில்,,

மன்னர் பிரானெதிர் வண்ணான் உடல்உவர் ஊறிநீறார்
தன்னர் பிரான் தமர்போல வருதலும் தான்வணங்க
என்னர் பிரான் அடிவண்ணான் எனஅடிச் சேரன் என்னும்
தென்னர்பிரான் கழறிற்று அறிவான் எனும் சேரலனே

என்று மழையால் உவர்மண் உடலின்மேல் விரவிச் சிவனடியார்போல் காட்சியளித்த வண்ணாரை, “அடியேன், அடிச்சேரன்” என்று சேரமான் வணங்கிய செய்தியும், 46 ஆம் பாட்டில்,


சேரற்குத் தென்னாவலர் பெருமாற்குச் சிவனளித்த
வீரக் கடகரி முன்புதன் பந்தி இவுளிவைத்த
வீரற்கு வென்றிக் கருப்புவில் வீரனை வெற்றிகொண்ட
சூரற்கு எனதுள்ளம் நன்றுசெய்தாய் இன்று தொண்டுபட்டே

என்று சுந்தரர் கயிலாயம் எழுவதற்குத் தோதாய்ச் சிவனளித்த விரைவு யானையோடு, தன் பந்தி இவுளியை ஒருசேர விரைய வைத்த சேரரின் திறம் சொல்லப்படும். இதையே இன்னும் பெரிதாய் விவரித்து பெரியபுராணத்தில்  கழறிற்றறிவார் புராண 3748 - 3922 ஆ, பாடல்களின் வழியும், வெள்ளானைச் சருக்க 4232- 4281 ஆம் பாடல்களின் வழியும், பல்வேறு நிகழ்ச்சிகள் விவரிக்கப் படும். அவற்றை அடுத்த இடுகையில் காண்போம்.

அன்புடன்,
இராம.கி.

No comments: