Monday, January 20, 2020

பாசண்டச் சாத்தன் - 13

இனி, ஐயனார் கோயில் தொடர்பான வேறு செய்தியைக் காண்போம். இரு வேறு யானைகள் துதிக்கைகளால் நீரைச் சிலிர்க்க, தாமரை மேல் இலக்குமி அமர்ந்த கய - இலக்குமிக் குறியிடு, ஐயனார் கருவறையின் திருநிலைக்கு மேல் செதுக்கப்பட்டிருக்கும். இதில்லாத ஐயனார் கோயிலே இல்லை. அதே போது இது செயின, புத்த, சிவ, விண்ணவக் கோயில்களின் வெவ்வேறு கருவறைத் திருநிலைகளிலும் இருக்கும். கய - இலக்குமி (Gaja Lakshmi) வடிவம் எல்லா நெறியாருக்கும் ஏற்றதாய் எப்படியோ ஆகியுள்ளது. இதன் நாட்டாரியல் (folklore) தோற்றம் கி.மு. 600 களில் பிம்பிசாரன் காலத்தில் மகதத்தில் எழுந்தது, சற்று விரிவாய்க் காண்போம். இங்கும் ஒரு குழுப் பழக்கம் சமயப்பழக்கமாய் மாறிய கதை வெளிப்படும்.. 

இலக்குமி தாமரையில் நிற்பது போன்றோ, அல்லது இருப்பது போன்றோ "கய- இலக்குமி வடிவம்" அமையும். [பலரும் வீடுகளில் வைக்க விழையும் இரவி வர்மா ஓவியம் காண்க.. இதில் ஒரு யானையே தோற்றும்.]  இருவேறு வெள்ளானைகள் (= வெளிறிய யானைகள்) ஓர் அட்டிகையைத் துதிக்கையால் காட்டுவது போலும், அல்லது துதிக்கைவ ழி நீர் சிலிர்க்குவது/ சிதற்றுவது போலும் காண்பிக்கும் படங்களுண்டு. (இலக்குமி, சிதற்றானை என) 2 வேறு கருத்துகளைப் பிணைத்து, கய- இலக்குமி இலக்கணையை (icon) உருவாக்குவார். செல்வம் கொழிக்க அருள்செய்யும் இயக்கியை ”திரு, இலக்குமி” என 2 வழியில் அழைப்பர். சாத்துகளில் பயணஞ் செய்யும் வணிகரால் இவள் பெரிதும் போற்றப்படுவாள்.

காடுவெட்டிப் போட்டு கடிய நிலந்திருத்தி
வீடுகட்டிக் கொண்டிருக்கும் வேள்வணிகர் - வீடுகட்கு
அன்றைக்கு வந்த எங்கள் அம்மா இலக்குமியே!
என்றைக்கும் நீங்கா திரு.

என்பார் பாடுவார் முத்தப்பர். இந்திய வடமேற்கில் நுழைந்த ஆரிய மரபில் இலக்குமிக் குறிப்பில்லை.  கி.மு. 600 க்குச் சற்று முந்தைய இருக்குவேதப் பிற்சேர்க்கையான ”ஸ்ரீசூக்தத்தில்” இவள் முதலில் குறிக்கப்படுவாள். 

விக்கிப்பீடியாவில்,  ”First of all, it should be noted that the Sri Sukta is a Khila Sukta of the Rig Veda, meaning that it's a hymn found in the Bashkala Shakha or recession of the Rig Veda Samhita, but it's not found in the Shakala Shakha of the Rig Veda Samhita. The Śrī Sūkta forms part of the khilanis or appendices to the Ṛkveda. These were late additions to the Ṛkveda, found only in the Bāṣkala śākhā, and the hymn exists in several strata that differ both in content and period of composition” என்று தெளிவாய்க் குறிப்பர்.

முல்லைநில நாடோடிகள், செல்வம் செழித்த, நகர நாகரிகம் கொண்ட, ஆரியரல்லாக் குடியாரிடமிருந்து இத்தெய்வத்தை உள்வாங்கியதாய் ஆய்வுகள் சொல்லும். சிந்து நாகரிகத்தை முதல் நகர நாகரிகம் என்போர், கி.மு.800-600 களில்  கோசலம், வச்சம், லிச்சாவி, மகதம் போன்றவற்றில் உருவான நாகரிகத்தை, 2 ஆம்நிலை என்பார். இதோடு சேர்ந்ததே, தமிழர் நாகரிகம் எனக் கீழடி ஆய்வால் அறிகிறோம். கீழடி நாகரிகத் தொடக்கம் எக்காலம்?  இன்னும் தெரியாது. 

இப்போதைக்கு கி.மு.600. ஏறத்தாழ கி.மு.100- கி.பி 100 களில்  கய - இலக்குமி ஓவம் (Icon) 2 ஆம் நிலை நகர நாகரிகத்தில் உருவாகியது. இதை பார்ஹட் (Barhut), சாஞ்சி (Sanchi) விகாரைகளில் காண்கிறோம். செயின, அற்றுவிக, சிவ, விண்ணவக் கோயில்களிலும் இக் குறியீடு உண்டு. இலக்கிய, மரபு வெளிப்பாடு சார்ந்த அடவில் (design), மரம், சுதை, தந்தம், களிமண், கற்சிற்பm எனப் படிப்படியாக இவ்வுரு வளர்ந்தது. குவேரன், இந்திரன், முருகன், வாரணன் ஆகியோரோடு  இவளை இணைத்துப் பேசி முடிவில் சீதேவியாக, தாயாராகப் பெருமாளோடு வரும் தோற்றம் எப்படி எழுந்ததென்று சொல்லமுடியவில்லை. 

இலக்குமியோடு நீர் சிலிர்க்கும் யானையைச் சேர்த்ததின் பின் ஒரு கதையும், போருமுள்ளன.  நான் செயின மரபுக் கதையை இங்கு சொல்கிறேன். ஒரு சில மாற்றங்களுடன், இது புத்த மரபிலும் உண்டு. காட்டில் அலைந்து திரிந்த ஒரு வெளிறிய மதநீர் யானையை  பிம்பிசாரன் பிடிக்கிறான். எந்தப் பயிற்சியும் இன்றி நீர்நிலைக்கு அருகில் நின்று, துதிக்கையால் நீர் உறிஞ்சி சிதற்றிய வண்ணம் இவ்வியானை இருந்ததைக் கண்டு வியந்து, ஸெச்சநாகா (சிலிர்ச்ச>ஸில்ச்ச> ஸெல்ச்ச> ஸெச்ச என்ற பாகதச் சொல்லிற்குச் சிலிற்றிய>சிலிர்த்திய> சிலிர்ச்சிய என்ற பொருள் வரும் ; நாகம்= யானை) என்று பெயரிட்டு, அரசன் தன் அந்தப்புரத்தில் சேர்ப்பான். அங்குள்ள நீர்நிலையில், அரச குலப் பெண்கள் குளிக்கையில், அவர் மேலும் நீருறிஞ்சி யானை பீச்சியது ஊரெலாம் பேச்சாகும். செல்வக் குறியீடாய்ச் சேர்ந்து கொண்ட நீர் பீச்சிய அந்த யானையின் மதிப்பு பாதி மகதமாம். 

தன் இளைய மகன் விகால குமாரனுக்கு பிம்பிசாரன் கடைசிக் காலத்தில் இவ்வியானையைக் கொடுத்தானாம்.  கூடவே விகாலனுக்கும் முத்த, ஹல்ல குமாரனுக்கு பெரியதொரு மணிமாலையைக் கொடுத்தானாம். இருவருக்கும் மூத்த, அதே போது தந்தையோடு முரணிய, அஜாத சத்துவிற்கு இப் பரிசளிப்புகளில் பொறாமை கூடியதாம். தந்தை தன்மேல் கொண்ட பாசம் அறியா அஜாதசத்து, தந்தையைக் கொன்றே அரசனாவான். கடைசிக் காலத்தில்  அஜாதசத்து புத்தநெறி சார்வான். அஜாதசத்து, ஹல்லகுமாரன், விகால குமாரன் ஆகியோரின் தாய் லிச்சாவி நாட்டு இளவரசி. அவள் தந்தை சேடகன், செயினத் தீர்த்தங்கரர் மகாவீரரின் தாய்மாமன்; அதாவது, மகாவீரர் தாய்மாமனின் (மகள் வழிப்) பெயரன் அஜாதசத்து.
       
அஜாதசத்து ஆட்சியேற்ற சில காலங்களில், ஒரு மாலைப்போதில் அவனரசி பதுமாவதி ( Padmavati)அரண்மனை மாடத்திலிருந்து வெளியே வேடிக்கை பார்க்கையில், ஹல்ல குமாரனும் விகால குமாரனும் தத்தம் மனைவியரோடு ஸெச்ச நாகாவில் உட்கார்ந்து போனதையும் , ஒரு கொழுந்தி பெரும் மணி மாலை அணிந்ததையுங் கண்டு அரசி வியந்து போனாள்  தோட்டத்தில் நின்ற பணிப்பெண் ஒருத்தி, “உள்ளபடியே இவ்வரசில் மகிழ்ச்சியில், வளத்தில், திளைப்பது அரசனல்ல, ஹல்ல குமாரனும், விகால குமரனுமே” என்று புறம் பேசுவதையும் கேட்கிறாள். ”இப்பரிசுகள் இரண்டையும்  நான் அடையாவிடின் அரசியாய்த் தானிருந்து என்ன பயன்? “ என்ற எண்ணம் பதுமாவதிக்கு எழுகிறது.

அன்றிரவு  அசாதசத்துவிடம் அரற்றி, அவற்றைத் தான் அடைய வேண்டும் என அடம் பிடிக்கிறாள். மறுநாள் தன் தம்பியரிடம் வெள்யானை, மணி மாலையைத் தந்துவிடும் படி அஜாதசத்து கேட்கிறான். தமக்குத் தந்தை கொடுத்ததை தாமேன் விட்டுக்கொடுக்க வேண்டுமெனத் தம்பிகள் கேட்கிறார். அந்நாள் வழக்கப்படி மும்முறை வேண்டுகோள் சென்று,  மும் முறையும் மறுக்கப் படுகிறது  கோவமுற்ற அஜாசத்து, தன் தம்பிகளைச் சிறையிலிட ஆணையிடுகிறான். தம்பிகள், அங்கிருந்து தப்பித் தாய்வழிப் பாட்டனின் விசாலிக் குடியரசிற்குத் (Vaishali republic- Vajjis/Lichchavis) தாவுகிறார். அஜாதசத்து தன் பாட்டனுக்கு மும்முறை சொல்லிவிட, அங்கும் வேண்டுகோள் மும்முறை மறுக்கப்படுகிறது

அஜாதசத்துவின் சினம் முற்றுகிறது.  மாற்றாந்தாய் வழித் தம்பிகள் 10 பேரை (காளி குமாரரை) உடன் அழைத்து, அவர் படையை தன் படையோடு இணைத்து வேசாலிக் குடியரைசைத் தாக்க முற்படுகிறான். பாட்டன் சேடகனோ தனக்குத் துணையாய்  9 மல்லாட்சியர், 9 லிச்சாவிகள், காசி-கோசலம் சார்ந்த 18 அரசர் ஆகியோரைச் சேர்த்துக்கொண்டு, பெயரனோடு பொருதுகிறான். சேடகன் மகாவீரரைப் பின்பற்றியதால், ஒருநாளைக்கு ஓரம்பு மட்டுமே விடுவானென்றும், அதேபொழுது அவன்குறி தப்பாதென்றும் கதை போகிறது.  10 நாட்களில் 10 காளிகுமாரரும் ஒன்றன்பின் ஒன்றாய் இறந்து போகிறார். இறந்தவரின் மனைவியர் செயினத் துறவு கொள்கிறார்.

அஜாதசத்து தோல்வியை நெருங்கும் போது, அவன் இந்திரர்களைப் (Sakrendra and Charmendra) பரவி, 3 நாட்கள் தவம் செய்கிறான்.  சேடகனின் அம்பில் அடி படாது தப்பிக்க அவர் உதவுகிறார்.  போர்  கடுமையாகிறது. பெருங்கற்களைச் செலுத்தி (உமிழ்ந்து) எதிரிகளைத் தாக்கும் "Mahasilakantaka" (sila= கல்; . kantaka = செலுத்து கருவி) எனும் ”கல் உமிழ் கவண்” கருவி இந்திரரால் உருவாக்கப் படுகிறது. அதன் மூலம் இலக்கம் பேருக்கு மேல் போரில் அழிகிறார்.  அடுத்து, தானே இயங்கிச் சுற்றிச் சுழலும் (உலக்கைகள் போன்ற) ஈட்டிகள் பொருத்திய பெருந்தேரை இந்திரர் அளிக்கிறார். போர்க் களத்தில் நகர்ந்து செல்லும் பெருந்தேர் (Ratha-Musala; Musala = முசலம், உலக்கை) இன்னும் இலக்கம் பேரைக் கீழே வீழ்த்தி மிதித்துக் கொல்கிறது. இந்த 2 கருவிகளால் போரின் போக்கு முற்றிலும் மாறுகிறது. சேடகன் தோற்று, கோட்டைக்குள் நுழைந்து நொச்சிப் போருக்கு மாறுகிறான்.

கோட்டை வலிமையால், உழிஞைப்போர் நீள்கிறது.  ”குலவாலகன் எனும் செயினத் துறவி, தன் துறவை முறித்து ஒரு விறலியை மணந்தால், வேசாலி வீழும்” எனும்  சாமியாடி குறிகேட்டு, மகதிகா எனும் தாசி குலவாலகனைத் தேடிப் போகிறாள்.  தன் வசியத்தால், அவள் துறவியை வளைக்க, மனம் மாறி அவன் சோதியன் போல் உருமாறிக் கோட்டைக்குள் நுழைந்து, நகரம் மூனிசுவரர் கோயிலால் காப்பற்றப் படுவதை அறிகிறான். அக் கோயிலால் தான் நகரம் உழிஞைப் போரில் சிக்கியதெனப் பரப்புரை எழுகிறது. மக்கள் கோயிலை நாசம் பண்ணுகிறார். ஏற்கனவே செய்த ஏற்பாட்டின் படி,  குல வாலகனின் செய்ஞையை (signal) வைத்து, அஜாதசத்து  கோட்டையினுள் வெற்றிகரமாய் நுழைகிறான். வேசாலி முடிவில் சாய்கிறது.

அஜாதசத்துவின் வீரர் செய்துவைத்த இரும்புத் தடிகள் குவிந்து கிடந்த தீக் குழிக்குள் ஸெச்சநாகா தன்னேர்ச்சியாய் விழுந்து இறக்கிறது. ஹல்ல, விகால குமாரர் துறவியாகிறார். சேடகன்  சல்லேகனையில் உயிர் விடுகிறான். வேசாலியை மட்டுமின்றி காசி-கோசலத்தையும் அஜாதசத்து வெல்கிறான்.  இப்போர்கள் எல்லாம் கி.மு. 484-468 இல் நடந்ததாய் ஆய்வாளர் சொல்வர். மகதப் பேரரசு என்பது ஒரு நீருறிஞ்சி சிதற்றும் வெள்யானையின் மேல் பதுமாவதி பட்ட ஆசையால் உருவானது. மக்கள் மனத்தில் தீராத இடம் பெற்றுவிட்டது.

பதுமாவதி என்பது இலக்குமியின் இன்னொரு பெயர் தானே? அலர்மேல் மங்கை என்று நல்ல தமிழில் சொல்வர். கூடவே நீருறிஞ்சிச் சிதற்றும் சேச்சநாகாவும் நினைவில் தங்கிப்போனது. பெரும்பாலான கோயில்களின் திருநிலைகளில் இன்றும் காட்சியளிக்கிறது. இதற்கும் சமயத்திற்கும் தொடர்பில்லை. இது வடக்கிருந்த இனக்குழுப் பழக்கம். அவ்வளவு தான்.”எம் இறைவனை  நம்பு, செல்வமும் அருளும், உன்னை வந்து அடையும்” என்று சொல்லாமல் சொல்லும் ஓவமே கய- இலக்குமி. 

அன்புடன்,
இராம.கி.

No comments: